சமீபத்தில் நெடும்பயணமொன்று சென்றிருந்தேன். பயணத்தில் வழக்கம் போல யூ ட்யூபில் பாடல்கள் கேட்டுக் கொண்டிருக்கையில் சுமித்ரா சிவகுமார் டூயட் பாடலான ‘’அடடட மாமரக்கிளியே’’ வும் பார்த்தேன். அந்த பாடல் முன்பே பலமுறை கேட்டிருக்கிறேன் எனினும் காட்சியாக பார்ப்பது அதுவே முதன் முறை.
முந்திரித்தோப்பென்று பின்புலத்தில் இருக்க பின்கொசுவ சேலையை கணுக்கால் தெரிய கவர்ச்சியாக கட்டிக்கொண்டு ஏராளமான எனர்ஜியுடன் சுமித்ரா துள்ளிக்குதித்து ஆடிவருகையில் சிவக்குமார் ’’எனெக்கென்ன’’ என்னும் பாவனையில் மரத்தடியில் அசுவராஸ்யமாக கல்லைப் பொறுக்கி வீசிக்கொண்டு உட்கார்ந்திருக்கிறார்.
பொதுவாகவே சிவகுமார் சாருக்கு காதல் காட்சிகள் டூயட்டுகள் என்றால் எட்டிக்காய்தான்.
காதலை முகத்தில், உடல்மொழியில் காண்பிப்பது என்பது அவருக்கு பெருவலிதான். அதுபோன்ற சமயங்களில் அவர் முகத்தில் பள்ளிக்கு இஷ்டமில்லாமல் புறப்படும் சிறுவனின் அல்லது PMS வேதனையில் இருக்கும் இளம் பெண்ணின் முகபாவனை இருக்கும்.(PMS ன்பொருளை கூகிள் செய்து பார்த்துக்கொள்ளுங்கள்).
சரி அவருக்குத்தான் பிரியமில்லையே, இந்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் அவரை விட்டுவிடலாமல்லவா? விடமாட்டார்கள் காதலியுடன் நெருக்கமாக காதலன் இல்லாவிட்டால் அது எப்படி காதல் டூயட் ஆகும்? தமிழ் சினிமாவுக்கென்று ஒரு மரபிருக்கிறதல்லவா?
நெருக்கமாக போனால் சிவகுமாருக்கு இன்னும் சங்கடம் எனவே அவர் மையமாக காதலியின் கழுத்தோரம் கடிக்கப்போவது போல் பாசாங்கு செய்வார் அதுவே சிவகுமாரின் அதிகபட்ச நெருக்கக் காட்சி, எனக்கென்னவோ அக்காட்சிகளெல்லாமே ஆண் வேடமிட்டிருக்கும் வேம்பையர் வவ்வால்கள் இளம் பெண்களை மயக்கி கொஞ்சுவது போல போய் கழுத்தை கடித்து ரத்தம் குடித்துக் கொல்லுமே அதுதான் நினைவுக்கு வரும்,சிவகுமார் சாருக்கு எங்கள் வீட்டில் செல்லப்பெயர் வேம்பையர் பேட்!
சுமித்ரா தண்டை அணிந்த வெறுங்காலில் மணலில் புதையப் புதைய குதித்தாடி வந்து சிவகுமாரை வம்படியாய் இழுத்துச்செல்கிறார். (தயாரிப்பு சுமித்ராவோ?)
வேறு ஏதோ ஒரு மரத்தில் அமர்ந்திருக்கும் ஒரு கிளியை அவுட் ஆஃப் ஃபோகஸில் பார்த்து ’’மாமரக்கிளியே’’ என்று துவக்கத்திலேயே தாவரவியல் தவறு செய்கிறார் சுமித்ரா.
மணலில் ஸ்டெப்ஸ் போடும் கஷ்டத்துடன் கூடுதல் கஷ்டமாக சிவகுமாரையும் இழுத்துச்செல்கிறார் அவரோ கையை வெடுக்கென்று உதறி விலக்கி தப்பித்து தப்பித்து வேறு திசையில் போகிறார்.//உன்னை நினைச்சே மஞ்சள் அரைச்சேன் மாசக்கணக்கா பூசிக்குளிச்சேன்// என்னும் வரிகளில் மட்டும் மஞ்சள் தெரிகிறதா என்று சுமித்ராவின் முகத்தை கொஞ்சமாக ஆராய்கிறார்.
‘’கிட்ட வாயேன், தொட்டுப்போயேன், உன்னை நான் தடுக்கலியே தடுக்கலியே ‘’ என்று ஹஸ்கியாக பாடிக்கொண்டே சுமி அவரை இழுத்து முகத்துக்கருகில் வைத்துக் கொள்ளும் போது ‘’அப்படின்னா’’ என்னும் பாவனையுடன் வெறித்துப்பார்த்துக்கொண்டிருக்கிறார்.
அந்த படத்தை பார்க்கவேண்டும். ஏன் இத்தனை காதலை, நேரடியான அழைப்பை இவர் உதாசீனம் செய்து வயிற்றுவலிக்காரரைபோல் உட்கார்ந்திருக்கிறார்?
சுமித்ரா கொஞ்சம் கூடுதல் புஷ்டியாக இருப்பதாலா ? சே சே இருக்காது அப்போதெல்லாம் அதுதானே அழகு தமிழ்சினிமாவில்.
கதையில் அவருக்கு வேலை கிடைக்காத விரக்தியா? கிராமத்து கதைக்களமாச்சே தோப்பும் துரவுமாக இருக்குமிடத்தில் வேலையென்ன அப்படி பிரச்சனை?
அல்லது சுமித்ராவுக்கு பிளட் கேன்சரா? இல்லியே கமல் சாருக்கு பிளட் கேன்சர் வந்து ஸ்ரீதேவியை மறுக்கும் வாழ்வே மாயத்துக்கு பிறகுதானே தமிழ் சினிமாவுக்கே கேன்சர் வந்தது. இது அதற்கு முந்தினதாச்சே? மேலும் அப்போதுதான் பிடுங்கின கிழங்கு போலிருக்கும் சுமித்ராவுக்கு கேன்சரா? வாய்ப்பேயில்லை
கடற்கரை லொகேஷனுக்கு மாறி மிகக் கவர்ச்சியான அசைவுகளுடன் ஆடும் சுமியை முற்றாக புறக்கணித்து ஒரு பெரும் பாறைமீது சாய்ந்து தேமேவென்று அமர்ந்திருக்கும் அவரை நோக்கி //அட பரிசம்தான் போட்டாச்சு பாக்கு மாத்தியாச்சி’’ என்று வெட்கம் மேலிட சுமி பாடியதும் சிவகுமார் ‘’அதிர்ந்து என்னது? பரிசமா?போட்டாச்சா’’ என்று திகைக்கிறார்
என்ன அநியாயக்கொடுமை ஒரு மனுஷனுக்கு இதைக் கூட சொல்ல மாட்டீங்களா? என்று எனக்கும் கோபமாகத்தான் இருந்தது.
ஆனாலும் அடுத்தகாட்சியில் தமிழ் சினிமாவின் மரபுக்குட்பட்டு வேதனை வழியும் முகத்துடனேயே சுமித்ராவை அணைத்து கொஞ்சம்போல் வாசனை பார்த்துவிட்டு பின்னர் விலகிக்கொள்கிறார் என்னதான் கதாநாயகனுக்கு வேதனை இருக்கட்டும் படம் ஓடனுமே?
அடுத்த ஸ்டேன்சாவிலும் சுமியின் அத்தனை துள்ளலுக்கும் எதிர்வினையேது மில்லாமல் எதிலிருந்தோ தப்பிப்பதை குறித்த தீவிர ஆலோசனை செய்யும் பாவனையிலேயேதான் சிவகுமார் இருக்கிறார்.
கோரியோகிராபி யாரென்று தெரியவில்லை ஒரு சில நளினமான அசைவுகள் சுமித்ராவுக்கு இருந்திருக்கிறது எனினும் அவரது சதைத் திரட்சியை தாண்டி அவை வெளிப்பட வாய்ப்புகள் இல்லாமல் போய்விட்டது.
அந்த சேலைக்கட்டு படம் முழுக்கவேவா அல்லது பாடலுக்கெனெ பிரத்யேக உடையலங்காரமா என்றும் தெரியவில்லை. சிட்டுக்குருவி என்னும் அப்படத்தை அவசியம் இந்த காரணங்களை அறிந்து கொள்ளும் பொருட்டாவது பார்க்க வேண்டும். ராஜாவின் இசை மட்டுமே மாபெரும் ஆறுதல் இப்பாடலில்,
சிவகுமாரின் காதல் கஷ்டங்களுக்கென ’’மயிலே மயிலே உன் தோகை எங்கே’’ பாடலையும் பார்க்கலாம். அதிலும் சுமித்ராதான் இவருடன். துவக்கத்திலேயே நீலத்தில் வெள்ளை பூப்போட்ட சட்டையும் பெல்பாட்டம் பேண்டுமாக மெல்ல அடிமேல் அடிவைத்து இரையை நெருங்கும் உச்சநிலை ஊனுண்ணியைபோல சுமித்ராவை நோக்கி வருவார். எப்படியும் சிவக்குமாரை முத்தம் கொடுக்க சொல்ல முடியாது எனவே நிழல்கள் முத்தமிடுகின்றன. காட்சி மாறி, காதல்பொங்க நின்றிருக்கும் சுமித்ராவை கண்டுகொள்ளாமல் பூத்திருக்கும் தீக்கொன்றைகளில் ஒன்றிலிருந்து ஒன்றிற்கு மார்ச் பாஸ்ட் செய்வார்.
அடுத்த காட்சியில் டிபிகல் வேம்பையர் கழுத்துக்கடி இருக்கும். பொன்னுமூட்டை தூக்கியும், குடல் வாயில் வரும்படி தலைகீழாக தூக்கிசுற்றியும் சுமித்ராவை ஒருவழிபண்ணி பாடல் முடியும். சுமித்ராவின் மாராப்பை உருவும் காட்சியிலும் எப்படியோ துணிச்சலை வரவழைத்துக்கொண்டு நடித்திருப்பார். வெள்ளைச்சட்டையில் வருகையில் அப்படியே பருத்திவீரன் கார்த்தி தெரிகிறார். ஜென்ஸியின் குரல் தேனாய் வழியும் பாடல்களில் இதுவுமொன்று