இன்று செந்தில் விடுப்பெடுத்துவிட்டதால் 17 ல் கல்லூரி சென்றேன். 12 கிலோமீட்டரை 1 மணி நேரத்தில் கடக்கும், உண்மையிலேயெ 18 பட்டிகளைச் சுற்றிக்கொண்டு நேராக கல்லூரிக்கே செல்லும் பேருந்து 17. நான் எப்போதாவது செல்லும்போது சொல்லிவைத்தாற்போல சிலநாட்களில் வழியில் பழுதாகி நின்று இதுவரையிலும் ஒருமுறைகூட தாமதமாக கல்லூரிக்குச்சென்றே இருக்காத என்னை பதட்டப்படுத்துவதும் 17க்கு வாடிக்கை. இந்த முறையும் அப்படி ஆகுமோவென்று அச்சப்பட்டுக்கொண்டேதான் ஏறினேன்.
ஓட்டுனர் வழக்கமாக இருப்பவரேதான். தாட்டியாக அல்லது புஷ்டியாக அல்லது கட்டுமஸ்தான அல்லது வாட்டசாட்டமாக இருப்பவர். எப்போதும் என்னைக்கண்டதும் அவர் பார்வையிலும் உடல்மொழியிலும் ஒரு பணிவு தென்படும் அது ஆசிரியப்பணிக்கென்றேயான ஒரு மரியாதை. என்னிடம் ஒரு புன்னகையைத்தவிர ஒருவார்த்தைகூட இதுவரை பேசியதில்லை எனினும் எப்படியோ எனக்கான இருக்கையை என்னை தூரத்தில் கண்டதுமே காலியாக இருக்கும்படி செய்துவிடுவார். இன்றும் அதே , ஓட்டுனரை பக்கவாட்டில் இருந்து பார்க்கும்படி அமைந்துள்ள இருக்கை. ஒருமுறை நல்ல மழைநாளில் நான் ஏறியதும் அவர் வண்டி இஞ்சினை அணைத்துவிட்டு எழுந்து வந்து அவரது துண்டால் அந்த இருக்கையை துடைத்து விட்டார். இத்தனை மரியாதைக்கு உரியவர்களா உண்மையில் ஆசிரியர்கள் ! என்று அன்று நினைத்துக்கொண்டெ இருந்தேன்
வழக்கமான அரசுப்பள்ளிச் சீருடை மாணவர்கள், மில் தொழிலாளர்கள். எப்போதும் நல்ல நல்ல இளையராஜா பாடல்களை அலைபேசியில் அனைவருக்குமாய் ஒலிக்கச்செய்யும் இளைஞர்கள்,(மயிலே மயிலே உன் தோகை எங்கே! ஒலித்தது நான் ஏறும் போது) மல்லிகைப்பூச்சரம் பேருந்துக்குள்ளேயே விற்கும் பெண்மணி, இவர்களுடன் இன்று புதிதாக 2 சேவல்களும் ஒரு கருப்புக்குட்டி ஆடும்.
அடுத்தடுத்த நிறுத்தங்களில் நல்ல கூட்டம், தேவனூர் புதூரில் கோவில் திருவிழா, மைக்செட்டில் உரக்க திருகுக்கொலுசை தொலைத்தவர்கள் ஜோடியைக்காட்டி ஆஃபீசில் அதைப்பெற்றுக்கொள்ளலாமென்றும், தீர்த்தக்குடம் எடுப்பவரகள் தெருமுனைக்கு வந்து சேரும்படியும், கரகாட்டக்குழுவினர் குளித்து (!) 1 மணி நேரத்தில் தயாராகும்படியும் அறிவித்தார்கள்
வீடுகளும் தெருவும் சாணமிட்டுமெழுகி பெரிது பெரிதாய் கோலமிட்டிருந்தது. இன்னும் அதிகபட்சமாய் ஒரு பத்து வருடத்திற்கு வேணுமானால் இதுபோன்ற காட்சிகளைக் காணக்கிடைக்கும் என்றெண்ணினேன். நகரமயமாக்கலில் திருவிழாக்களும், கோலமும், தீர்த்தக்குடமும், நாட்டார்கலைகளும், மறையும் காலம் வெகு அருகில்தான் இருக்கின்றது. இதுபோன்ற கூடுகைகளுக்கேயான பிரத்யேக மகிழ்வுகளை வரும்தலைமுறையினர் முற்றிலுமாக இழக்கப்போகிறார்கள்.
கோவிலைத்தாண்டுகையில் ஒரு அண்டாவிலிருந்து ராகிகூழை வினியோகித்துக்கொண்டிருந்ததை பார்க்கமுடிந்தது. நிறைய இச்சிலிபிச்சிலி சாமான்கள் விற்கும் கடைகள் சாலையெங்கும் முளைத்திருந்தது அனேகமாய் அனைத்திலும் பெண்களும் சிறுவர்களும் இருந்தார்கள்.
பிரதான சாலை வருமுன்னரே பேருந்து நிரம்பி வழிந்தது, அதிகம் கல்லூரி மாணவர்கள், பெரும்பாலும் யாரும் அலைபேசியிலிருந்து தலை நிமிரவோ வெளியில் பார்க்கவோ இல்லை. யாரோ தலையில் வைத்திருந்த செண்பகம் பேருந்துமுழுதுமாய் கமழ்ந்தது.
பருத்தி மில்லிற்கு செல்லும் பெண்கள் வயர்க்கூடையுடன் இறங்கினார்கள், அத்தனைபேரும் வெற்றிலையும் புகையிலையும் மென்றபடியும், கடைவாயில் வழியும் எச்சிலை லாவகமாய் துடைத்தபடியுமிருந்தார்கள். அது இல்லாமல் மில்லிலும் , வேலைக்கு வருமுன்னரும் மாலை வீடு திரும்பியபின்னரும் வீட்டிலும் கடினமாக உழைக்க முடியாதுபோலும். இதுபோல எனக்கு எது லாகிரிவஸ்து என யோசித்தேன் சந்தேகமில்லாமல் ஜெ வின் எழுத்துக்கள தான்.
வழியில் பட்டுக்கன்னங்களில் அப்பியிருந்த பவுடர்பூச்சில் கண்ணீர்த்தடத்துடன் ஒரு குட்டிப்பெண் சீருடையில் பள்ளிப் பேருந்திற்கு வீட்டு வாசலில் காத்திருந்தாள் , உடன் அவள் அம்மா நைட்டியுடன் . இப்போது நைட்டி பலருக்கு பகல்டி .
ஒரு அன்னைப்பன்றி 10/ 12 ஒரே மாதிரியான குட்டிகளுடன் சாலையைக்கடந்து காட்டிற்குள் சென்றது. வெண்முரசுக்குப்பின்னர் இந்த பன்றிக்குட்டிகளின் பேரில் ஏகத்துக்கும் பிரியமாகிவிட்டது.
சமத்தூர் பிரதான சாலைக்குச் செல்லும் வழியிலிருக்கும் ஓடை முற்றிலும் காய்ந்து ஒற்றையடித் தடம்போல உடன் வந்துகொண்டிருந்தது . ஓடைக்கரையெங்கும் யானைநெருஞ்சில் வெளிறிய மஞ்சளில் பூக்கள் செறிந்து அடர்ந்து வளர்ந்திருந்தது, உடன் மனதில் பெடாலியம் மூயூரக்ஸ் என்று நினவு வந்தது, தாவரவியல் பெயர்களை நினைப்பதிலிருந்து மீட்சியில்லை எப்போதும்,
என் இறுதிப்பயணத்தில் கூட என் மீது போடப்படுவது chrysanthemum , calendula, jasminum என்று நினைத்தபடியேதான் மின்மயானம் போவேன் போலிருக்கிறது. அப்போதெல்லாம் நினைக்கமுடியுமாவென்றும் தெரியல்லை, யாரிடமும் கேட்கவும் முடியாதே!
Near death experience குறித்து எழுதினவர்களில் சிலர் பதைபதைத்தபடி தன் உடலின் அருகில் தானே நின்றதை குறிப்பிட்டிருந்தார்கள். என் மீது அடர் நீல ஜகரண்டா போடப்படவில்லையெனில் கட்டாயம் நான் வருந்துவேன். ஏப்ரல் மே வில் இறந்தால்தான் ஜகரண்டா கிடைக்கும், அல்லது பருவம் தப்பியும் எனக்கென எதேனும் பூத்தாலும் பூத்திருக்கும்.
சமத்தூருக்கு முந்தைய நிறுத்தத்தில் ஓட்டுநரின் மனைவி ஒரு கூடையில் அவருக்கான சாப்பாட்டுடன் காத்திருந்தார், மழை தூறியதால் கொஞ்சமாய் நனைந்திருந்தார், மவுனமாக கூடையைகொடுத்துவிட்டு சாலையைக்கடந்து மறுபக்கம் சென்றார். இரண்டுபேரும் பேசிக்கொள்ளவும் இல்லை ஒரு புன்னகையுமில்லை, ஏன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளக்கூட இல்லை. திருமணமாகி 25 வருடங்களிருக்கலாம். காதலும் வெட்கமுமாய் அந்தப்பெண்ணூம் காத்திருந்திருப்பாள் ஒருகாலத்தில், இவரும் பணி முடிந்து பரிசும் பூக்களும் இனிப்புமாய் வீடு வந்திருப்பார், ஆணும் பென்ணுமாய் ஒருவரை ஒருவர் அறிந்துகொண்ட ஆரம்பக்காலத்திற்குப்பின்னர் குடும்பமும், பிள்ளைகளும்,கடமையுமாய் மூழ்கத்துவங்கி எந்தப்புள்ளியில் இவர்கள் ஒரே கூரையின் கீழ் ஒருவரை ஒருவர் சகித்துக்கொள்ளும் வாழ்விற்கு தயாராகி இருப்பார்கள் என்றெண்ணிக்கொண்டேன். இல்லறமென்னும் கற்பிதம்!
பூரிசிரவஸும் பிரேமையும் 25 வருடங்கள் கழித்து சந்தித்துக்கொண்ட இன்றைய வெண்முரசினை எதற்காகவோ நினைத்துக்கொண்டேன்.
தாவரவியல் துறை மாணவிகளும் பேருந்தில் இருந்தனர். புர்க்காவுடன் ஏறியது பாத்திமாபர்வீன்தான் என்று அடையாளம் கண்டுகொள்ள முடிந்தது, வகுப்பில் அவள் புர்க்காவை எடுத்துவிடுகிறாளென்றாலும் பட்டையாக மையெழுதிய அகன்ற கண்களைக்கொண்டெ அவளை எனக்கு அடையாளம் தெரிந்தது. உழவர் சந்தைக்கு வெளியில் கீரைக்கட்டுக்களோடு பிரண்டைக்கொடிகளைக்கட்டி விற்பனை செய்துகொண்டிருந்தார்கள்
9 க்கு 2 நிமிடமிருக்கையில் கல்லூரிக்கு முன்பாக நின்றது பேருந்து. இப்படி கொட்டுவாயில் கொண்டு வந்துநிறுத்தாமல் 10 நிமிஷம் முன்னதாக வந்தால் நான் தினமும் இப்படி மகிழ்ந்து பயணிக்கலாம். அடுத்து செந்தில் விடுப்பெடுக்கும் நாள் வரையிலும் ill miss you dear 17
Leave a Reply