வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் மனிதன் பல பாடங்களை பலரிடமிருந்து கற்றுக்கொண்டே இருக்கிறான். ’’கஷ்டமான அனுபவங்கள்தான் சிறந்த பாடங்கள்’’ என்பது ஒரு முதுசொல்லும் கூட. அப்படி ஒரு திரைப்பட தயாரிப்பாளரின், சொந்த வாழ்வின் சிக்கல்களுக்கு அசாதாரண சூழலில் வசிக்கும் ஒரு கடலுயிரி அளித்த தீர்வையும், அந்த உயிரியுடனான நெருக்கமான உறவையும் குறித்த ஆவணப்படமான My Octopus Teacher. நெட்ப்ளிக்ஸில் 2020 செப்டம்பர் 7 ஆம் தேதி வெளியானது
கிரெய்க் என்கிற ஒரு திரைப்பட தயாரிப்பாளருக்கும்,கெல்ப் காட்டின், கடல் வாழ் உயிரியான ஒரு ஆக்டோபஸுக்கும் இடையிலான கற்பனை செய்யமுடியாத, நம்பமுடியாத நட்பை விவரிக்கும் ஒரு இயற்கை ஆவணப்படமான இது,உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களை கவர்ந்து, இந்த வருடத்தின் சிறந்த ஆவணப்படத்திற்கான அகாடமி விருது,(Oscar 2021) ,சிறந்த திருத்தப்பட்ட ஆவணப்படத்திற்கான ஏசிஇ எடி விருது,(American Cinema Editors Award, USA 2021) மற்றும் சிறந்த ஆவணப்படத்திற்கான பாஃப்டா விருது (BAFTA Awards 2021) ஆகியவற்றை பெற்றிருக்கிறது. மேலும் சிறந்த ஒளி இயக்கத்திற்கான விருதான Critics’ Choice Documentary Awards 2020, சிறந்த ஆவணப்பட இயக்கத்திற்கான சர்வதேச விருதான Guangzhou International Documentary Film Festival (GZDOC) 2020, சிறந்த ஆவணப்பட விருதான Houston Film Critics Society Awards 2021,சர்வதேச சிறந்த ஆவணப்பட விருதான International Documentary Association 2020. Millennium Docs Against Gravity 2020, மற்றும் சிறந்தஆவணப்பட தயாரிப்பிற்கான விருதான PGA Awards 2021அகியவற்றை அள்ளிக்குவித்துள்ளது.
கெல்ப் காடு, அல்லது கிரேட் ஆப்பிரிக்க கடல் வனப்பகுதி என்பது, பல்லுயிர் வாழ்வு செறிந்திருக்கும் கடல் நீருக்கடியில் இருக்கும் காடு. கெல்ப் எனப்படுவது கடல் பூண்டு எனப்படும் மண்ணில் ஊன்றப்பட்டிருக்கும் அடிப்பகுதியுடன், மிதந்து கொண்டிருக்கும் நீண்ட் ரிப்பன்களை போன்ற இலைகளைக் கொண்டிருக்கும்,மாநிற கடற்பாசிகளான (BROWN ALGA/Sea Weeds) கீழ்நிலை தாவரங்கள். கெல்ப் காடுகளான ஆப்பிரிக்க கடல் காடுகள் இயற்கை அதியங்களில் ஒன்றாகும், பல வகையான அபூர்வ உயிரினங்களின் வாழ்வு இங்கு நிறைந்திருக்கும்
52 வயதான க்ரெய்க், கடலுக்கு அருகில் தான் வளர்ந்தார்,தனது குழந்தை பருவத்தின் பல ஆண்டுகளை அருகிலுள்ள பாறைக் குளங்களுக்குள் நீச்சலில் கழித்திருந்தார் எனவே கடல் அவருக்கு மிகவும் பரிச்சயமான வாழிடம். கெல்ப் காடுகள் குறித்த ஒரு ஆவணப்படம் எடுக்கும் பொருட்டு, கேப்டவுன் பல்கலைக்கழகத்தில் கடல் உயிரியல் துறையின் எமரிட்டஸ் பேராசிரியர் சார்லஸ் எல். கிரிஃபித்ஸின் வழிகாட்டுதலுடன், பல ஆண்டுகளாக இந்த கெல்ப் காட்டை ஆராய்ந்து கொண்டிருந்த கிரெய்க் பின்னர், பேராசிரியரிடம் பி.எச்.டி பட்டம் பெற்றிருந்த இளம் டாக்டர் ஜேன்ஸ் லேண்ட்ஷாஃப்பு’டன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார், கெல்ப் காட்டின் அனைத்து உயிரிகள் மற்றும் அவற்றின் நடத்தைகளை அடையாளம் காணவும், வகைப்படுத்தவுமான. மிகக்கடினமான தனித்துவமான பணியை க்ரெய்க் மேற்கொண்டிருந்தார். அவர் ஒவ்வொரு நாளும் அந்த அசாதாரண சுற்றுச்சூழல் அமைப்பில் இருந்தபடி, தான் பார்த்த அனைத்தையும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் எடுத்துக்கொண்டிருந்தார்.
எதிர்பாராமல், க்ரெய்க் 2010 ஆம் ஆண்டில் கடலுக்கடியிலான இந்த கெல்ப் காட்டில் ஒரு ஆக்டோபஸை முதலில் சந்திக்கிறார். அதனை தினமும் கவனித்தபடி இருக்கையில் அதன் புத்திசாலித்தனத்தையும் சமயோசித புத்தியையும் அறிந்துகொண்டபோதுதான், ஆவணப்படுத்துதலில் தனக்கு ஒரு உணர்வுபூர்வமான கதையும் இருப்பதை உணர்கிறார்.
தன்னந்தனியே பல ஆண்டுகளாக, நீரடி வாழ்வை ஆவணப்படுத்திக்கொண்டிருந்த க்ரெய்க் பின்னர் இந்த ஆக்டோபஸினை ஆவணப்படுத்துவதில், விருது பெற்ற கேமரா ஆபரேட்டரும் கிரெய்கின் பழைய நண்பருமான ரோஜர் ஹாராக்ஸையும் இணைத்துக் கொண்டார். இருவரும் பலநாட்கள் நூற்றுக்கணக்கான மணி நேரங்கள் நீருக்கடியில் கழித்து, பிபிசியின் ப்ளூ பிளானட் II க்கான ஒரு தொடரை உருவாக்கினர்.
2017 ஆம் ஆண்டின் முற்பகுதியில், அவரின் இந்த ஆக்டோபஸுடனான அசாதாரண நீருக்கடியிலான அனுபவங்களை ஒரு ஆவணப்படமாக வடிவமைக்க சிறப்பு கடல் பாதுகாப்பு பத்திரிகையாளர், கதைசொல்லி மற்றும் இளம் திரைப்படத் தயாரிப்பாளருமான பிப்பா எர்லிச் படமாக்குதலில் இணைந்தார். பின்னர் படத்தொகுப்பிலும் பிப்பா பெரிதும் உதவினார்.
கிரெய்க் மற்றும் பிப்பா இருவருக்கும் ஆக்டோபஸின் கதையை ஒரு ஆக்டோபஸின் மனநிலையிலேயே சொல்லவேண்டும் என தோன்றியது, அப்போதுதான் அக்கதை உணர்வுபூர்வமாக இருக்கும் என அவர்கள் நம்பினர். 2018 ஆம் ஆண்டின் முற்பகுதியில், ஏறக்குறைய ஒரு வருட காலம் நடந்துகொண்டிருந்த படத்தொகுப்பினிடையே , கனடாவின் லெத்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆக்டோபுஸ் உளவியலாளரும் ஆக்டோபஸ் நடத்தை வல்லுநருமான டாக்டர் ஜெனிஃபர் மாதர் கேப் டவுனுக்கு வந்து, சில முக்கியமான அறிவியல் ஆலோசனைகளுடன் அவர்களுடன் படத்தொகுப்பில் இணைந்தார்.
கிரெய்க் படம்பிடித்திருந்த சிக்கலான விலங்கு நடத்தைகள் அனைத்தையும் புரிந்து கொள்ள விரிவான அறிவியல் உள்ளீடு களும் தேவையாக இருந்தது.
ஒப்பீட்டளவில் பிற ஆவணப்படங்களை போலல்லாமல் கெல்ப் காடுகளின் அதீத குளிர் நீர், குறைந்த மற்றும் அடிக்கடி மாறுபடும் ஒளி, அறியா கடல் உயிரிகள் ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் என இந்த படப்பிடிப்பு, படக்குழுவினருக்கு பெரும் சவாலாக இருந்தது.
அட்லாண்டிக் பெருங்கடலின் குளிர்ந்த, ஓரளவு ஆழமற்ற நீரில் பல ஆண்டுகளாக தினசரி டைவிங் செய்த அவர், ஸ்கூபா அல்லது வெட் சூட்டு கள் எனப்படும் நீச்சல் ஆடைகளின்றி, நீரின் குளிர்ச்சியை சமாளிக்க தனது உடலை பழக்கினார்..பிப்பாவும் தனது உடலை இந்த வழியில் பயிற்றுவித்தார்.
எளிமையாக துவங்கும் படம், ஆக்டோபஸ் தன்னை ஷெல்களால் சுற்றிக் கொண்டு மாறுவேடமிட்டு கொள்ளும் போது ஆர்வத்தை தூண்டுகிறது. க்ரெய்க் ஆக்டோபஸை முதலில் பார்க்கையில் அது பயந்தபடி தன் உணர் நீட்சிகளை பின்னுக்கிழுத்துக்கொண்டு தப்பிக்க தயாராக ஜாக்கிரதையாக இருப்பது, பின்னர் அவரை மெல்ல மெல்ல பரிச்சயம் பண்ணிக்கொண்டு அவரது இருப்பை உணர்ந்தபடியே கடலுக்குள் தனது வழக்கமான வாழ்வை தொடருவது, க்ரெய்க் ஒருநாள் மெல்ல தன் விரலை நீட்டுகையில் அதுவும் தயங்கியபடி தன் கைநீட்சியொன்றினால் அவரைத் தொடுவது பின்னர் அவர் மீதே படுத்துக் கொள்வது அவருடனே நீந்துவது அவரை சுற்றிசுற்றி வருவது என அவர்களிருவருக்குமான உறவு அத்தனை பிரமிப்பூட்டும்படி இருக்கிறது. க்ரெய்க் ஆக்டோபஸை குறித்து பேசுகையில் பிரியமான ஒரு தோழியை குறித்து பேசும் உடல்மொழி தான் இருக்கிறது.
ஆவணப்படத்தில் பார்த்தபடி, கிரெய்க்கிற்கு டாம் என்னும் ஒரு மகன் இருக்கிறார்( முன்னாள் மனைவியுடனான வாழ்வில் பிறந்த மகன்). க்ரெய்க் தற்போது இந்திய சுற்றுச்சூழல் ஆர்வலரும், நிருபருமான சென்னை பெண்ணுமான ஸ்வாதி தியாகராஜனை திருமணம் செய்து கொண்டிருக்கிறார். ஸ்வாதி,தென்னாப்பிரிக்காவின் கெல்ப் காடு மற்றும் கடல் வாழ்வைப் பாதுகாக்கும் அமைப்பான கடல் மாற்ற திட்டத்தின் முக்கிய உறுப்பினராக உள்ளார்(Sea change)
காமிராவின் துல்லியம் வியப்பூட்டுகிறது. படம் பார்க்கையில் க்ரெய்க்குடன் நாமும் அட்லாண்டிக் பெருங்கடலின் குளிர் நீல நீரில் மூழ்கி, நீந்திச்செல்கிறோம்,நம்மை சுற்றிலும் வளர்ந்து நெருக்கும் கெல்பைக் கண்டு திணறுகிறோம், க்ரெய்க் கடற்கரையில் வெறுங்காலுடன் நடந்து செல்லும்போது காலடியில் நெருடும் வெள்ளை மணல் துகள்களை கூட உணர்கிறோம்.
மூச்சுக்காற்றுக்கு ஆக்சிஜன் தொட்டிகளை கூட எடுத்துக் கொள்ளாமல், தனது தோற்றம் ஆக்டோபஸை எந்த விதத்திலும் அச்சுறுத்த கூடாதென்று கவனமாக இருக்கும் க்ரெய்க்கின் அர்ப்பணிப்பும், அந்த எளிய உயிரியின் மீதான அன்பும் ஆச்சரயபப்டவைக்கின்றது
தனது புதிய நண்பரான அந்த பெண் ஆக்டோபஸினை நன்கு புரிந்துகொள்ள உதவுவதற்காக, தினமும், க்ரெய்க் வீட்டிற்கு திரும்பி விஞ்ஞான இதழ்களில் உள்ள கடல் உயிரினங்களை பற்றிய ஏராளமான கட்டுரைகளை படிக்கிறார். “மற்ற கடல் உயிரினங்களையும் அறிந்து கொள்ள அவள் எனக்குக் கற்றுக் கொடுத்தாள்”, என்று படத்தில் க்ரெய்க் பகிர்ந்து கொள்கிறார்.‘ஆக்டோபஸ்கள் இரவுநேர உயிரினங்கள்’ என்று படித்தறிந்த பிறகு, இரவிலும் நீரில் மூழ்கி, அவளது வேட்டையை கவனிக்கிறார்
ஆக்டோபஸ் தொடர்ந்து உடலெங்கும் வரிக்கோடுகளிட்டிருக்கும் பைஜாமா சுறா என்னும் வேட்டை விலங்குகளால் துரத்தப்படுவதை, பல தப்பித்தல்களுக்கு பிறகு அவற்றினால் ஆக்டோபஸ் காயமுற்று நோய்வாய்ப்படுவதை , வேட்டைக்கும் செல்லமுடியாமல் உணவின்றி குகைக்குள்ளேயே பலநாட்கள் இருந்ததை பின்னர் வெட்டுப்பட்ட உணர்நீட்சி மீண்டும் புதிதாக முளைத்து புதிய வாழ்வை முன்புபோலவே துவங்குவதை எல்லாம் க்ரெய்க் கவனித்து ஆவணப்படுத்துகிறார்.
.தனது சொந்த வாழ்வின்சிக்கல்களிலிருந்தும், துயர்களிலிருந்தும் மீண்டு வர இந்த ஆக்டோபஸ் வாழ்க்கைப்பாடம் தனக்கு உதவியாக இருந்ததை க்ரெய்க் உணர்கிறோம்..தங்கள் இருவரது வாழ்வும் ஒன்றையொன்று பிரதிபலிப்பதாக நம்பும் க்ரெய்க், அத்தனை சிறிய உயிரி தன்னை தற்காத்துக் கொண்டு ஆபத்திலிருந்து நம்பிக்கையுடன் மீண்டு வந்ததை தனக்கான பாடமாகக் கொண்டு தானும் வாழ்வின் இயங்கியல் சிக்கல்களிலிருந்து மீள்கிறார்.
அத்தனை சுமுகமாயில்லாதிருந்த தன் மகனுடனான உறவை மீண்டும் கட்டியெழுப்பிக் கொண்ட க்ரெய்க் மகனுடன், டைவிங் செய்து, அவரையும் ஆக்டோபஸை சந்திக்க வைக்கிறார்.
சுமார் 320 வது நாட்கள், க்ரெய்க்கின் தொடர்ந்த ஆவணபடுத்துதலுக்கு பிறகு,அந்த ஆக்டோபஸ் ஒரு ஆண் ஆக்டோபஸை சந்தித்து, இனச்சேர்க்கை. நடைபெற்று கருவுருகின்றது
ஒரு ஆக்டோபஸின் வாழ்க்கைச் சுழற்சியில் பெண் ஆக்டோபஸ் உடலின் பெரும்பகுதி முட்டைகளை பராமரிக்கவும், பின்னர் குஞ்சு பொரிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.மெல்ல மெல்ல தன் அடுத்த தலைமுறைக்கு தனதுடலை தியாகம் செய்துவிட்டு இரக்கமற்ற இந்த புவியின் விதிகளுக்கு தன்னை எந்த புகாருமின்றி ஆக்டோபஸ் ஒப்புக்கொடுத்து மரணிப்பது பார்வையாளர்கள் மனதை கனக்க செய்கிறது , இறுதியில் ஒரு பைஜாமா சுறா வந்து அவளது உடலை எடுத்துச் செல்கையில் நாம் கண்ணீருடன் தான் அக்காட்சியை பார்க்க முடியும்.
இனி இறைச்சி கடைகளில் கூட்டமாக ஒன்றின் மீதொன்றாக கிடத்தப்பட்டிருக்கும், நிலைத்த விழிகளும் வெறித்த உடலுமாக கிடக்கும் கடலுயிரிகளை பார்க்கையிலெல்லாம் நமக்கு இந்த ஆக்டோபஸ் நினைவுக்கு வரும்.குடும்பத்துடன், குறிப்பாய் குழந்தைகளுடன் பார்க்க வேண்டிய முக்கியமான, அருமையான படம் இது
Leave a Reply