லோகமாதேவியின் பதிவுகள்

Month: June 2023 (Page 2 of 2)

தாவரக்குருடு

காக்கை கூடு பதிப்பகம் சமீபத்தில் ‘செங்கால் நாரை விருது’க்கான போட்டியை அறிவித்து இருந்தது! அவற்றில் முதல் பரிசுக்காக தேர்வு செய்யப்பட்ட சுற்றுச் சூழல் சார்ந்த எனது கட்டுரை:

நம் தேவைகளுக்கான தாவரங்களை குறித்த அடிப்படை அறிவை பெற்றிருக்காததே தாவரக் குருடாகும்! நம்மை சுற்றியுள்ள தாவரங்கள், மரங்களை கவனிக்காதது, நமக்கும் அவற்றுக்குமான உறவை உணராமல் அழிப்பது! இவற்றை பயன்படுத்தாமலும், பாதுகாக்காமலும் வாழ்ந்து மடிகிறோம். இதை அறிந்தால், அரிய நன்மைகள்! 

உலகின் மொத்த நிலப்பரப்பில் 2.4 சதவீதத்தைத்தான் இந்தியா கொண்டிருக்கிறது எனினும்   இங்கு மட்டுமே  47,513 தாவர வகைகள் இருக்கின்றன. அதாவது உலகில் இதுவரை அறியப்பட்ட சுமார் 0.4 மில்லியன் தாவரங்களில், 11.4% இந்தியாவில் இருக்கின்றது.இவற்றில் 28% இந்தியாவில் மட்டுமே காணப்படும் எண்டெமிக் வகையை சேர்ந்தவை.

உலகின் மலரும் வகை தாவரங்களில் 6% இந்தியாவில் இருக்கிறது.  பலவகையான அரிய தாவரங்களை கொண்டிருப்பதால் உலகின் மூலிகைப் பூங்கா என்று அழைக்கப்படும் இந்தியாவின் வளங்களிலிருந்து  பல தாவரங்களை  கடந்த காலங்களில் முழுவதுமாக இழந்திருக்கிறோம் மேலும் பல அரிய தாவரங்கள்  மிக வேகமாக அழிந்துகொண்டிருக்கின்றன.

நகரமயமாக்கல், காடுகள் அழிக்கப்பட்டு விவசாய நிலங்களாவது சுரங்கங்கள் உள்ளிட்ட காரணங்களினால் மட்டுமல்லாது தாவரகுருடினாலும் இவை அழியும் அபாயத்தில் இருக்கின்றன

கடந்த மாதம் NBR  எனப்படும் நீலகிரி உயிர்கோளத்தின் அரிய தாவரங்களை குறித்த ஆய்வுக்காக சென்றிருக்கையில் நீலகிரி மலைப்பாதை ஒரு பிரமுகரின் வரவுக்கென தூய்மைப் படுத்த பட்டுக்கொண்டிருந்தது. சாலையின் இருபுறங்களிலும் இருந்த புதர்ச்செடிகள் மற்றும் சிறுசெடிகளனைத்தும் இயந்திரங்களால் அப்புறப்படுத்தப்பட்டன. இந்தியாவெங்கிலும் இப்படி பலநூறு தாவரங்கள்  தூய்மைப்படுத்துதல் என்னும் பெயரில் நிரந்தரமாக அழிக்கப்படுகின்றன.

அழிக்கப்படும் அரிய மூலிகைத் தாவரங்கள்!

அப்படி அகற்றப்படும் பல்லாயிரக்கணக்கான சிறு செடிகளில்   இன்னும் கண்டுபிடித்திருக்க பட்டிருக்காத புற்றுநோய்க்கான மருந்தளிப்பவைகளோ கொரோனா போன்ற பெருந்தொற்றிற்கு சிகிச்சையளிக்கும் மூலிகைகளோ இருக்கக்கூடும். மிகச்சாதாரணமாக சுற்றுப்புறங்களில் காணப்படும் நித்யகல்யாணி செடிகளிலிருந்துதான் புற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் பல மருந்துகள் கிடைக்கின்றன

பல வளர்ந்த நாடுகளில் களைச்செடிகள் அரசுடமையாக்க பட்டிருக்கின்றன. சிங்கப்பூர் உள்ளிட்ட பல நாடுகளில் எந்த செடியையும் யாரும்  அனுமதியின்றி பறிக்கவோ, அகற்றவோ, பயன்படுத்தவோ முடியாது இப்படி கடுமையான சட்டங்கள் மூலம் தாவரங்கள் பாதுகாக்கப்படவேண்டிய வந்ததே தாவரக் குருட்டுத்தன்மையால்தான்.

ஜேம்ஸ் ஹெச்.வாண்டர்ஸி, எலிசபெத் சக்சீலர்

1999ல் தான்  J. H. Wandersee &  E. E. Schussler என்னும் இரு அமெரிக்க தாவரவியலாளர்களால் தாவர குருடு ’’plant blindness’’ என்னும் சொல் உருவாக்கப்பட்டது.

இப்போதைய விரைவான வாழ்க்கையில் நிலவோ மழையோ வெயிலோ நம்மை கடக்கும் சிறு பறவைகளோ எதையும் கவனிக்க நேரமில்லாதவர்களாகிப்போன நம்மில் பலரும் மிக நெருக்கடியான சாலை போக்குவரத்தில் பல மணி நேரம் காத்திருக்கும் போது கூட சாலையோரங்களில் நிழலும் குளிர்ச்சியும் அளிக்கும், அழகிய மலர்களுடன் கண்ணைக்கவரும் படி நின்றிருக்கும் பலவிதமான மரம், செடி கொடிகளை கவனிப்பதில்லை.

சாலை விரிவாக்கத்திற்காக காவு கொடுக்கப்படும் மரங்கள்!

சாலை விரிவாக்கத்தின் பேரில் பெருமரங்கள் இயந்திர ரம்பங்கள் கொண்டு வெட்டி அகற்றப் படுகையிலும் அங்கே சாலையை கடக்க காத்திருப்போர்  பல வருடங்கள் வளர்ந்து பயன் தந்து கொண்டிருந்த மரங்களை இழப்பதைக் குறித்தும், அங்கு நடப்பது  படுகொலைக்கு சமம் என்பதையும் உணர்வதில்லை. மரங்களும் உயிருள்ளவைதான்.அவை ரத்தம் பெருக்கி கதறுவதில்லை எனவே அவற்றை அழிப்பது யார் கவனத்துக்கும் வருவதில்லை.

கோடைக்காலங்களில் குடிநீர் பற்றாக்குறைக்கு  காலிக்குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டு இருக்கும் பலரில் ஒருவர் கூட பல நூறு மரங்கள் வெட்டப்படுகையில் அதை கண்டிக்க நினைப்பதில்லை. ஏனெனில் குடிநீருக்கும் மரங்களின் எண்ணிக்கைக்கும் இருக்கும் நேரடி தொடர்பு தெரியாத அளவிற்கு  தாவர குருடாக இருப்பதுதான்

தாவர குருடு என்பது நாம் முழுக்க முழுக்க நமது அடிப்படை தேவைகளுக்கு சார்ந்திருக்கும் தாவரங்களை குறித்த அடிப்படை அறிவை பெற்றிருக்காதது, நம்மை சுற்றி இருக்கும் தாவரங்களை கவனிக்காதது, முக்கியத்துவத்தை உணராமல் அழிப்பது, அவற்றை பாதுகாப்பதன் அவசியம் அறியாதது ஆகியவையே…!

நாமனைவரும் தெரிந்தும் தெரியாமலும் இயற்கையுடனான நமது தொடர்பை துண்டித்து கொண்டிருக்கிறோம். அடுக்கக வாழ்க்கையில் இயற்கையை அறிந்து கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் இல்லை. நவீனமய வாழ்வின் விசையால் இழுக்கப்படும் கிராமப்புற மனிதர்களுக்கும் இவற்றை அறிந்து கொள்ள அவகாசம் இருப்பதில்லை

நம் அன்றாட வாழ்வில் ஒரே ஒரு நாள் கூட உணவு, இருப்பிடம், மருந்து, குடிநீர், காற்று, போன்ற தாவரங்களினால் மட்டுமே கிடைக்கும் பயன்களை அனுபவிக்காமல் கழிவதில்லை. எனினும் அவற்றை குறித்த அறிவு நமக்கு இருப்பதே இல்லை அறிந்து கொள்ள முயற்சிப்பதும் இல்லை.

பள்ளிக் குழந்தைகளுக்கு அடிப்படை கல்வியிலும் கூட ஆங்கில எழுத்துக்களுக்கு நம் தேசத்துக்கு சொந்தமான வேம்பும் மஞ்சளும்  அல்ல, ஆப்பிளும் கேரட்டும் தான் கற்றுக் கொடுக்கப் படுகிறது.  ஆனால் வெளிநாட்டவர் இந்திய இயல் தாவரங்களுக்கு பயன்பாட்டு உரிமம் வாங்கினால் வருந்துகிறோம் வழக்குத் தொடுக்கிறோம்.

நம் வீட்டை சுற்றி இருக்கும், நாம் அன்றாடம் காணும் தாவரங்களின் பெயர்களை குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்க பெற்றோர்களும், இயற்கையுடன் நெருங்கின தொடர்பிலிருந்த முந்தைய தலைமுறையை சேர்ந்த வீட்டுப்பெரியவர்களும், பள்ளியை சுற்றி இருக்கும் மரம்,  செடி, கொடிகளை குறித்த அறிவை போதிக்க ஆசிரியர்களும் முன்வருவதில்லை.

கராத்தே, சிலம்பம், வாய்ப்பாட்டு, இசைக் கருவிகள், நடனம் பள்ளிப் பாடங்களுக்கான பிரத்யேக பயிற்சி என்று ஒரு நாளில் இரவு வரை பல சிறப்பு பயிற்சிகளுக்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் முக்கிய தாவரங்களை, சில மூலிகைகளை, ஒரு சில மரங்களின் பெயர்களை, அவை மலரும் காலங்களை, அவற்றின் பயன்களை குழந்தைகள் தெரிந்து கொள்ள வேண்டும் என நினைப்பதில்லை. அவ்வப்போது இயற்கை நடைக்கு செல்ல அனுமதித்தால் அல்லது அழைத்துச் சென்றாலும் கூட போதும்.

நம்மை சுற்றியிருக்கும் மரங்களில் 10 பெயர்களையாவது தெரியுமாவென சுயசோதனை செய்து பார்த்தால், பலருக்கு தெரியவரும் தாங்கள் தாவரகுருடுகள் என்பது!

ஆனால்,  பலருக்கு விலங்குகளின் பெயர்கள் தெரிந்திருக்கிறது. குறிப்பாக நாய்களின் பல வகைகள் அவற்றின் விலை, அவை எந்த நாட்டை சேர்ந்தவை என்பதெல்லாம் தெரிந்திருக்கும். பலருக்கு பறவைகளை குறித்த அடிப்படை அறிவு இருக்கும் அதில் பலர் ஆர்வம் உள்ளவர்களாகவும் இருப்பார்கள். ஆனால்  பெரும்பான்மையானோர் தாவரங்கள் குறித்து தெரிந்து கொள்ள முன்வராதது தான் தாவரங்களின் அழிவுக்கும் காரணமாகிவிடுகிறது.

நகருதல், பல நிறம் கொண்டிருத்தல், வாலைக்குழைப்பது, கொஞ்சுவது, நம் கட்டளைகளுக்கு கீழ்படிந்து நம்மை மகிழ்விப்பது, வீட்டை பாதுகாப்பது போன்ற பலவற்றால் விலங்குகளை நாம் நேசிக்கிறோம் பாதுகாக்கிறோம்

வீட்டுத்தோட்டத்திலும், அலங்காரச்செடிகளாக வீட்டினுள்ளும் வெளியேவும் வளரும் தாவரங்கள், உணவு பயிர்கள் ஆகியவற்றை குறித்து அளவுக்கு தெரிந்திருக்கலாம் என்றாலும் காடுகளில் இருப்பவற்றையும்  மனிதர்களால் சாகுபடி செய்யப்படாத அரிய தாவரங்களையும், பழங்குடியினர் உணவுக்கும் மருத்துவ சிகிச்சைக்கும் பயன்படுத்தும் எண்ணற்ற அரிய மூலிகைகளை குறித்தும் எதுவும் தெரியாது நகரத்து வாசிகளுக்கு.

உலகின் மிகச்சிறிய செடியான வுல்ஃபியா நம்மைச் சுற்றியுள்ள பல நீர்நிலைகளில் இருக்கிறது அவற்றை பாசிகள் என்று எண்ணி கடக்கிறோம். உலகின் மிகப்பெரிய மலரையும் மிகப்பெரிய மஞ்சரியையும் அறிந்துகொள்ளாமல் நம் குழந்தைகள் அடிப்படை கல்வியை தாண்டி உயர்கல்விக்கு செல்கிறார்கள்.

நீர்பரப்பில் பரந்து விரிந்து படர்ந்துள்ள பாசி! உள்படம் மஞ்சரி.

இந்த தாவர குருடு மனிதர்களுக்கு பழக்கப்பட்டு இயல்பான ஒன்றாக ஆகிவிட்டிருக்கிறது. மனித மூளை நகருகின்ற, பல வண்ணங்களில் இருப்பவற்றை உடனே அடையாளம் கண்டு கொள்கிறது. ஒரே நிறத்தில் பச்சைப் பெருக்கில்  அசையாமல் இருக்கும் தாவரங்களை அடுத்தபடியாகத்தான் மூளை அடையாளப்படுத்திக் கொள்கிறது.

ஓரிடத்தில்  நிலையாக இருப்பதால் தாவரங்கள் அலட்சியமாகவும், உயிரற்றவையெனவும் நினைக்கப்படுகின்றன. தாவரங்களும் வளர்கின்றன, நீரையும் உணவையும் தேடுகின்றன, உணவை சேமித்து வைக்கின்றன, காதல் செய்கின்றன, கருவுருகின்றன, சந்ததியை பெருக்குகின்றன.

இரண்டு தலைமுறைகள் முன்பு வரை தாவரங்கள் குறித்த அறிவு இத்தனை மோசமாக இல்லை அடிப்படை கல்வியில் மரங்கள், அவற்றின் சித்திரங்கள் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

சிறார் நூல்களில் இயற்கையும் ஒரு முக்கிய அம்சமாக இருந்தது. புலியும் அணிலும் கிளியும் குரங்குகளும், அவை  வாழும் காடும் மரங்களும் அவர்களுக்கான கதைகளில் இடம்பெற்றிருக்கும். சிறார் நூல்களின் பெயர்களே நிலவையும் காட்டையும் குறிக்கும் அம்புலிமாமா, அணில் அண்ணன் என்று இருக்கும்!

அவை இப்போது அடியோடு அழிந்து அதிபுனை கற்பனை கதாபாத்திரங்களான மாயாவிகள், இரும்பு மனிதர்கள் சிலந்தி மனிதர்கள் நிறைந்திருக்கும் கதைகளும் தொடர்களும்  இணைய விளையாட்டுக்களுமாக இயற்கையிலிருந்து விலகியிருக்கும் சிறார் உலகை யதார்த்த உலகிலிருந்தும் முற்றிலுமாக துண்டித்து விட்டிருக்கிறது.இயற்கை குறித்த அறிதலுக்கான அனைத்து வழிகளும் அடைக்கப்பட்டிருக்கும் உலகில் வாழும் குழந்தைகளுக்கு தாவரங்களை தெரிந்துகொள்ளும் வாய்ப்புக்களே இல்லை.

செங்காந்தள் மலர்கள், செங்கால் நாரைகள்!

கரிய கண்களை உடைய விரால் மீன்கள், கனிகளை சிந்தி விளையாடும் மந்திகள், செங்கால் நாரைகள்,  செங்காந்தள் மலர்கள், மரங்கள் செடிகள் மலர்கள் என பலவகை உயிரினங்கள்  அப்போது அடிப்படை கல்வியிலேயே அறிமுகமாகி இருந்தன  எனவே அவற்றை குறித்து மேலதிகம் அறிந்து கொள்ளும் ஆர்வமும் குழந்தைகளுக்கு இயல்பாகவே உண்டாகி இருந்தது

பொதுவில் காட்டுயிர் பாதுகாப்பென்று நிறைய பேசப்படுகின்றது ஆனால், காட்டுயிர் என்றதும் அனைவரும் நினைப்பதும் நம்புவதும் காட்டு விலங்குகளை மட்டும்தான். புலிகளை காப்பாற்ற வேண்டும், யானைகள் படுகொலையை தடுக்க வேண்டும், பறவைகளின் வாழ்விடத்தை பாதுகாக்க வேண்டும் … என்று பலர் குரல் கொடுக்கிறார்கள்! வன விலங்குகளின் பாதுகாப்பிற்காக தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் பல அமைப்புகள் இருக்கின்றன. அவை, காப்பாற்றப்பட வேண்டியது மிக அவசியம் தான். ஆனால், காட்டுயிரென்பது அங்கிருக்கும் தாவரங்களும் தான் என்பதை நாம் உணர்வதில்லை!

காடுகளில் அழிந்து கொண்டு வரும் தாவரங்கள் குறித்தும், அரிய மூலிகைகளின் பாதுகாப்பு குறித்தும் அக்கறை கொள்ளும் அமைப்புகள் அதிகமில்லை.

சத்தியமங்கலம் வனப்பகுதியில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் முழுக்காடும் பொன்னென மூங்கில் மலர்ந்திருந்தது. சாலையோரங்களில் அவற்றின் விளைந்த மூங்கிலரிசி மணிகள் கொட்டிக்கிடந்தது. ஆனால் அந்த வழியாக சென்ற  சுற்றுலாப் பயணிகள் அனைவரும் காடுகளின் விளிம்பில் தெரியும் யானைகளையும் மான்களையும் வியந்து கூச்சலிட்டு புகைப்படமெடுத்து கொண்டிருந்தனர்.

ஒரே ஒருவர் கூட அரிய மூங்கில் மலர்வை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.அந்த மூங்கில் மிகை மலர்வு எத்தனை அரியது என்பதும் யாருக்கும் தெரியவில்லை. 50 அல்லது 60 வருடங்கள் கழித்து ஒட்டுமொத்தமாக மலர்ந்து முற்றிலும் மூங்கில்கள்  அழியும் அரிதிலும் அரிய நிகழ்வு அது. அந்த மிகைமலர்வை அங்கிருந்த பலர் அவர்களின் வாழ்நாளில் மீண்டும் பார்ப்பதற்கான வாய்ப்புக்கள் அரிது.  50 வருடங்கள் கழித்து அவர்களின் அடுத்த தலைமுறையினர் அந்த சாலை வழியாக வருகையில் மீண்டும் காண சாத்தியம் இருக்கிறது.

கண்ணைக் கவரும் அபூர்வமான மூங்கில் பூக்கள்!

இப்படி குறிப்பிட்ட இடைவெளியில் மலர்ந்து அழியும் மூங்கில்கள், 12 வருடங்களுக்கு ஒருமுறை மலரும் குறிஞ்சிகள் ஆகியவை எந்த குழப்பமும் இல்லாமல் மிகத்துல்லியமான காலக்கணக்குகளின் அடிப்படையில் அதே காலத்தில் மலரும் அதிசயத்தை வளரும் தலைமுறையினர் எத்தனை பேர் அறிந்து கொண்டிருக்கிறார்கள்?

தாவரங்களுக்கு ஒளிநாட்டக் கணக்குகளும் உண்டு. ஒவ்வொரு தாவரத்திற்கும் இந்த ஒளிநாட்டக் கணக்கு வேறுபடும். மிகுந்த ஒளிநாட்டமுடையவை, குறைந்த நாட்டமுடையவை, இவற்றுக்கிடையில் இருக்கும் மிகுதியும் குறைவும் இல்லாமல் மத்திம ஒளித்தேவை உள்ளவை என இவை வகைப்படுத்தப்படும். ஒளி, வெப்பம் மழை ஆகிய சமிக்ஞைகளை கொண்டு அவை இலைகளை உதிர்ப்பது, உறக்க நிலையில் இருப்பது, மலர்தல், கனி கொடுத்தல் ஆகியவற்றைக் காலக் கணக்கு பிசகாமல் செய்து வருகின்றன.  இரவிலும் நகரங்களில் எரிந்துகொண்டிருகும் விளக்குகளின் ஒளிமாசினால் இந்த கணக்கு பிறழ்கையில் தாவரங்களின் வளர்ச்சி உள்ளிட்ட பலவும் பெரும் குழப்பத்துக்குள்ளாகின்றன.

நெடுஞ்சாலைகளின் விளக்குகளின் எண்ணிக்கையை, ஒளியை கட்டுப்படுத்துதல், தேவையான இடங்களில் மட்டும் இரவு விளக்குகளை உபயோகித்தல் என்று இந்த ஒளிமசு தொடர்பான முறைப்படுத்தல்கள் சில நாடுகளில் துவங்கி இருக்கின்றன.நீர் மாசு, காற்று மாசு, நில மாசு என பல சூழல் மாசுபாடுகளை கவனித்து கவலைப்படும் உலகம் ஒளிமாசினால் தாவரங்களுக்கு ஏற்படும்  சிக்கல்களை பொருட்படுத்துவதில்லை.

அதிக ஒளி உமிழும் விளக்குகள் மரங்களை பாதிக்கவே செய்யும்!

ஆகாயத்தாமரை போன்ற நீர்வழித்தடங்களை ஆக்ரமிக்கும் களைகள்,  பார்த்தீனியம் போன்ற ஆக்ரமிப்பு நச்சுக்களைகள் பல்கிப்பெருகி பெரும் சூழல் அச்சுறுத்தலை ஏற்படுத்தி கொண்டிருக்கின்றன.அதைக் குறித்த போதுமான அறிதல் இப்போது இல்லை.

சூழல் பாதுகாப்பில் மட்டுமல்லாது அன்றாடம் நாம் புழங்கும் கேசப்பராமரிப்பு சருமப்பாதுகாப்பு, நோய் சிகிச்சைகள் போன்றவற்றிலும்  இந்த தாவர குருடு பலவிதங்களில் நம்மை தவறாக வழிநடத்துகிறது. மஞ்சள் காமாலைக்கு மருந்து என சந்தைகளில் கிடைக்கும் மஞ்சல்கரிசலாங்கண்ணி அசல் மூலிகையல்ல, போலி மலைவல்லாரை, வல்லாரைக்கீரை என பயன்படுத்தப்படுகிறது,  தற்போது சூழலுக்கு புதிய அச்சுறுத்தல்களாகி இருக்கும் பொன்னாங்கண்ணி கீரை என விற்பனை செய்யப்படும் கழிவுநீரில் வளர்ந்து அந்நீரின் உலோக மாசுக்களை இலைகளில் சேமித்து வைத்திருக்கும்  சீமைப்பொன்னாங்கண்ணி, செழித்து வளர்ந்து வேகமாக நீர்நிலைகளை ஆக்ரமித்து வெறும் மணல் தடங்களாக மாற்றிக்கொண்டிருக்கும் நெய்வேலி காட்டாமணக்கு,  ஆகிய அயல் ஆக்ரமிப்பு தாவரங்களின் பரவலும்  உடனடி கவனம் கோருபவை.

கண்ணைக் கவரும் பூக்களுடன் அசோக மரம்! நெடிதுயர்ந்த நெட்டிலிங்க மரம்!

பலரால் அசோகமரமென்று அழைக்கப்பட்டு கொண்டிருப்பது அசோகமரமல்ல, அது நெட்டிலிங்கம் எனப்படும் போலி அசோகமரம். சரகா அசோகா என்னும் ஆரஞ்சு நிற மலர்க்கொத்துக்களை கொண்டிருக்கும் அழகிய மரமே அசோகம் என்பதையும் தெரிந்து கொள்ளாதவர்கள்  உண்டு!

நம்மை சுற்றி இருக்கும் பல தாவரங்களில் கடும் நஞ்சு கொண்டவையும் இருக்கின்றன.  ரைசின் என்னும் கடும்  நஞ்சு ஆமணக்கு கனிகளிலும், சிவப்பும் கறுப்புமாக அழகுடன் இருக்கும் குன்றிமணியில் ஏப்ரின் என்னும் கொடும் நஞ்சும் இருக்கிறது. பல கிராமப்புற குழந்தைகள் ஆண்டுதோறும் இவற்றை கடித்து சுவைத்து உயிரிழந்திருக்கிறார்கள் அல்லது உயிராபத்தை சந்திக்கிறார்கள்.

புலி யானை போன்றவற்றின் எண்ணிக்கை குறைந்து வருவதை தெரிந்து கொண்டிருக்கும் இப்போது பள்ளிக்கல்வியும் உயர்கல்வியும் கற்றுக்கொண்டிருக்கும் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு அழிந்துவரும் தாவர இனங்களில் ஒன்றையாவது தெரியுமா என்று சோதித்து பார்த்தால் தெரியும் இந்த தாவர குருடின் தீவிரத்தன்மை என்னவென்று.

காலநிலை மாற்றத்துக்கும் நீராதாரங்களுக்கும் உணவுப்பாதுகாப்புக்கும் மருந்துகளுக்கும் நமக்கிருக்கும் ஒரே ஆதாரம் தாவரங்களே.  அவற்றை அழிவிலிருந்து பாதுகாப்பது கவனிப்பதும் ஆராதிப்பதும் வழிபடுவதும்தான் இதிலிருந்து நிவாரணம் பெற ஒரே வழி

தொன்று தொட்டு மரத்தை வழிபடும் மகளிர்!

இதன் பொருட்டுத்தான் நம் முன்னோர்கள் திருமண சடங்கிலிருந்து பிறப்பு, இறப்பு சடங்குகள் வரை  தாவரங்களை முன்னிருத்தினர்.   தினசரி கோலமிடுகையிலேயே தாமரை  உள்ளிட்ட பல மலர்களின்  வடிவங்களை அமைக்கும் வழக்கமிருந்தது. கோடைக்கால நோய்களுக்கு எதிராக மூலிகைகளால் காப்புக் கட்டுவது, வேங்கைப்பாலில் பொட்டு வைப்பது,வேப்பிலையை அரைத்து பூசுவது, வேம்பையும், அரசையும் கடவுளாக வணங்குவது என்று சடங்குகள் வழியே தாவரங்களை அறிந்துகொள்ள எண்ணற்ற வழிகள் நமக்கிருந்தன. சடங்குகள் மெல்ல மெல்ல  மறைந்துபோகையில் இவற்றை அறிந்துகொள்வதும் நின்று போகின்றது.

தாவரங்களில் பாலினமுண்டு என்பதுவும் அவற்றில் ஆண் பெண் மரங்களும் மலர்களும் இணைந்தும் தனித்தும் இருப்பது பலருக்கு தெரியாது. ஆண் மரங்களை மலட்டுப்பெண் மரங்களென எண்ணி அவற்றை வெட்டியகற்றுபவர்களும் உண்டு!

சீமைக்கருவேலம் குறித்த பொது நல வழக்கொன்று சில வருடங்களுக்கு முன்னர் தொடுக்கப்பட்டது. தாவரவியலாளர்கள் சூழலியலாளர்கள் ஆகியோரிடம் அந்த வழக்கின் உண்மைத்தன்மை , அறிவியல் ஆதாரங்கள் ஆகியவை கேட்கப்படாமல் சீமைக்கருவேலங்களை வெட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அப்போது எது சீமை, எது நாட்டு மரமென்று தெரியாமல் பலநூறு நாட்டு கருவேல மரங்கள் வெட்டப்பட்ட கொடுமையும் நடந்தது!

ஊனுண்ணும் தாவரங்கள் தங்களது புரதசத்து குறைப்பாட்டை போக்க பூச்சிகளை பிடித்து உண்கின்றன, ஆண் மலர்களின் மகரந்தங்கள், சேர்க்கையின் பொருட்டு பெண் மலரை தேடி 20 கிமீ தூரம் வரை காற்றில் பயணிக்கும் என்னுமளவுக்கு ஆழமாக தாவரங்களை அறிந்துகொள்ள முடியாவிட்டாலும் தொட்டாசிணுங்கி தொடப்பட்டதும் உடனே எதிர்வினை ஆற்றுவதையாவது கவனித்து தாவரங்களும் நம்மைப்போலவே  புழு பூச்சிகளை, விலங்குகளைப்போல உயிருள்ளவைதான் என்று தெரிந்து கொள்ளலாம்

தற்போது தாவரங்களின் மீது ஈடுபாட்டுடன் இருப்பவர்களும், தாவரவியல் துறையில் ஈடுபட்டிருப்பவர்களும் தாவரங்களை நேசிப்பவர்களும் இயறகையோடு இணைந்த வாழ்வில் இருந்தவர்களாக இருப்பார்கள்.இன்னும் சிலருக்கு தாவரவியல் குறித்து  கற்பித்த  மிகச் சிறந்த ஆசிரியர்கள் கிடைத்திருப்பார்கள்.

அவற்றுடன் வாழ்ந்து அவற்றின் முக்கியத்துவம் தெரிந்தவர்கள் அவற்றைக் குறித்து கவலைப்படவும் அவற்றின் முக்கியத்துவத்தை உணர்ந்து அவற்றை பாதுகாக்கவும் எண்ணுவார்கள். எனவேதான் சிறார்களின் உலகில் தாவரங்கள் இடம்பெறுவது மிக முக்கியமானதாக இருக்கிறது. ஆரம்பக் கல்வியில் பிற துறைகளுக்கு ஈடாக நுண்ணுயிர்கள் தாவரங்கள் குறித்தும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்

தங்கள் குழந்தைகள் மருத்துவராக பொறியாளராக கணினி துறையில் வல்லுநராக வேண்டும் என விரும்பும் பெற்றோர்களில் சிலராவது எவற்றால் நாம் அனைவரும் உயிருடன் இருக்கிறோமோ, எவற்றால் சுவாசிக்க காற்றும் குடிக்க நீரும் கிடைக்கிறதோ, எவை இன்றி உலகம் இயங்க முடியாதோ அவற்றை குறித்து  தங்கள் பிள்ளைகள் கற்றுக்கொண்டு அத்துறையிலும் சாதிக்க வேண்டும் என்று விரும்பலாம்

உணவு, எரிபொருள் மற்றும் நீர் பற்றாக்குறை, குறைந்து கொண்டே வரும் சாகுபடிக்கான நிலப்பரப்பு, அதிகரிக்கும் மக்கள் தொகை மற்றும் காலநிலை மாற்றங்கள் இவை அனைத்திற்கும் ஒரே தீர்வாக இருப்பது தாவரங்களின் பாதுகாப்பும் பயன்பாடும் தான்உலக தாவரங்களில் 4269 வகைகள்  மிக மிக அதிக அழியும் அபாயத்தில் இருப்பவை என்றும் மேலும் 5725 தாவரங்கள் அழிவை நோக்கிய பாதையில் இருப்பதாகவும்   சிவப்பு பட்டியலிடப் பட்டிருக்கின்றது.  அவற்றை பாதுகாக்கும் நடவடிக்கைகளும் போதுமான அளவில் நடைபெறவில்லை. அழியும் நிலையிலிருப்பவை என்று அடையாளப்படுத்தப் பட்டவைகளில் வெறும் 41 சதவீத தாவரங்கள்மட்டுமே பாதுகாப்பு நடவடிக்கையின் கீழ் வருகின்றன

மனித குலம் இப்பூமியில் தொடர்ந்து வாழ தாவரங்களின் பாதுகாப்பு மிக முக்கியம். சூழலுடனும் அதிலிருக்கும் தாவரங்களுடனும் மிக நெருக்கமான தொடர்பிலிருப்பது அவற்றின் பாதுகாப்பில் முதல் படி. தாவரங்களுக்கு உண்டாகும் பாதிப்பு மனிதர்களுக்கும் உண்டாகும் பாதிப்புத்தான்!

காக்கைக் கூடு நடத்திய ‘செங்கால் நாரை விருது’ போட்டியில் முதல் பரிசு பெற்ற கட்டுரை!

கட்டுரையாளர்; லோகமாதேவி

தாவரவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். தாவரவியல் ஆய்வாளர். 2016 லிருந்து நாளிதழ்களிலும், இணைய இதழ்களிலும்  சூழலியல் சார்ந்த அறிவியல் கட்டுரைகளை எழுதி வருகிறார். இத்துடன் மொழியாக்க கட்டுரைகளையும், கதைகளையும் எழுதியிருக்கிறார். அரிஸோனா பல்கலைக்கழக இணையத்தில் அறிவியல் தகவல்களை தமிழாக்கம் செய்யும் பணியில் 2019 லிருந்து ஈடுபட்டிருக்கிறார்.

தற்போது தாவரவியல் அகராதியை தயாரித்துக் கொண்டிருக்கிறார்.

அன்பில் அழியுமடீ!

நேற்று மாலை  இஸ்திரி போடக்கொடுத்த துணிகளை வாங்க பொள்ளாச்சி சென்றிருந்தேன். கல்லூரிக்கு நேர் எதிரில் இருக்கும் கடை அது. எனக்கு அவரகளை 90களின் இறுதியில் இருந்து தெரியும். நான் அப்போது கல்லூரிப்பணியில் சேர்ந்த புதிது. வீட்டுக்கு பின்புறம் இருக்கும், அவ்வப்போது சர்க்கஸ் நடக்கும் ஒரு காலி மைதானத்தை கடந்து கல்லூரிக்கு வருகையில் மையச்சாலை துவங்கும் இடத்தில் இருக்கும் இந்த கடையை  கடந்தே செல்லவேண்டும்.

இந்தனை வருடத்தில் குடும்ப உறுப்பினர்கள் போல அவர்கள் நெருங்கி இருக்கின்றனர். பத்து நிமிஷமாவது நலம் விசாரித்துக்கொள்ளாமல் துணிகளை கொடுப்பதோ வாங்குவதோ இல்லை.  நேற்று கடையில் யாரும் இல்லை. ஒரு பேண்ட் பாதி தேய்ப்பில் அப்படியே கைவிடப்பட்டு கால் மடக்கி காத்திருந்தது. ’’குமார் குமார்’’ என குரல் கொடுத்தும் பதிலில்லை. புகையும் இஸ்திரிப்பெட்டி ஒரு சிவப்பு ஓட்டின் மீது இளைப்பாறிக்கொண்டிருந்தது. நானும் காத்திருந்தேன்

எதிர்ப்புறமிருந்து குறுக்கில் சாலையை கடந்து அந்த வீட்டு பையன் கேசத்தை ஒதுகியபடி உற்சாகமாய் ஓடிவந்து ,புன்னகையுடன் ’’அங்கே டெய்லர் கடையில் பேசிட்டிருந்தேன், உங்களை பார்த்துட்டுத்தான் ஓடிவந்தேன்’’ என்றான்

ஏற்கனவே அடுக்கிய துணிகளை மீண்டும் நிதானமாக அடுக்கி கொடுத்து பணம் வாங்கிக்கொண்டவன் நான் காரை நோக்கி திரும்புகையில் சத்தமாக ’’இதை சாப்பிட்டு பாருங்க’’ என்றான். திரும்பினேன் சட்டை பாக்கெட்டில் கைவிட்டு ஒரு சிறிய மிட்டாயை எடுத்து ’’எனக்கு இது ரொம்ப பிடிச்ச மிட்டாய்ங்க, உங்களுக்கும் பிடிக்கும்’’ என்று கொடுத்தான். சிரித்தபடி வாங்கிக்கொண்டேன். பின்னால் அவன் குரல் கேட்டது ‘’சாப்பிட்டுபார்த்து எப்படி இருக்குன்னு சொல்லுங்க ‘’ என்று

அந்தியின் அந்த அன்பை அளித்தல் முழுநாளையே இனிப்பாக்கிவிட்டபிறகு மிட்டாயின் இனிப்பு தனித்து தெரியாமல் அதில் கரைந்து விட்டிருக்கும் என்பதை அவனுக்கு சொன்னால் புரியப்போவதில்லை.  திரும்பி சிரித்துக்கொண்டே ‘’சரி சொல்லறேன்’’ என்று நானும் உரக்க சொல்லிவிட்டு புறப்படேன்

இப்படி முன்பு ஒருமுறையும் நடந்தது. தருண் அப்போது குட்டிப்பையன், சரண் இல்லாமல் அவன் மட்டும் ஒருநாள் பள்ளிக்கு செல்லவிருந்தான்.நான் வழக்கம் போல ஏதோ துயரிலிருந்தேன்.

 நல்ல மழை இரவின் மறுநாள் காலை அது. பள்ளிப்பேருந்து வந்ததும் அவனை ஏற்றிவிட்டேன். படிக்கட்டோரம் அமர்ந்திருந்த ஒரு குட்டிப்பெண் காத்திருந்து அவனுக்கு ஒரு பிறந்த நாள் மிட்டாயை கொடுப்பது தெரிந்தது.  ஜன்னல் வழியே அவன் கையசைக்க காத்திருந்தேன் . எதிர்பராமல் ஜன்னல் வழியே அந்த மிட்டாயை என்னை நோக்கி வீசிய தருண் ’’அம்மா எடுத்துக்கோ’’ என்று நகரும் பேருந்திலிருந்து கூவினான்.  நனைந்திருந்த கரிய தார்ச்சலையில் சரிகைக்காகிதம் சுற்றப்பட்டு கிடந்தது பேரன்பின் இனிமை.

துயர் துடைத்து அகத்தில் சுடர் ஏற்றிய நிகழ்வது. அதைப்போலத்தான் இதுவும்

முன்பே சொல்லப்பட்டிருக்கிறதே

‘’துன்ப நினைவும் சோர்வும் பயமுமெல்லாம் அன்பில் அழியுமடீ!’’ என்று!

இளையராஜா என்னும் இம்சை!

இளையராஜாவின் இம்சைகள் இப்போதெல்லாம் கூடிப்போய் விட்டிருக்கிறது. அவரது இசையை அவரது குரலை எப்போது கேட்கத் துவங்கினேன் என்று நினைவில்லை, சிறுமியாக இருக்கையில் எப்போதும் கேட்டது இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் இசைதான். பின்னர் அப்பா எங்களை எழுப்பவென்றே உரக்க வைக்கும் பக்திப்பாடல்கள். ஐந்தாவது படிக்கும் வரை இவை மட்டுமே எனக்கான இசையாக இருந்தன

அப்போது திருமண வயதிலும் காதலிலும் இருந்த ஒரு அத்தை எப்போதும் வானொலியில் பாடல்கள் கேட்பார். அதிகம் கமல்ஹாசனின் குரலில் ’’ஞாயிறு ஒளி மழையில் திங்கள் குளிக்க வந்தாள் நானவள் பூவுடலில் புது அழகினை ரசிக்கவந்தேன்’’ என்னும் பாடல் அப்போது ஒலிபரப்பாகும் அத்தைக்கு அதில் தனித்த பிரியமுண்டு. அப்படி நல்லிசை எனக்கு அறிமுகமாகியது.

அன்னக்கிளி படம் பார்த்த நினைவிருக்கிறது //மச்சானை பார்த்தீங்களா// என்னும் கேள்வியை, தேடலை, பாடலை, அதன் இசையை விட கடைசிக் காட்சியில் சுஜாதா தியேட்டர் நெருப்பில்  முகமெல்லாம் தீக்காயத்துடன் செத்துப் போவது தான் மனதில் பாவமாக பதிந்திருந்தது.அந்த வயது அப்படி.

ஒருவேளை பதின்பருவத்தில் ராஜாவின் பாடல்கள் மனதில் நுழைந்திருக்கலாம். குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை. வானொலியில் கேட்பது பேருந்தில் கேட்பது திரைப்படம் பார்க்கையில் கேட்பது என்பது மட்டுமல்லாமல் இசையை கேட்க வென்றெ பிரத்யேக நேரமொதுக்கி கேட்டதெல்லாம் முதுகலைப்படிப்பை முதன் முதலில் வீட்டிலிருந்து அகன்று,பல்கலைக்கழக விடுதியில் தங்கிப் படித்த வருடங்களில் தான்.

அதற்குள் இளையராஜா, பாலகுமாரன் பித்துக்களுக்கு உள்ளாகி இருந்தேன். கிருஷ்ணசந்தர் குரலும் அப்போதுதனித்த பிரியம். கவிதையுலகிலும் பொற்தாழ்விலக்கி நுழைந்திருந்தேன்.(வாசிப்புத்தான்)

இப்போது வாழ்வின் இயங்கியலில் ராஜாவும் கூடவே இருக்கிறார். ராஜாவின்  இசையமைப்பில் பல திரைப்படங்களை பார்த்து அவரது இசைக்குள் நுழைந்து திளைக்கும் பல கோடியினரில் நானும் இருக்கிறேன். தன்னந்தனிமையில் காலை சமைக்கையில் எப்போதும் இவரும் கூட இருந்து பாடிக்கொண்டிருப்பார். ’’கொஞ்சம் அடுப்பை பார்த்துக்குங்க இதோ வந்துட்டேன்’’ என்று அவரிடம் சொல்லாத குறைதான். எனினும் கடந்த சில வருடங்களாக அவரது இசை பெரும் சித்திரவதை ஆகிவிட்டிருக்கிறது

இத்தனை வருடங்களில் பலவிதமான மனிதர்களை பார்த்தாகிவிட்டது, கொடுமைக்காரர்கள், கல்நெஞ்சர்கள் அப்பா என்பவரைப்போல வன்முறையாளர்கள், ஏமாற்றுக்காரர்கள் என்று ஆனால் இவர்களில் இளையராஜாவைபோல கொடூரர் ஒருவரும் இல்லை (கொடூரன் என சொல்ல முடியாதல்லவா, என்ன இருந்தாலும் பெரிய மனிதர்,  ஞானி) 

வெண்முரசில் சுநீதி சுருசி இருவரின் உளப்போராட்டங்களை சொல்லுகையில் அதிலொருத்தியின் கடுஞ்சொல், உடலுக்குள் கத்தியை சொருகி, சுழற்றி வெளியே இழுப்பது போல என்று ,அப்படித்தான் வெறுமனே இதயத்தை கீறிவிட்டுச்செல்வது, எளிதாக குத்திக் கொலைசெய்வதெல்லாம் இல்லை , இசையென்னும் பெயரில் ராஜா கத்தியை ஆழச்செருகி, சுழற்றி பின்னர் ஆன்மாவையும் பிடித்து வெளியே இழுப்பார்.  முன்னைக்காட்டிலும் இப்போது கூடுதல் பணிச்சுமை வயதும் கூடிகொண்டே இருக்கிறது இருந்தும் முன்னெப்போதையும் விட இப்போது ராஜாவின் இசையும் குரலும் படுத்தி எடுக்கிறது

ஒருவேளை கடந்த சில வருடங்களாக  முழுத்தனிமையில் இருப்பதாலும் இருக்கலாம்.

சமயங்களில் தோன்றும் ராஜா பாட்டுக்கு இசையமைக்கையிலேயே மிகுந்த வன்மத்துடன் ’’இதை இரவில் தனிமையில் முடிவற்று நீண்டிருக்கும் இருளை பார்த்துக்கொண்டு கேட்டிருப்பவர்களை ஒரேயடியாக கொல்லட்டும்’’ என்ற ஒரே உத்தேசத்துடன் இசையமைத்திருப்பாரோ என்று! அத்தனைக்கு கொடுமையாக இருக்கும் தனித்திருக்கும் இரவுகளில் கேட்க.

ராஜாவின் இசை பயங்கரவாதம் என்றால் அவருடன் கங்கைஅமரன் கூட்டுசேர்ந்தால் அதுவே தீவிரவாதமாகிவிடும்.’’சிறுபொன்மணி அசையும் அதில் தெறிக்கும்’’ அந்த வகை கொலையாயுதம். நான் மீள மீள கேட்பவற்றில் இதுவுமொன்று.

சென்ற மாத முழுநிலவன்று நான் ஒரு இரவுப்பயணத்திலிருந்தேன். நிலவு கூடவே பயணித்துக்கொண்டிருந்தது காரில் இருந்த குட்டி மீனாக்‌ஷிக்கு வைத்திருந்த பாரிஜாதம்  மணக்கிறது, தலையில் வைத்திருந்த ராமபாணம் கூட சேர்ந்துகொண்டது ,ஒரு பாலத்தில்  கார் திரும்புகையில் நிலவு அப்படியே அள்ளி எடுத்து மடியில் வைத்துக்கொள்ளலாம்போல வெகு அருகிலிருக்கையில் ,ராஜா 

//தெளியாதது எண்ணம்

கலையாதது வண்ணம்

அழியாதது அடங்காதது

அணை மீறிடும் உள்ளம்// என்று பாடிக்கொண்டிருந்தார். ’’சார் கொஞ்சநேரம் சும்மா இருக்கீங்களா? ’’என்று கடிந்துகொண்டேன் அவர் காதில் போட்டுக்கொள்ளாமல்

//நிதமும் தொடரும் கனவும்

நினைவும் இது மாறாது//

என்று போய்கொண்டே இருந்தார். கொலைகாரப்பாவி என்று மனதில் வைதுகொண்டேன்

எப்படியோ துயரை அழைத்துக்கொண்டு வரும் அந்தியின் மழையைபோல ராஜாவின் பாடல்களும் தனிமையை மன்மடங்கு பெருக்கி தவிக்கச்செய்துவிடுபவை

பக்திப்பாடல்களிலும் மனதை கரையச்செய்துவிடுபவர் அவர் மட்டுமே

காமாட்சி கருணாவிலாசினியில் ’’மந்தஹாசினி மதுரபாஷினி சந்தரலோசனி சாபவிமோசனி ‘’என்னும் அவர் குரல் எப்போதும் துயர் துடைப்பது.

கல்லூரிக்காலங்களில் மிகவும் இம்சை செய்த குரலுடன் கூடிய அவர் பாடல் ’’வழிவிடுவழிவிடு என் தேவி வருகிறாள்’’ தான். பொதுவில் எவர் இசையமைத்திருந்தாலும், யார் குரலாயிருப்பினும் தேவி என்னும் பெயர் வருவதெல்லாமே எனக்கு தனித்த பிரியமுள்ள பாடல்களாகவே இருக்குமென்றாலும் இதில் ராஜாவின் குரல் காதலில் அதுவும் கொஞ்சம் மனம் பிசகின காதலில் தோய்ந்திருக்கும். 

’’என் மீதுதான் அன்பையே பொன் மாரியாய்த் தூவுவாள் என் நெஞ்சையே பூ என தன் கூந்தலில் சூடுவாள்’’ இவ்வரிகளை எத்தனை முறை கேட்டிருப்பேன் ?

அப்பாடல் வெளியான சமயத்தில் மனம் கலங்கிய, குழம்பிய, பிசகிய ஒருவரை கல்யாணம் செய்துகொள்ளவேண்டும் என பிரியப்பட்டதுண்டு, பிற்பாடு அதற்கென மெனக்கெட வேண்டியதில்லை என்று தெரிந்திருந்தது.

ராஜாவை குறித்து சொல்லிக்கொண்டே போகலாம். அவரது புதுவீட்டின் கட்டுமானம் பற்றிய ஒரு செய்தியில் அவர்மனைவி ஜீவா வீட்டு முகப்பில் ஒரு மாபெரும் கல்தாமரையை அமைத்திருக்கிறார் என கேள்விப்பட்டேன். கருங்கற்களில் செய்யப்பட்டவைகளில் தனித்த பிரியமுள்ளவள் என்பதால்  என்றைக்கேனும் அதை பார்க்கவேண்டும் என்னும் பெருவிருப்புள்ளது. அதை கல்லில் வடிக்க நினைத்ததே ராஜாவின் கலையின் அழிவின்மையை குறிக்கும் பொருட்டுத்தான் என நினைப்பேன்.  இன்னும் பார்த்திராத என்றேனும் உறுதியாக பார்க்கவிருக்கும் அந்த தாமரையில் அமர்ந்துகொண்டிருக்கும் சரஸ்வதியின் வடிவம்தான் அவர். 

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார். உலகெங்கிலும் எல்லார் வீட்டிலும் எப்போதும் இசைவடிவில் அழியாமல் இருக்கும் பேறுகொண்டவர் நீங்கள். 

அன்பு

Newer posts »

© 2024 அதழ்

Theme by Anders NorenUp ↑