கோடைவிடுமுறையில் சென்னையிலும் பங்களூருவிலும் இருந்தேன். (https://logamadevi.in/4222).

பெங்களூருவில் தங்கி இருக்கையில், தருணுடன் இப்போது கட்டிக்கொண்டிருக்கும் மேல் தளத்திற்கான உள் அலங்காரங்களுக்கென ஒருவரைப் பார்க்க நெடுந்தொலைவு பைக்கில் செல்ல வேண்டி வந்தது. எனக்கு பைக் பயணங்கள் உவப்பானதல்ல, பழக்கமில்லை என்பது முதன்மைக் காரணம் வேறு சில கசப்பான காரணங்களும்  கூடவே உண்டு.

மூத்த சகோதரர்கள் யாருமில்லை எனவே அவர்கள் பைக் வாங்கி ஓட்டி என்னை அழைத்துசெல்லும் சாத்தியங்கள் அற்ற இளமைப்பருவமே வாய்த்தது. அப்பா என்பவர் வாய்ச்சொல்லில் மட்டும்தான் வீரர் அவருக்கு சைக்கிள் கூட ஓட்டத்தெரியாது,  எதிர்க்கும் திராணியற்றவர்கள் மீது கட்டற்ற வன்முறையை செலுத்துவதைத்தவிர ஏதுமறியாதவர் அவர்.

என்னைவிட 7 வயது இளையவனாகிய தம்பி விஜி வளர்ந்து பைக் ஓட்டக் கற்றுக்கொண்டபோது துரதிர்ஷ்டவசமாக நான் திருமணமாகி அபிதாபியில் இருந்தேன். பலவருடங்களுக்கு முன்பு புதுதில்லியில் ஒரு பிப்ரவரி மாதம் நடந்த பைக் விபத்து  பெரும் வடுவாக வாழ்க்கையில் தங்கி விட்டது, எனவே பைக் பயணங்கள் எனக்கு எப்போதுமே ஒத்து வருவதில்லை. சென்னையில் எழுத்தாளரான நண்பர் ஒருவருடன் சிலவருடங்களுக்கு முன்னர் ஓரிரவு நீண்ட பைக் பயணமொன்று சென்றேன். அதை மட்டுமே மகிழ்வுடன் நினைவு கூற முடிகிறது.

  இத்தனை காலத்தில் பயந்தபடி ஒரு பத்துமுறை பைக்கில் பயணித்திருப்பேன் அவ்வளவுதான். டாக்ஸியில் போகலாம் என்றதை மறுத்து , வற்புறுத்தி என்னை அன்று தருண் பைக்கில் அழைத்துச்சென்றான். தருணுக்கு பைக் அலாதிப்பிரியம் மிகக்கவனமாக ஓட்டுவான். அவனது நேபாளத்தோழி ரெஜினியின் ஹெல்மெட் வீட்டில் இருந்தது அதை அணிந்துகொண்டு அவன் பின்னால் அமர்ந்து கொண்டேன்.சாலைப்போக்குவரத்து அசமஞ்சமாகத்தான் எப்போதும் போல் இருந்தது ஆனாலும் முழங்கால்களுக்கருகில் வரும் கார்க்கதவுகளும், பேருந்துகளின் மாபெரும் சக்கரங்களும் அச்சமூட்டின. 

அதிகாலையில் இருந்து , புறப்படும் வரை  பெரியதிரையில் சஞ்சய் சுப்ரமணியனின் பாடல்கள் கேட்டுக்கொண்டிருந்தோம். சாலைக்காட்சிகளில் மனதைக்குவிக்காமல் ‘’ அன்பே இன்பம் சேர்க்க மாட்டாயா’’ என்று சஞ்சய் உருகுவதை மீள் மீள மனதில் நினைத்துக்கொண்டே பயணித்தேன். 

அந்த அலுவலகத்தில் எங்களது வேலை முடிய மதியமாகிவிட்டது. தருணுக்கு பைன்லேபில் (நாம் அட்டை பரிவர்த்தனை செய்யும் அந்த பெட்டியில் பைன்லேப் என்று எழுதி இருப்பதை பிற்பாடுதான் கவனிக்கிறேன்) இடைக்காலப்பயிற்சி நடந்து கொண்டிருப்பதால் அவனுக்கு உபகாரச்சம்பளம் அளிக்கப்பட்டிருந்தது.எனவே அன்று எனக்கு அவன் மதிய உணவு ட்ரீட் தருவதாக மேலும் தொலைவுக்கு அழைத்துச் சென்றான்.

பெங்களூருவின் புறநகர்ப்பகுதியின், புறநகரில் ஒரு காட்டின் எல்லையில் இருந்தது அம்மச்சியுடைய கைப்புண்ணியம் என்னும் அந்த அழகிய கேரள உணவகம். எல் வடிவில் அமைந்திருந்த சிவப்புச்செங்கல் கட்டிடம், நடுவில்  கூடத்தில் வளர்ந்திருந்த ஒரு அத்தி மரத்துக்கு இடைவெளி விட்டு அமைக்கப்பட்டிருந்தது சிவப்பு ஓடுகளிட்ட கூரை.

முதல் தளத்தின் வெளிப்புறத்தில்  பெரிய புகைப்படத்தில் ஃபகத் ஃபாஸில் மேசையில் கையூன்றிக்கொண்டு வருபவர்களை புன்னகையுடன் பார்த்துக்கொண்டிருந்தார். தென்னை மரங்களும் புல்வெளியுமாக அப்படியே கேரளாவில் இருக்கும் உணர்வளித்தது அந்த இடம், குறையில்லாமல் இருக்க  தென்னங்கீற்றை அசைபோடும் யானையை நானே மனத்தில் வடித்து முற்றத்தில் நிறுத்தினேன்.  உள்ளே சேட்டன்கள் கரை வேட்டி கட்டிக்கொண்டு ஓர்டர் எடுத்துக்கொண்டிருந்தார்கள். எல்லா மலையாளத்திரைநடிகர்களும் புகைப்படங்களாக சுவரில் இருந்தார்கள்

 பெரும்பாலும் மலையாளிகளே சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள். சிறு குழுவாக வந்திருந்த பெண்களில் வைன் சிவப்பில்  உடையணிந்திருந்த ஒரு சுருட்டை முடிக்காரி தருணை அவ்வப்போது ஓரக்கண்ணால் பார்த்துக் கொண்டிருந்தாள். பதிமுகப்பட்டையிட்ட செந்நீர் ஒரு கண்ணாடிக் குடுவையில் வெதுவெதுப்பாக இருந்தது அந்த அத்தி மரத்தின் கிளைகளில்செயற்கை பொன்கொன்றைச் சரங்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. எங்கிருந்தோ ’’ஒன்னாம் ராகம் பாடி’’, கேட்டது தொடர்ந்து’’ பிரமதவனம் வீண்டும்’’, அதையடுத்து தாஸேட்டனின் குரலில் மம்மூட்டியும் லாலேட்டனும் சுரேஷ்கோபியுமாய் உடனிருந்தார்கள்.

ஒரு உருளிச்சோறும், கேரளா மீல்ஸும்   கறிமீன் பொளிச்சதும் ஓர்டர் செய்தோம். இறுதியாக பாலடைப்பிரதமன். மறக்க முடியாத தருணின் ட்ரீட். முன்பு  தருண் 10-ல் படிக்கையில் எனர்ஜி அம்பாஸடராக இருந்ததற்காக பத்தாயிரம் ரூபாய் பரிசை பள்ளியில் பெற்றான். அப்போது எனக்கு ஒரு அழகிய குளிர்கண்ணாடியும் குப்பண்ணாவில் ஒரு நல்ல அசைவ விருந்தும் பூமராங்கில் மரத்தட்டில் புகைந்துஎரிய கொண்டு வந்த ஒரு ஐஸ்கிரீமும் வாங்கிக்கொடுத்தான்.

 சரண்  ஐரோப்பாவில் வேலையில் சேர்ந்து சம்பளம் வாங்கியதும்  என்னை தனிஷ்க் அழைத்துச்சென்று 6 இதழ் கொண்ட தாமரை வடிவ வைரமூக்குத்தியும், மரகதக் கற்கள் பதித்த மோதிரமும், உடன் லோகமாதேவி என்று பெயர் எழுதிய ஒரு காரும் வாங்கிக்கொடுத்தான். அதில்தான் மிகப்பெருமையாக இப்போது கல்லூரிக்குச்செல்கிறேன். 

எனவே நல்ல கேரள உணவுக்குப் பின்னர் கல்லாவில் விற்ற சக்கைச் சிப்ஸ் வாங்கிக்கொண்டு மீண்டும் ஹெல்மெட் அணிந்து வீடு திரும்பினோம். வழியெல்லாம் பெருநிறுவனங்களின் வாசலில் அடுக்கடுக்கான இலைகளுடன் நின்றிருந்தது டெர்மினாலியா மாண்டலி. ஏன் பங்களூர்காரர்களுக்கு இதன் மேல் இத்தனை பிரியம் என்று நினைக்குமளவுக்கு அந்த மரங்கள் அதிகமாக இருந்தன. சிக்னலில் வெகுநேரம் காத்திருக்கையில் ஒரு பெண் மனதிற்குள் எதையோ பாடிக்கொண்டு விரல்களால்  தொடையில் தாளமிட்டபடி புன்னகையுடன் இருந்தாள், பையன்கள் எல்லா ஊர்களில் இருக்கும்படியே பொறுமையின்றி சந்துகளில் நுழைய முற்பட்டார்கள், 

ஒரு வளைவில் காத்திருக்கையில் குப்பைக் கூளங்களுக்குள்ளிருந்து ஒரு பூனைக்குட்டி கண்ணாடிக் கண்களால் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு பெரிய லாரியின் சக்கரங்கள் என் அருகில் வந்த போது நான் அதை பொருட்படுத்தாமல் வியர்வை பூத்திருந்த முகத்துடன் சஞ்சய் ’’கன்னத்தில் முத்தமிட்டால்’’ என்பதை நிறுத்தி நிதானமாக  பாடுவதை எண்ணிக்கொண்டேன். 

ஒரு வழியாக மாலை வீடுவந்து சேர்ந்தபோது தருண் எப்படி இருந்தது இந்த நாள்? பைக் பயம் போயிருச்சா என்றான் ? என்றான்.  ’’நல்லாதான் இருந்தது ஆனா பயம் போகலை பயப்படாம இருக்க வழிபூரா நான் சஞ்சய் சுப்ரமணியணியனை நினைத்துக்கொண்டேன்’’ என்றேன்.

’’அடிப்பாவி கட்டிளங்காளை நான் முன்னாடி உட்கார்ந்திருக்கும் பொது நீ சஞ்சய்சுப்ரமணியனை நினைச்சுகிட்டு வந்தியா?’’ என்றான். நான் ’’ஆம்’’ என்றேன்.