இரவுகளில் பாடல் கேட்டுக்கொண்டோ கவிதைகள் வாசித்துக்கொண்டோ உறங்கச்செல்வது பலகாலமாக வழக்கத்தில் இருக்கிறது.விருப்பமான கவிஞர்களின் கவிதை நூல்கள் படுக்கைக்கு அருகிலேயே எப்போதும் இருக்கும்.

பாடல்களில் அதிகம் ஹிந்தியும் மலையாளமும் இருக்கும். ஒரு நாளின் அலுப்பு சோர்வு எல்லாம் போக இப்படி பாடல்களின் இனிமையான நினைவுகளுடன் உறங்கச்செல்வது பெரும் ஆறுதலளிக்கும். நான் புழங்கும் உலகு அத்தனையொன்றும் பிரியமானதல்ல புகைச்சலும் அறியாமையும் சில்லறைச்சச்சரவுகளும் மலிந்த ஒரு உலகத்தில் தான் 5 மணி நேரமிருக்கிறேன். எனவே இந்தப்பழக்கத்தைத் தவறவிடுவதில்லை. அன்றாடம் அதிகாலை வாசிப்பையும் கட்டாயமாக, ஆனால் உள்ளார்ந்த ஆர்வத்துடன் பிரியத்துடன் தொடர்கிறேன்.

மலையாள மொழியின்மீது எனக்கு சாய்வு அதிகம். நேற்றிரவு ’’எல்லாரும் சொல்லனு’’ பாடலைக்கேட்டேன். என் பிரியத்துக்குரிய மலையாளப்பாடல்களில் இதுவும் உண்டு. 1954-ல் வெளியான நீலக்குயில் என்னும் திரைப்படத்தின் பாடல். பாடலை எழுதியது புல்லூட்டுப்பாடத்து பாஸ்கரன்மாஷே.

ஆயிரக்கணக்கான பாடல்களை எழுதியவர். 250 திரைப்படங்ளுக்கு மேல் பணியாற்றி இருக்கிறார்.இயக்குநரும் நடிகரும் கூட. கவிஞர் என்று சொல்ல வேண்டியதில்லை.இவரது 3000த்துக்குமதிகமான பாடல்களனைத்துமே நீள் கவிதைகள்தான்.நீலக்குயிலை இயக்கியதும் இவரே.இவரது தந்தையும் பெருங்கவிஞர்.

7ம் வகுப்பு படிக்கையிலிருந்தே கவிதைகள் எழுதிய இவர் துவக்கத்தில் கம்யுனிசப்பாடல்களை எழுதினார். இவரது முதல் சினிமாப்பிரவேசம் 1949- ல் வெளியான தமிழ்த்திரைப்படமான அபூர்வசகோதரர்களில் இருந்த பலமொழிப்பாடலொன்றின் மலையாளப் பகுதிகளை எழுதியதில் துவங்கியது.

2வது தேசிய திரைப்பட விருதுகளில் சிறந்த 
திரைப்படத்திற்கான அகில இந்திய தகுதிச் சான்றிதழை வென்று , இந்த விருதை வென்ற முதல் 
தென்னிந்திய திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது நீலக்குயில். நீலக்குயில் ஜனாதிபதியின் வெள்ளிப்பதக்க விருதையும் பெற்று மலையாளச் சினிமாவின் முதல் அரசு அங்கீகாரம் பெற்ற படமாகியது.நீலக்குயிலில் பாஸ்கரன் மாஷே நடித்துமிருக்கிறார்.

கலாசித்ரா அகாதமியும் கேரள அரசும் இணந்து மலையாளச் சினிமாவில் பாஸ்கரன் மாஷேவின் பங்களிப்பை போற்றும் விதமாக இவரது மார்பளவு சிலையை திருவனந்தபுரத்தில் நிறுவி இருக்கிறது. 

நீலக்குயிலில் கே. ராகவன் இசையமைத்து 
பி. பாஸ்கரன் எழுதிய 
ஒன்பது பாடல்கள் உள்ளன .இவை அனைத்தும் கேரள நாட்டுப்புற மரபுஇசை வகைகளில் மாப்பிளப்பட்டு , கோயித்துபட்டு என்னும் அறுவடைப் பாடல்,பாரம்பரிய பிரார்த்தனைப்பாடல்கள்ஆகியவற்றின் வடிவங்களில் அடங்குபவை.

வாழ்நாளின் இறுதியில்அல்ஸைமரினால் பாதிக்கப்பட்டிருந்த மாஷே மனிதர்களையும் அவரது பாடல்களையும் முற்றிலும் மறந்தார். இவரது இறுதிக்காலத்தில் இவரது பாடல்களை ஏராளமாகப் பாடிய S. ஜானகியம்மா இவர் முன்பாக அவரது பல பாடல்களைப்பாடியபோது அவரால் எதையும் நினைவுகூற முடியவில்லை. 83 வயதில் இறந்தார் மாஷே.

1954-ல் தலித் பெண்ணுக்கும் உயர் சாதி பள்ளிக்கூட ஆசிரியருக்குமான காதலைச்சொன்ன படம் நீலக்குயில். இந்த நீலக்குயிலின் ’’எல்லாரும் சொல்லனு” எளிய மொழியில் எழுதப்பட்ட மிக அழகிய கவிதை

மிஸ் குமாரியும் சத்யனும் வெகு இயல்பான உடல்மொழியுடன் நடித்திருக்கும் பாடல்காட்சி. கொய்யாக்காயை கடித்துக்கொண்டும் மேலே தூக்கிப்போட்டுப் பிடித்துக்கொண்டும் பாடும் காதல்பாடலை நான் இதற்கு முன்பும் பிறகும் கேட்டது இல்லை. ஒருவரை ஒருவர் தொட்டுக்கொள்ளாமல் முழுப்பாடலையும் பாடிவிட்டு இறுதிக்காட்சியில் ‘கல்லானு, கருங்கல்லானு’ என்று சொல்லப்பட்ட சத்யனின் நெஞ்சில் தன் இருகைகளையும் வைத்துக்கொள்வார் குமாரி. ஜானம்மாடேவிட்டின் குரலில் நீலக்குயில் கொஞ்சுகிறது.

’’எல்லாரும் சொல்கிறார்கள்

உங்கள் இதயம் கல் என்று,

அதுவும் பெரும்

கருங்கல்லென்று’

ஆனால் நானதைத்

தொட்டுப்பார்த்தபோது

எனக்கது

ஒரு கரும்பின் துண்டாகத்தான் இருந்தது.

நாட்டார் எல்லாரும்

உன் இதயம் காடு

அதுவும் கொடும்காடு என்றார்கள்,

ஆனால்

அதில் நுழைந்த போது

நான் பார்த்தது

ஒரு நீலக்குயிலின் கூட்டை ,

சின்னஞ்சிறியதோர் கூட்டை.

என்ன பார்க்கிறாய் நிலவே?

ஏன் எங்களை மேலிருந்து பார்க்கிறாய் ?

நான் மேலே உன்னிடம் வரப்போவதில்லை

என் மணவாளன்

இங்கே கீழே அல்லவா இருக்கிறான்?

பூச்செண்டு வாங்கனும்

கல்யாண முண்டு வாங்கி உடுத்தனும்

பூக்கள் அமைத்த பொன்தாலியை

கழுத்தில் கட்டனும்

நானொன்றும்

விளையாட்டுக்குச்சொல்லவில்லை

நல்ல சுவையான துளிர் வெற்றிலையை

மென்று தின்று

என் உதடுகளை

ரத்தச்சிவப்பாக்கிக்கொள்ளனும்

ஆம்

என் உதடுகளை

ரத்தச்சிவப்பாக்கிக்கொள்ளனும்’’

எத்தனை நேரடியான காதல் சொல்லல் இல்லையா?

இடையில் அந்த அய்யா என்னும் விளி அவன் மீது அவளுக்கிருக்கும் மரியாதை கலந்த அன்பைக்காட்டுகிறது.

முதலில் நேரடியாக அவன் இதயத்துக்குள் தான் நுழைந்ததைச் சொல்லும் அவள், அவன் எத்தனைஇனியவன் என்கிறாள் கரும்பைச்சொல்லி.

பின்னர் நிலவிடம் சொல்லுவது போல் தன் மணவாளன் அவனே என்கிறாள். பிறகு கல்யாணத்துக்கு தயார், முண்டும் தாலியும் கெட்டனும் என்பவள் மேலும் துணிந்து உதடுகளை சிவப்பாக்கிக்கொள்வதையும் சொல்கிறாள்.

ஊழின் இரக்கமற்ற விதி இந்தப்பாடலைக் கூட பாஸ்கரன் மாஷே மறக்கும்படி செய்துவிட்டது

கருங்கல்லானு !!