கரீபியன் தீவுகளை பிறப்பிடமாகக்கொண்ட நெல்லிக்காய் குடும்பமான யுஃபோர்பியேசியேவை சேர்ந்த manchineel tree என்றழைக்கபடும் Hippomane mancinella என்னும் தாவர அறிவியல் பெயரைக்கொண்ட மரம்தான் உலகின் நச்சுமரங்களில் மிக அதிகளவு நஞ்சை கொண்டது.
இதன் பேரினமான hippomane என்பது இதன் இலைகளை உண்ட குதிரைகளுக்கு பித்து பிடித்ததால், கிரேக்க மொழியில் குதிரை -பித்து என்னும் பொருளில் hippo- mane வைக்கப்பட்டது. சிற்றினப்பெயரான mancinella என்பது ஸ்பானிஷ் மொழியில் சிறிய ஆப்பிள் எனறு பொருள் படும் இம்மரத்தின் பச்சை நிறப்பழங்களும் இலைகளும் ஆப்பிள் மரத்தை போலவே இருப்பதால் இவ்வாறு பெயரிடப்பட்டிருக்கிறது. விஷக்கொய்யா மரமென்றும் இதை அழைக்கிறார்கள்
இதன் தற்போதைய ஸ்பானிஷ் வழங்குபெயரான manzanilla de la muerte, என்பது சிறு மரண ஆப்பிள் என்று பொருள் படும் (“little apple of death )
பால் வடியும் இம்மரத்தின் தண்டு, பட்டை, இலை, மலர், கனி என அனைத்துபாகங்களிலும் இருக்கும், எண்ணற்ற் நச்சுப்பொருட்கள் இம்மரத்தின் பாலில் கலந்திருக்கும்.
அலையாத்திக்காடுகளுக்கு அருகில் கடற்கரையோரங்களில் இவை பெரும்பாலும் காணப்படுவதால் இவற்றிறகு பீச் ஆப்பிள் மரம் என்றும் பெயருண்டு. சிவப்பும் சாம்பல் வணணமும் கலந்த நிறத்திலிருக்கும் மரப்பட்டைகளை கொண்டிருக்கும் பசுமைமாறா இம்மரம், சுமார் 15 மீட்டர் உயரம் வரை வளரும். கூம்பு வடிவ மலர் மஞ்சரிகளில் சிறு மலர்கள் இளம்பச்சை வண்ணத்திலிருக்கும் இலைகள் பளபளப்பான பச்சை நிறத்திலிருக்கும். பசுமஞ்சள் நிறக்கனிகள் தோற்றத்தில் ஆப்பிளை ஒத்திருக்கும். இதிலிருக்கும் கொடும் நஞ்சு தோலில் பட்ட உடனே கொப்புளங்களை உருவாக்கும்.
மழைக்கு இம்மரத்தடியில் ஒதுங்கினால் கூட உடல் முழுவதும் கொப்புளங்கள் உண்டாகும். கண்களில் இம்மரத்தின் பால் பட்டால் பார்வையிழப்பும் உண்டாகும். மரத்தடியில் மழைகாலங்களில் நிற்கும் கார்களின் வண்ணம் உரிந்து வந்துவிடும். அறியாமல் இம்மரத்தின் கனிகளை உண்பவர்களுக்கு குடல் புண்ணும், இரத்தப்போக்கும், கைகால் வீக்கமும் உண்டாகின்றது.
கனிகள் முதலில் இனிப்பாகவும் பின்னர் குருமிளகின் காரத்தைப்போலவும் தொடர்ந்து நெருப்பு வைத்தது போன்ற எரிச்சலையும் உண்டாக்கி தொண்டையை இறுகச் செய்துவிடும். பின்னர் பாதிக்கப்பட்டவர்களால் எதையுமே விழுங்கமுடியாமலாகிவிடும்.மரக்கட்டைகளை தீயில் எரிக்கையில் வரும் புகையும் ஆரோக்கிய சீர்கெடுகளைஉண்டாக்கும்.
இம்மரத்தின் இலைகளில் droxyphorbol-6-gamma-7-alpha-oxide, hippomanins, mancinellin, sapogenin, phloracetophenone-2,4-dimethylether ஆகிய நச்சுப்பொருட்களும் கனிகளில் i physostigmine மற்றும் Phorbol போன்ற நஞ்களும் உள்ளன.
மனிதர்களால் புரிந்துகொள்ள முடியாத இயற்கையின் பலமர்மங்களில் ஒன்றாக இம்மரத்தின் விஷக்கனிகளை உண்டு அதிலேயே வாழ்கின்றன கருப்பு பேரேந்திகளான (black-spined iguana- Ctenosaura similis) எனும் விலங்கினங்கள்.
கரீபியத்தீவின் பழங்குடியினர் இம்மரத்தின் இலைகளைக்கொண்டு எதிரிகளின் நீர்நிலைகளை நஞ்சூட்டியிருக்கின்றனர். கொலம்பஸின் இரண்டாவது தேடல் பயணத்தில் கலந்துகொண்டவரும், ஃப்ளோரிடாவின் முதல் அதிகரபூர்வமான் தேடல்பயணத்தை வழிநடத்தியவரும், கரீபியன் தீவின் (PUERTO RICO) புவேட்டோ ரீகோ’வின் முதல் கவர்னருமான ஜான் லியோன் (Juan Ponce de León), 1521ல் 200 பயணிகளுடன் இரு கப்பல்களில் ஃப்ளோரிடாவின் தென் பகுதியில் தேடல் பயணம் மேற்கொண்டிருந்தபோது, இவரை அங்கிருந்த பழங்குடியினர் இம்மரத்தின் பாலில் தோய்த்த அம்பில் தாக்கினர். அதன் நச்சுநுனி தொடையில் தைத்து ஜான் லியோன் மரணமடைந்தார்.
ஆனால் இம்மரத்தின் கனிகளை உலரவைத்தும், பாலை உறைய வைத்தும் அப்பழங்குடியினர் பல நோய்களுக்கு மருந்துகளை தயாரிக்கின்றனர். மரக்கட்டைகளை வெயிலில் உலர்த்தி அதன் பாலைநீக்கிவிட்டு விறகாகவும் உபயோகிக்கின்றனர்..
பிரபல கடற்பயணி ஜேம்ஸ் குக்கி’ன் கப்பலில் இருந்த மருத்துவர் தனது நாட்குறிப்பில் கரிபியன் தீவில் விறகுக்காக மரங்களை வெட்டப்போன குழுவினர் மரத்தின் பால் கண்களில் பட்டு முழுக்குருடானதை குறிப்பிட்டுள்ளார்.
The Buccaneers of America’ வை எழுதிய அலெக்ஸாண்டர் (ALEXANDRE EXQUEMELIN , தான் கரீபியன் தீவிலிருக்கையில் கொசுக்கடியிலிருந்து தப்ப இம்மரத்தின் சிறு கிளையை ஒடித்து அதை விசிறியாக உபயோக்கித்த உடனேயே முகம் முழுவதும் கொப்புளங்களால் வீங்கி மூன்று நாட்களுக்கு கண் குருடானதை எழுதியிருக்கிறார்.. நாட்குறிப்புகள் எழுதியவர்களில் மிகபிரபலமானவரான NICOLES CRESSWELL லின் நாட்குறிப்பில் இம்மரத்தின் ஒரு கனி 20 நபர்களை கொல்லும் நஞ்சை கொண்டிருந்தது குறிப்பிடபட்டிருக்கிறது.
1865’ ல் பிரபலமாயிருந்த L’AFRICAINE என்னும் ஓபரா நாடகத்தின் கதா நாயகி இம்மரத்தின் மலர் மஞ்சரிகளை எரித்து அதன் புகையை நுகர்ந்து இறக்கிறாள். மரணதண்டனை கைதிகளை இம்மரத்தில் கட்டிவைத்ததும், கொல்ல வேண்டிய எதிரிக்கு இம்மரத்தின் இலைகளை சிகரெட் போல் சுருட்டி புகைக்க கொடுத்ததுமாக ஏராளமான வரலாற்றுக்குறிப்புகள் இம்மரத்தின் நஞ்சைக்குறித்து சொல்லுகின்றன.
அமேஸான் ஸ்டுடியோவின் தொலைகாட்சிதொடரான HOMECOMING (2018) ல், இம்மரம் இடம்பெற்றிருக்கிறது. உலகின் மிகக்கொடிய நஞ்சைக்கொண்ட மரமாக கின்னஸ்புத்தகமும் இதை குறிப்பிடுகிறது,
Flora of Florida வை எழுதிய Roger Hammer இம்மரத்தின் கனிகளை உண்டு இறந்த மாலுமிகளை பற்றி எழுதியிருக்கிறார்.கரீபிய கடற்கரைகளிலும் மத்திய மற்றும் தென் அமெரிக்காவிலும், தென் ஃப்ளோரிடாவிலும் அதிகம் காணப்படும் இம்மரங்களில் எச்சரிக்கை வாசகங்களும், பெரிதாக X குறியும் எழுதிய பலகைகள் மாட்டப்பட்டு இதன் ஆபத்தை தெரிவிக்கின்றன..
இது மிகவும் ஆபத்தான மரம்தான் என்றாலும் இதைக்காட்டிலும் கொடிய நஞ்சைக் கொண்டுள்ள சிறு செடிகளும் ஃப்ளோரிடாவில் உள்ளன, நீர் ஹெம்லாக் (Cicuta maculata). எனப்படும் நச்சுச்செடியின் கால் அங்குல தண்டு ஒரு நபரை கொல்லப் போதுமானது, இது வட அமெரிக்க கண்டத்திலேயே மிகவும் கொடிய நஞ்சைகொண்டுள்ள செடியாகும்.