இந்தியாவின் இருவேறுபட்ட வாழ்வியலில் இருக்கும், முற்றிலும் வேறுவேறு தளங்களில் இயங்கும் ஒரு ஆணும் பெண்ணும் இணைந்து பயணிக்க வேண்டிய அசாதாரணமான ஒரு பயணத்தில் ஒருவர் மீது ஒருவர் கொள்ளும் அவநம்பிக்கை, வெறுப்பு சந்தேகங்கள் வழியே பரஸ்பரம் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்ளும் ஒரு அழகிய கதையை சொல்லும் இந்தி திரைப்படமான இது 19, மார்ச் 2021அன்றுதிரையரங்குகளிலும்,பின்னர் அமேஸான் பிரைமிலும் வெளியானது.
தயாரிப்பு மற்றும் இயக்கம் திபாகர் பானர்ஜி. விநியோகம் யாஷ் ராஜ் பிலிம்ஸ். பரினிதி சோப்ராவும் அர்ஜுன் கபூரும் முக்கிய கதாபாத்திரங்களில். உடன் நீனா குப்தாவும் , ரகுவீர் யாதவும் இருக்கிறார்கள்.
பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஹரியானா காவலதிகாரி பிங்கி எனப்படும் சத்யேந்த்ராவும் ஒரு கார்ப்பரேட் வங்கியின் உயர்மட்ட பொறுப்பிலிருக்கும் சந்தீப் வாலியாவும் முதன்முதலில் சந்தித்த சில மணி நேரங்களிலேயே, அவர்கள் மீதான கொலை முயற்சிகளினால் உயிருக்கு அஞ்சி தலைமறைவாகி விடுவதும், தப்பிக்க மேற்கொள்ளும் பயணங்களும் போராட்டங்களும் தான் கதை.
மிகச்சாதாரணமாக காரில் மூன்று இளைஞர்கள் இளமைக்கே உரிய அசட்டுத்தனங்களும், கொந்தளிப்பும் சிரிப்புமாக பயணிப்பதில் டைட்டில் துவங்கி, அவர்களின் எதிர்பாரா படுகொலையில் படம் வேகமெடுக்கிறது. அந்த இளைஞர்கள் கடந்து வரும் காரில் நாயகனும் நாயகியும் இருக்கின்றனர்.
துவக்கத்திலிருக்கும் வேகம் பின்னர் மட்டுப்பட்டாலும் காதல், கர்ப்பம், நம்பிக்கை துரோகம், ப்ளேக் மெயில் பொதுமக்களின் பணத்தை ஏமாற்றும் பரிவர்த்தன் வங்கியின் ஒரு திட்டம், வாடகைக் கொலையாளி, பரினிதியின் கர்பத்தில் இருக்கும் குழந்தை, காவலர்கள் வலைவீசி இருவரையும் தேடுவது என சுவாரஸ்யமான திருப்பங்கள் நம்மை படத்துடன் ஒன்ற செய்கிறது,
கர்ப்பமாயிருக்கும், ஆபத்திலிருக்கும் நம்பிக்கை துரோகம் செய்யபட்ட இளம்பெண் பாத்திரத்தில் பரினிதி அர்ஜுன் கபூரை விடவும் பிரமாதப்படுத்தி நடித்திருக்கிறார். அலட்சிய இளைஞனாக அறிமுகமாகி தனக்கே தெரியாமல் தான் பலிகடா ஆக்க பட்டிருப்பதில் வெறுப்பாகி பரினிதியையும் வெறுத்து , பின் ஒரு கட்டத்தில் அவரை காப்பாற்றும் பொறுப்பையும் எடுத்துக்கொள்ளும் பாத்திரத்தில் அர்ஜுன் கபூரும் சிறப்பாக பொருந்துகிறார்.
நீனா குப்தாவின் வீட்டில் பேயிங் கெஸ்ட் ஆக தங்கி இருக்கும் காட்சிகள் அழகு. கடைசி அரைமணி நேரத்தில் நேபாளத்தை தாண்டும் முயற்சிகள் சஸ்பென்ஸ் நிறைந்தவை. குறிப்பாக வங்கி மேலாளரின் திடீர் வன்முறை பார்வையாளர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது.
அந்த நீண்ட பாலத்தில் சுட்டுக்கொல்ல தயாராக காத்திருக்கும் காவலதிகரிகளும் அப்பாலத்தை கடக்க காத்திருக்கும் திருமண ஊர்வலத்தில் மறைந்திருக்கும் சந்தீபும், பிங்கியுமாக இறுதிக்காட்சி பரபரப்பு . வழக்கமான பாலிவுட் படங்களில் இருந்து மாறுபட்டிருக்கும் இந்த படம் பெரியவர்களுக்கானது.
Leave a Reply