வானொலிக்கும் எனக்கும் 40 ஆண்டுகளுக்கும் மேலான நெருங்கிய தொடர்பும் அணுக்கமும் இருக்கிறது.. சிறுமியாக இருக்கையிலேயே என் கிராமத்தில் அப்போது பதின் பருவத்திலிருந்த என் இரண்டு அத்தைகளும் மாற்றி மாற்றி ஒரு சிறிய டிரான்சிஸ்டரை கேட்டுக்கொண்டிருக்கையில் நானும் என் சகோதரியும் அதை உடன் கேட்டுத்தான் வளர்ந்தோம். என் சித்தப்பா ஒருவரும் மாலை நேரங்களில் செய்திகள் கேட்கையில் என்னை மடியிலிருந்திக்கொள்ளுவார்
மிகக்கொஞ்சமாய் வரும் விளம்பரங்கள் (ஒரே சாரிடான் தலைவலி நீக்கி விடும்’)’, நிறைய திரைப்பாடல்கள், விவசாயிகளுக்கான நிகழ்ச்சிகள், அன்பு அறிவிப்பாளர் அப்துல் ஹமீதின் கம்பீரக்குரல் இவை எல்லாம் அப்போதுதான் என் வாழ்வில் அறிமுகமாயின.
பின் பொள்ளாச்சியில் அப்பா அம்மா வீட்டில் சற்றேறக்குறைய ஒரு தொலைக்காட்சிப்பெட்டி போல இருக்கும், நிறைய திருகு குமிழ்களுடனான கம்பீரமான, வீட்டில் ஒரு அங்கத்தினராகவே நடத்தப்பட்ட ஒரு மர்ஃபி ரேடியோ இருந்தது.மிகக்கண்டிப்பான ஆளுமையாக அன்றிலிருந்து இன்று வரைக்கும் அறியப்படுகின்ற என் அப்பா, அதிகாலையிலேயே அதில் பக்திப்பாடல்கள் ஓலிக்கசெய்வார், ’எழுந்திரு’ என்று யாரும் சொல்லாமலேயே பக்திப்பாடல்களைக்கேட்டு ஒவ்வொருநாளும் விடிந்தது எங்களுக்கு இளம் பருவத்தில். வாசிப்பில் மிகுந்த ஈடுபாடு உண்டான காலகட்டம் அது என்றாலும் வானொலியுடனான அடுப்பம் கூடிகொண்டுதான் இருந்தது நாளுக்கு நாள்
அன்று கேட்ட அதே ஹரிவராசனம், எல்லாம் ஏசுமயம், ,தீனோரே நியாயமா மாறலாமா,, செல்லாத்தா செல்ல மாரியாத்தா எல்லாம் இன்றும் கேட்கையில் வாழ்வெனும் மாயச்சங்கிலியில் என்னை கடந்த காலத்துடன் இணைக்கும் கண்ணி இந்த வானொலி என நினைப்பேன். சின்னஞ்சிறுமியாய் நான் கேட்ட ஏசுதாஸ் ஜெயச்சந்திரன் ஹனீஃபா சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோரின் குரல்களை இன்று தோள் விரிந்து தலை நிமிர்ந்த என் மகன்களும் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் தினமும்.
காலமும் மாறி விட்டது அதற்கேற்ப வாழ்வு முறைகளும் பெருமளவில் மாறிவிட்டதென்றாலும், என் வாழ்வில் இன்று வரையிலும் எந்த மாற்றமுமின்றி இருக்கும் ஒரு விஷயம் இந்த வானொலியில் ஒலிக்கும் பல குரல்களும் அதனோடு எனக்கிருக்கும் மாறாப்பிரியமும் தான்
கல்லூரியிலும் பள்ளியிலும் படிக்கையிலும் இதுவே தொடர்ந்தது. மாலை வேளைகளில் இலங்கை வானொலியையும் இன்னும் பல நாடுகளின் ஒலிபரப்பையும் கூட அலைவரிசைகளை மாற்றி மாற்றி வைத்து பரவசமாகக்கேட்டுக்கொண்டிருப்போம்.
வானொலியுடன் ஒரு நெருங்கிய தொடர்பு எற்பட்டு நான் முதுகலை படிக்க பல்கலைக்கழகத்திற்கு சென்று விடுதியில் தங்கிக்கொண்டிருக்கும் போதும் வானொலிப்பெட்டியொன்றை வாங்கி கூடவே கொண்டுசென்றேன் பெற்றோர்களைப்பிரிந்து பழக்கமில்லா சூழலில் இருக்கவேண்டிய நிர்பந்தத்திலும் வருடங்களாய் காதிலும் மனதிலும் ஒலித்துக்கொண்டிருந்த அதே குரல்கள் விடுதியிலும் ஒலிக்கையில் பெரும் உற்சாகம் உண்டாகும் அப்போதெல்லாம் ,
நான் தனிமையில் இல்லை அறிந்தவர்கள் உடனிருக்கிறார்கள் என்னும் உணர்வே மேலோங்கி இருந்தது வானொலி கேட்கையிலெல்லாம்.
ஆரய்ச்சி மாணவியாக இருக்கையில் பின்னிரவுகளில் விடுதியின் மொட்டை மாடியில் தோழிகளுடன் அமர்ந்து வானொலியில் ஹிந்துஸ்தானி இசையைக்கேட்டுக்கொண்டு இருந்த பொற்கணங்கள் எல்லாம் வாழ்வில் இன்றும் பசுமையாக நினைவிலிருக்கிறது
நேயர் விருப்பமும் நிகழ்சிகளுக்கு எதிர்வினைகளுமாய ஆர்வமாக கடிதம் எழுதிக்கொண்டிருந்த காலங்களும் உண்டு ஏன் இப்போதும் கல்லூரிக்கு செல்கையில் அறிவிப்பாளர்களுடன் குறிப்பிட்ட விஷயங்களைக்குறித்து அலைபேசியில் பேசிக்கொண்டுதானிருக்கிறேன். இப்போதும் இரவுகளில் ’’மயிலிறகில்’’ பிடித்த பாடல்களை கேட்டு என் பெயருடன் அப்பாடல் ஒலிபரப்பாகையில் மிகுந்த மகிழ்வடைந்துகொள்கிறேன்
பலவகைப்பட்ட அங்கீகாரங்கள் கிடைத்துக்கொண்டுதானிருக்கின்றன அன்னையாக ஆசிரியையாக இல்லத்தரசியாக எனினும் நேயர் விருப்பம் போல ஒரு மகிழ்வான அங்கீகாரம் எனக்கு வேறு பெரிதாக ஏதும் இல்லை உண்மையிலேயே
இப்போதும் தினம் அதிகாலை எழுந்து வேலைகளைத்துவங்கும் முன்னர் வானொலி ஒலிக்கத்துவங்குகிறது வீட்டின் சமையலறையில். தனிமையில் பிள்ளைகள் உறங்குகையில் சமையலறயில் பணி செய்யும் உணர்வு எப்போதும் எழுந்ததே இல்லை எப்போதும் எப்போதுமென அறிவிப்பாளர்கள், கேட்டுக்கொண்டிருக்கும் ஒவ்வொருக்குமாய் என்னும் பிரத்யேகமான தொனியில் உடன் இருந்துகொண்டே இருக்கிறார்கள் அல்லவா?
ஹலோ எஃப் எம்மில் இருக்கும் ஜெயராம் குடும்ப உறுப்பினர் போல ஆகிவிட்டார். பல வருடங்களாக இப்படிப்பட்ட அறிவிப்பாளர்களின் குரல் இப்படி உடனிருக்கிறது.
சமயத்தில் ’’ கொஞ்சம் அடுப்பைப் பார்த்துக்கொள்ளுங்கள்,இதோ வந்துவிடுகிறேன்’’ என்று சொல்லிவிடலாமென்னும் அளவிற்கு அறிவிப்பாளர்களின் உடனிருப்பை குரல் மூலம் உணருகிறேன்
கடிகாரம் பார்த்துக்கொண்டு நாளைத்துவங்குதல் நின்றும் பல வருடங்களாகிவிட்டன. இப்போது அறிவிப்புகளும் அனேகமாய் பெரிய மாறுதல்கலில்லாத ஆயினும் சுவராஸ்யம் சற்றும் குறையாத அன்றாட நிகழ்வுகளும் மனப்பாடமாகிவிட்டபடியால்,சுப்ரபாரதத்துடன் சமையல் துவங்கி சஷ்டிகவசம் முடிகையில் காலை உணவு தயாராக இருக்கும், ராசி பலன் கேட்டதும் குளியலறைக்குச்செல்லவேண்டும் இப்படி பழக்கப்படுத்திக்கொண்டாயிற்று வாழ்வையே வானொலிக்குத்தகுந்தபடி
அதிலும் இப்போது வருடங்களாக ஜெயராமின் குரல் மனதில் பதிந்து விட்டது . பிரார்த்தனை நேரங்களில் பரிவுடன், ஆன்மீக செய்திகளை கனிவுடன், நாட்டு நடப்புகளை தெளிவுடன், அவ்வப்போது சொந்த குடும்ப விஷயங்களை சொந்தமென்று உணர வைக்கும் தொனியில் கம்பீரமாக பிசிறின்றி தெளிவாக உச்சரிக்கும் அந்தக் குரலின் தனித்தன்மை அப்படியே மனதில் பதிந்து விட்டிருக்கிறது
வெறும் நிகழ்ச்சிகளையும் செய்திகளையும் அறிவிப்பவராக கடமையுடன் மட்டும் பணியாற்றாமல் அன்பையும் ஆர்வத்தையும் பிரியத்தையும் அக்கறையையும் கலந்து சொல்வதால் சொல்பவை மனதின் ஆழம் வரை சென்று தங்கியும் விடுகின்றது
ஒவ்வோரு நாளின் சிறப்பு. மாதங்களின் சிறப்பு என்று பார்த்துப்பார்த்து பல தகவல்களையும் செய்திகளையும் திரட்டிஅதிகாலை வேலையிலேயே தொகுத்துச்சொல்லும் அவர்களின் உழைப்பு கவனிக்கத்தக்கது மட்டுமல்ல பாரட்டப்படவேண்டியதும் கூட. இது சவாலான பணியும் கூட
அனேகமாக என் எல்லா நாட்களுமே இவர்களின் குரலிலும் கருத்துக்களிலும் தான் துவங்குகிறது, ஜெயராம் உட்பட அனைது வானொலிஅறிவிப்பாளர்களுக்கும் தொடர்ந்து வரும் அவர்களின் சிறப்பான பணிக்கு எனது அனைத்து பாராட்டுக்களும் நன்றியும்,
என் அப்பாவின் தலைமுறை கேட்டுக்கொண்டிருந்தது பின்னர் நானும் அக்காவும், இப்போது என் மகன்கள் கேட்கிறார்கள் நிச்சயம் நாளை அவர்களின் பிள்ளைகளுக்கும் இவ்வழக்கம் இருக்கும் தலைமுறைகளாக தொடர்கின்றது வானொலிக்கும் எங்களுக்குமான தொடர்பு
Leave a Reply