கோவிட் பெருந்தொற்றினால் உலகடங்குவதற்கு முன்பாக 2019’ல் தெற்கு கரோலினாவின் ஃபோர்ட் மில் நகரில் ஒரு திறந்த வெளி மைதானத்தில் ஏற்பாடாகியிருந்த பக்கர் பட் நிறுவனம் (Puckerbutt Pepper Company) நடத்திய அந்த சர்வதேச உண்ணும் போட்டியை காண ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் திரளாக காத்துக் கொண்டிருந்தார்கள். காணொளி எடுப்பவர்களும் போட்டியை நடத்துபவர்களுமாக அந்த மேடை சந்தடியாக இருந்தது ஒரு சிறு மேடை.யிலிருந்த நான்கு பெண்கள் உள்ளிட்ட 11 போட்டியாளர்களும். ஒவ்வொருவராக பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தப்படுகிறார்கள்.
பல வருடங்களாக இப்போட்டியில் தொடர்ந்து வெற்றி பெற்றுவரும் சித் பார்பரை பலருக்கு தெரிந்திருந்ததால், அவரை பலரும் உற்சாகப்படுத்தி கூச்சல் இடுகிறார்கள். போட்டியாளர்களும் இன்னும் பலரும் அடர் சிவப்பு மிளகாயின் சித்திரம் இருக்கும் கருப்பு நிற சட்டை அணிந்திருக்கின்றனர்.
போட்டியாளர்களின் முன்பு குளிர்ந்த பால் ஒரு கிண்ணமும், சிறு கூடையொன்றில் சமமான எடையில் உலகின் அதிக காரமான மிளகாய்களும் வைக்கப்பட்டிருக்கின்றன. ஆம் அது ஒரு சர்வதேசஅளவிலான அதிக காரமான மிளகாய்கள் உண்ணும் போட்டிதான்.
மிளகாய்களின் வண்ணங்கள் மஞ்சள், சிவப்பு, இளஞ்சிவப்பு, கருப்பு, அடர்சிவப்பு என வேறு பட்டிருக்கின்றன. மொத்தம் 12 தகுதி சுற்றுக்களில் சுற்றுக்கு ஒன்றாக குறைந்த பட்ச கார அளவிலிருந்து, மெல்ல மெல்ல அதிக கார அளவிற்கு மிளகாய்கள் போட்டியாளர்களுக்கு உண்ணத் தரப்படுகின்றன
முதல் சுற்றில் Scotch Bonnet எனப்படும் 3,50000 SHU கார அளவுள்ள மிளகாய்கள் . அடுத்ததாக 60000 SHU, அளவுள்ள ரீப்பர் நீரா (Reaper Neeraa) தொடர்ந்து பூத் ஜலாக்கியா என்னும் 1000000 SHU கொண்ட இந்திய பேய் மிளகாய், அடுத்து மஞ்சள் நிறத்திலிருக்கும் 1,600000 SHU கார அளவுள்ள மிளகாய் ( Yellow 7 pot), பின்னர் 2,000000 SHU, கொண்டிருக்கும் கொக்கோ லோகோ ஸ்பைசி மிளகாய் (Cocoa Loco Spicy Chile) ஆகியவைகள் கொடுக்கப்படுகின்றன.
இரண்டாம் சுற்றில் ஒருவர் தன்னால் தொடர முடியாது என்று சொல்லி போட்டியில் இருந்து விலகுகிறார். போட்டியாளர்களுக்கு ஏராளமாக வியர்க்கிறது, குமட்டுகிறது கண்ணில் நீர் வழிகிறது ஆனாலும் அத்தனை காரமான புதிய மிளகாய்களை கடித்து மென்று விழுங்கி கொண்டே இருக்கிறார்கள். சிலர் குளிர்ந்த பாலை அருந்தி போட்டியிலிருந்து விலகிக் கொள்கிறார்கள்
ஆறாம் சுற்றில் 1,6000000 SHU கார அளவுள்ள கரோலினா ரீப்பர் கொடுக்கப்படுகையில் மொத்தம் 7 போட்டியாளர்கள்தான் இருக்கிறார்கள், ஏழாம் சுற்றில் சாக்கலேட் (Chocolate) மிளகாய்கள் 1,80000 SHU அளவில் கொடுக்கப்படுகிறது, எட்டில் 2,200000 SHU உள்ள நெஞ்செரிப்பான் (Heartburn) மிளகாய்கள் கொடுக்கப்பட்ட போது ஐந்தே போட்டியாளர்கள் மட்டும் இருக்கின்றனர்.
ஒன்பதாம் சுற்றில் 2,300000 SHU உள்ள ஒற்றை சக்கரம் (One ring) கொடுக்கப்பட்டபோது மற்றொரு போட்டியாளரும் வெளியேறுகிறார். அலற வைக்கும் பீச் மிளகாய்கள் (Peaches & Scream) கார அளவு குறிப்பிடப்படாமல் பத்தாவது சுற்றில் கொடுக்கப்பட்ட போது இறுதி போட்டியாளர்களாக சித், பெல்லா மற்றும் ஜஸ்டின் ஆகிய மூவர் மட்டுமே இருக்கிறார்கள்
பின்னர் உலகின் மிக அதிக காரமான2,600000 SHU அளவுள்ள பெரிய வகை மிளகாயான Giant Carolina Reaper கொடுக்கப்பட்டு 20, 10 5 என குறைந்து கொண்டே வரும் விநாடிகளுக்குள் கொடுக்கப்பட்ட மிளகாய்கள் அனைத்தையும் விழுங்குபவர்களே வெற்றியாளர்கள் என்று அறிவிக்கப்பட்ட சில விநாடிகளில் எதிர்பாராமல் முன்னணி போட்டியாளர் சித் தன்னால் முடியாது சைகை காண்பித்துவிட்டு குளிர்ந்த பாலை அருந்தி விலகுகிறார். அழகிய ஒப்பனையில் இருந்த பெல்லாவும், ஜஸ்டினும் மட்டுமே மேடையில்
கடைசி வரை அலட்டிக்கொள்ளாமல் தனக்கு பிடித்தமான சிற்றுண்டியைப் போல அத்தனை மிளகாயையும் உண்டு முடித்து வெற்றியாளராகிறார் ஜஸ்டின். அவருக்கு பரிசாக ஓராயிரம் டாலர்களுக்கு காசோலையும் உலக உருண்டையின் மீது சிவப்பில் கரோலினா ரீப்பர் மிளகாயின் சிறு சிற்பம் இருக்கும் கோப்பையும் கொடுக்கப்படுகிறது.
பெல்லா இரண்டாவது வந்தாலும் பார்வையாளர்களில் ஒருவர் பெல்லாவை பாராட்டி ஓராயிரம் சன்மானம் கொடுத்ததுடன் அப்போட்டி முடிவுக்கு வருகிறது.1
போட்டியின் போது அவசர உதவிக்கான மருத்துவ வாகனங்களும், மருந்துகளும், போட்டியிலிருந்து விலகுபவர்கள் வாயுமிழவென்றே பக்கட்டுகளும் தயாராக இருக்கின்றன. பல போட்டியாளர்களுக்கு உதடும் நாக்கும் புண்ணாகி ரத்தம் கசிகிறது. சிலர் வாயுமிழ்ந்தபடி இருக்கிறார்கள்.
இதுபோல விநோதமான காரம் கூடிய மிளகாய்களை உண்ணும் போட்டி உலகெங்கிலும் வருடா வருடம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஆயிரம் டாலர் என்னும் சிறு தொகைக்காவா தங்களை இத்தனை வருத்திக்கொண்டு இந்த போட்டியில் கலந்து கொள்கிறார்கள்? பல நாடுகளில் பரிசாக சன்மானம் கூட கொடுப்பதில்லை மாறாக கோப்பைகளும், பல மூட்டை மிளகாய்களும், நட்சத்திர விடுதி தங்கல்களும் கூட பரிசாக கொடுக்கப்படுகிறது. இப்போட்டியின் வசீகரத்துக்காகவும் பிரபல்யத்துக்கவுமே இவை தொடர்ந்து நடைபெறுகின்றன.புதிய மிளகாய் கலப்பினங்களை உருவாக்கும் நாடுகள் தங்கள் பெருமையை பறை சாற்றிக்கொள்ளவும் இப்போட்டிகளை முன்நின்று நடத்துகின்றன..
நாக்கை எரிய செய்து கண்ணில் நீர் வடிய செய்யும் மிளகாய்களையும் அதன் சுவையையும் அறிந்திருந்த உலகம், கனெக்டிசுட்டில் 1865 ஜனவரி 22ல் பிறந்த வில்பர் ஸ்கோவிலுக்கு (Wilbur Scoville) பிறகுதான் மிளகாய்களின் காரத்தை அளவிட முடியுமென்பதையும் அறிந்து கொண்டது.
வில்பர் ஸ்கோவில் ஒரு பிரபல வேதியியலாளரும், பல விருதுகளுக்கு சொந்தக்காரரும், மருந்தாளுமையில் பேராசிரியருமாவர். அமெரிக்க மருந்தக அமைச்சகத்தின் இரண்டாம் துணைத் தலைவராகவும் இருந்த இவரின் The Art of Compounding என்னும் பிரபல நூலில்தான் முதன்முதலாக ’’மிளகாய் காரத்துக்கு முறிமருந்து பால்தான் நீரல்ல’’ என குறிப்பிட்டிருந்தார். இவரது Extracts and Perfumes என்னும் நூலும் வேதியியலில் மிக முக்கியமானது
திரு. ஸ்கோவில் டெட்ராய்டில் அமைந்திருந்த பிரபல பார்க் டேவிஸ் (Parke-Davis) மருந்தகத்தின் தலைவராக இருக்கையில் மிக அதிகமாக தயாரிக்கப்பட்ட’’ ஹீட்’’ (Heet) என்னும் பெயரிலான வலிநிவாரண பசையில் முக்கிய வேதிப்பொருளாக மிளகாயின் கேப்ஸெய்சின் (Capsaisin) இருந்தது. தேவையான கேப்ஸெய்சினை பிரித்தெடுக்க ஆய்வக கருவிகள் கண்டுபிடிக்க பட்டிருக்காததால் மிள்காய்களிலிருந்தே சாறெடுத்து தயாரித்தனர். ஆனால் இதில் காப்ஸெய்சினின் அளவை துல்லியமாக மருந்தில் கலப்பதில் நடைமுறை சிக்கல்கள் இருந்த வந்தது.
அப்போது ஸ்கோவிலால் கண்டுபிடிக்கப்பட்டதுதான் ஸ்கோவில் புலனுணர்வு சோதனை (Scoville Organoleptic Test) எனப்படும் இந்த காரவெப்ப அளவீடு முறை.
ஒரு காரமான பொருள் சர்க்கரை நீரில் எவ்வளவு நீர்த்துப்போக வேண்டும் என்பதை இந்த சோதனை அளவிட்டது. இம்முறையில் ஸ்கோவில் மதிப்பீடுகள் கார சர்க்கரை- நீர்த்தல்களுக்கு மனித எதிர்வினைகளைத்தான் அடிப்படையாகக் கொண்டிருந்தன
ஸ்கோவில் சுவைப்பவர்களின் நாக்கை எரிக்காத வரை கார சர்க்கரை கரைசல்களை படிப்படியாக நீர்த்துப்போகச் செய்வார், மிகச்சிறந்த கார வெப்பத்தை அறியும் நாவினைக்கொண்ட தன்னார்வலர்களுக்கு அவற்றை ருசிக்க கொடுத்து எந்த அளவிலான நீர்த்த கலவையில் ஐந்தில் மூன்று நபர்களால் காரத்தை கண்டறியவே முடியவில்லையோ அந்த அளவீட்டை குறித்துக்கொள்ளுவார். ஒரு மிளகாயின் கார வெப்பத்தை முழுமையாக நீக்குவதற்காக அக்கரைசல் எத்தனை முறை நீர்த்துப்போகச் செய்யப்பட்டது என்பதன் அடிப்படையில் அந்த மிளகாய்க்கு ஸ்கோவில் ஒரு எண் மதிப்பீட்டை வழங்கினார். உதாரணமாக, ஜலபெனோ மிளகாய் 10,000 ஸ்கோவில் அளவீட்டை கொண்டுள்ளது, அதாவது இதன் வெப்பம் நடுநிலையாக்கப்படுவதற்கு முன்பு ஜலபெனோ கரைசல் 10,000 முறை நீர்க்கப்பட வேண்டும்.
இம்முறை பரவலாக பயன்பாட்டில் இருந்தது என்றாலும் ஒவ்வொரு மனிதனின் காரம் தாங்கும் திறனென்பது வேறுபடுமென்பதால் இதில் முடிவுகள் மிகத்துல்லியமாக இருக்கவில்லை.
.1980 களில் இருந்து தான் உயர் செயல்திறன் திரவ நிறப்பிரிகை (எச்பிஎல்சி), (High-Performance Liquid Chromatography -HPLC), முறையில் கேப்ஸெய்சினை பிரித்து கார அளவீடுகள் கணக்கெடுக்கப்படுகின்றன.
1912 முதல் இந்த கார அளவீட்டு முறை அதை கண்டறிந்தவரான வில்பர் ஸ்கோவிலின் பெயராலேயே ’’Scoville Heat Units, SHU’’ என குறிப்பிடப்படுகிறது.
அமெரிக்க மருந்து சங்கம் 1922 இல் ஸ்கோவிலுக்கு எபெர்ட் பரிசையும், 1929 இல் ரெமிங்டன் ஹானர் பதக்கத்தையும் வழங்கியது..ஸ்கோவில் தனது 77 ஆவது வயதில் 1942ல்’ மரணமடைந்தார். கடந்த 2016 ஜனவரி 22ல் வில்பர் ஸ்கோவிலின் 151 ஆவது பிறந்த நாளை சில சிறப்பு விளையாட்டுக்களுடன் கூகுள் டூடுல் உண்டாக்கி அவரை சிறப்பித்திருந்தது.2
சமகால பயன்பாடுகள் கார வெப்பத்துக்கு பொறுப்பான கேப்ஸெய்சினின் அளவுகளை அளவிட பலவித இயந்திரங்களைப் பயன்படுத்துகின்றன. இவை மிக துல்லியமாக ஒவ்வொரு மிளகாய்க்கும் கார வெப்ப அளவீட்டை தெரிவிக்கின்றன. உதாரணமாக குடைமிளகாய் பூஜ்ஜியத்தின் ஸ்கோவில் மதிப்பீட்டைக் கொண்டுள்ளது அதாவது அதில் குறிப்பிட்டு சொல்லும்படியான அளவில் கேப்ஸெய்சின்கள் இல்லை, அதே நேரத்தில் ஹாபனேரோ மிளகாய்த்தூள் 300,000 ஸ்கோவில் மதிப்பீட்டை கொண்டுள்ளது,
ஸ்கோவில் காரவெப்ப அளவீடு மிளகாய்களின் காரவெப்பத்துக்கு காரணமாயிருக்கும் காப்சினாய்டுகளின் (Capsaicinoids) தொகுதியில் உள்ள கேப்ஸெய்சினின் அளவையே கணக்கில் எடுத்துக் கொள்ளுகிறது. கேப்ஸெய்சின் நீரில் கரையாது எனவே அதிக மிளகாயின் காரத்துக்கு நீர் குடிப்பது ஒருபோதும் நிவாரணமாகாது. நீர் கேப்ஸெய்சினை மேலும் பரவச்செய்து கார வெப்பத்தை அதிகரிக்கும். எனவே இந்த காரத்தை மட்டுப்படுத்தும் ஒரே வழி, குளிர்ந்த பால், ஐஸ்கிரீம், சோடா அல்லது எலுமிச்சை சாறு, பாலாடைக்கட்டி போன்ற அமில உணவுகளுடன் அதை கலப்பதுதான்.
கரோலினா ரீப்பரை போல காரம் கூடிய அதிக SHU அளவீடுகளை கொண்ட ’சூப்பர் ஹாட்’ மிளகாய்களை விளைவிக்கும் போட்டியில் உலக நாடுகள் அனைத்துமே முனைப்புடன் இருக்கிறது என்றாலும், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரெலியாவுக்கிடையேதான் 1990’களிலிருந்து இதில் கடும்போட்டி நிலவுகிறது.
மிளகாய்களின் கார அளவீடுகளை குறிக்கும் ஸ்கோவில் அளவீடு கண்டறியப்பட்ட பின்னரே சூப்பர் ஹாட் மிள்காய்கள் அதிகம் உருவாக்கப்பட்டன. பொதுவாக 1,000,000 SHU க்களுக்கு மேல் இருப்பவையே சூப்பர் ஹாட் மிளகாய்களாக கருதப்படுகின்றன.
1990 களுக்கு முன்பு 3,50000 SHU களுக்கு அதிகமாயிருந்தவை ஸ்காட்ச் போனெட் மற்றும் ஹேபனேரோ ஆகிய (Scotch bonnet & habanero) இரண்டு மிள்காய் வகைகள் தான்
1994 ல் கலிபோர்னியா விவசாயி ஃப்ரான்க் கார்சியா Frank Garcia ஹேபனேரோவின் உட்கலப்பினமொன்றை ’’சிவப்பு சவினா’’ என்னும் பெயரில் (Red Savina,) 570,000 SHU அளவீட்டில் உருவாக்கியபோது அதுவே உலகின் உயர்ந்தபட்ச கார அளவாக இருக்குமென கருதப்பட்டது.
ஆனல் 2001ல் நியூ மெக்ஸிகோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் மிளகாய் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளரான பால் போஸ்டாண்ட் (Paul Bosland) இந்தியாவுக்கு வந்து அஸ்ஸாமில் விளையும் பேய் மிளகாய், பூத் ஜலாக்கியா, நாகராஜ மிளகாய் என்று பல பெயர்களில் அழைக்கப்படும் பிரபல மிளகாய்களை ஆய்வு செய்து அவை 1 மில்லியன் SHU க்களுக்கு மேல் காரம் கொண்டிருப்பதை கண்டறிந்தார்,
பல வருடங்களாக உலக நாடுகள் பல மும்முரமாக புதிய கலப்பின மிளகாய் வகைகளை அதிக கார அளவுகளில் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. 1994ல் சிவப்பு சவினா உலகின் காரம் கூடிய மிளகாயாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் குறிப்பிடப்பட்டது, 2006’ல் டோர்செட் நாகாவும், (Dorset Naga), 2007ல் பேய் மிளகாயும்,(Ghost Pepper) முந்தைய சாதனைகளை முறியடித்தன.
2011’ல் முதலில் இன்ஃபினிட்டி மிளகாயும் ,(Infinity) பின்னர் அதே வருடத்தில் நாக வைப்பரும்,(Naga Viper,) பின்னர் 2 மில்லியன் SHU அளவுடன் ட்ரினிடாட் ஸ்கார்பியன் புட்ச் மிளகாய்களும்,(Trinidad Scorpion Butch T pepper) அடுத்தடுத்து சாதனைப் பட்டியலில் இடம் பெற்றன.
2013 நவம்பரில் இருந்து இன்று வரையிலும் உலகின் காரம் கூடிய மிளகாயாக முதலிடத்தில் தொடர்ந்து இருந்து வருவது 1,400,000 லிருந்து 2,200,000 SHU அளவுகள் கொண்டிருக்கும் கரோலினா ரீப்பர் மிளகாய்களே, (Carolina Reaper) இவற்றில் பெரிய மற்றும் சிறிய வகை மிளகாய்கள் உள்ளன,
காரம் குரைந்த மிளகாய்கள் காரத்துக்கு கரணமான கேப்ஸெய்சினை , மிளகாயின் நடுவிலிருக்கும் பஞ்சுபோன்ற நீண்ட பகுதியில் (pith) சேமித்து வைக்கின்றன ஆனால் சூப்பர் ஹாட் மிளகாய்கள் தங்களின் பித்’திலும் சதைப்பகுதியிலும் கேப்ஸெய்சினை சேமித்துவைகின்றன. எனவே பிற மிளகாய் வகைகளில் நடுவிலிருக்கும் பித்தையும் விதைகளையும் நீக்கும் போது கார அளவு குறையும் என்பது,சூப்பர் ஹாட் மிளகாய்களுக்கு பொருந்தாது.
பல நாடுகளின் கேள்விகளுக்கும், கண்டங்களுக்கும் இப்போட்டிகள் உட்பட்டு இருப்பினும்,.மிள்காய் சாஸ்களும் மிளகாயின் காரத்தை அடிப்படையாக கொண்ட உணவுப்பொருட்களின் விற்பனையையும் அதிகரிக்க செய்யும் பொருட்டு இப்படியான கலப்பின வகைகளை உருவாக்கும் நாடுகள் இரக்கமின்றி தொடர்ந்து போட்டிகளை நடத்திக்கொண்டே தான் இருக்கின்றன.
இம்மிளகாய்களின் விதைகளும் பெரும் விலைகொடுத்து வாங்கப்படுபவதால் விதை வணிகமும் இப்போது மிக முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. மிளகாய் உண்ணும் போட்டிகளை நடத்தி யூ ட்யூபில் வெளியிட்டு அதில் பணம் பார்ப்பவர்களும் பெருகிக் கொண்டிருக்கின்றனர். இந்தியாவின் நாகலாந்தில் மிகப்பிரபலமான ஹார்ன்பில் திருவிழாவிலும் காரமிளகாய்களை உண்ணும் போட்டி வருடா வருடம் நடைபெறுகிறது.
கண்ணீர் புகைக்குண்டுகளைப்போல கலவரம் நடக்கும் இடங்களில் கூட்டத்தை கலைக்க அஸ்ஸாமின் பேய் மிளகாயின் தூள் நிரப்பப்பட்டிருக்கும் கையெறி குண்டுகள் இந்திய ராணுவத்தால் பயன்படுத்தப்படுகிறது. இந்த கையெறி குண்டுகள் (Chilli Grenades) விஷமற்ற ஆயுதங்களின் பட்டியலில் வருவதாக இந்திய ராணுவம் தெரிவித்திருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பிருந்து, இந்த மிளகாய் கையெறி குண்டுகள் அஸ்ஸாம் படைப்பிரிவில் புழக்கத்தில் இருக்கிறது. இந்த பேய்மிளகாய் கலவையை பெண்கள் தங்களது தற்காப்பிற்காக பயன்படுத்தும் ஸ்ப்ரேக்களில் சேர்க்கும் யோசனையும் அரசுக்கு இருப்பதாக சொல்லப்படுகிறது
இந்த காரத்தை உணர்தல் என்பது பாலூட்டிகளுக்கு மட்டுமேயான திறன் என்று அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பறவைகளுக்கு இந்த காரம் உரைப்பதில்லை. நாம் சாதரணமாகவே வளர்ப்புக்கிளிகள் மிளகாய்ப்பழங்களை விரும்பி உண்ணுவதை பார்த்திருக்கிறோம்.
இதனால்தான் தாவரங்களை உண்ண வரும் விலங்குகள் காரமுள்ள பழங்களை கொண்ட தாவரங்களை தவிர்த்துவிடுகின்றன,. ஆனால் பறவைகள் காரமுள்ள பழங்களை உண்டு எந்த பிரச்சனையும் இன்றி விதை பரவலுக்கும் மகரந்த சேர்க்கைக்கும் உதவுகின்றன. இயற்கையின் அதிசயங்களில் இதுவுமொன்று
மிக மிக அதிக காரம் விரும்பி உண்ணும் நபர்களுக்கு “Pyro-Gourmaniac என்று பெயருண்டு. Pyro என்றால் நெருப்பென்றும் Gourmaniac என்றால் உணவின் மூலம் தன்னை வருத்திக்கொள்ளுபவர்கள் என்றும் பொருள். இவர்கள் படிப்படியாக தங்களின் கார வெப்பம் தாங்கும் அளவை அதிகரித்துக் கொண்டுவிடுகிறார்கள். இயற்கையாகவே சிலரின் ஜீன் கட்டமைப்பிலேயே அதிக காரம் தாங்கும்படியும் இன்னும் சிலருக்கு மிக குறைந்த அளவே தாங்கும் திறனும் இருக்கும்
ஒரு நாளின் உணவில் ஒரு நபருக்கு 50 கிராம் கேப்ஸெய்சின் என்பது பக்க விளைவுகளும் ஆபத்துமற்றதென்கிறது பல ஆய்வுகள் அதற்கு அதிகமாகும்போது உயிரிழப்போ அல்லது கடும் உடல் பிரச்சனைகளோ வராது. இரைப்பை மற்றும் உணவுக்குழாய் வீக்கம், அழற்சி, இரைப்பை புண்ணாகுதல், வாயுமிழ்தல், கண்ணெரிச்சல் மற்றும் வலி, வியர்வை பெருக்கு, வயிற்றுபோக்கு நெஞ்செரிச்சல் மற்றும் தலைவலி ஆகியவை அதிக கேப்ஸெய்சினை உட்ள்வதால் வரும் பக்கவிளைவுகள். நீடிக்கும் உடலாரோக்கிய பிரச்சனைகளை கேப்ஸெய்சினின் கூடுதல் அளவுகள் உருவாகுவதில்லை.
உலகின் மிக அதிக மிளகாய் சாகுபடி செய்யும் நாடாக சீனாவே இருந்துவருகிறது இந்தியாவின் பங்கு மொத்த மிளகாய் உற்பத்தியில் 36 சதவீதம்தான். கடந்த 2008 ஆம் ஆண்டில் புவிசார் குறியீடு பெற்றிருக்கும் நாகலாந்த்தின் பேய்மிளகாய்கள் ஜூலை 2021ல் தான் முதன் முதலாக லண்டனுக்கு ஏற்றுமதி செய்யப்பட துவங்கியிருக்கின்றன..3 சுமார் 2.71 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (ஒரு $3.68 பில்லியன்) ஆக உள்ள உலகளாவிய காரஉணவுகளின் சந்தை கடந்த சில ஆண்டுகளில் கணிசமாக வளர்ந்துள்ளது. இது மேலும் 2028 க்குள் $4.38 பில்லியனிலிருந்து $5.95 பில்லியனாக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல மிளகாய் வகைகளின் ஸ்கோவில் அளவீடுகள்:
- Bell Pepper (0 SHU/ 0 SCU)
- Ghost Pepper (855,000 to 1,041,427 SHU)
- 7 Pot Jonah (800,000 to 1,200,000 SHU)
- Trinidad 7 Pot Pepper (1,000,000 to 1,200,000 SHU)
- Infinity Pepper (1,067,286 to 1,250,000 SHU)
- 7 Pot Primo (800,000 to 1,268,250 SHU)
- 7 Pot Barrackpore (1,000,000 to 1,300,000 SHU)
- 7 Pot Brain Strain (1,000,000 to 1,350,000 SHU)
- Naga Viper (900,000 to 1,382,118 SHU)
- Trinidad Scorpion “Butch T” (800,000 to 1,463,700 SHU)
- Naga Morich (1,000,000 to 1,500,000 SHU)
- Dorset Naga (1,000,000 to 1,598,227 SHU)
- 7 Pot Douglah (923,889 to 1,853,986 SHU)
- Trinidad Moruga Scorpion (1,200,000 to 2,000,000 SHU)
- Komodo Dragon Pepper (1,400,000 to 2,200,000 SHU)
- Carolina Reaper (1,400,000 to 2,200,000 SHU)
வருடா வருடம் புதிய இனங்கள் கண்டு பிடிக்கபட்டு கொண்டிருப்பதால் இந்த பட்டியல் மாறிக்கொண்டே இருக்கும், இந்த வரிசையில் இன்னும் சேர்ந்திருக்காத சிறப்பிடம் பெற்றவை என சொல்லப்படும் 2,480,000 SHU கொண்ட டிராகன் மூச்சு மிளகாய்களையும், (Dragon’s Breath Pepper), பெப்பர் X எனப்படும் (Pepper X) 3,180,000 SHU கொண்ட சூப்பர் ஹாட் மிளகாய்களையும் வெறும் கைகளால் தொட முடியாது. அவற்றை கையுறைகளை அணிந்து கொண்டு கண்களில் விதைகள் தெறித்து விடாமலிருக்க பாதுகாப்பு கண்ணாடிகளையும் அணிந்துதான் கையாளவேண்டும்.
ஸ்கோவில் அளவீட்டு முறையில் மிளகாய்களின் காரம் மட்டுமல்ல குருமிளகின் பைப்பெரின் (Piperine) இஞ்சியின் ஜிஞ்சரோல் (Gingerol). ஆகியவற்றையும் அளவிடலாம்.
தாவரங்களிலிருந்து கிடைக்கும் வேதி பொருட்களில் மிக மிக காரமானது என்று அறியப்பட்டிருக்கும் Resinifera Toxin (RTX) என்னும் நச்சுப்பொருள் மொராக்கோ மற்றும் நைஜீரியாவில் வளரும் Euphorbia resiniferaஎன்னும் கள்ளிச்செடியின் பிசினில் இருந்து கிடைக்கிறது இதன் ஸ்கோவில் அளவானது மிளகாயிலிருக்கும் கேப்ஸெய்சினைவிட ஆயிரம் மடங்கு அதிகமாகும். (சுமார் 16 பில்லியன் ஸ்கோவில் யூனிட்டுக்கள்). இனி மிளகாய் சாஸ்களை வாங்குகையில் அதில் அதன் கார வெப்ப அளவீடுகள் எத்தனை SHU என்பதை கவனிக்கலாம்.
அடிக்குறிப்புகள்:https://www.youtube.com/embed/fC0sMIue5qk?version=3&rel=1&showsearch=0&showinfo=1&iv_load_policy=1&fs=1&hl=ta-IN&autohide=2&wmode=transparent
- 2019 ல் நடந்த போட்டியின் காணொளி இணைப்பு : https://youtu.be/fC0sMIue5qk
- கூகுள் டூடுல்: https://www.google.com/doodles/wilbur-scovilles-151st-birthday
- https://www.republicworld.com/world-news/uk-news/india-exports-shipment-of-bhut-jolokia-worlds-hottest-chilli-to-england.html
Leave a Reply