டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழின் சென்னை பதிப்பில் பிப்ரவரி 22, அன்று இந்தோனேஷியாவை சேர்ந்த ஒரு விமானப்பயணி யிடம் இருந்து 2.7 கிலோ கொகெய்ன் பறிமுதல் செய்யப்பட்ட செய்தி வந்திருந்தது. கொகெய்னின் சந்தை மதிப்பு கிலோவுக்கு 10 கோடி என்பதால் பறிமுதல் செய்யப்பட்ட கொகெய்ன் மதிப்பு சுமார் 27 கோடி. இதுவே சென்னை விமான நிலையத்தின் இந்த 2024ம் வருடத்தின் முதல் போதைப்பொருள் பறிமுதல்.
உலகெங்கிலும் கொகெய்ன் பயன்பாட்டிற்கும் கடத்தலுக்கும் எதிரான சட்டங்கள் மிக இறுக்கமாகவே இருப்பினும் கொகெய்ன் கடத்தலும் தொடர்ந்து பல வழிகளில் நடந்துகொண்டேதான் இருக்கிறது
ஐக்கியநாடுகளின் போதைப்பொருள் மற்றும் குற்றங்களுக்கான அமைப்பு (UNODC–United Nations Office on Drugs and Crime) தொடர்ந்து கண்காணித்துக்கொண்டே இருந்தாலும் சர்வதேச அளவில் போதைத்தாவரங்கள் வளர்ககப்படுவது, போதைப்பொருள் தயாரிப்பு, விநியோகம், கள்ளச்சந்தை வணிகம் மற்றும் பயன்பாடு ஆகியவை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது,
சர்வதேச கொகெய்ன் பறிமுதல்களில் 72% தென் மற்றும் மத்திய அமெரிக்காவில், மத்திய மற்றும் மேற்கு ஐரோப்பாவில் 15% மற்றும் வட அமெரிக்காவில் 12 % நடக்கின்றது.
கொகெய்ன் அளிக்கும் கொக்கோ புதர் வளர்ப்பு கொலம்பியா (61%) பெரு (26%) மற்றும் பொலிவியாவில் (13%) மையம் கொண்டிருக்கிறது.
சர்வதேச போதைப்பொருள் பறிமுதல் புள்ளிவிவரங்கள் 2019 லிருந்து ஐரோப்பிய கொகெய்ன் கள்ளச்சந்தை வணிகத்தின் முக்கியமான் விநியோக மையமாக ஆப்பிரிக்கா செயல்பட தொடங்கி இருப்பதை காட்டுகிறது
2021ல் ஆப்பிரிக்காவில் பறிமுதல் செய்யப்பட்ட கொகெய்ன் அளவு இது வரையில் இல்லாத அளவில் உச்சத்தை தொட்டிருப்பது சர்வதேச கொகெய்ன் பயன்பாடு மற்றும் கொகெய்ன் வளர்ப்பு உச்சத்தில் இருப்பதை காட்டுகிறது.
கோவிட் பெருந்தொற்றின் போது போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருந்ததால் கொரியர் மூலம் அனுப்புவது போன்ற பல புதிய வழிகள் கொகெய்ன் கடத்தலுக்கு கண்டுபிடிக்கப்பட்டன. அந்த புதிய வழிகள் கோவிட் தொற்றுக்காலத்துக்கு பிறகு அபரிமிதமாக வளர்ந்திருக்கின்றன. மீன்பிடி படகுகள், சொகுசுகப்பல்களோடு நீர்மூழ்கி கப்பல்களிலும் கொகெய்ன் கடத்தல் இப்போது நடைபெறுகிறது.
கடல்வழி கொகெய்ன் பரிமாற்றம் தற்போது மிக அதிகரித்திருக்கிறது துறைமுகங்களுக்கு அப்பால், துறைமுகங்களுக்கு வரும் வழியில், துறைமுகங்களில் ஏன் நடுக்கடலில் கூட நீர்மூழ்கி கப்பல்களின் உதவியுடன் கொகெய்ன் பரிமாற்றம் நடக்கிறது. இதை கப்பல் உரிமையாளர்கள் பெரும்பாலும் அறிந்திருப்பதில்லை.
சுங்க அதிகாரிகளிலிருந்து, சரக்கு வாகன ஓட்டுநர்கள், கடைமட்ட துறைமுக தொழிலாளிகள் வரை இதில் சட்டவிரோதமாக ஈடுபட்டிருக்கிறார்கள். தொழில்நுட்பத்தின் உதவியுடன் கொகெய்ன் கடத்தல் நடப்பதால் அவற்றை கண்டுபிடிப்பது சவாலாகவே இருக்கிறது.
ஓபியத்துக்கு அடுத்தபடியாக சர்வதேச அளவில் பெரும் பிரச்சனையாக இருக்கும் போதைப்பொருள் கொகெய்ன் தான்.
பல ஆண்டுகளாகவே உலகமெங்கிலும் முக்கியமான போதைப்பொருளாக பரவலான உபயோகத்தில் இருக்கும் கொகெய்ன் வெள்ளை நிற மிருதுவான தூளாகவும், கிரேக் (crack) என்னும் பொதுப்பெயரில் பலவிதமான கொகெய்ன் சேர்க்கப்பட்ட பொருட்களாகவும் சந்தைப்படுத்தப்படுகிறது. கொகெய்ன் நீரில் கரையும் , கிரேக் நீரில் கரையாது .
துகளாக கிடைக்கும் கொகெய்ன் அதிக போதையளிப்பதால் அதன் தேவையும் விலையும் மிக அதிகம் எனவே விற்பனை செய்பவர்களுக்கு லாபமும் அதிகம். கிரேக் போதையும் விலையும் குறைவு என்பதால் அது பெரும்பாலும் ஸ்ட்ரீட் கொகெய்ன் என்னும் குறைந்த அளவிலும் பெயரிலும் விற்பனையாகிறது,
பறிமுதல் செய்யப்பட்ட கொகெய்ன் அளவு அதிகரிப்பது சந்தைக்கு சென்று சேரும் கொகெய்ன் அளவை குறைக்கிறது என்றாலும் கொகெய்ன் உற்பத்தியை இது எந்த விதத்திலும் பாதிக்கவில்லை
6.2 மில்லியன் வருடாந்தர பயனாளிகளுடன் பிராந்திய அளவிலான மாபெரும் கொகெய்ன் சந்தை வடஅமெரிக்காவில் இருக்கிறது. கொகெய்ன் கருப்பு சந்தை, ஊழல், சுரண்டல் மற்றும் குற்றங்களையும் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டிருக்கிறது. கொகெய்ன் பயன்பாடு தீவிரமான உடல்கோளாறுகளையும் இறப்பையும் உண்டாக்கிக் கொண்டு இருந்தாலும் அதன் பயன்பாடும் அதிகரித்திருக்கிறது.
கொக்கோ புதரின் இலைகளிலிருந்து கிடைக்கும் கொகெயினின் மருத்துவப்பயன்பாடு நெடிய வரலாறு கொண்டது, மருத்துவ பயன்பாட்டுக்கு பின்னரே அது போதைப்பொருளானது.
இத்தாலிய கடலோடியான அமெரிகோ வெஸ்புச்சி (1451-1512) தனது கடற்பயண குறிப்புக்களில் முதன்முதலில் கொகெய்ன் குறித்து பதிவு செய்திருந்தார். இவரது பெயரிலிருந்துதான் அமெரிக்கா என்னும் பதம் உருவானது.
தொடர்ந்த 300 ஆண்டுகளுக்கு கொகெய்ன் மருந்தாகவே உபயோகிக்க பட்டுக்கொண்டிருந்தது.
1860-ல் ஆல்பர்ட் நிமேன் (Albert Niemann) கொக்கோ இலைகளிலிருந்து கொகெய்னை பிரித்தெடுத்தார்.
இவரது மாணவர் வில்ஹெம் Wilhelm Lossen 1865ல் கொகெயினின் வேதியியல் வடிவதை கண்டறிந்தார்.
வில்ஹெமும் நீமேனும் இணைந்து விலங்குகளில் கொகெய்னின் விளைவுகளை ஆய்வுகள் செய்தனர்.
பெருவியன் மருத்துவரான மோரினோ 1880ல் அவரது கொகெய்ன் குறித்த ஆய்வுகளின் முடிவுகளை வெளியிட்டு மனிதர்களின் கொகெய்ன் பயன்பாடு மற்றும் விளைவுகள் குறித்த கவலையையும் வெளிப்படுத்தி இருந்தார். அந்த அறிக்கையின் இறுதியில் கொகெய்னை அறுவை சிகிச்சைகளில் மயக்கமூட்டியாக பயன்படுத்தலாம் என்னும் பரிந்துரையையும் அவர் பதிவு செய்திருந்தார்.
ஆஸ்திரிய உளவியலாளர் சிக்மண்ட் ஃப்ராய்ட் தனது மன அழுத்தத்தை போக்க கொகெய்ன் பயன்படுத்தி அது வெற்றிகரமானதால், தனது சொந்த அனுபவத்தின் பேரில் கொகெய்னை மனஅழுத்தம், பாலியல் குறைபாடுகள் ஆகிய சிகிச்சைகளுக்கு பயன்படுத்தலாம் என்று அறிவித்தார்.
1884 ல் சிக்மண்ட் ஃப்ராய்ட் ’’கொக்கோவை பற்றி’’ (Über Coca) என்னும் ஒரு ஆய்வுக்கட்டுரையை பிரசுரித்தார். அதில் கொகெய்னின் மருத்துவ உபயோகங்கள் விவரிக்கப்பட்டிருந்தது. அவர் பலருக்கு கொகெய்னை பரிந்துரைத்ததுடன் கொகெய்ன் அதிகமானால் ஆபத்தொன்றுமில்லை என்றும் சொல்லிகொண்டிருந்தார். ஆனால் அவர் பரிந்துரையின்படி மிக அதிக கொகெய்ன் எடுத்துகொண்ட அவரது நோயாளி ஒருவர் மரணம் அடைந்தார்.
1884, ல் கண் மருத்துவரான கார்ல் கொல்லர் (Carl Koller) கண் அறுவை சிகிச்சைகளில் சொட்டுமருந்தாக கொகெய்னை அளித்தார். பின்னர் மருத்துவர்கள் உலகெங்கிலும் மயக்கமூட்டியாக கொகெய்னை பரவலாக உபயோகிக்க தலைப்பட்டனர்.
நரம்புகளின் செயல்பாட்டை தற்காலிகமாக நிறுத்திவைக்கும் கொகெய்ன் ஊசிகளும் பிற்பாடு கண்டறியப்பட்டன.
1896ல் கொக்கோ இலைச்சாறு கேச பராமரிப்பில் உதவுவதாக பல சுவரொட்டி விளம்பரங்கள் வந்தன.
மருத்துவ உபயோகங்களுக்கென மட்டும் பரவலாக அறியப்பட்டிருந்த கொகெய்னை 1863ல் இத்தாலிய வேதியியலாளர் ஏஞ்சலோ (Angelo Mariani) வைனில் கொக்கோ இலைச்சாறு கலந்த இனிப்பு பானத்தை Vin Mariani என்னும் பெயரில் அறிமுகம் செய்து பிரபலமாக்கினார். இதை அப்படியே கொக்கோ கோலாவில் கலந்து புதிய பானமாக ஜான் பெம்பர்ட்டன் (John Pemberton) 1886ல் அறிமுகப்படுத்தினார்.
கொகெய்ன் இலைச்சாறும் கோலா கொட்டையின் சாறும் கலந்த கொக்கோ கோலா, கோக், கஃபே கோலா, கோஸ் கோலா( Koke, Cafe-Cola, and Kos-Kola) என்னும் பெயர்களில் விரைவில் புகழ்பெற்றது. அப்போது மருத்துவக் காரணங்களுக்காக கொகெய்ன் தடையின்றி கிடைத்துக் கொண்டிருந்ததால் கொக்கோகோலாவில் அதை கலப்பது எளிதாக இருந்தது.
1850-லிருந்து 1900 வரையிலும் கொகெய்னும் ஓபியமும் கலந்த மந்திர மற்றும் மருத்துவ பானங்கள் சமுதாயத்தின் அனைத்து அடுக்கு மக்களாலும் பரவலாக உபயோகப்படுத்தப்பட்டன.
கொகெய்னின் புகழை பரப்பியவர்களில் தாமஸ் எடிசனும் நடிகை சாரவும் குறிப்பிடத்தக்கவர்கள்.( Sarah Bernhardt)
சினிமாத்துறையிலிருந்து வந்த கொகெய்னுக்கான பரிந்துரைகள் விரைவில் லட்சக்கணக்கானவர்களை சென்று சேர்ந்தது. கூடவே கொகெய்ன் பயன்பாட்டின் ஆபத்துகளும் வெளிப்படத்துவங்கின. 1903ல் பொதுமக்களின் அழுத்தம் மற்றும் எதிர்ப்பு காரணமாக கொக்கோகோலா நிறுவனம் கொக்கோகோலா பானத்திலிருந்து கொகெய்னை முற்றிலும் நீக்கியது.
1904 க்கு பிறகு புதிய கொகோ இலைகளுக்கு பதிலாக கொகெய்ன் எடுத்த பிறகு எஞ்சி இருக்கும் மிச்சங்கள் சேர்க்கப்பட்டது.1929 லிருந்து கொக்கெயின் இல்லாத இலைச்சாறு சேர்க்கப்படுகிறது.
ஆனால் கொகெய்னின் கிளர்ச்சியூட்டும் இயல்புகளுக்கு பழக்கப்பட்டுப்போன மக்கள் கொகெய்ன் துகளை மூக்கு வழியாக உறிஞ்சி போதையேற்றிக்கொள்வதை வழக்கமாக்கியிருந்தனர். 1905ல் இது மிக பிரபலமானது. அடுத்த ஐந்து வருடங்களில் மூக்குப்பகுதியின் சிதைவு பல மருத்துவமனைகளில் தொடர்ந்து கண்டறியப்பட்டது
1912-ல் மட்டும் 5000 கொகெய்ன் மரணங்களை அறிவித்த அமெரிக்க அரசு 1922-ல் கொகெய்னை முற்றாக தடை செய்தது.
இங்கிலாந்தின் கியூ தோட்டங்களிலிருந்து இலங்கைக்கு 1870-லும் இந்தியாவிற்கு 1883-லும் கொக்கோ பயிர் அறிமுகமானது
இந்தியாவில் கொக்கோ புதர்கள் மிக குறைவாக வளர்கின்றன. கொகெய்ன் பயன்பாட்டிற்கெதிரான சட்டங்கள் இந்தியாவிலும் மிக கடுமையாகவே இருக்கின்றது.
1970களில் கொகெய்ன் புகைத்தல் மீண்டும் புழக்கத்துக்கு வந்தது. உற்சாகம் அளிக்கும் கொகெய்னை இளைஞர்கள் பெருவாரியாக எடுத்துக்கொண்டார்கள். 1970-ல் கொலம்பிய போதைப்பொருள் வியாபாரிகள் அமெரிக்காவில் கொக்கெய்ன் கள்ளச்சந்தை வணிகத்திற்கான மாபெரும் வலையை உருவாக்கினார்கள்.
அமெரிக்க பல்கலைக்கழகங்களில் கொகெய்ன் உபயோகித்த இளைஞர்களின் எண்ணிக்கை 1970-லிருந்து 1980-க்குள் பத்து மடங்கு பெருகியது. பின்னர் செல்வந்தர்களுக்கான உயர்தர போதைப்பொருள் என்னும் இடத்திலிருந்து அடித்தட்டு மக்களுக்கானதாகவும் மாறி குற்றம், ஏழ்மை மற்றும் மரணத்துடன் மிக நெருங்கிய தொடர்பில் இருந்த கொகெய்ன் அமெரிக்காவின் மிக ஆபத்தான போதைப்பொருளாகி இருந்தது.
மத்திய நரம்பு மண்டலத்தை சடுதியில் சென்று சேரும் உணர்வுகளை விரைவில் தூண்டக்கூடிய, மிக பழமையான இயற்கையான மிக சக்திவாய்ந்த போதைப்பொருள் கொகெய்ன். கொகெய்னின் விளைவுகள் உடலில் 1 மணி நேரம் வரை இருக்கும்.
1990களில் கொலம்பிய கொகெய்ன் வியாபாரிகள் அமெரிக்கா ஆசியா மற்றும் ஐரோப்பாவிற்கு கடல்வழியே பெருமளவு கொகெய்னை சந்தைப் படுத்தத் துவங்கினார்கள். 2008ல் கொகெய்ன் உலகின் இரண்டாவது மிக அதிகமாக கடத்தப்படும் போதைப்பொருளாகி இருந்தது (மாரிவானாவுக்கு அடுத்து) இன்றைய தேதியில் கொலம்பியாவில் மட்டும் 300க்கும் மேற்பட்ட மாபெரும் கொகெய்ன் கள்ளச்சந்தை வணிக அமைப்புக்கள் மிகச் செயலாக இயங்கிக் கொண்டிருக்கின்றன.
வடக்கு சிலே பகுதியின் அகழ்வாய்வுகளில் கிடைத்த கிமு 1000-த்தை சேர்ந்த மம்மிகளின் உடலில் கொக்கோ பயன்பாட்டின் அடையாளங்கள் இருந்தன. இதுபோன்ற பல அகழ்வாய்வுகள் ஆண்டிஸ் பழங்குடியினரின் கொக்கோ பயன்பாடு சுமார் 3000 வருட வரலாற்றை கொண்டிருப்பதை காட்டுகிறது
கிருஸ்துவுக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே மலைஉச்சியில் வாழ்ந்த இன்கா பழங்குடியினர் அச்சூழலின் சுவாசசிக்கல்களுக்கு தங்களை பழக்கப்படுத்திக்கொள்ள லேசான இனிப்புச்சுவைகொண்ட கொக்கோ இலைகளை மெல்லும் வழக்கத்தை கொண்டிருந்தார்கள். கொக்கோ இலைகளை சுண்ணாம்புடன் சேர்த்து மெல்லும்போது அவர்களின் இதயம் வேகமாக துடித்தது சுவாசமும் விரைவானது
வாரி, பெருவிய மற்றும் பொலிவிய தொல்குடியினர் மதச்சடங்குகளின் போது மட்டும் கொக்கோ இலைகளை உபயோகித்தார்கள்.
பொலிவிய ஆண்டிஸ் பழங்குடியினரின் ஐமரா மொழியில் “Khoka” என்றால் மரம் என்று பொருள்.அதுவே இன்றைய நவீன கொக்கோவின் (Coca) வேர்ச்சொல்.
அப்பழங்குடியினர் இந்த இலைகளுக்கு மந்திர பண்புகள் இருப்பதாகவும் நம்பினர். மரத்திலிருந்து கீழே விழும் கொக்கோ இலைகளின் வேகம் அவை வீழும் இடங்கள் ஆகியவற்றைக்கொண்டு ஆவிகளின் நடமாட்டத்தையும் அவர்கள் கணித்தனர்.
ஆண்டஸ் மலைப்பகுதியின் கொக்கோ இலைகள் அமேஸான் பகுதியின் கனிகள் மற்றும் தோலாடைகளுக்கும், பசிபிக் பகுதியின் சிப்பிகள் மற்றும் மீன்களுக்கும் பண்டமாற்றாக அளிக்கப்பட்டபோது கொக்கோ இலைகளின் கிளர்ச்சியூட்டும் இயல்புகள் மேலும் பல இடங்களுக்கு பரவியது.
இன்கா பழங்குடியினர் கொக்கோவை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டிருக்கையில் 1532ல் ஸ்பானிஷ் படையெடுப்பு நடந்து. பின்பு கொக்கோ சாகுபடியும் இன்கா பழங்குடியினருக்கு தினக்கூலியுடன் கொக்கோ இலைகள் கொடுப்பதும் பரவலாகியது.
19-ம் நூற்றாண்டை சேர்ந்த மனிதவியலாளரும் நரம்பியல் நிபுணரும் மனிதகுலத்தின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும் உணவுப்பொருட்களை குறித்த ஆய்வில் இருந்தவருமான இத்தாலியை சேர்ந்த மண்டிகாஸா (Mantegazza) தென்னமரிக்க பழங்குடியினரின் கொக்கோ பயன்பாட்டை அவர்களுடனேயே பலவருடங்கள் தங்கி இருந்து ஆரய்ந்து தானுமதை உண்டு, பிரபலமான “On the hygienic and medicinal properties of coca and on nervous nourishment in general”என்னும் கட்டுரையை வெளியிட்டார்
அந்த கட்டுரையின் ஒரு பத்தியில் மண்டிகாஸா கொக்கோவின் அனுபவத்தை இப்படி சொல்லுகிறார்
“…God is unjust because he made man incapable of sustaining the effect of coca all life long. I would rather have a life span of ten years with coca than one of 10 000 000 000 000 000 000 000 centuries without coca.”
பொலிவியா, பெரு மற்றும் கொலம்பியாவில் கொக்கோ புதர்களிலிருந்து கொகெய்ன் அடர்காடுகளில் அமைக்கப்பட்டிருக்கும் ஆய்வகங்களில் பல வேதிமாற்றங்களுக்கு பின்னர் தயாராகிறது. அமெரிக்காவுக்கு மெக்ஸிகோ வழியே வரும் கொகெய்னில் 90% கொலம்பியாவிலிருந்துதான் வருகிறது.
கொகெய்னை அளிக்கும் இரு தாவரங்களில் முதன்மையானது Erythroxylum coca. இது எரித்ராக்ஸைலேசி குடும்பத்தை சேர்ந்தது. (மற்றொன்று Erythroxylum novogranatense). இது வடமேற்கு மற்றும் தென்னமரிக்காவை தாயகமாக கொண்டது. எரித்ராக்ஸைலான் பேரினத்தின் நான்கு சிற்றினங்கள் பல்வேறு ஆல்கலாய்டுகளுக்காக பயிரிடப்படுகின்றன அவற்றில் இவை இரண்டு மட்டும் கொகெய்ன் ஆல்கலாய்டுகளுக்காக வளர்க்கப்படுபவை.
அமெரிகோ (Amerigo Vespucci) 1499-ல் கொக்கோ புதரை விவரித்து தென்னமரிக்க பழங்குடியினர் மயக்கம் மற்றும் பசியை வெல்ல இதன் இலைகளை மெல்லுவதை அவரது கடற்பயணக்குறிப்பில் எழுதியிருந்ததே கொக்கோ செடியை குறித்த முதல் எழுத்து பூர்வ ஆதாரம்
2லிருந்து 3 மீ உயரம் வரை வளரும் கொக்கோ செடி அடர்ந்த புதர் வகை வளரியல்பை கொண்டது. நிமிர்ந்த தண்டுகளையும் நுனி குறுகிய பசிய முட்டை வடிவ மெல்லிய இலைகளையும் கொண்டிருக்கும். இலை நடுநரம்பின் இருபுறமும் சற்றே மேடிட்டிருக்கும் நரம்பமைப்பு கொக்கோ இலைகளுக்கான பிரத்யேக அடையாளம்.
சிறிய மஞ்சள் மலர்கள் குட்டையான காம்பு கொண்ட கொத்துக்களாக அமைந்திருக்கும். கனிகள் சிவப்பு நிறத்தில் இருக்கும்.அமிலத்தன்மை கொண்ட மண்ணில் இவை செழித்து வளரும்.
Erythroxylum பேரினத்தின் நூற்றுக்கணக்கான சிற்றினங்களில் Erythroxylum coca , Erythroxylum novogratense இரண்டில் மட்டுமே குறிப்பிடத்தக்க அளவில் கொகெய்ன் ஆல்கலாய்டு இருக்கிறது. இவற்றின் உலர் கொக்கோ இலைகளில் 2% கொகெய்ன் இருக்கும். மேலும் 23 சிற்றினங்களில் மிக மிக குறைவான அளவில் (0.001%.) கொகெய்ன் இருக்கிறது.
பலவகையான தாவரங்களில் இருக்கும் ஆல்கலாய்டுகளை நல்லதும் அல்லதுமாக பலவிதங்களில் மனிதகுலம் உபயோகிக்கின்றது. குருமிளகில் பைப்ரின், கோகோ கனிகளில் தியோபுரோமின், காப்பிக்கொட்டை மற்றும் தேயிலையில் கேஃபின், கசகசா கனியில் மார்பைன், புகையிலையில் நிக்கோட்டின் என பல ஆல்கலாய்டுகள் வணிகரீதியாக முக்கியமானவை இவற்றில் கொகெய்ன் உலகநாடுகளின் பெரும் சவாலாகிவிட்டிருக்கிறது.
1970ன் அமெரிக்க போதைப்பொருள் தடுப்புச்சட்டம் போதை உண்டாகும், அடிமைப்படுத்தும், மருந்துப் பொருளாகவும் பயன்படும் பொருட்களை ஐந்து வகையாக பிரித்து பட்டியலிட்டிருக்கிறது. அதில் பட்டியல் இரண்டில் (Schedule II) வரும் கொகெய்ன் அரிதாக மருத்துவ உபயோகங்கள் கொண்டிருக்கிறது.
கொகெய்னின் பிற புழங்கு பெயர்கள்
beam, big C, blow, Carrie Nation, coke, girl, her, lady, leaf, nose candy, snow, snowbirds, stardust, white (வெள்ளைப்பொடிக்கு மட்டும்), basa, crack, electric kool-aid, flake, rock (crack cocaine), banano, bazooka, and tio (கொகெய்ன் சேர்க்கப்பட்ட மாரிவானா சிகரெட்)
இந்தியா மற்றும் ஜாவாவிலும் கொக்கோ சாகுபடியாகிறது. ஓராண்டில் 4 அல்லது 5 முறை கொக்கோ புதரிலிருந்து இலைகளை அறுவடை செய்யலாம். இலைகள் உலர்த்தப்பட்டு பின்னரே ஆய்வகங்களுக்கு அனுப்பப்படுகிறது. கடல் மட்டத்திலிருந்து 1000லிருந்து 2000 மீ உயரத்தில் மட்டும் வளர்க்கப்பட்ட கொக்கோ புதர்கள் இப்போது காடுகளின் கீழ்ப்பகுதிகளிலும் வளர்க்கப்படுகிறது.
பொலிவியா மற்றும் பெருவிலிருந்து கொக்கோ வளர்ப்பை அழிக்க ராணுவம் மற்றும் காவல் துறையை ஈடுபடுத்தி அமெரிக்கா ஆண்டு தோறும் கோடிக்கணக்கில் செலவு செய்கிறது. கொக்கோ இலைகளை உண்ணும் பூச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன கொக்கோ நாற்றுகளில் நோய் உண்டாக்கும் கிருமிகளை குறித்த ஆய்வும் நடைபெறுகிறது.
கொலம்பிய கொக்கோ சாகுபடி ஆகும் பிரதேசங்களில் வான்வழியே பயிர்களை அழிக்கும் மருந்துகளை தெளிக்கும் நடவடிக்கையும் அம்மருந்துகள் பொதுமக்களின் நலனுக்கும் சூழலுக்கும் உருவாக்கும் கேடுகளை கருத்தில் கொண்டு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
எனினும் கொக்கோ சாகுபடியில் ஈடுபட்டிருக்கும் விவசாயிகளுக்கு அதைக்காட்டிலும் அல்லது அதே அளவுக்கு லாபம் அளிக்கும் மாற்றுப்பயிரொன்றை கண்டுபிடிக்கும் வரை இந்த சிக்கல் தீரது என்பதையும் அமெரிக்க அரசு உணர்ந்திருக்கிறது
அமெரிக்கா ஐரோப்பா மட்டுமல்ல பல உலகநாடுகள் கொகெய்னுக்கு எதிராக நடத்துவது வெறும் கடினமான சட்டபூர்வ நடவடிக்கை மட்டுமல்ல போதைபொருளுக்கெதிரான் போர்தான் அது
அதீத மற்றும் தொடர்ந்த கொகெய்ன் பயன்பாடு மூக்கில் ரத்தம் வடிதல், பசியின்மை, சிறுநீரக கோளாறு, வலிப்பு நோய், இதயக்கோளாறுகள் மற்றும் மரணத்தை உண்டாக்கும்.
இன்னும் அவ்வளவாக அறிமுகமாகியிருக்காத பிரதேசங்களிலும் தற்காலிக கிளர்ச்சியூட்டியான கொகெய்ன் பயன்பாடு இணைய உலகில் மும்முரமாக இயங்கும் இளைஞர்களுக்கு எளிதில் அறிமுகமாகும் ஆபத்து இருக்கிறது.
கொகெய்னுக்கெதிரான தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடையும் போது கொகெய்ன் கள்ளச்சந்தை வணிகமும் புதிய வழிகளையும், புதிய வடிவங்களையும் கண்டுகொள்கிறது
கொலம்பிய காடுகளிலிருந்து அமெரிக்க வீதிகளுக்கு வரும் கொகெய்ன் பயணத்தை, கொகெய்ன் சந்தை, கொகெய்ன் புழங்கும் ரகசிய உலகின் வாழ்வு மற்றும் மரணம், கொகெய்ன் கடத்தலுக்காக துறைமுகங்களை கைப்பற்ற நடக்கும் கொகெய்ன் போர்களை பேசும். 2020ல் வெளியான டோபி மியூஸின் முதல் நூலான ’கிலோ.(Kilo) கொகெய்ன் குறித்த நூல்களில் மிக முக்கியமானது.
பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளர், ஆவணப்பட இயக்குநர் மற்றும் தொலைக்காட்சி இயக்குநரான டோபி மியூஸ் ’’நாம் இப்போது கொகெய்னின் பொற்காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம்’’ என்று இந்த நூலில் குறிப்பிட்டிருப்பது மிகுந்த கவலையளிக்கிறது.
கொக்கோ புதர் சாகுபடி , கொகெய்ன் வேதிமாற்றம், கள்ளச்சந்தை வணிகம், போதைப்பொருளாக அதன் பயன்பாடு ஆகியவை மிக மிக நீண்ட சங்கிலித் தொடரானாலானவை. அதன் கண்ணிகள் ஒவ்வொன்றும் மிக முக்கியமானவை, மாபெரும் வலையொன்றினால் பிணைக்கப்பட்டவை.
மேலதிக தகவல்களுக்கு: