நேற்று மாலை கல்லூரியிலிருந்து உலர்சலவையகம் செல்லும் பொருட்டு ஐயப்பன் கோவில் சாலை வழியே செல்கையில் சாலையை கடந்து வரதராஜ் செல்வதைப்பார்த்தேன். வரதராஜ் என்னுடன் 5 ஆம் வகுப்பில் படித்த என் விரோதி. ஆம் தோழனென்று சொல்லமுடியாத அளவிற்கு நாங்களிருவரும் விரோதத்துடன் குருதிக்களத்தில் சந்தித்திருக்கிறோம்.
அப்பா அம்மாவின் பணியிட மாறுதல்களின் போதெல்லாம் சகோதரிகளான எங்களிருவரின் வாழிடங்களும் அவ்வப்போது மாறிக்கொண்டே வந்த இளம்பருவத்தில் மழலையர் வகுப்பிலிருந்து 2 ஆம் வகுப்பு வரை பொள்ளாச்சி புனித லூர்து ஆங்கிலப்பள்ளியிலும் 3 ஆம் வகுப்பு வேட்டைக்காரன் புதூர் துவக்கப்பள்ளியிலும் 4 தாராபுரம் அலோசியஸ் கான்வென்டிலும் 5 பொள்ளாச்சி நேதாஜி ஆரம்பப்பள்ளியிலுமாக படித்தேன்
ஒருமுறை 5 ஆம் வகுப்பில் மைதானத்தில் விளையாடுகையில் அனைவரும் அவரவர் குடும்ப உறுப்பினர்களை பற்றிப் பெருமையாக பேசிக்கொண்டிருந்தபோது, எனக்கு சொல்லிக்கொள்ள என்ன இருக்கிறதென்று தெரியவில்லை
எப்போதுமே அச்சமூட்டும் ஆளுமையாக அப்பாவும், அவசர அவசரமாக காலையில் கிளம்பிசென்று ,அவிழ்ந்த இரட்டைச்சடையும் அழுக்கு உடைகளுமாய் களைத்து பசியுடன் தாழிட்டுப்பூட்டிய கதவின் முன்னால் மாலையில் காத்திருக்கும் 2 சிறுமிகளை விட அதிகம் சோர்வுடன் தாமதமாக வரும் அம்மா என்னவாக இருக்கிறார்கள் என்னும் சரியான அறிதலும் இல்லாததால் அதையெல்லாம் சொல்லி பீற்றிக்கொள்ள முடியவில்லை
உடன் என் சின்னசித்தப்பாவின் நினைவு வந்தது. அவர் பெயர் சிவலிங்கம் ஆனால் அவர் அடிக்கடி சபரிமலைஐயப்பன் கோவிலுக்கு மாலை போட்டுக்கொண்டு செல்வதால் நான் அவரை இன்ற் வரையிலுமே ஐயப்பா என்றுதான் அழைக்கிறேன்
வேட்டைக்காரன் புதூரில் நான்இருந்த ஒரு வருட பொற்காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் கட்டுமானப்பணிகள் செய்துகொண்டிருந்த அவர் விடுமுறை நாட்களில் என்னையும் பணியிடத்திற்கு அழைத்துச்செல்வார். சலித்துக்குழைத்த செம்மண்ணில் ஆட்டுக்கல்லும் அம்மிக்கல்லும் எனக்கு செய்துதருவார், அவற்றை உலரவைத்து அங்கு விளையாடிகொண்டிருப்பேன் அவையெல்லாம் எனக்கு அப்போது பெரும்பொக்கிஷங்கள்.
அது போன்றதொரு நாளில் சித்தப்பா என்னிடம் ’’இதோ இது நான் கட்டிமுடித்தது’’ என்று என்னிடம் சுட்டிக்காடிய இடத்தில் ஏதேனும் ஒரு கட்டிடம் அன்று இருந்திருக்கும் ஆனால் எனக்கு அப்போது கண்ணில் பட்டது பிரம்மாண்டமாக பின்புலத்தில் நின்றிருந்த மேற்குத்தொடர்ச்சி மலை. அந்த அறியா வயதில் வேலையாட்கள் கருங்கற்களை தலையில் சுமந்துசென்று கொண்டிருந்த சூழலில் சொல்லப்பட்டதால் நான் சத்தியத்தில் மேற்குத்தொடர்ச்சி மலை என் சித்தப்பாவால்தான் கட்டப்பட்டது என்று உளமார நம்பிவிட்டேன்
எனவேநானும் என் பங்கிற்கு மேற்குத் தொடர்ச்சிமலையைக்காட்டி இந்த மலை என் சித்தப்பா கட்டியது என்று சொன்னதும் வரதராஜ் விளையாட்டை நிறுத்திவிட்டு வந்து எதை ? என்று மறுபடியும் கேட்டான் நான் இன்னும் மகிழ்ந்து மலையைக்காட்டினேன்
அவன் அட்டகசமாக சிரித்து ’’ஏன் இப்படி பொய் சொல்லறே? இதெல்லாம் யாராச்சும் கட்டுவாங்களா,உன் சித்தப்பாவெல்லாம் இதை கட்டியிருக்கவே முடியாது ‘’என்றான்
எனக்கு வந்த ஆத்திரத்தில் கண்ணீருடன் இன்னும் ’’ இல்லை இது என் சித்தப்பா கட்டினதுதான்’’ என்று வீறிட்டேன்
அவனுக்கும் கோபம்வந்து ’’மலையெல்லாம் அப்படி யாரும் கட்டமுடியாது’’ என்றான்
’’அப்போ அதை யாரு கட்டினதுன்னு நீ சொல்லு’’ என்ற என் கேள்விக்கு , பிரபஞ்சக்கட்டுமானம் பற்றியெல்லாம் அறிதல் இல்லாததால், பதில் தெரியாத வரதராஜ் திகைத்துப்போய் ’’அது தெரியாது ஆனாலும் நீ சொல்லறது பொய்’’ என்று கத்திவிட்டு, அனைவர் முன்னாலும் அவனுக்கு பதில் தெரியாத கேள்வியைக் கேட்டதற்காக என் மீது பாய்ந்து கழுத்திலும் முகத்திலுமாய் அடிக்க துவங்கினான்.
பதிலுக்கு நானும் அவன் கன்னங்களிலும் கைகளிலும் கிள்ளி, அவனும் என்னைப்பிடுங்கி, குருதிக்களமாகியது பள்ளிமைதானம்
வாத்தியார் வந்து இருவருக்கும் உள்ளங்கை பழுத்துச்சிவக்க மர ஸ்கேலில் நிறைய அடி கொடுத்ததுடன் வெளியே மணலில் முட்டிபோடவும் செய்துவிட்டார்
கண்ணீருடன் முட்டிபோட்டுக்கொண்டிருந்த எனக்கு நகக்காயங்களோ அடிவாங்கியதோ கூட வலிக்கவில்லை, அப்போதும் என்முன்னே மாறா உண்மையென நின்றிருந்த மலைத்தொடர்ச்சியை சித்தப்பா கட்டவில்லை என்று எப்படி இவன் சொல்லப்போகலாமென்னும் ஆற்றாமையில் துக்கம் பொங்கிபொங்கி வந்துகொண்டிருந்தது.
எனக்கும் வரதராஜுக்கும் ஏற்கனவே முன்விரோதமும் இருந்தது என் கிறுக்கல் கையெழுத்தை மற்றவர்களிடம் காட்டி கேலி செய்யும் பொருட்டு என் சிலேட்டை பலவந்தமாக என்னிடமிருந்து ஒருமுறை பறித்துச்சென்றதும், உட்கார பெஞ்சுகள் கூட இல்லாத அந்த எளிய ஓலைக்கூரையிட்ட பள்ளிக்கூட அறையின் சுவற்றில் சாய்ந்து கால்நீட்டி அமர்ந்து வாயைக்குவித்து என்னமோ தீவிரமாக நான் எழுதிக்கொண்டிருக்கையில் என் கால்களை தாண்டி குதித்துச்சென்றதுமாய் ஏற்கனவே எங்களிருவருக்கும் இடையில் விரோதம் புகைந்துகொண்டுதானிருந்தது. பெண்பிள்ளைகளின் காலை பையன்கள் தாண்டும் அடாத காரியத்தையும் செய்த வரதராஜின் மேலான வன்மம் மலை விவகாரத்தினால் புகையும் நிலையிலிருந்து முன்னேறி தழலாடி எரிந்தது
உண்மையில் 3 ஆம் வகுப்பில் படிக்கையில் நான் சின்னச்சித்தப்பாவுடன் மிகவும் நெருக்கமாக இருந்தேன்
இரவில் அவருக்கான தனியறையில் அவருடனே படுத்துறங்குவது எனக்கான ஒரு மிகச்சிறப்பான, பிரத்யேகமான சலுகையாக இருந்தது. அவர் எனக்கு தினமும் அமிர்தாஞ்சனம் தடவிவிடுவதும் அவருடனே கண்ணைசுழற்றிக்கொண்டு தூக்கம் வரும் வரையில் வானொலி கேட்டுக்கொண்டிருப்பதும் வாடிக்கை. இன்றும் அமிர்தாஞ்சனம் தடவிக்கொண்டுதான் உறங்கச்செல்கிறேன். இன்று வரையிலும் வானொலி கேட்டுக்கொண்டிருக்கிறேன். அவர் சொல்லவதெல்லாமே எனக்கு சத்தியத்தைத்தவிர வேறேதுமில்லை அனைத்தையும் மாற்றும் ஒரு சம்பவமாக சித்தப்பாவின் திருமணம் நடந்தது
அவரது திருமண நாளின் இரவிலும் மூக்கு மட்டும் உடைந்த என் மரப்பாச்சி பொம்மையையும், முன்னொரு காலத்தில் ஆரஞ்சு நிறத்திலிருந்து பின்னர் ஆணா பெண்ணா என்று கூட பிரித்தரிய முடியா அரூபமாக சகல இடங்களிலும் நசுங்கிய ஒரு பிளாஸ்டிக் பொம்மையையும் கட்டி அணைத்துக்கொண்டு வழக்கம்போல அவரது அறைக்கு உறங்கச்சென்ற என்னை வலுக்கட்டாயமாக பலர் ஆக்ரோஷமாக தடுத்ததும், படுத்துப்புரண்டு அழுத என்னை யாரோ இழுத்துக்கொண்டு போனதிலும் கூட வருத்தமில்லை, அப்போதும் என்னைத்திரும்பிக்கூட பார்க்காமல் பட்டுவேட்டி சட்டையுடன் நண்பர்களுடன் கைகளைகட்டியபடி சிரித்துப்பேசிக்கொண்டிருந்த சித்தப்பாவையும், தையற்கலையில் தேர்ச்சி பெற்றிருந்ததால் பிறந்த வீட்டிலிருந்து கொண்டு வந்த, பச்சை நூலில் ஜோடிக்கிளிகளையும் கீழே சிவலிங்கம் என்று சித்தப்பாவின் பெயரையும் எம்பிராய்டரி செய்த, 4 ஓரங்களிலும் லேஸ் வைத்திருந்த வெள்ளை தலையணை உறையுடன் அந்த அறைக்குள், நுழைந்த தடித்த உதடுகளுடன் இருந்த புது சித்தியையும் அந்தகணத்திலிருந்து வெறுத்தேன்.
என் சித்தப்பாவிற்கும் எனக்குமிடையில் இப்படி ஆயிரமிருக்கலாம் எனினும் வரதராஜ் போன்ற வீணர்கள் அவரைக்குறித்தெல்லலாம் பேச அனுமதிக்க முடியதல்லவா?
சென்ற நவம்பரில் சித்தப்பாவின் 31 வயதான் மறுமகன் அநியாயமாய் சாலைவிபத்தில் அடிபட்டு உயிரழந்த போது, அரசு மருத்துவமனை பிணக்கிடங்கிற்கு வெளியெ பெரும் பூவரசமரமொன்றின் அடியில் அமர்ந்திருந்த தலை முழுவதும் நரைத்துவிட்ட சித்தப்பாவின் மடியில் கதறியபடி விழுந்த என் தலையைத்தடவி, நல்லா இருக்கியா தேவி என்று கேட்ட அவருக்கு என்மேல் எந்தகக்சப்பும் இல்லைதானென்று நினைக்கிறேன்
வரதராஜுக்கு இது எதுவும் நினைவிலிருக்காது எனினும் எனக்கு வரதராஜையும் அந்த சண்டையையும் அப்படியே துல்லியமாக இப்போதும் கணம் கணமாக நினைவிலிருந்து கொண்டுவர முடிகின்றது.
முனைவர் பட்ட ஆய்வுக்கட்டுரையில் மேற்குதொடர்ச்சி மலை எங்கிருந்து துவங்கி எங்கு முடிவடைகின்றது என்று எழுத வேண்டியிருந்தது, அப்போது அது முழுவதையும் கட்டியது என் சித்தப்பாதான் என்ற வரலாற்றுக்குறிப்பையும் எழுத நினைத்தேன் உள்ளூரில் இருக்கும் வரதராஜுக்கே அதுகுறித்து தெரியாமல் இருக்கையில் தில்லியில் இருக்கும் மினிஸ்ட்ரி ஆட்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால் அந்த உண்மையை அதில் சேர்க்கவில்லை
இப்போதிருக்கும் வீட்டிலிருந்து கைநீட்டினால் தொட்டுவிடும் தூரத்திலேதான் இருக்கின்றது என் சித்தப்பா கட்டிய அந்த மலைத்தொடர்ச்சி
Leave a Reply