துறை சார்ந்த ஒரு நிகழ்வில்  உயிரி உரங்களுக்கான சந்தைச்சூழலைக் குறித்து உரையாற்றிக் கொண்டிருக்கையில் தொடர்ந்த அழைப்புகள் அப்பாவிடமிருந்து.  அலைபேசியுடன் என் மனமும் அதிர்ந்துகொண்டே இருந்தது. நிச்சயம் துக்கச் செய்தியாகத்தான் இருக்கும் என யூகித்தேன். அதற்குள் தம்பியிடமிருந்து குறுஞ்செய்தி ’’ஊட்டி அத்தை  இன்று (20/8/2024) காலை 7 மணிக்கு தவறிவிட்டார்கள்’’ என்று.

கண்ணீரை அடக்கிக்கொள்ளவே முடியவில்லை. உரையை முடித்துவிட்டு அரங்கிலிருந்து வெளியே சென்று தம்பியை  அழைத்துப்  பேசினேன். அத்தையை பார்த்து பல  வருடங்கள் ஆகியிருந்தன.

அம்மாவைக் காட்டிலும் எங்கள் மூவர் மீதும் அன்பாக இருந்த ஊட்டி அத்தை சில வருடங்களாகவே படுக்கைதான். தலைநடுக்க  நோய் வந்திருந்தது. மறதியும் இருந்தது. பேச்சு குளறுவதால் சைகையில் தான் தொடர்பு கொள்வதல்லாமே. அத்தைக்கு இறப்பு நிச்சயம்  விடுதலைதான்.

ஊட்டி மாமா என்றழைக்கப்பட்ட சவுக்கத் அலி மாமா கொரோனா முடிந்த ஒரு ஜூனில் தவறினார். அவரும் இடுப்புக்கு கீழ் அசைவின்றி சில வருடங்கள் கிடையில் இருந்துதான் சென்றார்.

மாமா அத்தை இருவருமே எங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமானவர்கள். அவர்கள் மாமா அத்தை ஆனதே ஒரு கதைதான்.

60-களின் இறுதியில் திருமணத்துக்கு முன்பு அப்பா உடற்பயிற்சி ஆசிரியர் பயிற்சிக்கல்விக்காக சென்னை YMCA வில் இருந்தார். அப்போது அந்த கிராமத்தில் இருந்து சென்னை சென்ற சாமான்யர்களில் அப்பாதான் முதல் நபர். அதுவே அப்போது அவருக்கு ஒரு சிறப்பு அந்தஸ்தாக இருந்தது.

அங்கே அவருக்கு ஆசிரியராக இருந்தவர் திரு சவுக்கத் அலி என்னும் மிக உயரமும் தாட்டியுமான ஒரு இஸ்லாமியர். அப்பாவுக்கும் அவருக்கும் நல்ல நட்பு இருந்திருக்கிறது. அவரும் இளையவர் அப்போது. இருவருக்கும் திருமணம் ஆகியிருக்கவில்லை. அப்பா படிப்பை முடிக்கும் சமயத்தில்  சவுக்கத் அலி  அவர்கள் இந்திராணி என்னும் கிருஸ்துவ பெண்ணொருத்தியை காதல் மணம் புரிந்து கொண்டார்.

இந்திராணி (அத்தை) வீட்டில்  மட்டும் பலத்த எதிர்ப்பு. புதுமணத்தம்பதிகள் வேட்டைக்காரன் புதூருக்கு வந்து தங்கிச் சென்றிருக்கின்றனர். அப்பாவுக்கு அரசுப்பணி கிடைத்து,அப்பா அம்மாவின் புரட்சிகரமான திருமணம் நடந்தபோது அதற்கும் அவர்கள் வந்து கலந்து கொண்டிருக்கின்றனர். இந்திராணிஅத்தைக்கு ஒரு மகள் பிறந்த சில மாதங்களில் அம்மாவுக்கும் மித்ரா பிறந்திருக்கிறாள்.

அம்மா சொல்லக் கேட்டிருக்கிறேன் இந்திராணி அத்தைக்கு கணுக்கால் வரை அடர்த்தியான கூந்தலாம்.. ’’சீவக்கட்டை மாதிரியிருக்கும்  அத்தையோட சடை. துணி துவைக்கற கல்லில் பிரிச்சுப்போட்டு ரெண்டு மூணு பேரா சேர்ந்து அலசுவோம், பேனுன்னா பேனு அத்தனை பேன் ஊறும், அலசிக் காய வச்சு  தணலும் சாம்பிராணியுமா புகை போட்டு   முடிக்கறதுக்குள்ள ஒரு நாளாயிரும்’’ என்பார்கள்.  மாமாவுக்கு இந்திராணி அத்தையின் கூந்தலின் மீது பித்திருந்ததாம்.

நான் பார்த்ததில்லை அந்த அத்தையை. நான் பிறக்கும் முன்பே மாமா அவரை மணவிலக்கு செய்துவிட்டார். அதுவும் வேட்டைக்காரன் புதூரில் வைத்துத்தான் நடந்திருக்கிறது.

மாமாவுக்கு சென்னை YMCA-விலிருந்து பொள்ளாச்சியில் இப்போது நானிருக்கும் இதே கல்லூரியில் உடற்பயிற்சி இயக்குநராக அரசுப்பணி கிடைத்திருக்கிறது. எனவே  மாமா கல்லூரி உரிமையாளரின் விருந்தினர் மாளிகையிலும் அத்தை வேட்டைக்காரன்புதூரிலும் சில காலம் இருந்திருக்கிறார்கள்.  

இன்னும் இந்தக் கல்லூரியின் ஒரு அரங்கில் கல்லூரி நிர்வாகக் குழுவினருடன் சவுக்கத் அலி  மாமாவும் கோட்டும் சூட்டுமாக கம்பீரமாக நிற்கும் புகைப்படம் பெரிதாக மாட்டப்பட்டிருக்கிறது.

பிறகு மாமாவுக்கு ஊட்டி லவ்டேலில் இருக்கும்  பிரபலமான லாரன்ஸ் பள்ளியில் பணி கிடைத்த போது அவர் மட்டும அங்கே சென்றிருக்கிறார். இந்திராணி அத்தை சென்னையில் இருந்திருக்கிறார். 

லாரன்ஸ் பள்ளி  அப்போதிலிருந்தே மிகச் செலவு பிடிக்கும் ஒன்று. அங்கே 5-ம் வகுப்பில் சேர குன்னூரில் இருக்கும் சாந்தி விஜய் என்னும் ஒரு feeding school-ல் படித்திருக்க வேண்டும். அல்லது மிகப்புகழ் பெற்றவர்களின், செல்வந்தர்கள், அரசியல் வாதிகளின் பிள்ளைகளாக இருக்க வேண்டும். 

நான் 5-ம் வகுப்பிலிருந்து 6-க்கு சென்றபோது என் மாமா மகன் 5-ல். தோல்வியடைந்திருந்தான். அவனை அப்போதே 1 லட்ச ரூபாய் கட்டணம் கட்டி எல்லாருமாக ஒரு ஜீப்பில் லவ்டேல் கொண்டுபோய் சவுக்கத் அலி  மாமாவின் சிபாரிசில் லாரன்ஸ் பள்ளியில் சேர்த்துவிட்டு ’’படிக்க மாட்டேன் என்னையும் கூட்டிட்டு போங்க’’ என்று அவன் கதறக்கதற விட்டுவிட்டு ஊர் திரும்பினோம். நாங்கள் பொள்ளாச்சி வருவதற்குள் அந்த மாமா மகன் பல பேருந்துகள் மாறி எங்களுக்கு முன்னால் வீட்டுவாசலில் உட்கர்ந்திருந்தது ஒரு கிளைக்கதை

அங்கே மாமா நல்ல செல்வாக்குடன் இருந்தார். அப்போது அந்த பள்ளியில் படித்த  ஒரு செல்வச்செழிப்பான அய்யங்கார் வீட்டுப்பெண் அபயாம்பாள்.

மாமா உடற்பயிற்சி ஆசிரியர், அங்கே அன்றாடம் குதிரை ஏற்றப் பயிற்சி, நீச்சல், பேண்ட் வாத்திய பயிற்சி என்று இருக்கும். மும்பையில் சில காலம் வாழ்ந்த அத்தைக்கு  ஷம்மி கபூர் பிடித்தமான நடிகர். மாமா கொஞ்சம் ஷம்மி கபூரும் நிறைய  ஜெமினி கணேசனுமாக கலந்து செய்தது போலிருப்பார். தவறாமல் உடற்பயிற்சி செய்து கட்டான உடலும் மிடுக்கான தோற்றமும் கொண்டவரும் கூட.

மூன்று பேருக்கான அசைவ உணவை ஒருவராக உண்பார். தீவிர அசைவ உணவுப்பிரியர். நாய்களென்றால் மட்டும் மிகவும் பயப்படுவார்.அத்தனை திடகாத்திரமான, சராசரிக்கும் கூடுதலான உயரமும், பருமனுமாக இருக்கும் மாமா நாய்களுக்கு பயப்படுவது எங்களுக்கு வேடிக்கையாக இருக்கும்.

எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம் காலையில் உடற்பயிற்சி முடித்து  சிரசாசனம் செய்து கொண்டிருக்கும் அவர் எழுந்ததும் கண்கள் ரத்தச்சிவப்பாயிருப்பதைப் பார்க்க நானும் மித்ராவும் காத்துக்கொண்டிருப்போம்.

அபயம் அத்தைக்கு ஷம்மி கபூரின் சாயலில் இருந்த நீச்சலும் உடற்பயிற்சியும் சொல்லிக் கொடுத்த மாமாவின் மேல் தீராக்காதல் உண்டாகி இருக்கிறது.  ஒரு சிறுமகளும், வீட்டாரை எதிர்த்துக்கொண்டு இவரை நம்பி வந்த  காதல் மனைவியும் இருந்த மாமாவும் அத்தையை விரும்பியது தான் ஆச்சரியம். 

இந்திராணி அத்தைக்கு விஷயம் தெரிந்து பெரும் பிரச்சனை உருவான போது மாமாவும் அத்தையும் வேட்டைக்காரன்புதூர் வந்தார்கள். ஊர்த்தலைவராக இருந்த என் அப்பாருவின் முன்பாக அத்தையை தலாக் செய்தார் மாமா. 

அந்த அநீதியை நினைக்க நினைக்க இப்போதும் எனக்கு ஆறவே இல்லை. ஆண்களின் உலகுதான் இது அப்போதும் இப்போதும் எப்போதும்.

இந்திராணி அத்தையையும் கைக்குழந்தையாக இருந்த மகளையும் கோவை ரயில் நிலையத்தில் அப்பாதான் கொண்டு போய் சென்னைக்கு நீலகிரி விரைவு ரயிலேற்றிவிட்டு வந்திருக்கிறார்.

எட்டாவது படிக்கையில்  தை மாதம் பொங்கலுக்கு வீடு  வெள்ளையடிக்கும் போது பழைய பொருட்கள் இருந்த ஒரு டிரங்குப் பெட்டியில் பொடிப்பொடியான கையெழுத்தில் இந்திராணி அத்தை சென்னையிலிருந்து அப்பாவுக்கு எழுதிய கடிதத்தை நானும் மித்ராவும் ரகசியமாகப்  படித்தோம் ’’ அவருக்கு இன்னொருத்தியை பிடித்திருந்தது, கல்யாணம் பண்ணிக்கொண்டார், ஆனால் கைக்குழந்தையுடன் தன்னந்தனியே ரயிலேறி திக்குத்தெரியாத எதிர்காலத்திற்கு செல்ல  நான் என்ன தப்பு செய்தேன் என்று  மட்டும் அந்த இரும்பு இதயம் கொண்ட மனிதரிடம் கேட்டுச்சொல்லுங்கள் அண்ணா’’ என்று எழுதியிருந்தார்கள்..

அந்த  வயதில் காதலை, தலாக் என்னும் மணவிலக்கை குறித்த புரிதல் எல்லாம் இல்லாவிடினும் இரும்பு இதயும் கொண்ட மனிதரை நோக்கி கேட்கப்பட்ட அந்த கேள்வி என்னை பெரிதும் தொந்தரவுக்குள்ளாக்கியது

அந்த பதின்ம வயதிலிருந்துதான் மணவுறவு குறித்தான பெருங்குழப்பம்  எனக்கு தொடங்கியது.

பிறகு அபயம் அத்தையை மாமா வேட்டைக்காரன் புதூரிலேயே வைத்து திருமணம் செய்து கொண்டார். அத்தை வீட்டில்   பலத்த எதிர்ப்பு இருந்திருக்கிறது. திருப்பெரும்புதூரின் மிக ஆச்சாரமான  பிராமணக் குடும்பப் பெண் ஒருத்தி ஒரு இஸ்லாமியரை அதுவும் இரண்டாம் தாரமாக அதுவும் 25 வயது வித்தியாசத்தில் 70-களில் திருமணம் செய்துகொள்வது என்பது எத்தனை பெரிய பிரச்சனையை உருவாக்கி இருக்கும் என்பதை நம்மால் யூகிக்க முடியும். அத்தைக்கு காதல் கண்ணை, மனதை எல்லாம் மறைத்து விட்டது.

அம்மா இந்திராணி அத்தையுடன் கடிதத் தொடர்பில், இருந்தார், பிற்பாடு அந்த அத்தை மறுமணம் செய்து கொண்டு பிள்ளைகள் பிறந்தன. மூத்த  மகளின் திருமணத்துக்கு அம்மாவுக்கு அழைப்பிதழ் வந்தது அதன் பின்னர் இந்திராணி அத்தை தொடர்பிலிருந்து விலகிவிட்டிருந்தார்.

அம்மாவும் அபயம் அத்தையும் நெருக்கமான தோழிகளாக இருந்தார்கள். அபயம் அத்தைக்கும் நீண்ட கூந்தல். இப்போது நினைக்கையில்  வழக்கமாக பெண்களுக்கிருக்காத அந்த உயரமும், பருமனான உடலும்,  நீளக்கூந்தலுமாக யட்சி என்று நினைத்துக் கொள்கிறேன் அத்தையை.

அபயம் அத்தை பெயரை நூர்ஜஹான் என்று மாற்றிக்கொண்டார். நெற்றிக்கு இட்டுக்கொள்ளாமல்தான் வெளியே செல்வார்.அவர் வேலை செய்யும் இடத்தில் நூரி மிஸ் என்றே அறியப்பட்டார்.அவரும் உடற்பயிற்சி ஆசிரியராக லவ்டேலில் பிற்பாடு இணைந்துகொண்டார். ஊட்டியில் இருந்ததால் அவர் எங்களின் ஊட்டி அத்தை ஆனார்.

பெரும்பாலான விடுமுறைகளில் நாங்கள்  லவ்டேல் செல்வோம் அல்லது மாமாவும் அத்தையும் பொள்ளாச்சிக்கு வந்து விடுவார்கள்

அவர்கள் வராத நாட்களிலும் ஊட்டியிலிருந்து பொள்ளாச்சி வரும் பேருந்தில் ஒரு கூடை நிறைய காலிஃப்ளவரும் கேரட்டும் முட்டைகோஸும்  பீட்ரூட்டுமாக சுமார் 10 கிலோ அளவுக்கு பச்சைப்பசேலென காய்கறிகள்  அவ்வப்போது அனுப்பி வைப்பார்கள். அப்பா ஆட்டோ பிடித்து  பேருந்து நிலையம் போய் அவற்றை  எடுத்துக் கொண்டு வருவது  நன்றாக நினைவிருக்கிறது.   சந்தையில் ஊட்டிக் காய்கறிகள் வாங்குவது ஒரு சிறப்பு அந்தஸ்தாக இருந்த காலம் அது.

.எனக்கும் மித்ராவுக்கும்  பூப்பு நன்னீராட்டிச் சடங்கு செய்ததும் ஊட்டி அத்தைதான். எங்கள் இருவரின் திருமணத்தின் போதும் சீர்வரிசைகளை விமரிசையாகச் செய்ததும் அபயமத்தைதான். 

அப்பா அம்மா லோன் வாங்கி பொள்ளாச்சி வீட்டைக் கட்டிக் கொண்டிருக்கையில் ஒரு சமயம்  கடும் நிதி நெருக்கடி வந்திருக்கிறது. மாமா உதவுவதாகச் சொல்லி இருக்கிறார் எனினும் பணம் வாங்க அப்பாவால் ஊட்டிக்குச் செல்ல முடியவில்லை. மாமா அப்போது எங்கோ வடக்கே ஒரு கூடுகைக்கு செல்ல வேண்டி இருந்தது. அப்பாவை  கோவை  ரயில் நிலையத்தில் சந்தித்து நகரும் ரயிலின் ஜன்னல்  வழியே   மாமா பணம் கொடுத்துச்சென்றார் அப்பா,ஊட்டி மாமா இருவரின் வாழ்விலும் இப்படியான உறவைக்காட்டிலும் நட்பில் இணைந்திருந்த தருணங்கள் நிறைந்திருந்தன.

அப்படிக் கட்டிய அந்த வீடு 2 வருடங்களுக்கு   முன்னர்  அம்மா இறப்பதற்கு சில வாரம் முன்பு ஒரு இஸ்லாமியருக்கு விற்கப்பட்டது.

அத்தையும் அம்மாவும் லவ்டேல் வீட்டில் சமைப்பதும், ஊட்டிக்கு இந்திச் சினிமாக்களுக்கு போவதும்,  வீட்டின் எதிரே இருந்த மாபெரும் புல்வெளியில் அமர்ந்து கதை பேசுவதுமாக  மகிழ்ந்திருப்பார்கள்.

வழக்கமாக நாங்கள்  கோடையில் ஊட்டி செல்லும் போதுதான் மலர்க்கண்காட்சியும் நடக்குமென்பதால் எப்போதும் தாவரவியல் பூங்காவிற்குச் சென்று முழுநாளும் இருப்பது, மாலை எஸ் பி பி, சைலஜா, ஜானகி அகியோரின் இசைக்கச்சேரிகளைச் கேட்பது, மதிய உணவை வீட்டில் இருந்து கொண்டு சென்று புல்வெளியில் அமர்ந்து சாப்பிடுவது என்று ஒரே கொண்டாட்டமாக இருக்கும். 

லவ்டேலில் அப்போதுதான் கோன் ஐஸ் கடை முதன்முதலாக வந்திருந்தது. அதுவும் லவ்டேல் வீட்டுக்கு பின்னால் இருந்த யூகலிப்டஸ்  மரக்கூட்டமொன்றின் அருகில். தனியே கூம்பு பிஸ்கட்டுகளையும் ஒரு சில்வர் பாத்திரம் நிறைய ஐஸ்கிரீமுமாக வாங்கிவந்து நாளெல்லாம் சாப்பிடுவோம். 

ஊட்டியில் ஞாயிற்றுக்கிழமைகளில் தெருவோரக் கடைகள் போடுவார்கள், அப்படி ஒரு இளவெயில் பொழிந்துகொண்டிருந்த நாளில் அத்தையும் மாமாவும் எனக்கும் மித்ராவுக்கும்  ஸ்வெட்டெர் வாங்கித்தார்கள். 

 வான் நீலத்தில் பெரிய பெரிய வெள்ளைப் பொத்தான்கள் வைத்தது எனக்கு,  அடர் ஆரஞ்சில் பெரிய பாக்கெட்டுகள் வைத்தது மித்ராவுக்கு.   அப்போது பொள்ளாச்சியில் புழக்கத்துக்கு வந்திருக்காத தெர்மோ ஃப்ளாஸ்க் தண்ணீர் பாட்டில்கள் இரண்டும் வாங்கிக் கொடுத்திருந்தார்கள்.  அதில் தண்ணீர் நிரப்பிக்கொண்டு பொள்ளாச்சியிலிருந்து நேராக ஊட்டி செல்லும் பேருந்தில் தூங்கி  வழிந்து கொண்டே செல்லும் நாங்கள் இருவரும் பர்ளியாறு நிறுத்தத்தில் விழித்துக்கொள்வோம். அங்கிருந்து அத்தைக்கு  பிடித்த பிளம்ஸ் பழங்கள் தவறாமல் வாங்கிக்கொண்டுதான் மேலே செல்வோம்.

அத்தை  லாரன்ஸ் பள்ளியில் பெண்கள் விடுதியின் வார்டனாகவும் மாமா உடற்பயிற்சி இயக்குநராகவும் பிற்பாடு இருந்ததால் இருவருக்கும் இரண்டு வீடுகள் ஒதுக்கப்பட்டிருந்தன. முதல்தளத்தில் எதிர் எதிராக இருந்த அந்த  மரவீடுகளில்  ஒன்றை நாங்கள் வரும்போது மட்டும் உபயோகித்தோம்.

அத்தை மாமா இருவருக்கும் அங்கே விடுதியிலேயே உணவு கொடுக்கப்பட்டது. விருந்தினர்களுக்கும் அப்படித்தான். நானும் மித்ராவும் மதிய உணவை பெரிய கேரியரில் சென்று வாங்கி  வருவோம். கஸ்டர்ட், ஆம்லெட் உள்ளிட்ட முழுமையான உணவு கொடுப்பார்கள்.  சமையலறையில் சீருடையணிந்த பணியாளர்கள் முட்டையை எண்ணெயில் உடைத்து ஊற்றி ஆம்லெட் தயாரிப்பதை  வாயைத்திறந்தபடிக்கு  கிராமத்துச் சிறுமிகளான நாங்கள் வேடிக்கை பார்ப்போம்.

மாலை வேளைகளில் புல்வெளியில் நாற்காலி போடப்படும். நாங்கள் அனைவரும் அமர்ந்திருக்க வெள்ளைச் சீருடைப் பணியாளர்கள் பீங்கான் ஜாடியில் கொண்டு வந்த தேநீரையும் வாட்டிய ரொட்டித் துண்டுகளையும் பரிமாறுவார்கள். பீங்கான் கப்புக்களையும் தட்டுக்களையும்  அங்கேதான் முதன் முதலில் பார்த்தேன். நான் அங்கே போனால் சாப்பிடும் தூய வெள்ளையில் குழிவான பீங்கான் தட்டின் விளிம்பில் அடர் நீலக் கோடு இருக்கும். அந்தத்தட்டு இப்போது கூட கனவுகளில் அடிக்கடி வருகிறது.

லவ்டேலிலிருந்து திரும்ப பொள்ளாச்சி வந்தால் எனக்கு ஒரு நீண்ட கனவொன்றில் இருந்து விழித்துக் கொண்டது போலவே இருக்கும் அந்த விடுமுறை நினைவுகள்.

ஊட்டிக்கு சில சமயம் மாமா எங்களை  பேருந்தில் கூட்டிச்செல்வார்,  பொள்ளாச்சியிலிருந்து   லவ்டேல் போய்ச்சேர பின்னிரவாகி விட்டிருக்கும். அத்தை எங்களுக்கென வாசலிலேயே காத்துக் கொண்டிருப்பார்கள். வந்த உடனே சாப்பிட தவறாமல் அசைவம் சமைத்திருப்பார்கள்.

 வாழ்நாளில் ஒருமுறை கூட அசைவம்  சாப்பிடாவிட்டாலும் இறைச்சிக் கடைகளுக்குப் போய் வாங்கிவருவது சுத்தம் செய்து சமைப்பதிலெல்லாம்  அத்தைக்கு ஒருபோதும் ஆட்சேபணை இருந்ததில்லை. அத்தை, மாமாவை  மட்டும் விரும்பவில்லை, மாமாவின் விருப்பு வெறுப்புகளை அவரது உற்றார் உறவினரையும் விரும்பினார் அதுதானே உண்மையில் காதல் என்பது!

லவ்டேல் குளிரில் இடைவரை அடர்ந்திருந்த எங்கள் கூந்தலை பிரித்து அண்டாக்களில் சுடுநீர் கொதிக்க வைத்து அரப்புத்தேய்த்து தலைமுடி அலசிக் குளிக்க வைத்த அத்தையின் அன்பை என்னவென்று சொல்வது? அத்தைக்கு குழந்தைப் பேறு இல்லை என்பதைக் குறித்து வருந்தியதே இல்லை அல்லது எங்களுக்கு அவர் வருத்தத்தை  காட்டியதில்லை.

மிக அருமையான கள்ளிச்சொட்டுப் போன்ற பால்  லாரன்ஸ் பள்ளியில் கிடைக்கும். அவர்களுக்கென்று மாட்டுப்பண்ணை  இருந்தது. வாரா வாரம் ஆசிரியர்களுக்கு கோழி முட்டைகளும் பெரிய பெட்டிகளில் கொண்டுவந்து கொடுப்பார்கள். அத்தை  சூடான பாலில் இரண்டு முட்டைகளை ஊற்றி அடித்து எங்களை கட்டாயப்படுத்தி குடிக்கச்செய்து பிறகு மாடிப்படிகளில் பத்துமுறை ஏறி இறங்க சொல்வார்கள். ஒரு நாளைக்கு இத்தனை செம்பு தண்ணீர் அருந்தியே ஆகவேண்டும் என்றும் கட்டாயப்படுத்துவார்கள்.

  லாரன்ஸ் பள்ளி வளாகத்தில் நிறைய சினிமாப் படப்பிடிப்புகள் நடக்கும் அங்கேதான் நான் கமல் ஸ்ரீதேவி ஆகியோரையும் ஹேமாமாலினி உள்ளிட்ட நிறைய பாலிவுட் நட்சத்திரங்களையும் பார்த்தது.

அத்தையும் அம்மாவும் ஊட்டிக்கு அமிதாப்பின் டான் திரைப்படம் பார்க்கச் சென்றிருந்த ஒரு நாளில் வீட்டில் நானும் மித்ராவும்  மட்டும் இருந்தோம்.  மாலை 6 மணி இருக்கும், அழைப்பு மணி ஒலித்தது கதவை திறந்தால் மிக உயரமான ஒருவரும் உடன் நல்ல கட்டுமஸ்தாக ரோஸ் கலரில் ஒருவருமாக நின்றனர். கையை உருட்டி பந்து போல செய்த அந்த உயரமானவர் ’’ஃபுட் பால் ?’’ என்று கேட்டார்.

மாமா உடற்பயிற்சி ஆசிரியராதலால் வீட்டில் நிறைய பந்துகள் இருக்கும் அதிலொன்றைக் கொடுத்தேன். அந்த உயரமானவர் என் தலையை செல்லமாக தட்டிவிட்டுச் சென்றார். இரவு வீடு திரும்பிய அத்தையிடம் வந்தது அமிதாப் பச்சனும், தர்மேந்திராவும் என்று சொல்லியிருக்கிறார்கள் பக்கத்து வீடுகளில் இருந்தவர்கள். அத்தை நெஞ்சில் கைவைத்துக் கொண்டு அப்படியே கட்டிலில் அமர்ந்து ‘’உள்ளே கூப்பிடலையாடி?’’ என்று கேட்டது நினைவிருக்கிறது.

அத்தைக்கு ஷம்மி கபூரை, சசிகபூரை பிடிக்கும் அத்தை சொல்லச்சொல்லக்   கேட்டு எனக்கும் சசி கபூரை பிடித்திருந்தது.   சசிகபூர், ஜெனிபர் அமரக்காதலை ஓரிரவில்  மொட்டைமாடியில் அமர்ந்திருக்கையில் அத்தை சொல்லக்கேட்டதிலிருந்து அவர் மீது பெரும் பித்து உண்டாகி சசி கபூர் படங்களாக பார்த்துக்கொண்டிருந்தேன்.

அத்தை  என் தம்பி பிறந்த போது  அவனை முறைப்படி தத்தெடுத்துக்கொள்ள விரும்பினார். அம்மாவும் அத்தையும் தோழிகள் என்றாலும் தோழமைக்கும அன்னைமைக்கும் நடந்த போட்டியில அன்னைமைதான்  வென்றது. அம்மாவால் அதற்குச் சம்மதிக்க முடியவில்லை.

அத்தை மாமாவின் மண வாழ்வு எப்படி இருந்தது என எனக்கு இளம் வயதில் தெரியவில்லை. அப்போது மாமா என நாங்கள் அழைப்பவர் ஒரு இஸ்லாமியர் என்பதும் அத்தை ஒரு பிராமணப்பெண் என்பதும் தெரியாத வயதில் இருந்தோம்.

ஆனால்  நான் கல்லூரியில் படிக்கையில் அத்தையும் மாமாவும் சென்னைக்கு வந்துவிட்டிருந்தனர். மாமாவுக்கு  கிண்டி IITயில் பணி, அத்தை அதே வளாகத்தில் இருந்த பள்ளியில் உடற்பயிற்சி ஆசிரியை. அப்போதெல்லாம் மாலையில் கிண்டி IIT வளாகத்திலிருந்த ஒரு திறந்தவெளி அரங்கில் நாடகமோ இசைக் கச்சேரியோ வார இறுதிகளில் நடக்கும். கிரேஸி மோகன், சோ வையெல்லாம் நான் அங்கே தான் நேரில் பார்த்தேன். மான்கள் திரியும் மயில்கள் விளையாடும் மாவும் பலாவும் செறிந்து காய்த்துக் கொண்டிருந்த அடர்வன வளாகம் அது. 

அப்போதெல்லாம் அத்தை என்னுடன் மனம்விட்டுப் பேசி இருக்கிறார்கள்.

இளமை வேகத்தில் கல்யாணம் செய்து  கொண்டதையும்  வயதுவித்தியாசம் பெரும் பூதமாக இருவருக்குமிடையில் இருந்ததையும் சொல்லி வேதனைப்பட்டு இருக்கிறார்கள். இன்னொரு குடும்பத்தை சேதப்படுத்தி தான் வாழவந்த குற்ற உணர்விலிருந்து அத்தையால் இறுதிவரை விடுபடமுடியவில்லை. மாமாவின் மணஉறவு தாண்டிய தொடர்புகள் குறித்து அத்தைக்கு தெரியவந்தும் அதே வாசல்வழியே வந்தவராதலால் அவர் அதில் ஏதும் செய்ய முடியாதவராக இருந்தார்.

IIT வளாகத்தில் நாடகம் முடிந்த ஒரு  ஞாயிறு மாலையில்  ஒழிந்துகிடந்த அரங்கத்தின்  கடைசி  வரிசையில் அமர்ந்து அத்தை என்னிடம் சொன்னவற்றை   பகிரவும் மறக்கவும் முடியவில்லை.

மகன் சரணை கைக்குழந்தையாக  எடுத்துக்கொண்டு சென்னை சென்றிருக்கையில் அத்தையும் மாமாவும் பணி ஓய்வு பெற்று வேளச்சேரியில் வாழ்ந்து வந்தார்கள்.

அங்கே அப்போது பெரும் தண்ணீர்ப்பஞ்சம். நள்ளிரவில் சைரன் ஒலித்துக்கொண்டு தண்ணீர் லாரி வரும். நானும் அத்தையும் குடங்களில் பிடித்து வைத்துவிட்டு நனைந்த உடைகளை மாற்றிக்கொண்டு பின்னர் அதிகாலையில் உறங்கச் செல்வோம்.

அத்தை அப்போது ஏராளமான தெருநாய்களை  வளர்க்க துவங்கி இருந்தார்கள்.  மாமாவுக்கு நாய்கள் என்றால் பெரும் ஒவ்வாமை இருந்தது. அத்தை வளர்த்தவற்றில் பல நாய்களுக்கு சொறி நோய் இருந்தது. அடிக்கடி கால்நடை மருத்துவர் வீட்டுக்கு வருவதும் அத்தை நாய்களுக்கு மருந்து கொடுப்பதுமாக வீடு வேறு ஒரு  வடிவம் கொண்டு இருந்தது . எதன் பிழையீடாக அதைச்செய்தார் என்று அத்தைக்கு மட்டும்தான் தெரியும்.

30-கும் மேற்பட்ட நாய்கள் வீடெங்கும் திரிந்த அந்த வீட்டில்   மாமா ஒரு அறைக்குள் முடங்கிக்கொண்டோ அல்லது வெளியெ சென்று விட்டு  உணவு நேரத்துக்கு  மட்டும் வீடு  வருவதையோ  வழக்கமாக கொண்டிருந்தார்.மாமாவும் அத்தையும் சரியாகப் பேசிக்கொள்வதில்லை என்பதையும் கவனித்தேன்.மாமா சைவ உணவும் விரும்பிச்சாப்பிட்டார்.   கொங்கு சமையலை நான் செய்து கொடுத்த ஒரு நாளில் பாசிப்பயறு கடைசலை நெய் விட்டு ருசித்துச்சாப்பிட்ட மாமா அதன் பெயரென்ன என்னவென்று சில முறை என்னிடம் கேட்டுக்கொண்டார். மனதாரா பாராட்டவும் செய்தார்.

வெறும் நெற்றியுடன் பள்ளிக்குச் சென்று விட்டு வீடு வந்ததும் முகம் கழுவி பெரிதாக வட்டக் குங்குமமிட்டு கொண்டிருந்த அத்தை, பாவனைகளும் முகமூடிகளும் போதுமென்று முடிவு செய்து, வீட்டில் சிறு பூஜை அறையில்  மாலையில் ஸ்வாமிக்கு விளக்கேற்றி பூஜை செய்தார். எப்போதும் நன்றாக நெற்றிக்கு  பெரிதாக சிவப்புக்குங்குமத்தில் பொட்டுவைத்துக்கொண்டார். 

மாமா மறைந்த பின்னர் அத்தையின் அண்ணன் குடும்பத்தினர் அத்தையுடன் வந்து இருந்தார்கள்.

பொள்ளாச்சியிலும் வேட்டைக்காரன் புதூரிலும் புடவையை  மடிப்பெடுக்காமல் ஒற்றையாய் தலைப்புப்போட்டுகொண்டு, குளிர் கண்ணாடியும் அணிந்துகொண்டிருக்கும் அத்தையை  எல்லோருமே கதாநாயகியை போல்தான் பார்த்தோம்.கணீரென்ற குரல் அத்தைக்கு,

அந்த அத்தை  இனி எங்களுக்கு இல்லை அத்தையை கடைசியாக 2009-ல் என்  புதுவீட்டுக் கிரகப்பிரவேசத்தில் பார்த்தது, பின்னர் பார்க்க்க கொடுத்து வைக்கவில்லை. நல்லவேளையாக அத்தையின் அந்தத் தோற்றம் மனதில் இருந்து குலைந்துபோகுமாறு நடுக்க நோய் வந்த பிறகு நான் பார்க்கவில்லை. கல்லூரியில் தேசிய தர அந்தஸ்திற்கு குழு வரவிருப்பதால் கடைசியாய் அத்தையின் முகம் பார்க்கக்கூட விடுப்பு எடுக்க முடியவில்லை. 

 சென்னையில் அன்று மாலை 3 மணிக்கு மின்மயானத்தில் அத்தை எரிந்து சாம்பலானார்கள்.   அத்தைக்கு பூரி  சாப்பிடப் பிடிக்கும் பூரி கொஞ்சம் முறுகலாக இருந்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.இனி எப்போது பூரி செய்தாலும் அத்தையின் நினைவில்லாமல் சாப்பிட முடியாது. அன்று மாலை வீட்டில் கூடுதலாக விளக்கேற்றினேன். 

சந்திக்கையிலெல்லாம் இறுகக் கட்டிக்கொள்ளும், எப்போது நான்  வந்தாலும் திரட்டுப்பால் செய்யும், அலட்சியமாக இருசக்கரவாகனம் இயக்கும் ஊட்டிஅத்தைக்கு என் அன்பும் கட்டிமுத்தமும்.

நிறைவு கொள்ளுங்கள் அத்தை.