இன்று விடுமுறையாதலால் ஈரோடு சென்றிருந்தேன்.  கொட்டும் மழையில் , குளிரில் நடுங்கிக்கொண்டு புறப்பட்டு, வெள்ளக்காடாகியிருந்த சாலைகளில் பயணித்து, இரட்டைச்சூரியன் தகிக்கும் ஈரோட்டில் நுழைந்தது வினோதமாயிருந்தது, முற்றிலும் வேறு வேறான இரு உலகங்களுக்கிடையே பயணித்ததுபோல

அஸ்விதா ரேஷ்மா ரேஷ்மியுடன்

அங்கே காத்திருடந்த ரேஷ்மா ரேஷ்மி இரட்டைச்சகோதரிகளும் அவர்களின் குட்டி அக்காவான அஸ்விதாவின் குடும்பத்துடன் சிறிது நேரம் செலவளித்து  குழந்தைகளின் அன்பில் நனைந்துவிட்டு பின்னர் அவர்களுடன் சத்திரம் வீடு.

அங்கு லட்டு மற்றும் சிபியுடன் விளையாட்டு தற்படங்கள் காணொளிகள்,  என வழக்கமான பரிபாடிகள்  முடிந்ததும், அனைத்துக்குழந்தைகளுடனும் ஐஸ்க்ரீம் கடைக்கு சென்றேன்.

அதிகமாக குளிரூட்டப்பட்டு மெனக்கெட்டு  செயற்கையாய் இருட்டாக்கப்பட்ட அந்த இடத்தில் வெண்கலக்கடையில் யானைபோல நாங்கள் ஆராவாரமாய் நுழைந்தோம்

முதல்சுற்றில் எல்லோரும் என்ன சாப்பிடுவதென்பது முடிவாகவே அதிக நேரமானது.  நினைத்து நினைத்து மாற்றிக்கொண்டும் கீச்சுக்குரலில் கூச்சலும் பூசலுமாக இருந்தார்கள். பில் போடும் பெண் திகைத்துப்போயிருந்தாள்

லட்டு

காம்பஸ் வைத்து வரைந்ததுபோன்ற  உருண்டை முகத்துடனும் உப்பிய கன்னங்களுடனும் இருக்கும் லட்டு என நாமகரணம் கொண்ட வைஷிகா தனக்கு‘’ செல்ஃபி’’ ஐஸ் க்ரீம் வேணும் என்றதும் நானும் திகைத்துப்போனேன். உண்மையில் அப்படி ஒன்று இருக்குமோ என்று சந்தேகத்தில் சிப்பந்திகளிடம் கேட்க அப்படியேதும் இல்லையென்றார்கள்

ஆனால் ஆவேசத்தில்  லட்டுவிற்கு சாமி வந்துவிட்டது ’’செல்ஃபி ஐஸ் கிரீம்’’ ’’செல்ஃபி ஐஸ் கிரீம் ‘’ என்று ஒரே பாட்டாக பாடிக்கொண்டிருக்க, நிலைமை தீவிரமாகிக்கொண்டிருந்தது.

இந்தப்போதாதவேளையில் புறப்பட்டு ஒரு இளைஞன் அவன் காதலியுடன் அருகில் இருக்கும் மேசையில் அமர்ந்திருந்தான். அந்தப்பெண் பேசிக்கொண்டிருக இவன் மெளனமாய் கேட்டுகொண்டு தலையை மட்டும் அவ்வப்போது சம்பிரதாயத்துக்கு அசைத்து ஆமோதித்துக்கொண்டிருத்ததை பார்க்கையில், அனேகமாக கல்யாணத்தில் முடியும் காதலைப்போலத்தான் இருந்தது.  நாங்கள் செய்துகொண்டிருந்த அமர்க்களத்தில், அந்தப்பெண், இல்லறமென்னும் அமைப்பின் மீதும் திருமணம் மற்றும் குழந்தைப்பேற்றின் மீதுமான அடிப்படை நம்பிக்கையையே இழந்துவிடுவாளென்று அஞ்சிய அந்த இளைஞன் ஆபத்பாந்தவனாக முன்வந்து ’’ஒருவேளை பாப்பா கேட்கறது ’’குல்ஃபி ஐஸ்கிரீமா இருக்குமோ என்னவோ ’’ என்றான்

சட்டென்று  மலையிறங்கிய லட்டு,  ஆமா , ’குல்ஃபிதான் எனக்கு பேரு மறந்திருச்சு’ என்று திருவாய் மலர்ந்தருளினாள்

பின்னர் ஆளாளுக்கு வேண்டியதை வாங்கி மாற்றி மாற்றி எச்சில் பன்ணிக்கொண்டும்  பரஸ்பரம் ஊட்டிக்கொண்டும் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம் இடையிடையே  செல்ஃபி ஐஸ் க்ரீம் என்னும் நாமகரணத்தை  நியாயம் பண்ணும் விதமாக  ஏராளமாய் தற்படங்கள் வேறு எடுத்துக்கொண்டோம்

திடிரென சிபிக்கு சரண் அண்ணாவிடம் பேசனும்னு தோன்றியதால் விடுதியில் இருந்த அவனை அலைபேசியில் அழைத்து 6 பேருமாக மாற்றி மாற்றி பேசினோம். குழந்தைகள் அனேகமாக ஒரே கேள்வியை பலமுறை  பல மாடுலேஷன்களில் கேட்டார்கள் இரண்டாம் சுற்றில் லட்டு போனை பிடுங்கி ’’சரண் நல்லா படிக்கணும்,  அப்பத்தான் தேவிம்மா உனக்கும் ஐஸ் கிரீம் வாங்கித்தருவாங்க’’ என்று  ஒரு உறுதிப்பாட்டினையும் அளித்தாள்.

அடுத்த சுற்றுக்கும் எல்லோருமாய் அவனிடம் பேச தயாரனபோதுதான்  சரண் குரல் கம்ம, தனக்கு மறுநாள் கணக்கு பரீக்‌ஷை இருப்பதால் நண்பர்களுடன் தேர்வுக்கு படித்துக்கொண்டிருப்பதாகவும் இனி போனில் அழைக்கவேண்டாமென்றும் கேட்டுக்கொண்டதால் அருள் கூர்ந்து பேச்சுவார்த்தையை அத்துடன்  முடித்துக்கொண்டோம்

சுதந்திர தினத்தன்று விடுப்பு எடுக்க முடியாமல் வேலைக்கு வந்திருந்த அந்த கடைச் சிப்பந்திகள், நாங்கள் சீக்கிரம் கடையிலிருந்து கிளம்பவேண்டி அவரவர் குலசாமிக்கு நேர்ந்துகொண்டிருக்கக்கூடும். ஒரு வழியாக நாங்கள் புறப்பட்ட பின்னர் அந்த இடம் போர் முடிந்த போர்க்களம் போல் இருந்திருக்ககூடும். ஒரு யூகம்தான் ஏனெனில் நாங்கள், திரும்பிப்பார்க்கவில்லை

பின்னர்  ஜவுளி நகரம் எனப்படும் ஈரோட்டிற்கு வந்துவிட்டு புடவை எடுக்காமல் திரும்புவதை மூதாதையர்களும் தெய்வங்களும் கூட மன்னிக்க மாட்டார்கள் என்பதால்  அத்தகைய  அறப்பிழை  ஏதும் செய்யாமல்   துணிக்கடைகளுக்கு சென்றோம்.6ம் 6 மாய் மொத்தம் 12 மணி நேர ரயில் பயணத்தில் அங்கு வந்திருந்த, சரண் அப்பாவையும் விசாலமனதுடன் உடன்  அழைத்துக்கொண்டோம்.

மோஹனாவும் நானுமாய் உற்சாகமாய் புடவைகளைத்  தொட்டும், தடவியும், சிலவற்றை வாசனைகூட பார்த்தும் தேர்ந்தெடுத்துக்கொண்டிருந்தோம். ’’எதற்கு இத்தனை புடவைகள்? உனக்கு மட்டும்தானே ஷாப்பிங்? கொஞ்சநாள் முன்னாடி வாங்கினெதெல்லாம் என்னாச்சு? போன்ற, ஒரு போதும்  பதிலளிக்கப்படாத  கேள்விகளின் பொருளின்மையை சரண் அப்பா துவக்க வருடங்களிலேயே உணர்ந்திருந்ததால் அதுபோன்ற வீண் முயற்சிகளில் எல்லாம் இப்போது ஈடுபடுவதில்லை

புதுமணப்பெண் போல குனிந்தபடியே  வாட்ஸ் அப்பிலோ, அன்றி உள்ளத்தின் உணர்ச்சிகள் எதையும் வெளிக்காட்டாத நிர்மலமான பளிங்குப்பரப்பினைப்போன்ற முகத்துடனோ அங்கு இருக்கும் நாற்காலியில் அமர்ந்திருப்பார். அரைமணிக்கொருமுறை ஒருவேளை முடிதிருபோமா என்னும் நப்பாசையில் தலையை உயர்த்தி பார்த்துக்கொள்ளுவதும் உண்டு. ஜென் துறவிகளின் நிச்சலன முகத்தை பார்க்காதவர்கள் அச்சமயங்களில் அவர் முகத்தை பார்த்துக்கொள்ளலாம்.

ஒருவழியாக எல்லாம் முடிந்து அவரை ரயிலடியிலும் குழந்தைகளை அவரவர் வீட்டிலுமாய் விட்டு விட்டு நான் பொள்ளாச்சிக்குப் புறப்பட்டேன்

இரவாகிவிட்டது, விடுமுறைதானென்றாலும் அதிகம் போக்குவரத்து  இல்லாமல், எப்போதாவது, ஒளிரும் சிவப்பு விளக்குகளுடன் கடந்துசெல்லும் இருசக்கர வாகனங்களைத்தவிர வேறு சஞ்சாரமற்ற  நீண்ட கரிய  நனைந்திருந்த காங்கேயம்  பொள்ளாச்சி நெடுஞ்சாலையில் பயணிக்கையில் காலை நண்பர் செளந்தருடன் பேசிக்கொண்டிருந்த மகிழ்ச்சியும்,, ரேஷ்மா ரேஷ்மி நான் புறப்படுகையில் முழங்கால்களை இருபுறமும் கட்டிக்கொண்டு ’’அத்தை போகாதே! என கதறியழுததின் துக்கமும், காரின் பின் சீட்டிலிருந்து கமழ்ந்துகொண்டிருந்த புதுத்துணிகளின் வாசனையுமாய்   கலவையான மனநிலையிலிருந்தேன்.

இன்று இன்னுமோர் அருளப்பட்ட நாள்  எனக்கு,15/8/18