மலையாளத்தில் புகழ்பெற்ற டேக் ஆஃப் படத்தின் மூலம் பிரபலமாகியிருக்கும் மகேஷ் நாராயணன் இயக்கி, தொகுத்து, திரைக்கதை எழுதி 2021 ஜூலை 15ல் நேரடியாக அமேஸான் பிரைமில் வெளியாகி இருக்கும் அரசியல் திரில்லர் திரைப்படம் மாலிக்.
ஃபகத் ஃபாஸில், வினய் ஃபோர்ட் , திலீஷ் போத்தன் மற்றும் நிமிஷா சஜயன் முக்கிய பாத்திரங்களில். ஜோஜு ஜார்ஜ், இந்திரன்ஸ் ஆகியோர் உடன் இருக்கின்றனர். ஒளி இயக்கம் சானு ஜான் வர்கீஸ், இசை கும்பளாங்கி நைட்ஸ் படத்தின் இசையால் மிக பிரபலமான சுஷின் ஸ்யாம்.
கேரளாவில் திருவனந்தபுரத்தில் கடலோர புறநகர்ப் பகுதியான பீமா பள்ளியில் (Beemapally) தெய்வீக சக்தி இருப்பதாக நம்பப்படும் பெண்ணான சையதுன்னிசா பீமா பீவி, அவரது மகன் சையது சுஹாதா மஹீன் அபுபக்கர் ஆகியோரின் கல்லறைகள் அமைந்துள்ள பீமா பள்ளி தர்கா மிக பிரபலமானது.
2009 ல் பொதுமக்களில் 42 பேர் படுகாயமுற்று 6 பேர் இறந்து, பல காவல்துறை அதிகாரிகள் பணிநீக்கமும் பணி மாறுதலும் செய்யப்பட காரணமாயிருந்த பீமாபள்ளி துப்பாக்கிச்சூடு விவகாரத்தை அடிப்படையாக கொண்டு ரமதபள்ளி என்னும் கிராமத்தை கட்டியெழுப்பி உருவானதுதான் மாலிக்.
ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவர்களும் மாப்பிள்ளா முஸ்லிம்களும் வசிக்கும் ரமத பள்ளி கடலோர கிராமத்தின் குற்ற உலகின் ராஜாவான அலிஇக்கா, அவரின் கிறிஸ்துவ காதல் மனைவி ரோஸ்லின், நடுத்தர வயது அலிஇக்காவான ஃபகத் ஹஜ் புனித யாத்திரை கிளம்பும் நன்நாளில் கதை தொடங்கி விமானத்தில் நுழையும் போது அவர் தடாவில் கைது செய்யப்படுவதிலிருந்து விரிந்து நம்மை நிமிர்ந்து உட்கார வைத்து விடுகிறது.
மகேஷ் நாராயணனின் விறுவிறுப்பான கதை சொல்லல் படத்தை தொய்வின்றி கொண்டு செல்கிறது, ஆழமான, அட்டகாசமான அவரின் வசனங்கள் படத்திற்கு பெரும் பலம் சேர்க்கின்றன.
கொஞ்சம் நீளமான ஃப்ளேஷ்பேக். கிறிஸ்தவர்கள் அதிகமாக இருக்கும் எடவத்துறை கடலோரத்தை சேர்ந்த சின்ன சின்ன திருட்டுகளில் ஈடுபடும் அலி, டேவிட், பீட்டர் என்னும் சிறுவர்கள் தாதா சந்திரனின் ஆளுகைக்கு கீழ் வந்து அவருக்காக குற்றங்கள் செய்ய தொடங்குகின்றனர். ஒரு கட்டத்தில் சந்திரனிடமிருந்து பிரியும் அவர்கள் சந்திரனுக்கு எதிராக திரும்புவதுடன் தனியே கள்ள கடத்தல வியாபாரம் செய்ய தொடங்குகிறார்கள்.
சின்ன திருட்டுகளில் ஈடுபடும் சிறுவன் அலி, பின்னர் கடல் கடத்தலில் இறங்கி மெல்ல மெல்ல வளர்ந்து துணை ஆட்சியரின் நம்பிக்கைக்கு ஆளாகி குப்பைக்கூளங்களை அகற்றி அவ்விடத்தில் பள்ளி கூடம் அமைத்து நலப்பணிகளில் ஈடுபட்டு அலிஇக்கா என்னும் நாயகனாவதும், ஒற்றுமையாயிருந்த கிறிஸ்தவ முஸ்லிம் மக்களிடையே பிரிவினையை உண்டாக்கி அந்த விரோத நெருப்பை அணையாமல் பார்த்துக்கொள்ளும் அரசியல்வாதிகளும், துணைபோகும் காவல்துறையும், இடையில் உண்டாகும் ஃபகத்தின் ரோஸ்லின் மீதான் காதலும் அவரைக் கொல்ல செய்யப்படும் முயற்சிகளும் அவருடனெயே இருந்து மெல்ல வளர்ந்து அரசியல்வாதியாகும் திலீஷ்போத்தனின் நயவஞ்சகமும், வேண்டுமென்றே உருவாக்கப்பட்ட கலவரமுமாக கதை வளர்கின்றது.
குற்றப் பின்னணி, கடல் வணிகம், கள்ளக்கடத்தல் , எளிய மக்களின் நாயகன், அவர் மீதான கொலை முயற்சி, அவர் மகன் அநியாயமாக கொல்லப்படுவது, ஒற்றை மகள் என கதை கமலின் நாயகனை கண்முன்னே கொண்டு வருகிறது. இப்படியான திரைக்கதைகளில் இனி 70களின் காட் ஃபாதரும் 80 களின் நாயகனும் நினைவுக்கு வராமல் இருக்கும் சாத்தியமே இல்லை.
ஃபகத்தின் நடிப்பை குறித்து புதிதாக சொல்ல ஏதுமில்லை. மூன்றாவது முறையாக இயக்குநர் மகேஷுடன் இணைந்திருக்கும் ஃபகத் வழக்கம்போல அசத்தல். பாராட்டுக்களுக்கு அப்பாற்பட்டவராகி விட்டிருக்கும் ஃபகத்தின் கிரீடத்தில் மற்றுமொரு சிறகு மாலிக்.
திரைஉலகின் பொற்கதவுகளை திறந்து நுழைந்திருக்கும் 24 வயதே ஆகும் நிமிஷா சஜயனுக்காக காத்திருக்கும் திரைக்களங்களையும் அவர் அடையப்போகும் உயரங்களையும் நம்மால் இப்போதே கணிக்கமுடிகின்றது. மகன் இறக்கும் காட்சியில் பள்ளிவாசலில் அவன் சடலத்தை எடுத்துக்கொண்டு போகும்போது அவர் கதறும் கதறலுடன் அவர் வயதையும் அவரது நடிப்பனுபவங்களையும் எண்ணிப்பார்க்கையில் பிரமிப்பாக இருக்கிறது. ஃபகத்துக்கு இணையாக நடித்து இருக்கிறார்.
வழக்கமாக ஆங்காங்கே தலைகாட்டும் திலீஷ் போத்தன் இதில் படம் நெடுகிலும் வருகிறார், சிறப்பான நடிப்பையும் அளித்திருக்கிறார், காவலதிகாரியாக இந்திரன்ஸ். எந்த முகமாறுபாடுமின்றி அரசியல்வாதிகளின் ஆணைக்கு துணைபோகும், எந்த சிந்தனையுமின்றி சிறைக்குள்ளே அநீதி இழைக்கும் காவலதிகாரிகளின் ஒட்டுமொத்த பிம்பமாக அவரை காட்டியிருக்கிறார்கள். உணர்ச்சிகளற்ற முகத்துடன் பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். வினய் ஃபோர்ட் மிக சிறப்பான,இயல்பான நடிப்பு.
கூரான, கவனிக்க வைக்கும் வசனங்கள். குறிப்பாக திலீஷ் போத்தனிடமும், துணை ஆட்சியரிடமும் பேசுவதும் , வினயிடம் கைகளை அகல விரித்தபடி அனைத்துலக மக்களையும் எந்த பாகுபாடுமின்றி தழுவ நிற்கும் ஏசு கிறிஸ்துவின் சிலையை காட்டியும் ஃபகத் பேசும் வசனங்கள் மிகவும் சிறப்பானவை.
ஏறக்குறைய மூன்று மணி நேர படத்தின் நீளம்,பெரும்பாலும் யூகிக்க முடிகிற திரையோட்டம், நீளமான பிளாஷ்பேக் ஃபகத்தின் மகனின் இறப்பை சரியாக விளக்காமல் போனது, கமலின் நாயகனையும், அனுராக் காஷ்யப்பின் சில படங்களையும் அதிகம் நினைவூட்டுவது ஆகியவை இப்படத்தின் சறுக்கல்கள் எனக்கொண்டால், நல்ல இயக்கம், சிறப்பான திரைக்கதை தற்கால அரசியல் மற்றும் சமூக அமைப்பு, அதன் பகடைக்காய்களாக மைனாரிட்டி மக்களின் பிரச்சனைகளை அரசியலாளர்கள் பயன்படுத்துவது குறித்த கதை, மற்றும் முக்கிய நடிகர்களின் சிறப்பான நடிப்பு ஆகியவற்றிற்காக பாராட்டுக்கு உரிய படம்தான்
மாலிக் , நிச்சயம் பார்க்க வேண்டிய மலையாள நாயகன்
Leave a Reply