தேநீர் விருந்துகள், ஹனமி செர்ரி மலர்க்கொண்டாட்டங்கள், ஹைகூ கவிதைகள், இகபானா மலரமைப்புக்கள், தனித்துவமான தோட்டங்கள், ஓரிகாமி காகிதவடிவங்கள் மற்றும் பாரம்பரிய கலைகளுக்காக ஜப்பான் உலகளவில்  வெகு பிரபலம்.

ஹனமி கொண்டாட்டம்
ஓரிகேமி காகித மலர்கள்

1950’களிலிருந்தே ஜப்பானின் பதிப்பகத் துறையில் முக்கிய பகுதியாகியிருக்கும், அனைத்து வயதுக்காரர்களுக்குமான மாங்கா வரைகதை வடிவம், நூற்றாண்டுகளின் பாரம்பரியம் கொண்ட சுமோ மல்யுத்தம், தோளோடு தோள் சேர்ந்து நிற்குமளவிற்கான நெரிசலில் இயங்கும், நின்றபடியே மதுவருந்தும் டேக்கினோமியா (Tachinomiya) பார்கள், வண்ணமயமான நடைபாதைக்கடைகள், அவற்றில் கிடைக்கும் பலவிதமான உணவுகள், அடுக்கிவைக்க வசதியாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்ட சதுர தர்பூசணிகள், இதய வடிவிலான தர்பூசணிகள், அறுகோண ஆரஞ்சுகள், புகழ்பெற்ற  அனிமே (Anime)   இயங்குபடங்கள், என்று ஜப்பான் அதன் வரலாறு, பாரம்பரியம், உணவு, கலாச்சாரம், தொழில்நுட்பம், மக்களின் சுறுசுறுப்பு, ஒழுங்கு மற்றும் பணிவு,  உள்ளிட்ட பல காரணங்களுக்காகவும் உலகநாடுகள் அனைத்துமே வியந்து பார்க்கும் நாடாக இருக்கின்றது. ஜப்பானே, பிரபல மீனுணவுகளான சுஷி மற்றூம் சஷிமியின் பிறப்பிடமுமாகும்,  

பல சுற்றுலா பயணிகளுக்கு ஜப்பானிய உணவு வகைகள் மட்டுமே ஜப்பானுக்கு செல்லப்போதுமான காரணம்! அதிலும் பலருக்கு சுஷி’யை சுவைப்பது பட்டியலில் முதலிடத்தில் இருக்கும்.

 பல நூற்றாண்டுகளாக அரசியல், பொருளாதார மற்றும் சமூக மாற்றங்களால் வடிவமைக்கப்பட்டிருக்கும் ஜப்பானிய உணவு முறை, புதிய புதிய தாவரப்பொருட்கள், கடல்வாழ்உயிரிகள் மற்றும் கடற்பாசிகளின்  சேர்மானம், பருவகால உணவுகள், சில எளிய ஆனால்  பிரத்யேக  சுவையை அளிக்கும் சுவையூட்டிகளும் இணைந்தது.

’’வாஷோகு’’ என்பது ஜப்பானிய உணவு, சமையல் மற்றும், ஒன்றுக்கொன்று மிகப்பொருத்தமாக சேர்ந்துகொண்டு சுவையளிக்கும் ஜப்பானிய உணவு வகைகள் ஆகியவற்றைக் குறிக்கிறது.  Wa (வா)  என்பது ஜப்பானின் பாரம்பரியத்தையும் Shoku (ஷோகு) என்பது உணவையும் உணவு கலாச்சாரத்தையும்,  உண்ணுதலையும் சேர்த்தே குறிக்கின்றது. முதலில் கண்களால் உணவை உண்டபின்பே வாயினால் உண்ணவேண்டும் என்பது ஜப்பானியர்களின் பொதுவான கூற்று. அத்தனை வண்ணமயமாக, அழகாக உணவுகள் தயாரிக்கப்பட்டு, அலங்கரிக்கப்பட்டு பரிமாறப்படும். மிசெலின் நட்சத்திர அந்தஸ்து கொண்டிருக்கும் உணவகங்களை அதிகம் கொண்டிருக்கும் முதல் மூன்றுநாடுகளிலும்  ஜப்பான்  இருக்கிறது.

இறைச்சி உணவை பெரும்பாலும் தவிர்த்தே வந்த ஜப்பானியர்கள், பேரரசர்  மெய்ஜி தலைமையில் 1868’ல் நடைபெற்ற  ஜப்பானின் நவீனமயமாக்கலுக்கு பிறகே பாரம்பரிய உணவிலும் இறைச்சியை சேர்த்துக்கொண்டனர்.

ஜப்பானிய உணவில் பிரதானமான அரிசிச்சோற்றுடன், ஏராளமான  பக்க உணவுகள், தொடுகறிகள், மீன், “சுகேமோனோ”  எனப்படும், காய்கறி ஊறுகாய்கள், டோஃபூ, பாலாடைக்கட்டி, சோயா, காளான்கள், நூடுல்ஸ், என கலவையான, அதிகம் வேகவைக்கப்படாத, பெரிதும் பச்சையாகவே தயாரிக்கப்பட்ட உணவுப்பொருட்கள் இருக்கும், முழுமையான ஜப்பானிய உணவு முறை எத்தனை ஆரோக்கியமானதென்பதை ஜப்பானியர்களின் நீளாயுளையும், உடற்கட்டையும் பார்த்தே அறிந்துகொள்ளலாம். ஜப்பானில். கொழுத்த உடலுடையவர்களை அரிதாகவே காணமுடியும் .

ஜப்பானில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான பழமைகொண்ட சிறப்பான பலசேர்மானங்களையும், விதம் விதமான உணவு வகைகளை உருவாக்கும் கலைகளையும் உள்ளடக்கிய இந்த வாஷோகு, 2013 ஆம் ஆண்டில்  யுனெஸ்கோவின் புலனாகா கலாச்சார பாரம்பரிய அந்தஸ்தை (UNESCO Intangible cultural heritage) பெற்றது, ஜப்பானில் இத்துடன் சேர்த்து 23 யுனெஸ்கோ அந்தஸ்துகள் உள்ளதென்பதும் குறிப்பிடத்தக்கது. உண்ணுதல் மட்டுமல்ல, வாஷோகு ஒரு சமையல் அனுபவமும் கூட .

ஜப்பானிய உணவுகளில் மிக முக்கியமானது சுஷி மற்றும் சஷிமி. இவ்வுணவுகளுடன் தவறாமல் பச்சைநிறத்தில் மிகச்சிறிய அளவில் விழுதாக அளிக்கப்படும் ஒரு துணை உணவே வஸாபி. வஸாபியை சுவைத்தவர்கள், கேள்விப்பட்டிருப்பவர்கள், அதன் பச்சை நிறத்தைக்கொண்டு அது ஏதோ ஒரு செடியின் இலைகளின் பசையென்றோ அல்லது செடியை அரைத்த விழுதென்றோ நினைக்கக்கூடும்.

ஆனால் உருளைக்கிழங்குகளைப் போலவே விளையும் வஸாபிச்செடியின் சதைப்பற்றான, சத்துக்களும் பச்சையமும் நிறைந்துள்ள கிழங்குகளைப்போலிருக்கும், தண்டுப்பகுதியின் நீட்சிகளை (Stem tubers)  துருவி எடுக்கப்படுவதே வஸாபி. வஸாபிதான் சுஷி, சஷிமியுடனான மிகப்பொருத்தமான இணையுணவு. இதன் பிரத்யேக சுவை, வாசனை மற்றும் எரிவு உலகின் வேறெந்த தாவரப்பொருட்களுக்குமே இருக்காது, மேலும் இது மிக மிக புதிதாகவே பரிமாறப்படுமொன்று.

ஷஷிமியுடன் வஸாபி விழுது

சுஷியை சுவைத்திருப்பவர்கள் வஸாபியையும் சுவைத்திருக்கக்கூடும் ஆனால் அது அசல் வஸாபிதானா என்பது சந்தேகம்தான். ஏனெனில் ஜப்பானிலேயே 5 சதவீதம்தான் அசல் வஸாபி கிடைக்கின்றதென்றும், இப்போது வஸாபி என அளிக்கப்படுவதும் சுவைக்கப்படுவதும் வஸாபியல்ல, வஸாபியின் நிழல் அல்லது சாயல் என்கிறார்கள் தலைசிறந்த  ஜப்பானிய சமையல் கலை வல்லுநர்கள்.

போலி வஸாபி விழுதில், வஸாபி  இலை, இலைக்காம்பு, கடுகு மற்றும் வஸாபியின் தாவரக்குடும்பத்தை சேர்ந்த முள்ளங்கி வகையொன்று (Cochlearia armoracia ), பச்சைசாயம், மிகக்குறைந்த அளவில் வஸாபியின் மலர்கள்  ஆகியவைகள் கலக்கப்பட்டிருக்கும்.

முட்டைகோஸ், காலிஃப்ளவர், முள்ளங்கி, கடுகு ஆகியவற்றின் குடும்பமான பிராசிகேசியேவை (Brasicaceae) சேர்ந்த வஸாபியா ஜப்பானிகா, (Wasabia japonica,  இணை அறிவியல் பெயர் Eutrema japonica) செடிகள் மெதுவாக வளரும் இயல்புடைய, ஆண்டு முழுதும் பூக்கும்,  வெண்ணிற இருபால் மலர்களையும், தடிமனான அடித்தண்டும், நீளகாம்புகளுள்ள சிறுநீரக வடிவிலான பெரிய இலைகளையும் கொண்டவை.

 இதன் தாவர அறிவியல் பெயரின் பேரினப்பெயரான Wasabia’வின் பொருள் சரிவர எங்கும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. வஸாபி என்னும் ஜப்பானிய புழங்குபெயரின் லத்தீன் வடிவமாக வஸாபியாவே வைக்கப்பட்டது. சிற்றினமான japonica  ஜப்பானை பிறப்பிடமாக கொண்டதை குறிப்பிடுகின்றது. இதுபோலவே தாவர அறிவியல் பெயர்களின் சிற்றினங்களில் indica என்பது இந்தியாவை, sinensis என்பது சீனாவை, Canadensis  கனடாவை என்று அவற்றின் தாயகத்தை குறிப்பிடும் பெயர்களில் அமைந்திருக்கும் 

இக்குடும்பத்தின் அனைத்து தாவரங்களுமே விசேஷமான நொதியான மைரோசினேஸை, குளுகோசினோலேட்டுக்களை, அய்சோதயோனேட்டுக்களை  கொண்டிருக்கும்.  ((Myrosinase, Glucosinolates. Isothiocyanates). இச்செடிகளை அல்லது செடிகளின் பாகங்களை நறுக்கும் போதும், காயப்படுத்தும் போதும்  இவை ஒன்று கலந்து கசப்பும், எரிவும், மணமுமாக வெளிப்படுகின்றன.  முட்டைக்கோஸிலிருக்கும் அய்சோதயோனேட்டின் அளவை விட வஸாபியில் 3000 மடங்கு அதிகமென்பதால் இதன் சுவையும், மணமும், எரிவும் அலாதியாக இருக்கின்றது.

வளர்ந்த இச்செடியின் அடித்தண்டு சுமார் 18 லிருந்து 24 மாதங்களில், 12 லிருந்து 18 இன்ச் உயரமும் 40 மிமி அகலமும் வளர்ந்ததும் முழுச்செடியும் வேருடன் அறுவடை செய்யப்படும். இலைகள் நீக்கப்பட்ட அடித்தண்டுகளே வஸாபி கிழங்குகள். இவை மேலும் வளருமென்றாலும் இந்த அளவில் அடித்தண்டுகள் இருக்கையிலேயே வஸாபி விழுதின் பிரத்யேக சுவையும் எரிவும் மிகச்சரியாக இருக்கும்..

வஸாபி ஜப்பானில் எப்போதிலிருந்து, யாரால், எங்கு விளைவிக்கபட்டதென்பதை குறித்து ஜப்பானிலேயெ பலவிதமான வாய்வழிக்கதைகளும்  கருத்துக்களும் நிலவுகின்றது.

  பன்னெடுங்காலத்திற்கு முன்பு வேட்டைக்காரர்களாக இருந்த, மீனும், விலங்குகளும், கனிகளும் விதைகளும் கடலுணவுகளுமாக உண்டு கொண்டிருந்த ஜப்பானியர்கள் அப்போதே காடுகளில் இயற்கையாக கிடைத்த வஸாபி கிழங்குகளையும் உணவில் சேர்த்துக்கொண்டிருந்திருக்கலாமென்று பரவலாக நம்பப்படுகின்றது. சாமுராய் வீரர்களுக்கு அவர்களின் சேவைகளை பாராட்டும் விதமாக பரிசளிக்கப்பட்டன வஸாபி பண்ணைகள் என்றும் சொல்லப்படுகின்றது.

மியி மாகாணத்தில்  786ல் புத்த துறவியான  கோஹ்போ-டாய்ஷி ( Kohbou-Daishi) காடுகளில் வளர்ந்திருந்த வஸாபி செடிகளை கொண்டு வந்து கோயா மலைகளிலும் (Mount Koya) அதன் அடிவாரத்திலும் பயிரடச்செய்ததற்கான ஆவணங்களே வஸாபியைக்குறித்து கிடைத்திருக்கும் முதல் வரலாற்று சான்று. 794’ல் உருவான ஜப்பானிய  தாவரவியல் அகராதிகளிலும்  வஸாபி குறிப்பிடப்பட்டிருக்கிறது.

  918’ல் ஃபுகானே நோ சுககிட்டோ (Fukane-no-Sukehito) தொகுத்தளித்த ஹோன்ஸோ வாம்யோ (Honzo Wamyo) எனப்படும் ஜப்பானின் மிகப்பழமையான மூலிகைஅகராதியில் மலைகளைக்குறிக்கும் சொல்லான ’யாமாய்’ என்று அழைக்கப்பட்ட, மலைகளில் மட்டும் வளர்ந்த  இந்த இச்செடியின் பெயர் பின்னர்  மருவி வஸாபி என அழைக்கப்பட்டிருக்கலாம் என்றும் இவை 1000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ஜப்பானில் இயற்கையான வாழிடங்களில் வளர்பவையென்றும்  குறிப்பிடப்பட்டுள்ளது.  மேலும் எங்கிஷ்கி (Engishiki) எனப்படும் ஜப்பானிய அரசுக்கான சட்டதிட்டங்கள், சடங்குகள் குறித்தான பழமையான் நூலிலும்  வரிசெலுத்தியவர்கள் பணத்துக்கு பதிலாக வஸாபி கிழங்குகளை அளித்தது குறிப்பிடப்பட்டுள்ளது .

931–938 ல் தொகுக்கபட்ட வாம்யோ ருயிஜுஷா (Wamyo Ruijusho)  எனப்படும் ஜப்பானின் முதல் அகராதியிலும் வஸாபியைப்பற்றிய குறிப்புக்கள் உள்ளன. ஜப்பான் வெற்றி பெற்ற பல போர்களுக்கு பிந்தைய உண்டாட்டுகளில் வஸாபியை உணவில் சேர்க்கப்பட்டதற்கான குறிப்புக்கள் பல ஆவணங்களில் இருக்கின்றன.

ஜப்பானியர்களின் கலாச்சாரத்தில் மிக முக்கிய இடம்பெற்றிருக்கும் இந்த வஸாபி. 10ஆம் நூற்றாண்டிலிருந்து மருந்துப்பொருளாகவே இருந்து, பின்னர் படிப்படியாக உணவில் சேர்க்கப்பட்டிருக்கிறது.

 1338 லிருந்து  1573 வரைக்குமான காலத்தில், ஜப்பானின் அரசகுடும்பங்களில் மட்டும்  உணவில் சேர்க்கப்பட்டிருந்த வஸாபி,. 1596-1615க்கு இடைப்பட்ட காலத்திலிருந்துதான்  வணிக ரீதியாக பயிரிடப்படுகின்றது. 

 ஜப்பானிய சமையலில் கடுகைப்போல ஒரு மசாலாப்பொருளாக பயன்பாட்டிலிருந்த வஸாபி, பின்னர் மெல்ல மெல்ல சுஷி, பிற மீனுணவுகள்,  நூடுல்ஸ் மற்றும் சூப்பில் வாசனைக்காக சிறிதளவு சேர்க்கப்பட்டது

17ஆம் நூற்றாண்டை சேர்ந்த ஜப்பானை ஒன்றிணைத்த மூவரில் ஒருவரான  லியாஷு டோகுகவா (Ieyasu Tokugawa)  வஸாபி பிரியராக இருந்திருக்கிறார் 

19 ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்துதான் வஸாபி பொதுமக்களுக்கும் கிடைத்திருக்கிறது. 1971  வரை பசையாக்கப்பட்ட வஸாபிதான் பாக்கட்டுகளில் விற்பனை செய்யப்பட்டது. 1973’ற்கு பிறகுதான் புத்தம் புதிய கிழங்குகளிலிருந்து வஸாபியை துருவி உண்ணும் வழக்கம் நடைமுறைக்கு வந்தது.

ஜப்பானில் பல்லாண்டுகளாகவே வஸாபி உணவிலும், மருந்தாகவும் பயன்படுத்தப்பட்டு வந்திருந்தாலும்,  20 ஆம் நூற்றாண்டில் சுஷி/சஷிமி உணவுகள் பிரபலமானதும் அதன் இணைஉணவான வஸாபியும் உலகளவில் மிகபிரபலமடைந்தது. சுஷி உணவுக்கும் வஸாபிக்குமான பொருத்தம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்பட்டதாக ஜப்பானியர்கள் வேடிக்கையாக சொல்லுவதுண்டு. சுஷியின் பச்சை வாசனையை மறைக்க, பச்சை சுஷியின் கிருமிகளால் பாதிப்பு வராமலிருக்க பொருத்தமான  துணையுணவாக வஸாபி அதிகம் பயன்பாட்டுக்கு வந்தது

  20’ம் நூற்றாண்டின் துவக்கத்தில்தான் வஸாபியை தூளாக்கி சந்தைப்படுத்துதலும் துவங்கியது. இதன் சுவை புதிய வஸாபி விழுதைப்போல இருக்காதெனினும் இதையும் ஏராளமானோர் வீட்டு உபயோகத்திற்கென வாங்குவார்கள். தற்போது  (-196°C) உறை நிலையில் திரவ நைட்ரஜனில் சேமிக்கப்பட்டு வஸாபியின் சுவையும் நிறமும் மணமும் பாதுகாக்கப்படுகின்றது.

வஸாபி கிழங்கை துருவுதல் என்பது உண்மையில் தேய்த்தல்தான் இவற்றிற்கென இருக்கும் விசேஷ சுறாத்தோலினால் உருவாக்கப்பட்ட ஓரோஷி (oroshi) சதுரத்துருவான்களிலோ, அல்லது கருங்கல்லிலோ, உலோகத்துருவான்களிலோ  கிழங்குகள் வட்டசுழற்சியில்  தேய்ககப்பட்டு விழுதாக்கப்படும். வஸாபியின் சுவையும் மணமும் குணமும் அது துருவப்படும் விதத்தை பொருத்தும் மாறுபடுகிறது..

இதிலிருக்கும் எளிதில் ஆவியாகக்கூடிய வேதிச்சேர்மங்களின்  சுவையை அனுபவிக்கவேண்டி பாரம்பரியமான உணவகங்களில் வஸாபி, அவ்வப்போது புத்தம் புதிதாகவே விழுதாக்கப்பட்டு பரிமாறப்படுகின்றது. சில உயர்தர உணவகங்களில் வஸாபியை வாடிக்கையாளர்களே துருவிக்கொள்ளவும் வசதியுண்டு. பரிமாறப்பட்ட 15 நிமிடங்களில் வஸாபியை சுவைக்காவிட்டால் அதன் அசல்சுவை மறைந்துவிடும்.

பச்சைத்தங்கமெனப்படும் வஸாபி நாவில் பட்டதும் மூளையில் ஒரு மெல்லிய உதையை, நாசியில் உடனே ஒரு எரிச்சலை, பின்னரே நாவில் அதன் சுவையை உணருவீர்கள் என்கிறார்கள் ஜப்பானியர்கள். தேள் கொட்டியது போலவும் தீயில் சுட்டுக்கொண்டது போலவுமிருக்கும் என்றும் சொல்லப்படுகின்றது.

வஸாபியின் புகைகலந்த செவிகேட்காதவர்களுக்கான தீவிபத்து எச்சரிக்கை கருவியை வடிவமைத்த ஜப்பானிய தொழில்நுட்பத்திற்கு அசாதாரண அறிவியல் கண்டுபிடிப்புக்களுக்கான   Ig நோபல் பரிசு 2011ல்  கிடைத்தது. இதன் எரிச்சல் அத்தனை துரிதமாக மூளைக்கு செல்லும்.

 வஸாபியின் எரிவு, மிளகாயிலிருக்கும் கேப்ஸைஸினைபோல் நெடுநெரம் தங்கி இருக்காமல் விரைவில் நாக்கிலிருந்து நீங்கிவிடும்  வஸாபி விழுதை உண்ணுகையில் கண்களிலும் மூக்கிலும் நேரடியாக பட்டுவிடாமல் கவனமாக இருக்கவேண்டும். வஸாபி மிகசிறிதளவே உணவில் எடுத்துக்கொள்ளப்பட்டாலும் இதன் சுவை மறைந்திருந்து மிக குறைவாக தென்படுமொன்றல்ல, முழு உணவையும் முன்னின்று வழிநடத்திச்செல்லும் சுவை கொண்டதென்கிறார்கள் ஜப்பானியர்கள். மிககுறைந்த அளவிலேயெ இவ்விழுது எடுத்துக்கொள்ளப்படுவதால்  இதன் பக்கவிளைவுகள் வெகு அரிதாகவே இருக்கும். வஸாபியை பொருத்தவரை குறைவே மிகுதி.

துருவிய அல்லது தேய்த்த வஸாபியின் மணமும் சுவையும் நிலைபெற இரண்டே இரண்டு நிமிடங்கள் காத்திருந்து பின்னர் இவை பரிமாறப்படும். கண்ணீல் நீரை நிறைத்து மூக்கை தூண்டி எரிச்சலடைய வைத்து எரிவை உடனடியாக மூளையில் உணரச்செய்யும் வஸாபியின் சுவையை வேறெந்தெ சுவையுடனும் ஒப்பிடவே முடியாது.

வஸாபி பண்ணை

ஜப்பானுக்கு செல்லாதவர்கள் ஜப்பான் முழுவதும் பச்சைப்பசேலெனெ செழித்து வளர்ந்திருக்கும் வஸாபிக்காடுகள் இருக்கும் என கற்பனை செய்து கொள்ளவேண்டாம். வஸாபி அத்தனை எளிதில் வளரும் தாவரமல்ல.. நேரடியான சூரியஒளிபடாத ஆற்றங்கரைகளிலும் மலைச்சரிவுகளிலும் வேர்கள் தூயநீரில் மூழ்கி இருக்கும்படியே இவை வளரும். சாதாரணமாக நம்வீட்டு தோட்டங்களில் எலுமிச்சை கறிவேப்பிலை வளர்பப்தைபோல வஸாபியை வளர்க்கமுடியாது. இவற்றை கட்டுப்படுத்திய சூழலில் பசுங்குடில்களில் வளர்க்கும் முயற்சிகள் அவ்வளவாக  வெற்றி பெறவில்லை. வஸாபி கிலோ 160லிருந்து 250 டாலர்கள் வரை விலை இருக்கும். மிககுறைந்த அளவில் விளைச்சலும், அதைக்காட்டிலும் பன்மடங்கு அதிகமான உலகளாவிய தேவையும் கொண்டது வஸாபி.

டோக்கியோவின் ஷிஜுவோகாவில் பல நூற்றாண்டுகளாக இயற்கையான வாழிடங்களில் வஸாபி பயிரிடப்படுகின்றது. ஜப்பானில் வருடா வருடம் விளையும்  வஸாபி கிழங்குகளில் சரிபாதி இங்கிருந்துதான் கிடைக்கின்றது  

நீரோடைகளின் பாறைகளின் மீதடுக்கப்பட்ட சரளைக்கற்களின் மீது மணலைப்பரப்பி வஸாபியை  பயிரிடும் பழமையான முறை டட்டாமி இஷி (tatami ishi) எனப்படும். இம்முறையில் நீர் இயற்கையாகவே வடிகட்டப்படுவதால் வஸாபியின் சுவையும் தரமும் முதல் தரத்திலிருப்பதாக சொல்லப்படுகின்றது.

 ஜப்பானில் இயற்கையாக விளையும் வஸாபி ஹான் வஸாபி எனப்படும்.(Hon wasabi). விதைகள் மூலம் நிலத்தில் பயிராகும் வஸாபி ஹடக் வஸாபி எனப்படும் (Hatake-wasabi) “hatake” என்றால் நிலமென்று பொருள். நிலத்தில் வளர்க்கப்படும் செடிகளிலிருந்து கிடைக்கும் வஸாபிக்கிழங்குகளை விடநீரில் வேர்களை பதித்து நிலத்தில் இலைகளுடன் இருக்கும் சவா செடிகளே (sawa wasabi) தரமான  வஸாபிக்கிழங்குக்ளை கொடுக்கின்றன தரம்குறைவான் ஓக்கா வஸாபியும் அதிகம் பயிரிடப்படுகின்றது (oka wasabi ). ஜப்பானிய வஸாபியில் தருமா வகை( Daruma  ) அழகிய வசீகரிக்கும் இளம் பச்சையிலும், மசுமா வசாபி (Mazuma ) நல்ல எரிவுடனுமிருக்கும்.  

ஜப்பானில் உணவுகள் மிகப்பிரபலமென்றாலும் உணவுகளுக்கு நாம் பெருந்தொகையை செலவிட வேண்டியதில்லை, பெரும்பாலும் ஒரு  முழு பாரம்பரிய உணவுக்கு  5 முதல்  10 அமெரிக்க டாலர் வரைதான் செலவாகும். வஸாபி உணவுக்கட்டணம்  2 லிருந்து 5 டாலர் வரையே இருக்கும்

துணை உணவாக மட்டுமன்றி வஸாபியின் மருத்துவகுணங்களுக்காகவும்  ஜப்பானியர்கள்  வஸாபியை உணவில் சேர்த்துக்கொள்கின்றனர். வஸாபியின் வேதிப்பொருட்கள் ஜீரணத்தை துரிதப்படுத்தி வயிற்றுப்புண்களை ஆற்றுதல், புற்றுநோய்கெதிராக செயல்படுதல், பற்சிதைவை  தடுப்பது,  ரத்தக்கட்டிகளின் சிகிச்சைக்கு என பல்வேறு முக்கிய மருத்துவப்பயன்களையும் கொண்டிருக்கின்றது ஒவ்வாமை நோய்களுக்கும் ஆஸ்த்மாவுக்கும் கூட வஸாபி மருந்தாகின்றது. வஸாபி கிழங்குகளில் அதிக அளவில் வைட்டமின் C, முக்கிய தாது உப்புக்கள்,பொட்டாஷியம் மற்றும் கால்ஷியம் சத்துக்களும் உள்ளது

உலகநாடுகள் பலவற்றிலும் உணவுப்பிரியர்களின் விருப்பத்திற்குகந்த  வஸாபி தேவைக்கேற்ற அளவுகளில் விளைவிக்கப்படாததால்தான் வஸாபி போலிகளும் சந்தையில் அதிகம் புழங்குகின்றது.

பசுங்குடில்களில் வஸாபி

எளிதில் நோய்வாய்ப்படுவது , மிகத்தூய நீர் தேவைப்படுவது, கிழங்குகள் முற்றி அறுவடை செய்ய ஏறத்தாழ 2 வருடங்கள் தேவைப்படுவது ஆகிய காரணங்களினால்தான் வஸாபி அதிகம் பயிராவதில்லை. 2013 ல்  ஜப்பானில் மட்டும் 17.000 டன் வஸாபி கிழங்குகள் அறுவடை செய்யப்பட்டும் உலகளாவிய இதன் தேவை பலமடங்கு அதிகமாவே இருந்துவருகிறது

புவியியல் ரீதியாக, வசாபி சந்தை வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா-பசிபிக் மற்றும் மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா உட்பட ஐந்து பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. உலகளாவிய வஸாபி சந்தை 279.7 மில்லியன் அமெரிக்க டாலர்களக மதிப்பிடப்பட்டிருக்கிறது, 2027’ல் இது 590 மில்லியனாக உயருமென்றும் அனுமானிக்கப்படுகிறது

தற்போது வஸாபி சாகுபடி அமெரிக்கா, கனடா, தைவான், ஆகிய நாடுகளிலும் வேகம் பிடித்திருக்கிறது. நியூஸிலாந்தில் நீரியல் வளர்ப்பில் LED விளக்கொளியில் வஸாபி க்ளோன்களை வளர்க்கத் துவங்கியிருக்கிறார்கள்.

வஸாபி கிழங்குகளாகவும், தூளாக்கப்பட்டும், விழுதாகவும், துருவியும் சந்தையில் கிடைக்கின்றது. ஜப்பானுக்கு செல்லுகையில் அசல் வஸாபியை சுவைக்கும் அனுபவத்தை  தவறவிடக்கூடாது. வஸாபி ஐஸ்கிரீம்களாகவும், பியரில், ஜின்னில், சோளப்பொறியில், நூடுல்ஸீல், சிற்றுண்டிகளில்  கலக்கப்பட்டும் ஜப்பானில் பரவலாக கிடைக்கின்றது. வஸாபி விழுது கலக்கப்பட்ட பழரசங்களும் உண்டு. இனிப்பும் காரமும் வஸாபி மணமுமாக இளம்பச்சைநிற கிட்கேட் சாக்லேட்டுக்கள் ஜப்பானில் வெகு பிரபலம். வஸாபியின் இளம்பச்சை வண்ணத்திலிருக்கும் வஸாபி  பொம்மைகளும் ஜப்பானிய குழந்தைகளுக்கு பிரியமானவை.

வஸாபி கிட் கேட்

எந்திரனில் நீலகண்ணழகி ஐஸ்வர்யாவை வைரமுத்து’’ செந்தேனில் வஸாபி ‘’ என்றிருப்பார். அப்படியொரு வித்தியாசமான சுவைதானிது

யூ ட்யூபில் வஸாபி சாகுபடியைக் குறித்தும், விழுதின் தயாரிப்பு, பயன்பாடு மற்றும் சுவை குறித்தும் ஏராளமான காணொளிகள் கிடைக்கின்றன . இவற்றில் தலைமுறைகளாக வஸாபி பயிரிடும் குடும்பத்தினரின் பண்ணையைக்குறித்த  உணர்வுபூர்வமான   காணொளி இந்த இணைப்பில் இருக்கின்றது.

 https://www.youtube .com/watch?v=fhlklE9wBSY

வஸாபி ஐஸ்கிரீம்