லோகமாதேவியின் பதிவுகள்

Month: March 2021 (Page 2 of 3)

நான் உயரமான கள்ளி!

யானைக்கள்ளி
ஆங்கிலப் பெயர் : ‘எலிஃபன்ட் காக்டஸ்’ (Elephant Cactus)
தாவரவியல் பெயர்: ‘பகிசிரியஸ் பிரிங்லி’ (Pachycereus pringlei)
வேறு பெயர்கள்: ‘கார்டான்’ (Cardon), ‘மெக்சிகன் ஜயன்ட் காக்டஸ்’ (Mexican Giant Cactus)

* வறண்ட நிலப்பகுதிகளில் காணப்படும் தாவரம் கள்ளி. பெரும்பாலும் செடியாக இருக்கும் எனினும், மரமாகவும் வளரும். 127க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன.
* யானைக்கள்ளி, உலகிலேயே உயரமாக வளரக்கூடிய கள்ளி இனம். மெக்சிகோவின் பாஜா கலிஃபோர்னியா (Baja California), சொனோரா (Sonora) பாலைவனப் பகுதிகளில் வளர்கிறது.
* பசுமை மாறா வகையான இது, மிக மெதுவாகவே வளரும். சராசரி உயரம் 32 அடி.
* தண்டுகளில் வரி போன்ற அமைப்புகளும் (Ribs — ரிப்ஸ்), சாம்பல் நிறத்தில் வட்டமாக அமைந்துள்ள கூரிய முட்களும் (Areole — ஏரியோல்) காணப்படுகின்றன. அடித்தண்டில் இருந்து கிளைகள் வளரும்.
* வெள்ளை நிறத்தில், இரவில் பெரிதாகப் பூக்கும். வெளவால், பாலைப்பறவைகள் போன்றவற்றின் மூலம் மகரந்தச் சேர்க்கை நடக்கும்.
* வேர்களில் உள்ள பாக்டீரியா, பூஞ்சை காரணமாக இது மண்ணில்லாத பாறையிலும் வளரும்.
* முட்கள் செறிந்திருக்கும் சிவந்த சதைப்பற்றுள்ள பழம், மெக்சிகோ பழங்குடியினரால் உண்ணப்படுகிறது. தண்டின் சதைப்பகுதி வலி நிவாரணியாகவும், தொற்று நீக்கியாகவும் பயன்படுகிறது.

சொனோரா பாலைவனப்பகுதியில், 63 அடி உயரத்திற்கு வளர்ந்துள்ள யானைக்கள்ளி 2007ஆம் ஆண்டு கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

[ தினமலர் தளத்தில் வெளியானது ]

தாவரங்களின் தோழன்

 எறும்புகள் ‘ஃபோர்மிசிடே’ (Formicidae) உயிரினக் குடும்பத்தைச் சேர்ந்தவை. எறும்புகளில் 10,000 வகைகளும், கிட்டத்தட்ட 22,000 சிற்றினங்களும் இருக்கின்றன. தாவரங்களுக்கும் எறும்புகளுக்கும் உள்ள உறவு மிகச்சிறப்பானது. பயறு வகைத் தாவரங்கள், ஆர்க்கிடுகள், ஆமணக்குச்செடியின் ‘யுஃபோர்பியேசியே’ (Euphorbiaceae) எனப்படும் ஆமணக்குச் செடி குடும்பத் தாவரங்கள் போன்றவை உள்ளிட்ட நூற்றுக்கணக்கான தாவரங்கள் எறும்புகளுடன் நெருங்கிய உறவில் உள்ளவை.
* இந்தத் தாவரங்கள், எறும்புகளுக்குத் தங்குமிடம், உணவு போன்றவற்றை அளிக்கிறது பதிலுக்கு எறும்புகள் தாவரங்களை உண்ண வரும் விலங்குகளிடமிருந்து பாதுகாத்தல், விதைபரவல், மகரந்தச்சேர்க்கை தாவரக்கழிவுகளைச் சுத்தம் செய்தல், சத்துகளை அளித்தல், நோயிலிருந்து காத்தல் என, பல வகைகளிலும் உதவுகின்றன. சில எறும்புகள் இலைகளில் ஏற்படும் பூஞ்சைத்தொற்றினை (Fungal Infections — ஃபங்கல் இன்பெக்ஷன்ஸ்) பூஞ்சை இழைகளை உண்பதன் மூலம் முற்றிலுமாகக் கட்டுப்படுத்துகின்றன.
* எறும்புகளோடு இணைந்து வாழும் இவ்வகைத் தாவரங்கள் ‘மிர்மிகொஃபைட்ஸ்’ (Myrmecophytes) எனப்படும். இந்தத் தாவரங்களில் எறும்புகள் வாழ்வதற்கான ‘டொமேசியா’ (Domatia) எனப்படும் தங்குமிடங்களைக் கொண்டிருக்கும். உள்ளே வெற்றிடங்கள் உள்ள கூரிய முட்கள், வெற்றிடமாக இருக்கும் தண்டுகளின் உட்புறம், சுருண்ட இலைகளின் ஓரங்கள் ஆகியவற்றில் எறும்புகள் முட்டைகளை இட்டு பாதுகாப்பாகத் தங்கிக்கொள்ளும்.
* எறும்புகளுக்குத் தேவையான உணவுப்பொருட்களை இலைக்காம்புகளில், மகரந்தத்துகள்களில், இலை நுனிகளில், தண்டுகளில் சேகரித்து வைத்திருக்கும், நீர்ச்சுரப்பிகளை மலருக்கு வெளியே (Extrafloral Nectaries – எக்ஸ்ட்ராஃபுளோரல் நெக்டரிஸ்) எறும்புகளுக்கென உருவாக்கி வைத்திருக்கும் தாவரக் குடும்பங்களும் உள்ளன.
* பல வகையான பழ மரங்கள், எறும்புகளை பழங்கள் இருக்கும் காலத்தில் மட்டும்கூட வைத்துக்கொண்டு தன்னை பாதுகாத்துக்கொள்ளும். பிசின் போன்ற திரவத்தை எறும்புகளுக்காகச் சுரக்கும். மாமரங்களிலும், கொய்யா மரங்களிலும் எப்போதும் எறும்புகள், இருப்பதைக் காணலாம்.

தெரிந்து கொள்வோம்
ஓடும் வேகம் (மணிக்கு)
யானை – 25 கி.மீ.
சிங்கம் – 80 கி.மீ.
சிறுத்தை – 114 கி.மீ.
புலி – 65 கி.மீ.
மான் – 60 கி.மீ.

[ தினமலர் தளத்தில் வெளியானது ]

மாவுச் சத்துகளின் வங்கி

மரவள்ளி
ஆங்கிலப் பெயர்கள்: Tapioca – டாபியோகா, Cassava – கசாவா
தாவரவியல் பெயர்: Manihot esculenta – மணிஹாட் எஸ்குலேன்ட்டா
வேறு பெயர்கள் : குச்சிக் கிழங்கு, ஏழிலைக் கிழங்கு, ஆல்வள்ளி, குச்சி வள்ளிக் கிழங்கு, மரச்சீனிக் கிழங்கு

மனிதர்களின் உணவுத் தேவையில், கார்போஹைட்ரேட்டைத் (Carbohydrate) தருவதில் உலகின் மூன்றாவது இடத்தில் இருப்பது மரவள்ளிக் கிழங்கு. இது ‘யூபோர்பியேசியே’ (Euphorbiaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த செடியின் வேரில் காணப்படும் கிழங்கு. இதன் தாயகம் தென் அமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா. ஆப்பிரிக்காவில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது.
மரவள்ளிச் செடி 5 அடி உயரம் வரை வளரும். குட்டையாக வளரும் இனங்களும் உண்டு. நீண்ட நடுத்தண்டும், மெல்லிய குச்சிகளால் ஆன கிளைத் தண்டுகளும் காணப்படும். ஒரு காம்பில் ஈட்டி வடிவ இலைகள் ஏழு இருக்கும். வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. பூக்கள் சிறியதாக பச்சை, மஞ்சள் கலந்த நிறத்தில் இருக்கும். பச்சை நிறக் காய்கள், காய்ந்ததும் வெடிக்கும் தன்மை கொண்டவை. விதை மூலமும் குச்சிகளைப் பதியனிடுவதன் மூலமும் இது இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
மரவள்ளிக் கிழங்கு, இரு முனைகளும் கூம்பிய வடிவத்தில் உள்ளே இறுக்கமான மாவுப்பொருளைக் கொண்டது. தடிமனான, மண்ணிறம் கொண்ட தோலினால் மூடப்பட்டிருக்கும். மையப் பகுதியில் நீளமான நார் காணப்படும். உட்பகுதி, வெண்மை நிறத்தில் இருக்கும். கிழங்கின் பட்டையில் ‘ஹைட்ரோசையனிக் அமிலம்’ (Hydrocyanic Acid) என்ற நச்சுப்பொருள் உள்ளது. இந்த அளவைப் பொறுத்து, இனிப்பு மரவள்ளி, கசப்பு மரவள்ளி என இரண்டு வகைகள் உள்ளன. முறையாகச் சமைக்கப்படாத கசப்பு மரவள்ளி, ‘கோன்சோ’ (Konzo) என்னும் நரம்பியல் குறைபாடு சார்ந்த நோயை உருவாக்கக்கூடும். கிழங்கில் புரதமோ, பிற சத்துகளோ அதிகம் இல்லை. மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி ஆகிய சத்துகள் உள்ளன.
வளரும் நாடுகளில், மரவள்ளி மிக முக்கியமான உணவு மற்றும் வாழ்வாதாரப் பயிராகவும் வணிகப் பயிராகவும் உள்ளது. இலைகள் கால்நடைத் தீவனமாகப் பயன்படுகிறது. ஸ்டார்ச், ஜவ்வரிசி, குளூக்கோஸ், டெக்ஸ்ட்ரின், கோந்து, புரூக்டோஸ் சாறு, கெட்டி அட்டைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் மரவள்ளிக் கிழங்கு முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுகிறது.

[ தினமலர் தளத்தில் வெளியானது ]

வடிவம் மாறும் தாவரங்கள்

பூங்காக்களில் தாவரங்களை சிற்பங்கள் போலச் வெட்டி உருவங்களை அமைத்திருப்பதை நாம் கண்டிருப்போம். தாவரப் புதர்களை வெட்டிச் சீரமைத்து விரும்பிய உருவங்களை ஏற்படுத்தும் இந்த தாவரச் சிற்பக் கலை ‘டோபியரி’ (Topiary) எனப்படும். புதர் சிற்பக்கலை எனவும் கூறலாம். இப்படி வெட்டி வடிவமைக்கப்பட்டு வளரும் தாவரங்களும், ‘டோபியரி’ என்றே குறிப்பிடப்படுகின்றன. அடர்ந்து, நேராக வளரக்கூடிய பசுமைமாறாத தாவரங்களில் இந்த வடிவங்கள் செய்யப்படுகின்றன. குட்டையான, ஊசிபோன்ற மிகச்சிறிய இலைகளையுடைய பல்லாண்டுத் தாவரங்கள் இவை. இலைகளையும் கிளைகளையும் சீராக குறிப்பிட்ட இடைவெளிகளில் நறுக்குவதன் மூலம், இதுபோன்ற வடிவங்கள் ஏற்படுத்தப்படுகின்றன. ஏற்படுத்திய வடிவங்கள், பல ஆண்டுகளுக்கு அதே தோற்றத்தில் இருக்கவேண்டுமென்பதால், மிக மெதுவாக வளரும் தாவரங்களே இதற்குத் தேர்வு செய்யப்படுகின்றன
கம்பிகளும், கம்பி வலைகளும், கம்பிச் சட்டங்களும் குறிப்பிட்ட வடிவங்களைக்கொண்டு வருவதற்கு, சில சமயங்களில் பயன்படுத்தப்படுகின்றன. தாவரங்கள் வளரும் முன்பே சட்டங்களை அவற்றைச் சுற்றிலும் பொருத்தி, பின்னர் அவற்றை அந்த சட்டங்களுக்கு ஏற்றாற்போல வளர்த்தும் விரும்பிய வடிவங்கள் கொண்டு வரப்படுகின்றன. தாவர வேலி (Hedge – ஹெட்ஜ்) எனப்படும் புதர்கள், மரங்கள் முதலான தாவரங்களைக் கொண்டு அமைக்கப்படும் உயிர்வேலியானது மிக எளிய ‘டோபியரி’ வடிவமாகும். ரோமானியர்களின் காலத்திலிருந்தே புதர்ச்செடிகளை விலங்கு, பறவை, மனிதர்கள், பந்துகள், எழுத்து வடிவங்களைப்போல வெட்டி சீராக வளர்க்கும் இந்தக் கலை இருந்து வந்திருக்கிறது. எகிப்தியர்களும் இவ்வடிவங்களைப் பல தோட்டங்களில் அமைத்திருந்தனர். ‘வால்ட் டிஸ்னி’ (Walt Disney) 1962ல், டிஸ்னி கேளிக்கைப் பூங்காவில், பிரபல கார்ட்டூன் வடிவங்களில் டோபியரியை ஏற்படுத்தினார். அதன் பிறகு உலகின் பல தாவரவியல் தோட்டங்களிலும், வீடுகளிலும் இந்தக் கலை பரவலாக்கப்பட்டது
அத்தி (Ficus), துஜா (Thuja), மருதாணி (Lawsonia), டுராண்டா, (Duranta) லன்டானா, (Lantana) , ஐவி (Ivy), தெட்சி (Ixora) போன்ற புதர்ச்செடி வகைகளே அதிகம் டோபியரிக்காக தேர்ந்தெடுக்கப்படுகின்றன. ஊசியிலைத் தாவரங்கள் (Conifers) டோபியரி மூலம் வடிவங்களைச் செய்து வளர்க்க மிக எளியதாகையால், உலகில் அதிகம் இதுவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதய வடிவம், குடை, பந்துகள், சதுரங்கள் போன்ற எளிய வடிவங்களிலிருந்து மிகச்சிக்கலான ஒட்டகச் சிவிங்கி, யானை, இயந்திரங்கள் போன்ற வடிவங்களும் டோபியரியில் உருவாக்கப்படுகின்றன. ஆர்வமிருந்தால் போதும், அதிக செலவின்றி மிக அழகிய இந்த தாவரச் சிற்பங்களை தோட்டங்களில் உருவாக்கி வளர்க்கலாம்.

[ தினமலர் தளத்தில் வெளியானது ]

கண்ணாடிக்குள் ஓர் அழகிய தோட்டம்

சூழலை இயற்கையாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ள வீடுகளில் செடிகள் வளர்க்கிறோம். வீட்டில் செடிகள் வளர்ப்பதில் பல முறைகள் உள்ளன. ஒளி ஊடுருவும் கண்ணாடிக் குடுவைகளுக்கு உள்ளே, சிறிய தாவரங்களை வளர்க்கும் தோட்டக்கலை ‘டெராரியம்’ (Terrarium) எனப்படுகிறது. பல வடிவங்களிலான முழுவதும் மூடியிருக்கும் அல்லது ஒருபுறம் திறந்திருக்கும் கண்ணாடிக் குடுவைகளில் செடிகளை வளர்க்கலாம். மூடிய குடுவையின் சுவர்களில் இருந்து செடிகளுக்குத் தேவையான வெப்பம், ஒளி கிடைக்கும். அதோடு அதிகப்படியான நீர் ஆவியாகி நீர்த்துளிகளாக குடுவையில் படிந்து, பின்னர் மீண்டும் செடிகளுக்கே கிடைக்கும்.
‘டெராரியம்’ முதன்முறையாக 1842இல் இங்கிலாந்தைச் சேர்ந்த ‘நாதனியல் பாக்ஷா வார்ட்’ (Nathaniel Bagshaw Ward) என்னும் பூச்சியியலிலும் தாவர அறிவியலிலும் மிகுந்த ஆர்வமுடைய ஒரு மருத்துவரால் உருவாக்கப்பட்டது. இவர் மூலிகைச் செடிகளை சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு கண்ணாடிப் பெட்டிகளில் வளர்த்து அனுப்பினார். இந்த முறையில் செடிகளை வளர்ப்பது, பின்னர் ஓர் அழகிய தோட்டக்கலையாக மாறி, அனைவராலும் பரவலாக விரும்பப்படும் ஒன்றானது.
கற்றாழை போன்ற சதைப்பற்றுள்ள தாவரங்கள் (Succulents — சுக்குயூலென்ட்ஸ்), ஆர்க்கிட்கள் (Orchids), கள்ளிச்செடிகள் (Cacti — காக்டி), பெரணிகள் (Ferns — ஃபெர்ன்ஸ்) போன்றவை ‘டெராரியம்’ அமைக்க ஏற்ற தாவரங்களாகும். அளவில் மிகச்சிறிய செடிகளே டெராரியம் அமைக்கப் பொருத்தமானவை. குறைந்த சூரியஒளியும், தண்ணீரும் போதுமென்பதால், இவற்றை வீட்டுக்குள்ளும், மேஜைகளிலும், அலமாரிகளிலும் வைத்து எளிதாக வளர்க்கலாம். மணல், செம்மண், இயற்கை உரங்கள், பொம்மைகள், கூழாங்கற்கள் ஆகியவற்றை குடுவையின் அடிப்பகுதியில் பரப்பி, பின்னர் மிகச்சிறிய, மெதுவாக வளரக்கூடிய பொருத்தமான செடிகளை குடுவைக்குள் வைத்து விருப்பம்போல அழகுபடுத்தி நேராகவோ, சாய்வாகவோ, திறந்தோ, மூடியோ இத்தோட்டத்தை வடிவமைக்கலாம்.
நன்கு பராமரிக்கப்படும் குடுவைத் தாவரங்களைப் பல ஆண்டுகளுக்கு வைத்துக்கொள்ளலாம். பராமரிக்க மிகவும் எளிதான இவ்வகை உட்புறத் தோட்டத்தை (Indoor Garden), அகலமான குடுவைகள், கண்ணாடிப் பெட்டிகளில் எளிதில் உருவாக்கலாம். சூழலை அழகாக்கும் கண்ணாடிக் குடுவைச் செடிகளை நீங்களும் உங்கள் வீட்டில் வளர்க்கலாம்.

[ தினமலர் தளத்தில் வெளியானது ]

எழுத முடியாத பென்சில்!

பென்சில் செடி
ஆங்கிலப் பெயர்கள்: ‘பென்சில் காக்டஸ்’ (Pencil Cactus),’ஸ்டிக்ஸ் ஆன் ஃபைர்’ (Sticks on Fire), ‘மில்க் புஷ்’ (Milk Bush)
தாவரவியல் பெயர்: ‘யுபோர்பியா டிருகால்லி’ (Euphorbia Tirucalli)
வேறு பெயர்கள்: தீக்குச்சிச் செடி, நெருப்புச் செடி, பென்சில் கள்ளி, பாச்சான் குச்சி, கட்டுக்கலவிக் கள்ளி
பென்சில் செடி, மிகச் சிறிய இலைகளுடன் பச்சை நிறத்தில் பளபளப்பாக பென்சில் போன்ற தடிமனில் உருண்டையான தண்டுகளுடன் இருக்கும். செடி என்று குறிப்பிட்டாலும், நான்கு மீட்டர் உயரம் வரை சிறு மரமாக வளரக்கூடியது. பாலைநிலங்களில் 6 முதல் 9 மீட்டர் உயரம் வரையில் வளரும். இதன் தாயகம் ஆப்பிரிக்கா. ‘யுபோர்பியேசியே’ (Euphorbiaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. உலகின் பல பாகங்களிலும் இது பரவலாக வளர்கிறது.
செடியின் அனைத்துப் பாகங்களும் பால் போன்ற திரவத்தைச் சுரக்கும் தன்மை உடையது. முட்களற்ற வழுவழுப்பான, மென்மையான தண்டுகள் நல்ல சதைப்பற்றுடன் இருக்கும். செடியின் மிகச் சிறிய பச்சை இலைகள் குறுகிய காலத்திலேயே உதிர்ந்துவிடுவதால் குச்சிகள் போன்ற பச்சைத் தண்டுகளே செடி முழுவதும் காணப்படும். இளம் தண்டுகள் மட்டும் சிறு இலைகளுடன் வளைந்து தொங்கியபடி இருக்கும். சிறு கொத்துகளாக மிகச்சிறிய மஞ்சள் பூக்களைப் பூக்கும். செதில் போன்ற தண்டுகளின் நுனியில் மஞ்சள் நிறப் பூக்கள் தோன்றுவது நெருப்புக் குச்சியைப் போலவே காட்சி தரும். சிறிய விதைகளை உடைய காய்களையும் காய்க்கும்.
பூக்களையும், சிறிய விதைகளையும் தேடி பறவைகள், வண்டுகள், அதிக அளவில் வரும். முட்கள் இல்லாததாலும், அடர்த்தியான கிளைகளுடன் இருப்பதாலும் பறவைகள் கூடுகட்ட இந்தச் செடியை அதிகம் தேர்ந்தெடுக்கின்றன. தமிழகத்தில் பல பிரிவினர், திருமணங்கள், விழாக்கள், சடங்குகளில் பால் பெருகும் இந்தச் செடியை மங்கலச் சின்னமாக உபயோகிக்கிறார்கள். இந்தச் செடியின் பால் கண்ணில் பட்டால் பார்வைக் குறைபாடு ஏற்படும். தரிசு நிலங்களிலும் எவ்விதப் பராமரிப்புமின்றி செழித்து வளரும் இச்செடி பல மருத்துவப்பயன்களையும் கொண்டது. மரு மற்றும் கொப்புளங்களை செடியின் பால் குணமாக்குகிறது. பாரம்பரிய மருத்துவத்தில் புற்றுநோய்க்கும் கல்லீரல் வீக்கத்திற்கும், கிருமித்தொற்றுகளுக்கும் சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது.

[ தினமலர் தளத்தில் வெளியானது ]

கடவுளின் உணவு

பெருங்காயம்
ஆங்கிலப் பெயர்: ‘அசஃபோட்டிடா’ (Asafoetida)
தாவரவியல் பெயர்: ‘ஃபெருலா அசஃபோட்டிடா’ (Ferula Asafoetida)
தாவரக் குடும்பம்: ‘ஏபியாசியே’ (Apiaceae)
வேறு ஆங்கிலப் பெயர்கள்: சாத்தானின் சாணம் (Devil’s Dung), நாற்றமடிக்கும் பசை, (Stinking Resin), அசந்த் (Assant), கடவுளின் உணவு (Food of the Gods)
வேறு பெயர்கள்: அத்தியாகிரகம், இரணம், கந்தி, பூத நாகம், வல்லிகம் (தமிழ்), காயம் (மலையாளம்), இங்கு (இந்தி), இன்குயா (தெலுங்கு), இன்கு (கன்னடம்)

சமையலுக்கு மணம் சேர்க்கிற முக்கியப் பொருட்களில் ஒன்று பெருங்காயம். பெருங்காயச் செடியின் தாயகம் ‘பெர்சியா’ (Persia) (ஈரான்). 2 – 3 மீட்டர் உயரம் வரை செடியாகவும் குட்டை மரமாகவும் வளரும். இது ஒரு பல்லாண்டுத் தாவரம். இதன் வேரில் இருக்கும் மஞ்சள் நிறப் பசையில் இருந்து கிடைப்பதே பெருங்காயம்.
இலை 40 செ.மீ. அளவில் இருக்கும். பூக்கள் அடர்மஞ்சள் நிறம். பழம் நீள்வட்ட வடிவில் தட்டையாக இருக்கும். பழத்தின் உள்ளே சிவப்பு, பழுப்பு நிறச் சாறு இருக்கும். வேர்கள் கேரட் வடிவத்தில் கடினமானதாகவும் பெரியதாகவும் சதைப்பிடிப்பாகவும் உள்ளன.
வளர்ந்த 4 ஆண்டுகளில் செடியில் பெருங்காயப் பசை உருவாகிறது. பூ பூப்பதற்கு முன்பாக, வேர்ப்பகுதியை நறுக்கி, அதன் மேல் பகுதியை மண்ணாலும் காய்ந்த குச்சிகளாலும் மூடிவைப்பார்கள். சில நாட்களுக்குப் பிறகு, வேரின் நறுக்கிய பகுதியிலிருந்து பால் போன்று வடிந்துள்ள பிசினைச் சுரண்டி எடுத்துவிடுவார்கள். மறுபடியும் வேரை நறுக்கி, சில நாட்களில் அதில் படிந்துள்ள கோந்து போன்ற பகுதியைச் சுரண்டிவிடுவார்கள். இப்படியாக வேரை நறுக்க, வெளிப்படும் பிசின் முழுவதுமாக வரும்வரை தொடர்ந்து செய்துகொண்டே இருப்பார்கள். மூன்று மாதங்களில் வேரிலிருந்து சுமார் 1 கிலோ வரை பசையை பெறலாம்.
பெருங்காயத்தில், பெருங்காயப் பசை, எளிதில் ஆவியாகும் எண்ணெய், சாம்பல் ஆகியவை உள்ளன. நாம் கடைகளில் வாங்கிப் பயன்படுத்தும் கூட்டுப் பெருங்காயத்தில், கருவேலம் பிசின் (Gub Arabic), கோதுமை, மைதா போன்ற பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. பெருங்காயம் வாங்கும்போது, அதில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் என்ன என்று அச்சிட்டிருப்பார்கள். பெருங்காயத்தில் நிறைய கலப்பட வகைகளும் வருகின்றன. இவை உடல் நலனுக்குக் கேடு விளைவிப்பவை.
ஈரான், துருக்கி, ஆப்கானிஸ்தான், பஞ்சாப், காஷ்மீர் போன்ற பகுதிகளில் பெருங்காயம் அதிக அளவில் விளைகிறது. ஈரானிலிருந்து இறக்குமதியாகும் ஒரு கிலோ பெருங்காயத்தின் விலை 12 ஆயிரம் ரூபாய். காரமும், கசப்பும் கொண்ட பெருங்காயம், சுவையுணர்வு நரம்புகளைத் தூண்டி, ருசி உண்டாக்கும் குணம் கொண்டது. செரிமான சக்தி, குடல் நுண்ணுயிரி அழிப்பு, வாயுத் தொல்லை நீக்குதல் போன்ற பல மருத்துவ குணம் உடையது. சமைக்காத பொழுது நெடியுள்ள, வெறுக்கத்தக்க மணத்தைக்கொண்ட இது, சமைத்த உணவுகளில் மென்மையான சுவையையும் உடல் ஆரோக்கியத்தையும் வழங்குகிறது.

[ தினமலர் தளத்தில் வெளியானது ]

தலைகுனிந்து நிழல் தரும் மரம்

அழும் வில்லோ மரம்
ஆங்கிலப் பெயர்: ‘வீப்பிங் வில்லோ ட்ரீ’ (Weeping Willow Tree)
தாவரவியல் பெயர்: ‘சாலிக்ஸ் பாபிலோனிகா’ (Salix Babylonica)

அழுவதைப் போல தலைகுனிந்து, வளைந்து சோகமாக நிற்கும் மரங்களைப் பார்த்திருக்கிறீர்களா? அப்படித் தோற்றமளிப்பவை அழும் வில்லோ மரங்கள். ‘சாலிக்கேசியே’ (Salicaceae) குடும்பத்தைச் சேர்ந்தவை. வட சீனாவைத் தாயகமாகக் கொண்ட இந்த மரங்கள், வட அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியா முழுவதும் ஆற்றங்கரைகள், ஆழமற்ற நீரோடைகள் ஆகியவற்றின் ஓரங்களில் காணப்படும். இவை 30 மீட்டருக்கும் மேல் ஓங்கி உயரமாக வளரக்கூடியவை. சதுப்பு நிலங்களில் செழிப்பாக வளர்கின்றன. நீண்ட, ஒடிசலான கிளைகளில் நளினமாகத் தொங்குகிற அவற்றின் இலைகள் மெல்லியதாக இருக்கும். மலர்கள் பச்சைக் கொத்துக்களாகக் காணப்படும். நிழல் தரும் இந்த மரம், ஒரு மீட்டர் விட்டம் கொண்டதாகவும், 20 மீட்டருக்கு மேலும் உயரம் கொண்டதாகவும் வளரும். இந்த மரத்தின் சிறப்புத் தன்மையே, இது எடை குறைவானதாகவும், அதிக வலுவுள்ளதாகவும் இருப்பதுதான்.
வில்லோ மரங்களில் 400க்கும் அதிகமான வகைகள் இருக்கின்றன; அவற்றில் குறிப்பாக ‘வீப்பிங் வில்லோ’ எனப்படும் அழும் வில்லோ மிக வசீகரமான மரம். வளைந்த கிளைகளில் தாழ்ந்த பசுமையான அழகிய நீண்ட இலைகளுடன் இருக்கும் இம்மரம், மழை பெய்யும் பொழுது இலைகளிலிருந்து சொட்டும் நீர்த்துளிகளுடன் கண்ணீர்விட்டு அழுவது போல இருப்பதால், இதற்கு இந்தப் பெயர்.
இதன் மரப்பட்டைகளிலிருந்துதான் மிகவும் மிருதுவான, அதே சமயம் அதிக காலம் உழைக்கக்கூடிய கிரிக்கெட் மட்டை (Cricket Bat), விசில், புல்லாங்குழல், மீன் பிடி தூண்டில், வண்ணத் தூரிகைகள், பொம்மைகள், அம்புகள் போன்றவை செய்யப்படுகின்றன. இது மட்டுமல்ல; இந்த மரம் மருத்துவப் பண்புகளையும் உள்ளடக்கியது. உலகில் மிகப் பாதுகாப்பான வலிநீக்கி, காய்ச்சல், வீக்கம் நீக்கும் மருந்தாகப் பயன்படும் ‘ஆஸ்பிரின்’ மருந்து இம்மரத்தின் இலைகளிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது. இரத்தம் கட்டியாவதைத் தடுக்கும் தன்மை கொண்டதால், ஆஸ்பிரின் மாரடைப்புக்கும் (Heart Attack), புற்றுநோய்க்கும் எதிராகக் குறைந்த அளவில், நீண்ட காலத்துக்குப் பயன்படுத்தப்படுகிறது.
மண் சரிவுகள் ஏற்படாமல் இருக்க மலைப்பிரதேசங்களிலும், சீனா, ஸ்பெயின், அமெரிக்கா, லத்தீன், அமெரிக்கா போன்ற நாடுகளில் வணிக ரீதியாகவும் இவை வளர்க்கப்படுகின்றன. இந்தியாவில் நீலகிரி மாவட்டத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இவை கொண்டு வரப்பட்டன.

[ தினமலர் தளத்தில் வெளியானது ]

வானவில் மரம்

ரெயின்போ யூகலிப்டஸ் (Rainbow Eucalyptus)
தாவரவியல் பெயர்: ‘யூகலிப்டஸ் டெக்லப்டா’ (Eucalyptus deglupta)

பச்சை, சாம்பல் நிறத் தோல்பட்டையை உடைய யூகலிப்டஸ் மரங்களை நாம் பார்த்திருப்போம். பிலிப்பைன்ஸ், இந்தோனேஷியாவைத் தாயகமாகக் கொண்ட யூகலிப்டஸ் மரத்தின் ஓரினம் பல நிறங்களை உடைய மரப்பட்டையைக் கொண்டுள்ளது. கண்ணைக் கவரும் இந்த மரத்திற்கு, வானவில் மரம் என்று பெயர். நீலம், ஊதா, ஆரஞ்சு, அடர் சிவப்பு என பல நிறங்களை உள்ளடக்கிய இந்த மரம் காண்பவர் கண்களைக் கவர்கிறது.
சுமார் 80 மீட்டர் உயரம் வரை வளரும் இந்த மரத்தின் அடிப்பகுதியின் சுற்றளவு 2 மீட்டர் வரை இருக்கும். மற்ற யூகலிப்டஸ் மரங்களைப் போலவே, இதன் பட்டைகள் ஆண்டுக்கு ஒருமுறை உரிந்துவிடும். புதிதாக இளம் பச்சை நிறத்தில் மரப்பட்டை தோன்றும். பச்சை நிறம் மெல்ல மாறத் தொடங்கி, பல வண்ணங்களில் மீண்டும் மாறும். அழகிய பல வண்ணத் தோற்றம் காரணமாக, ஹவாய், கலிஃபோர்னியா, டெக்சாஸ் போன்ற பகுதிகளில் அலங்காரத்துக்காக வளர்க்கப்படுகின்றன.

[ தினமலர் தளத்தில் வெளியானது ]

தின்னக் கூலி வேண்டாம்!

கரும்பு
ஆங்கிலப் பெயர்: ‘சுகர்கேன்’ (Sugarcane)
தாவரவியல் பெயர்: ‘சக்காரம் அபிசினாரம்’ (Saccharum officinarum)
குடும்பம்: போயேசியே (Poaceae)
தாயகம்: இந்தியா, நியூ கினியா

புல் வகையைச் சார்ந்த வெப்ப மண்டல நன்செய் பயிர். நீர் வளம் மிகுந்த வண்டல், கரிசல் மண்ணில் நன்கு வளரும். இலைத்தோகை மாற்றடுக்கில் அமைந்திருக்கும். மலர்க்கொத்து, ஆயிரக்கணக்கான சிறு பூக்களை உடையது. ஆண், பெண் பூக்கள் ஒன்றாக இருக்கும். கிளைகளற்று, தண்டுப்பகுதி உயரமாக வளரும். தண்டின் எடையில் 90 சதவீத சாறு இருக்கும்.

இனப்பெருக்கம்: தண்டுகளைப் பதியனிடுதல்
முதிர்ச்சிக் காலம்: 12 மாதங்கள்
அதிகம் பயிரிடப்படும் இரகங்கள்: சக்காரம் அபிசினாரம் (Saccharum officinarum)
சக்காரம் சைனன்ஸீஸ் (Saccharum sinensis)

அடங்கியுள்ள சத்துகள்: இரும்பு, பொட்டாசியம், மக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், காப்பர், வைட்டமின்கள்
உலகில் 70 சதவீதத்திற்கும் அதிகமான சர்க்கரை கரும்பிலிருந்துதான் தயாரிக்கப்படுகிறது.
பயிரிடும் நாடுகள்: பிரேசில், இந்தியா, இந்தோனேஷியா, பாகிஸ்தான், பெரு, கொலம்பியா, ஆஸ்திரேலியா, கியூபா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 100 நாடுகள்.

சுற்றளவு: 5 செ.மீ.
உயரம் : 4 – 12 அடி இலைத் தோகை
தண்டு நிறம் : இள மஞ்சள், பச்சை, ஊதா, இளஞ்சிவப்பு.

தினமலர் தளத்தில் வெளியானது ]

« Older posts Newer posts »

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑