தென்னிந்திய கிராமங்களில் பிறந்து வளர்ந்தவர்களின் சிறு வயது நினைவுகளில் மருதாணி வைத்துக்கொண்டதும் நிச்சயம் பசுமையாக இருக்கும். மருதாணி்ச் சிவப்பில் பளபளக்கும் விரல் நுனிகளும் இரண்டு கைகளிலும் மருதாணி வைத்துக்கொண்டு தூங்காமல் கழித்த இரவுகள், யாருக்கு அதிகம் சிவந்திருக்கிறது என்னும் ஒப்பீடுகள், கைகளைக் கழுவியவுடன் சாப்பிடும் உணவில் வீசும் மருதாணி வாசமும் இந்த தலைமுறையினர் அதிகம் அறிந்திருக்காதவைகள். இன்றும் தென்னிந்திய கிராமங்களில் கை விரல்களுக்கு மருதாணி வைத்துக்கொள்ளும் பழக்கம் பரவலாக புழக்கத்தில்தான் இருக்கிறது. நகர்ப்புறங்களில்தான் ரசாயன ஹென்னா பசைகள் பயன்பாட்டில் இருக்கின்றன.
மருதாணிப் பசையில் உடலில் சித்திரங்கள் வரையும் கலை மிக மிகப் பழமையானது. மருதாணி எப்போதிலிருந்து அழகுப் பொருளாகப் பயன்பாட்டில் இருக்கிறது என்பதைத் துல்லியமாகச் சொல்லமுடியாது என்றாலும் சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அழகு சாதனப் பொருளாகவும் மருந்துப் பொருளாகவும் மருதாணி இருந்திருக்கலாம் என்று வரலாற்றாய்வாளர்கள் கணிக்கிறார்கள்.
மருதாணி பற்றிய தொல்லியல் சான்றுகள் எகிப்திலிருந்து கிடைத்திருக்கின்றன. மம்மிகளாக்கப்படும் முன்பு இறந்த உடல்களின் கை மற்றும் கால்விரல் நகங்களில் மருதாணிப் பசை பூசும் வழக்கம் எகிப்தில் இருந்திருக்கிறது. கிளியோபாட்ரா மற்றும் இரண்டாம் ராம்செஸ், ஆகியோரின் மம்மி ஆக்கப்பட்ட உடல்களில் மருதாணி சாயத்தில் தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பண்டைய இந்தியாவின் உடற்கலையின் ஒரு முக்கிய வடிவமாக மருதாணி இலை சாற்றின் சித்திரங்கள் இருந்து வருகின்றன. அக்காலப் பெண்கள் தங்கள் மார்பில் மருதாணி சித்திரங்களை வரைந்து கொள்வது ’தொய்யல்’ எனப்பட்டது மிக பழமையான இந்திய கடவுள்களின் சித்திரங்களிலும் மருதாணி வடிவமிட்ட கைவிரல்களை பார்க்க முடியும்..
இறைத்தூதர் நபி அவர்கள் இஸ்லாமிய ஆண்கள் தங்கள் தாடிகளை மருதாணியால் சாயமேற்றிக் கொள்ளவேண்டும் எனக் குறிப்பிட்டிருக்கிறார். இஸ்லாமியப் பெண்களும் அவரது வழிகாட்டுதலின் பேரில் கை விரல்களையும் உள்ளங்கைகளையும் மருதாணிச் சித்திரங்களாலும் வடிவங்களாலும் சாயமேற்றி அழகுபடுத்திக் கொள்ளுகிறார்கள்.
ஆப்பிரிக்காவின் வடக்குப் பகுதியில் வாழும் ’பெர்பெர்’ பழங்குடியினத்தவர்களில் மருதாணி வைத்துக்கொள்வது மிக முக்கிய சடங்கு. பருவமடைந்த பெண்ணுக்கு மருதாணி வைத்துவிடுவது அவள் நல்ல குழந்தைகளை பெற்றுத்தர வழிவகுக்கும் என்றும் பெண்களை தீய சக்திகள் நெருங்காமலிருக்கவும் மருதாணி உதவும் என்று நம்புகிறார்கள். மருதாணி விழுதை அவர்கள் சியலா ( Siyala ) என்கிறார்கள்.
இந்தியாவிற்கு மருதாணி முகலாயர்களால் 12ஆம் நூற்றாண்டில் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், மருதாணியை உடலில் பூசிக்கொள்ளும் கலையை ஷாஜகானின் காதல் மனைவி மும்தாஜ் அறிமுகப்படுத்தியதாகவும் சொல்லப்படுகின்றது. முகலாய அரச குடும்பத்து பெண்கள் வடிவங்கள், சித்திரங்களை வரைந்துகொள்ளாமல் கைகளையும் பாதங்களையும் மருதாணி சாற்றில் முழுவதும் நனைத்து சிவப்பாக்கி கொள்ளும் வழக்கமே இருந்திருக்கிறது. சூரியன், சந்திரன் உள்ளிட்ட அழகிய இயற்கை வடிவங்களை வரைந்து கொள்வது 1940க்குப் பிறகு வந்திருக்கலாம் என்று கருதப்படுகின்றது.
மருதாணியே உலகின் மிகப் பழமையான இயற்கை ஒப்பனை பொருள் என்பதில் சந்தேகமில்லை. உலகின் பல கலாச்சாரங்களில் கொண்டாட்டங்கள்,விழாக்கள் மற்றும் குடும்ப மற்றும் பொது நிகழ்வுகளின் போது அழகு படுத்திக் கொள்ளும் பொருட்டு மருதாணி பயன்பாட்டில் இருந்து வருகிறது.
மருதாணி / மருதோன்றி / மயிலாஞ்சி என அழைக்கப்படும் செடியின் தாவரவியல் பெயர் Lawsonia inermis. இது லைத்திரேசியே (Lythraceae) குடும்பத்தைச் சேர்ந்தது. வளைகுடா நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் தெற்காசிய நாடுகளின் கலாச்சாரத்தில் முக்கிய இடம் பெற்றிருக்கும் இத்தாவரம் பலுசிஸ்தானில் இருந்து தோன்றியிருக்கலாம் என்று கருதப்படுகின்றது. அங்கிருந்தே இது உலகெங்கிலும் பரவியிருக்க வேண்டும்
’மெஹந்திக’ என்னும் மருதாணி செடியை குறிக்கும் சமஸ்கிருத சொல்லிலிருந்தே ’மெஹந்தி‘ என்னும் சொல் வந்தது. மருதாணி அலங்காரத்திலும் அதில் வரையப்படும் வடிவங்களிலும் பல வேறுபாடுகள் உள்ளன. பிரதானமாக அராபிய, வடிவம் இந்திய வடிவம் மற்றும் பாகிஸ்தானிய வடிவங்கள் உள்ளன. மரபான பல மருதாணி சித்திரங்கள் செல்வம், வளமை, அதிர்ஷ்டம் மற்றும் மக்கட்பேறுக்கான ரகசிய குறியீட்டு வடிவங்களாகவும் இருக்கின்றன.
பல நாடுகளில் இது வீட்டுத் தோட்டங்களில் வளர்க்கப்படுகிறது. Lawsonia inermis என்னும் இத் தாவரத்தின் அறிவியல் பெயரின் வேரை தேடினால் சுவாரஸ்யமான தகவல்கள் கிடைக்கின்றன. தாவர வகைப்பாட்டியலின் தந்தை என அழைக்கப்படும் லின்னேயஸின் (Linnaeus) நண்பரும் லின்னேயஸின் நூல்களை பிரசுரம் செய்வதில் மிக உதவியாக இருந்தவருமாகிய லாசோன் (lawson) என்பவரை கவுரவிக்கும் விதமாக இதன் பேரினத்துக்கு இப்பெயரை லின்னேயஸ் இட்டிருக்கிறார். inermis என்னும் சிற்றினப் பெயருக்கு ’கூரிய முட்களற்ற’ என்று பொருள். தமிழில் இச்செடி அலவணம், ஐவணம் எனவும் அழைக்கப்படுகின்றது.
மருதாணி செடி கிளைகள் நிறைந்த குறுமரம் ஆகவோ அடர்ந்த புதராகவோ வளரும் இயல்புடையது. ஒரு சில வகைகளில் மட்டுமே முற்றிய தண்டுகளில் முட்கள் காணப்படும். உறுதியான தண்டுகளும் எதிரடுக்கில் மிகக்குறுகிய இலை காம்புகளுடன் சிறிய நீள் முட்டை வடிவ இலைகள் இருக்கும். வெள்ளை அல்லது சிவப்பு நிறங்களில் கொத்து கொத்தாக நறுமணமுள்ள மலர்கள் காணப்படும். சிறிய உருண்டை வடிவ, நான்கு பகுதிகளாக இருக்கக்கூடிய ஏராளமான உலர்விதைகளுடன் கனிகள் இருக்கும். விதை உறை மிக கடினமானது.
லாசானியா பேரினத்தில் இருக்கும் ஒற்றைச் சிற்றினம் இனர்மிஸ் மட்டுமே ஆகும் எனவே இது ’monotypic genus’ எனப்படுகின்றது. இச்செடி நல்ல வெப்பமான காலநிலையில் மட்டும் செழித்து வளரும். 11 டிகிரி செல்சியஸுக்கு குறைவான வெப்பநிலையில் இச்செடி வளர்ச்சி குறைந்து இறந்துவிடும்.
.இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் திருமணம் மற்றும் முக்கிய நிகழ்வுகளில் கைகளையும் கால்களையும் மருதாணி விழுதால் அழகுபடுத்திக் கொள்வதும், மணப்பெண்ணின் உடல் முழுக்க மருதாணி சித்திரங்கள் வரைந்து விடுவதும் கலாசாரத்தின் ஒரு பகுதியாகவே உள்ளது. மொராக்கோவில் கர்ப்பிணிகள் மருதாணி இட்டுக் கொள்வதால் தங்களை தீய சக்திகள் நெருங்காது என்று நம்புகிறார்கள் இன்னும் பல சமுதாயங்களில் மருதாணி இட்டுக் கொள்வது மங்கலம் என்றும் நம்பப்படுகிறது. இன்னும் சில கலாச்சாரங்களில் மணமகன் பெயரை மணமகளின் உடலில் மறைவாக மருதாணியால் எழுதிவிட்டு மணமகன் அதை அவர்கள் சந்திக்கும் முதல் இரவில் கண்டுபிடிக்க வேண்டும் என்னும் வழக்கம் இருக்கிறது.
பாகிஸ்தானில் மருதாணி விருந்து என்பது மணமகள் குடும்பத்தினரால் கொண்டாடப்படும் முன் திருமண நிகழ்வில் மிக முக்கியமான ஒன்றாகும் பங்களாதேஷில் சம்பிரதாயபூர்வமாக மருதாணி இட்டுக் கொள்வது இருநிகழ்வுகளாக மணமகன் மற்றும் மணமகள் இருவரின் தரப்பிலும் மிக விரிவாக நடத்தப்படும். பல நாடுகளில் மணமகள் கைவிரல்களில் மருதாணி சாயம் முற்றிலும் அழிந்து போகும் வரையில் அவள் புகுந்த வீட்டு வேலை செய்ய வேண்டியதில்லை என்னும் பழக்கம் இருக்கிறது. எத்தனை அதிகமாக சிவக்கின்றதோ.அத்தனைக்கு தம்பதியினர் அன்புடன் இருப்பார்கள் என்னும் நம்பிக்கையும் பல சமூகங்களில் இருக்கிறது. இங்கிலாந்தில் பர்மிங்ஹாம் எனும் இடத்தில் மருதாணி நிகழ்வுகள் வழக்கமாக நடைபெறும்.
இந்தியாவில் நடைபெறும் பாரம்பரிய இந்து மற்றும் சீக்கிய திருமணங்களில் மருதாணி மிக முக்கிய இடம் பெற்றிருக்கிறது. அஸ்ஸாமில் ’ரொங்கலி பி’கு என்னும் நிகழ்வில் மருதாணி மிக அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.
வட இந்தியாவில் கணவன் நீண்ட ஆயுளுடன் இருக்க,கார்த்திகை மாத முழு நிலவுக்கு பின்னரான நான்காம் நாளில் மனைவியர் நோன்பிருக்கும் ’கர்வா செளத்’ (Karwa Chauth) என்னும் பண்டிகையின் போது அனைத்து பெண்களும் விரல்களில் மருதாணி இட்டுக் கொள்ளும் சடங்கு முக்கியமானதாக இருக்கும்
மருதாணி இலைகளில் 2-hydroxy 1.4 naphthoquinone (Lawson) எனப்படும் வேதிப்பொருள் உள்ளது இதுவே இலைச்சாற்றின் அடர்செம்மண் நிறத்துக்கு காரணமாகும். நல்ல வெப்பமான இடங்களில் வளரும் மருதாணி செடிகளின் இலைகளின் அதிகமாக காணப்படும் இந்த வேதிப்பொருள் சருமத்தை இளம் ஆரஞ்சு நிறத்தில் இருந்து கருஞ்சிவப்பு நிறம் வரை சாயமேற்றும். பித்த உடல் கொண்டவர்களின் சருமம் கருஞ்சிவப்பிலும் பிறருக்கு செம்மண் நிறத்திலும் மருதாணி சாயமுண்டாக்கும். இவ் வேதிப்பொருள் இலை நரம்பிலும் தளிரிலைகளிலும் அதிகம் காணப்படும்.
இலைகளை அரைக்கையில் இந்த வேதிப்பொருள் கசிந்து வெளியேறி பின்னர் சருமத்திலும் நகங்களிலும் உள்ள புரதங்களுடன் இணைந்து சிவப்பு சாய மூட்டுகிறது. உடலின் பிற பாகங்களை விட உள்ளங்கால் மற்றும் உள்ளங்கைகளின் தடித்த சருமத்தில் மருதாணி சாறு மிக நன்றாக சாயமூட்டி பல நாட்கள் மருதாணிச்சிவப்பை அவ்விடங்களில் தக்கவைக்கிறது.
மருதாணி விழுதில், எலுமிச்சை சாறு, கிராம்பு சாறு, புளி, சர்க்கரைக் கரைசல், காப்பி, டீ ஆகியவற்றை சிறிதளவு சேர்க்கையில் சாயத்தை இன்னும் அடர்த்தியாக்கும். மருதாணி இலைகளை அரைத்த விழுதை சருமத்தில் பூசிய பின்னர் நீராவியில் காட்டுவதாலும் சாயம் அடர்த்தியாகும்.
நான்கிலிலிருந்து ஆறு மணிநேரம் சருமத்தில் வைத்திருந்த பின்னர் நீரில் கழுவுகையில் ஆக்ஸிஜனேற்றம் (oxidation) ஏற்பட்டு சாயத்தின் அடர்த்தி குறையும் என்பதால் உலர்ந்த மருதாணியைத் தாவர எண்ணெயைக்கொண்டு அகற்றலாம். காய்ந்த மருதாணி விழுதை வெதுவெதுப்பான உப்பு நீரிலோ, சர்க்கரை கலக்கபட்ட தேங்காய் எண்ணையாலோ அல்லது உப்பு சேர்க்க்கப்பட்ட ஆலிவ் எண்ணெயாலோ அகற்றுகையில் சருமம் உலர்வது தடுக்கபட்டுச் சிவப்பு நிறமும் வெகுநாட்களுக்கு நீடித்திருக்கும்.
மருதாணியை அரைத்துப் பூசுகையில் சாயம் சருமத்தின் ஒவ்வொரு அடுக்காக ஊடுருவிச்சென்று சாயமேற்றுகின்றது. சருமத்தின் மேலடுக்கு அடர்ந்த நிறத்திலும் கீழே செல்லச் செல்ல நிறம் குறைந்து கொண்டே வரும். ஒரு மாதம் வரைக்கும் இருக்கும் இந்த சாயம் பின்னர் மெல்ல மெல்ல புதிய சரும அடுக்குகள் உருவாகும் போது மங்கிக்கொண்டே வரும்.
மருதாணி தலைமுடியையும் நிறமூட்டுகின்றது. தலைக்கு மருதாணி சாயமேற்றிக்கொள்கையில் அது முடி வளர்ச்சிக்கு உதவி தலையில் பேன் மற்றும் பொடுகு களையும் அழித்துவிடுகிறது. தலைமுடிக்கு உபயோகப்படுத்தும் போது அரைத்த மருதாணி விழுதை 8 மணிநேரம் கழித்து உபயோகப்படுத்த வேண்டும் விழுது தலைமுடியில் 20 நிமிடங்கள் இருந்தால் போதும்.
பண்டிகை காலங்களிலும்,, திருமண விழாக்களிலும் அழகுபடுத்தி கொள்வதற்காக மருதாணி சாறு அதிகம் பெண்களாலும் குறைந்த சதவீதத்தில் ஆண்களாலும் பயன்படுத்தப்படுகின்றது. ஒரு சில நாடுகளில் வளர்ப்பு மிருகங்களுக்கும் மருதாணியிட்டு அழகு பார்க்கிறார்கள் கால்நடைகளின் உடலில் வரும் சிறு சிறு காயங்களுக்கும், கொப்புளங்களுக்கும் இந்திய கிராமங்களில் மருந்தாக மருதாணி அரைத்து பூசும் வழக்கம் இருக்கிறது..
கோடையில் வாரம் ஒருமுறை மருதாணியை அரைத்து தலையில் பூசி குளிக்கையில் உடல் வெப்பம் பெருமளவில் குறையும் கைகால்களில் மருதாணி இட்டுக்கொள்வது உடலை குளிர்விக்கும். மருதாணி மலர்களை ஒரு துணியில் கட்டி தலையணைக்குள் வைத்துக்கொண்டால் நல்ல ஆழ்ந்த உறக்கம் வரும். மருதாணி இட்டுக் கொள்வதால் மன அழுத்தம் தலைவலி காய்ச்சல் சரும வியாதிகள் ஆகியவை நீங்கும்
மருதாணி உடலை குளிர்விப்பதால் பெண்கள் இதை வைத்துக் கொள்ளுகையில் அவர்களின் மாதவிலக்கை ஒத்திப்போடலாம். இதன் பொருட்டே பல சமூகங்களில் முக்கிய மங்கல விழாக்களின் போது குடும்பத்தின் அனைத்து பெண்களும் மருதாணி வைத்து தங்களை அழகு படுத்திக் கொள்ளும் வழக்கம் வந்தது. மருதாணியின் மணம் பாலுணர்வை தூண்டும் என்றும் அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அஜந்தா குகை ஓவியங்களில் மருதாணிச் சாற்றின் வண்ணங்களை இன்றும் காணலாம். மருதாணி சாற்றில் வலம்புரி ஸ்வஸ்திகம் வரைந்து கொள்வது வட இந்திய வியாபாரிகளிடம் பலகாலமாக இருந்து வரும் வழக்கமாகும்.
மலர்களிலிருந்து நல்ல மணமும் மருத்துவ குணங்களும் நிறைந்த மருதாணி எண்ணெய் எடுக்கப்படுகிறது. இலைச்சாறு தசையினை இறுக்கும் தன்மை கொண்டது. கிருமிகளையும் அழிக்கும். துணிச்சாயமாகவும் கூட இவை அதிகம் இப்போது பயன்பாட்டில் உள்ளன.
இந்தியா, பாகிஸ்தான் சூடான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் மருதாணி வணிகரீதியாக சாகுபடி செய்யப்படுகிறது. இந்தியாவில் குஜராத், மத்தியப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் மிக அதிகமாக சாகுபடி செய்யப்படுகிறது. ராஜஸ்தான் பாலி கிராமத்தில் 150 வருடங்களாக மருதாணி முக்கிய பயிராக இருக்கிறது..
3 மாதங்கள் வளர்ந்த மருதாணி செடிகளிலிருந்து தொடர்ந்து இலைகளை எடுத்துக்கொண்டு இருக்கலாம் மருதாணி எல்லா விதமான மண் வகைகளிலும் நன்கு வளரும். விதைகளிலிருந்தும் போத்துகள் எனப்படும் வெட்டிய தண்டுகளிலிருந்தும் மருதாணி சாகுபடி செய்யலாம் விதைகள் கடினமான விதையுறையுடன் இருப்பதால் சில நாட்கள் நீரில் ஊற வைத்த பின்னர் முளைக்க வைக்க வேண்டும்.
மருதாணியைப்போலவே சாயமேற்றப்பயன்படுத்தப்படும் மற்றொரு தாவரம் லிப்ஸ்டிக் மரம் என அழைக்கப்படும் Bixa orellana. அமெரிக்க பழங்குடியினரால் இதன் விதைச்சாற்றிலிருந்து,Annatto எனப்படும் சாயம் எடுக்கப்பட்டு உடலில் பலவகையான சித்திரங்களை தீட்ட பயன்படுகிறது. பிரேசில் பழங்குடியினரும் இதே விதை சாற்றை உடலில் வண்ணங்கள் தீட்டி கொள்ளப் பயன்படுத்துகிறார்கள்
கருநீல வண்ணத்துக்காக Genipa Americana என்னும் தாவரத்திலிருந்து ஜாகுவா எனபப்டும்( jagua) சாறு எடுக்கப்பட்டு வட மற்றும் தென் அமெரிக்க பழங்குடியினரால் உபயோகப்படுத்தப்படுகிறது.
தற்போது பரவலாக புழக்கத்தில் இருக்கும் வெள்ளை மருதாணி இயற்கையான மருதாணி அல்ல அது தோலில் ஒட்டிக்கொள்ளும் பிளாஸ்டிக் .அதைப்போலவே நடனமாடுபவர்க்ளும், திரை நடிகர்களும் கைவிரல்களலும், பாதங்களிலும் பூசிக்கொள்ளும் ’அல்டா’ எனப்படும் செம்பஞ்சுக்குழம்பு மருதாணி அல்ல முன்பு வெற்றிலை சாற்றில் இருந்து தயாரிக்கப்பட்ட அல்டா தற்போது அரக்கு மற்றும் செயற்கை வேதி பொருட்களை கலந்து தயாரிக்கப்படுகின்றது. இச்சாயம் மருதாணி போல அதிக நாட்கள் நீடிக்காது.
சந்தையில் கிடைக்கும் மருதாணியில் வேறு இலைகளின் பொடிகளும் வேதிப்பொருட்களும் அதிகம் கலப்படம் செய்யப்படுகிறது.அழகியல் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்திருக்கும் உலர்ந்த மருதாணி இலைகளின் விலை கிலோ 50 ரூபாய்கள். பல விவசாய நிலங்களில் உயிர்வேலியாகவும் தனிப்பயிராகவும் ஊடுபயிராகவும் மருதாணி பயிரிடப்படுகின்றது. பூச்சியோ நோயோ தாக்குவதில்லை என்பதால் எந்த செலவுமின்றி இதை வளர்க்கலாம். அழகு சாதனப்பொருட்கள், கேசத் தைலம், இயற்கைச் சாயம் மருந்து பொருட்கள் எனப் பல தொழில்களில் மருதாணி மூலப்பொருளாகப் பயன்படுவதால், மருதாணி வளர்ப்பில் நல்ல லாபம் கிடைக்கும்.