ஓணம் பண்டிகை கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக அமேஸான் பிரைமில் வெளியாகி இருக்கும் # Home ஒரு நல்ல நிறைவான, குடும்பத்தினர் அனைவரும் பார்க்கக் கூடிய மலையாளத் திரைப்படம்..
இந்திரன்ஸ், ஸ்ரீநாத் பாஷி, மஞ்சு பிள்ளை, ஸ்ரீகாந்த் முரளி, நேஸ்லென் கே. காஃபூர்,ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இயக்கம் ரோஜின் தாமஸ், தயாரிப்பு ஃப்ரைடே ஃபிலிம் ஹவுஸ் பேனரில் விஜய் பாபு, இவரும் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார்.இசை ராகுல் சுப்ரமணியன், ஒளி இயக்கம் நீல் டி’ சுன்ச்சா.
ஆலிவர் ட்விஸ்ட்டாக இந்திரன்ஸ் அவரின் அழகிய குடும்பமே கதைக்களம் மனைவி குட்டியம்மாவாக மஞ்சு பிள்ளை, ஒரு வெற்றிப்படம் கொடுத்து திரைப்பயணத்தை இயக்குநராக துவங்கிவிட்டு இரண்டாவது ஸ்கிரிப்டுக்காக முயன்று கொண்டிருக்கும் மூத்த மகன் ஆண்டனியாக ஸ்ரீநாத் பாஷி, எந்நேரமும் எதையாவது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு கொண்டே இருக்கும் vlogger பதின்மவயது இளையவன் சார்லஸாக நேஸ்லென் கே. காஃபூர்
இளையோரின் உலகில் தானும் நுழைய முயன்று, இயலாமையும் தன்னிரக்கமுமாக வருந்தும் தந்தை ஒருவர், இளைய தலைமுறையினருடன் உருவாகி இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சியாலாகிய இடைவெளியை நிரப்ப முயல்வதும், அதில் மகன்களுக்கும் தந்தைக்கும் ஏற்படும் உரசலும் முட்டலும் மோதலும் ,பின்னர் புரிதலுமே கதை.
ஆலிவர் என்னும் 60 வயது குடும்ப தலைவரொருவரின் கதை மட்டுமல்ல, இது நம்மில் பலரின் கதையும் தான். நம் வீடுகளிலுமே புதிய திறன் பேசியை , மடிக் கணினியை இயக்கவும், கைப்பேசி வழியே வர்த்தகம் செய்வது குறித்தும் மகன்களிடமும் மகள்களிடமும் கேட்டறிந்து கொள்ளும் பெற்றோர்கள் அநேகம் பேர் இருப்போம்.
இந்த தலைமுறை பிறந்து வளர்ந்ததே தொழில்நுட்ப அதீத வளர்ச்சி காலத்தில்தான் எனவே அதில் அவர்கள் மூழ்கி திளைத்து முத்தெடுத்து கொண்டிருக்கின்றனர். சில்லறை காசுகளை எண்ணி எண்ணி செலவழித்தவர்களான சென்ற தலைமுறையை சேர்ந்தவர்களின் தாத்தாக்களும் பாட்டிகளும் கையிலிருக்கும் சிறு பெட்டி போன்ற கருவியில் வர்த்தகம் செய்வதும், உணவை வரவழைப்பதுமாக உலகமே உள்ளங்கைக்குள் வந்துவிட்டதை அறியாமலேயே மண் மறைந்தவர்கள். நாமோ இந்த தலைமுறையினரின் தொழில்நுட்பம் சார்ந்த, சிக்கல்கள் அற்றது போல தோன்றும் வாழ்க்கையை பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.வேடிக்கை பார்த்துக் கொண்டும், மெல்ல மெல்ல கற்றுக்கொண்டு இருக்கும் தலைமுறையினருக்கும், இமைக்கணத்தில் உலகை தொடர்பு கொள்ளும் இளைய தலைமுறைக்குமான உரசல்களை தான் அழகிய கதையாக்கி இருக்கிறார்கள்.
ஸ்ரீநாத் பாஷி வழக்கம் போல சிறப்பான நடிப்பு,திரைத்துறையின் சவால்களில் சிக்கிக் கொண்டிருக்கும் அவர் பணப் பிரச்சனையிலும் இருக்கிறார். இரண்டாம் ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுக்க வேண்டிய காலக்கெடு கழுத்தை நெருக்குகையில் எப்படியும் எழுதிவிட வேண்டும் என சொந்த ஊருக்கு வருகிறார்.
வீட்டு வேலைகளில் எந்நேரமும் மூழ்கி இருந்தாலும் கணவனின் மனதை அறிந்திருக்கும், கணவனுக்கும் மகன்களுக்கும் இடையில் உண்டாகி இருக்கும் இடைவெளியை குறித்த கவலையுடன் குட்டியம்மா, மிக வயதான முழுநாளும் பிறரின் உதவியை நாட வேண்டி இருக்கும் தள்ளாத ஆலிவரின் தந்தை, சமூகத்தில் பெரிய அந்தஸ்துடன் இருக்கும் மூத்த மகன், சமூக வலைத்தளங்களில் புகுந்து விளையாடும் விளையாட்டுப் பிள்ளையான இளையவன், இருவரின் அணுக்கமும் கிடைக்கப்பெற தந்தையான ஆலிவரின் உணர்வுபூர்வமான போராட்டம் நம்மை கதைக்குள் கொண்டுவந்துவிடுகிறது.
இந்திரன்ஸ் அநாயசமாக நடிக்கிறார்.அதிகம் வசனங்கள் பேசாமல் நுணுக்கமான முக பாவனைகள், உணர்வுபூர்வமான வெளிப்பாடுகள் என, எளிதில் அவரது மனவோட்டத்தை திரையில் கொண்டு வந்துவிடுகிறார். ஆலிவர் புண் படும்போதெல்லாம் பார்வையாளர்களும் புண்பட்டு விடுகிறோம். அப்பாவியாக அவர் முகநூல் பக்கத்தை பற்றி கேட்டுக்கொள்ளுவதும், உயிர்த் தோழனிடம் தன் மனக்குமுறல்களையும் மகிழ்ச்சிகளையும் பகிர்ந்துகொள்வதும், இரவில் மனைவியிடம் மட்டும் தன் அந்தரங்க துயரை ஒரு சில சொற்களில் சொல்லுவதுமாக அசத்தி இருக்கிறார். பண்பட்ட முதிர்ந்த நடிப்பு இந்திரன்ஸுடையது. பலநூறு திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக வந்திருந்தாலும் இந்த திரைப்படம் இவரது திரைப்பயண அனுபவத்தில் அவருக்கும், நமக்கும் கிடைத்திருக்கும் ஒரு அருமணி.
திறன்பேசியை சரியாக கையாளத் தெரியாததால் ஏற்கன்வே சிக்கலில் இருக்கும் மகனின் வாழ்வில் பெரும் இக்கட்டொன்றை கொண்டு வந்துவிடும் தந்தை, அது உண்டாக்கும் விரிசல், காதலியின் மனக்கசப்பு, தந்தையின் துயர், என்று குழப்பமில்லாமல் திரைக்கதை போகிறது. தயாரிப்பாளர் விஜய் பாபு மனநல மருத்துவராக வருகிறார் அவருக்கும் சொல்லிக்கொள்ளும்படியான பாத்திரம்.
அசாதாரணமான அந்த பிளாஷ்பேக் கதை இல்லாவிட்டாலும் இந்த திரைக்கதை வெற்றி பெற்றிருக்கும். அந்த கதையைக் கொண்டு அமைத்திருக்கும் கிளைமேக்ஸ் தவிர்க்கப்பட்டிருக்கலாம். KPAC லலிதாம்மாவின் பாத்திரமும், அவர் இந்திரன்ஸின் வீட்டுக்கு வருவதுமாக அந்த வலுக்கட்டாயமாக இணைக்கபட்ட கடைசிப்பகுதி அழகிய இக்கதைக்கு திருஷ்டிப்பொட்டு போல அமைந்து விட்டது.
குட்டியம்மாவும் இயல்பான நடிப்பு. அந்த மழை நாள் இரவில் ஒரே கூரையின் கீழ் சம்பந்தி வீட்டினரும் அமர்ந்திருக்கையில் உள்ளக் கொந்தளிப்பு தாங்கமுடியால அவர் உடைவது சிறப்பு.,குடும்ப உறவுகளில் ஆண்டனிக்கும் அவனுக்கு திருமணம் செய்ய நிச்சயித்திருக்கும் பிரியாவுக்குமான் உறவும் சொல்லப்படுகின்றது.
ஆலிவரின் நண்பனாக வரும் ஜான் ஆண்டனியும் தயாரிப்பாளராக வரும் மணியன்பிள்ளை ராஜுவும் நகைச்சுவைக்கு உதவுகிறார்கள்.
தலைமுறை இடைவெளிகளை விரிவாக்கியிருக்கும் தொழிநுட்பங்களை மட்டுமல்லாது தொழில்நுட்பத்தின் மிகை பயன்பாடுகள் உருவாக்கி இருக்கும் உளச்சீர்கேடுகளையும், திறன்பேசிக்கு அடிமையாகி இருக்கும் இந்த தலைமுறையையும் இந்த திரைப்படம் எளிமையாக, ஆனால் அழுத்தமாக சொல்லுகின்றது. திரைப்படம் துவங்கும் முன்னரே ’’தயவு செய்து இடையிடையே கைபேசியை பார்க்காதீர்கள்’’ என்னும் வேண்டுகோள் விடுக்கப்படுவது ஏனென்று படம் பார்க்க பார்க்க பார்வையாளர்களுக்கு புரிகின்றது.
புதியவற்றை கற்றுக்கொள்ள விழையும் தந்தை ஒருவரின் கதைஎன்பதுடன் 160 நிமிடங்கள் ஓடும் இந்த திரைப்படத்தின் பலம் கதையின் ஒவ்வொரு பாத்திரத்தின் நியாய அநியாயங்களை சரியாக எடுத்துக் காட்டி இருப்பதிலும் இருக்கிறது.
ஐந்து பாட்டு, ஐந்து சண்டைக்காட்சிகள், நடனம், வீர தீர சாகசங்கள் செய்யும் நாயகன், பேரழகாக ஒரு நாயகி என்னும் மரபான பொழுதுபோக்கு திரைப்படங்களை விரும்புவோருக்கானது அல்ல இந்த படம். மாறி வரும் திரைச்சூழலில் இப்போதைய காலகட்டத்தில் நடந்து கொண்டிருக்கும் பல சிக்கல்களில் ஒன்றை எடுத்து விரித்து அழகாக காட்டும் திரைப்படம் இது.
மலர்கண்காட்சியிலிருக்கும் ஆயிரக்கணக்கான மலர்க்கூட்டங்கள் அழகுதானென்றாலும், மலைச்சரிவில் காட்டுச்செடி ஒன்றில் மலர்ந்திருக்கும் ஒற்றைச் சிறு மலரும் அழகுதானே! அப்படி ஒரு எளிய அழகான உணர்வுபூர்வமான திரைப்படம் தான் # Home.
குடும்பம் என்பதற்கான வரைமுறைகள் மாறிக்கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் இதுபோன்ற திரைப்படங்கள் மிக முக்கியமாகிவிடுகிறது. அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம் இது