தாவரங்கள் என்று நமக்கு தெரிந்தவை எல்லாமே இலையும் கிளையும் மலரும், வேரும் கொண்ட பெருமரங்களும், பச்சைக் கொடிகளும் பசுங்கத்திகளென இலை கொண்டிருக்கும் புற்களும், புதர்களும் செடிகளும்தான், ஒரு சிலரே பாசிகளும் பெரணிகளும் அடங்கிய பூக்காத கீழ்நிலைத்தாவரஙகளை அறிந்திருப்பார்கள். துருவக்கரடிகளையும், பென்குவின்ப றவைகளையும், உறைபனிநீரில் மீன்பிடிக்கும் எஸ்கிமோக்களையும் மட்டுமே நம்மில் பலர் துருவப்பகுதியின் வாழ்வாக அறிந்திருப்போம் ஆனால் கடுமையான குளிர், அதிக காற்று மற்றும் மிகக் குறைந்த ஈரப்பதம் கொண்டிருக்கும் அண்டார்டிகா மற்றும் ஆர்க்டிக் பகுதிகளில் -125.8 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பநிலை குறைவாக பதிவு செய்யப்பட்டிருக்கும் சுற்றுச்சூழலிலும், தாவர -விலங்கு வாழ்க்கை இருக்கிறது.
ஆர்க்டிக் (Arctic) என்பது பூமியின் வட முனையில் அமைந்துள்ள பகுதியாகும். இது தென் முனையில் உள்ள அண்டார்டிகாவுக்கு எதிர்ப்புறத்தில் உள்ளது. ஆர்க்டிக் பகுதியானது, ஆர்க்டிக் பெருங்கடல், மற்றும் கனடா, கிரீன்லாந்து (டென்மார்க்கின் பகுதி), ரஷ்யா, அலாஸ்கா (ஐக்கிய அமெரிக்கா), ஐஸ்லாந்து, நார்வே, சுவீடன், பின்லாந்து ஆகியவற்றின் சில பகுதிகளை உள்ளடக்கியது.ஆர்க்டிக்கின் பெரும் பகுதி பனிக்கட்டிக் கடலையே கொண்டுள்ளது. இங்கு பொதுவாக பனிப்பகுதியில் வாழத் தகுதியான உயிரினங்களே (மனிதர் உட்பட) வாழுகின்றன. ஆர்க்டிக் பழங்குடி மக்களின் வாழ்க்கை குளிர் பிரதேசங்களின் வாழ்க்கை முறைகளுக்கு ஒத்ததாக அமைந்துள்ளது. ஆர்க்டிக் என்ற சொல் கிரேக்க மொழிச் சொல்லான ஆர்க்டிகோஸ் என்பதிலிருந்து “கரடிக்கு அருகே,,ஆர்க்டிக், வடக்கே”என்னும் பொருளில் வைக்கப்பட்டது.
பூமியிலேயே மிகவும் குளிர்ந்த பகுதியான அண்டார்டிகா (Antarctica) பூமியின் தென் முனையை சூழ்ந்திருக்கும் ஒரு கண்டமாகும்.புவியின் தென்முனையில் அமைந்திருப்பதனால் இப்பகுதிக்கு சூரிய வெப்பம் மிகக் குறைந்த அளவே வந்து சேர்கிறது. இதன் காரணமாக கண்டம் முழுவதும் பனிக்கட்டியினால் மூடப்பட்டிருக்கும். வருடத்தின் ஆறு மாதங்கள் சூரிய வெளிச்சமே இருக்காது. அண்டார்டிக்கா என்ற பெயர் கிரேக்க மொழியில் “ஆர்க்டிக்கிற்கு எதிரிடையான”, கரடி இல்லாத, “வடக்கிற்கு எதிரிடையாக” என்னும் பொருள்களை கொண்டிருக்கிறது.
துருவப் பகுதிகளில் வாழ்க்கை நம்பமுடியாத அளவுக்கு கடினமாக இருக்கும். கடுமையான குளிர்ந்த காற்று நிலப்பரப்பு முழுவதும் சாட்டை போல் வீசி அடித்துக் கொண்டிருக்கும். மிக குறைந்த குளிர்கால வெப்பநிலை கொண்ட குளிர்கால இரவு பல மாதங்களுக்கு நீடிக்கும். ஆனால் இந்த கடின, வறண்ட, வெற்று நிலப்பரப்புகளில் உயிர்கள் வாழ்கின்றன.
அண்டார்டிகாவின் பெரும்பகுதி பனியால் மூடப்பட்டிருப்பதால், கண்டத்தின் நிலப்பரப்பில் 1 சதவிகிதம் மட்டுமே தாவரங்களின் வளர்ச்சிக்கு ஏற்றது. இச்சூழலில் தாவரங்கள் தீவிர காலநிலையுடன் போராட பல தகவமைப்புகளைக் கொண்டுள்ளன.
துருவ நிலங்களில் இரண்டு முக்கிய தாவர மண்டலங்கள் காணப்படுகின்றன. தெற்கில், போரியல் காடுகளால் உருவாக்கப்பட்ட துணை ஆர்க்டிக் உள்ளது. வடக்கே இருக்கும் ஆர்க்டிக்கில் பொதுவாக துந்த்ரா தாவரங்கள் உள்ளன ’’tundra’’ என்பது “tunturia” – துந்திரியா அதாவது வெற்று நிலம் என்னும் ஒரு திறந்த சமவெளிக்கான ஃபின்னிஷ் வார்த்தையிலிருந்து உருவான சொல். துந்திரா காடுகள் உலகின் 20 சதவீத நிலப்பரப்பை ஆக்கிரமித்திருக்கிறது. ஆர்க்டிக் துந்த்ரா வில் மணிக்கு 97 கி மீ வேகத்தில் பனிப்புயல் வீசும்
ஆர்க்டிக் தாவரங்கள் குறைந்த வெப்பநிலை, கோடை காலத்தில் தொடர்ச்சியான பகல், வளமற்ற மண் மற்றும் நிரந்தரமாக உறைந்த நிலம், வலுவான, வறண்ட காற்று மற்றும் வீசும், பனிப்பொழிவு உள்ளிட்ட கடுமையான சூழலுடன் போராட வேண்டும். இத்தனையும் தாங்கி வளருவதால் இத்தாவரங்கள் பெரும்பாலும் வளர்ச்சி குன்றி காணப்படும்
இத்தாவரங்களின் வாழ்வு சுழற்சிக்காலம் மிக குறுகியது. இவற்றில் annuals எனப்படும் வருடாந்தர தாவரங்கள் மிக அரிது, Perennials எனப்படும் பல்லாண்டுத்தாவரங்களே இங்கு அதிகம் வளரும் இவையும் சிறு வேர்க்கிழங்குகள் மூலம் பாலிலா இனப்பெருக்கம் மட்டுமே செய்யும்
பல தாவரங்கள் துருவப்பகுதியில் மோசமான காலநிலையில் இருந்து தப்பிக்க ஒன்றுடன் ஒன்று இணைந்து மெத்தை போல கூட்டமாக வளரும் துருவப்பகுதியில் வசந்த காலமன்பது பனிப்பொழிவும் உறைபனியும் நிலத்தை மூடியிருக்கும் போதே தொடங்கும். மலர்தளும் விதை உருவாதலும் மிக குறுகிய காலத்திற்கு, சுமார் 6 வாரங்கள் வரை இருக்கும். ஒரே சமயத்தில் இத்தாவரங்கள் மலர்வது மிக சிறப்பான ஒரு நிகழ்வாக இருக்கும் பனிமூடிய வெற்று நிலம் திடீரென்று வண்ணமயமாக மாயவித்தையால் மாற்றப்பட்டது போல் காட்சி தரும்
மண்ணில்லாத பனி மூடிய ஆர்க்டிக் பனிப்பாலை வெற்று நிலம் என்று பார்வைக்கு தோன்றினாலும் கூர்ந்து கவனித்தால் பல சிறு தாவரங்கள் இங்கு வாழ்வதை காணமுடியும்.
துந்திரா பகுதியில் லைக்கன்கள், mosses எனப்டும் பிரையோபைட்டுகள், சில சிறு பூக்கும் தாவரங்கள் ஆகியவை காணப்படும் பசும்புற்களும், குட்டை வில்லோ மற்றும் பிர்ச் மரங்களும் கூட மேற்குப்பகுதியில் வளர்கின்றன. அலாஸ்காவின் வடக்குப்பகுதி வரையிலுமே இந்த தாவரங்களின் பரவலை காணமுடியும்.
பாறைகளில் திட்டுக்களாக பாசிகளும் பூஞ்சைகளும் இணைந்து வாழும் உயிரினங்களான லைக்கன்ஸ் வளர்ந்திருக்கும். இவற்றில் பஞ்சுபோல வளர்ந்திருக்கும் “rock tripe.” எனப்படும் கருப்பு லைக்கன்கள் உண்ணத்தகுந்தவை.இங்கு வரும் ஆராய்ச்சியாளர்கள் பலருக்கு இவையே பல சமயங்களில் உணவாக இருந்திருக்கிறது பாறைப்பிளவுகளில் பிற பூக்கும் சிறு தாவரங்கள் வளரும். ஆர்க்டிக்கின் தெற்கு முனையில் பாறைக்கூட்டங்களின் மறைவில் பனிப்புயலிலிருந்து பாதுக்காப்பாக சிறு சிறு புதர்க்கூட்டங்களும் இருக்கும்.
மித வெப்பம் இருக்கும் ஆர்க்டிக் பகுதிகளில் சிறு புதர்களும் வில்லோ, பிர்ச், ஜூனிபர் மற்றும் ஆல்டர் மரங்களும் வளர்கின்றன. தெற்கு நோக்கிய மலைச்சரிவுகளில் உயரமான வில்லோ, பிர்ச் மற்றும் ஆல்டர் மரங்கள் வளர்கின்றன. இவற்றையே எஸ்கிமோக்கள் விறகுக்காவும், பாய்களை பின்னவும் பயன்படுத்துகின்றனர்.
துந்த்ரா தாவரங்களே இங்கிருக்கும் விலங்குகளுக்கும் உணவாகின்றன.தென் ஆர்க்டிக் பகுதியில் பனிமூடிய நிலத்தில் பல வகை பழங்கள் ஏராளம் சிதறிக்கிடக்கும். இங்கு வசிக்கும் மக்கள் அதிகம் உண்ணுவது கருப்பு காக்காய் பழம்- black crowberry (Empetrum nigrum), முகில் பழம்- cloudberry (Rubus chamaemorus), கருநீலப் பழம்- bilberry (Vaccinium uliginosum), மலைப்பழம்- mountain cranberry (V. vitisidaea minus) ஆகியவற்றையே. காளான்களும் இங்கு பரவலாக வளர்கின்றன.
துணை ஆர்க்டிக் பகுதியில் துந்த்ரா காடுகளில் ஊசியிலை மர வகைகளும், அகன்ற இலைகள் கொண்ட பிர்ச் மரங்களும் உள்ளன.சுமார் 60 பூக்கும் தாவரங்கள் ஆர்க்டிக் பகுதியில் காணப்படுகின்றன. ஆர்க்டிக்கில் மட்டும் சுமார் 1700 தாவரங்கள் வளர்கின்றன. இவற்றில் பூக்கும் தாவரங்களும், ,குட்டைப் புதர்களும், சிறு செடிகளும் பிரையோபைட்டுகளும், லைக்கன்களும் அடக்கம். இங்கிருக்கும் active layer எனப்படும் மிக மெல்லிய மண் படலத்தில் இவை வளருகின்றன.
தடித்த இலைகளின் நீண்ட வடிவத்தினால் நாக்கு செடி என அழைக்கப்படும் குட்டை புதர் ஒன்று இங்கு வாழும் குழி முயல்களுக்கும் வேறு சில விலங்குகளுக்கும் உணவாகிறது
பாஸ்க் செடி எனப்படும் சிறு மலர்களை உருவாக்கும் செடியும், கரடிப்பழம் எனப்படும் தடித்த தோல் போன்ற இலைகளும், கரடிகளுக்கு பிரியமான சிவப்பு பழங்களையும் கொடுக்கும் புதர்களும் (Bearberry) ஊதா நிறத்தில் நட்சத்திரங்களைப் போன்ற சிறு மலர்களை கொடுக்கும் செடியான (Purple saxifrage), அழகிய கிண்ணம் போன்ற மலர்களுடன் ஆர்க்டிக் பாப்பி செடிகள்-Arctic poppy., பருத்திப்புல் எனப்டும் வெண்ணிற புல் வகையான Cotton Grass,.இவற்றுடன் Reindeer lichen எனப்படும் கொம்புகளைபொன்ற அமைப்புகளுடன் இருக்கும் துருவ கலைமான் லைக்கன்களும் அதிகம் இங்கு காணப்படும்.
Rein deer lichen
ஆர்க்டிக்கை விட அண்டார்டிக்கா மிக குளிரான பிரதேசம் என்பதால் நிலம் எப்போதும் உறை பனிப்பொழிவால் மூடியே இருக்கும்.
10 இன்ச்களிலிருந்து 3 அடி ஆழம் வரை பனி உறைந்திருக்கும் நிலப்பரப்பை கொண்டிருக்கும் அண்டார்டிக்காவில் மரங்கள் வளர்வது சாத்தியமில்லை எனவே கீழ்நிலைத்தரங்களே இங்கு அதிகம் காணப்படுகிறன. அண்டார்டிகாவில் பாசிகள், பூஞ்சைகளுடன், சில பாக்டீரியாக்களும், 300 வகையான பிரையோபைட்டுகளும், லைக்கன்கள் மட்டுமே சுமார் 800 வகைகளும், 300 பாசி இனங்களும் உள்ளன.
இரண்டு மீட்டர் உயரம் வரை வளரும் டுஸாக் (Tussock) புற்களை கொண்டிருக்கும் சிறு சிறு புல்வெளி திட்டுக்களும் இங்கு உண்டு.
சிறு சிறு கூட்டங்களாக வளரும் இழைப்புல் வகையும், அண்டார்டிக் முத்துச்செடியும் அண்டார்ட்டிக் பிரதேசத்துக்கு சொந்தமானவை. Antarctic hair grass (Deschampsia antarctica) & Antarctic pearlwort (Colobanthus quitensis).
இரு துருவப்பகுதிகளிலும் பொதுவாக வளரும் தாவரங்கள்:
- Acaena magellanica (Prickly burr (or burnet))
- Acaena tenera (Lesser prickly burr)
- Acaena tenera x magellanica (Hybrid prickly burr)
- Callitriche antarctica (Antarctic water-starwort)
- Colobanthus quitensis (Antarctic pearlwort)
- Colobanthus sublatus (Emerald bog)
- Deschampsia antarctica (Antarctic hair grass)
- Hymenophyllum falklandicum (Falkland filmy-fern)
- Montia fontana (Water blinks)
- Poa annua (Annual meadow-grass)2006ல் கண்டுஇடிகபட்ட 2006 February 20 by Jon Shanklin
- Poa flabellata (Tussac-grass)
- Ranunculus biternatus (Antarctic buttercup)
- Rostkovia magellanica (Short rush)
துருவ தாவரங்கள் அந்த கடினமான சூழலுக்கேற்ற சில தகவமைப்புக்களை கொண்டிருப்பதாலேயே அங்கு தொடர்ந்து வாழ்வை தக்க வைத்துக் கொள்கின்றன
அவை அளவில் மிக சிறியவைகளாகவும், மிக மிக குறைந்த வேர் தொகுப்பையும் கொண்டிருப்பதனால், மிக மெல்லிய மண் படலத்தில் அவற்றால் வாழ முடிகிறது
நிலத்துக்கு வெகு அருகில் குட்டையாகவே அவை வளர்வதால், காற்றின் வேகத்தில் சேதமடையாமல் தப்பிக்கும்
இலைகளிலும் தண்டுகளிலும் மெல்லிய ரோமங்களை கொண்டிருப்பதால் பனிக்காற்றிலிருந்து கூடுதல் பாதுகாப்பை அவை பெறுகின்றன
பனி பரப்பிற்கு அடியில் மறைந்து வாழ்வது, சூரிய ஒளி மலரின் மையத்துக்கு சென்று விடும்படி கிண்ணம் போன்ற மலரமைப்புக்களை கொண்டிருப்பது, சூரிய ஆற்றலை விரைவாக கிரகிக்கும்படி அடர் வண்ணங்களில் உடல் பாகங்களை கொண்டிருப்பது ஆகியவை இவற்றின் தகவமைப்புக்களில் முக்கியமானவையாகும்
மேலும் பல தாவரங்கள் பல்லாண்டு வாழ்வதால் வெயில் காலத்தில் மட்டுமே பூத்து காய்த்து விட்டு பனிக்காலத்தில் உறக்க நிலைக்கு சென்று விடுகின்றன.பெரும்பாலான தாவரங்கள் விதை உருவாக்கத்துக்கு ஆற்றலை வீணாக்காமல் பாலிலா இனப்பெருக்கத்தை மெல்லிய சிறு வேர்க்கிழங்குகள் மூலம் செய்கின்றன.
தாவரங்களுடன் துருவ கலைமான்கள்,(ReinDeer), கஸ்தூரி எருதுகள் (musk-oxen), ஓநாய்கள், துருவக்கரடிகள், (ஆர்க்டிக் பகுதியில்), முயல்கள் மற்றும் சில கொறித்துண்ணிகள் உள்ளிட்ட 48 வகையான விலங்குகள் துந்த்ரா காடுகளில் வாழ்கின்றன, சில பறவை இனங்களும்,பூச்சி இனங்களில் கருப்பு ஈ, மான் ஈ,கொசு,ஆகியவையும் உண்டு. பென்குவின்களும், சீல்களும் அண்டார்டிக்காவில் வாழ்கின்றன,
மில்லியன் கணக்கான மக்கள் ஆர்க்டிக்கில் வசிக்கின்றனர், ஆனால் 1959 உடன்படிக்கையால் அண்டார்டிகா கண்டம் அமைதி மற்றும் அறிவியலுக்கு மட்டுமே பயன்படுத்துவதற்கான இடமாக பாதுகாக்கப்படுவதால் இங்கு நிரந்தர மக்கள் இல்லை. இருப்பினும் பல ஆயிரம் விஞ்ஞானிகள் மற்றும் உதவி ஊழியர்கள் அவ்வப்போது ஆராய்ச்சிக்காக இப்பகுதியில் தற்காலிகமாக வசிக்கின்றனர். இந்தியாவின் தக்ஷிண் கங்கோத்ரி, மற்றும் மைத்ரி என்னும் இரு ஆய்வகங்கள் அங்கு அமைத்துள்ளன. பாரதி என்ற மூன்றாவது ஆய்வகத்தை சுமார் 140 கோடி செலவில் அமைக்க தற்போது முயற்சிகள் நடைபெற்று வருகிறது.அண்டார்டிக்காவின் 14,000,000 km2 பரப்பளவில் 2 சதவீதமே பனியால் மூடப்படாமல் இருக்கும். எனினும் அண்டார்டிகாவும் கூட காலநிலை மாற்றத்தின் விளைவுகளுக்கு உள்ளாகி இருக்கிறது. ஆர்க்டிக் இதனினும் கூடுதலாக, பாதிக்கப்பட்டுள்ளது.
கனிமச் சுரங்கப்பணி, திமிங்கல வேட்டை, அதிக மீன் பிடிப்பு, மாசு, ஓஸோன் அடுக்கு சேதம், ஓஸோன் ஓட்டை, பசுங்குடில் வாயு வெளியேற்றம், புவி வெப்பமடைதல் ஆகிய ஆபத்துக்களை துருவப்பகுதி யின் தாவரங்களும் விலங்குகளும் சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இந்த ஆபத்துக்களால் பனிக்கரடிகள் மற்றும் பென்குவின்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்து கொண்டிருக்கிறது
அண்டார்டிக்காவின் நிலப்பகுதி பிரான்ஸ், ரஷ்யா, அமெரிக்கா டென்மார்க், பின்லாந்து மற்றும் நார்வே ஆகிய 6 நாடுகளுக்கு உரியதாக இருப்பதால் எந்த நாடு பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பது என்று பல ஆண்டுகள் குழப்பம் நீடித்தது. 1961 அண்டார்க்டிக் உடன்படிக்கை (Antarctic Treaty System-1961) மற்றும் பல சர்வதேச உடன்படிக்கைகளின் வழியே சட்டங்கள் இயற்றப்பட்டன. சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றிய நெறிமுறை பிற நாடுகளின் சட்டப்படி பின்பற்றப்பட்டு, ஜனவரி 14, 1998 அன்று அமலுக்கு வந்தது. அதன்படி அன்டார்க்டிக்கா வின் அனைத்து சுரங்கங்களும் தடைசெய்து, அண்டார்டிக்கா “சமாதானத்திற்கும் விஞ்ஞானத்திற்கும் அர்ப்பணிக்கப்பட்ட இயற்கை பிரதேசம்” என்று அறிவிக்கப்பட்டது. இப்போது ஆய்வுகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும் வேகமாக நடக்கின்றன.