சூழலை இயற்கையாகவும் அழகாகவும் வைத்துக்கொள்ள வீடுகளில் செடிகள் வளர்க்கிறோம். வீட்டில் செடிகள் வளர்ப்பதில் பல முறைகள் உள்ளன. ஒளி ஊடுருவும் கண்ணாடிக் குடுவைகளுக்கு உள்ளே, சிறிய தாவரங்களை வளர்க்கும் தோட்டக்கலை ‘டெராரியம்’ (Terrarium) எனப்படுகிறது. பல வடிவங்களிலான முழுவதும் மூடியிருக்கும் அல்லது ஒருபுறம் திறந்திருக்கும் கண்ணாடிக் குடுவைகளில் செடிகளை வளர்க்கலாம். மூடிய குடுவையின் சுவர்களில் இருந்து செடிகளுக்குத் தேவையான வெப்பம், ஒளி கிடைக்கும். அதோடு அதிகப்படியான நீர் ஆவியாகி நீர்த்துளிகளாக குடுவையில் படிந்து, பின்னர் மீண்டும் செடிகளுக்கே கிடைக்கும்.
‘டெராரியம்’ முதன்முறையாக 1842இல் இங்கிலாந்தைச் சேர்ந்த ‘நாதனியல் பாக்ஷா வார்ட்’ (Nathaniel Bagshaw Ward) என்னும் பூச்சியியலிலும் தாவர அறிவியலிலும் மிகுந்த ஆர்வமுடைய ஒரு மருத்துவரால் உருவாக்கப்பட்டது. இவர் மூலிகைச் செடிகளை சிகிச்சைக்காக வெளிநாடுகளுக்கு கண்ணாடிப் பெட்டிகளில் வளர்த்து அனுப்பினார். இந்த முறையில் செடிகளை வளர்ப்பது, பின்னர் ஓர் அழகிய தோட்டக்கலையாக மாறி, அனைவராலும் பரவலாக விரும்பப்படும் ஒன்றானது.
கற்றாழை போன்ற சதைப்பற்றுள்ள தாவரங்கள் (Succulents — சுக்குயூலென்ட்ஸ்), ஆர்க்கிட்கள் (Orchids), கள்ளிச்செடிகள் (Cacti — காக்டி), பெரணிகள் (Ferns — ஃபெர்ன்ஸ்) போன்றவை ‘டெராரியம்’ அமைக்க ஏற்ற தாவரங்களாகும். அளவில் மிகச்சிறிய செடிகளே டெராரியம் அமைக்கப் பொருத்தமானவை. குறைந்த சூரியஒளியும், தண்ணீரும் போதுமென்பதால், இவற்றை வீட்டுக்குள்ளும், மேஜைகளிலும், அலமாரிகளிலும் வைத்து எளிதாக வளர்க்கலாம். மணல், செம்மண், இயற்கை உரங்கள், பொம்மைகள், கூழாங்கற்கள் ஆகியவற்றை குடுவையின் அடிப்பகுதியில் பரப்பி, பின்னர் மிகச்சிறிய, மெதுவாக வளரக்கூடிய பொருத்தமான செடிகளை குடுவைக்குள் வைத்து விருப்பம்போல அழகுபடுத்தி நேராகவோ, சாய்வாகவோ, திறந்தோ, மூடியோ இத்தோட்டத்தை வடிவமைக்கலாம்.
நன்கு பராமரிக்கப்படும் குடுவைத் தாவரங்களைப் பல ஆண்டுகளுக்கு வைத்துக்கொள்ளலாம். பராமரிக்க மிகவும் எளிதான இவ்வகை உட்புறத் தோட்டத்தை (Indoor Garden), அகலமான குடுவைகள், கண்ணாடிப் பெட்டிகளில் எளிதில் உருவாக்கலாம். சூழலை அழகாக்கும் கண்ணாடிக் குடுவைச் செடிகளை நீங்களும் உங்கள் வீட்டில் வளர்க்கலாம்.

[ தினமலர் தளத்தில் வெளியானது ]