2050-ஆம் ஆண்டில் உலகின் மக்கள்தொகை, 900 கோடியாகப் பெருகும் என்பது ஒரு கணிப்பு. அந்தச் சூழலில், உணவுப் பாதுகாப்பு மிக முக்கியமான ஒன்று. உலகில் வாழும் அனைத்து மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்திசெய்ய, வேளாண்துறையால் மட்டும் முடியாது. எனவே, பிற வழிகளின் மூலம் மாற்று உணவைத் தேடவேண்டிய கட்டாயத்தில் உலகம் இருக்கிறது. அப்படிப்பட்ட மாற்று உணவாகப் பூச்சி உணவுகள் தற்போது பிரபலமடைந்து வருகின்றன.
தாய்லாந்து, சீனா, ஜப்பான், பிரேசில், மெக்சிகோ, கானா, வியட்நாம் போன்ற நாடுகளிலும், ஆஸ்திரேலியப் பழங்குடிகள் மத்தியிலும் பூச்சியை உண்ணும் பழக்கம் அதிக அளவில் காணப்படுகிறது. தமிழகக் கிராமப்புறங்களில்கூட ஈசல் பூச்சிகளை வறுத்து உண்ணும் வழக்கம் உள்ளது.
மனிதர்கள், பூச்சிகளை உணவாக உட்கொள்வது ‘என்டமோபாஜி’ (Entomophagy) எனப்படுகிறது. 1,000க்கும் மேற்பட்ட உண்ணப்படும் பூச்சிகளின் வரிசையில், வெட்டுக்கிளி, எறும்பு, வண்டு, பட்டுப்புழு, சிலந்தி, தேள், தேனீ, கரப்பான் பூச்சி போன்றவை உள்ளன.
பூச்சிகள், இயற்கையிலேயே அதிகப்படியான புரதம், கொழுப்புச் சத்துகளைக் கொண்டுள்ளன. இவை விரைவாக இனப்பெருக்கம் ஆகின்றன. பூச்சிகளை மனிதர்கள் உட்கொண்டாலும், சூழலியல் சமநிலை குலையாது. இன்னும் 30 ஆண்டுகளில், ‘பறக்கும் புரதங்கள்’ என அழைக்கப்படும் பூச்சிகளை உணவாக உட்கொள்ளும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணையும் என்கின்றனர் பூச்சியியல் வல்லுநர்கள்.
தெரிந்து கொள்வோம்!
1. பூச்சியியல் ஆய்வாளரை, ஆங்கிலத்தில் இப்படி அழைப்போம் ………………………
2. உலகின் நீளமான மீன் எது? ……………………
3. மணிப்பூர், மிசோரம் மாநிலங்களின் மாநிலப் பறவை எது? ………………
4. பறக்க முடியாத பெரிய பறவை எது? ………………………
விடைகள்:
1. என்டமாலஜிஸ்ட் Entomologist-
2. ஜயன்ட் ஓர் மீன் (Giant Oar Fish). நீளம்: 110 அடி
3. மிஸஸ். ஹியூம்ஸ் பீஸன்ட் (Mrs. Hume’s pheasant)
4. நெருப்புக் கோழி (Ostrich)
Leave a Reply