கேராளாவின் Neestream என்னும் மலையாளத்திரைப்படங்களுக்கான புதிய இணையதளத்தின் இவ்வருடத்தின் முதல், புதிய வெளியீடாக ஜனவரி 15, 2021 அன்று வெளியிடப்பட்டது. ‘’ The Great Indian Kitchen. புதிய தளத்தின் பிரமாதமான வெளியீடு இந்த அழகிய குடும்பச்சித்திரம்.
இயக்குநர் ஜியோ பேபி, இசை சூரஜ் குரூப் மற்றும் மேத்யூஸ் புலிக்கன். நிமிஷா சுஜயன் மற்றும் சூரஜ் வெஞ்சிரமூடு பிரதான பாத்திரங்களில் (இரண்டாவது முறையாக ஜோடியாக.)ஒரு சில காட்சிகளைத்தவிர முழுப்படமுமே கோழிக்கோட்டில் ஒரே வீட்டில் படமாக்கப்பட்டிருக்கிறது. இதே வீட்டில்தான் முன்பு 1993ல் மிதுனம் திரைப்படமாக்கபட்டது. பிற கதாபாத்திரங்களில் நடித்தவர்கள் அனைவருமே கோழிக்கோடு நாடக நடிகர்கள்
ஒரு கண்ணாடியையோ அல்லது கேமிராவையோ இந்தியவீடுகளில்,குறிப்பாக தென்னிந்திய வீடுகளில் வைத்தால் தெரியவருவதைத்தான் முழுப்படமும் காட்டுகிறது..
நாயகி நம்மைப்போல, அடுத்த வீட்டுபெண்ணைப்போல, தோழியைப்போல நாம் அன்றாடம் சந்திக்கும் நூற்றுக்கணக்கான் பெண்களில் ஒருத்தியைப்போல இருப்பதும் படத்தின் பெரிய பலம். இது நம் கதை என அனைத்து இந்தியப்பெண்களும் விதிவிலக்கின்றி உணருவார்கள் திரையில் நிமிஷா சுஜயனை பார்க்கையில்.
நிமிஷா நடிகை ஊர்வசியின் மூத்த சகோதரி கலாரஞ்சனியை அதிகம் நினைவூட்டும் முகச்சாயலையும் உடல்மொழியையும் கொண்டிருக்கிறார். முழுப்படத்தின் ஆத்மாவே நிமிஷாதான். சூரஜின் நடிப்பு வழக்கம் போலவே பிரமாதம். உடலெடையை குறைத்து கச்சிதமாக இருக்கிறார். பாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார்.இயல்பான சிறப்பான நடிப்பு.
மேசை நாகரீகம் குறித்து விளையாட்டாக சொல்லுவது போல சொன்ன மனைவியை கடிந்துகொண்டு அவளை மன்னிப்பு கேட்கச்சொல்லுவதும் ,அவள் மன்னிப்பை கேட்டவுடன் அகமலர்வதையும் அத்தனை அசலாக காட்டுகிறார். சிதல்புற்றுபோல ஆணவக்கரையான்களால் பெருகி வளர்ந்திருக்கும் இந்திய ஆணாதிக்க சமுகத்தின் பிரதிநிதியாக பிரமாதமாக பொருந்தி நடித்திருக்கிறார் சூரஜ்.
யானைப்பசியைப்போல ஆண்களின் இந்த வீங்கிய ஆணவத்திற்கு, கீரைக்கட்டுகளை தீனி போட்டுக்கொண்டே இருக்கவேண்டியதுதான் பெண்களுக்கான விதி.
சாலு கே தாமஸின் ஒளி இயக்கத்துக்கு, தனித்த பராட்டுக்களையும் அன்பையும் தெரிவித்தாக வேண்டும். அற்புதமாகப் படமாக்கியிருக்கிறார். துவக்க காட்சிகளில் நிமிஷாவின் நடன அசைவுகளின் போது அவர் முகத்தின் தெளிவை, மலர்வை, உறுதியை, கண்களின் ஒளியை அழகாக காட்டியவர், பின்னர் அவரே யோசனையில் ஆழ்ந்திருக்கும் களைஇழந்த முகத்துடன் இயந்திரமாக பாத்திரம் தேய்த்துக்கொண்டிருப்பதை, கலவியின் போது அவரின் மனஓட்டங்களை, சமையலறையில் மீள மீள வறுப்பதை, பொரிப்பதை, நறுக்குவதை, அரைப்பதை, பிறர் உண்ணுவதை என்று காட்சிகளை அருமையாக காட்டியிருக்கிறார்.
பெரும்பாலான கதாபாத்திரங்களுக்கு பெயரில்லை என்பதுவும் இத்திரைப்படத்தின் சிறப்பு. இது நம் கதை என்னும் உணர்வு பார்க்கும் ஒவ்வொரு பெண்ணுக்குமே இதனால் இன்னும் மேலோங்குகின்றது.
பள்ளிஆசிரியரான சூரஜ் நிமிஷாவை பெண்பார்க்கும் காட்சியில் திரைப்படம் துவங்கி சட் சட்டென்று காட்சிகள் மாறி, சூரஜ் தன் பெற்றோருடன் வசிக்கும் வீட்டில் வாழ வருகிறார் நிமிஷா.
திடுக்கிடவைக்கும் திருப்பங்களோ, எதிர்பாரா சம்பவங்களோ, அவிழ்க்கப்படவேண்டிய மர்ம முடிச்சுகளோ இல்லாதது மட்டுமல்ல இதுபோல முன்பு வந்திருக்கும் பாலின சமத்துவம் குறித்தான திரைப்படங்களில் இருக்கும் வன்முறையும் இதிலில்லை. அன்பின் பெயரால், மரபின் பெயரால், சம்பிரதாயங்களின் பெயரால், சமூக கட்டுப்பாடுகளின் பெயரால், பெண்களுக்கு காலம் காலமாக அநீதி இழைக்கப்பட்டுக்கொண்டிருப்பதை சொல்லும் படமிது.
5 பாடல்களும், இடையிடையே சண்டைகளும் நடனங்களும் நிறைந்த வழக்கமான மரபான சினிமா இல்லை இது
துவக்கத்தில் முதல் அரைமணி நேரங்களுக்கு திரும்பத்திரும்ப காய்கறிகள் நறுக்கப்படுவது, நேந்திரம்பழங்கள் ஆவியிலடப்படுவது, இறைச்சி வெட்டப்படுவது, ஆப்பங்கள் ஊற்றப்படுவதென்று காண்பிக்கப்படுகையில் சிலருக்கு சலிப்புத்தட்டிவிடும். என்ன இது திரும்பத்திரும்ப இதையே காட்டுகிறார்களே என்று. அந்த சலிப்புத்தான் இப்படம் எதிர்பார்க்கும் வெற்றி.. அரைமணி நேரத்துக்கு திரும்பத்திரும்ப பார்க்கையில் சலிப்புத்தட்டும் விஷயத்தைத்தான், வாழ்நாள் முழுக்க எந்த உதவியும் இன்றி பல்லாயிரக்கணக்கான பெண்கள் மீள மீள செய்துகொண்டிருப்பதை சொல்லும் படமிது.
வெளியிலிருந்து பார்க்கையில் மகிழ்ச்சியான இல்லமென்று தோன்றும் ஆனால் உள்ளே ஆண்களின் நாக்கு, உடல், ஆணவம் இவற்றின் தேவைகளுக்கென வீட்டுப்பெண்களின் இளமையும் நேரமும் ஆரோக்கியமும் லட்சியங்களும், முழுவாழ்வுமே சுரண்டி உறிஞ்சி எடுத்துக்கொள்ளப்படுவதை, திருமணம் என்னும்பெயரில் பெண்கள் மிச்சமின்றி காலடியில் இட்டு நசுக்கப்படுவதை இப்போது நம் இந்தியச் சமூகத்தில் நடந்துகொண்டிருப்பதை அப்பட்டமாக காட்டும் படமிது
தெளிவான திரைக்கதை. இயக்குநர் அழகாக கதையைக்கொண்டு போகிறார். பொருத்தமான மென்மையான இசை, சிறப்பான படத்தொகுப்பு, அற்புதமான ஒளிப்பதிவு என மிக நல்ல ஒரு அனுவத்தை தருகின்றது இத்திரைட்பம்
ஆண்களின் இதயத்திற்கு அவர்களின் வயிற்றின் வழியேதான் பெண்கள் செல்லவேண்டுமென்னும் பழஞ்சொல் புழக்கத்திலிருக்கும் நம் சமூகத்தில் ஒருபோதும் பெண்களின் இதயத்திற்குள் ஆண்கள் நுழையும் வழிகுறித்து சொல்லப்பட்டதேயில்லை.
தினம் தினம் இறைச்சியும் காய்கறிகளும் நறுக்கப்பட்டு, பக்குவப்படுத்தப்பட்டு சமைக்கப்படுகின்றன. திரும்பதிரும்ப பரிமாறுதலும், எச்சிலெடுப்பதும், பாத்திரம் தேய்ப்பதும், துணி துவைப்பதும், வீடு கூட்டுவதும், மாடிப்படிகளிலிருந்து சுவற்றில் மாட்டப்பட்டிருக்கும் புகைப்படங்கள் வரையிலும் துடைத்து சுத்தமாக்குவதும், விறகடுப்பில் அரிசிச்சோற்றை சமைப்பதும், அனைத்தையும் முடித்து, இரவில் வீட்டுக்கதவை தாளிடுவது வரை முடித்த பின்னர் காத்திருக்கும் கணவனின் உடல் பசிக்கும் இரையாவதுமாக அப்படியே ஒரு இந்திய சமூகத்தை காட்டியிருக்கிறார்கள்.
பெண்கள் இப்படி அடுப்படியிலும், துவைக்கும் கல்லிலும், எச்சிலெடுத்தும் வீணாய்போகையில் ஆண்கள் சீட்டு விளையாடிக்கொண்டும், அலைபேசியில் வாட்ஸ்அப் பார்த்துக்கொண்டும், யோகா செய்துகொண்டும் தன்னை, தன் நலனை, தன் தேவையை, தன் ஆரோக்கியத்தை, தன் சுவையை, தன் வாழ்வை பார்த்துக்கொள்ளுகிறார்கள். எந்த மிகைப்படுத்தலும் இல்லாத அப்பட்டமான படம்
அடைத்துக்கொண்டு ஒழுகும் சமையலறை சின்க்கை சரிசெய்ய ப்ளம்பரை வரச்சொல்லி பலமுறை நினைவூட்டியும் கடைசிவரை அது அப்படியேதான் இருக்கிறது. ஒரு காட்சியில் சமையலறை எச்சில் அடைத்துக்கொண்ட சின்க்கின் நாற்றம் தன் மீது அடிக்கின்றதா என நாயகி கணவனுடன் அந்தரங்கமாக இருக்கும் நேரத்திலும் முகர்ந்து பார்த்துக்கொள்கிறாள். அது சின்க்கின் நாற்றம் மட்டுமல்ல, தேய்த்துக்கழுவினால் போய்விடுவதற்கு, அன்பின்மையின், புரிந்துகொள்ளாமையின், சுரண்டப்படுதலின், பகிர்தலற்ற வெற்று வாழ்வின் நாற்றம் அது, எத்தனை தேய்த்துக்கழுவினாலும் போகாதது.
ஒரே ஒரு காட்சியில் மட்டும் நிமிஷாவின் தோழி ஒருத்தி மாடிப்படிகளில் அமர்ந்திருக்கையில் கணவன் மனைவிக்கு தேநீர் எடுத்துக்கொண்டு வருவதையும், அன்றிரவு அவர் சமைக்கபோவதாகவும் சொல்லும் காட்சியையும் வைத்திருக்கிறார்கள். விதிவிலக்கான ஆண்களும் ஆங்காங்கே இருக்கிறார்கள் என்று காட்ட.
நிமிஷா நடனஆசிரியையாக வேலைக்கு போக விரும்புவதைக்குறித்துச் சொல்லுகையில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் கணவனும் மாமனாரும் ’’அதெல்லாம் குடும்பத்துக்கு சரிவராது’’ என்று மறுத்துவிட்டு, உடனே ’’இன்று கடலைக்கறி பிரமாதம்’’ என்கிறார்கள். அந்த பாராட்டு நிமிஷாவுக்கும் நமக்கும் சொல்லுவதென்னவென்றால் எங்களுக்கு பிடித்ததுபோல சமைப்பதற்கு பிறந்து வளர்ந்திருப்பவர்கள் பெண்கள் என்பதைத்தான்.
நிமிஷாவின் மாதவிலக்கு நாட்களில் வீட்டுக்கு வேலைக்கு வரும் ஒரு பெண் வீடு கூட்டி துடைக்கையில் தனக்குள்ளே மெதுவாக பாடிக்கொண்டிருக்கிறாள். இப்படி வேலைக்கு வெளியெ வருவது பெண்களின் சின்ன சின்ன மகிழ்வுகளை சுதந்திரங்களை அனுபவிக்க வழிகாட்டுகிறது என்பதை அந்தகாட்சி நமக்கு உணர்த்துகிறது. உண்மையில் வேலைக்கு போகும் பெண்களுக்கு இரட்டைப்பணிச்சுமைதான் இருந்தும் வேலைக்கு போக விரும்புவது வீட்டிலேயே இருக்கையில் அவர்களின் கழுத்தை நெறிக்கும் மானசீக விரல்களிலிருந்து தற்காலிகமாகவாவது தப்பித்து மூச்சுவிட்டுக்கொண்டு மீண்டும் மாலை அதனிடம் அகப்பட்டுக்கொள்ளும் பொருட்டுத்தான்
இரவில் சமையலறை வேலைக்கு உதவ வரும் மருமகளை மாமியார் தடுத்து படுக்கையறைக்கு போகக்சொல்லுகிறார். அவருக்கு தெரியும் அங்கு அவரின் மகனென்னும் ஆணுக்கு இவள் தேவைப்படுவாளென.
அக்காட்சியில் படுக்கையறையில் இளம்பெண்ணின் உடல் ஆளப்படுவதும் சமையலறையில் இன்னுமொரு மூத்த பெண்ணின் உழைப்பு சுரண்டப்படுவதும் மாற்றி மாற்றி காண்பிக்கப்படும்.’’ 7 மணிக்கு மேல நீ இன்பலட்சுமி ’’பாடலை கூடங்களில் கேட்டு மகிழும் சமூகமல்லவா இது?
ஓயாத வீட்டுவேலைகளுக்குப்பிறகு உடலும் உள்ளமும் களைத்திருக்கும் பெண்களுக்கு, இன்பலட்சுமியாக இருக்கமுடியாமல், தாம்பத்ய உறவும், பாத்திரம் கழுவுவதைப்போல, எச்சில் எடுப்பதைப்போல, துணிதுவைப்பதைப்போல மற்றுமொரு வீட்டுவேலைகளிலொன்றாகி போய்விடுகின்றது என்பதையும் ஆண்கள் அன்றும் இன்றும் புரிந்துகொள்ளவேயில்லை
நெட்ஃப்லிக்ஸும் அமேஸான் பிரைமும் இப்படத்தை நிராகரித்ததற்கு காரணம் இதில் சொல்லப்பட்டிருக்கும் மத நம்பிக்கை தொடர்புடைய விஷயங்கள் என்கிறார்கள் இந்தப்படம் மதம் சார்ந்த நம்பிக்கைகளை கண்டிக்கவில்லை, மாறாக சடங்குகள், சம்பிரதாயங்கள், மரபு, குடும்ப வழக்கங்கள், காலம்காலமாக கடைப்பிடிக்கப் பட்டுக்கொண்டிருக்கும் மூடநம்பிக்கைகளை விட, வாழ வந்திருக்கும் பெண்ணின் உடல் மற்றும் மன ஆரோக்கியம் முக்கியமென்பதைத்தான் சொல்லுகின்றது.
அக்குடும்பத்தின் சந்ததியினரை உருவாக்குபவளை, கணவனுடன் இணைந்து இறுதி மூச்சு வரை வாழ்பவளை, புரிந்துகொள்ள, அவளின் தேவைகளை அறிந்துகொள்ள, நிறைவேற்ற, ஆண்கள் முன்வரவேண்டுமெனவும் வீட்டுவேலைகளில் அவர்களின் பங்கும் இருக்கவேண்டும் என்பதையெல்லாம் சொல்லவேண்டியே அக்காட்சிகளை சேர்த்திருக்கிறார்கள்
இந்தப்படத்தை ஆண்கள் அவசியம் பார்க்கவேண்டுமென்றெல்லாம் பரிந்துரைக்க வேண்டியதில்லை. ஏனெனில் சிலமணிநேர திரைப்படத்தில் திருந்தும் சமூகமல்ல இந்தியச்சமூகம். முழுச்செவிடான சமூகத்தின் காதுகளில் இப்படியான சங்குகளை ஊதுவது வீண்.
காலம்காலமாக இப்படி அடுப்படியில் அடக்குமுறைகளையும், சுரண்டல்களையும் அனுபவித்துக்கொண்டெ இருப்பவர்களுக்கும், நமக்கு முன்னே இவ்வாறு தன் இளமை, வாழ்நாள், கனவு, ஆற்றலெல்லாவற்றையும் இப்படியே இழந்து மறைந்துபோனவர்களுக்கும் , இனிமேலும் தொடரவிருக்கும் இந்த அநீதிக்கு இரையாகப்போகும் இன்றைய சிறுமிகளும் எதிர்காலத்து பெண்களுக்குமான சமர்ப்பணமாக இத்திரைப்படத்தை எடுத்துக்கொண்டு,பெண்கள் அவசியம் இதை பார்க்கவேண்டும்.
ஒரு காட்சியில் பல தலைமுறைகளை சேர்ந்த தம்பதியினரின் புகைப்படங்களை ஒவ்வொன்றாக மெதுவாக காமிரா காட்டிக்கொண்டிருக்கையில் பின்னணியில் தேங்காய் துருவும், தாளிக்கும், சமைக்கும் ஓசைகள் மட்டும் அஞ்சலி செலுத்துவதைப்போல கேட்டுக்கொண்டிருக்கும்.
நிமிஷா என்னவானாள்? ஒழுகிக்கொண்டேயிருந்த அந்த சமையலறைக்குழாய் சரிசெயயப்ட்டதா? நிமிஷா வேலைக்குப் போகிறாளா? அதே வீட்டின் அதே தேநீர்கோப்பையை கழுவிக்கொண்டிருக்கும் தங்கவளையல்கள் நிறைந்திருக்கும் அந்தக்கைகள் யாருடையவை?
Neestream ல் திரைப்படத்தைப்பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.
Leave a Reply