உலகின் மிகத்தரமான பூண்டு உற்பத்தி செய்யும் கலிஃபோர்னியாவின் கில்ராய் (Gilroy) நகரம் ‘உலகின் பூண்டுத் தலைநகரம்’ என்றழைக்கப்படுகிறது. ‘கில்ராய் பூண்டுகள்’ உலகப் பிரசித்தம் பெற்றவை. பூண்டு சாகுபடிக்குத் தேவையான வளமான நிலமும் பொருத்தமான காலநிலையும் இருப்பதால் இங்கு மட்டுமே ஆண்டுக்கு சுமார் 30 கோடி கிலோ அளவுக்குப் பல வகைப்பட்ட பூண்டுகள் விளைவிக்கப்படுகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் கடைசி வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு நாட்களில் இங்கு நடைபெறும் பூண்டுத் திருவிழா, அமெரிக்காவில் நடக்கும் உணவுத் திருவிழாக்களிலேயே மிகப்பிரம்மாண்டமானதாகும். இசை நிகழ்ச்சி, பூண்டு அழகிப் போட்டி, பேச்சுப்போட்டி, சமையல் போட்டி, கைவினைப்பொருட்கள் விற்பனை, பூண்டு வகைகளின் கண்காட்சி, விற்பனை என பூண்டுத் திருவிழா பல்வேறு அம்சங்களுடன் களைகட்டும்.
பூண்டுத் திருவிழா 1979ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழாவின் முக்கிய அம்சம் பூண்டு கலந்த விதவிதமான உணவு வகைகள் விற்பனை செய்யப்படுவதாகும். உலர்ந்த பூண்டுச்செடியின் இலைகளில் தயாரிக்கபட்ட இருக்கைகள், கைவினைப்பொருட்கள், பூண்டு வடிவக் கூடாரங்கள், பொம்மைகள், பூண்டு பலூன்கள் என எங்கெங்கிலும் பூண்டு மயம்தான்! அத்தனை பார்வையாளர்களுக்கும் இலவசமாக பூண்டு ஐஸ் கிரீம் வழங்கப்படும்.
திருவிழா நடக்கும்போது புகழ்பெற்ற சமையல் நிபுணர்கள், உணவு தயாரிக்கும் முறைகளை செய்து காட்டும் ‘தழல் சமையல்’ (Flame Cooking) இங்கு மிகப்பிரபலம். ஆண்டுதோறும் ஏறக்குறைய ஒரு கோடிப் பார்வையாளர்கள் உலகம் முழுவதிலிருந்து இதில் கலந்துகொள்கின்றனர், பார்வையாளர்களுக்கும் பூண்டுச் சமையல் போட்டி நடத்தப்பட்டு பரிசுகளும் பட்டங்களும் வழங்கப்படும். இவ்விழாவில் தயாரிக்கப்படும் உணவுகளுக்குத் தேவையான பொருட்கள் அந்தப் பகுதியில் பயிரிடப்படும் உணவுப் பயிர்களிலிருந்தே தயாரிக்கப்படும்.
நம் நாட்டிலும் இதுபோல ஈரோடு மஞ்சள், சேலம் மாம்பழம், பண்ருட்டி பலாப்பழம், காஷ்மீர் குங்குமப்பூ என பல சிறப்புகள் இருக்கிறதல்லவா? அவற்றிற்கும் நாம் இப்படித் திருவிழாக்கள் ஏற்பாடு செய்து அவற்றை உலகம் முழுவதும் பிரபலமாக்க முயற்சி செய்யலாம்.

[ தினமலர் தளத்தில் வெளியானது ]