சக்ரா
M.S ஆனந்தனின் (அறிமுக) இயக்கம் மற்றும் திரைக்கதையில் 2021 பிரவரி 19 அன்று உலகெங்கிலும் பலமொழிகளில் வெளியான தமிழ் ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படம் ‘சக்ரா’. விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் ரெஜினா கெஸான்ட்ரா ஆகியோர் முக்கிய பாத்திரங்களில், தயாரிப்பு விஷால்
ரோபோ ஷங்கர் , நீலிமா, சிருஷ்டி டாங்கே, மனோபாலா, வெகுகாலத்துக்கு பிறகு கே ஆர் விஜயாம்மா ஆகியோரும் இருக்கிறார்கள்.
2018ல் வெளியான விஷாலின் இரும்புத்திரை திரைப்படத்தின் (ஒருவிதத்தில் ) தொடர்ச்சிதான் சக்ராவாம்..
சுதந்திர தினத்தன்று நகரில் தொடர்ந்து 50 வீடுகளில் நடக்கும் தொடர்கொள்ளைகள் என்னும் ஒரே புள்ளியை ஜவ்வாக இழுத்து முழுநீள திரைப்படமாக்கி 1.30 மணி நேரத்திற்கு பாடாய்படுத்தி எடுக்கிறார்கள்
ஆச்சரயமாக இருக்கின்றது, உலகசினிமா சென்று கொண்டிருக்கும் பாதையைக்குறித்தும், வெள்ளித்திரை என்னும் சக்திவாய்ந்த ஊடகத்தில் கிடைத்த வாய்ப்பை எப்படி பயன்படுத்துவது என்றும் கொஞ்சமும் அறிதல் இல்லாமல், சினிமாவிற்கான அடிப்படை சிரத்தைகூட இல்லாமல் இந்தக்காலத்திலும் இத்தனை போட்டி நிறைந்த தொழிலில் சக்ராவை எடுத்திருப்பதை நினைக்கையில்.
கதை (?) இதுதான். முகமூடி அணிந்த கொள்ளையர் இருவர் 49 வீடுகளில் சுதந்திர தினத்தன்று பெரும்பாலான காவலதிகாரிகள் முக்கியஸ்தர்களுடன் கொடியேற்றும் விழாக்களுக்கு பாதுகாப்புப்பணிக்கு சென்றிருக்கையில் தொடர்ந்து கொள்ளையடிக்கிறார்கள். 50 ஆவது வீடு ராணுவத்தில் பணியாற்றும் நாயகன் விஷாலின் பாட்டி வீடென்பதை நாயகனி்ன் காதலியும் காவலதிகாரியுமான ஷ்ரத்தா தெரிந்து கொள்கிறார்.
கொள்ளை போனவற்றில் ராணுவதிகாரியாக இருந்து இறந்த, விஷாலின் அப்பா வாங்கிய அசோக சக்ரா பதக்கமும் இருந்ததால் அதை எப்படியும் மீட்டெடுக்க உறுதிபூண்ட நாயகன் தன் காதலியின் துறையான காவல்துறையில் இஷ்டம் போல புகுந்து விளையாடி குற்றவாளிகளை, அது சைபர் க்ரைமென்பதால் கையும் கம்யூட்டருமாக பிடிக்கிறார்.
துவக்கத்தில் கொள்ளை நடந்த ஒவ்வொரு வீடாக சாவகாசமாக காட்டிக்கொண்டே இருக்கிறார்கள். கொட்டாவியுடன் அடுத்து கதை எப்போது நகரும் என்று காத்திருக்கையில் நாயகன் வந்து விசாரிக்கிறேன் பேர்வழி என்று காலொடிந்த நத்தையின் வேகத்தில் படத்தை நகர்த்துகிறார். இந்த கதைக்கு இரண்டு நாயகிகள் வேறு.
ஷ்ரத்தா கொஞ்சம் நல்லபெயருடன் முன்னுக்கு வந்துகொண்டிருந்தார், சக்ரா அவருக்கு திருஷ்டிப்படம்
ப்ளம்பர், டயல் ஃபார் ஹெல்ப், விதவை மனைவி, வேலைக்காரப்பெண், எப்போதோ இறந்துபோனவரின் அலைபேசி, கம்ப்யூட்டரில் சேமித்த தகவல்களை திருடி திருட்டு, ஓய்வுபெற்றவர்கள் மட்டுமே குறி, விஷாலுக்கு விடுக்கப்படும் மர்ம தொலைபேசி சவால் என்று கதை இலக்கில்லாமல் நூலறுந்த, வாலறுந்த பட்டமாக எங்கெங்கோ போய்க்கொண்டிருக்கிறது.
விசாரணையின் முக்கிய பாயிண்டுகளை விஷால் போர்டிலெல்லாம் எழுதி துப்பறிகிறார். கடைசியில் அந்த முக்கிய குற்றவாளி அப்படியொன்றும் திறமையான கம்ப்யூட்டர் திருட்டையெலலாம் செய்யவில்லை சாதா திருட்டுதான் செய்கிறார்.
அப்பாவின் பதக்கத்திற்கும் விஷாலுக்குமான உணர்வுபூர்வமான பந்தமேதும் சொல்லப்படவே இல்லை. வில்லியின் ஃப்ளாஷ் பேக் கதை எல்லாம் மனதில் ஒட்டவேயில்லை. அம்மாவை குடிகார அப்பா கொலைசெய்யும், சித்தி கொடுமை செய்யும் அரதப்பழசான முன்கதையெல்லாம் எரிச்சலூட்டுகிறது. கட்டக்கடைசியிலாவது எதாவது உருப்படியாக காட்டுவார்களென்றால் அதுவும் இல்லை. முடிவல்ல தொடக்கமென்று வில்லி குரலில் சொல்லி பயப்படுத்துகிறார்கள் , இனியும் தொடருமா என்று கலக்கமாக இருக்கிறது.
உயரிய ராணுவ விருதான அசோக சக்கரா விருதினை மையமாக கொண்டே சக்ரா எனதலைப்பாம் சக்கரமென்றே வைத்திருக்கலாம் , கதை சுத்திச்சுத்தி வந்துகொண்டே இருக்கிறது.
ஒரே சமயத்தில் இந்தப்படம் ஆங்கிலம் உள்ளிட்ட இன்னும் 5 மொழிகளில் வெளியிடப்பட்டிருப்பது, இந்தபடத்திற்கான காப்பி ரைட் மற்றும் பொருளாதார நெருக்கடிகளால். விஷால் வாழ்வா சாவா என்னுமளவிற்கு பிரச்சனைகளை சந்தித்து, கோர்ட் கேஸ் என்று அலைந்து நஷ்டயீடு கொடுத்ததெல்லாம் வியப்பளிக்கிறது. இத்தனை துயரப்பின்னணிகளுக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத, தகுதியில்லாத, திரைக்கதையாக்கம், திரையாக்கம், இயக்கம் மற்றும் நடிப்பு
மனதில் நிற்காவிட்டால் போகிறது காதில் கேட்பதுபோலக்கூட பாடல்கள் இல்லை. யுவன் ஷங்கர் ராஜாவா இசை? என்று மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒளி இயக்கமும் கதைக்களங்களும் எதுவும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை. ரோபோ ஷங்கர் போன ஜன்ம பழசான நகைச்சுவையைத்தான் செய்கிறார். சிரிப்புக்கு பதிலாக கோபம் வருகிறது. வசனங்களும் இரும்புத்திரையிலி்ருந்து எடுத்து தூசு தட்டப்பட்டவைதான் புதிதாக ஒன்றுமே இல்லை. நாயகிக்கு வேலையே இல்லை லாஜிக் என்பதே திரைக்கதையில் எங்கும் எட்டிப்பார்ப்பது கூட இல்லை. சிக்கலான காவல்துறை விவகாரமொன்றை, பெண்காவலதிகாரியின் ராணுவ காதலரே கடைசி வரை கையாளுகிறார்.
தேவையில்லாத காட்சிகளும் வீண்வசனங்களுமாய் நிறைந்திருக்கிறது படம்முழுக்கவே. அந்த ATM விஷயமெல்லாம் திணி திணியென்று திணிக்கப்பட்டது. வில்லியைக்குறித்தும் அவரது கம்ப்யூட்டர் திருட்டுக்களைக் குறித்தும் பலமாக பில்டப் கொடுத்து விளக்கிக்கொண்டே இருக்கும் முதல்பாதி ரோதனையென்றால் அதற்கு கொஞ்சமும் சம்பந்தமில்லமால் மொக்கை வாய்சவடால்களாக பேசிக்கொண்டு இருக்கும் இரண்டாம் பாதி வேதனை. அதுவும் அந்த செஸ் விளையாட்டு உரையாடல்களெல்லாம் போதுமடா சாமி என்று அலறவைக்கின்றது. வில்லியை வலைவீசிப் பிடிக்கும் காட்சிக்கு நல்லவேளையாக விஷாலே நமக்கு பதிலாக சிரித்து விடுகிறார். படத்தில் ஒரே நல்ல விஷயம் காதல் காட்சிகளும் காதல் பாட்டுக்களும் இல்லையென்பதுதான்.
சக்ராவை பார்த்ததற்கு பிழையீடாக, அர்ஜுன், சமந்தாவெல்லாம் இருக்கும் இரும்புத்திரையை இன்னொரு முறை பார்க்கலாம்