இரண்டு நாட்களுக்கு முன்பு ஒரு பெரிய காரியம் . துக்கம் விசாரிக்க பொன்னாண்ட கவுண்டனூர் சென்றிருந்தேன். திரும்பி தொண்டாமுத்தூர் வழியே வரும்போது சாலையோரம் பேய்மிரட்டி என்கிற Anisomeles malabarica புதர்கள்அடர்த்தியாக வளர்ந்திருந்தன. காரை நிறுத்தி இறங்கினேன்.

பத்துப் பதினைந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் இந்தச்செடியை மாணவர்களுக்கு கொடுக்க நீலகிரிசென்று பைக்காரா அணைக்காட்டுக்கருகில் இருந்து எடுத்து வருவோம். இப்போது வாய்க்கால் வரப்போரங்களில் எங்கும் காணமுடிகிறது.

தும்பைக்குடும்பத்தைச்சேர்ந்த இதன் இலைகள் வெகுட்டல் வாடை கொண்டவை. அதனாலேயே இதற்கு பேய்மிரட்டி, பேய் விரட்டி என்று பெயர். இது பெருந்தும்பை என்றும் அழைக்கப்படுகிறது.

மாந்த்ரீக பூஜைகளில் ஆர்வமும் நம்பிக்கையும் கொண்டிருக்கும் ஒரு மருத்துவரின் அலுவலக அறையில் இதன் காய்ந்த குச்சிகள் ஒரு சிறு கட்டாக பூசைமாடத்தில் வைக்கப்பட்டிருந்ததை ஒருமுறை பார்த்திருக்கிறேன்,

பலர் இந்தச்செடியை தோட்டத்தில் வளர்த்தாலோ அல்லது இதன் காய்ந்த பாகங்களை வீட்டில் வைத்துக்கொண்டாலோ தீய சக்திகள் அண்டாது என்று நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். நான் வீட்டுத்தோட்டத்தில் இதை ஒரு மூலிகைத் தாவரமாகத்தான் வைத்திருக்கிறேன். தீய சக்திகள் அண்டாமலிருக்க மனிதர்களே இல்லாத தீவிலல்லவா வசிக்க வேண்டும்?

பாரம்பரிய மருத்துவ சிகிச்சைகளில் இது ஒரு காய்ச்சல் நிவாரணியாகவும், பசியுணர்வை தூண்டுவதற்காகவும் பயன்படுத்தப்படுகிறது. (மருத்துவரின் அனுமதியும் பரிந்துரையுமில்லாமல் இதை நாமாக மருந்தாக எடுத்துக்கொள்ளவே கூடாது)

இதன் பசிய இலைகளின் கூர் நுனியை பஞ்சுத்திரியைப்போல அகல்விளக்குகளில் வைத்து எண்ணெய் ஊற்றி விளக்கேற்றலாம். பச்சையின் சடசடப்பே இல்லாமல் திரியைபோலவே மணிக்கணக்கில் நின்றெரியும். இந்த சுடர் எரியும் வரைக்கும் கொசுபோன்ற பூச்சிகள் வருவதில்லை.

தொடர்ந்து பயன்படுத்தினால் ஆளையே கொல்லும் ஆல் அவுட் நச்சுத்திரவங்களைக் காட்டிலும் இப்படியான இயற்கைப் பூச்சி விரட்டிகளை நாம் எளிதில் பயன்படுத்தலாம்.

வீட்டில் இருப்பது ஒரே ஒரு சிறு செடி என்பதால் விளக்கெற்றவென்று இந்தப்புதர் கூட்டத்திலிருந்து இலைகளை எடுத்துக்கொள்ள நினைத்தேன். காரில் எப்போதும் காகிதக் கவர்களும் கத்தரி, கத்தி ஆகியவைகளும் இருக்கும். ஒரு கவரில் நானும் கார் ஓட்டுநருமாக பேய்மிரட்டி செடிகளை கத்தரித்துச் சேகரித்துக் கொண்டிருந்தோம்.

அந்த வழியே டி வி எஸ் 50-யில் குதிரை மசால்கட்டுகளுடன் வந்த ஒருவர் வண்டியை எங்களருகில் நிறுத்தினார். நீலத்தில் பொடிக்கட்டமிட்ட லுங்கியும் முழங்கைவரை சுருட்டிவிட்டிருந்த சிவப்பு முழுக்கைச்சட்டையுமாக இருந்தார். எங்களிடம்

….. ’’’’ இதை எதுக்கு பொறிக்கறீங்க? இது களைச்செடி, நாத்தமடிக்கும்’’’’……..

என்றார்.

…..’’’’ இந்த இலையை திரிமாதிரி அகல்விளக்கில் போட்டு ஏத்தினா எரியுங்க, கொசுவும் வராது, அதான் பறிக்கிறேன்’’’ ……… என்றேன்.

அசந்துபோனவர் ஒரு கெட்ட வார்த்தையைச்சொல்லி, வான் நோக்கி கைகைக்காட்டி

…..”” தக்காளி! என்னன்னவெல்லாம் குடுத்துருக்கான் பாருங்க நம்மளுக்கு!’’…. என்றபடி வண்டியை கிளப்பிக்கொண்டு போனார்.

அந்தக் கெட்டவார்த்தை இல்லாமல் நானும் அதைத்தான் எப்போதும் நினைக்கிறேன், என்ன என்னவெல்லாம் நமக்கென கொடுக்கப்பட்டிருக்கிறது? நாம் தான் அறிந்துகொள்வதில்லை அளிக்கப்பட்டவைகளின் அருமைகளை.