கொஞ்சநாளாகவே கல்லூரியிலும் விபு குழுமத்திலும் 96 பாட்டே பாடிக்கொண்டிருந்தார்கள்.
பலர் திரையரங்கைவிட்டு கண்ணீர் மல்கியபடியே வெளிவந்தார்களென்றும் இதைப்போல முன்காதலைச்சொல்லும் திரைப்படத்தை பார்த்ததில்லை என்றுமே பரவலாக பேச்சிருந்தது. நான் இந்தத்திரைப்படத்தைப் பார்க்கனுமென்று நினைக்கவேயில்லை. எனக்கு எப்போதுமே தமிழ்த்திரைப்படங்களின் மீது அத்தனை அபிமானமிருந்ததில்லை.
பார்வையாளர்களை அடிமுட்டாள்களென்று நினைப்பவையும், நகைச்சுவை என்னும்பெயரில் மூன்றாந்தர ஆபாசங்களை பேசவைப்பதையும், கட்டிக்கொடுத்தால் எட்டுப்பிள்ளை பெற்றுத்தருபவள் போலிருப்பவளை (நன்றி ஜெமொ-சுட்டிப்பெண்) 2ஆம் வகுப்பு படிக்கும் குழந்தையின் உடையில் காண்பித்து அதை கவர்ச்சியென்று சொல்லி சித்ரவதை செய்வதுவும், தமிழ்நாட்டில் இளைஞர்களே இல்லாத பஞ்சம் நிலவுவதுபோல 60 வயது கதாநாயகனை 14 வயதுப்பெண்ணின் காதலராக மனசாட்சியே இல்லாமல் ஜோடி சேர்ப்பதும், திரைக்கதையைப்பற்றியும் அதிலிருக்கும் ஓட்டைகளைப்பற்றியெல்லாம் பெரிதாக அலட்டிக்கொள்ளாமலும் இருப்பதால் அவற்றை பெரும்பாலும் தவிர்ப்பேன். ஒருசில நல்லுதாரணப்படங்களை அவ்வப்போது பார்ப்பதுவும் உண்டு
சமிபத்தில் வந்த கோகோ ஒரு உதாரணம்
அதிகம்கருப்பு வெள்ளைத்தமிழ்ப்படங்கள், மலையாளம் கொரியன் மற்றும் ஆங்கிலப்படங்களையே விரும்பிப்பார்ப்பேன்
எனவே 96 பார்ப்பது குறித்து எனக்கு எந்த சிந்தனையும் இல்லாமலிருக்கையில் ஆயுதபூஜை விடுமுறையில் வீட்டுக்குவந்த சரண் 96 பார்க்கலாமென்றான். அவன் நண்பர்கள் இதை மிகவும் சிலாகித்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கெளென்பதால் அவன் பார்க்க விரும்புகிறானென்பதால் இருவருமாக பார்த்தோம்
உண்மையில் இந்த விமர்சனம் எழுத எனக்கு தயக்கமும் அச்சமுமாகவே இருக்கின்றது. அனேகமாக பலநாடுகளின் வசிக்கும் ஆறிவுஜீவி விபு குழும நண்பர்கள் ஒட்டுமொத்தமாக 96க்கு பாராட்டுப்பத்திரம் வாசித்துவிட்டிருக்கும் இச்சமயத்தில் இதுகுறித்து நான் என்நேர்மையான எண்ணங்களைச் சொல்ல உண்மையிலேயே தயங்குகிறேன்
நேற்று நண்பர் செளந்தர் காற்றின் நிழலில் 96 திரைப்படத்தைப்பற்றி எழுதியிருந்தார் முதலில் திகைத்தேன் இவருமா? என்று ஆனால் அவர் திரைப்படத்தை பற்றி ஓரிரு வரிகளும் பார்வையாளர்களைப்பற்றி பலவரிகளுமாய் சொல்லி மய்யமாய் எழுதியிருந்தார். நிம்மதியாயிருந்தது.
காதலையும் முன்காதலையும் சொல்லிச்சொல்லி இன்னும் அலுக்கவேயில்லை தமிழ்கூறும் நல்லுலகிற்கு. எத்தனையோ கதைக்களங்களை பலமொழிகளில் உலகத்திரைப்படங்களில் எடுத்தாளத்தொடங்கி பல வருடங்கள் ஆனபோதிலும் நாம் இன்னும் காதலைக் கைவிடவேயில்லை
இதிலும் முன்காதலும், பதின்பருவத்துக்காதலுமே மையமுடிச்சு ஆனால் புதிதாகவோ புனிதமாகவோ ஏதுமில்லை. அழகியில் சொல்லப்பட்டதுதான் ஆனால் அழுத்தமின்றி சொல்லப்பட்டிருகின்றது.
திரைக்கதையில் ஆங்காங்கே தொய்வு வருவது சகஜமே. ஏனெனில் ஒரு கதைக்கரு திரையில் வருவதற்குள் பலரின் தாக்கம் அதில் சேர்ந்திருக்கும் அதைத்தவிர்க்கவே முடியாது .ஆனால் முழுக்கதையுமே தொங்குபாலத்தில் தொங்கிக்கொண்டு செல்வது எரிச்சலாக இருந்தது .
ராம் ஜானகி பள்ளிப்பருவத்தில் காதல், எப்படியோ பிரிவு பின் பல வருடங்கள் கழித்து முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் மீண்டும் சந்திக்கிறார்கள் இதை எலாஸ்டிக் போல இழுத்துஇழுத்து 2 மணிநேரத்திற்கும் மேல் கொண்டுபோயிருக்கிறார்கள்.
திரைப்பட விவாதத்திலேயே ஒன்றை முடிவு செய்துவிட்டார்கள் போல, இதற்கு முன்பு வந்த எந்தகாதல்கதையின் சாயலும் இருக்கக்கூடாதென்று எனவே வழமைக்கு மாற்றாக இதில் ஆண் அச்சம் மடம் நாணம் பயிர்ப்புடனும் பெண் கொஞ்சம் துடுக்குடனும் இருக்கிறாள்
இன்னொன்றும் முடிவுசெய்திருக்கிறர்கள், அது இந்த ராம் ஜானகி இருவர் மீதும் ஒரு கெட்டியான புனிதப்போர்வை போர்த்திவிடுவது அதை ஜானகி விமானத்திற்கு செல்லும் போதுதான் அகற்றுவது என.
இருவரையும் physical intimacy குறித்து எள்ளளவும் நினைக்காத புனிதக்காதலர்களாகவே காட்டியிருக்கிறார்கள். நிச்சயம் அவர்களிருவரும் படுக்கையில் இருந்திருக்கவேண்டியதில்லை ஆனால் ஒரு தழுவலோ ஒரு முத்தமோ கூட இல்லையென்பது இயல்புக்கு எதிரானது. அதில் ஒன்றும் கெட்டுப்போயிருந்திருக்காது அவை அன்பை ஆதரவை கனிவை பிரியத்தை ஏக்கத்தைத் தெரிவிக்கும் உடல்மொழிகளில் சில அவ்வளவே. அதையும் கவனமாகத் தவிர்த்திருக்கிறார்கள்
அப்படியான மென் உணர்வுவெளிப்படுதல்களில் ஈடுபட்டால் அது அவர்களை அடுத்தகட்டத்திற்கு நகர்த்திவிடும் என்று பயந்து அதை தவிர்த்தார்கள் என்றால் மனதிற்குள் நினைத்துவெளீயில் காட்டாமல் மறைத்தார்கள் என்றே பொருள்
கற்பை கற்பூரக்கட்டிபோல உள்ளங்கையில் வைத்து பொதிந்து காப்பாற்றும் முயற்சியில் இருப்பது போலக்காட்டியிருப்பதும் எரிச்சலாக இருந்தது
பள்ளியில் பதின்பருவத்தில் வருவது இயற்கையாக ஆணுக்கு பெண்ணுடலின் மாற்றங்கள் ஏற்படுத்தும் கிளர்ச்சியின்பேரிலான காதலே. பத்தாம் வகுப்பில் தெய்வீகக்காதெலெல்லாம் சாத்தியமே இல்லை
பெண்ணுக்கு ஆணின் உடல் ரீதியான கிளர்ச்சி எந்த வயதிலும் வராது எனினும் பதின்பருவத்தில் ஹார்மோன்களின் கலவரம் இருக்கும் அதே பள்ளிப்பருவத்துக்காதல் என்னும் புள்ளியில் நின்றுவிட்ட ராம் எப்படி உடல் ரீதியான எந்த ஈர்ப்புமின்றி ஜானுவை தவிர்க்கமுடியும் என எனக்குபுரியவில்லை. இதில் அவரை பலூன் எல்லாம் வைத்துக்கொண்டு ஒளீந்துகொண்டிருப்பவராக, நெஞ்சுபடப்டப்பில் மயங்கிவிழுபவராக வேறு காட்டுகிறார்கள்
மேலும் நாட்டுகட்டை வர்ஜின் என்னும் வர்ணனைகள் சங்கடப்படுத்தியது. இதற்கு பேசாமல் ஒருமுறை கட்டியணைத்து முத்தமிட்டிருக்கலாம்
Dialogue delivery யில் எப்போதும் விசே ஒரே மாடுலேஷனை காட்டுவாரென்றாலும் அவரை (96க்கு முன்பு) எனக்குப்பிடிக்கும். கூத்துப்பட்டறையிலிருந்து வந்தவர், சினிமாவை காதலிப்பவர், புதுமைகளை முயற்சிப்பவர், வசீகரக்குரல், மனதைக்காட்டும் கண்கள் அழகிய உடல்மொழி, கூடவே விரிந்த தோள்கள்
எல்லா பிம்பத்தையும் இதில் விசே தகர்த்துவிட்டார்
காட்சிஊடகமென்னும் பெரிய சக்தியில் முன்னனியில் இருப்பவர் கொஞ்சமாவது ஃபிட்னஸ் குறித்த கவனத்துடன் இருக்கவேண்டாமா/? தசைகள் தளும்பி உடல் கட்டின்றி வளர்ந்து shapeless ஆக இருக்கிறார். அந்தந்த துறைக்கான சின்சியாரிட்டி வேண்டாமா என்ன?
மிக மிக லோவாக அவர் கதாபாத்திரம் கட்டமைக்கப்பட்டிருக்கின்றது
அதே 10 ஆம் வகுப்பு பையனாக ஜானுவைப்பார்க்கும் போது மட்டும் இருக்கும் ராம் தனது மாணவிகளிடம் நல்ல கம்பீரமான ஆளுமையாக இருக்கிறார். டைட்டில் பாடலுக்குப்பிறகு காமிராவை அவர் தொடவேஇல்லை அவரின் கதாபாத்திரத்தை எப்படி வடிவமைத்திருக்கிறார்கள் என்றே புரியவில்லை
’’எனக்கு உன்கூட இருக்கனும் நிறைய பேசனும் அவ்வளவுதான்’’ என்று தெளிவாக ராமிடம் சொல்லும் ஜானு, ஏர்போர்ட் செல்ல்லும் வழியில் கியர் மாற்றும் போது ராம் தன் கைகளைப்பற்றிக் கொள்ள வேண்டும் என விழைந்து அங்கு தன் கையை வைத்துக்கொள்வதும், தன்வீட்டுக்கட்டிலில் ஜானு படுத்துக்கொள்ள ரொம்ப மரியாதையுடன் தரையில் படுத்துக்கொள்ளும் ராம் அப்போது மட்டும் ,ஜானுவின் கைகளைபற்றிக்கொண்டே கியர் மாற்றுவதும், தமாஷ்
தொட்டுக்கொள்ளும் விழைவென்றால் தொட்டுக்கொள்வதுதான் அதில் degree வேறுபாடு இருக்கா என்ன? கைகளை மட்டும் தொட்டுக்கொல்ளலாம், ஏர்போர்ட் போகும்போது மட்டும் கொஞ்சம் கொள்கையை தளர்த்திக்கொள்ளலாம் அப்படியா?
இழந்த காதலினால் வேறு திருமணம் செய்துகொள்ளாமல் தொழிலில் அர்ப்பணிப்புடன் கவனமாக இருந்து அவ்விழப்பை ஈடுகட்டி அத்துறையில் வெற்றி பெற்றிருக்கிறாரா? அவரை அறிமுகப்படுத்த ஒரு தொழிலைகாட்டி இருக்கிறார்கள் அவ்வளவே!
உடல்மொழியில் எண்ணங்களை காட்டுவதில் ஃபர்ஹான் அக்தரிடமும் ஃபகத் ஃபாசிலிடமும் பாடம் படிக்கனும் இவங்கஎல்லாம்
த்ரிஷாவும் அத்தனை உணர்வெழுச்சியுடன் இதிலில்லை
அவர் கல்லுரியில் தன்னைப்பார்க்க வந்தது ராம் என்று தெரிந்து குளியலறையில் கதறிஅழும் காட்சியில் மனம் ஒன்றவே இல்லை
மின்னலே’ வில் ரீமாசென் வெண்மதி பாடலில் குளியலறையில் அழுவது கூட காட்சியுடன் ஒன்றவைக்கும் நம்மை
கல்லூரிக்கு அத்தனைவருஷம் கழித்து பார்க்க வந்த ராம் வசந்தியின் நோட்டுப்புத்தகத்தை வாங்கி முட்டாள் தனமாக ஏன் ஜானகி என்று எழுதிக்கொடுத்தார் கே ராமச்சந்திரனென்றல்லவா எழுதிக்கொடுக்கனும்?
எல்லாக்காட்சிகளுமே மிகைபடுத்தபட்ட நாடகத்தனம் தெரிந்தது. செயற்கையாக நிறைய நாடகபாணியிலான காட்சிகள் சிரமமாக இருந்தது. மேலும் கதை நத்தை வேகத்தில் நகர்கின்றது. நேர்க்கோட்டில் மிக மிக மெதுவே செல்லும் கதையில் திருப்பம் இல்லாவிட்டால் போகிறது, ஒரு சந்து கிந்து வளைவு? ஒன்றுமேயில்லை
நண்பர்கள் சந்திப்பில் முன்காதலர்கள் சந்தித்தால் , அவர்களுக்குள் ஏதேனும் நடந்தால் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பளர்களை சிங்கப்பூர்காரன் கேள்விகேட்பான் என்று தேவதர்ஷினியும் நண்பரும் கவலைபப்டுவது அபத்தம். நிகழ்சி ஏற்பட்டாளர்கள் எதற்கெல்லாம் பொறுப்பெடுத்துக்கொள்ள முடியும்?
10 ல் படிக்கும் பையனும் பென்ணும் ஸ்கூல் வாட்ச்மேனிடம் காதலைபகிர்ந்துகொள்ள முடியுமென்பதும் அபப்டியே. வாட்ச்மேன் அவர்களின் காதலை கவனிப்பதுபோல காட்டியிருக்கலாம்
த்ரிஷா ராமின் வீட்டில் பேசும் பல வசனங்களில் நுட்பமோ அழகுணர்வோ ஆழ்ந்த, இழந்த காதலின் வலியோ இல்லை உண்மையில் ஜெயமோகனைப்படிக்கும் நான் கூட அந்த சந்தர்பத்தில் மிக ஆழமான உணர்வெழுச்சியுடன் வசனங்களை எழுதியிருக்க முடியுமென்றே தோன்றீயது J
பள்ளிக்காலத்திலும் கல்லூரிக்காலத்திலும் காதலை யாரும் தவிர்த்துவிடவே முடியாது
காதல், கல்யாணத்திலும், கல்யாணம் ஆகாதபொழுதும் முடிவதுமில்லை இப்படி முறிந்த, நிறைவேறாத, இழந்த, தொலைத்,த சொல்லாத பல காதல்கள் இன்னும் இருக்கின்றன
கல்லூரியிலேயெ இருக்கும், இன்னும் இன்னுமென காதலின் பல வடிவங்களை அனுபவத்தில் பார்க்கும் எனக்கு, அழகாக கொண்டு போயிருக்கலாம் இப்படத்தை என்று ஆதங்கமாகத்தான் இருந்தது பார்க்கையில்
பலருக்கு கிடைக்காத காட்சி ஊடகமென்னும் அரிதாக கிடைத்த ஒரு வாய்ப்பில் 2 மணி நேரத்துக்கும் மேலாக மக்களுடன் தொடர்பில் உள்ள வாய்ப்பினை இப்படி வீணடிக்க எப்படி முடிந்தது இவர்களுக்கு என்று வருந்தினேன்
இப்படம் மிக அருமை பலமுறை பார்த்தென் என்றெல்லாம் சொல்பவர்கள் மனதில் ஒளிந்துகொண்டிருக்கும் காதலொன்றை மற்றவர்களுக்கு சொல்லிக்கொள்ள இப்படத்தை ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்கிறார்களா என்ன?
எனக்கு இப்படம் ஏமாற்றத்தையே அளித்தது. ரோமாபுரியிலும் என்னால் பொள்ளாச்சிக்காரியாகவேதான் இருக்கமுடிகின்றது
இந்தத்திரைப்படத்தில் பாரட்டும்படி ஒன்றுமேயில்லை என்று சொல்லிவிடமுடியாது சிலவற்றை சொல்கிறேன்
நண்பர்கள் சந்திப்பு ராம் ஜானு தவிர மற்றபடி அழகாக காட்சிபடுத்தப்பட்டிருந்தது
ஒரு நண்பரைகுறித்த ஏதோ ஒன்றை சொல்லப்போக மற்றவர்கள் அவரை தள்ளி விழுந்துபுரண்டு வாயடைக்கும் காட்சி
தேவதர்ஷினியின் இயல்பான உடல்மொழியும் குரலும், ராம் பாத்திரத்துக்கு தேர்வுசெய்யப்பட பையனும் அவனின் கல்லூரிக்கால கொஞ்சம் மூத்த ஒருத்தனும் நல்ல தேர்வு
ஜானு குளியலறையிலிருந்து கொடுத்த ஈரத்துணிகளை ராம் பிழிந்துகாயப்போடுவது நல்ல இயல்பானகாட்சி (ராம் அவள் மாங்கல்யத்தை தொட்டுக்கும்பிடுவதெல்லாம் ரொம்பவே மிகை)
நஸ்ரியாவின் சற்றே பெரிதுபடுத்தபட்ட வெர்ஷன் போலிருக்கும் விசேவிற்கு காரோட்டும் , அவரை அவ்வபோது விழுங்கிவிடுவதுபோல பார்க்கும் அந்தப் பெண்ணும் அழகு
எனக்கு மிக மிக அந்தரங்கமாக பிடித்த ஒன்றென்றால் இறுதிக்காட்சியில் ராம் தன்னந்தனியே பால்கனியில் நின்றிருக்கையில் அவருக்கு பின்னே இரண்டு பக்கமும் தொட்டிகளில் இருந்த பசுஞ்செடிகள் தான் J
Leave a Reply