லோகமாதேவியின் பதிவுகள்

ரிதன்யா!

தற்கொலையாகி விட்டிருக்கும் ஒரு  ஆணவக்கொலை

ரிதன்யாவின் மரணம் செய்தித்தாளும் தொலைக்காட்சியும் இல்லாத வீடென்பதால் தாமதமாகத் தெரிந்தது. அவளது கடைசிக்குரல் பதிவுகளையும் துரதிர்ஷ்டவசமாகக் கேட்க வேண்டி வந்தது. 

அவள் குரலில் இருந்த குழந்தைத்தனம்தான் இப்போது வரை மனதைப் பிசைகிறது. உண்மையில் ரிதன்யாவுக்குத் தன்னை மாய்த்துக் கொள்வது என்றால் என்னவென்றே தெரியாமல் அதைச் செய்து கொண்டிருக்கிறாள்.

தன் அப்பாவுக்குத் தான் பூட்டி வைத்துவிட்டு வந்திருக்கும் ஒரு ட்ராயரில் இருக்கும் நகைகளை அத்தனை அறியாத்தன்மையுடன் மயில் தோடு ஒத்தை வளையல் அத்தை கொடுத்த செயின் என்று பட்டியலிடுகிறாள். அந்தக் குழந்தையின் அறியாமையை என்னவென்று சொல்வது?

அடுத்து தென்னைமரத்துக்கு வைக்கும் மிக வீரியமுள்ள விஷத்தை சாப்பிடப்போகிறாள், அந்த கொடும் நஞ்சு அவளை என்னவெல்லாம் செய்யும், சாவு என்றால் என்ன இதெல்லாம் ஒன்றுமே தெரியாமல் எல்லா கதவும் அவள் முன்னால் அறைந்து சாத்தப்பபட்ட தன்னிரக்கத்தில் நகைகளைப் பட்டியலிடுகிறாள் பாவம்.

அந்தக் குறிப்பிட்ட மருந்து மிகக் கொடுமையான விளைவுகளை உண்டாக்கியே உயிரைப்போக்கும் அதைச் சாப்பிட்டபின்னர் பிழைப்பது துர்லபம்.  பல வருடங்களுக்கு முன்பு   சின்னு மாமனின் மகன் மிக இளம் வயதில் கிரிக்கெட் போட்டியில் ஏற்பட்ட ஒரு தகராறில் மனமுடைந்து இதைச் சாப்பிட்டுவிட்டு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டபோது நானும் உடன் இருந்தேன். அவன் துடித்த துடிப்பும் பட்டபாடும் அப்படியே இன்னும் நினைவிலிருக்கிறது. மருத்துவரிடம் அவனைக்காப்பாற்ற வழி இருக்கிறதாஎன்று கேட்டேன் ‘’ இல்லைங்க அந்த மருந்து உள்ளே போறப்பவே அது போற வழியெல்லாம் அழிச்சுட்டே போகும்’’ என்றார். ரிதன்யா சாப்பிட்டது  அதைத்தான்.

ரிதன்யா செல்வந்தர் வீட்டுப்பெண் என்பதாலும் இப்போது ஊடக வளர்ச்சி மிக விரிவாகியிருப்பதாலும் இந்த விஷயம் இத்தனை கவனம் பெற்றிருக்கிறது ஆனால் கொங்குப் பகுதியில் இது காலம் காலமாக நடந்து கொண்டுதான் இருக்கிறது. பொள்ளாச்சி தென்னைநகரென்பதால் இந்த மருந்து மிக எளிதில் கிடைக்குமொன்றாகத்தான் இப்போது வரை இருக்கிறது. 

 முதுகலை படித்த, கார் ஒட்டத் தெரிந்த ரிதன்யா செய்துகொண்டது தற்கொலை அல்ல அவளுடையது ஆணவக்கொலைதான். அவளைப்போல் பலருக்கு இப்படி இங்கு நடந்திருக்கிறது நடந்துகொண்டிருக்கிறது நாளையும் நடக்கும்.

இன்றைய செய்தித்தாள்களில் மகள் வேற்றுச்சாதியில் கல்யாணம் செய்துகொண்டதால் ரயில் முன் பாய்ந்து இறந்து போன அரசு அதிகாரி தம்பதிகளைக் குறித்துப் பார்த்த போதும் இதுதான் தோன்றியது.  குடும்ப கெளரவம் என்று அவர்கள் நினைத்துக் கொண்டிருக்கும் ஒன்றைக்காப்பாற்ற அந்தப் பெண்ணுக்கு வாழ்நாள் முழ்க்க வாழவே முடியாத அளவுக்குக் குற்ற உணர்வை அளிப்பதைத் தவிர அந்தத் தற்கொலைக்கு வேறெந்த நோக்கமும் இல்லை.

இந்தக் கிராமத்தில் நான் வீடு கட்டி வந்த புதிதில் பக்கத்தில் ஒரு வீட்டில் மகளுக்குக் கல்யாணம். வீடு கட்டத்துவங்கி பணமுடையால் அதை முடிக்க முடியாமல் அவசரமாகப் பெண்ணுக்குக் கல்யாணம் செய்து வைத்தார்கள். பாதி முடிந்த அந்த வீட்டில் மணமக்களுக்கு முதலிரவு நடந்த அன்று இந்தப்பகுதி வழக்கமாகச் சந்தகை செய்து முதலில் மணமக்கள் சாப்பிட்டுவிட்டு அறைக்குச் சென்று விட்டார்கள் மீதமிருந்த சந்தகையில்   விஷம் கலந்து மணப்பெண்ணின் தம்பி மற்றும் பாட்டிக்கும் கொடுத்துத் தாங்களும் சாப்பிட்டுவிட்டு படுத்துக்கொண்டார்கள் பெற்றோர்கள் இருவரும்.

காலையில் தன்னை வந்து யாரேனும் கதவைத்தட்டி எழுப்புவார்கள் என்று வெட்கத்துடன் காத்திருந்து காத்திருந்து வேறு வழியின்றி கதவைத் தானே திறந்துகொண்டு வந்த அந்தப்பெண் பார்த்தது சடலமான பெற்றோர்களையும் உயிருக்குப்போராடும் தம்பியையும் பாட்டியையும்தான். எத்தனை முட்டாள் தனம் அத்தனை கடன் வாங்கி வீடுகட்டி மேலும் கடன் வாங்கி கல்யாணம் செய்துவைத்து அந்தக் கல்யாணத்தில் அந்தப்பெண் வாழவே முடியாதபடிக்கு அன்றைக்கே செத்துப்போனார்கள். அந்த முட்டாள் பெற்றோர்கள். உலகம் போய்க்கொண்டிருக்கும் திசைக்கு நேர் எதிர் திசையில் செல்பவர்கள் கொங்குப் பகுதி ஆட்கள்.

உலகம் எங்கு சென்று கொண்டிருக்கிறது என்னுமறிதல் சிறிதும் இல்லாமல் தாங்கள் காலம் காலமாக  வசிக்கும் குண்டுச்சட்டியில் குதிரை ஓட்டுபவர்கள் இவர்கள்.

உண்மையில் ரிதன்யாவின் புகுந்தவீட்டினரையும் கணவன் கவினையும் வரிந்துகட்டிக்கொண்டு குற்றம் சொல்லும் அவளது சுற்றம் உட்பட்ட பொதுமக்கள் பலருமே அவள் அப்படி செய்ததற்கு காரணமான கொங்குப் பகுதியினரின் குடும்ப கெளரவத்திற்கு பங்கம் வந்துவிடக்கூடாது என்னும் முட்டாள்தனத்தினால் தான் இது நடந்தது என்பதைக் கவனிக்கவே இல்லையா? உண்மையில் ரிதன்யாவைக் கொன்றது இந்த வெற்றுஆணவம்தான். 

நம்ம வீட்டுப் பெண் நம் சாதியில்தான் கல்யாணம் செய்துகொள்ள வேண்டும் கல்யாண வாழ்க்கையில் என்ன இடர் வந்தாலும் அவள் ஒருபோதும் கணவன் என்னும் கடவுளை விட்டுவிட்டு திரும்ப வந்துவிடக்கூடாது என்பதை சொல்லிச் சொல்லி வளர்க்கப்பட்ட, அப்படியும் தாங்கமுடியாமல் 5 முறை புகார் சொல்லி ஒவ்வொரு முறையும் அறிவுரையும் அறவுரையும் சொல்லி திருப்பி அனுப்பப்பட்ட ரிதன்யாதான் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள்.

இப்படி எனக்குப் பல பெயர்களில் பிறந்து , தற்கொலை செய்துகொண்ட ரிதன்யாக்களைத் தெரியும். இன்னும் செத்துப்போகமால் தென்னை மர விஷத்தை குடித்தால் உண்டாகும் விளைவுகளைக்காட்டிலும் நூறுமடங்கு துயரை, வேதனையை உள்ளுக்குள் சகித்துக்கொண்டு வாழ்ந்துகொண்டிருக்கும் ரிதன்யாக்களையும் அறிவேன். 

இந்க்த கொங்குப்பகுதி ஆட்களைக் காட்டுமிராண்டிகள் என முன்பு எண்ணியதுண்டு. ஆனால் பழங்குடித்தாவரவியலில் ஈடுபட்டப் பின்னர் காட்டில் இருப்பவர்களை கொங்குப்பகுதியினருடன் ஒப்பிட்டுக் கேவலப்படுத்தியதை எண்ணி வருந்தி இருக்கிறேன். ரிதன்யாவின் அப்பா அம்மா பேசுவதை அவ்வப்போது பல்லைக் கடித்துக்கொண்டுதான் பார்க்கிறேன். முத்தம் கொடுத்ததை, செல்லம் கொடுத்ததை, கல்வி கொடுத்ததை எல்லாம் சொல்லிச் சொல்லி அழும் அவர்கள், வாழ்வின் சவால்களை எதிர்கொள்ளும் தைரியத்தை அவளுக்கு அளிக்கவேயில்லை. என்னவானாலும் சகித்துத்கொண்டிருக்க வேண்டும் இல்லாவிட்டால்

எத்தனையோ செலவழித்துச் செய்த கல்யாணம் கேள்விக்குரியதாகிவிடும் குடும்ப கவுரவம் என்னும் மண்ணாங்கட்டி உடைந்துவிடும் என்றுதான் இங்கு எப்போதும் சொல்லப்படுமொன்று.இப்படியான பஞ்சாயத்துகள் இங்கு வாராவாரம் நடப்பதை நானறிவென். 

உடலெங்கும் கடித்துவைத்த ஒரு கணவனுடன் சகித்துக்கொண்டு வாழும்படி சொன்ன ஒரு தகப்பன் இருக்கிறார் அதைச் சொல்லிவிட்டு உடலிலிருந்த கடிபட்ட காயங்களுக்கு அந்தப் பெண்ணை மருத்துவமனைக்குக் கூட்டிச்சென்றது அந்தக்குடும்பம்.

பெண்கள் மடியில் கட்டிக்கொண்டிருக்கும் ஒரு பெருஞ்சுமை இங்கு பெற்றோர்களுக்கு, அவர்களை கல்யாணம் செய்து கொடுத்து விட்டால் தீர்ந்தது சுமை. இதோ இந்த வாரம், இறுதி ஆண்டில் தாவரவியல் படித்துக்கொண்டிருக்கும் மாணவிக்கு கல்யாணம் என்று வந்தார்கள். எத்தனையோ எடுத்துச் சொன்னேன் மிக இளம் வயது இன்னும் அவள் டிகிரி முடிக்கச் சில மாதங்கள் தான் இருக்கிறது. கொஞ்சம் தாமதிக்கக்கூடாதா? அவள் டிகிரி முடித்து அக்கம்பக்கம் குழந்தைகளுக்கு ட்யூஷன் சொல்லிகொடுத்து   3000. 4000 சம்பாதிக்கும் வாய்ப்பையும் ஏன் கெடுக்கிறீர்கள் என்று எத்தனை சொல்லியும் கேட்கவில்லை.  இப்படி வருடா வருடம் நடந்துகொண்டே இருக்கிறது.

சாம்பவிக்கு நாங்கள் நேரடியாக இப்படி எதேனும் நடந்தால் சரி செய்யவே முடியாதென்றால் புறப்பட்டு வந்துவிடு நாங்கள் இருக்கிறோம் என்று ஒருபோதும் சொல்லிக் கொடுக்கவில்லை.   ஆனால் அவள் வாழ்வில் சவால்களைச் சந்திக்க போதுமான தைரியம் உள்ளவளாக வளர்ந்திருப்பதை உறுதி செய்திருக்கிறோம். 

இன்னொரு சாதியில் காதல் மணம் செய்து கொண்ட பெண்களை அடித்துக் கொன்றவர்களின் கதைகளை நான் இளமை முதலே கேட்டிருக்கிறேன்.

பல காதலை முறித்து, அந்தக் காதலை உறவினர்களின் முன்பாக   கூட்டம்போட்டுச் சொல்லும் பழக்கமும் இங்கு உண்டு. இப்படி விவாதித்து அந்தப் பெண்ணைச் சுயசாதியில் கல்யாணம் செய்துகொடுத்து அந்தக் கணவனுக்கு வெகுசீக்கிரம் விஷயம் தெரியவந்து பின்னர் காதலித்தவனை மறக்க முடியாமல், சந்தேகப்படும் கணவனுடன் வாழவும் முடியாமல் பிணம்போல் வாழும் மகளுக்கு வருடா வருடம் தவறாமல் சீர் செய்யும் பெற்றோரால்  ஆனதுதான் இந்தச் சமூகம். இந்தச் சமூகத்தில் வெற்று ஆணவம் மட்டுமே இருக்கிறது. அறிவென்பது  துளியும் இல்லை  உணர்வுகளுக்கோ உயிருக்கோ வாழ்க்கைக்கோ எந்தப்பொருளுமில்லாத ஒரு முட்டாள் சமூகம்இது. இதை இந்தச் சமூகத்தின் உள்ளிருந்துகொண்டே தான் சொல்கிறேன்.

சென்ற மாதம் கூடச் சொந்தத்தில்  ஒரு திருமணம், அந்த மாப்பிள்ளைப் பையன் வேறு சமூகப் பெண்ணுடன் காதலில் இருந்தான். காதலை முறித்து, என் பிணத்தைத் தாண்டித்தான் அவளைக்கலயாணம் செய்யப்போகனும் போன்ற அரதப்பழசான பொய்யான மிரட்டல்களால் அவனைப்பணிய வைத்து சொந்தச்சாதியில் கல்யாணம் நடந்தது.

மாப்பிள்ளை முகத்தைப் பார்க்கவே முடியவில்லை. அந்த அறியா மணப்பெபெண் மலர்ந்து சிரித்தபடி மேடையில் இருந்தாள். எப்படி அவளுடன் அவன் மகிழ்ந்து வாழ்க்கையை நடத்துவான்? மாப்பிள்ளையின் பெற்றோர் வாய்கொள்ளாச் சிரிப்புடன் வரேவேற்பில் இருந்தார்கள். சாப்பாடெல்லாம் பரவாயில்லிங்களா? என்று என்னிடம் கேட்டார், தலையசைத்துவிட்டு வந்தேன். அந்த முறிந்த காதலில் இருக்கும் அந்தப் பெண்ணின் மனநிலையையும், அவளை ஏமாற்றியதாகி விட்டிருக்கும் நிலையில் இருக்கும் அந்தப் பையனின் மனதையும் எண்ணிக்கொண்டேன்

எனக்கு ஏதேனும் ஒரு அதிகாரம் கிடைத்தல் இந்தச்சாதியின் பெருசுகளை ஆண் பெண் வேறுபாடில்லாமல்    அப்படியே அள்ளிப் போட்டு அந்தமானுக்கப்பால் இருக்கும் ஒரு தனித்தீவில் கொண்டு போய் விட்டுவிடுவேன்.

என் மாணவர்களிடம் இதைக் குறித்து பேசினேன். ஒருவேளை துரதிர்ஷ்டவசமாக மணவாழ்வில் இடர்கள் வந்தால், சரி செய்யவே முடியாதென்றால் வெளியே வந்துவிடுங்கள் பெற்றோரிடம் செல்ல முடியாதென்றால் என் வீட்டுக்கு எந்நேரமானாலும் வந்துவிடுங்கள் கதவுகள் திறந்திருக்கும். ஒருவேளை அச்சமயத்தில் நான் உயிருடன் இல்லை என்றால் இந்தச் சமூகத்தின் சாயல்கூட இல்லாத என் மகன்கள் என்னைக் காட்டிலும் கதவை அகலத்திறந்து வைத்திருப்பார்கள் என்றேன்.

நண்பர் கார்த்திக் வேலு (சிட்னி) எழுதியிருக்கும் பதிவையும் இணைத்திருக்கிறேன்.

https://www.facebook.com/share/19LbTT4U1V/?mibextid=wwXIfr

1 Comment

  1. SELVAKUMAR S

    சிறப்புங்க அம்மா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑