நோய்த்தொற்று உச்சத்திலிருந்த, ஊரடங்கும் அமலில் இருந்த மார்ச் மாத நள்ளிரவொன்றில், வழியெங்கும் பூத்திருந்த மஞ்சள் மலர்களை நிறையவே நிறையாத கூடையில் பறித்துக்கொண்டே இருக்கும் நெடுங்கனவொன்றில் நானிருக்கையில் எங்கோ ஆழத்தில் குடுகுடுப்பைக்காரனின் குரலும் குடுகுடுப்பை ஒலியும் அஞ்சிய நாய்களின் குரைப்புமாக கேட்டுக்கொண்டிருந்தது. படுக்கயறையின் ஜன்னலுக்கு வெளியே நின்றபடி குறிசொல்லிக்கொண்டிருந்திருக்ககூடும்.

கனவிலேயே நாளை விடிந்ததும் எப்படியும் நேரில் குறிசொன்னதை விளக்கிச்சொல்லி பழம்புடவைகளையும் அரிசியோ பருப்போ எண்ணையோ தேவையைச்சொல்லி வாங்க வருவானில்லையா அப்போது பார்த்துக்கொள்ளலாமென்று ஆழ்மனமே ஆழ்மனத்திற்கு சொல்லி மீண்டும் கனவை தொடர்ந்து, தூங்கிவிட்டேன். வழக்கம் போல அதிகாலை விழித்து நாளைத் துவங்கினேன் ஆனால் கண் விழித்த நிமிஷத்திலிருந்தே  என்னவாக இருக்கும் அவன் சொன்னவிஷயம் என்றூ உள்ளுக்குள் நிமிண்டலாகவே இருந்தது.

உலகளாவிய அசாதரண நோய்தொற்றுக் காலமாதலால், நிச்சயமற்றுப்போயிருந்த எதிர்காலம், மகன்களின் படிப்பு, ஆரோக்கியம், என் வேலை என்று ஏராளம் கவலைகளில் உழன்று கொண்டிருந்த சமயமாதலால் குடுகுடுப்பைக்காரனின் வரவுக்கு 2 நல்ல புடவைகளையும் அரிசியும் எடுத்து வைத்துக்கொண்டு காத்திருந்தேன்

6 மணி வாக்கில் வந்தான். இளைஞன், கரியவன் ஏராளமான வண்ணத்துணிகளை கைகளிலும் தோளிலும் போட்டுக்கொண்டிருந்தான். முறுக்கு மீசை, ரத்தச்சிவப்பில் பெரிய வட்டப்பொட்டு ,வெற்றிலையில் சிவந்த தடித்த உதடுகள். எதையோ வைத்திருந்த கனமான ஜோல்னா பைகளிரண்டு தோளிலிருந்து தொங்கிக்கொண்டிருந்தது.

என்னைப்பார்த்ததும் ஒரு கும்பிடு போட்டுவிட்டு எடுத்த எடுப்பிலேயே’’ இந்த வீட்டு மூத்த ராசாவுக்கு, மூத்த வாரிசுக்கு, குடும்பத்தை தாங்கப்போற காளைக்கு குறி சொல்லியிருக்கா ஜக்கம்மா’’ என்றதும் ஆர்வமும் கூடவே கவலையுமாக வெளியே போனேன். சரணுக்கு என்னத்தை சொல்லியிருக்காளோ ஜக்கம்மான்னு

 ’’தாயி, மகாலட்சுமி உன் களையான முகம் என்னிக்கும் வாடாது  வாடவிடமாட்டா ஜக்கம்மா’’ என்று பால்வார்த்தான் பின்னர் தடாலடியாக ’’தாயி,  நல்லா கேட்டுக்க இந்த வீட்டு மகராசன் மேல,  மூத்த ராசாமேல, கன்னி ஒருத்தி கண்ணைப் போட்டுட்டா, அவ பார்வையை நல்லா பதிச்சு போட்டா, கவனிச்சுக்கேளு நான் சொல்லபோறதை’’ என்றான். நான் பரவசமாகிவிட்டேன்

எனக்கு சில வருடங்களாகவே மனக்குறை இருந்த ஒரு விஷயம் இது

சரண் வழக்கமாக எல்லா பையன்களும் சொல்லும் ’’எனக்கு பெண்களைப் பிடிக்கா’’தென்பதை 8 ஆம் வகுப்பிலேயே சொல்லிவிட்டாலும் அதன்பிறகும் அதில் மாற்றங்கள் எதையும் காண்பிக்கவேயில்லை, சொன்னது சொன்னதுதான்னு பெண்கள் பக்கம் திரும்பவேயில்லை

இந்தியாவின் தரமான பள்ளிகளில்  இரண்டாவது பள்ளியான அவன் பள்ளிப்பெண்கள் அனைவருமே செல்வச்செழிப்பின் அழகும், இளமைப்பெருக்கின் அழகும், இயல்பான அழகுமாய் திளைப்பவர்கள். இவன் வகுப்பிலும் பேரழகிகள் தான் எல்லாருமே.

ஆனால் யாரிடமும் இவன் சிரித்துப்பேசியதையோ, அலைபேசியதையோ கூட நான் பார்த்ததில்ல. பள்ளி விழாவான ஆனந்த உத்ஸவ்’விற்காக 3 நாட்கள் அவனுடன் பள்ளியிலேயே தங்கவேண்டி வருகையில் என்னை முன்பே எச்சரித்தே கூட்டிப்போவான் ’’அம்மா என் வகுப்பு பொண்ணுங்க கிட்ட எல்லாம் ரொம்ப சிரிச்சி சிரிச்சு பேசாதே’’ என்று. நான் அந்த எச்சரிக்கைகளை கடுகளவும் பொருட்படுத்தியதும், கவனத்தில் கொண்டதும் இல்லையென்பது வேறு விஷயம்.

பள்ளியின் பசும்புல்தரையில் நானும் சரணுமாக அமர்ந்து பேசிக்கொண்டிருக்கையில் ஒரு குட்டைப்பாவாடை கத்தார் அழகி ’ஹாய் பொள்ச்சி’ என்று இவன் முதுகில் பளாரென ஒரு அறை வைத்துவிட்டுப்போனாள் ஒருமுறை. இவன் முகம் கடுகடுக்க அமர்ந்திருந்தான், ’’டேய் யாருடா?’ என்றதற்கு ’’ஜூனியர்மா, கொழுப்பு’’ என்றான். ’’அட சும்மா பேசலாமில்ல நீயும்,  அது அடிக்கற அளவுக்கு ஜாலியா இருக்கில்ல என்றதற்கு’’, அம்மா! நீ கொஞ்சம் பேசாம இருக்கியா? என்ற எதிர்வினை 2 லட்சமாவது தடவையாக அவனிடமிருந்து வந்தது.

இன்னும் ஒருத்தி அடுத்த நாள் வந்து ’’சா, உன்னிடம் இருக்கும் சாண்ட்விச் கூப்பனை எனக்கு தரமுடியுமா’’ வென்று கேட்டாள், எந்த பதிலும் பேசாமல் குறைந்த பட்சம் ஒரு புன்னைகை கூட இல்லாமல், பாண்ட் பாக்கட்டிலிருந்து கூப்பனை கொடுத்துவிட்டு தேமே என்று அமர்ந்திருந்த அவனை எரிச்சலுடன் பார்த்து’’ ஏன் இவ என்ன சீனியரா உனக்கு? என்றேன் ’’இல்ல கூடத்தான் படிக்கறா ’’ என்றான் கொஞ்சம் சிரிச்சாத்தான் என்னடா? என்றால் மீண்டும் அதே’’ நீ சும்மா இருக்கியா’’பாட்டையே பாடினான்

அந்த பெண் கொள்ளை அழகி. பொன்னிறகூந்தல் அலைஅலையாக இடுப்புவரை,  பூனைக்கண்கள், கூர்நாசி, உருவிவிட்டது போல் உடல், நல்ல உயரம் இந்தியச்சாயல் அவள் உடல்மொழியிலும் இல்லை. பிறமாணவர்களிடம் விசாரிக்கையில் விழுந்தடித்துக்கொண்டு அவளை, அந்த சங்கரியைக் குறித்து ஒரு லாங் சைஸ் நோட்டில் எழுதும் அளவுக்கு தகவல்களை கொட்டினார்கள்

அப்பா சென்னைவாசி, சென்னைக்கு சுற்றுலா வந்த பிரேசில் அழகியுடன் காதல் வயப்பட்டு கல்யாணம், காதலின் சாட்சியாக ஒரே மகள் சங்கரி  இவன் ஏன் இப்படி இருக்கிறானென்று அன்றைக்கும் ரொம்பவும் விசனப்பட்டேன்

பெருங்கவலையில் இருந்த எனக்கு ஜக்கம்மா குடுகுடுப்பைக்காரனிடம் சொல்லி அனுப்பிய தகவல் பெரிதும் மகிழ்ச்சி அளித்ததால் ’’அப்படியா’’, என்று வாய்விட்டே கேட்டேன்

என் உணர்வெழுச்சி நிரம்பிய அந்த வினாவை அவன் அதிர்ச்சியென்று தவறாக எடுத்துக்கொண்டிருக்கக்கூடும், ’’ஆமாந்தாயி ஆனா உங்க மகன் தப்பெதுவும் செய்யலை, கன்னி அவளாத்தான் கண்ணை வச்சுட்டா, கொள்ளிக்கண்ண, கொலைக்கண்ண வச்சிட்டா’’ என்றான். கவிஞனாயிருப்பான் போலிருக்கேன்னு நினைச்சேன். என்ன மொழிவளம்!

 தப்பா நினக்க என்ன இருக்கு வயசுப்பசங்கன்னா பொண்ணுங்க கண்ணை, மனசை வைக்கறதெல்லாம்தானே நடக்கனும்னு மனசில் நினச்சு சந்தோஷப்படறதுக்குள், ‘’ஒண்ணும் கவலைப்படாதீங்க,  சின்ன பூசையொன்னப்பண்ணி கன்னியோட கண்ணை எடுத்துப் போடலாம், அவிச்சுப்போடலாம், விலக்கிப்போடலாமென்றதும் எரிச்சலானேன். இருந்திருந்து இப்பத்தான் ஒருத்தி கண்ணை வச்சுருக்கா, அதை எதுக்கு எடுக்கனும்?

‘’ அதெல்லாம் வேண்டாம்ப்பா, இருந்துட்டு போகட்டும்’’ என்றதும் அவன் குழம்பிவிட்டான். பொதுவில் இப்படி சொன்னதும், கவலையடையும் தாய்களைத்தான் பார்த்திருப்பானோ என்னமோ!

’’தாயீ,, நான் கன்னின்னு சொன்னதை யார்’னு நினச்சீங்க’’ன்னு அவன் துவங்குமுன்னே நான் யாரா இருந்ததாலும் சரி ஒண்ணும் பிரச்சனையில்லைப்பா’’ என்றேன் கறாராக. அவன் மேலும் குழம்பி என்னையும் குழப்பும் உத்தேசத்துடன் பெரிய பூசையெல்லாம் வேண்டாம்மா, 3000 ரூபாதான் ஆகும் நல்லெண்ணை மட்டும் 2 லிட்டர் கொடுத்தாபோதுமெ’’ன்றான்.

 ’’அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்ப்பா,’’ என்று சொல்லி போய் புடவையை கொண்டு வரலாமென்று திரும்புவதற்குள், அவன் ‘’நாயக்கரம்மாக்கு இனி எல்லாம் நல்லாத்தான் நடக்கும்’’ என்றதும் மேலும் கடுப்பானேன். நாயக்கரம்மாவா!!!!!! .கொங்கு வட்டாரத்தின் நாயக்கர் பெண்களெல்லாம் ஓங்கு தாங்காக நல்ல உடற்கட்டுடன் பெருங்கூட்டுக்காரிகள் என்றே பெயரெடுத்திருப்பவர்கள்.

மறுபடியும் குண்டாகிட்டேனோ என்று கவலையாகவும் குடுகுடுப்பைக்காரன்  மீது எரிச்சலாவும் இருந்தது. சரி எடுத்துவைத்த புடவையை கொடுத்து இவனை அனுப்பிடலாமென்று நினைக்கையில் மீண்டும் அவன் ’’இந்த வீட்டுக்கு இனி எல்லாமே நல்லத்துதான் பூரா ஆம்பளை ராசாவேதான் பொறப்பங்க ,இனி பெண் வாரிசே இல்லை, எல்லமே ராசாக்கதான், ஆளும் வம்சம்தான்’’ என்று ஒரே ஆணாதிக்க க்குரலாக கொடுது என்னை  எரிச்சலடைய செய்தபடியே இருந்தான்.

 எப்போ இனி இந்த வீட்டில் இனி பெண் குழந்தைகள் பிறக்கும்னு காத்திட்டு இருக்கும் என்னிடம் இவன் இப்படி சொல்லிக்கொண்டிருந்ததில் ஏகத்துக்கும் எரிச்சலானேன்.  ’’சரிப்பா நில்லு வரேன்’’னு சொன்னதும் மறுபடியுமவன் ’’தாயீ கன்னியின் கண்ணு’? என்றான்

’’அது இருக்கட்டும் அப்படியே’’ என்று  காட்டமாக சொல்லிவிட்டு  புடவைகளையும் பொருட்களையும் கொடுத்தேன்.  ’’தாயீ 3000 வேண்டாம், சின்ன பூசையா, ஒரு ஆயிரத்திலயாவது செஞ்சுபோடலாம் கண்ணு நல்லதில்லை’’ என்றான் மறுபடி. மறுத்துச்சொல்லி அவனை அனுப்புவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது..

ஆன்லைன் வகுப்புக்கள் தொடங்கியிராத ஞாயிறென்பதால் சரண் தருண் இருவரும் இன்னும் உறக்கத்திலிருந்தார்கள். யாராயிருக்கும் அந்த கன்னி? என்று யோசனை உள்ளே ஓடிக்கொண்டே இருந்தது. அந்த பின்வீட்டிலிருக்கும் ஒல்லிபிச்சிபெண்ணா? தலைமுடி கொத்தமல்லி கட்டாட்டம் சின்னதா இருக்குமே அந்த தோப்புக்காரர் பொண்ணாயிருக்குமோ?

அடுத்த தெருவில் இருக்கும் போலீஸ்காரர் பெண்ணா? அல்லது அய்யோ, அடிக்கடி சரண் மருமகனா வர கொடுத்து வச்சிருக்கனும்னு சொல்லிட்டே இருக்குமே ஒரு வாயாடி அம்மா, ரெண்டு தெரு தள்ளி அவ பொண்ணா இருந்துருமோ?

சரணை மருமகனாக்கும் விருப்பத்தை என்னிடமே வெளிப்படையாக அந்த அம்மாள் சொல்லிய ஒரு நாளில் நான் மைய்யமாக சிரித்து  அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்திருந்தேன். எனக்கு சம்மந்திகூட  சரிக்குச்சரி சண்டை போடத் தெரியனுமே!

ஆனால் அன்று தருண் ’’அட பக்கத்திலேயே செட்டில் ஆயிட்டியே, வெரி குட், கைகொடு’’னு சொல்லிச்சொல்லி அண்ணனை வெறுப்பேற்றியதில் சரண் அரண்டு போய்  கூகிள்  மேப்பில் பாழுங்கிணற்றின் லொகேஷன் தேடிக்கொண்டிருந்தான்.

சரி யாரா இருந்தாலும் சரின்னு சமாதானமாக்கிக்கொண்டேன் என்னை.

ஆனால் முதலில் எழுந்து வந்த தருணிடம் ஆர்வமாக விஷயத்தை சொன்னதும் அண்ணன் மேல கன்னிப்பார்வையா? இருக்கட்டும் ’’எனக்கு என்ன சொன்னான்’’ என்றான் ஆர்வமாக. ’’ஒண்ணுமே சொல்லையே’’ என்றதும் ஒரே சண்டை ’’நீயெல்லாம் ஒரு தாயா? அண்ணனுக்கு ஒரு பார்வைன்னு சொன்னான்னா சின்னவனுக்கு என்ன ஏதுன்னு விசாரிக்க மாட்டியா’’ என்று

 சரி குடுகுடுப்பைகாரனின் போன் நம்பர் இல்லாட்டி வாட்ஸ் அப் நம்பர் இருக்கா எடு எடு என்றால் எங்கே போய் எடுக்க? ஏண்டா அநியாயம் பண்ணறே குடுகுடுப்பைகாரன்களுக்கு ஏதுடா போனெல்லாம்?‘’ ’’ஏன் இருக்காதா, அன்னிக்கு பஸ்டாண்டில் ஒரு அம்மா பிச்சை எடுத்தாஙகளே அப்போ அவங்க இடுப்பில் போனை சொருகி வச்சிருந்து எடுத்து பேசினாங்களே அப்போ ஏன் இவங்ககிட்டே இருக்காது, நீதான் கேட்காம விட்டுட்டே! எனக்கு எதாச்சும் கன்னி பார்வை இருந்துன்னா பார்த்து மேல எதாச்சும் செஞ்சிருப்பேனே’’ என்று அவன் ஒரு பக்கம் புலம்பிக்கொண்டிருந்தான்

சரண் எழுந்துவந்ததும் விஷயத்தை சொன்னோம் சிடு சிடுவென்று முகத்தை வைத்துக்கொண்டு ’’நீ என்ன கன்னின்னா, கன்னிப்பொண்ணுன்னு நினச்சுட்டு இருக்கியா, அவன் சொன்னது எதாச்சும் கன்னி தெய்வமா இருக்கும்  எப்படியாச்சும் உன்கிட்ட ஒரு ஐயாயிரம் தேத்தலாம்னு பார்த்துருக்கான் நீ தப்பிச்சுட்டே, அவ்வளவுதான், போம்மா’’ என்றான்’

அட அவ்வளவுதானா? ஜக்கம்மா என்ன இப்படி பண்ணிட்டாளே? என்ன என்னமோ நினச்சு சந்தோஷப்பட்டாச்சு அதுக்குள்ள.

 இன்னுமே தருண் அதே குடுகுடுப்பைக்காரனை வீதிகளில் அவ்வபோது தேடுவான், அவனுக்கும் பார்வை எதாவது பட்டிருக்கா என்று தெரிந்துகொள்ள.

உண்மையில் தருணின் பார்வைகள் பட்டிருக்கும் ஏராளமான பெண்களின் வீட்டில் அவற்றை எடுக்க பூசை செய்யவேண்டி இருக்குமென்பதை குடுகுடுப்பைக்காரன் தெரிந்துகொண்டால் அவன் காட்டில் மழைதான்.