மரவள்ளி
ஆங்கிலப் பெயர்கள்: Tapioca – டாபியோகா, Cassava – கசாவா
தாவரவியல் பெயர்: Manihot esculenta – மணிஹாட் எஸ்குலேன்ட்டா
வேறு பெயர்கள் : குச்சிக் கிழங்கு, ஏழிலைக் கிழங்கு, ஆல்வள்ளி, குச்சி வள்ளிக் கிழங்கு, மரச்சீனிக் கிழங்கு

மனிதர்களின் உணவுத் தேவையில், கார்போஹைட்ரேட்டைத் (Carbohydrate) தருவதில் உலகின் மூன்றாவது இடத்தில் இருப்பது மரவள்ளிக் கிழங்கு. இது ‘யூபோர்பியேசியே’ (Euphorbiaceae) தாவரக் குடும்பத்தைச் சேர்ந்த செடியின் வேரில் காணப்படும் கிழங்கு. இதன் தாயகம் தென் அமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா. ஆப்பிரிக்காவில் அதிகம் பயிர் செய்யப்படுகிறது.
மரவள்ளிச் செடி 5 அடி உயரம் வரை வளரும். குட்டையாக வளரும் இனங்களும் உண்டு. நீண்ட நடுத்தண்டும், மெல்லிய குச்சிகளால் ஆன கிளைத் தண்டுகளும் காணப்படும். ஒரு காம்பில் ஈட்டி வடிவ இலைகள் ஏழு இருக்கும். வறட்சியைத் தாங்கி வளரக்கூடியது. பூக்கள் சிறியதாக பச்சை, மஞ்சள் கலந்த நிறத்தில் இருக்கும். பச்சை நிறக் காய்கள், காய்ந்ததும் வெடிக்கும் தன்மை கொண்டவை. விதை மூலமும் குச்சிகளைப் பதியனிடுவதன் மூலமும் இது இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
மரவள்ளிக் கிழங்கு, இரு முனைகளும் கூம்பிய வடிவத்தில் உள்ளே இறுக்கமான மாவுப்பொருளைக் கொண்டது. தடிமனான, மண்ணிறம் கொண்ட தோலினால் மூடப்பட்டிருக்கும். மையப் பகுதியில் நீளமான நார் காணப்படும். உட்பகுதி, வெண்மை நிறத்தில் இருக்கும். கிழங்கின் பட்டையில் ‘ஹைட்ரோசையனிக் அமிலம்’ (Hydrocyanic Acid) என்ற நச்சுப்பொருள் உள்ளது. இந்த அளவைப் பொறுத்து, இனிப்பு மரவள்ளி, கசப்பு மரவள்ளி என இரண்டு வகைகள் உள்ளன. முறையாகச் சமைக்கப்படாத கசப்பு மரவள்ளி, ‘கோன்சோ’ (Konzo) என்னும் நரம்பியல் குறைபாடு சார்ந்த நோயை உருவாக்கக்கூடும். கிழங்கில் புரதமோ, பிற சத்துகளோ அதிகம் இல்லை. மாவுச்சத்து, கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் சி ஆகிய சத்துகள் உள்ளன.
வளரும் நாடுகளில், மரவள்ளி மிக முக்கியமான உணவு மற்றும் வாழ்வாதாரப் பயிராகவும் வணிகப் பயிராகவும் உள்ளது. இலைகள் கால்நடைத் தீவனமாகப் பயன்படுகிறது. ஸ்டார்ச், ஜவ்வரிசி, குளூக்கோஸ், டெக்ஸ்ட்ரின், கோந்து, புரூக்டோஸ் சாறு, கெட்டி அட்டைகள் தயாரிக்கும் தொழிற்சாலைகளில் மரவள்ளிக் கிழங்கு முக்கிய மூலப்பொருளாகப் பயன்படுகிறது.

[ தினமலர் தளத்தில் வெளியானது ]