கடந்த வார உலக செய்திகளில் மிக முக்கியமாக கவனிக்கப்பட்டது நியூசிலாந்தின் அதிரடி அறிவிப்பொன்று.2008’ம் ஆண்டிற்கு பிறகு பிறந்தவர்கள் சிகரெட் மற்றும் புகை பிடிப்பதற்கான எந்த ஒரு தயாரிப்பையும் வாங்க வாழ்நாள் தடை விதித்திருக்கிறது நியூசிலாந்து. புகையிலை தொழில் வரலாற்றிலேயே இப்படியொரு அதிரடி முடிவு எந்த காலகட்டத்திலும், எந்த ஒரு நாட்டிலும் எடுக்கப்பட்டதில்லை. சிகரெட் புகைப்பதற்கான கட்டுப்பாடுகள் பூட்டான் உள்ளிட்ட பல நாடுகளில் புழக்கத்தில் இருக்கின்றன என்றாலும் முற்றிலும் தடை செய்யும் இந்த சட்டம் மிக புதியது.
2027 லிருந்து புகைபிடிக்காத தலைமுறையினர் இருக்கும் நாடாக நியூசிலாந்து இருப்பதற்கான முன்னெடுப்பை இப்போதே துவங்கி இருக்கிறது அந்த நாடு. இங்கு 14 வயதும் அதற்கு குறைவாக இருக்கும் இளைஞர்களுக்கு சிசரெட் விற்பதும் குற்றமென அறிவிக்கப்ட்டிருக்கிறது.
51லட்சம் மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்தில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5000 இறப்புக்கள் புகைபிடித்தலால் உண்டாகும் நோய்களினால் ஏற்படுகின்றன. இதற்கு முன்பே மக்கள் நலனில் அக்கறைகொண்டு இந்த இறப்புக்களை தவிர்க்கவும், இறப்பின் எண்ணிக்கையை குறைக்கவும் சிகரெட்டுக்களுக்கு மிக அதிக விலையை நிர்ணயித்தது, ப்ளெயின் பேக்கேஜிங் எனப்படும் விளம்பரங்களும், புகை பிடித்தலைத் தூண்டும் வாசகங்களும் இல்லாத பெட்டிகளில் சிகரெட்டுக்களை விற்பது, சிகரெட்டில் நிகோட்டின் அளவை மிகக் குறைவாக வைப்பது, சிகரெட் விற்பனையை சட்டபூர்வமாக்கிக் கட்டுப்படுத்தியது, மற்றும் சிகரெட் விற்பனை செய்யும் கடைகளின் எண்ணிக்கையை கட்டுக்குள் வைப்பது ஆகியவற்றையும் செய்திருக்கும் நியூசிலாந்து அரசு மேலும் கடுமையான நடவடிக்கையாக இப்போது புகைபிடித்தலின் உலக வரலாற்றில் மிகப்பெரிய திருப்புமுனையாக கருதப்படும் இந்த தடையையும் அறிவித்திருக்கிறது. இது 2022’ல் சட்டமாக்கப்படவிருக்கிறது. இதன் மூலம் 2025’ல் நியூசிலாந்தின் மொத்த மக்கள் தொகையில் வெறும் 5 சதவீதத்தினரே புகைபிடிப்பவர்களாகவும் புகைபிடிக்காத, ஆரோக்கியமான புதிய இளைய தலைமுறையும் இருக்குமென்று கருதப்படுகிறது.
புகைபிடிக்கும் மூன்றில் ஒருவர் இறந்துகொண்டிருக்கும் நியூசிலாந்தின் பெரும்பாலான மக்கள் இதை வரவேற்றாலும் புகையிலை மற்றும் சிகரெட் தொழிற்சாலை உரிமையாளர்கள் கருப்புசந்தைகளில் சிகரெட் விற்கப்படுவதை இந்த தடை மேலும் அதிகமாக்கும், புகை பிடித்தல் தொடர்பான குற்றங்களும் பெருகும் எனக் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.
இன்று உலகில் சுமார் 130 கோடி புகையிலை உபயோகிப்பாளர்கள் இருப்பதாக உலக தேகநல அமைப்பு ( WHO) மதிப்பிட்டுள்ளது. புகைபிடித்தலின் வரலாறு மிகபண்டைய காலத்திலிருந்தே தொடங்கி விட்டிருக்கிறது. அமெரிக்காவில் கிமு 5000 க்கு முன்பே பழங்குடியினரின் சமயச் சடங்குகளில் புகையிலை மற்றும் பல்வேறு மனம் மயக்கும் தாவரப்பொருட்கள் புகைபிடிக்கப்பட்டன
உலகின் பல பகுதிகளில் மரணத்திற்கு அருகில் செல்லும் மற்றும் மாய அனுபவங்கள் போன்ற அசாதாரண அனுபவங்களுக்காகவும் மனதை ஒருமுகப்படுத்தவும், பரவச நடனங்களுக்காகவும் போதைப்பொருட்களின் புகை பயன்படுத்தப்பட்டிருக்கின்றது என்று மானுடவியல் ஆய்வுகள் தெரிவிக்கிறன.
பல பண்டைய நாகரிகங்கள் குறிப்பாக பாபிலோனியர்கள், இந்தியர்கள் மற்றும் சீனர்கள் ஆகியோரிடம் சமயசடங்குகளில் போதையேற்றும் புகையை உண்டாக்கும் தாவரப்பொருட்களை பத்தி போல் எரித்து அந்த புகையை முகரும் வழக்கம் இருந்தது. இந்திய காப்பியங்களில் சிவமூலி என்று கஞ்சா இலை புகைத்தல் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இஸ்ரேலியர்கள் மற்றும் பிற்கால கத்தோலிக்க மற்றும் ஆர்த்தடாக்ஸ் தேவாலயங்களிலும், மத சடங்குகளின் ஒரு பகுதியாக தாவரப்பொருட்களினாலான தூபத்தை எரித்தனர். தூபங்களில் சில சமயங்களில் கஞ்சா அல்லது ஓபியம் சேர்க்கப்பட்டது.
கிரேக்கர்களும் ரோமானியர்களும் சணப்பை விதைகளை தூளாக்கி புகைத்தனர். ஸ்பெயினில் உலர்ந்த லாவண்டர் செடிகளை புகைத்தனர். இன்று வரையிலும் கேரள பழங்குடியினர் மிளகுக்கொடியை உலர வைத்து புகைக்கின்றனர்.
உலகெங்கும் இருந்த பழங்குடியினரால் இவ்வாறு சமயச் சடங்குகளில் உபயோகப்படுத்தப்படும் போதையேற்றும், மனம் மயக்கும்,கிளர்ச்சியும் பரவசமும் உண்டாக்கும் தாவர பொருட்கள் ஆங்கிலத்தில் என்த்தியோஜென் எனப்பட்டன (Entheogen)
ஆஸ்டெக் பழங்குடியினர் வெற்று நாணல் தண்டுகளிலும், குடையப்பட்ட இளம் பிரம்பின் தண்டுகளிலும் புகையிலையை நிரப்பி எரித்து புகைத்தனர். மெக்ஸிகோ, மத்திய அமெரிக்கா மற்றும் தென் அமெரிக்காவின் பழங்குடியினர் கசக்கிய உலர் புகையிலைகளை மக்காச்சோளக்கதிரை சுற்றியிருக்கும் துணிபோன்ற உறையில் சுற்றி புகைத்தனர்.
கிறிஸ்டோபர் கொலம்பஸ் 1492 ஆம் ஆண்டு தனது அமெரிக்க பயணத்தின் போது தற்செயலாக புகையிலையின் போதைப்பொருள் பண்புகளைக் கண்டறிந்தார்.அமெரிக்க தீவுகளில் தரையிறங்கியபோது,கொலம்பஸும் அவரது குழுவினரும் அங்கிருந்த பழங்குடியினரால் கனிகள், உலர்ந்த, பதப்படுத்தப்பட்ட புகையிலை, மது மற்றும் பலவிதமான மலர்களுடன் வரவேற்கப்பட்டனர்.
உலர்ந்த இலைச்சுருள்களில் அடைக்கப்பட்ட இலைத்துகள்களை அப் பழங்குடியினர் முகர்ந்து பரவசமடைவதை கண்ட கொலம்பஸ் தானும் அதை முயன்று பார்த்தார்.அதில் கிடைத்த மிதமான போதையில் திருப்தி அடைந்த கொலம்பஸ் குழுவினர், அந்த செடியின் காய்ந்த இலைகளையும் விதைகளையும் எடுத்துச் சென்றனர், இப்படியாக புகையிலை யூரோப்பாவில் அறிமுகமானது.
பழங்குடி தாவரவியல் துறையை (Ethnobotany) தோற்றுவித்த அமெரிக்க உயிரியலாளர் ரிச்சர்ட் எவான்ஸ் ஷுல்ட்ஸ் (Richard Evans Schultz) தனது ’’கடவுளின் தாவரங்கள்’’ நூலில் அமேசான் காடுகளின் மனம் மயக்கும் மற்றும் போதையேற்றும் தாவரங்களை குறித்து மிக விரிவாக எழுதியிக்கிறார். புகையிலையும் அப்படி சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்பட்டு, அதில் நிகோட்டின் என்னும் அடிமைப்படுத்தும் வேதிச்சேர்மம் இருப்பதை அறியாத மக்களால் தொடர்ந்து உபயோகப்படுத்தப்பட்டு பின்னர் உலகெங்கிலும் பரவியது.
சிவப்பிந்தியர்கள் புகையிலையை மதச்சடங்குகளுக்கும், மருத்துவ சிகிச்சைக்கும் பயன்படுத்தினார்கள்.மூங்கில் குழாய்களில் புகையிலை தூளை நிரப்பி, எரித்து அதன் புகையை மூக்கில் உறிஞ்சினார்கள். அந்த மூங்கில் குழாய் ஷ்பேனிஷ் மொழியில் டபாகோ (Tabaco) என அழைக்கப்பட்டு, ஆங்கிலத்திலும் அதுவே டொபேக்கோ ஆயிற்று. (Tobacco)
15 ஆம் நூற்றாண்டில், போர்த்துகீசிய மாலுமிகள் தங்கள் வர்த்தக புறக்காவல் நிலையங்கள் அனைத்திலும் அவர்களின் சொந்த பயன்பாடு மற்றும் பரிசுகளுக்குப் போதுமான அளவில் புகையிலையை சாகுபடி செய்தனர, அந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் அவர்கள் பிரேசிலில் வணிக ரீதியாக புகையிலையை வளர்க்கத் தொடங்கினர். பின்னர் அது யூரோப் மற்றும் அமெரிக்காவில் உள்ள துறைமுகங்களில் சந்தைப்படுத்தப்பட்டது.
1542’ல் ஜப்பானுக்கு புகையிலை போர்ச்சுகீசிய மாலுமிகளால் அறிமுகப்படுத்தப்பட்டது. 1559 ஆம் ஆண்டு இரண்டாம் ஸ்பானிய அரசர் ஃபிலிப்’பின் ஆணைக்கிணங்க அவரது மருத்துவர் ஹெமாண்டெஸ் டி பான்கலோவால் ஸ்பெயினில் புகையிலை சாகுபடி செய்யப்பட்டது.
பலராலும் புகையிலை பல நோய்களுக்கு சிகிச்சை அளிக்கிறது, குணமாக்குகிறது என்று அப்போது நம்பப்பட்டு வந்தது. 1571’ல் நிக்கோலா மொனார்டெஸ் போன்ற சிலர், புகையிலையின் மருத்துவ பயன்களை பட்டியயலிட்டு, அதனால் குணப்படுத்தமுடிகிற பலவிதமான நோய்களை குறிப்பிட்டு ஒரு புத்தகத்தை எழுதும் அளவுக்குச் சென்றனர். பின்னர் அமெரிக்காவில் புகையிலைப் பொருட்கள் வலுவாகக் காலூன்றின.
போர்சுக்கலில் பணி புரிந்த பிரன்ஸின் தூதரான ழான் நிகோ (Jean Nicot,) புகையிலையின் சாகுபடியை குறித்து அறிந்துகொண்டு 1560இல்அதை பிரான்ஸுக்கு அறிமுகம் செய்தார். மென்மையாகத் தூளாக்கப்பட்ட புகையிலையை மூக்கில் உறிஞ்சும் கலையையும், இவரே ஃஃப்ரெஞ்சு அரசவைக்கு அறிமுகம் செய்தார். அதன் உபயோகம் பின்னர் வெகுவாக பரவி நிகோ ஃ பிரான்ஸ் முழுவதும் பெரிதும் பிரபலமானார். புகையிலையின் தாவரப்பெயரான நிகாடியனா மற்றும் அதன் ஆல்கலாய்டான நிகோடின் ஆகியவை இவரின் பெயரைத்தான் கொண்டிருக்கின்றன.
16 ஆம் நூற்றாண்டின் இறுதியில், புகையிலை சாகுபடி மற்றும் புகையிலை பயன்பாடு இரண்டும் யூரோப்பாவின் அனைத்து நாட்டிற்கும் அறிமுகப்படுத்தப்பட்டன. புகையிலைக்கு நோய்களை குணமாக்கும் மருத்துவ குணங்கள் இருப்பதாக மருத்துவர்கள் பரிந்துரைத்து , மூக்குப் பொடி உறிஞ்சுவதும், சுருட்டாக புகையிலையின் புகையை உறிஞ்சுவதும் பரவலானது.1600ல் ஸ்பெயினுக்கு அறிமுகமான சிகார் எனப்படும் புகையிலையில் சுருட்டப்பட்டிருக்கும் புகையிலைத் தூளைக்கொண்ட சுருட்டு இiரு நூற்றண்டுகளுக்கு செல்வத்தின் குறியீடாகவே கருதப்பட்டு வந்தது.
குழாய்களில் அடைக்கப்பட்டு புகைக்கப்பட்டவை சிகரெட்டின் முன் வடிவங்கள். இவை 18’ம் நூற்றாண்டின் இறுதியில் இத்தாலி மற்றும் போர்ச்சுக்கலில் அறிமுகமாகின. இவை போர்ச்சுகீஸிய வணிகர்களால் ரஷ்யாவிற்குள் நுழைந்தன. நெப்போலியனின் போர்களில் ஃப்ரெஞ்சு மற்றும் பிரிட்டிஷ் ராணுவ வீரர்கள்டையே இவை மிக விரைவாக பரவின. ஃப்ரெஞ்சுக்காரர்கள் இவற்றிற்கு சிகரெட் என்று பெயரிட்டனர்.
நீண்ட உருளைகளாக கிடைத்த, பளபளக்கும் இலைகளில் அடைக்கப்பட்ட புகையிலையான சுருட்டுக்களும் அப்போது புழக்கத்தில் இருந்தன என்றாலும் சுருட்டைக் காட்டிலும் மிதமான, மிக நுண்மையாக பொடிக்கப்பட்ட புகையிலை துகள்கள் காகிதங்களில் சுருட்டப்பட்ட சிகரெட்டுக்கள் அமெரிக்காவில் வேகமாக பிரபலமடைந்தன. பின்னர் அமெரிக்க சந்தைகளில் துருக்கிய புகையிலையின் கலவையில் உருவான சிகரெட்டுக்கள் பெரிதும் விற்பனையாகின. அந்த சிகரெட்டுக்களை பெரிதும் விரும்பிய பிரிட்டிஷார் நாளடைவில் கலப்பில்லாத வர்ஜீனியா புகையிலை நிரப்பப்பட்ட சிகரெட்டுகளை விரும்பத் துவங்கினர்.
1828’ல் இரு வேதியியல் மாணவர்கள் புகையிலையில் இருக்கும் முக்கிய வேதிப்பொருளான நிகோடின் ஆல்கலாய்டை பிரித்தெடுத்தார்கள். நிகோடின் ஹெராயின் மற்றும் கொகெயினுக்கு இணையாகவே பயனாளர்களை அடிமைப்படுத்தும் இயல்பு கொண்டது
துவக்கத்தில் அனைத்து சிகரெட்டுகளும் புகை பிடிப்பவர்களால் அல்லது தொழிற்சாலை பணியாளர்களால் கைகளால் தேய்த்துச் சுருட்டி உருவாக்கப்பட்டன. 1880 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் ஏ. பொன்சாக் சிகரெட் உருவாக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து அமெரிக்க காப்புரிமையும் பெற்றார்.
அந்த இயந்திரத்தில் பொடித்த புகையிலை தொடர்ச்சியான நீண்ட காகித பட்டையில் வைக்கப்பட்டு மூடப்பட்டு, சுழலும் கத்தியால் தேவையான நீளத்தில் துண்டுகளாக வெட்டப்பட்டது. மிக விரைவாக சிகரெட்டுக்கள் இயந்திரங்களில் தயாரிக்கப்பட்டு சந்தைப்படுத்தப்பட்ட போது சிகெரெட் புகைத்தல் மிக அதிகமாகியது
போன்சாக் இயந்திரம் இங்கிலாந்திற்கு இறக்குமதி செய்யப்பட்ட1883ற்குப் பிறகு பல யூரோப்பிய நாடுகளிலும் சிகரெட் தொழில் வேகமெடுத்து வளர்ந்தது.
புகையிலை மெல்லுவது 19 ஆம் நூற்றாண்டில் மிகவும் பிரபலமாக இருந்தாலும் முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரின் போது சிகரெட்டுகள் அவற்றின் செல்வாக்கின் உச்சத்தில் இருந்தன. 1847 பிலிப் மோரிஸ் சிகரெட் நிறுவனம் இங்கிலாந்தில் நிறுவப்பட்டபோது, அவர்கள் கையால் சுருட்டப்பட்ட துருக்கிய சிகரெட்டுகளை முதலில் விற்கத் தொடங்கியனர்,
புகையிலை நிறுவனங்கள் லட்சக்கணக்கான சிகரெட் பொதிகளை போர் முனைகளில் உள்ள சிப்பாய்களுக்கு அனுப்பின, சிப்பாய்களுக்கு ரேஷனில் வழங்கப்பட்ட உணவு மற்றும் பானங்களுடன் கூடுதலாக சிகரெட்டுகளுடன் இருந்தன.
1920 களில் புகையிலை நிறுவனங்கள் பெண்களுக்கான சிகரெட்டுக்களை உருவாக்கி வசீகர பெயர்களில் அவற்றை சந்தைப்படுத்தியன. ஃபிலடெல்ஃபியாவின் ஜார்ஜ் வாஷிங்டன் ஹில் என்பவரே பெண்களும் சிகரெட் புகைக்கலாமென்று முதலில் விளம்பரம் செய்தவர். 1927ல் சிகரெட் விளம்பரங்களில் அவர் பெண்களை மையமாக்கியபோது திரை நடிகைகளும் பாடகிகளும் சிகெரெட் புகைக்கத் துவங்கினார்கள். பின்னர் அவரது நிறுவனம் அமெரிக்க சிகெரெட் விற்பனையில் 38 சதவீதத்தை தனதாக்கிக்கொண்டது. அமெரிக்காவில் புகைபிடிக்கும் பெண்களின் எண்ணிக்கை 1935 வாக்கில் மூன்று மடங்காக அதிகரித்தது.
புகையிலை சாகுபடி 1605’ல் போர்ச்சுகீசியர்களால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தியாவில் 17 ஆம் நூற்றாண்டில் புகையிலையை மூக்குப்பொடியாக உறிஞ்சுதல் , சிகரெட்டாகப் புகைத்தல் மற்றும் நேரிடையாக மெல்லும் வழக்கம் ஆகியவை அறிமுகமாகி வேகமாக பரவியது. துவக்கத்தில் குஜராத்தில் மட்டும் பயிரான புகையிலை பின்னர் இந்தியாவின் பிற பகுதிகளிலும் பயிராக்கப்பட்டது. 1787’ல் கல்கத்தா தாவரவியல் பூங்காவில் புகையிலை செடியின் கலப்பின ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டன. 1814’ல் புகையிலையின் 7 முக்கிய இனங்கள் அமெரிக்கவிலிருந்து தருவிக்கப்பட்டு கல்கத்தாவில் பயிர்செய்யப்பட்டன
1875’ல் இங்கிலாந்தின் புகையிலை தேவைகளின் பொருட்டு, பீகாரில் புகையிலை சாகுபடிக்கான மாதிரி பண்ணையும், புகையிலை பதனிடும் தொழிற்சாலையும் உருவாகின. புகையிலை பயிரின் தாவர மற்றும் மரபியல் ஆய்வுகள் இந்தியாவின் விவசாய ஆராய்சி நிறுவனங்களில் 1903’ல் துவங்கப்பட்டன. Imperial Agricultural Research Institute (IARI), துவங்கப்பட்டு புகையிலையின் சிறந்த கலப்பினங்கள் இந்தியாவில் வெற்றிகரமாக உருவாக்கப்பட்டன. 1930களில் தான் இந்தியா உலக புகையிலை சாகுபடி செய்யும் நாடுகளில் ஒன்றாக அங்கீகரிக்கபட்டது.
1943-44 ஆம் ஆண்டில், புகையிலை மீதான கலால் வரி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் புகையிலை உற்பத்தி இந்திய பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரமாக இருந்தது .இந்திய மத்திய புகையிலை குழு (ICTC) 1945 லும்,மத்திய புகையிலை ஆராய்ச்சி நிறுவனம் (CTRI) 1947 ம் ஆண்டும் நிறுவப்பட்டன.
இந்தியாவில் விளையும் பல்வேறு வகையான புகையிலை பற்றிய ஆராய்ச்சியை நடத்தி கண்காணித்து வரும் CTRI யின் செயல்பாடுகள் 1965 ’ல் இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலுடன் (ICAR) இணைக்கப்பட்டது.
20 ம் நூற்றாண்டில் புகையிலைச் செடி சாகுபடியின் மேம்பாட்டின் பொருட்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பின்பு பல புதிய கலப்பினவகைகளும் , பதப்படுத்த்தலில் செய்யப்பட்ட மாற்றங்களினால் புகையிலையின் அமில அளவு குறைக்கப்பட்டதுமாக சிகரெட் தொழில் இந்தியாவில் பெரிதாக விரிவடைந்தது.
உலகின் உணவுப்பயிரல்லாதவைகளில் மிக அதிகம் பயிராவதும் புகையிலைச்செடியே. புகைத்தலுக்கு அல்லது புகையிலை பிடித்தலுக்குப் பயன்படுத்துவதனால் இச்செடியின் இலைகள் பயன்படுத்தப்படுவதால் இது புகையிலை என்னும் பெயரைப் பெற்றது.
அமெரிக்காவைத் தாயகமாக கொண்ட புகையிலை செடியின் அறிவியல் பெயர் நிகோடியானா டபேக்கம் (Nicotiana tabacum). தக்காளி மற்றும் உருளைக்கிழங்கின் குடும்பமான சொலனேசியை சேர்ந்தது புகையிலைச்செடி.
1 லிருந்து 2 அடி உயரம் வரை வளரும் பல்லாண்டுத்தாவரமான இச்செடி வெள்ளை, இளஞ்சிவப்பு, சிவப்பு, மற்றும் மஞ்சள் நிற மலர்களை கொத்து கொத்தாக கொண்டிருக்கும். மிக சிறிய கனிகளும் இதில் உருவாகும்.அகன்ற இலைகள் 20 அங்குல நீளமும் 10 அங்குல அகலமும் கொண்டவை. 6 லிருந்து 10 வாரங்களான நாற்றுகள் வயலில் நடப்பட்டு, வளரும் செடிகளில் மலரரும்புகள் உருவாகும் போதே அகற்றப்பட்டு செடியின் ஆற்றல் முழுவதும் இனப்பெருக்கத்துக்கல்லாது இலைகளின் வளர்ச்சிக்கே செலவழிக்கப்படும். விதைக்காக தேர்வு செய்யப்பட்டிருக்கும் செடிகளை தவிர பிறவற்றில் மலரும்புகள் நீக்கப்பட்ட பின்னர் தோன்றும் பக்கக்கிளைகளும் நீக்கப்பட்டு, பளபளப்பான அகன்ற இலைகள் மட்டும் அறுவடை செய்யப்படும்.
மூன்றிலிருந்து ஐந்து மாதங்களில் அறுவடை செய்யப்பட்ட இலைகள் கொட்டகைகளில் உலரவைக்கப்பட்டுப் பதப்படுத்தப்படும். புகையிலை பதப்படுத்துதலில் காற்றில் பதப்படுத்தியவை, நெருப்பில் பதப்படுத்தியவை, நிழலில் பதப்படுத்தியவை, நெருப்பில் வாட்டியவை எனப் பல வகைகள் உண்டு.
பதப்படுத்துதலில் உலருதல், மஞ்சளாகுதல், நிறம் மாறுதல் மற்றும் காய்தல் என்னும் நான்கு நிலைகள் உள்ளன. பதப்படுத்தலுக்கான் கால அளவு ஒவ்வொரு நாட்டுக்கும், பிராந்தியங்களுக்கும் வேறுபடும்.பதப்படுத்தபட்ட புகையிலைகள் நிலவறையிலோ அல்லது புகையறையிலோ சிலநாட்கள் சந்தைப்படுத்தலுக்கு முன்பு சேமிக்கப்படும்
சிகரெட்டுக்கிணையாகவே பீடிகளும் உலகெங்கிலும் பரவலாக புகைக்கப்படுகின்றன. 16ம் நூற்றாண்டில் ஸ்பெயினின், செவில்லா நகரின் பிச்சைக்காரகள் வீசியெறியப்பட்ட சுருட்டின் எஞ்சிய முனைகளை சேகரித்து, பிரித்து அவற்றில் இருக்கும் புகையிலையை காகிதங்களில் சுருட்டி முனையில் நெருப்பிட்டு புகைக்க துவங்கினார்கள். இவை ஸ்பானிஷ் மொழியில் “சிறிய சுருட்டுகள் என்று பொருள்படும் சிகரில்லோஸ் என் அழைக்கபட்டன
ஏறக்குறைய அதே காலகட்டத்தில் இந்தியாவில் சிகரெட் தொழிற்சாலைகளில் பணிபுரிந்த தொழிலாளர்கள் புகையிலை கழிவுகளை காகிதங்களில் சுற்றி புகைக்க துவங்கினார்கள். இந்த இரண்டுமே பீடியின் முன்மாதிரிகள் என்று கருதப்படுகின்றது.
பீடிகள் புகையிலையால் சுருட்டப்பட்டு தயாரானவை அல்ல. பீடி சுருட்டப்படும் இலைகள் தெண்டு மரம் எனப்படும் டையோஸ்பைரோஸ் மெலனோக்ஸைலான் (Diospyros melanoxylon) என்னும் அறிவியல் பெயருடைய மத்திய இந்தியாவில் அதிகம் வளரும் ஒரு மரத்திலிருந்து பெறப்படுகிறது. தெம்புருனி என்றும் அழைக்கப்படும் இம்மரம் ஆசியாவை தாயகமாக கொண்டது
தெண்டு இலைகள் எளிதில் கெட்டுப்போகாத தன்மை, உலர்ந்தாலும் குறையாத இழுவைத்தன்மை, விரும்பத்தக்க மணம் மற்றும் நிதானமாக எரியும் தன்மை ஆகியவற்றைக் கொண்டிருக்கும். செம்மந்தாரை, பலாசம் மற்றும் சால் மரங்களின் இலைகளும் தெண்டு இலைகளுக்கு பதில் பீடி சுருட்ட உபயோகிக்கப்படுகின்றன. இந்தியாவில் மத்திய பிரதேசம், ஒரிசா, மஹாராஷ்டிரம், பீஹார், உத்திர பிரதேசம், குஜராத், தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க மலைக்காடுகளிலும், காடுகளை ஒட்டியுள்ள கிராமங்களிலும் தெண்டு மரங்கள் காணப்படுகின்றன. பிப்ரவரி- மார்ச் மாதங்களில் தெண்டு மரங்கள் தறிக்கப்பட்டு அடர்த்தியாக வளர்க்கப்படும்.தறிக்கப்பட்ட 45 வது நாளிலிருந்து தொடர்ச்சியாக இலைகள் அறுவடை செய்யப்படுகின்றன
50.70. மற்றும் 100 இலைகள் கொண்ட கட்டுக்கள் மெல்லிய கயிறுகளால் கட்டப்பட்டு உலர வைக்கப்படுகின்றன. உலர்ந்த இலையில் சிறிதளவு நிக்கோட்டின் கரைசலில் பதப்படுத்தப்பட்ட உலர்ந்த புகையிலைத் தூளைக் கலந்து சுருட்டி, மடித்து பசையால் ஒட்டி பின் மெல்லிய வண்ண நூலால் ஒருமுனையில் சுற்றி, பீடி தயாரிக்கப்படும். இந்தியாவில் பீடிகள் எளிதில் கிழித்து எடுக்கும்படியான காகிதங்களில் சுற்றப்பட்டு விற்பனையாகின்றன. பீடிகளிலும் மாம்பழம், சாக்லேட் மற்றும் கொக்கோ வாசனைகள் சேர்க்கப்படுகின்றன. பீடி தயாரிப்பில் கிடைக்கும் உடைந்த இலைக்கழிவுகள் பற்பொடியாக கிராமப்புறங்களில் பயன்படுகின்றன.
பீடி சுற்றுதல் பல இந்திய கிராமங்களின் பிரதான குடிசை தொழிலாக உள்ளது 90 சதவீதம் இத்துறையில் பெண்களே பணிபுரிகிறார்கள். 937 கோடி மதிப்புள்ள சுமார் 371,000 டன் பீடிகள் ஆண்டுதோறும் இந்தியாவில் தயராகின்றன. மேலும், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், டெண்டு இலை பறிப்பவர்கள், பீடி உருளைகள், வியாபாரிகள் உள்ளிட்ட 4.5 கோடி மக்களுக்கு வாழ்வாதாரப் பாதுகாப்பு அளித்து வருகிறது இத்தொழில். இந்தியாவில் மட்டுமே 1 கோடி தொழிலாளிகளால் சுருட்டப்பட்டு தயாரான சுமார் 55 கோடி பீடிகள் ஓரு வருடத்தில் விற்பனையாகின்றன
பாக்கு, இனிப்பு, சுண்ணாம்பு மற்றும் பல வாசனைப் பொருட்களை சுற்றியிருக்கும் வெற்றிலையை குறிக்கும் மார்வாரி சொல்லான பீடாவிலிருந்தே பீடி என்னும் சொல் வந்தது. தமிழ்நாட்டில் 75 பெரிய பீடி உற்பத்தி நிறுவனங்கள் இருக்கின்றன. வட கேரளம் பீடி தொழிலுக்கு மிக பிரபலமானது ஒரு பீடியில் இருந்து வரும் புகையானது சிகரெட்டை விட மூன்று முதல் ஐந்து மடங்கு அதிக நிகோடின் அளவைக் கொண்டுள்ளது .
புகையிலையின் பயன்பாடு துவக்கத்தில் அதன் அடிமையாக்கும் மற்றும் நோய் உண்டாக்கும் பண்புகளை அறியாமல் உலகெங்கிலும் பரவலாக இருந்தது. பலகோடி மக்கள் புகைபிடித்தலுக்கு அடிமையானபின்னரே அதன் தொடர் பயன்பாட்டின் ஆபத்துக்களை உலகம் மெதுவாக அறியதுவங்கியது.
கிரேட் பிரிட்டனில், மூக்குப்பொடி உபயோகிப்பாளர்கள் 1761 ஆம் ஆண்டிலேயே மூக்குப் புற்றுநோயின் ஆபத்துக்கள் குறித்து எச்சரிக்கப்பட்டனர், அதே நேரத்தில் ஜெர்மன் மருத்துவர்கள் 1795 ’ல் உதடு புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியம் குறித்து பைப் எனப்படும் குழாயில் அடைத்த புகையிலையை உபயோகிப்பவர்களை எச்சரிக்கத் தொடங்கினர்.
1930 களில், அமெரிக்க மருத்துவர்கள் புகையிலை பயன்பாட்டை நுரையீரல் புற்றுநோயுடன் தொடர்புபடுத்தினர், 1948’ல் ரிச்சர்ட் டால் எனும் பிரிட்டிஷ் தொற்று நோயியலாளர் நுரையீரல் புற்றுநோய்க்கும் சிகரெட் புகைத்தலுக்குமான் நேரடித் தொடர்பை ஆய்வறிக்கையாக பிரிட்டிஷ் மருத்துவ இதழொன்றில் வெளியிட்டார்.அமெரிக்காவில் மருத்துவர்கள் சிகரெட் புகைத்தலை உடல்நலனுக்கென பரிந்துரைத்துகொண்டிருந்த காலத்தில் இவர் வெளியிட்ட அறிக்கை பெரும் அதிர்ச்சியையும் குழப்பத்தையும் உண்டு பண்ணியது. அந்த ஆய்வறிக்கை வெளியான நான்கு வருடங்களுக்கு பிறகு மேலும் பல மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையில் இங்கிலாந்து அரசு புகைபிடித்தல் நுரையீரல் புற்றுநோயுடன் தொடர்புடையது என்று அறிவித்தது
1964’ல் அமெரிக்க அறுவை சிகிச்சை மருத்துவ சங்கமும் இந்த ஆய்வின் நம்பகத்தன்மையை உறுதி செய்தபோது சிகரெட் விளம்பரங்களில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டன. அதன்பிறகுதான் புகை பிடித்தல் ஆரோக்கியத்துக்கு கேடு என்னும் வாசகங்கள் புகையிலைத் தயாரிப்புக்களில் இடம்பெற்றன.
அனைத்து வகையான புகையிலை பொருட்களிலும் உள்ள நிகோடின், அதைப் பயன்படுத்தும்போது இரத்தத்தில் உடனடியாக உறிஞ்சப்பட்டு உடனடியாக அட்ரீனல் சுரப்பிகளைத் தூண்டி எபிநெஃப்ரின் என்னும் ஹார்மோனை வெளியிடுகிறது. எபிநெஃப்ரின் மத்திய நரம்பு மண்டலத்தைத் தூண்டி,இரத்த அழுத்தம், சுவாசம் மற்றும் இதயத் துடிப்பை அதிகரிக்கிறது.கோகெய்ன் மற்றும் ஹெரொவின் போன்ற மருந்துகளைப் போலவே, நிகோடின் மூளையின் டோபமைனின் அளவை அதிகரிக்கிறது,
சிகரெட்டின் முக்கிய போதைப்பொருளாக நிகோடின் இருந்தாலும், புகையிலை பயன்பாட்டினால் ஏற்படும் கடுமையான உடல்நல பாதிப்புகளில் பெரும்பாலானவை சிகரெட்டில் இருக்கும் மற்ற இரசாயனங்களிலிருந்தும் வருகின்றன. புகையிலை புகைத்தல் நுரையீரல் புற்றுநோய், நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி மற்றும் இதய நோய் பக்கவாதம் அல்லது மாரடைப்புக்கு வழிவகுக்கும். புகைபிடித்தல் மற்ற புற்றுநோய்கள், லுகீமியா, கண்புரை, நீரிழிவு மற்றும் நிமோனியா ஆகியவற்றுடன் நேரடியான தொடர்பிலுள்ளதை பல ஆய்வறிக்கைகள் காட்டுகின்றன.
இந்த அபாயங்கள் அனைத்தும் சிகரெட், சுருட்டு, பீடி, ஹூக்கா, மூக்குப்பொடி, கிரீடெக் எனபப்டும் கிராம்பு சிகெரெட் (இந்தோனேசிய வகை), நேரிடையாக மெல்லும் பதபடுத்தப்பட்ட புகையிலை உட்பட புகையிலையின் எல்லா தயாரிப்பிற்கும் பொருந்தும். நேரிடையாக மெல்லப்படும், வாயில் அதக்கிக்கொள்ளப்படும் புகையிலை புற்றுநோயின் அபாயத்தை புகையைக்காட்டிலும் அதிகரிக்கிறது, குறிப்பாக வாய் புற்றுநோய்.
சிகரெட் புகைத்தல், கர்ப்பிணிப் பெண்களுக்கு கருச்சிதைவு, குழந்தை இறந்து பிறத்தல், குறைப்பிரசவம் அல்லது எடைகுறைவான குழந்தைகள் பிறப்பதற்கான சாத்தியங்களை அதிகரிக்கிறது. கர்ப்பிணிகள் புகைபிடிப்பது பிறக்கும் குழந்தைகளின் கற்றல் குறைபாட்டிற்கும் வழிவகுக்கலாம். புகைபிடிப்பவர்களுக்கு அருகில் நிற்பவர்களும்,புகைபிடிப்பவர் வெளியேற்றும் புகைக்கு ஆளாகிறார்கள்.
உலகெங்கிலும் எப்போதும் புகையிலையின் உபயோகம் ஏறுமுகத்திலேயே இருக்கிறது உலகெங்கிலும் ஆண்டிற்கு சுமர் 8 மில்லியன் இறப்புக்கள் புகைபிடித்தலால் உருவாகும் நோய்களால் நிகழ்கின்றன அதாவது,.ஒவ்வொரு 8 நிமிடத்திற்கும் ஒருவர் புகையிலையினால் இறக்கிறார். புகைப்பழக்கத்தில் மாற்றங்கள் இப்போது ஏற்படாவிட்டால் 2030’ல் இந்த எண்ணிகக்கை பலமடங்கு உயரும் என்று கணிக்ககப்பட்டிருக்கிறது.
அமெரிக்காவில் மட்டும் ஆண்டுக்கு 480,000 இறப்புக்கள் புகைபிடிப்பதால் நிகழ்கின்றன, அதாவது 1300 இறப்புக்கள் ஒவ்வொரு நாளும் . இரண்டாம் நிலை புகையாளர்கள் எனப்படும் புகைபிடிக்காத ஆனால் புகைபிடிப்பவர்களின் அருகிலிருப்பவர்களுக்கும் புகைபிடிப்பவர்களுக்கு ஏற்படும் அனைத்து நோய்களும் ஏற்படுகின்றது. தினமும் விற்பனையாகும் 15 பில்லியன் சிகரட்டுகளில் சுமார் 10 பில்லியன் சிகரட் கழிவுகள் சுற்றுச்சூழலில் பரப்பப்படுகின்றன.
புகையிலையை உபயோகிப்பவர்களில் 70’லிருந்து 90 சதவீதம் நிகோடினுக்கு அடிமையாகிவிடுகிறார்கள். மின் சிகரெட்டுக்கள் எனப்படும் Electronic cigarettes, பேட்டரியால் நிகோட்டினை வெளியேற செய்யும் எளிய உபகரணங்கள் சிகரெட்டைப்போல புகையை உருவாக்குவதில்லை என்பதால் இவை சிகெரெட்டை காட்டிலும் பாதுகாப்பானவை என்று சொல்லப்பட்டாலும் இவற்றால் தீமை இல்லை என்பதற்கான திட்டவட்டமான ஆதாரங்கள் இல்லை
2003 ஆம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தின் புகையிலையின் தீங்கு, கட்டுபடுத்துவதன் முக்கியத்துவம், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் போன்றவற்றிற்கான பரிந்துரைகளில் 168 நாடுகள் கையெழுத்திட்டன. உலக சுகாதார நிறுவனத்தால் ஒவ்வொரு ஆண்டும் உலக புகையிலை ஒழிப்பு தினம் மே மாதம் 31 ஆம் நாள் கடைபிடிக்கப்படுகிறது.
2017 ல் உலக சுகாதார நிறுவனம் புகையிலை அதன் சுற்றுச்சூழல் மாசுபாடு குறித்து விழிப்புணர்வு அறிக்கை வெளியிட்டது. புகையிலை சார்ந்த கழிவுகள் சுமார் 7000ற்கும் மேற்பட்ட நச்சு வேதிப்பொருட்களையும், மனித புற்று நோய்க்காரணிகளையும் பரப்பி,சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன. புகையிலையிலிருந்து வெளியேறும் புகை நச்சு சுமார் 1000 டன்கள் மனித புற்று நோய்க்காரணிகளை வளிமண்டலத்தில் பரப்புகின்றன.
திரையரங்குகளில் பஞ்சுபோன்ற நுரையீரல் எப்படி சிதைந்துவிட்டிருக்கிறது என்பதை,, வாய்ப் புற்று நோயினால் தனது உலகமே தலைகீழாக மாறிப்போன பெண்ணை, அவளின் பாதி சிதைந்துபோன முகத்தை, புகைபிடித்ததனால் இருதய நோயாளியானவர் தனக்கு ஊட்டப்படும் உணவைக்கூட விழுங்க முடியாமல் அவர் கடைவாயோரம் உணவு வழிவதை, அப்பா புகைக்கும் சிகரெட்டின் புகையினால் சிறு மகள் இருமுவதைக் காட்டும் காட்சிகளையும், புகைத்தல் உடல் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் எனும் அறிவிப்பையும் திரையில் பார்க்கும் பலர் இடைவேளையில் திரையரங்குகளில் புகை பிடிக்கிறார்கள். கொரோனா வைரஸின் இறப்புக்களுக்கிணையான இறப்புக்களை அளிக்கும் இந்த பழக்கத்தினால் அவர்களால், அவர்களுக்கருகில் அருகில் இருப்பவர்களும் மட்டுமல்லாது சூழலும் சீர்கெட்டுக்கொண்டிருக்கிறது என்பதையும் புகைபிரியர்கள் உணரவேண்டும்
உலக சுகாதார நிறுவனத்தின் புகைபிடித்தலுக்கெதிரான குறிக்கோள்களில் இன்னும் சில மாற்றங்கள் தேவையாயிருக்கின்றன, உலகநாடுகளை ஒன்றிணைத்து, சான்றுகளின் அடிப்படையிலான அறிவியல் பூர்வமான கொள்கைகளையும்திட்டங்களையும் உலக சுகாதார நிறுவனம் எடுத்தால் மட்டுமே புகைத்தலின் அபாயங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.