பரியேறும் பெருமாள் பார்த்து முடித்த அடுத்த கணத்திலிருந்து இதை எழுதுகிறேன். காலச்சுவடில் விமர்சனம் வாசித்தேன் எனினும் உண்மையில் திரைமொழியைவிட வேறெதுவும் இத்தனை வீரியமாக இக்கதையைச்சொல்லிவிடமுடியாது என்பதை பார்த்தபின்பே உணர்ந்தேன். இது ஒரு திரைப்படம், பொழுதுபோக்குவதற்கானது என்னும் எண்ணத்தில்தான் ஒரு தன்ணீர்பாட்டிலும் கொஞ்சம் நொறுக்குத்தீனியுமாய் நொச்சிமரத்தடி மேசையில் என் மடிகணினியுடன் பார்க்கத் துவங்கினேன்
இது பொழுதைபோக்கும் படமல்ல விளிம்பு நிலை மக்களின் வாழ்வை, அதன் அவலங்களை ஆதிக்கச்சாதியினரின் வெறியை, இவற்றை அறியாமல் முகிழ்க்கும் ஒரு பதின்பருவக்காதலை இப்படிப்பலதை நம் இதயத்தைக்கீறிக்கீறி , அழுத்தமாகச்சொல்லும் படம் என்பதை படம் துவங்கிய சில காட்சிகளிலேயே அறிந்தேன்.
அவசானக்காட்சிகளில், ‘’ கொல்லுடா அவனை’’ என ஈரக்கண்களுடன் உரக்க சத்தமிட்டுக்கொண்டிருந்தது நான்தான் என்பதை இப்போதும் எந்த கூச்சமும் இன்றி நினைவு கூறுகிறேன். புகழாரங்களுக்கும், பரபரப்புக்களுக்கும் மத்தியில் வலம்வரும் சர்க்காரும், 96ம் , திரையிடப்படுகையில் அவற்றுடன் வெளியாகியிருக்கும் இதுபோன்ற படங்களுக்கு என்னுடையதைபோல மனமார்ந்த ஒரு சில எதிர்வினைகளாவது வேண்டுமல்லவா!
எப்படியோ துவக்ககாட்சியிலேயே அந்த கருப்பியின் அறியாக்கண்களை கண்டதும் அதன் முடிவை மனம் யூகித்துவிட்டது. காலடியில் எச்சில் சோற்றுக்கு வாலாட்டிக்கொண்டிருக்க வேண்டிய நாய்கள் உருவிவிட்ட உடலுடன் துள்ளும் இளமையும் திமிறும் உடலுமாய் நேர்க்கொண்ட பார்வையுடன் வேட்டைக்கு சென்றால், ரயிலுக்கடியில் கூழாக வேண்டும் என்பதை ஆதிக்கச்சாதியினரின் பார்வையில் நமக்கு சொல்லிவிடுகிறது படம்
பாத்திரத்தேர்வு மிக அருமை. செல்வத்தின் செழுமை கன்னத்தில் பளபளக்க அறியாப்பெண்ணாய் அவள், கொதிக்கும் குருதியுடன் இளமைக்கெ உரிய ஆர்வமும், தாழ்த்தபப்ட்ட சாதியினருக்கான தயக்கமும் , இயல்பானநேர்மையும் , நடக்கும் காரியங்களின் குழப்பம் கண்களிலுமாக, கதிர், அந்த வாடகைக்கொலையாளியைப்போல சித்தரிக்கப்பட்டிருக்கும் நபர் உண்மையிலேயே திகிலைக்கிளப்பினார் எனக்கு. துளிதயக்கமும் இல்லமல் உறுதியான காலடிகளுடன் அவர் இரையை நெருங்குவது, உயிருடன் இருக்கும் பெண்ணையும் சாகடித்து தூக்கில் மாட்டுவது, பேருந்தில், மிக இயல்பாக ஒரு கைநகர்த்தலில் அந்த இளைஞனை கொல்வது, நீரில் மூழ்கியபபடியே இன்னொரு அறியாச்சிறுவனைக் கொல்வது, கெளரவக்கொலையை குலச்சாமிக்கு வேண்டுதலைப்போல பெருமையுடன் செய்வது, எந்த உணர்ச்சியுமின்றி தவலையில் வாய் வைத்து விலங்குபோல நீரருந்துவது, அவரின் உடல்மொழியும் பட்டைபெல்ட்டும் கட்டுமஸ்தான உடலும் என்னைக்கலக்கியது
ஹாலிவுட் படங்களில் கூட இப்பாத்திரத்துக்கு இத்தனை சரியான தேர்வு இருந்ததில்லை. இறுதிக்காட்சிகலில் ரயில் தண்டவாளத்திற்கு அருகில் சண்டையிட உருண்டுவரும் காட்சிகளிலெல்லாம் அபாரமாக நடித்திருந்தார்
கல்லூரிக்காட்சிகளும் இயல்பாக இருக்கின்றது, ஆங்கிலவழிப்போதனையில் சிரமப்படும் முதலாமாண்டுமாணவர்கள், அந்த பேராசிரியை ’’ஆத்திச்சூடி’’ படி போ’’ என்று கத்தியபொழுது, கடந்த மாதம் எங்கள் மத்தியில் நாஞ்சில் சார் சொன்னதை நினைத்துக்கொண்டேன். நிலவின் பிறை போலிருக்கும் வெள்ளை ஆத்திமரத்தின் ( அகத்தி ) மலரைச்சூடியவனே! என்னும் பொருளறியாது ஒரு ‘’ச்’’ இடையில் சேர்த்து தப்பாகவே இன்னும் அது கற்றுக்கொடுக்கப்படுகின்றது என்றும் ’ச்’ சேர்க்காமல் ஆத்தி சூடி’ யென்றே அது சொல்லப்படவேண்டுமென்றும் சொல்லிக்கொடுத்தார்
ஆங்கிலத்துக்கு தமிழ் பரஸ்ரம் உதவிக்கொண்டு பரீட்சையில் பாஸாவது, சின்ன பெரிய C , இதெல்லாம் வெகு இயல்பு மற்றும் உண்மை
அந்த PTM காட்சியில் அப்பா’’நடிகர்’’ அபாரமாக நடித்திருந்தார்
சேற்று மண் இறுகிகெட்டிப்பட்டதைபோல அதிகம் பச்சையில்லாத ஒரு கதைக்களம் பல சமயங்களில் காமிரா பெரும்பாலும் சென்னிறப்பரப்பும் இடையிடையே பச்சை சதுரங்களாக வயல்களுமாய் உயரத்திலிருந்து அந்த கிராமத்தை கவிதையாக காண்பிக்கிறது
அந்தப்பெண்னின் குறுகுறுப்பை அகலக்கண்களின் வெளிப்பாடுகளை, காதலில் குழையும் உடலை, அறியா மழலைப்பேச்சை நாம் உடனிருப்பதுபோல் அத்தனை துல்லியமாக காமிரா காண்பிக்கின்றது
அதைப்போலவே அவ்விளிம்பு நிலை மனிதர்களின் வாழிடத்தை அத்தனை தத்ரூபமாகக்காண்பித்திருக்கிறார்கள் அடிக்கடி கொண்டாட்டமாய் நடனம், குளித்து நாளான அழுக்கு உடைகள் பெரும்பாலும் மேல்சட்டையில்லா ஆண்கள், காவல் நிலையக்காட்சிகள்,
அந்த தூக்கில் மாட்டப்பட்டு இறக்கும் பெண்னின் வீட்டில் அவள் அம்மாவாக நடித்தவர் மிகப்பிரமாதம். தொழில் முறை நடிகைகள் கூட தோற்றுப்போகும் நடிப்பு
’’அவங்களுக்கு வயலும் வரப்பும், நமக்கு வாயும் வயிறும் ’’ ‘’ஒண்ணாப்படிச்சா ஒண்ணாயிருவீங்களாடா’’ எனும் வசனங்கள் மொத்தக்கதையின் சாராம்சம்
கல்யாணவீட்டில் கதிரை அடிக்கும் காட்சிக்குப்பின்னரான, பிண்ணனியில் பாடல் ஒலிக்கும் காட்சியில் சாதியசாயம் நீலமாக நாய்க்கும் சின்னஞ்சிறு அம்மணக்குழந்தைக்கும் கூட பூசியிருப்பதும் காலம்காலமாக அவர்களை தளைக்கும் கயிறுகளால் அவ்விளைஞன் கட்டப்பட்டிருப்பதும் அவன் அதிலிருந்து விடுபட திமிறுவதும் நூற்றாண்டுகளாக அவர்களுக்குள் அடக்கப்பட்ட அந்த இழிவு நஞ்சென, நாகமென வழுக்கிக்கொண்டு அவன் காலடியில் செல்வதுமாய் அருமையாக கட்டமைக்கபட்டிருந்தது
அந்த ஸ்டோர் ரூமில் வாழைத்தாரிலிருந்து கைக்கு கிடைத்த எல்லவற்றிலும் கதிரை நிஜமாகவே அடிக்கிறார்கள். பதை பதைத்தபடி பார்த்துக்கொண்டிருந்தேன் அக்காட்சியை
பரியனின்/கதிரின் அப்பவைப்பற்றிய கேள்விக்கெல்லாம் எப்போதும் ஏன் மழுப்பலாக தடுமாறிக்கொண்டு பதிலளிக்கிறான் என்னும் கேள்விக்கும் மிக நெகிழ்சியான பதிலிருக்கின்றது கதையில்
அவருமென்ன அத்தனை அட்டகாசமாக நடித்திருக்கிறார்?
அந்த மனிதரின் நசுங்கியது போன்ற முகமும், ஒடுங்கிய தேகமும் வறுமையில் சுக்காக காய்ந்திருக்கும் உடலும் கைவிடப்பட்டவர் போன்ற தோற்றமும் ஒட்டுமொத்தமாக பல யுகங்களாக காலடியின் கீழிட்டு மண்ணோடு மண்ணாக மிச்சமின்றி நசுக்கியும் இழிவுபடுத்தியும் வைத்திருக்கும் கீழ்த்தட்டு மக்களின் பிரதிநிதியாகவே அவரைக்காட்டுகிறது என்றே எனக்குத்தோன்றியது
கண்கள் கசிய நான் திரைப்படம் பார்த்து பல ஆண்டுகளாயிற்று என்பதை அந்த அப்பா பாத்திரம் வரும்போதெல்லாம் உணர்ந்தேன்
அந்த ஜோவின் அப்பா பாத்திரமும் நல்ல தேர்வு, மகள் மேலுள்ள பாசமும், சாதீயபற்றும், அறத்தின் மீதான மிச்சமிருக்கும் கொஞ்சமே கொஞ்சம் நம்பிக்கையுமாக அவரும் பிரமாதப்படுத்தியிருக்கிறார்
ஜோ அவளின் கையில் பேனாவால் jo என்று எழுதிவிட்டு, அதன் கீழே மெல்ல p எழுதுகையில் தயங்கி மெல்ல அவ்வட்டத்தினை பூர்த்தி செய்வது ஒரு சிறு கவிதையின் அழகு
கல்லூரி துவக்கத்தில் பரியனின் மீது ஆச்சர்யமும் அவன் அறியாமையின் மீது பச்சாதாபமும் பின் மெல்ல நட்பும் பிரியமும் முகிழ்ப்பதை அழகாக உடல்மொழியில் காட்டியிருக்கிறார் நாயகி
பின்வரிசையிலிருந்து முன்வரிசைக்கு பரியன் வரும் காட்சிகள் எல்லாம் அருமை. கழிவறைக்குள் அவன் தள்ளிவிடப்பட்டபோது எனக்கே ஆயாசமாக இருந்தது மேலெழுந்து வருவது என்பது இனி எப்போதும் சாத்தியமில்லை எனும் அவநம்பிக்கையில் நொந்துபோனேன்
அவ்வப்போது கொச்சையான குரலில் நாடன்பாடல்கள் பிண்ணனியில் ஒலிப்பது கதைக்கு சொல்லவொன்னா துயரையும் வலுவையும் சேர்க்கின்றது. அந்த பரியனின் அப்பா நடிகர் பெண்வேடமிட்டு ஆடும் காட்சியிலும் காதலை பிரிவை ஏக்கத்தை சொல்லும் உச்ச்ஸ்தாயியிலான அப்பாடலும் மனதைப்பிழிகின்றது
அந்த நடனத்தை நாமும் பரியனின் கண்களின் வழியே துயருடன் தான் பார்க்கிறோம்
காரின் கண்ணாடியை கல்லெறிந்து உடைத்துவிட்டு அந்த துவாரம் வழியெ காறி உமிழ்ந்தபின்னர் பரியன் கேட்பதெல்லாமே ஆதிக்கச்சாதியினரை, நாக்கைப்பிடுங்கிக்கொண்டு சாகச்சொல்லும் கேள்விகள்.
ஜோவின் அப்பா இறுதியில் ‘’ பார்க்கலாம் தம்பி நல்லாப்படிங்க, இனிமே என்ன நடக்கும்னு யாருக்குத்தெரியும் மாறலாம் இந்நிலைமை’’ என்பதுபோல சொல்லும் ஒரு வசனத்தில் அடக்கபட்ட வர்க்கத்தினருக்கான ஒரு நம்பிக்கை இழை தெரியுதென்று நான் நினைப்பதற்குள், பரியன் ’’இல்லை நாங்க நாயா இருக்கனும்னு நினைக்கும் நீங்க நீங்களா இருக்கும் வரைக்கும் எதுவுமே மாறாது’’ என்று அந்நினைப்பில் மண்ணள்ளிப்போடுகிறார்
கருப்பியைப்பாடையில் தூக்கிச்செல்லும் காட்சியிலும் பிண்ணனிப்பாடல் இதையே சொல்கிறது ‘’ நாயல்லடி நீ நானல்லவா நீ’’ என்று
மாரிசெல்வராஜின் ’’ஆண்பால் பெண்பால் அன்பால் ‘’ வாசித்தபோது அவரை நேரில் பார்த்து வாழ்த்துச்சொல்லனும் பாரட்டுகக்ளைத் தெரிவிக்கனும்னு நினைத்திருந்தேன், இப்படத்தின் இறுதியிலும் வெள்ளை வேட்டிசட்டையில் ஆதிக்கச்சாதியினரான ஜோவின் அப்பாவும், மேலெழுந்துவரும், நேர்மையான அடக்கப்பட்ட ஆத்திரத்தையும், எதோ ஒரு நம்பிக்கையில் புதைத்துக்கொண்டு நிமிர்ந்துநடக்கும் அச்சமுதாயத்தின் பிரதிநிதியாக பரியனும் இவர்களுக்கிடையில் அறியாபபென்ணாய் பச்சைப்புடவையும் மல்லிகையுமாக துள்ளிக்கொண்டு சதிகளும் வஞ்சமும் சாதியும் தொட்டிருக்காத பிரியத்தின் தூய்மையுடன் அப்பெண்ணுமாய் முடியும்போது மாரியைச்சந்தித்து அழுத்தமாக கைகுலுக்கனும் என்று விரும்பினேன்
சமீபத்தில் இப்படி ஒரு முழுநாளை ஒரு திரைப்படத்தை பார்க்கவும் அதைக்குறித்துச் சிந்திக்கவும் எழுதவுமாய் செலவழித்ததே இல்லை
மனம் நிறைந்தும் கனத்தும் இருக்கின்றது
Leave a Reply