ஆயுத பூஜை விடுமுறையில் சென்னை சென்றிருந்தேன். முன்பெல்லாம் வெளியூர்ப் பிரயாணங்கள் அதுவும் தனியே பிரயாணம் செய்வது என்பது அரிதிலும் அரிதாக இருந்தது. சென்றதேயில்லை எனலாம். கோவிட் பெருந்தொற்றின் ஒரு சில நன்மைகளில் ஒன்று என் இந்த ஆளுமை மாற்றம். முட்டுச்சந்துகள் திகைக்கவைத்தாலும் திரும்பிப்பார்க்க வைத்துவிடுகின்றன.
பல காலத்துக்குப்பிறகு கழுத்திலிருந்த கைகளை அகற்றிவிட்டு சுதந்திரமாக மூச்சுவிடுகிறேன். எனவே முன்பு கனவாக இருந்த சென்னை உள்ளிட்ட பலபிரயாணங்கள் இப்போது சர்வசாதாரணமாகி விட்டிருக்கின்றன.
மகன்களில் ஒருவனாகி விட்டிருக்கிற தீபக்கின் பெற்றோர்களும் சென்னை வரவிருந்ததால் தோழி வெண்ணிலாவின் வீட்டில் பெரிய கூடுகையொன்று ஏற்பாடாகி இருந்தது. ரயிலடிக்கே இரண்டு கார்களில் வந்து என்னை அழைத்துக்கொண்டார்கள். மறு நாளிலிருந்தே வந்தவாசியில் வெண்ணிலா வீடு, தோட்டம், அங்கொரு நண்பரின் பண்ணைவீட்டில் தாமசம் என்று உற்சாகமாகப் பயணித்தோம்.
2ம் நாள் கானாத்தூரில் இருந்த திரு ராஜேந்திரன் அவர்களுக்கு சொந்தமான கடற்கரை விடுதியில் தங்கல் என்று ஏற்பாடாகி இருந்தது.
கானாத்தூரை அடைகையில் பின் மாலையாகி விட்டிருந்தது. கடைவீதிகளில் நம் ஊர் பஜ்ஜிபோண்டாக்கடைகளைப் போலச் செக்கச்செவேலென்று மீன் வறுவல், பெரிய பெரிய டேக்ஸாக்களில் எண்ணெய் மிதக்கக் கொதிக்கும் மீன்குழம்பும் அருகில் அலுமினிய இட்லிக்குண்டான்களில் ஆவிபறக்கும் இட்லிகளும் தள்ளுவண்டிக்கடைகளில் விற்கப்பட்டது.
அந்தப்பண்ணை வீட்டை அடைகையில் கையெட்டும் தூரத்தில் இருந்த கடல் பெரும் திகைப்பை உண்டாக்கியது. வீட்டின் முகப்பிலிருந்து பார்க்கையில் மாபெரும் கடல் தொட்டுவிடலாம் என்னும் அண்மையில் இருந்தது பெரும் அதிசயமாக இருந்தது. அழகிய பெரும் விடுதி அது. அன்று வேறு எந்த விருந்தினர்களும் இல்லாததால் எல்லா அறைகளிலும் நாங்கள் விருப்பம்போலத் தங்கிக்கொண்டோம்.
மொட்டைமாடியிலிருந்து அருகிலிருந்த பல கரையோர விடுதிகளையும் வெள்ளியாய் மினுங்கும் விளிம்புகளுடன் அலைகள் ஓயாமல் கரைமோதிக் கொண்டிருப்பதையும் நிலவொளியில் பார்த்துக்கொண்டிருந்தோம்.
அடுத்திருந்த மாபெரும் கடற்கரை வீடு ஒரு பெரும் அரசியல்வாதியின், அரசியல்வாதி மகனுடையது. பகல்போல வெளிச்சம் அளித்த பலநூறு விளக்குகளும், காவலர்களுமாகத் திரைப்படக்காட்சியைப் போலிருந்தது அதைப்பார்க்கையில்.
இரவு நெடுநேரம் வரை விடுதி முகப்பிலிருந்த நீள் செவ்வக நீச்சல்குளத்தில் விளையாடிக் களைத்து இரவுணவுண்டு உறங்கச் சென்றோம். அடுத்தநாள் காலையில் கதிரெழுகையைக்காண கடற்கரைக்குச் சென்றுவிட்டோம். ஆனால் கருமுகில்கள் வானை மூடி இருந்ததால் கதிரெழுகையை காணமுடியவில்லை. சுத்தமான கடற்கரையாக குப்பை இல்லாமலிருந்தது மகிழ்வித்தது என்றாலும் ஒன்றிரண்டு சர்காஸம் கடற்பாசிகளைத்தவிர ஏதுமில்லாமல் இருந்தது எனக்கு ஏமாற்றமளித்தது. நாய்கள் பல அங்கே உலாவிக்கொண்டிருந்தன. பிரதேசத்துக்குப்புதிதாக இருந்த எங்களைக்கவனமாக வேவு பார்த்துக் கொண்டிருந்தன அவற்றில் பெரிய நாய்கள். இளஞ்சிவப்புக்கிண்ணங்களாக பீச் மார்னிங் குளோரி எனப்படும் அடும்புக்கொடிகளின் மலர்கள் மணலெங்கும் தெரிந்தன.
தூரத்தில் இரவே கடலுக்குச்சென்ற படகுகள் நிழலுருவாகத்தெரிந்தன. ஒரு சிலவற்றில் தெரிந்த விளக்குகளும் மெல்ல அணைந்தன. கடலில் சிப்பிகளை சங்குகளைச் சேகரித்தபடி சற்றுத்தொலைவு வரை நடந்தோம். ஒரே ஒரு நட்சத்திர மீனின் உடல் கிடைத்தது.
பெண்கள் உள்ளிட்ட பலர் கரையின் உயரமான பகுதிகளில் கூட்டமாகக் காத்திருப்பதை பிறகுதான் கவனித்தேன்.
படகுகள் கரைதிரும்பக் காத்திருக்கிறார்கள் என்பதை யூகித்தேன்.கடற்கரை வாழ்வென்பதன் அறிமுகமே எனக்கதுவரை இல்லை எனவே ஆர்வமாகப் படகுகளுக்காக நானும் காத்திருந்தேன். மணற்பரப்பெங்கும் துளித்துளியாய் குஞ்சு நண்டுகள் அலைந்தன.
முதலில் ஒரு நடுத்தர நீளமுள்ள துடுப்பிடும் படகு வந்தது. இருவர் மட்டும் இருந்த அந்தப் படகின் மத்தியில் இரண்டு தலையணை அளவிற்கான சிறு நீல வலைப்பொதி இருந்தது. வேகமாக வந்து கரையின் பாதியில் மணலில் செருகி நிறுத்தப்பட்டது படகு. தொடர்ந்து அதே அளவிலும் மேலும் சிறியபடகுகளும் வந்தன.பெரும்பாலும் ஒருவர் அல்லது இருவரே இருந்தார்கள். ஒரு சில படகுகளை, படகிலிருந்தவர்கள் வீசிய கயிற்றைப் பிடித்திழுத்து கரையில் நிறுத்த நாங்களும் உற்சாகமாக உதவினோம்.
சுமார் 1 மணி நேரத்துக்குப் பிறகு பின்பகுதியில் கனத்த சங்கிலியில் பெரிய கொக்கி இணைக்கப்பட்ட ஒரு ட்ராக்டர் வந்து எல்லாப்படகுகளையும் கரையின் ஓரமாக ஒழுங்காக இழுத்து நிறுத்தியது, அதற்குக் கட்டணமாக ஒரு படகுக்கு 100 ரூபாய் வீதம் வசூலிக்கப்பட்டது.அந்தந்த நிலப்பரப்புகளில், அவற்றிற்கு ஏற்பப் பிழைக்கும் வழிகளும் உருவாகின்றன. நிறுத்தப்பட்டிருந்த ஒரு படகின் பெயர் தருண் என்றிருந்தது.
ஒரு மீன்பிடி படகின் அருகில் சென்று அவர் படகிலிருந்த பொன்வண்ணம் பூசியதுபோல் இரண்டு உள்ளங்கை அகலமாயிருந்த மஞ்சப்பாறை மீன்களில்.சிலவற்றை கேட்டுவாங்கி கைகளில் வைத்துப் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். அவர் என்னை விசித்திரமாகப் பார்த்து யார், எந்த ஊர் என்றேல்லாம் விசாரித்துக் கொண்டார்.
அவர் வரும் வழியிலேயே வலையைப் பிரித்து விட்டிருந்தார். 4 கிலோ அளவுக்கு மஞ்சப்பாறையும் 3 கிலோ வஞ்சிரமீன்களுமே கிடைத்திருந்தது. சந்தையில் ஐந்தாயிரம் கிடைக்கலாம் அன்று என்றார் அவர். இரவு மூன்று மணிக்குப் போய்விட்டு அதிகாலை திரும்பும் படகுகள் அவையெல்லாம் என்பதையும் அவரிடமிருந்து அறிந்துகொண்டேன். அன்று என்ன, எத்தனை, எங்கு, எப்படி கிடைக்கும் என்ற எந்த அறிதலுமே இல்லாமல் அன்றாடம் கடலுக்குள் மனிதர்களை வலைவிரித்திழுக்கும் கடலைக்காட்டிலும் பெரியதோர் சூதுக்களம் இருக்கிறதா என்ன?
அதிகாலை மூன்று மணிக்கு நாளைத் துவங்குவதென்னும் ஒரு வாழ்க்கையை, அதுவும் கனத்த இருட்டில், எல்லையின்றி பரந்துவிரிந்து, பலத்த அலைகள் எழும்பிக்கொண்டிருக்கும், பெரிதாக ஓசையிடும் கடலுக்குள் செல்லும் வாழ்க்கையப் பிரமித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
மற்றொரு சிறு படகில் தன்னந்தனியே ஒருவர் கரை திரும்பினார். அவரது படகை அனைவருமாக இழுத்துக் கரையேற்றினோம். படகில் வலைமூட்டை கொஞ்சம் பெரிதாக இருந்தது. அவர் வலையைப்பிரித்துக் கரையில் கொட்டினார். துள்ளத்துடிக்க மத்தி, அயிலை, செந்நண்டுகளும் மேலும் சிறு பூச்சிகளும் விழுந்தன. கூடவே பிளாஸ்டிக் கழிவுகளும் நிறைய இருந்தன. அவரருகிலேயே நின்றுகொண்டேன். அவரிடமிருந்துதான் அன்று கடலில் என்ன மீன் எந்தப்பகுதியில் எந்நேரம் கிடைக்கும் எனத் தெரிந்து மீனின் அளவுக்கேற்ப வலைகள் எடுத்துச்செல்லப்படும் என்பதைத் தெரிந்துகொண்டேன்.
அதுவரை ஒரே மீன்வலையில் கிடைக்கும் எல்லா மீன்களையும் பிடித்து வருவார்கள் என்றே நம்பி இருந்தேன். அன்று அவர் எடுத்துச் சென்றது மத்தி போன்ற சிறு மீன்கள் மாட்டும் வலை. அன்று மீன்கள் அவ்வளவாகக் கிடைக்காத நாள் என்றார்.
மீன்குவியலிலிருந்து சிறு தேள் போன்ற ஒரு பூச்சியை எடுத்துத் தூரப்போட்டார், மணற் பரப்பில் சிறிதுநேரம் துடித்த பின் அது அடங்கியது. சாவகாசமாக மணலில் அமர்ந்து வலையில் சிக்கிக்கொண்டு வலையை இறுக்க கவ்விக்கொண்டிருந்த நண்டுகளைப் பிரிக்கும் வேலையில் இறங்கினார். மீன்கள் சமாதானமாக வலைக்குள் மாட்டியதும் உயிரைவிடும் என்றும் நண்டுகள் தான் வலையைச் சேதப்படுத்திச் செலவு உண்டாக்கும் என்றவர், உயிர்பயத்திலோ என்னவோ வலையை மிக இறுக்கப்பிடித்தபடி உயிருடன் இருந்த குஞ்சு நண்டொன்றின் உடலை இரண்டாகப்பிய்த்து வலையிலிருந்து வெளியே எடுத்தார். அதன் உடல் துண்டுகள் தனித்தனியே மணலில் கிடந்து துடித்து, கால்கள் காற்றைப்பற்றிக்கொள்ள எத்தனித்தன. அவசரமாகக் கண்களை விலக்கிக்கொண்டேன்.
நல்ல பதமான கத்திகொண்டு செதுக்கியது போல ஒரு மீன் சீவல் குவியலுக்குள் கிடந்தது அது என்ன என்று கேட்டேன்.அது நாக்கு மீன் என்றார். ஆம், நீளமான நாக்கைப்போலவே இருந்த அதன் உடலின் மத்தியில் நடுமுள் அப்படியே கண்ணாடி போல வெளியே தெரிந்தது. விசித்திரமாக சப்பைத் தலையின் நடுவில் இரு கருப்புப்பொட்டுக்களாகக் கண்கள் இருந்தன.
கையில் எடுத்துப்பார்த்து போட்டோ எடுத்துக்கொண்டிருக்கையில் அந்தமீன் ஒருமுறை துடித்ததும் அலறிக்கொண்டு கீழே போட்டேன்.
அவர் என்னைப் புன்னகையுடன் பார்த்து “இன்னும் சாவலைம்மா நேரமாகும்“ என்றார். அதன் பிறகு மீன்களை கையில் எடுக்கவே இல்லை. நெஞ்சு பதறியது.
இறுதியாக 8 பேருடன் ஒரு இயந்திரப்படகு வந்தது. விசையுடன் வந்து அதுவே கரையேறி அமைதியாக நின்றது. வாஷிங் மெஷின் அளவில் ஒரு குளிர்ப்பெட்டி இருந்தது அதில், அவர்கள் முந்தின நாள் கடலுக்குள்சென்று, அன்று காலை கரைக்குத் திரும்புகிறார்கள். அந்தப்படகைச்சுற்றி உடனே சிறுகூட்டம் கூடி, பல அளவுகளில் மீன்கள் வெளியே எடுக்கப்பட்டு சுடச்சுட விலைபேசப்பட்டது.
படகிலிருந்து இறங்கியவர்களில் இளைஞனாயிருந்தவன் பால்காரர்களின் அலுமினியத் தூக்குப்போசி போலிருந்த ஒன்றை எடுத்து, கழுத்துப்பகுதியில் ஆழப்புதைந்திருந்த அதன் மூடியை கழற்றினான். நான் அதற்குள் குடிநீர் இருக்குமென யூகித்தேன் ஆனால் உள்ளிருந்த பல செல்போன்களில் அவனுடயதைத்தனியே எடுத்து உயிர்ப்பித்தான். நீர் புகாமலிருக்க செய்யப்பட்ட ஏற்பாடு போலிருக்கிறது.
மீன்கள் வாங்கப்பட்டு கரைமேட்டில் இருந்த மீன் சந்தை என்னும் ஒரு குறுகிய சாலையின் இருபக்கங்களிலும் சாக்குகளில் பரப்பி வைக்கப்பட்டு விற்பனையாகின. மேகம் விலகி, கதிரெழுந்து காலை சூடாகத்தொடங்கி இருந்தது.
என்ன ஒரு வாழ்க்கை இவர்களுடையது என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டே அறைக்குத்திரும்பினேன். மாடிப்படிகள், அறையின் தரையெங்கும் மணல்தடங்கள் தொடர்ந்து வந்தன.
என்னிடம் ஒரு பட்டியல் இருக்கிறது அடுத்த பிறவியில் என்னவாக விரும்புகிறாய் என்று ஒரு வேளை கேட்கப்படுகையில் அப்போது அவசரமாக யோசித்து எதோ ஒன்றை சொல்லி விடக்கூடதென்று முன்பே யோசித்து பிடித்தமானவற்றை எழுதி வைத்திருக்கிறேன்.
30க்கும் மேற்பட்ட விருப்பச்சாத்தியங்கள் இருக்கும் அதில் முதலிடத்தில் இருப்பது ஒரு மலை உச்சியில் தனித்திருந்து ஊதாவான ஊதாவாய் பூத்துக்குலுங்கும் ஒரு ஜகரண்டா மரம், தொடர்ந்து கல்நகைகளை அணிந்துகொண்டு, விதையோ தேனோ சேகரிக்கப்போயிருக்கும் கணவனுக்காக குடிசையில் காத்துக்கொண்டிருகும் பழங்குடியினப்பெண் இருக்கிறாள், சமீபத்தில் தேங்காய் எண்ணெய் ஆட்டப்போனபோது, பழைய செக்கொன்றில் பொறுமையாக ஒருவருகொருவர் உதவிக்கொண்டு எண்ணெய் எடுத்துக்கொடுத்த முதிய தம்பதியினரில் ஒருவராக வேண்டும் என்பதை பட்டியலில் இணைத்துக்கொண்டிருந்தேன்,
ஒருமுறை ஆனைகட்டி சென்றபோது மலைப்பாதையில் இருந்த சாந்தி மெஸ்ஸில் சாப்பிட்டேன். பழங்காலத்து பளபளக்கும் பெஞ்சுகளில் அமர்ந்து விறகடுப்பில் புளித்த மாவு வேகும் மணத்தை அனுபவித்துக்கொண்டு உள்ளிருந்து கேட்ட `என் வானிலே` போன்ற அருமையான பாடல்களை கேட்டுக் கொண்டிருக்கையில் அடுத்த ஜென்மத்தில். அப்படியொரு மலைப்பாதைக்கடையில் இருந்து எப்போதோ வாகனங்களில் வருபவர்களுக்குத் தோசை சுட்டுக்கொடுத்து வாழவேண்டுமென்னும் விருப்பதை பட்டியலில் இணைத்தேன்.
எத்தனை முயன்றும் தனந்தனியே கடலுக்குள் துடுப்பிட்டுச்செல்லும் மீனவனாக என்னை கற்பனை செய்துகொள்ளவே முடியவில்லை. எனவே இப்போது இறுதியாக பட்டியலில் இணைத்தது ஒரு மீனவப்பெண் வாழ்க்கையை. கருக்கிருட்டில் கடலுக்கு சென்று திரும்பும் மீனவனுக்காக, கரையில் விளையாடும் பிள்ளைகளையும், வெயிலில் காயும் மீன்களையும் பார்த்துக்கொண்டு, சந்தையில் எனக்கான இடத்துக்காகச் சண்டைபிடிக்கும், கழுத்தில் சங்குமாலையணிந்து வலையின் சிடுக்கு நீக்கிக்கொண்டிருக்கும், உடலெங்கும் மீன்வாடையடிக்கும் கரையில் காத்திருக்கும், ஒருத்தியாக.