நண்பர்கள் சுரேஷும் செளந்தரும் இத்திரைப்படத்தைப்பற்றி சிலாகித்துச்சொல்லியிருந்தார்கள். நல்ல படம் , பார்க்கலாமென்று சுரேஷ் பரிந்துரைத்திருந்தார். செளந்தர் விமர்சனம் எழுதியிருப்பதாய் சொன்னார். நேற்று விபு குழுமத்திலும் இதைக்குறித்துப்பேசினோம். சரி ஒருநாள் பார்க்கனும்னு நினைச்சேன்.
அமேசான் ப்ரைமில் சீக்கிரம் வந்துரும்னு கூட நினைத்தென். என்னமோ நினைத்துக்கொண்டாற்போல், விடுப்பில் வீட்டிலிருந்த சரணும் நானுமாக மதியம் திடீரெனக்கிளம்பி பஸ் பிடித்து சென்றேவிட்டோம்.
விகடன் உள்பட எதிலும் விமர்சனம் பார்க்கலை , கேட்கலை, செளந்தர் எழுதினதும் இன்னும் வாசிக்கலை. கிரேஸி மோகன் ஒரு நூலின் முன்னுரையில் //புத்தகத்தை வாசிக்கும் அல்லது திரைப்படத்தை பார்க்கும் முன்னர் விமர்சனம் தெரிஞ்சுகிட்டு பின்னர் அதை வாசிக்கறப்போ அல்லது பார்க்கறப்போ என்னமோ ரெண்டாம் கல்யாணம் பண்ணிட்ட மாதிரி இருக்கும்//னு சொல்லியிருந்தது போல நான் முன்கூட்டியே தெரிஞ்சுக்காமத்தான் எப்போவும் போவேன்
படம் ரொம்ப நாளைக்கப்புறம் பார்த்த நல்ல படமா இருந்தது. அலுப்புத்தட்டாத திரைக்கதை. திரைப்படங்களின் லாஜிக், நம்பகத்தன்மை பற்றியெல்லாம் நான் எப்போவும் மெனக்கெடுவதிலை எனவே மிகப்பிடித்திருந்தது. முதல் பாதியுடன் ஒப்பிடுகையில் இரண்டாம் பாதி கொஞ்சம் தொய்வுதான் அதுவுமந்த வேன் காட்சிகள் தேவைக்கும் அதிகமான நீளம்
ஆனால் striking feature of the movie என்று சொன்னால் சந்தேகமில்லாமல் நயன்தாராதான். முழுக்க முழுக்க அவங்களை நம்பியே எடுக்கப்பட்ட படம். வாட்ட சாட்டமான நாயகன் இல்லை, டூயெட் பாடல்கள் இல்லை, காமெடியன்கள் (நல்லவேளையாக) இல்லை, 5 பாடல்களும், குறிப்பிட்ட இடைவெளியில் அவற்றைச்சமன் செய்ய 5 சண்டைக்காட்சிகளும் என்னும் தமிழ்சினிமாவின் மரபான frame ற்குள்ளும் இத்திரைப்படம் வரவில்லை. இரட்டை அர்த்த வசனங்கள், குத்துப்பாடல்களும் இல்லை. இத்தனை இல்லை’களையும் ஈடுகட்ட ஒரே ஒரு நயன்தாரா இருக்கிறார் என்பதே படத்தின் பலம்
நயன்தாராவை பிடிக்கும் எனக்கும்’ னு சொல்லவேண்டியதில்லை ஏனெனில் எல்லாருடைய ப்ரியப்பட்ட நடிகை என்றும் அவங்களைச்சொல்லலாம். அப்படி ஒரு தூய அழகு அவங்களுடையது. நயனின் அந்தரங்க வாழ்வின் அவலங்கள் துயர்கள் எல்லாம் நம் எல்லோருக்கும் தெரிந்திருந்தும் வழக்கமாக உருவாகும் கசப்பும் கீழ்மையான, தாழ்மையான அவதானிப்புகளும் ஏளனமும், அவர் மேல் வராமல் இன்னும் எல்லா மனதிலும் அழகாக அமர்ந்திருக்கிறார். காழ்ப்புகளுக்கு அப்பாற்பட்ட தூய அழகு அவருடையது
இந்தப்படத்தில் அவருக்கென்றே பிரத்யேகமாய் ஒரு காமிராவை நிறுத்தினது போல எல்லா ஃப்ரேமிலும் நயன் நயன் நயன். அவங்களை விட்டு வேறெதிலும் நம் சித்தத்தை குவிக்க முடியவில்லை. அதிலும் அந்த மிகச்சாதாரணமான, கவர்ச்சியாக அவர்களைக்காட்டவே காட்டாத சட்டையிலும், கணுக்கால் வரையில்மட்டுமே இருக்கும் பாவாடையிலுமாக வேறு யாரும் இத்தனை கொள்ளை அழகாக இருக்கவும், தெரியவும் முடியாது. எளிய ஆயில் மேக்கப், கொஞ்சமாக நிறமேற்றபட்ட கேசம், gun மெட்டலில் சின்னஞ்சிறிய தோடு அவ்வளவுதான், ஆனால் திரையில், அந்த சிதிலமடைந்த மிகப்பழைய வீடும், மங்கின சூழலும் நயன் வந்ததும் பிரகாசமாகிவிடுகின்றது. அவரின் பட்டுப் போன்ற சருமத்தின் மென்மையை பார்க்கிறவர்கள் தொட்டுப்பார்க்காமலேயே உணரமுடிகின்றது.
முகத்தில் கால்பாகமும், வெள்ளித்திரையில் பாதியளவிற்கும் இருக்கும் நயனின் அகன்ற கண்களிலிருந்து என்னால் விடுபடவே முடியவில்லை. அதுவும் அடிக்கடி, நீர்நிரம்பிய குளம்போல தளும்பி ஒருகணம் தயங்கி பின் சட்டென உடைந்து அகலமாக மையெழுதிய கரைகளை உடைத்துக்கொண்டு கண்ணீர் சொட்டுவது அத்தனை ரசிக்கும்படி இருக்கு, ஆம் நயன் அழுவதும் அத்தனை அழகு.
அழகென்று சொல்கையில் இன்னொன்றும் சொல்லனும், பொதுவாக அலங்காரச்செடிகளை நர்சரியிலோ வேறு யாருடைய வீட்டிலோ பார்க்கையில் சிலசமயம் இதுபோல செடிகள் நம் வீட்டில் இல்லையேன்னு ஏக்கமாக வருத்தமாக இருக்கும், சிலசமயம் இதெல்லாம் நம்ம வீட்டுக்கு பொருந்தாதுன்னு தோணும், சிலதைப்பார்க்கையில் அறவுணர்வு எல்லாம் மறந்து, திருட்டுத்தனமாகவேணும் கொஞ்சம் கிள்ளியாவது எடுத்துட்டுபோய் வீட்டில் நட்டு வச்சுக்கணும்னு தூண்டல் இருக்கும், ஆனால் துளசிச்செடியை மாடத்தில் பார்க்கையில் ஒரு நிறைவு இருக்கும் நமக்கு. இதுபோல வேணும் வேண்டாம்னு எதுவும் தோணாம நிறைவு மட்டுமெ இருக்கும்
அப்படி அழகு நயனுடையது. பிற நாயகிகளைப்பார்க்கையில் அவர்களின் தளுக்கும் மினுக்கும் செயற்கையான பாவனைகளும், அதீத ஒப்பனையும், ஒரு ஒவ்வாமையை ஏற்படுத்தும். (எனக்கு). ஆனால் நயனைப்பார்ககையில் அவர்களின் அழகு ஒரு divine and dignified என்று தோன்றும். ஷோபனாவைப்பார்க்கையில் மட்டும் அப்படியிருக்கும் எனக்கு முன்னால் எல்லாம். Sex appeal இல்லாத நிறைவு மட்டுமே உண்டாக்கும் அபூர்வ அழகு இது
அலியா பட் , மீரா ஜாஸ்மின் இரண்டுபேரும் கூட இப்படியான நிஷ்களங்கிகள் தானென்றாலும் அவர்களிடம் இருக்கும் அந்த சிறுமித்தனம் நயனிடம் இல்லாமல் ஒரு கண்ணியமும் முதிர்ச்சியும் இருக்கும்
ஒரு காட்சியில் வீட்டு வாசலில் நயனும் அவள் அப்பாவும் அமர்ந்திருப்பார்கள் மிகக்குறைந்த வெளிச்சத்தில் பக்கவாட்டுத்தோற்றத்தில் அந்த சீர்மையும் கூர்மையுமான மூக்கும் , பெரிய இமைப்பீலியும் கலைந்த கேசம் நெற்றிக்கு முன்னால் வந்துவிழ உணர்வுகள் மாறி மாறி நிழலாடிக்கொண்டிருக்கும் நயன் ஒரு கவிதைத்துணுக்குபோலிருந்தார். அந்தக்காட்சியே ஒரு கவிதைதான்
We are the millers என்னும் படத்தின் தழுவலென்று சரண் இப்போது சொல்கிறான் அதுபற்றியெல்லாம் நான் அதிகம் கவலைப்படுவதில்லை
சுமாரான திரைக்கதை ஆனால் எல்லாவற்றையும் compensate செய்துவிடுகிறது நயனின் இருப்பு
முதல்காட்சியிலிருந்தே மிகவும் underplay தான் நயன் செய்வது, மிகக்கொஞ்சமாக அவர் பேசினாலும் மிக மிக அதிகமாக அவரின் கண்கள் பேசுகின்றது. வசனங்களும் மிக மென்மையான மாடுலேஷனில் தன் நயனுக்கு
துவக்கக்காட்சியில் தவறாக அவரை அழைக்கும் மேலாளரிடன் நயன் பேசும் மறுமொழி நச்
சரண்யா பொன்வண்னன் மீள மீள ஒரே மாதிரியான அம்மாவாகவே இருக்கிறார். அந்த அப்பா கதாபாத்திரம் என்னவோ எனக்கு கொஞ்சம் பொருந்தாத தேர்வெனத்தோன்றியது. வேறுயாரையாவது போட்டிருக்கலாம். டெல்லி கணேஷ் சாரைப்போல உணர்வுகளை இயல்பாக வெளிக்காட்டும் நடிகராக இருந்திருக்கலாம். இவர் பெரிதாக ஒன்றும் அலட்டிக்கொள்ளாமல் கடனேனு வந்துபோவது போலிருந்தது. அந்த இரண்டு காதலர்களும் ஓகே நகைச்சுவைஇல்லாத குறைக்கு இருக்கிறார்கள்.
கடத்தல் மற்றும் பாலியல் அத்துமீறல்கள் நடக்கும் காட்சிகளிலெல்லாம் இந்துக்கடவுள்களை அதிகம் காட்டி கேவலப்படுத்துகிறாரகள், என்பதுபோன்ற சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டுக்களையெல்லாம் நான் கவனிக்கவே இல்லை, (அல்லது நயன் கவனிக்க விடவில்லை). இதுபோன்ற விதிமீறல்கள் எல்லாம் மதம் இனம் மொழியையெல்லாம் கடந்தது அல்லவா? பின்பாதியில் வேனிலேயே ரொம்பநேரம் பயணித்ததில் இடுப்பு வலித்தது, மேலும் அதிகம் இழுவை காட்சிகள்.
தலைப்பை நியாயப்படுத்த இறுதியில் நயன் கோலமாவு விற்காவிட்டாலும் எனக்கு படம் பிடித்துத்தான் இருந்திருக்கும்.
நல்ல பொழுதுபோக்குஅம்சங்களுடனான படம், வழக்கமான மொக்கைத்தமிழ் படங்களினின்றும் மாறுபட்ட படமும் கூட
Leave a Reply