கடந்த வாரம் முழுதும் தேர்வுவாரமானதால் இந்த திங்கட்கிழமைதான் மீண்டும் வழக்கமான கல்லூரி நாள். அமெரிக்கத்தோழி, அவளது தோழர் எல்லாம் புறபட்டுச்சென்றுவிட்டபின் கல்லூரிக்கு எப்போதும் போலவே ½ மணி நேரம் முன்னதாக இன்றும் சென்றுவிட்டேன். வேதியியல் துறையின் இடைநாழியில் செல்லும்முன்பாகவே என்னவோ ஒரு ஹீனமான சத்தம் வித்தியாசமாக கேட்டுக்கொண்டே இருந்தது.
ஆய்வகத்துக்கு முன்னாலிருக்கும் சீராக வெட்டிவிடப்பட்டிருக்கும் துஜா புதர்களுக்குள்ளே எனக்கு மிக நன்றாக பரிச்சயமான, அவ்வபோது Taxonomy வகுப்பை எட்டிப்பார்த்துவிட்டுச் செல்லும் ஒரு இஞ்சி நிற நாய் 8 குட்டிகளை ஈன்றிருந்தது. எல்லாம் பால் நிறம் ஒன்றே போல அத்தனை அழகாய். அம்மாநாயும் அழகுதான் சற்றே நீள முகமும். மையிட்டதுபோல விளிம்புள்ள பெரிய கண்களுமாய் அதுவும் லட்சணமாகவே இருக்கும். 3 குட்டிகள் பால் குடித்துக்கொண்டும் 4 குட்டிகள் கிறங்கிப் போய் ஒன்றின் மீது ஒன்றாக படுத்துக்கொண்டு சிவப்பான வாயைத்திறந்தபடி அருகிலேயே உறங்கிக்கொண்டும் இருந்தன. ஒரு குட்டி மட்டும் கழுத்தில் ஒரு வெட்டுக்காயத்துடன் தீனமாக கத்திக்கொண்டு கொஞ்சம தள்ளி குட்டைஅத்திச்செடிகளுக்கிடையே கிடந்தது. கழுத்தெல்லாம் எறும்புகள் மொய்த்துக்கொண்டிருந்தது.
அம்மா என்ன நினைத்துக்கொண்டோ அந்த அடிபட்ட குட்டியை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் ஆனால் முலைகொடுத்துக்கொண்டே அதை தீர்க்கமாகப்பார்த்துக்கொண்டிருந்தது. என்னை அறிந்திருப்பதாலோ என்னவோ நான் முன்னகர்ந்ததை ஆட்சேபிக்கவில்லை அதனால் மெல்ல சதுரபபுல்வெளிக்குள் போய் அதை எடுத்து துடைத்து அம்மாவிடம் விட்டேன். நக்கிக்கொடுக்கத் துவங்கியதும் மீண்டும் இடைநழிக்கு வந்தேன்
எல்லாம் அத்தனை அழகாக கண்ணை நிறைத்துக்கொண்டு கிடந்தது
அடிபட்ட நாய்க்குட்டிக்கு மட்டும் உடனடியாக பெயர் வைத்துவிடலாமென்று 98க்கப்புறம் நான் சந்திக்கவே சந்திக்காத ஒரு நண்பரின் அமுதம் என்று பொருள்படும் பியூஷ் என்று வைத்தேன் அமுதத்தின் 8 சொட்டுக்களில் ஒன்றல்லவா?
ஆனால் பெயர் வைத்த நொடியில் இன்னொன்றை உணர்ந்தேன் எடுத்துக்கொண்டுபோய் அம்மவிடம் விட்டபோது அதன் வயிற்றில் செம்புள்ளிகளாய் முலைக்கண்களிருந்தன என்பதை.
பெட்டைக்குட்டி! பியூஷின் காதல் மனைவிபெயர் உன்னதி உடன் அதற்கு உன்னதி என்று பெயரிட்டேன்
இப்போது கொஞ்சம் சத்தமில்லாமல் அமைதியாக இருந்தது உன்னதி. அம்மா கழுத்துக்காயத்தை நக்கிக்கொண்டிருந்தது
அதன்பிறகு நான் மனசில்லாமல் மாடியிலிருக்கும் என் அறைக்கும் துறைக்கும் சென்று விட்டேன்
அவ்வப்போது அங்கிருந்தே கீழே எட்டி எட்டிபார்த்துக்கொண்டிருந்தேன்
உன்னதி குடும்பத்தை எடுத்த புகைப்படத்தை வாட்ஸ் அப்பில் பதிவிட்டேன்
மாலை திரும்ப இறங்குகையில் குட்டிகளையும் அம்மவையும் அங்கே காணோம் இடம் மாறிடுச்சோ என்னவோன்னு யோசனையாகவே வீடுவந்தேன்
சரணிடம் போனில் கூப்பிட்டு 8குட்டிகளின் கதையைச் சொல்லிக்கொண்டிருந்தேன்
நாளை மறக்காமல் அம்மா நாய்க்கு சாப்பிட ஏதாவது கொண்டுபோகும்படி பலமுறை சொல்லிவிட்டுத்தான் போனை வைத்தான்
இரவு குமார் அம்பாயிரத்திடமும் போனில் இதையெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தேன்
இன்று காலையில் வழக்கம்போல ஆயிரம் கைகளில் வேலைசெய்துகொண்டிருந்தாலும் பிஸ்கட் பாக்கட் எடுத்து கைப்பையில் மறக்காமல் போட்டுக்கொண்டேன்
சாமி அலமாரிக்குமுன்னால் நிற்கையில் உன்னதி பிழைத்திருக்கனுமென்று வேண்டிக்கொண்டேன்.
கல்லூரிக்கு வந்து கையெழுத்திட்டுவிட்டு வேகமாக நடக்கையிலேயே அங்கு திருமலைசாமி அண்னன் நிற்பதைபார்த்தேன்
அவர் கல்லூரியின் தோட்டங்களை பராமரிக்கும் வேலையை நான் இங்கு பணியில் சேரும் முன்பிருந்து செய்துவருபவர்.
நான் அவருடன் பேசும் சந்தர்ப்பமே வாய்த்ததில்லை இதுவரை ஆனால் அவர் புல்வெளியை செதுக்குகையில் வரும் பச்சையத்தின் வாசனையை அவரை எப்போது பார்த்தாலும் உணர்வேன் மனதில்
கிட்டே போனதும் ஒரு அலுமினிய தட்டில் குழைய வேகவைத்த , தயிரிட்டுப்பிசைந்த சாதத்தை அண்னன் போட்டுக்கொண்டிருக்க அம்மா நாய் மெல்ல சாப்பிட்டுக்கொண்டிருந்ததை பார்த்தேன்.. உன்னதியைக்காணோம். 7 குட்டிகளும் ஒரே மென்சதைக்குவியலாக ஒரு சிறு வட்டமாய் ஒன்றின் மேலொன்றாகக் கிடந்தன
எல்லாம் அச்சிறுவயிறு முட்டப்பால்குடித்து கிறக்கத்தில் நேற்றினைப்போலவே
என்னப்பார்த்ததும் திருமலைசாமி அண்ணன் ’’வீட்டிலிருந்துகொண்டுவந்தேங்க, இது 8 குட்டிகளுக்கு பால்குடுக்கனுமில்ல அதான்’’ என்றார்
அவர் கைகளைப்பிடித்துக்கொண்டு நன்றி சொன்னேன்
அன்னைமை என்பது 9 மாத காலம் கருவை வயிற்றில் சுமப்பது மட்டும் அல்ல. கருணையும் பச்சதாபமும் ஹிருதயத்தில் ஈரமும் உள்ள ஒரு நிலைப்பாடு அது. திருமலைசாமி அண்ணன் வாங்கும் சம்பளம் என்னிலிருந்து பல படிகள் கீழ். ஆனால் அவரின் மனசு இருக்கும் உயரத்தில் என்னால் நிமிர்ந்துகூட பார்க்கமுடியாது
என் கைப்பையில் இருந்த பிஸ்கட்டுக்களுக்காக வெட்கினேன்
உன்னதி என்னவாயிற்று என்று தெரியலை எதற்கும் எண்ணிப்பார்க்கலாமென்று மெல்ல குட்டிகளை ஒவ்வொன்றாக தூக்கியும் கலைத்தும் தேடினேன் அவள் இல்லவே இல்லை
செத்துப்போயிருக்கனுமென்றே உள்ளம் பதறியது கழுத்தின் வெட்டுக்காயத்தினின்றும் நேற்று வழிந்த குருதியுடன் உயிரும் வடிந்துகொண்டிருந்திருக்கும்
பிறந்து, பெயரிடபட்டு, இவ்வுலகின் ஒரு மாசும் படுவதற்கு முன்னர் அன்றே செத்துப்போன அதி உன்னதி
திருமலைசாமி அண்ணன் எவர்சில்வர் டிஃபன் பாத்திரத்தை எடுத்துக்கொண்டு போனபின்பும் கொஞ்சநேரம் அங்கிருந்தேன்
நேற்று பிறழ் உறவுக்கு இடையூறாக இருந்ததால், பெற்ற மகனையும் மகளையும் விஷம் கொடுத்து கொலைசெய்த அன்னை யொருத்தியைப்பற்றி நாளிதழ்களில் வாசித்து இரவு குழுமத்தில் காரசாரமான விவாதம் இருந்தது
10 ஆயிரம் சம்பளம் வாங்க்க்கொண்டு நாய்க்கு தயிர்சாதம் பிசைந்துகொண்டுவந்த திருமலாசாமியும் இதே உலகில்தான் இருக்கிறார்
என்ன சமன்பாட்டில் இவ்வுலகியங்குகின்றதென்று தெரியவில்லை
ஜெமோ சொலவ்துபோல ஊழென்பது ஒரு கையில் மலரும் மற்றொரு கையில் கூர்வாளும் கொண்ட விந்தைப்பெருந்தெய்வமேதான்
லவ்யூ உன்னதி ! லவ் யூ திருமலை அண்ணா!