ஆஸ்திரேலியரான ஹாலண்ட்   பிரசவத்தில் மனைவி இறந்த பின் தாயை இழந்த தன் சிறு மகள் எலனுடன் தெற்கு வேல்ஸ் நகரில் ஒரு பெரும் பண்ணையை விலைக்கு வாங்கி குடிபெயர்ந்தார். ஹாலண்டின் இரு பெரும் சொத்துக்கள் அவரது பண்ணையின் நூற்றுக்கணக்கான யூகலிப்டஸ் மரங்களும் அவரின் பேரழகு மகள் எலனும் தான். பதின்ம  வயது எலனின் அழகு அந்த ஊர் இளைஞர்கள்  மத்தியில் பிரபலமாக இருந்தது. அவள் திருமண வயதை எட்டிய போது அந்த நாடே அவள் பேரழகை ஆராதித்தது. 

வெற்று நிலமாக இருந்த அப்பண்ணையில் ஹாலண்ட்  யூகலிப்டஸ் மரங்களை நடத்துவங்கினார். அம்மரங்களின் அழகும் கம்பீரமும், தைலமணமும் அவரை வசீகரித்ததில், யூகலிப்டஸ் மரங்களின் மீது அவருக்கிருந்த ஆசை பித்தாக மாறியது. தேடித்தேடி யூகலிப்டஸின் நூற்றுக்கணக்கான வகைகளை அங்கு வளர்க்க துவங்கினார்.அம்மரங்களுடன் எலனும் வளர்ந்தாள். 

எலனை மணமுடிக்க பலரும் முன்வந்தபோது ஹாலண்ட் தேவதைக் கதைகளில் வருவதுபோல ஒரு போட்டியை அறிவித்தார். அவரது பண்ணையில் இருக்கும் 200க்கும் மேற்பட்ட யூகலிப்டஸ் மரங்களை  சரியான பெயர்களுடன் இனங்காணும்  இளைஞனுக்கு எலன் மணமுடித்து தரப்படுவாள் என்னும் அப்போட்டி மிக விநோதமானது,  இருந்தும் எலனின் தூய அழகின் பொருட்டு நூற்றுக்கணக்கானவர்கள்  அதில் கலந்து கொண்டனர்.

எனினும் எவராலும்  அப்பெருங்காடென பரந்து விரிந்திருந்த பண்ணையின் அத்தனை  யூகலிப்டஸ் வகைகளையும் அடையாளம் காண முடியவில்லை. 

அந்த போட்டியில் விருப்பமில்லாமல் யூகலிப்டஸ் பெருங்காட்டிற்குள் தன்னந்தனிமையில் தன்னை ஒடுக்கிக்கொண்ட எலன், அக்காட்டில்  மர்மமும், வசீகரமும் கலந்த ஒரு இளைஞனை சந்திக்கிறாள் அவன் அவளுக்கு பல சுவாரஸ்யமான கதைகளை சொல்லுகிறான். அந்நிய தேசங்களிலும், பாலை நிலங்களிலும் மழைக்காடுகளிலும் நடக்கும் அக்கதைகளில் ஒரு தந்தையும் மகளும் இருந்தனர் அம்மகளின் ஒரு விசித்திரமான காதலும்  கதைகளில் இருந்தது.

தனது பெயரை கூட சொல்லாத அவனும் எலனும் விரைவில் காதல் வயப்படுகின்றனர். அதே சமயத்தில் பூமியின் அனைத்து தாவரங்களையும் அடையாளம் காணும் கோக் எனும் ஒரு இளைஞன்  ஹாலண்ட் சொல்லியபடியே பண்ணையின் அனைத்து யூகலிப்டஸ் மரங்களையும்  சரியான பெயர்களுடன் அடையாளம் காண்கிறான்.

எலன்  போட்டியில் வென்றவனையா அல்லது தன் மனம் கவர்ந்தவனையா, யாரை திருமணம் செய்துகொண்டாள்? 

இந்த நவீன தேவதைக் கதையின் பெயர் ’’யூகலிப்டஸ்’’. 1 ஏராளமான உயரிய இலக்கிய விருதுகளை பெற்ற இந்த நாவலை  ஆஸ்திரேலியரான முர்ரே பெயில் (Murray Bail) எழுதினார்.ஆஸ்திரேலிய நிலப்பரப்பின் செழுமையான விவரிப்பு, பெண்மையின் அழகு, ஆஸ்திரேலியாவின் அடையாளங்களில் ஒன்றான யூகலிப்டஸின் சிற்றினப் பெயர்களில் அமைந்திருக்கும் அத்தியாயங்கள், அபாரமான மொழிவளம் ஆகியவை கொண்ட  ’யூகலிப்டஸ்’  மிக அழகிய   காதல் கதை; இளமைப்பெருக்கில் இரு ஆணும் பெண்ணும் கொள்ளும் காதலும், ஆஸ்திரேலியர்களுக்கு  இயற்கையாகவே இருக்கும் யூகலிப்டஸ் மீதான காதலும் இணைந்த வசீகரமான கதைக்கரு கொண்டது யூகலிப்டஸ்

முர்ரே பெயில்  தெற்கு ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் பிறந்தார்.. அவர் தற்போது சிட்னியில் வசிக்கிறார்.

1998ல் வெளியான  இக்கதையை திரைப்படமாக்கும் முயற்சி பலமுறை துவங்கப்பட்டு கைவிடப்பட்டது. காதலை ஆஸ்திரேலிய கலாச்சாரத்துடன் சொல்லும் இந்நாவலின் துண்டு துண்டான சிறு பகுதிகள், சம்பவங்களை எல்லாம்  தைல மணத்துடன் கூடவே வரும் யூகலிப்டஸ் மரங்கள்  இணைத்து அழகான தொடர்ச்சியை கொண்டு வந்துவிடுகின்றன. இந்த நாவலை ஆஸ்திரேலிய அடையாளங்களில் ஒன்று என்றும் கூறலாம்

 

யூகலிப்டஸ் மரங்கள் ஆஸ்திரேலியாவின் கலாச்சாரத்துடன் இணைந்திருக்கின்றன. 10 நிமிட நடையில் ஒரு யூகலிப்டஸ் மரத்தை அங்கு பார்த்துவிடலாம் என்று பொதுவாக சொல்லப்படுவதுண்டு. ஆஸ்திரேலிய பாடல்களில், சிறார் இலக்கியங்களில்,  பயணக்கட்டுரைகளில், திரைப்படங்களில் என்று எங்கும் யூகலிப்டஸ் மரங்கள் இடம்பெற்றிருக்கும்.

ஆஸ்திரேலிய எழுத்தாளர்  மே கிப்ஸின்  (May Gibbs)  ’ஸ்னக்கில்பாட்டும் கட்லி பையும்’ (Snugglepot and Cuddlepie) என்னும் பிரபல சிறார் இலக்கிய கதைத்தொடரில் 2 யூகலிப்டஸ்  மலர்களின் கனிகளின்   வடிவிலிருக்கும் குட்டி மனிதர்கள் இருப்பார்கள். இதில் இடம்பெறும் குட்டிப் பெண் குழந்தைகளின் தலைமுடி, இடையாடை, மற்றும் தொப்பி ஆகியவை யூகலிப்டஸ் மலர்களை போல் அமைந்திருக்கும். இக்கதை பல தொலைக்காட்சி தொடர்களாகவும் வெளிவந்தது.. 1985ல் மே கிப்ஸை கௌரவிக்கும் பொருட்டு இந்த கதையை சித்தரிக்கும் ஒரு தபால் தலை ஆஸ்திரேலியாவில் வெளியிடப்பட்டது.

ஐரோப்பாவில் ஊசியிலை மரங்களின் பல வகைகள் உள்ளன. வட அமெரிக்கா பைன், ஓக் ஆகியவற்றால் நிறைந்த அடர் காடுகளையும், புல்வெளிகளையும் கொண்டவை. ஆப்பிரிக்கா புல்வெளிகள், பாலைநிலங்கள் மற்றும் மழைக்காடுகள் நிறைந்தது. அண்டார்டிக்கா  பல மரங்களின் புதைபடிவங்களை கொண்டிருக்கிறது, மழைக்காடுகளையும் அவற்றின் மரங்களையும் கொண்டிருக்கிறது தென்னமெரிக்கா. ஆனால் ஆஸ்திரேலிய நிலப்பரப்பில் பிற தாவரங்களை காட்டிலும் யூகலிப்டஸே பெருமளவில் இருக்கிறது.(சுமார் 70சதவீதம்) .

கங்காருகள், பியர், பார்பிக்யூ அடுப்புக்கள், செம்புழுதி இவற்றுடன் யூகலிப்டஸ் மரங்களும் ஆஸ்திரேலிய  கலாச்சாரத்துடன் ஒன்றிணைந்தவை..    

தொல்படிமங்கள்

யூகலிப்டஸின்  52 மில்லியன் வருடங்களுக்கு முன்பான தொல்புதைபடிவம்  தென்னமெரிக்க தீவில் கிடைத்தது. ஆஸ்திரேலிய யூகலிப்டஸ் புதைபடிவங்கள் சுமார் 42 மில்லியன் வருடங்கள் பழமையானவை என்றாலும் ஆஸ்திரேலியாவில் யூகலிப்டஸ் 20 மில்லியன் வருடங்களுக்கு முன்பு தான் பரவிப் பெருகி இருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்

சிற்றினங்கள்

யூகலிப்டஸின் 800 சிற்றினங்கள் இதுவரை கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை ஆஸ்திரேலியாவை தாயகமாகக் கொண்டவையே. ஒரு சில வகைகள் மட்டும் நியூ கினியா  மற்றும் இந்தோனேசியாவை தாயகமாக கொண்டது.  

பழங்குடியினரின் யூகலிப்டஸ் பயன்பாடுகள்

tarunks

ஆஸ்திரேலிய பழங்குடியினர் இம்மரத்தின் கட்டைகளிலிருந்து ஈட்டிகள், கேடயங்கள், படகுகள் மற்றும் அம்புகளை செய்தார்கள். இம்மரங்களில் பூச்சிகள் இடும் துளைகளில் இருந்து கசியும் சுவையான மன்னா (Manna) எனப்படும் இனிப்பு திரவத்தை  பழங்குடியினர் உண்பார்கள்

இம்மரத்தின் தடிமனான மரப்பட்டைகளை உரித்தெடுத்து நீர் கொள்கலன்களாகவும், தண்டின் முடிச்சுகளை (gnarled round growth)  டாருன்க் (tarnuks) எனப்படும் பாத்திரங்களாகவும் உபயோகித்தார்கள்.   

’முரே’ ஆற்றங்கரையோர பழங்குடியினர் இம்மரத்தின் உறுதியான பட்டையை நெடுக உரித்து அவற்றைக்கொண்டு கேனோஸ் (canoes) என்னும்  சிறு மீன்பிடி  படகுகள் செய்வர்கள்.

பல ஆண்டுகள் பழமையான யூகலிப்டஸ் மரங்களில் பழக்குடியினர் பட்டை உரித்தெடுத்த தழும்புகளும் சில  எழுத்துக்களும் காணப்படும் இதுபோன்ற மரங்கள் தழும்பு மரங்கள் எனப்படும். இவற்றை நியூ சவுத் வேல்ஸ்   மற்றும் குவீன்ஸ்லாண்டிலும் காணலாம். 

வரலாறு

டிசம்பர் 2,  1642 ல்  வெளியான ஜன்ஸூன் டாஸ்மானின் (Abel Janszoon Tasman) கடற் பயணக்குறிப்பில் ஃபிஜி தீவுகளில் இருந்த  கோந்துகளை சுரக்கும் மரங்கள் குறிப்பிடப்பட்டிருந்தது.  

சில ஆரம்பகால ஐரோப்பிய இயற்கையியலார்களால் யூகலிப்டஸ் மரங்கள் கண்டறியப்பட்டு இருந்தாலும் 1777 வரை இம்மரங்கள் முறையாக ஆவணப்படுத்தப்பட வில்லை. கேப்டன் ஜேம்ஸ் குக் குடன்  ஆஸ்திரேலிய கடற்கரையில் வந்திறங்கிய  ஜோசப் (Joseph Banks) மற்றும் டேனியல்  (Daniel Solander) ஆகியோர் அங்கிருந்த யூகலிப்டஸ்  (E. gummifera) மரங்களின் பாகங்களை சேகரித்தனர். குயின்ஸ்லேண்டின் ஆற்றங்கரையோரமிருந்து மற்றொரு (E. platyphylla) மரத்தின் பாகங்களையும் சேகரித்தனர். அப்போது இவ்விரண்டுமே யூகலிப்டஸ் என்று  பெயரிடப்பட்டிருக்கவில்லை.

1777 ல் ஜேம்ஸ் குக்கின் மூன்றாவது பயணத்தின் போது  உடனிருந்த டேவிட்  (David Nelson) கிழக்கு டாஸ்மானியாவிலிருந்த ஒரு யூகலிப்டஸ் மரத்தின் பாகங்களை சேகரித்தார். அவை லண்டன் பிரிட்டிஷ் அருங்காட்சியகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கே பணியாற்றிக்கொண்டிருந்த பிரெஞ்ச் தாவரவியலாளர் ஹெரிடியர் (L’Héritier) அம்மரத்துக்கு  Eucalyptus obliqua என்று பெயரிட்டார். இதன் பேரினப்பெயர் ’யூகலிப்டஸ் என்பதில்  கிரேக்க சொல்லா eu  என்பது ’நன்றாக’ என்றும் calyptos என்பது ’மூடப்பட்டிருக்கும்’ என்றும் பொருள் தரும்.  யூகலிப்டஸ் மரங்களின் மலரரும்புகளை மூடியிருக்கும் தொப்பி போன்ற அமைப்பைக்கொண்டு இவர் அந்த பெயரை உருவாக்கினார்

சிற்றினப்பெயர் Obliquus இம்மரத்தின் இலைக்காம்பின் இருபுறமும் இருக்கும் சமச்சீரற்ற  அடிப்பகுதிகளை குறிக்கிறது.

1788-89 ல் வெளிவந்த இம்மரத்தின் இந்த விவரங்கள்  அடங்கிய ஆய்வறிக்கையே தாவரவியல் அடிப்படையில் யூகலிப்டஸின் முதல் ஆவணம். மிகச்சரியாக ஆஸ்திரேலியாவில் ஐரோப்பியர்களின் குடியேற்றமும் ஏக காலத்தில்தான் நடந்தது. பின்னர் 19 நூற்றாண்டுக்குள் ஏராளமான யூகலிப்டஸ் மரங்கள் சிட்னி பகுதியில் கண்டறியபட்டு முறையாக ஆவணப்படுத்தப்பட்டது.  இவற்றில் பெரும்பான்மையானவை   ஆங்கிலேயே தாவரவியலாளர் ஜேம்ஸ் எட்வர்ட் ஸ்மித்தினால் (James Edward Smith)  அடையாளம் காணப்பட்டன  

1867 ல் வெளியான ’ஆஸ்திரேலியாவின் தாவரங்கள்’ (Flora Australiensis) என்னும் மிக முக்கிய நூலில் பல நூறு ஆஸ்திரேலிய தாவரவியலாளர் களின்  யூகலிப்டஸ் குறித்த  பங்களிப்புக்கள் இருந்தன.3

பரவல்

ஆஸ்திரேலியாவிலிருந்து 1770 க்குப் பிறகு யூகலிப்டஸ் பல நாடுகளுக்கு அறிமுகமானது குறிப்பாக கலிபோர்னியா, தென் ஐரோப்பா, தெற்காசியா மற்றும் தென்னமெரிக்கா.

 1774 ல் இவற்றின் விதைகள் இங்கிலாந்து கியூ பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டன ஆனால் கடும் பனி பொழிவிருந்த காலங்களாதலால்  அவை அங்கு வளரவில்லை. மீண்டும் 1800 ல் டாஸ்மானியாவிலிருந்து வரவழைக்கப்பட்ட விதைகள் வளரத்துவங்கின

1800 களில் இவற்றின் பல வகைகள் ஐரோப்பா அல்ஜீரியா, தெகிடி, இந்தியா, தென்னாப்பிரிக்கா, மற்றும் அமெரிக்கவிற்கு அறிமுகமாகின.

1850 இம்மர விதைகள் அல்ஜீரியாவிலும், ஐரோப்பாவிலும் வெட்டு மரங்களுக்காக தருவிக்கப்பட்டது.

இலங்கையில் இவை 19 ம் நூற்றாண்டில் காபி மற்றும் தேயிலைத் தோட்டங்களில் காற்றுத்தடுப்பிற்கென அறிமுகமாயின.தற்போது யுகலிப்டஸின் 10 சிற்றினங்கள் அங்கு இருக்கின்றன   

1850 ல் கலிபோர்னியாவுக்கு தங்க வேட்டைக்கு சென்ற ஏராளமானவர்கள்  யூகலிப்டஸ் விதைகளை அங்கு பயிரிட்டனர்.

இந்தியாவில் யூகலிப்டஸ்  1790 ல் மைசூரில் திப்பு சுல்தானால் அறிமுகம் செய்யப்பட்டது.  அவரது அரண்மனை தோட்டங்களில் முதலில் 16 வகைகள் வளர்ககப்பட்டன. 

1843 ல் நீலகிரி பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்ட இவை பின்னர் அதிக அளவில்  இந்தியாவின் பல பகுதிகளில் பண்ணை நிலங்களில் வளர்க்கப்பட்டன. தற்போது யூகலிப்டஸின் 170 சிற்றினங்கள் இந்தியாவில் இருக்கின்றன.அவற்றில்  மைசூர் கோந்தை உருவாக்கும்  யூகலிப்டஸ் வகை (E. tereticornis)  மிக பிரபலமானது. இத்துடன்  E. grandis, E. citriodora, E. globulus, and E. camaldulensis.ஆகியவையும் இந்தியாவில் அதிகமாக வளர்கின்றன 

இந்தியாவில் 1960-80 க்குள் ஏராளமான யூகலிப்டஸ் பண்ணைகள் உருவாகின. சமுக காடுகள் திட்டத்தின் மூலம் இந்தியாவின் பல மாநிலங்களில் யூகலிப்டஸ் மரங்கள் வளர்க்கப்பட்டன.  

வோன் முல்லர் (von Müller)  1884 ல் வெளியிட்ட  Descriptive Atlas of the Eucalypts of Australia – Eucalyptographia என்னும் நூல்  இலைகளிலிருந்து தைலம் எடுப்பதையும், தைலத்தின் பல்வேறு பயன்களையும் விரிவாகப் பேசுகிறது. முல்லர் யூகலிப்டஸ் தைலத்தையும் விதைகளையும் பிரான்ஸ், இந்தியா, தென் ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் அமெரிக்காவுக்கு பரிசாக அனுப்பி வைத்தார்.

20 ம் நூற்றாண்டின் இறுதியில் அமெரிக்காவில் இவை பரவலாக காணப்பட்டது வேளான் விஞ்ஞானி எட்மண்டோ (Edmundo Navarro de Andrade) வின் முயற்சியால் பெருமளவிலான தென்னமெரிக்க  நிலப்பரப்புகள் யூகலிப்டஸ் காடாகின

தாவரவியல் பண்புகள்

மிர்ட்டேசியே குடும்பத்தை சேர்ந்த இவை வேகமாக வளரக்கூடியவை. யூகலிப்டஸின் வெகுசில வகைகளே இலை உதிர்ப்பவை, மற்ற அனைத்துமே பசுமை மாறாதவை

இலைகள்: பசுமைமாறா  பளபளப்பான இலைகள்  வளைந்து கதிரரிவாள் போலிருக்கும்.  இலைகளில் எண்ணெய் இருப்பதால் இவை பிரத்யேக தைல வாசனையுடன் இருக்கும்

காம்பற்ற இளம் இலைகள்  சாம்பல், வெள்ளி அல்லது நீலப்பச்சை வண்ணம் கொண்டிருக்கும். முதிர்ந்த மரங்களின் இலைகள் காம்புடன்  மாற்றடுக்கில் அமைந்திருக்கும். இளம் இலைகள் காம்பற்று எதிரடுக்கில் அமைந்திருக்கும். இலையமைப்பு இளம் மரங்களிலும் முதிர்ந்த மரங்களிலும் முற்றிலும் வேறு பட்டிருக்கும், இலைகள் எளிதில்  வாடாது. 

மலர்கள்: மூன்றிலிருந்து 6 வருடங்களில் யூகலிப்டஸ் மரங்கள் மலரத் துவங்கும். இவை பெரும்பாலும் கோடையில் மலரும். மலர்கள் வெள்ளை, சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள் என பல வண்ணங்களில் இருக்கும். மலர் நிறமென்பது ஆண் பகுதியான மகரந்த  தாள்களின் நிறமே. பல நிறங்களில்  மலர்கள் இருப்பினும் பெரும்பான்மையான மலர்கள் வெள்ளை அல்லது மங்கிய வெள்ளை நிறத்தில் இருக்கும்.

இவற்றில் மலரிதழ்கள் என்று தனித்த அமைப்புகள் இல்லை. மலர்கள் அரும்பாக இருக்கையில் அல்லி மற்றும் புல்லி வட்டங்கள் இணைந்த  சிறிய மூடி போன்ற அமைப்பினால் மூடப்பட்டிருக்கும். (operculum). அரும்புகள் மலருகையில் இந்த மூடி உதிர்ந்து விழுந்துவிடும்

கனிகள்: மிக கடினமான இரண்டு பகுதிகளாக அமைந்திருக்கும் கனிகள் கோந்துக் கொட்டைகள் எனப்படுகின்றன (gum nuts). பெரும்பாலான யூகலிப்டஸ் மரங்கள் 250 லிருந்து 400 வருடங்கள் உயிர் வாழும்

அலங்கார மரங்களாகவும் இவை வளர்க்கப்படுகின்றன. பூந்தொட்டிகளிலும் குட்டை மர வகைகள் வளர்க்கப்படுகின்றன.

இணைப்பேரினங்கள்

யூகலிப்டஸின் ஏராளமான வகைகளை தாவரவியலாளர்கள் மூன்றாக வகைப்படுத்துகிறார்கள். இவற்றில் மிக அதிகமானவை யூகலிப்டஸ் வகை, வடக்கு ஆஸ்திரேலியாவில் மட்டும் இருப்பவை கோரிம்பியா ( Corymbia) மற்றும்  கிழக்கு ஆஸ்திரேலியாவில் வளரும் அங்கோஃபோரா வகை. (Angophora). கோரிம்பியா மற்றும் அங்கோஃபோரா இரண்டு வகையும் யூகலிப்டஸின் இணைப்பேரினங்கள் என கருதப்படுகின்றன.

மரப்பட்டை

வானவில் யூகலிப்டஸ்

யூகலிப்டஸ் மரங்களின் சிறப்பியல்பாக  அவை பட்டை உரிப்பதை சொல்லலாம். மரங்கள் வளர்கையில்  பட்டையை உரித்து, உள்ளிருக்கும் பளபளப்பான வெளிறிய  புதிய உள்பட்டையை வெளிக்காட்டும். வானவில் யூகலிப்டஸ் பல வண்ணங்களில் உள்பட்டையை கொண்டிருக்கும்

சில மரங்களின் பட்டை மென்மையாக வழவழப்பாக இருக்கும். மேலிருந்து கீழ் பாதி மரங்கள் மட்டும் பட்டை உரித்து மீதி பழைய பட்டையுடன் இருக்கும் மரங்களையும் சாதாரணமாக காணமுடியும். அடிக்கடி நிலத்தில் தீப்பிடிக்கும் இடங்களில் வளரும் மரங்களின் கீழ்ப்புற பட்டை மட்டும் மிக தடிமனாக சொறசொறப்பாக காணப்படும்

சில மரங்களில் நாரிழைகள் நிறைந்த பட்டை காணப்படும். சிலவற்றில் கரிய சொற சொறப்பானவையும், இன்னும் சிலவற்றில் மேடுகளும் பள்ளங்களும் வரிகளும் உள்ள பட்டைகளும், ரிப்பன்களை போன்றவைகளும் இருக்கும்.   

இவற்றிற்கு காய்ச்சல் மரம், நீல கோந்து மரம், எலுமிச்சை யூகலிப்டஸ்  மற்றும் வெள்ளி ஓக் இரும்பு பட்டை மரம் என்று பல வழங்கு பெயர்கள் உள்ளன. அடிக்கடி இவற்றின் கனமான கிளைகள் உடைந்து விழுந்து மர அறுவையில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களின் இறப்பு நேர்வதால் இவை விதவைகளை உருவாக்கும் மரங்கள்- Widow maker trees என்றும் அழைக்கப்படுகின்றன.

தைலம்

யூகலிப்டஸ் மரங்களின் இலைகள், கனிகள், மலரும்புகள் மற்றும் இளங்கிளைகளில் இருக்கும் எளிதில் ஆவியாகும் இன்மண எண்ணெயின் (Essential oil) அளவு  1.5 லிருந்து 3.5%.  இருக்கும்

யூகலிப்டஸில் அடங்கி இருக்கும் அதன் மருத்துவ பண்புகளுக்கு காரணமான வேதிசேர்மங்கள்; சிட்ரொனெல்லால், யூகலிப்டால் , கேம்ஃபீன் ஃபென்சீன்( fenchene), லிமோனீன், ஃபெல்லாண்ட்ரீன் மற்றும் பைனீன் ஆகியவை. இந்த எண்ணெய்களில் இம்மரங்களின் நறுமணத்திற்கு, தைல வாசனைக்கு காரணமான யூகலிப்டால் 70 லிருந்து  95% இருக்கிறது.( eucalyptol)  

1778 ல் டென்னிஸ் மற்றும் ஜான் வயிட் ( Dennis Considen & John White)  ஆகிய  இரு அறுவை சிகிச்சை நிபுணர்கள் யூகலிப்டஸ் இலைகளை காய்ச்சி வடிகட்டுதல் மூலம் அவற்றின் இலை எண்ணையை தைலம் ஆக்கினார்கள் எனினும் அவர்களால் பெருமளவில் தைலத்தை தயாரிக்க முடியவில்லை

.1852 ல் ஜோசப் போஸிஸ்டோ (Joseph Bosisto) என்னும் மெல்பர்ன் நகரின் பிரபல மருந்தாளுநர்  வணிகரீதியான யூகலிப்டஸ் தைல தயாரிப்பை துவங்கினார்.

1870 ல் யூகலிப்டஸ் தைலம் ஆஸ்திரேலியாவின் மிக முக்கியமான தொழிற்சாலை உற்பத்தி பொருளானது. அப்போதிலிருந்து சர்வதேச சந்தைகளில் ஆஸ்திரேலிய யூகலிப்டஸ் தைலம் தொடர்ந்து விற்பனை ஆகிக்கொண்டிருக்கிறது.

ஒரு பவுண்டு தைலம் உருவாக்க சுமார் 50 பவுண்டு யூகலிப்டஸ் தேவைப்படுகிறது. இதன் வலிநிவாரண, குடற்புழு நீக்க, கிருமி நீக்க பண்புகள் இந்த எண்ணெயை உலகின் மிக அதிக பயன்படுத்தப்படும் தைலமாக முன்னிலையில் வைத்திருக்கிறது. இலைத்தைலம் நுண் கிருமிகளுக்கு, எதிரானது, பல்வலி, சுவாசக்கோளாறு, வைரஸ் தொற்று போன்ற சிகிச்சைகளில் பயன்படுத்தப்படுகிறது. நறுமண சிகிச்சையிலும் இந்த தைலம் வெகுவாக உபயோகத்திலிருக்கிறது

முதல் உலகப்போரின் போது யூகலிப்டஸ் தைலம் வெகுவாக தேவைப்பட்டது. 1919 ல் பரவிய தொற்று வியாதிகள் குணமாக பெரிதும் இந்த தைலம் உபயோகிக்கப்பட்டது.

யூகலிப்டால் (சினியோல் என்றும் இது அழைக்கப்படும்- cineole)  உட்கொள்பவர்களுக்கு  கடும் பாதிப்புகளை உண்டாக்கும். யூகலிப்டஸ் இலைகளை யாரும் உண்பதில்லை எனினும் இலைகளை உலர்த்தி தேநீர் உண்டாக்கி சளி காய்ச்சல் சமயங்களில் அருந்தும் வழக்கம் பல நாடுகளில் இருக்கிறது.

தேநீராக தயாரிக்கப் படுகையில் யூகலிப்டாலின் அளவு மிக குறைவாக, உடலுக்கு தீங்கு விளைவிக்காத அளவிற்கே இருப்பதாக சொல்லப்பட்டாலும், தேவைக்கதிகமான பயன்பாடு குடல் அழற்சி, மனச்சிதைவு, மத்திய நரம்பு மண்டல பாதிப்பு மற்றும் உயிரிழப்பை உண்டாக்கும்

2013ல் மஞ்சள் பெட்டக மரம் என்றழைக்கப்டும்.Eucalyptus mellidora  பூச்சித் தாக்குதலை தவிர்க்க தன் இலை மணத்தை அவ்வப்போது மாற்றிக் கொள்வதை ஆய்வாளர்கள் கண்டறிந்தார்கள்

உயரம்

இவை பொதுவாகவே மிக உயரமான மரங்கள்.. 85 மீட்டர் க்கும் மேல் வளரும் இயல்புடைய மலை சாம்பல் மரம் (E. regnans) உலகின் மிக உயரமான மர வகைகளில் ஒன்று. 4

கிழக்கு டாஸ்மேனியாவில்  இருக்கும்  99.6  மீட்டர் உயரமுள்ள  ”நூறான்” என்றழைக்கப்படும மரமே உலகின் மிக உயரமான யூகலிப்டஸ்.  ஹைபெரியன் (Hyperion) செம்மரத்தின் உயரம் இதைவிட 16 மீட்டர்தான் அதிகம். (115.6)

1881ல் ஜார்ஜ் விக்ட்டோரியா பகுதியில் விழுந்து கிடந்த ஒரு யூகலிப்டஸின் உயரம் 114.3 மீ என்று அளக்கப்பட்டது. ஹைபெரியன் இதை 1 மி உயரம் குறைவு

1872ல் வில்லியம் 133  மீ உயரமுள்ள யூகலிப்டஸ் விழுந்துகிடப்பதை பதிவுசெய்தார்

100 மீ உயரத்துக்கும் அதிகமாக வளரும் மர வகைகளும் அதிகபட்சமாக 10 மீ உயரம் வளரும் புதர்  வகைகளும் யூகலிப்டஸில் உண்டு

வளரியல்பு

  • மாலி (mallee)

யூகலிப்டஸின் புதர் வகைகள் மாலி எனப்படுகின்றன.கிளைத்த தண்டுகளுடன் இவை அதிகபட்சம் 10 மீ உயரம் வரை வளரும்.இவற்றின் புடைத்த வேர் தரைமட்டத்திற்கு மேல் காணப்படும்

  • மர்லோக் (marlock)

கிளைகளற்ற குறுமரங்களான இவற்றில் முட்டை வடிவ வெளுத்த இலைகள் அடர்த்தியாக அமைந்திருக்கும்.

  • மாலட்  (mallet)

இவை மெல்லிய நடுத்தண்டும் சிறு கிளைகளும் கொண்டவை தண்டுகளில் செம்புளிகள் இருக்கும் 

பிற முக்கிய வகைகள்

  1. உலகின் உயரமான மர வகைகளில் ஒன்றான மலைச்சாம்பல் மரம்  ( Mountain ash -Eucalyptus regnans) 
  2. முண்டுகளுடன் காணப்படும் பனி மரம்-  (gnarly snow gum -Eucalyptus pauciflora)
  3. பல கிளைகளுடன் அடர்ந்து வளரும் மாலி வகை. (mallee -Eucalyptus behriana)
  4. ஆப்பிள் யூகலிப்டஸான  பேய் கோந்து மரம்  (apple ore ghost gum -Corymbia flavescens)
  5. கிளைகள் திருகி காணப்படும் வடக்கு ஆஸ்திரேலியாவின் சிவப்பு கோந்தை அளிக்கும் மரம். (twisted Sydney red gum -Angophora costata).
  6. மரப்பட்டை உரிந்து தெரியும் உள் மரப்பட்டை பல வண்ணங்களில் இருக்கும் வானவில் மரம். (Rainbow Eucalyptus-Eucalyptus deglupta) 
  7. எலுமிச்சை  யூகலிப்டஸ் (Eucalyptus citriodora)
  8. பளபளக்கும் வெள்ளி நிற இலைகளை கொண்டிருக்கும். வெள்ளி இளவரசி. (silver princess – Eucalyptus caesia ).இவை தாழ்ந்து நிலம்தொடும் கிளைகளை கொண்டிருக்கும் மரப்பட்டை சிவப்பு நிறத்திலிருக்கும்.
  9. நீல மரம் (Eucalyptus Baby Blue – Eucalyptus pulverulenta) இவற்றின் இலைகள் வெள்ளைப் பொடி தூவிய நீலச்சாம்பல் நிறம் கொண்டிருக்கும்
  10. வெள்ளித்துளி மரம் (Eucalyptus Silver Drop -Eucalyptus gunnii). அழகிய வெள்ளி நிற இலைகள் கொண்ட இவை  செடார் கோந்து மரம் என்றும் அழைக்கப்படும். 
  11. வெள்ளி நாணய மரம்-(Silver Dollar Eucalyptus Tree -Eucalyptus cinerea) நாணயம் போன்ற வெள்ளி நிற வட்ட வடிவ இலைகள்
  12. கொண்டிருக்கும். 15மீ உயரம் வரை வளரும் இதன் இலைகள் அலங்காரத்துக்காக உபயோகிக்க படுகின்றன.
  13. இனிப்பு கோந்து மரம்-(Sugar Gum Tree -Eucalyptus cladocalyx). இவற்றின் மரப்பட்டை மஞ்சள் ஆரஞ்சு நிறம் கொண்டிருக்கும். உண்ணக்கூடிய கோந்து இனிப்பு சுவையுடன் இருக்கும்.
  14. செம்புள்ளி மரம்(Red Spotted Gum Tree -Eucalyptus mannifera). சாம்பல் வண்ண மரப்பட்டையை கொண்டிருக்கும் 
  15. வட்ட இலை மரம்.(Round Leaved Moort -Eucalyptus platypus)
  16. மலைக் கோந்து மரம். (Mountain Gum -Eucalyptus dalrympleana) இதன் இலைகள் இலவங்க பட்டையின் மணம் கொண்டிருக்கும் 
  17. பனிக்கோந்து மரம். (Snow Gum Tree -Eucalyptus pauciflora).அளவான உயரம் கொண்டிருக்கும் இவற்றின் கிளைகள் ஒன்றுடன் ஒன்று திருகி பின்னிக் கொண்டிருக்கும் 
  18. யூகலிப்டஸ் இளவரசன்.(The Prince of the Eucalypts –Eucalyptus globulus) யூகலிப்டஸ் மரங்களில் மிக விலை அதிகமான கட்டையையும்  நீலக்கோந்தையும் அளிக்கும்  இதன் அழகிய மலர்களே டாஸ்மேனியாவின் மலர் சின்னமாக இருக்கிறது.
  19. யூகலிப்டஸ் கிறுக்கல் மரம்- (Scribbly Gum tree-Eucalyptus haemastoma) மரத்தின் கோந்து மரப்பட்டையில் கிறுக்கல்களைப்போல  ஒழுகி இருப்பதால் இவ்வாறு அழைக்கப்படுகிறது. கிறுக்கல் கோந்து அந்து பூசியான Ogmograptis scribula  கோந்து ஒழுகல்களி குடைந்து வழி உண்டாக்கி மரப்பட்டைகளில் முட்டையிடுவதால் இவ்வடிவங்கள் உருவாகின்றன.
  20. ஆஸ்திரேலியாவில் வணிக ரீதியான முக்கியத்துவம் கொண்ட காரி (Eucalyptus diversicolor,  karri) மற்றும் ஜரா (Eucalyptus marginata-s jarrah) யூகலிப்டஸ் வகைகள்
கிறுக்கல் மரப்பட்டை மரம்

யூகலிப்டஸும் நெருப்பும்  

இவற்றின் எண்ணெய் நிறைந்த இலைகளும் உலர்ந்த மரப்பட்டையும் எளிதில் தீ பிடிக்கும் இயல்புடையவை.

இலைகளின் எண்ணெயும் ஏராளமான இலைகள், கிளைகள் உதிர்ர்து மரங்களினடியில் சேர்ந்திருக்கும் இலைக்குப்பைகளின்  அழுத்தமும் சேர்ந்து எளிதில் யூகலிப்டஸ் காடுகள் தீப்பிடிக்கிறது.ஆஸ்திரேலியா வெங்கும் எரிந்த யூகலிப்டஸ் இலைகளின் மணம் பரவியிருக்கிறது என்று சொல்லும் அளவிற்கு  இக்காடுகளில் அடிக்கடி தீப்பிடிக்கிறது. தைலமணம் கொண்ட காற்று நெருப்பு வேகமாக பரவ வழி செய்கிறது .

இவற்றில் பெரும்பாலான மரங்கள் நெருப்பில் எரிந்தாலும் மீண்டும் தழைக்கும், பல மரங்கள் நெருப்பில் பாதிப்படையாத கனிகளும் விதைகளும் கொண்டவை  . முழுவதுமாக எரிந்தாலும் சில யூகலிப்டஸ் மரங்கள் அவற்றின் மரப்பட்டைகளுக்குள் பொதிந்திருக்கும் இலை மொட்டு களிலிருந்து மீண்டும் துளிர்த்து வளரும். 

இப்படி நெருப்பை தாங்கி வளர்பவை, முழுவதும் நெருப்பில் எரிந்த பின்னும் முளைவிட்டு தளிர்ப்பவை, நெருப்புக்கு பின்னர் சேதமடையாத கனிகளிலிருந்து, விதைகளிலிருந்து மீண்டும் புது வாழ்வை தொடரும்   தாவரங்கள் பைரோஃபைட்டுகள் (Pyrophytes) எனப்படுகின்றன. பல தொல்குடி இனங்களின்  தலைவர்கள் இவ்வாறு எரிந்த காட்டில் கிடைக்கும் சாம்பலாகாத  உறுதியான மரக்கம்புகளைத்தான் கைகளில் வைத்துக் கொள்வார்கள் 

2019-20ல் நிகழ்ந்த ஆஸ்திரேலிய புதர் தீ விபத்தில் 18.6 மில்லியன் ஹெக்டேர் நிலப்பரப்பு முழுவதும் எரிந்து சாம்பலானது.  

பயன்கள்

தைலம்,மரக்கூழ்,கரிக்கட்டை மற்றும் அறுவை மர தொழிற்சாலைகளில் இம்மரங்கள் பெரிதும் பயன்படுகின்றன

டிஜெரிடூ எனப்படும் ஆஸ்திரேலிய பழங்குடியினத்தவர்களின் இசைக்கருவியும் பூமராங்கும் யூகலிப்டஸ் மர்ங்களிலிருந்து செய்யபடுகின்றன

டிஜெரிடூ உருவாக்க கரையான்களால் நடுப்பகுதி துளையிடப்பட்ட யூகலிப்டஸ் மரங்கள் மட்டும் தேர்வு செய்யபடுகின்றன. ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல நாடுகளில் சவப்பெட்டிகளும் கூட யூகலிப்டஸ் மரங்களிலிருந்து செய்யப்படுகின்றன.

ரயில் தண்டவாளங்கள் அமைக்கவும், நீராவி ரயில்களின் எரிபொருளாகவும் யூகலிப்டஸ் மரக்கட்டைகள் பயன்படுத்தபடுகின்றன. கினோ கோந்து எனப்படும் யூகலிப்டஸ் கோந்துகள் மருந்து பொருட்களாக பயன்பாட்டில் இருக்கின்றன. சில குறிப்பிட்ட வகை சிகரட்டுக்களிலும், பல நறூமண திரவியங்களிலும்  யூகலிப்டஸ் தைலம் சேர்க்கப்படுகின்றது.

 மரக்கட்டைகளின் செல்லுலோஸை கொதிக்கவைக்கையில்  கிடைக்கும் நாரைழைகளைக்கொண்டு ஆடைகளும் உருவாக்கப்படுகின்றன

ஆஸ்திரேலியாவின் O Estado de São Paulo நாளிதழின் குறிப்பிட்ட சில வருட இதழ்கள் முழுக்க யுகலிப்டஸ் மரக்கூழிலிருந்து உருவாக்கப்பட்டன. உறுதியான இம்மரங்களில் இருந்து வீடுகட்டும் மரப்பலகைகள், வண்டிகள், மரச்சாமான்கள் மற்றும்  பாலங்கள்  உருவாக்கப்படுகிறது 

இம்மரங்களிலிருந்து மஞ்சள், ஆரஞ்சு, பச்சை மற்றும் சாக்கலேட் நிறங்களில் சாயங்கள் எடுக்கப்படுகின்றன. சாயமெடுத்தபின் எஞ்சியிருக்கும் மரக்கழிவு நல்ல உரமாக பயன்படுகிறது

சமீபத்தில் நிலத்திலிருக்கும் பொன் துகள்களை யூகலிப்டஸ் இலைகளில் சேமித்து வைத்திருப்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டிருக்கிறது.

இந்தியா போன்ற தாவர நார்களின் பற்றாக்குறை நிலவும் நாடுகளில் யூகலிப்டஸ் மரங்கள் பெருமளவில் உதவுகின்றன

உலகின் பலபகுதிகளிலும் இதன் கட்டைகள் எரிவிகாகவும் பயன்பாட்டில் இருக்கிறது. மலரலங்காரங்களிலும் நிர்ப்பிகள் (fillers) எனப்படும்  மலரல்லாத  தாவர பொருட்களில் அதிகம் உபயோகப்படுவது விரைவில் வாடிவிடாத யூகலிப்டஸின் இளம் இலைகள் தான். 

மொனார்க் பட்டுப்பூச்சிகள் குளிர்காலங்களில் யூகலிப்டஸ் மரங்களில் தஞ்சமடைகின்றன. தேனி வளர்ப்பின் மூலம் மலர்களின் அமுதிலிருந்து மிகத்தரமான ஒரு மலர்த் தேன்(uni floral honey) எடுக்கப்படுகிறது

வேகமாக வளரும் இவை வரிசையாக நெருக்கமாக வளருகையில்  காற்றுத்தடை மரங்களாகவும் பயன்படுகின்றன

 விலங்குகளுடன் தொடர்பு

யூகலிப்டஸ் இலைகளின்  எண்ணெய் அதிக அளவில் உட்கொண்டால் ஆபத்தை விளைவிக்கும் எனினும் கோலா கரடி மற்றும் சில சிறு விலங்குகள்  (marsupial herbivores) அவற்றை தொடர்ந்து அதிக அளவில் உண்ணுகின்றன’. இலைகளில் சத்துக்கள் மிக குறைவாகவே இருந்தாலும் இலைகளின் தைல மணத்தை இவ்விலங்குகள் வெகுவாக விரும்புகின்றன

யூகலிப்டஸ் மலர்கள் ஏராளமான மலரமுதினை (Nector) கொண்டுள்ளன. ஆஸ்திரேலிய பல்லியினங்கள் பல இம்மலர் சாற்றை விரும்பி உண்ணும். 

யூசொசியா (Eusocia) வண்டுகள் எப்போதும் இம்மரங்களில் வசிக்கின்றன.

இம்மரக்கிளைகளின் பொந்துகளுக்குள் பேயந்துப்பூச்சிகளான ஸெலொடைபியா (Zelotypia stacyi) முட்டையிடுகின்றன்

கிளைகள் உடைதல்

யூகலிப்டஸ் மரங்களின்  எடை மிகுந்த கிளைகள் எளிதில் உடையும் இயல்பு கொண்டவை.குறிப்பாக கோடைக்காலங்களில் கிளைமுறிதல் அதிகமாயிருக்கும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட பலநாடுகளின் பூங்காக்களில்  யூகலிப்டஸ் மரங்களினடியில் செல்கையில் கிளைமுறிந்து விழும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கைப் பலகைகள் வைக்கப்பட்டிருக்கும்

பிரபல ஆஸ்திரேலிய  சிறார் இலக்கியக் கதையான ஏழு குட்டி ஆஸ்திரேலியர்களில்  (Seven Little Australians) வரும் ஜூடி என்னும் சிறுமி ஒரு பூங்காவில் முறிந்த யூகலிப்டஸ் கிளைகளின் அடியில் சிக்கி உயிரிழக்கிறாள்.

ஆஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸில் உள்ள நீல மலைத்தொடர் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இங்கு ஏழு தேசியப் பூங்காக்கள் மற்றும் ஒரு சரணாலயம் உள்ளது.  மாபெரும் இந்த நீல மலைத்தொடர் 1.03 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு கொண்டது  இங்கு பலவகையான உயிர்த்தொகுதி இருப்பினும் 70 சதவீதம் அவற்றில் யூகலிப்டஸ் மரங்களே இருக்கின்றன. இங்கு மட்டுமே காணப்படும் பல அரிய உயிரினங்களுடன்  91 யூகலிப்டஸ்  சிற்றினங்களும் உள்ளன.  

நீல மலைத்தொடர்கள் என்னும் பெயர் இவற்றின் மீதிருக்கும் நீலப்புகைப்படலங்களினால் வந்தது. யூகலிப்டஸ் இலைகளின் எண்ணெய் திவலைகள், புழுதி மற்றும் நீராவியுடன் கலந்து நீலக்கம்பளி போல் மலைகளை பார்த்துக்கொண்டிருக்கும் அற்புதமான காட்சியை பல்லாயிரக்கணக்கானோர் தினமும்  கண்டு களிக்கின்றனர். 5

யூகலிப்ட் ஆஸ்திரேலியா (Eucalypt Australia) என்பது ஆஸ்திரேலியாவில் இருக்கும்  ஒரு இயற்கை அறக்கட்டளையின் பெயர். இந்த அமைப்பு யூகலிப்டஸ் மரங்களின் பாதுகாப்பு,  அவற்றைக்கு்றித்த கல்வி மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கிறது. யூகலிப்டஸ் தொடர்பான பணிகளுக்கு  உதவித்திட்டங்கள், நிதி உதவிகள்  மற்றும் பரிசுகளையும் இவ்வமைப்பு அளிக்கின்றது.  

சர்ச்சைகள் 6

யூகலிப்டஸ் மரங்கள் நிலத்தடி நீரை அதிகமாக உறிஞ்சிக்கொள்ளும் , இவை வளர மிக அதிக நீர் தேவைப்படும். இவை மண் வளத்தை குறைத்துவிடும் ஆகிய கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளானவை

யூகலிப்டஸ் நீரைஅதிகம் உறிஞ்சும் என்றாலும் 25 அடி ஆழத்துக்கு கீழ் உள்ள நிலத்தடி நீர் இம்மரங்களின் வேரினால் உறிஞ்சப் படுவதில்லை மரங்களின் வேர்கள்  20 அடிக்கு கீழ் வளருவதில்லை. அதிகபட்சமாக இம்மரங்களின் ஆணிவேர் தொகுப்பு 2-4 அடி வரை இறங்கி இருக்கும். நிலத்தடி நீர யூகலிப்டஸ் மரங்களினால் குறைந்ததற்கான எந்த ஆதாரமும் அறிவியல் அடிப்படையில் இதுவரை இல்லை என்பதை  பல ஆய்வுகள்  என்று திட்டவட்டமாக நிரூபித்திருக்கின்றன

இந்திய தேசிய பசுமை ஆணையம் 2015ல் பல நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் யூகலிப்டஸ் எந்த சூழல் கேடையும் உருவாக்குவதில்லை என்றும் பிற விவசாய பயிர்கள் மற்றும் மரங்களுடன் ஒப்பிடுகையில் குறைந்த அளவே இவை நீரை எடுத்துக் கொள்கின்றன என்பதையும்  தெரிவித்திருந்தது 

பிரபல வேளான் விஞ்ஞானியான தினேஷ் குமார் தனது ’இந்தியாவில் யூகலிப்டஸ் -கடந்தகாலம் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம்’ என்னும் நூலில் இம்மரத்தின் சூழலுக்கு சாதகமான பல இயல்புகளை விவரித்திருக்கிறார்   

வனவிஞ்ஞானியன வினயக்ராவ் படில் தனது’’ யூகலிப்டஸ் – ஒரு இந்திய அனுபவம்’’ எனும் நூலில் ( Vinayakrao Patil Eucalyptus—An Experience in India” (1995), )

  • யூகலிப்டஸ் அதிக நிலத்தடி நீரை உறிஞ்சுவதில்லை
  • இவை வளர மிக அதிக நீர் தேவையில்லை
  • இவை பிற தாவரங்களுடன் போட்டி போட்டுக்கொண்டு நில வளத்தை உறிஞ்சிக்கொள்வதில்லை
  • இவை மண் வளத்தை குறைப்பதில்லை

என்பதை தெரிவித்திருக்கிறார்.

இவை நிலத்தடி நீரை உறிஞ்சி மண்ணை வளமற்றதாகும் என்பதெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட, திரிக்கப்பட்ட உண்மைகள்.

உலக நாடுகளில் அதிக அளவில் யூகலிப்டஸ் மரங்களை உற்பத்தி செய்பவர்கள் சீனா, ஸ்பெயின், போர்ச்சுக்கல், தென்னாப்ரிக்கா ஆகியவை

அழகிய கம்பீரமான தோற்றம், அபாரமான உயரம், பிரகாசமான மலர்கள், பசுமை மாறா நறுமணமிக்க இலைகள், தேன் கொண்டிருப்பது, நெருப்பையும் தாங்கி சாம்பலிலிருந்து முளைத்தெழும் இயல்பு என யூகலிப்டஸ் பிற மரங்களை விட தனித்துவம் வாய்ந்தது  

1, https://dannyreviews.com/h/Eucalyptus.html

2. https://en.wikipedia.org/wiki/Snugglepot_and_Cuddlepie

3. https://en.wikipedia.org/wiki/Flora_Australiensis

4.https://www.esri.com/news/arcwatch/0210/the-centurion.html#:~:text=The%20swamp%20gum%2C%20a%20eucalyptus,and%20the%20tallest%20flowering%20plant.

5. https://bluemountains-australia.com/about-the-blue-mountains/blue-mountains-facts/

6.https://www.downtoearth.org.in/blog/water/why-eucalyptus–60275#:~:text=In%20fact%2C%20many%20studies%20have,impact%20on%20the%20water%20table.