லோகமாதேவியின் பதிவுகள்

நதியின் பிழையன்று!

சமீபத்தில் கோவை நீலாம்பூரில் நஞ்சில்லா விவசாயம் செய்யும் மாதிரிப்பண்னையொன்றைப் பார்வையிட மாணவர்களையும் அழைத்துக்கொண்டு சென்றிருந்தேன். அந்தப்பண்ணை அத்தனை ஆர்வமூட்டுவதாக தென்னையும், கரும்பும், ஊடுபயிர்களுமாக இருந்தது.

நீலாம்பூருக்குஅருகில் வசிக்கும் நண்பரொருவருக்கும் நிலபுலன்கள் இருப்பதால் அவரையும் அந்தப்பண்ணைக்கு வரும்படி அழைப்பு விடுத்தேன். அவர் அங்கே வந்தபின்னர்தான் தெரிந்தது அந்த நிலமும் அதற்கருகிலிருந்த நிலமெல்லாமும் மூன்று தலைமுறைகளுக்கு முன்பு  அவர்கள் முன்னோருக்கு சொந்தமானதாக இருந்தவை என்று. 

அந்த நண்பர்  என்னிடம் வேடிக்கையாக ‘’ எங்க நிலத்தைப் பார்க்க வரச்சொல்லி எங்களையே கூப்பிட்டிருக்கீங்க’’ என்றார்.

அப்படித்தான் இருந்தது சி ஆர் இளங்கோவனின்  ‘’நதியின் பிழையன்று’’ நூலை வாசித்தபோது. கோவை  மாவட்டத்துகாரியான எனக்கு கோவையைக்குறித்து விளக்கமாகச் சொல்லிய நூல் இது. கோவை மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளின் வரலாற்றையும், பன்முகங்களையும், அவை எப்படி மெல்ல மெல்ல சிதைக்கப்ட்டிருக்கிறது என்பதையும் மிக உணர்வுபூர்வமாக விவரிக்கும் இந்த நூல் அழைத்துச் செல்லும் இடங்கள் எல்லாமே எனக்குத்தெரிந்தவை, நான் சென்றிருப்பவை, வாழ்ந்து கொண்டிருப்பவைதான் என்றாலும் இளங்கோவன் காட்டும் கசக்கும் உண்மைகள் நானறியாதவை.

இந்த நூல் வாசித்தபிறகு 17-ம் நூற்றாண்டில் தனது ஓவியங்களால் சூழியல் துறையை தோற்றுவித்த மரியா சிபில்லாவை அறிந்துகொண்டிருந்த எனக்கு நான் பிறந்து வளர்ந்த மாவட்டத்தின் சூழல் சீர்கேடுகளைக் குறித்து முழுமையாகத் தெரியாமலிருப்பதன்  குற்றவுணர்வு மனம் முழுக்க இப்போது உண்டாகியிருக்கிறது.

பிரமாதமான கதை கூறல் முறை.  கசக்கும் பல உண்மைகளை  புனைவு என்னும் தேன் கலந்து அளித்திருக்கிறார். ஆனாலும் கசக்கிறதுதான்.

கதை மாந்தர்களுக்குள் நடக்கும் உரையாடல்களாலும்,மிக விரிவான விளக்கங்களினாலும் நகரும் கதை இடையே அழைத்து வரப்படும் ஒரு பாட்டியினாலும், கதையில் இருக்கும் இரு பூதங்கள் தங்களுக்குள் உரையாடுகையிலும், ஒன்றுக்கொன்று பேசிக்கொள்ளும் இரு பாறைகளின் மூலமும், ஜோடிப்பறவைகளின் உரையாடலிலும் மேலும் அணுக்கமாகிவிடுகிறது..

 இந்தக்கதைகூறும் முறை என்னை மிகவும் கவர்ந்தது. இளங்கோவன் மொழியும் மிக எளிமையாக மாசடையாத காலத்து நொய்யலைப் போல தங்குதடையின்றி வழிந்தோடுகிறது.

ரோமானியரான மார்கஸ் நொய்யலைப்பற்றி ஆய்வு செய்யவருவதிலிருந்து கதை ஆம்  நம் மாவட்டத்தின் கதைதான் தொடங்குகிறது. காலத்தில்  முன்னும் பின்னும் சென்று திரும்பும் கதையில் நாமும் இளங்கோவனுடன் நதிக்கரைகளிலும், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு  எழுப்பப்பட்ட கோவில்களுக்கும்,  மச்சு வீடுகளுக்கும், ஜின்னிங் ஃபேக்டரிகளுக்கும் நடந்து செல்கிறோம்.

பல அத்தியாயங்களில்  இளங்கோவன் நம் வீட்டு கூடத்தில் அமர்ந்து நம்மோடு உரையாடிக்கொண்டிருக்கும் உணர்வை வாசிப்பனுபவம் உண்டாக்குகிறது.

நானறிந்த, நான் சந்தித்திருக்கும் சூழல் மேம்பாட்டில் முக்கியப் பங்காற்றிக் கொண்டிருக்கும் பல முக்கிய ஆளுமைகள்   பெயர் மாற்றப்பட்டு கதையில் இடம்பெற்றிருக்கிறார்கள். 

அவர்களின் பணியும் சூழல் பங்களிப்பும்  மகத்தானது. அவர்களை அவர்களாகவே குறிப்பிட்டிருக்கலாம். அதிமானுடக் கற்பனைக் கதாபத்திரங்களைக் கொண்டாடி  வழிபடும் இந்தத்தலைமுறையினர் அவர்களைக் குறித்து அறிந்து கொண்டிருப்பார்கள்.  எனினும் புனைவு என்னும்  வடிவத்தை முழுமையாக்க இப்படி செய்திருக்கிறார்  என்று தோன்றுகிறது.

நூலில் என்னை பிரதானமாகக் கவர்ந்தது இளங்கோவனின் நேர்மறைத்தன்மை. நொய்யல் மாசுபடுவதைச் சொல்லிக்கொண்டே இருக்கும் இடங்களில் எங்கும் யாரையும்  அவர் குறை சொல்லவில்லை.  கரையோரம் வீடு கட்டிக் குடியிருந்து கழிவுநீரை நதியில் கலந்தவர்களைச் சொல்லும்போதும் அவர்கள் வேண்டுமென்றே செய்யவில்லை என்கிறார். அரசையும் குறை சொல்வதில்லை, அரசு என்ன செய்யவேண்டுமோ அதைச் செய்த பின்னரும்  கைமீறிப்போன விஷயத்தில் யாரைக் குறை சொல்வது என்னும் தொனிதான் பெரும்பாலும் இருக்கிறது. 

சூழல் மாசு குறித்த நூலோ கட்டுரையோ ஏன் தகவலாக இருந்தால் கூட எதோ ஒரு தரப்பை குறைசொல்லாமல், சுட்டிக்காட்டாமல் இருக்கமுடியாது. சூழல் மீது மட்டுமல்ல மனிதர்கள் மீதான இளங்கோவனின் இந்தக் கனிவும் என்னை மிகவும் ஆச்சர்யமூட்டியது.

சூழல் மாசுகுறித்த அவரது ஆழ்ந்த கவலையில் யார் மீதும் எந்தக்குறையும் அவர் காணவில்லை, எல்லாம் காலத்தின் கோலம் என்பதை அவர் ஆத்மார்த்தமாகச் சொல்கிறார். இடையிடையே அநேகமாக எல்லாப் பக்கங்களிலும் பிறவாப்புளி,எறவாப்பனை  உள்ளிட்ட  ஏராளமான மரம் செடிகொடிகளின் பெயர்கள் இடம்பெற்றிருக்கிறது. இந்த நூலை இந்தப்பிரதேசத்தின்  flora வின் ஆவணம் என்றும்  கருதலாம்.

கல்வெட்டுச்செய்திகள், திருவிளையாடற்புராண வரிகள், ஆய்வறிக்கைகளின் முக்கியப்பகுதிகள், தமிழக ஆணையக்குறிப்புகள், நீதிமன்றத்தீர்ப்புகள் , தலபுராணத்தகவல்கள், சிலப்பதிகாரம், வெகுகாலத்துக்கு முந்தைய முக்கியக் கண்டுப்பிடிப்புகள் என்று  ஒவ்வொரு அத்தியாயத்தின் துவக்கத்தில்  கொடுத்திருப்பது இந்தப்படைப்பை   மேலும் மேலும் செறிவானதும்   முக்கியமானதுமாக்கி விடுகிறது.

நதியின் மூலத்தை மட்டுமல்ல நதி பாழானதின் மூலத்தையும் தேடிப்பிடித்து நமக்குத் தருகிறார் இளங்கோவன். திருப்பூரில் வண்ணத்துணிகள் உருவாகக் காரணமாயிருந்தவரை  நான் இந்த நூலில்தான் அறிந்துகொண்டேன்.

 சாயக்கழிவுகளால் உண்டாகியிருக்கும் நதிநீர்  மாசுபட்டை ஒரு ஆவணப்படம் பார்க்கும் உணர்வுடன் வாசித்தறிந்து கொள்ள முடிகிறது அத்தனைக்கு உண்மையாகவும் அப்பட்டமாகவும் சிக்கலை அணுகி இருக்கிறார் இளங்கோவன்.

 பல வருடங்களுக்கு முன்னர் திருப்பூர் நண்பர் ஒருவரின் வீட்டுக்குச் சென்றிருக்கையில் தலைக்குகுளிக்கவென்று 20 பிளாஸ்டிக் குடங்களில் ‘’நல்ல தண்ணி’’ குடம் ஐந்து ரூபாய் என்று வாங்கி சேமித்துவைத்து விட்டு தான் துவங்கவிருக்கும் புதிய பனியன் தொழிற்சாலை குறித்து உற்சாகமாக நண்பர் பேசிக்கொண்டிருந்ததையும் அவர்கள் வீட்டு  வாஷ்பேசினில் நான் குழாயை திறந்ததும் தேநீரின் நிறத்தில் வந்த ஆழ்குழாய் நீரையும் நினைவுகூர்ந்தேன். 

திருப்பூரின் ஒரு பெருமுதலாளியின் மூன்று குழந்தைகளுக்கு மிக இளம் வயதிலேயே ஆஸ்துமா இருந்தது, திருப்பூரில் அவர்கள் இருந்தால் ஆரோக்கியக் கேடு மேலும் அதிகரிக்கும் என்பதால் அவர்கள்ஊட்டியில் ஒரு சர்வதேச உறைவிடப்பள்ளியில் சேர்க்கப்பட்டார்கள். திருப்பூரில் பின்னலாடை தொழிலை நம்பி இருக்கும் ஆயிரக்கணக்கானோரின் குடும்பத்துக் குழந்தைகளை   எங்கு சென்று படிக்கவைத்து அவர்கள் நலனை பாதுகாப்பது?

 யார் பிழை என்று சொல்வது இவற்றை?

சிங்காநல்லூரில் குளத்துக்குள் வரும் ரயில் ,அதன் வரலாறு, மீன்பிடிப்போரின் தெய்வமான  தூண்டில் கருப்பசாமி, பிளேக் மாரியம்மன் பிளாக் மாரியம்மனானது,அந்தக்காலத்திலேயே பவோ பாப் மரம் கோவையில் ஒரு தோட்டத்தில் நடப்பட்டது, தன்னிச்சையாக இளைஞர்கள் இந்த மாசுபாட்டை சரிசெய்ய அமைந்த தருணங்கள் என மிகச்சுவாரஸ்யமாக நூலுடன் பயணிக்க முடிகிறது. 

பலஇடங்களில் மிக கவித்துவமான விவரிப்புகள் இருக்கின்றன. உதாரணமாக மியாவாக்கி குறுங்காட்டைப்பற்றிய ஒரு விவரிப்பின் போது  மூங்கில் இலைகள் பொன்னிற மலரிதழ்கள் போல தரையெங்கும் சிதறிக்கிடந்தன என்கிறார்.  மூங்கிலின் பழுத்த இலைகள் மலரிதழைப் போலவேதான் இருக்கும். தங்கமாக மின்னும் செண்பகப்பூ, காணி நிலம் வேண்டும் என்னும் பாரதியின் பாடலை நினைவில் கிளர்த்தும் இடமும் அப்படித்தான்.

 நொய்யலில் மீன் பிடிப்பவர்களுக்கு சீவியர் என்னும் பெயரிருப்பதையும் அதன் காரணம் தெரியவில்லை என்பதையும் அறிந்து கொண்ட போது, மீன் முட்டைகளைக்குறிக்கும் Caviar என்னும் சொல்லுக்கும் இந்தப் பெயருக்கும் ஏதேனும் வேர்தொடர்பு இருக்குமோ எனத்தோன்றியது.

பிரச்சனைகளைச் சொல்லி இருக்கும் அதே அளவுக்கு பிரச்சனைகளைச் சீராக்க எடுக்கப்பட்டிருக்கும் சீரமைப்பு நடவடிக்கைகளையும் குறிப்பிட்டிருக்கிறார்.

இந்த நதிநீர் மாசுபாட்டைச் சீரமைக்க  நாமனைவரும் ஒன்று சேர்ந்து தீவிரமாகச்  செயல்பட வேண்டி இருக்கும் அவசியத்தை  நேரடியாகச் சொல்லாமல்  சீர்கேட்டின் திவீரத்தை உள்ளது உள்ளபடி சொல்லி இருக்கிறார்.

நூலின்  உள்ளடக்கத்தை முன்-பின்னட்டை புகைப்படம் மிக  வெளிப்படையாகச்  சொல்லிவிடுகிறது. அதிலும் புரண்டோடும் நதி முன்னட்டையிலும். மாசடைந்த சாக்கடைக்கோலம் பின்னட்டையிலும் இருப்பது இளங்கோவனின் நேர்மறை அணுகுமுறையின்  மற்றொரு சான்று. 

கைக்கடக்கமான சிறிய  160 பக்கங்கள் கொண்ட நூல். சிறப்பான   வடிவமைப்பு. மிகச்சில தட்டச்சுப்பிழைகள்தான்.

இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்களையும் இப்போது செயல்பட்டுக்கொண்டிருக்கும் முக்கிய ஆளுமைகளைக்குறித்துப்பேசும், சூழல் முக்கியத்துவம் வாய்ந்த   நூல்கள் தான் கல்லூரியில் பாடத்திட்டத்திலோ அல்லது  non detailed நூல்களாகவோ இருக்க வேண்டும் என்பது என் அபிப்பிராயம் .

அயல்நாட்டினர் எழுதிய ஆங்கிலக்காவியங்களும் தேவைதான் என்றாலும் முதல் தேவை நம் சொந்த மண்ணை அறிந்து கொள்வது தான்.என் துறை மாணவர்களுக்கு 100 பிரதிகள் வேண்டும்  இளங்கோவனிடம் கேட்டிருக்கிறேன்

திரு இளங்கோவனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களும் அன்பும்!

1 Comment

  1. Priya

    அருமையான பதிவு, இந்த சூழலில் வாசிக்க வேண்டிய நூலை அறிமுகம் செய்தமைக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑