மண்ணிலிருந்து நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை வேர்களால் உறிஞ்சிக்கொண்டு, பச்சை இலைகளால் உணவை தயாரிக்கும், நகர முடியாத, செயலற்ற உயிரினங்களாக அறியப்படும் தாவரங்களில் ஊனுண்ணுபவையும் இருக்கின்றன என்பது ஆச்சர்யமான விஷயம்.
ஊனுண்ணித் தாவரங்கள் எனப்படுபவையும் பிற தாவரங்களை போலவே இலைகளின் பச்சையத்தினால், சூரியஒளியை கொண்டு உணவை தயாரிப்பவைதான் ஆனால் இத்தாவரங்கள் வளரும் வளமற்ற நிலங்களில் இல்லாத சத்துக்களை பெறுவதற்காகத்தான் அருகில் வரும் பூச்சிகளையும் சிறு விலங்குகளையும் இவை பொறிகளில் பிடித்து ஜீரணித்து சத்துக்களை எடுத்துக் கொள்கின்றன. இத்தாவரங்கள் ஆங்கிலத்தில் சுருக்கமாக CPs எனப்படுகின்றன. (Carnivorous plants). பிரிடிஷ் இயற்கையாளரும் பரிணாமவியலின் தந்தையுமான சார்லஸ் டார்வின்தான் 1875 ல் insectivorous plants என்னும் இத்தாவரங்களைக்குறித்த முதல் புத்தகத்தை எழுதினார்.
பெரும்பாலும் இரண்டு அல்லது மூன்று வகையான ஊனுண்ணித் தாவரங்கள் ஓரிடத்தில் சேர்ந்து வாழும். உதாரணமாக சாரசீனியா, டுரோசீரா மற்றும் பிங்க்யூக்குலா ஆகியவை, மிக நெருக்கமாக அருகருகே வளரும்.
இத்தாவரங்கள் ஈரமான ஒளி நிறைந்த வளம் குன்றிய இடங்களில் தான் வாழ்கின்றன. இவை வளரும் இடங்களின் நிலத்தில் பெரும்பாலும் நைட்ரஜன் சத்து இருக்காது அல்லது மிகக் குறைவாகவே இருக்கும்.
விதிவிலக்காக ட்ரோஸோஃபில்லம் லுஸிடேனியகம் (Drosophyllum lusitanicum ) மட்டுமே போர்ச்சுக்கல் மற்றும் மொரோக்கோவின் கனிம வளம் நிறைந்த மலைப்பகுதிகளில் வளருகின்றன
ஊனுண்ணி தாவரங்களின் பிரத்யேக மூன்று இயல்புகளே இவற்றை பிற தாவரங்களிலிருந்து வேறு படுத்துகின்றன
அவை:
- அருகில் வரும் இரையை அவை தப்பிக்க இயலாத படி பிடித்துக் கொள்ளுதல்
- சிக்கிக்கொண்ட பூச்சிகளை ஜீரணிக்க சிறப்பான அமைப்புக்களும் , நொதிகளும் கொண்டிருத்தல்
- இரையின் உடலில் இருந்து அவற்றிற்குதேவையான ஊட்டச்சத்துக்களை எடுத்துக் கொள்ளுதல்
ஊன் உண்ணும் அல்லது பூச்சியுண்ணும் தாவரங்கள் தங்களது இலைகளை இரை வந்து மாட்டிக் கொள்ளும் பொறியாக மாற்றி அமைத்து .வண்டு, தேனீ போன்ற சிறு பூச்சிகளையும் சிலந்திகள், மெல்லுடலிகள் மற்றும் நீர்வாழ் சிறு உயிரிகள், எலிகள், தவளைகள், பல்லிகள், சிறு பறவைகள் ஆகியவற்றையும் உண்ணும்.
சில இலைப்பொறிகள் இரையை கவர்ந்திழுக்க பிரகாசமான தனித்துவமான நிறங்களுடன் இருக்கும், இன்னும் சிலவற்றில் இனிப்பு திரவம் சுரக்கும் சுரப்பிகள் இருக்கும், அடர்ந்த முடிகளை போன்ற மெல்லிழைகள், குடுவை போன்ற நீட்சிகள், ஒட்டிக்கொள்ளும் பசை நுனிகளுடனிருக்கும் மொட்டுக்கள், கூரான முட்களுடன் கூடிய கிளிப் போன்ற அமைப்புகள் என்று பலவிதமான பொறிகளை இவை கொண்டிருக்கும்.
1859ல் ஜாவா தீவுகளுக்கருகிலிருக்கும் போர்மியோ தீவுகளில் மட்டும் காணப்படும் Nepenthes rajah கண்டுபிடிக்கபட்டது. இது ஒரு மிக அரிய வகை மிகப்பெரிய ஊனுண்ணித்தாவரமாகும். இதன் குடுவையில் 3 லிட்டர் வரை நொதிக்கும் திரவம் நிறைந்திருக்கும்.
இலைகளை இரையை பிடிப்பதற்கு ஏதுவாக, தேவைகளுக்கேற்ற வடிவங்களிலும் அளவுகளிலும் இத்தாவரங்கள் மாற்றியமைத்துக் கொண்டிருக்கும். குடுவை தாவரங்கள் (Pitcher plants) இலையின் நுனியில் மூடிகளுடன் கூடிய ஆழமான குழிகள் உள்ள குடுவைகளை கொண்டிருக்கும். குடுவையினுள் இரையாகும் பூச்சிகளை ஜீரணிக்கும் நொதிகளடங்கிய திரவம் நிரம்பியிருக்கும்.
பட்டர் வொர்ட் செடிகளின் (butterworts) இலைகளின் பரப்பெங்கும் ஒட்டிக்கொள்ளும் பிசுபிசுப்பான திரவம் இருக்கும். வீனஸ் பறக்கும் பொறி தாவரத்தில் இரண்டு பாகங்களாக இருக்கும் இலைகளின் ஓரத்தில் கூரிய முட்கள் இருக்கும் (Venus flytrap -Dionaea muscipula), சன் ட்யூக்களில் (sundews) சுரப்பிகளுடன் கூடிய மெல்லிழைகள் தாவர உடலெங்கும் நிறைந்திருக்கும், பிளேடர் வொர்ட்டில் (bladderwort) பைகளை போன்ற அமைப்பிருக்கும். லாப்ஸ்டர் குடுவை பொறித்தாவரமான (Lobster-pot traps) ஜென்லிஸா பேரினங்களில் (genus Genlisea), மாட்டிக்கொண்ட் இரையை குடுவையின் ஆழத்திற்கு தள்ளிவிடும் கீழ்நோக்கி அமைந்திருக்கும் ஏராளமான் கூரிய முட்கள் இருக்கும்.
sun dew- Drocera binata monkey caps
மலேசியாவின் குரங்குதொப்பிசெடி எனப்படும் பெரும் நெஃபெந்தெஸ் செடிகளில் எலிகளும் பல்லிகளும் சுலபமாக சிக்கிக்கொள்ளும். கொலம்பியா மற்றும் பிரேசிலை சேர்ந்த ப்ரோச்சீனியாவின் (Brocchinia reducta) இளம் பச்சை இலைகளில் சிக்கிக்கொள்ளும் பூச்சிகளை அவை பாக்டீரியாக்களை கொண்டு ஜீரணிக்கின்றன.
Darlingtonia மற்றும் Nepenthes போன்ற தாவரங்கள் சிக்கிக்கொண்ட இரையின் உடல் சத்துக்களை கிரகிக்க சில பாக்டீரியாக்களை சார்ந்திருக்கின்றன. சாரசீனியா அலாட்டாவில் (Sarracenia alata), ஒளிச்சேர்க்கைக்கெனவும் பூச்சிகளை பிடிப்பதற்கும் தனித்தனி இலைகள் ஒரே தாவரத்தில் அமைந்திருக்கும்
விலங்குகளின் வயிற்றில் ஜீரணம் நடப்பது போலவே பாக்டீரியாக்களையும், நொதிகளையும் உபயோகித்து ஊனுண்ணித்தாவரங்கள் இரையை முற்றிலுமாக கரைத்து நைட்ரஜன் மற்றும் உப்புக்களாக சத்துக்களை எடுத்துக் கொள்கின்றன.
இவற்றில் மிக சிறிய டுரோசிராக்களிலிருந்து, கொடிகளாக வளரும் நெஃபன்தஸை போல பெரிய தாவரங்களும் உள்ளன.
ஊனுண்ணித்தாவரங்கள் லெண்டிபுலேரியெசியே-(Lentibulariaceae), ட்ரொஸீரேசியே (Droseraceae.), ட்ரோஸோஃபில்லேசியே (Drosophyllaceae), ஸெஃபலோட்டேசியே,(Cephalotaceae) சாரசினியேசியே (Sarraceniacea), நெபெந்தேசியே (Nepenthaceae), பைப்லிடேசியே (Byblidaceae), அன்னாசி பழத்தின் குடும்பமான புரோமீலியேசியே (Bromeliaceae) என இந்த ஊனுண்ணி தாவரங்கள் சார்ந்திருக்கும் குடும்பங்களும் ஒன்றுக்கொன்று எந்த தொடர்பும் உறவும் இல்லாதவை என்பதும் ஒரு புதிர்தான்
cobra lilies water wheel
இவற்றின் பொறிகளின் வடிவங்கள் பல வகைப்படும். பாம்பின் படம் போலிருக்கும் நாக அல்லி, (Cobra lily), சக்கரம் போலிருக்கும் Water wheel ஆகியவற்றுடன் ஸ்பெயின், மொராக்கோ மற்றும் போர்ச்சுக்கலில் இலைகளிலிருந்து நல்ல நறுமணத்தை பரப்பி பூச்சிகளை கவர்ந்திழுக்கும் பனிப்பைன் போன்ற (dewy pine) ஊசியிலை தாவரங்களும் உள்ளன.
இவற்றின் வாழிடங்கள் பொதுவாக சேற்றுப்பரப்பு மற்றும் சதுப்பு நிலங்கள், அட்ரிகுலேரியா (Utricularia) மற்றும் ஆல்ட்ரோவாண்டா (Aldrovanda) இவையிரண்டும் நன்னீர் வாழிடங்களின் ஊனுண்ணித்தாவரங்களாகும்.
அட்ரிகுலேரியா பிங்யூக்குலா
இத்தாவரங்கள் பூச்சிகளை பிடித்து கொன்று உண்ணுவதை கண்களால் பார்க்க முடிவதால் இவற்றை ஊனுண்ணிகள் என அடையாளம் காணமுடிந்தது. எனினும் இவற்றின் பிரத்யேக செயற்பாடுகள் குறித்து முழுமையான அறிதல் தாவரவியலாளர்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை, டார்வினின் காலத்திலிருந்தே இவற்றைக் குறித்து ஆய்வுகள் செய்யப்பட்டு வருகின்றன. இத்தனை ஆண்டுகளில் இத்தாவரங்களில் இரையை ஜீரணிக்க உதவும் பலநூறு நொதிகளில் (Enzymes) Nepenthesin என்னும் ஒரே ஒரு நொதிதான் இனங்காணப்பட்டுள்ளது.
உலக நாடுகள் எல்லாவற்றிலும் காணப்படும் 600க்கும் மேற்பட்ட இந்த ஊனுண்ணித் தாவரங்கள் அண்டார்டிகா மற்றும் பசிபிக் தீவுகளில் மட்டும் இல்லை.
பூச்சிகளை பிடிக்கும் எல்லா தாவரங்களும் ஊனுண்ணிகளல்ல. அரிஸ்டலோக்கியாவை (Aristolochia) போல சில தாவரங்கள் மகரந்த சேர்க்கைக்காக பூச்சிகளை கவர்ந்து அவற்றை தாவரங்களின் பாகங்களில் ஒட்டிக்கொள்ளும்படி செய்யும். இவை ஊனுண்ணித் தாவரங்கள் அல்ல .ஏனெனில் இவை பூச்சிகளை ஒருபோதும் கொல்லுவதில்லை. மேலும் ஊனுண்ணித் தாவரங்கள் எப்போதும் அவற்றின் மலர்களை பொறிகளாக பயன்படுத்துவதில்லை.
இதைப்போலவே மேய்ச்சல் விலங்குகளிடமிருந்தும், பூச்சிகள் இலைகளை தாக்காதவண்ணம் பாதுகாத்துக்கொள்ளவும் இலைகளில் பிசினைசுரக்கும் தாவரங்களும் ஊனுண்ணித்தாவரங்களல்ல. அவை தங்களின் பாதுகாப்பிற்காக பிசினில் பூச்சிகளை சிக்க வைத்தாலும், அப்பூச்சிகளை கொன்று சீரணிப்பதில்லை. உதாரணமாக ஒட்டும் தன்மையுடைய இலைகளைக் கொண்டிருக்கும் ஐபிசெல்லா லூட்டியா ( Ibicella lutea), ப்ரொபோஸிடியா லூசியானிக்கா ( Proboscidea louisianica) மற்றும் ப்ரொபோஸிடியா பார்விஃப்ளோரா( P. parviflora) ஆகியவை ஊனுண்னிகளல்ல இவற்றின் ,இலைகளில் ஒட்டிக்கொள்ளும் பூச்சிகள் அப்படியே இறந்து உலர்ந்துவிடுகின்றன. இவைகளெல்லாம் pre carnivorous plants , அதாவது ஊனுண்னுவதற்கு முந்தைய நிலையிலிருப்பவையென்று கருதப்படுகின்றன. இவை காலப்போக்கில் ஊனுண்ணுபவைகளாக பரிணாம வளர்ச்சி அடையவும் வாய்ப்புள்ளது
பூச்சிகளை கொல்லும் நொதிகளை கொண்டிருக்காததால் பூச்சிகளை இலைகளில் பிடித்து மட்டும் வைத்துக்கொண்டு, சிக்கிய பூச்சிகளை உண்ண வரும் வண்டுகளின் கழிவுகளை உறிஞ்சி அதிலிருக்கும் சத்துக்களை கிரகிக்கும் ரோரிடூலா (Roridula) எனப்படும் ஒரு தாவரம் விளிம்புநிலை ஊனுண்ணித்தாவரமென்று அழைக்கப்படுகிறது.(Marginal Carnivorous plant). இதுவும் மெல்ல மெல்ல முழுமையான ஊனுண்ணுபவைகளாக மாறக்கூடும்
இரைகள் கிடைக்காதபோது இவைகளும் பிற தாவரங்களைப் போல ஒளி சேர்க்கை செய்து மெதுவாக வளர்ந்து கொண்டுதான் இருக்கும், இரைகள் கிடைத்து அவற்றை ஜீரணித்து சத்துக்களை உறிஞ்சிய பின்னர் இவற்றின் வளர்ச்சி துரிதமாகும்.
உலக இயற்கை வளத்தை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு பன்னாட்டு அமைப்பான ‘’பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம்’’ (International Union for Conservation of Nature – IUCN), ஊனுண்னித்தாவரங்களில் 50 சதவீதம் அழியும் ஆபத்தில் இருப்பதாக சொல்கின்றது.
சூழல் மாசுபாடு, வாழிடங்கள் அழிந்து கொண்டு வருவது, மனிதர்களின் செயல்பாடு போன்ற பல காரணங்களுடன் வேறு சில பிரத்யேக காரணங்களாலும் இவை அழிந்து வருகின்றன, பல ஊனுண்ணி தாவரங்கள் மிக மெதுவாக வளர்வதால் தொடர்ந்து விழுந்துகொண்டே இருக்கும் இலைக் குப்பைகளால் மூழ்கடிக்கப்பட்டு அழிந்துவிடுகின்றன. பிங்யூக்குலா வேலிஸ்நீரிஃபோலியா (Pinguicula vallisneriifolia) தாவரம் தனதருகில் மகரந்தசேர்க்கைக்கென வரும் பூச்சிகளையும் இரையென நினைத்து கொன்றுவிடுவதால் அழியும் அபாயத்தில் இருக்கிறது. இந்த தவறை செய்ய கூடாதென வீனஸ் பறக்கும் தாவரம் புத்திசாலித்தனமாக தனது மலர்களை இலைகளிலிருந்து வெகு உயரத்தில் தோற்றுவிக்கிறது,
அலபாமாவில் மட்டுமே வளரும் அரிய வகை ஊனுண்ணித்தாவரமாகிய சாரசீனியா (Sarracenia Rubra ssp. Alabamensis) மிக அழகிய மரூன் நிற மலர்களை தோற்றுவிக்கும் இவற்றினழகுக்காகவே இவற்றை தேடி தேடி சேகரிப்போரால் இவை இப்போது மிக குறைந்த எண்ணிக்கையில் அழியும் ஆபத்தில் இருக்கிறது.
இவற்றின் பிரத்யேக வாழிடங்களினாலும், வளர்ச்சிக்கு தேவைப்படும் சிறப்பான சத்துக்களினாலும் இவற்றை அழிவிலிருந்து பாதுகாப்பது கடினமாகி விட்டிருக்கிறது. எனினும் ஒருசில ஊனுண்ணித்தாவரங்களை தோட்டக்கலைத்துறையினர் பசுமைக்குடில்களிலும், சிறப்பாக உருவக்கப்பட்ட வாழிடங்களிலும் வளர்க்கிறார்கள். வீனஸ் பறக்கும் பொறித்தாவரம் உள்ளிட்ட சில வகைகள் ஆன்லைன் வர்த்தகத்தில் விற்பனையாகின்றன.
அழகுச்செடிகளாக வீனஸ் பறக்கும் பொறித்தாவரம் தொட்டிகளில்
கொல்லுதல், கொன்று தின்னுதல் என்னும் வார்த்தை பிரயோகங்களால் தாவரங்களை குறிப்பிடுவது பொருத்தமற்றதாக கூடத் தோன்றலாம் ஆனால் பலநூறு ஆண்டுகளாக சுய தேவைக்காக உள்நோக்கத்துடன் ஒரு உயிர் மற்றொரு உயிரை கொல்லுவதென்பது கொலைதான். ஆனால் டார்வின் சொல்லியிருப்பது போல எப்படியேனும் உயிர்பிழைக்க எந்த வழியையாவது கண்டுபிடிக்கும் போதுதான் உயிரினங்களில் பரிணாம்வளர்ச்சியென்பது உருவாகின்றது. தங்களுக்கு தேவையான சத்துக்களை ஒரே இடத்தில் இருந்தபடி பலவழிமுறைகளை மேற்கொண்டு நிறைவேற்றிக்கொள்ளும் இவற்றின் புத்திசாலித்தனத்தை பாராட்டவேண்டும் தானே!
விற்பனைக்கு தயாராக வீனஸ் செடிகள்
Leave a Reply