நண்பர் குமார் அம்பாயிரத்தின் ஈட்டி என்னிடம் வந்து சேர்ந்து சற்றேறக்குறைய ஒரு மாதமே ஆகிவிட்டது எனினும் கல்லூரி வேலை நாட்கள் முடிந்து விடுமுறை துவங்கிய பின்னர் வாசிக்கலாமென்றே இத்தனை காலம் எடுத்துக்கொண்டேன். ஆனால் கூர் நுனிகளைக்காண்கையிலும், வெண்முரசுபோர்க்களககாட்சிகளில் அவற்றைக்குறித்து வாசிக்கையிலும் எப்போதும் என் வீட்டைக்கடக்கும் ஏராளமான பறவைக்கூட்டம் ஈட்டிமுனை வடிவில் பறக்கையிலும் அந்த புத்தகம் பிரிக்கப்படவும் வாசிக்கப்படவும் காத்திருபப்தை நினைத்துக்கொள்வேன் புத்தகத்தின் முகப்புப்படம் எப்படியோ எனக்கு வாட்ஸப்பில் விளையாட்டிற்கான காகிதத்தொப்பிகளை வைத்துக்கொண்டு இருக்கும் எளிய குழந்தைகள் சூழ அம்பாயிரம் இருக்கும் படத்தை நினைவூட்டியது . தொகுப்பை வாசித்து முடித்ததும்தான் இத்தொகுப்பில் உள்ள அனைத்துக்கதைகளுமே மாய யதார்த்தக்கதைகள் என்பதை முன்னரே அப்படம் சொல்லியிருக்கிறது என்றறிந்தேன் .இதுபோலக்கதைகளை அவ்வப்போது யுவன், கோணங்கி இவர்கள் எழுத்தில் வாசித்திருந்தாலும் ஒரு தொகுப்பாக எட்டுக்கதைகளை இப்போதுதான் சேர்ந்தாற்போல வாசிக்கிறேன், காணாமற்போகையில் அவரைத்தேடுபவர்களுக்காக இத்தொகுப்பை சமர்ப்பித்திருப்பது புன்னைகையை வரவழைத்தது அவரை கொஞ்சம் அறிந்திருப்பவள் என்னும் வகையில் ஈட்டியை வாசித்துமுடித்த பிரமிப்பிலிருக்கிறேன் இன்னும். நிலவடிவமைப்பாளராக வாசு சாரால் அறிமுகம் செய்யபட்டு பின் நேரில் பார்க்கையில் அலையலையாகப்படிந்த சிகையும், ஒற்றைக்காதுக்கடுக்கனும் கனவில் தோய்ந்த கண்களுமாக இசைக்கலைஞரைபோலிருந்த, கைவிடபப்ட்ட பாழ்நிலங்களில், வறண்ட பூமிகளில் மறைந்திருக்கும் உயிரைத்தேடிக்கண்டுபிடித்து அதை வளமானதாக மட்டுமன்றி அழகானதாகவும் வஞ்சமின்றி விளையும் மண்ணாகவும் மாற்றும், அழைக்காத பாதைகளையெல்லாம் தேடித்தேடிச் சென்று வாழ்வைத்தொடரும், , அவ்வப்போது அழகியகவிதைகள் சொள்லும், வெட்டப்பட்ட இரண்டு ஆரஞ்சு மரங்களுக்காக துக்கிக்கும் ஒருவரான குமாரிடமிருந்து இப்படி ஒரு ஆழ்ந்த படைப்பினை நான் எதிர்ப்பார்க்கவேயில்லை என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும் பல ரகசிய உலகங்களுக்கு கைப்பிடித்துகூட்டிச்செல்கிறார். கதைகளின் தலைப்புக்களும் கதாபாத்திரங்களின் பெயர்களும் மர்மமாகவும் கேள்விப்படாததாகவும் வசீகரிப்பதாகவும் உள்ளன, ’’ன்யாக், டிங்கோ(சைக்கிளீல் வரும் ’’டிங்கா எனப்பெயரிடப்பட்ட அந்த கரிய அழகியை நினைத்துக்கொண்டேன் இதை வாசிக்கையில்), அக், தேடூ, என்று தொகுப்பு முழுவதும் என்னுடனேயே, காகங்களும், காக்கட்டான் பூக்களூம், சுற்றிக்கட்டப்பட்ட துணியுடன் குழியிலிருந்து மேலெலும்பிய பிரேதமும், நாய்களும், கன்றை இழந்த பசுவும், பனையும், எருமையும் பன்றியும், ஆச்சா மரமும், குறிசொல்பவனும், தேள்களும் நட்சந்திரங்களும், குதிரையும், குர்தையும், கழுதையும், ’’ன்யாக்’’ ஆவிகளும், புறாக்களும் அலைந்துகொண்டிருந்தன. கதைசொல்லியான குமார் புனைவு மற்றும் மர்மத்தன்மை கொண்ட இக்கதைகளை இவ்வுலகிற்கு வெளியேயிருந்துதான் எழுதியிருப்பார் நிச்சயம் சில இடங்களில் அவரின் மொழிநடையும் விவரிப்பும் வியப்பளித்தது மேலும் அவை என்றென்றைக்கும் மறக்கவியலாதவையாகவும் ஆகிவிட்டன மனதில் பாழடைந்த இரவுகளின் கருநீலம் நொறுங்கிக்கிடக்கும், வயிறு கிழிந்து இறந்துபோன் புறாக்களின் கண்கள், மயானத்தின் சூரை முட்களில் மாட்டிக்கொண்டு வா வா என அழைத்துக்கொண்டிருக்கும் கிழிந்த சவத்தின்மேல் போர்த்தப்பட்ட துணிகள்,கண்ணாடியின் குறுக்கே வழியும் நீரொழுக்கைபோல கண்ட ‘ன்யாக்’, அது இதயத்திற்கருகே வந்து கிசுகிசுப்பது, ஒரு போர்வையைப்போல கதப்பாக அது அளிக்கும் ஸ்னேகிதம், அன்பின் பெயரால் கட்டாயப்படுத்தலும், கட்டாயப்படுத்தலே அன்பாகவும் நொறுக்கப்படும் ஒரு பெண், பற்கள் தடுத்ததால் உதிராமல் வாய்க்குள்ளேயே நிறைந்து விட்ட மரணப்பூ,, எதிர் எதிர் திசையில் கிளம்பி ஒன்றையொன்று தழுவிக்கொள்ளும் நெருப்புவரிகள் எச்சுவையும் இல்லாத ன்யாக்கின் தேனீரைக்குடித்ததும் நொறுங்கும் இரவுகளின் ஆழத்தால் பின்னப்பட்ட உணர்வுகளின் உறைநிலை , காலையில் அழைதத ஒலி மாலையில் எதிரொலித்துக் கேட்பது, மேகங்களில் தங்கியும் விடுபட்டும் தொடரும் நிலா, வாழ்வின் சகலத்த்தையும் இழந்த பின்னும் உயிர் தரித்திருப்பதற்கான உந்துதல், நம் சக்திகளுக்கு அப்பாற்பட்ட நியதிகளால் கிழித்தெறியப்படும், வாழ்தலுக்கான கதகதப்பின் வெண்ணிறப்போர்வை, காகங்களின் இறகு மடிப்புகளுக்குள் மின்னும் கருத்த ஆழங்கள், காகத்தை ’கருஞ்சாந்து’ என்பது, பிச்சைப்பாத்திரத்தில் பூக்கும் ரத்த நிற மலர்கள், சுனைகளைக்கடந்து வரும் காற்றின் குளிர்மை, சாராயக்கடையில் நீந்தமுடியாமல் சிதறிக்கிடக்கும் மீனின் எலும்புகள் இப்படி ஏராளம் சொல்லிக்கொண்டேயிருக்கலாம். ஏன் குமார் தொடர்ந்து எழுதுவதில்லை என்னும் கேள்வி எனக்குள் 2 பக்கங்களுக்கு ஒருமுறை எழுந்துகொண் டேயிருந்தது. இக்கதைகளிலிருக்கும் மாயத்தன்மைகளை, மர்மங்களை , புனைவுகளை வெளியில் நம்பமுடியாதென்று சொல்லிக்கொண்டே என் உள்மனம் ரகசியமாய் அவற்றில் ஆழ்ந்து அவ்வுலகிலேயே ஊறும் நிழல்களையும், உதிரும் மலர்களையும் பார்த்தபடி , பால்பிடித்த கதிர்களை நெருப்பில் வாட்டி தின்றுகொண்டு, கரையில் கையைப்பிசைந்தபடி காத்திருக்கின்றது வெளியேறும் விருப்பையும் விருப்பமின்மையையும் ஒருசேர சுமந்துகொண்டு பல கவிதைக்கணங்களுமிருக்கின்றது தொகுப்பில்.//சூரிய ஒளியில் வண்ணமாகத்தெறிக்கும் நீர்த்தெறிப்பில் டிங்கோ துள்ளிக்கொண்டிருப்பது,, முன்கால் முடங்கிய வீனஸுடன் நிலவின் புலத்தில் திரும்பிவருவது,, நரிகளுக்கெட்டாத திராட்சைகளைப்போல நட்சத்திரங்கள் முளைவிடுவது, இலைகள் மேல்காற்றிலும், இரவுகள் கீழ்க்காற்றிலும் உதிர்வது, கூர்மையான வளைந்த சொற்களால் சதையைக்கீறுவது// இப்படி. எல்லாம் அழகு க அத்தனைகதைகளிலும் எனக்கு ஈட்டி அந்தரங்கமாகப்பிடித்திருக்கிறது. பாலுறவுச்சித்தரிப்புக்களும் பாலுறுப்புக்களின் வர்ணனைகளும் சில கதைகளில் அதிகமிருப்பதை தவறென்றோ சரியென்றோ சொல்லத்தோணறவில்லை , இதுபோன்ற அப்பட்ட விவரிப்புக்கள் அதிகம் இருக்கும் கதைகளை முதல்முறையாகப்படிக்கிறேன் என்பதைத்தவிர குறைகள் என்றால் அதிகம் தட்டச்சுப்பிழைகள் இருக்கின்றன. மறுபதிப்பு செய்யபடுமேயானால் அவற்றை கட்டாயம் தவிர்க்கவேண்டும். (’அவன்’ பல இடங்களில் ’அவளாகி’ வருவதும் மாயக்கதைச்சூழலில் சரிதான் என்பதுபோல ஒரு மயக்கத்தைத் தந்தது. ) குமார் இன்னும் நிறைய எழுத வேண்டும் |
Leave a Reply