தாவரங்களின் வேர்கள் என்றாலே நிலத்துக்குக் கீழே இருப்பவை என்றுதான் நாம் அறிந்திருப்போம். தாவரங்களின் வேர் (Root – ரூட்) என்பது, நிலத்துக்குக் கீழ் காணப்படும் பச்சையமில்லாத பகுதி ஆகும். ஆனாலும், எல்லா வேர்களுமே நிலத்துக்குக் கீழ் இருப்பதில்லை. சில தாவர வகைகளில் வேரின் பகுதிகள் நிலத்துக்கு மேலும் வளர்வது உண்டு. வேர்களுக்கு தாவரத்தை நிலத்துடன் பிணைத்து வைத்திருத்தல், உணவைச் சேமித்தல், நிலத்திலிருந்து நீரையும் கனிமங்களையும் உறிஞ்சி அவற்றை தாவரத்தின் பிற பகுதிகளுக்குக் கடத்துதல் என நான்கு முதன்மையான செயற்பாடுகள் உண்டு.
வெப்ப மண்டல, மித வெப்ப மண்டல மழைக்காடுகளில் அதிக ஆழத்தில் வேர்கள் செல்லமுடியாத ஆழமற்ற வேர்களைக் கொண்ட பெருமரங்களின் அடித்தண்டிலிருந்து உருவாகும் மிகப்பெரிய தட்டையான வேர் உதைப்பு வேர் அல்லது பலகை வேர் (Buttress Roots – பட்ரெஸ் ரூட்ஸ்) எனப்படும். இவை கிளைகள் அதிகமாக வளர்ச்சியடைந்திருக்கும் பகுதிக்கு எதிர்ப்புறமாக அமைந்து மரத்திற்கு சமநிலையை ஏற்படுத்துகின்றன.
இந்த வேர்கள், மண்ணைத் துளைத்துக் கீழ் நோக்கியும் பக்கவாட்டிலும் சென்று தாவரங்களை நிலத்துடன் உறுதியாகப் பிணைத்து வைக்கின்றன. மழைக்காடுகளில் மண்ணின் ஆழத்தில் வளம் குறைவாகவும் மேற்பரப்பில் அதிகப்படியான உணவூட்டம் கிடைப்பதாலும் உதைப்பு வேர்கள் மண்ணில் மேற்புறமாகவே பரவி அதிக அளவில் சத்துகளை சேகரிக்கின்றன. பலகை வேர்கள் இல்லாத மரங்களின் ஆதார சக்தி (Anchorage Strength – அன்கோரேஜ் ஸ்ட்ரென்த்) 4.9 kNm (Kilo Newton Meter) என்றால் பலகை வேர்கள் உள்ள மரங்களின் ஆதார சக்தி, அதைக்காட்டிலும் இருமடங்காக 10.6 kNm என்ற அளவில் இருக்கும்.
அருகிலுள்ள மரங்களின் வேர்களுடன் உதைப்பு வேர்கள் பின்னிப் பிணைந்து வலை போன்ற அமைப்பை ஏற்படுத்திக்கொண்டு அருகிலுள்ள மரங்களையும் பாதுகாக்கின்றன. இவை மண்ணுக்கு மேல் 80 அடி தூரமும், 15 அடி உயரமும் மண்ணுக்குக் கீழ் 30 அடி தூரம் வரையிலும் வளரக்கூடியது. மிகவும் தடித்து உயரமான, நீளம் அதிகமான அலையலையாக படர்ந்தவைகள் என இவற்றில் இரண்டு வகைகள் காணப்படுகின்றன. மழைக்காடுகளில் பட்டுப்பருத்தி, அத்தி மற்றும் மருத மரங்களில் அதிகமாக இவ்வகை பலகை வேர்கள் காணப்படும்
Month: March 2021 (Page 3 of 3)
தாவரங்களின் ஆதாரம் வேர்கள். பூமிக்கு அடியில் மட்டுமல்ல; பூமிக்கு மேலேயும், தாவரத்தின் பிற பாகங்களிலும் தோன்றும் வேர் வகைகளைப் பற்றி அறிந்துகொள்வோம்.
வேறிடத்துப் பிறப்பவை (Adventitious – அட்வென்டிடியஸ்)
தண்டு, இலை, கிளை, அடி மரம் ஆகிய பகுதிகளில் தோன்றுபவை.
கரும்பு
முண்டு வேர்கள் (Stilt – ஸ்டில்ட்)
பிரதான தண்டில் இருந்து தோன்றி, தாவரத்தை நிலைநிறுத்த உதவுபவை.
மக்காச்சோளம்
தாங்கு வேர்கள் (Prop – பிராப்)
கிளைகளில் உருவாகி, கீழ்நோக்கி வளரும். நிலத்தில் ஊன்றி கிளைகளைத் தாங்கும்.
ஆலமரம்
மூச்சு வேர்கள் (Respiratory – ரெஸ்பைரேட்டரி)
ஊன்று வேர்களில் இருந்து செங்குத்தாக நீர் மட்டத்திற்கு மேலும், நிலத்திலும் வளர்பவை.
அலையாத்தித் தாவரங்கள்
அண்டை வேர்கள் (Root Buttresses – ரூட் பட்ரெஸ்ஸஸ்)
பெரு மரங்களில், பட்டையாகத் தடித்து சுவர் எழுப்பியது போல உயர்ந்து, சுற்றிலும் வளர்பவை.
மருத மரம் (Buttress Tree)
மிதவை வேர்கள் (Floating – ஃப்ளோட்டிங்)
நீர்த் தாவரங்கள் மிதக்க உதவும். மென்மையாகவும், பருத்தும் காணப்படும். காற்று நிறைந்தவை.
ஆகாயத் தாமரை
உறிஞ்சு வேர்கள் (Haustorial – ஹாஸ்டோரியல்)
தொற்றிப் படரும் தாவரங்களில் காணப்படும். கொடிகளுக்குத் தேவையான நீர், உணவு போன்றவற்றை உறிஞ்சும் வேர்கள்.
கஸ்குட்டா (Cuscutta)
ஒட்டு வேர்கள் (Clinging – கிளிங்கிங்)
மரங்களில் தொற்றிப் படரும் தாவரங்களில் காணப்படும். மரப்பட்டைகளின் இடுக்குகளில் பதிந்திருக்கும்.
மிளகுக் கொடி
உறிஞ்சு கவச வேர்கள் (Velamen – வெலாமென்)
செடியின் அடியிலிருந்து உண்டாகி தொங்கிக்கொண்டு, காற்றில் உள்ள ஈரத்தை எடுத்துக்கொள்ளும்.
ஆர்க்கிட் தாவரங்கள்
2050-ஆம் ஆண்டில் உலகின் மக்கள்தொகை, 900 கோடியாகப் பெருகும் என்பது ஒரு கணிப்பு. அந்தச் சூழலில், உணவுப் பாதுகாப்பு மிக முக்கியமான ஒன்று. உலகில் வாழும் அனைத்து மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்ய, வேளாண்துறையால் மட்டும் முடியாது. எனவே, பிற வழிகளின் மூலம் மாற்று உணவைத் தேடவேண்டிய கட்டாயத்தில் உலகம் இருக்கிறது. அப்படிப்பட்ட மாற்று உணவாகப் பூச்சி உணவுகள் தற்போது பிரபலமடைந்து வருகின்றன.
தாய்லாந்து, சீனா, ஜப்பான், பிரேசில், மெக்சிகோ, கானா, வியட்நாம் போன்ற நாடுகளிலும், ஆஸ்திரேலியப் பழங்குடிகள் மத்தியிலும் பூச்சியை உண்ணும் பழக்கம் அதிக அளவில் காணப்படுகிறது. தமிழகக் கிராமப்புறங்களில்கூட ஈசல் பூச்சிகளை வறுத்து உண்ணும் வழக்கம் உள்ளது.
மனிதர்கள், பூச்சிகளை உணவாக உட்கொள்வது ‘என்டமோபாஜி’ (Entomophagy) எனப்படுகிறது. 1,000க்கும் மேற்பட்ட உண்ணப்படும் பூச்சிகளின் வரிசையில், வெட்டுக்கிளி, எறும்பு, வண்டு, பட்டுப்புழு, சிலந்தி, தேள், தேனீ, கரப்பான் பூச்சி போன்றவை உள்ளன.
பூச்சிகள், இயற்கையிலேயே அதிகப்படியான புரதம், கொழுப்புச் சத்துகளைக் கொண்டுள்ளன. இவை விரைவாக இனப்பெருக்கம் ஆகின்றன. பூச்சிகளை மனிதர்கள் உட்கொண்டாலும், சூழலியல் சமநிலை குலையாது. இன்னும் 30 ஆண்டுகளில், ‘பறக்கும் புரதங்கள்’ என அழைக்கப்படும் பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணையும் என்கின்றனர் பூச்சியியல் வல்லுநர்கள்.
தெரிந்து கொள்வோம்!
1. பூச்சியியல் ஆய்வாளரை, ஆங்கிலத்தில் இப்படி அழைப்போம் ………………………
2. உலகின் நீளமான மீன் எது? ……………………
3. மணிப்பூர், மிசோரம் மாநிலங்களின் மாநிலப் பறவை எது? ………………
4. பறக்க முடியாத பெரிய பறவை எது? ………………………
விடைகள்:
1. என்டமாலஜிஸ்ட் Entomologist-
2. ஜயன்ட் ஓர் மீன் (Giant Oar Fish). நீளம்: 110 அடி
3. மிஸஸ். ஹியூம்ஸ் பீஸன்ட் (Mrs. Hume’s pheasant)
4. நெருப்புக் கோழி (Ostrich)
சமையலில் மிக முக்கியமான பொருள் கடுகு (Mustard – மஸ்ட்டர்ட்). சிறிய செடியாக வளரும், கடுகுத் தாவரத்தில் இருந்து பெறப்படும் விதையே கடுகு. தாவரக் குடும்பம் ‘பிராசிகேசியே’ (Brassicaceae). ஐரோப்பாவைத் தாயகமாகக் கொண்டது.
கடுகுச் செடி நீளமான இலைகளுடன், மென்மையான தண்டுப் பகுதி கொண்டது. 90 செ.மீ. முதல் 4 அடி உயரம் வரை வளரும். பூக்கள் மஞ்சள் நிறத்தில் சிறியதாக இருக்கும்.
‘சிலிகுவா’ (Siliqua) என்று அழைக்கப்படும் பச்சைக் காய்களில் கடுகு விதைகள் பொதிந்து இருக்கும். 150 நாட்களில் செடி வளர்ந்து, முதிர்ந்து அறுவடைக்குத் தயாராகும். சமையலில் கடுகின் பயன்பாடு 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இருந்துள்ளது.
வெண்கடுகைவிட (Brassica alba – பிராசிகா அல்பா) கருங்கடுகில் (Brassica nigra – பிராசிகா நிக்ரா) காரம் மிகுந்து இருக்கும். கடுகைச் சூடேற்றும்போது, அதன் மேல் உள்ள தோல் அகன்று ‘மைரோஸினேஸ்’ (Myrosenase) எனப்படும் மணமுள்ள நொதியம் (enzyme) வெளிப்படுகிறது. இதுவே கடுகின் தனிப்பட்ட சுவைக்குக் காரணம்.
கடுகு அதிக கலோரி கொண்டது. 100 கிராம் கடுகில், 508 கலோரி கிடைக்கும். இதில் செலினியம், மெக்னீசியம், கால்சியம், மாங்கனீஸ், ஒமேகா 3 கொழுப்பு அமிலம், இரும்பு, புரதம், நார்ச்சத்து போன்ற சத்துகள் உள்ளன. எளிதில் வளர்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்தும், கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனைக் குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு. இந்தியக் கடுகுச்செடியின் (Brassica juncea) கீரை, உணவாகப் பயன்படுகிறது. கடுகு எண்ணெய் சமையலில் பயன்படுத்தப்படுகிறது.
கடுகு அருங்காட்சியகம்
அமெரிக்காவில் உள்ள ‘மிடில்டான்’ (Middleton) என்ற இடத்தில் கடுகு அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. 1992இல் அமைக்கப்பட்ட இந்த அருங்காட்சியகத்தில், உலகம் முழுவதும் உள்ள 70க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து பெறப்பட்ட 6,090 கடுகு வகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் ஆகஸ்ட் முதல் சனிக்கிழமை ‘தேசிய கடுகு தினம்’ (National Mustard Day) கொண்டாடப்படுகிறது.
நரம்பு வடிவ மலர்ச் செடி
ஆங்கிலப் பெயர் : ‘ஸ்கெலிடன் ஃபிளவர்’ (Skeleton Flower)
தாவரவியல் பெயர் : ‘டைபிலியா கிரேயி’ (Diphelleia Grayi)
தாவரக் குடும்பம் : ‘பெர்பெரிடாசியே’ (Berberidacea)
மழையில் நனைந்தால் தனது வெள்ளை நிறத்தை இழந்து கண்ணாடி போன்று மாறிவிடும் பூக்களைக் கொண்ட செடி வரி ‘வடிவ மலர்ச்செடி’ எனப்படுகிறது. ஜப்பான், சீனா, அமெரிக்காவின் அப்பலாச்சியன் மலைப்பகுதி ஆகிய மூன்று இடங்களில் மட்டுமே காணப்படுகிறது. குளிர் நிறைந்த மலைப்பகுதிகளே இது வளர்வதற்கு ஏற்ற சூழலைத்
தருகிறது. கிழங்குகளில் இருந்து முளைத்து வளரும் இந்தத் தாவரத்தின் இலை அகலமாக குடைபோல இருக்கும். ஒரு மீட்டர் அகலத்துக்கு இலைகள் பரவியிருக்கும். செடி 40 செ.மீ. உயரம் வரை வளரும்.
மே முதல் ஜூலை வரை மலர்களைத் தோற்றுவிக்கும். செடியின் நுனியில் கொத்தாக 6 மெல்லிய இதழ்கள் கொண்ட சிறிய வெள்ளை நிறப் பூக்கள் பூக்கும். இந்தச் செடியின் பழங்கள் அடர் நீல நிறத்தில் இருக்கும். பூவின் இதழ்கள் மழையில் நனைந்தால் நிறமிழந்து கண்ணாடி போல ஆகி, பின் ஈரம் உலர்ந்த பின் மீண்டும் வெள்ளை நிறம் தோன்றும். நிறம் மறையும்போது, பூ இதழ்களின் நரம்பு அமைப்பு கண்ணாடிக்குள் தெரியும் மெல்லிய எலும்புகள் போலத் தெரிவதால் இதற்கு ‘ஸ்கெலிடன் ஃபிளவர்’ (Skeleton Flower) என்று பெயர். பூ இதழ்களின் செல்கள் நெருக்கமாக இல்லாமல் இடைவெளியுடன் அமைந்திருப்பதே இப்படி நிறமிழக்கக் காரணம். மழைக்காலங்களில் இந்தச் செடியின் பூக்கள் பனிக்கட்டியால் செய்ததுபோல மிக அழகாகக் காணப்படும். இந்தத் தன்மை காரணமாக, ‘தாவரங்களில் பச்சோந்தி’ (Chameleon of the Woods – கேமலியேன் ஆஃப் தி வுட்ஸ்) என்றும் இந்தச் செடி அழைக்கப்படுகிறது.