உப்பு என்பது உணவில் பயன்படும் ஒரு கனிமம். உப்புச்சுவை மனிதனின் அடிப்படையான சுவைகளில் ஒன்று.  அதுவும் நான்கில் மூன்று பங்கு தண்ணீரை கொண்ட   பூமியில் உப்பு  ஒரு முக்கியமான அங்கமாகும். அமிலம் அல்லது நீரில் கரையும் எந்தப் பொருளும் உப்பு’ என்று வகைப்படுத்தப்படுகின்றது.

மனிதன் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே உப்பை பயன்படுத்தி இருக்கிறான். இறந்தவர்களின் உடலை பாதுகாக்க முதன்முதலில் உப்பை பயன்படுத்தியவர்கள் எகிப்தியர்களே. நாம் உணவில் சேர்த்துக் கொள்வது சோடியம் குளோரைடு எனப்படும் சாதாரண உப்பு. இதில் ஒரு குளோரின் அணுவுடன், 23 பங்கு சோடியம் அணுக்கள் இணைந்திருக்கும். நமக்கு கிடைக்கும் கனிமங்களில் மிக அதிக பயன்பாடுகளை உடையது உப்பு.

விதையும் இல்லாமல் மண்ணுமில்லாமல் கடலில் தோன்றும் இந்த ‘அதிசய விளைச்சலான உப்பு  ‘சமுத்திரமணி’, ‘நீர்ப்படிகம்’, ‘கடல் தங்கம்’, ‘பூமிகற்பம்’, ‘சமுத்திர ஸ்வர்ணம்’, ‘வருண புஷ்பம்’, ‘சமுத்திரக்கனி’, ‘ஜலமாணிக்கம்’ போற்றப்படுகிறது

சரித்திரம் முழுவதிலும், உப்பு  மதிப்பு  மிக்க பொருளாக இருந்து வந்ததால், அதற்காக போர்களும்கூட நடந்திருக்கின்றன. பதினாறாம் லூயி மன்னர் உப்பின்மீது உயர் வரியை சுமத்தியதே பிரெஞ்சு புரட்சி ஏற்பட்டதற்கான காரணங்களில் ஒன்று,.  மத்திய ஆப்பிரிக்க பழங்குடியினர் சிலர் பாறைஉப்புப் பாளங்களை பணமாக பயன்படுத்தினர். சம்பளம் என்பதற்கான ஆங்கில வார்த்தையாகியசாலரிஎன்பது  உப்பு என்று பொருள்படும் சால் என்ற லத்தீன் வார்த்தையிலிருந்து,  பண்டைய ரோம வீரர்களுக்கு பணத்தோடு உப்பும் வழங்கப்பட்ட சம்பளத்தை குறிக்கிறது. கிரேக்கர்கள் உப்பை கொடுத்து அடிமைகளை வாங்கினர்; இதுவே, “அவன் உப்புக்கு விலைபெறாதவன்என்ற பழமொழி உருவாக வழிவகுத்தது . நமது நாட்டின் சுதந்திரப்போர் தீவிரம் அடைந்ததும் உப்பு சத்தியாகிரகத்திற்கு பின்புதான்

தற்போது நடைமுறையிலிருக்கும் கடல் நீரில் இருந்து உப்பு பிரித்தெடுக்கும் முறையை கண்டுபிடித்தவர்கள் ஜெர்மானியர்கள்.  கடல் நீர் ஒரு லிட்டருக்கு 35 கிராம் உப்பைக் கொண்டுள்ளது. பாத்திகளில் பாயச் செய்து காயவிடப்பட்ட கடல்நீர் வெய்யிலின் வெப்பம் காரணமாக நீராவியானபின் உப்பு படிவுகளாகப் படிந்துவிடும். கடற்கரையை ஒட்டிய இந்த உப்புப் படிவுகளைக் கொண்ட பாத்திகள் உப்பளங்கள் எனபப்டும்.   பாத்திகளில் படியும் உப்பின் அசுத்தங்களை நீக்குவதற்காக அந்த உப்புக் கரைசலுடன் ஹைட்ரஜன் குளோரைடு வாயுவை செலுத்துவார்கள். பின்னர் ஹைட்ரோ குளோரிக் அமிலத்தால் கழுவி, நன்கு உலர்த்துவார்கள். பின்னர்தான் சமையலில் சேர்க்கப்படும் உப்பு கிடைக்கிறது.

தற்போது  கடலில் கலக்கும் கழிவுகளால் கடல்நீர் மாசடைந்து இருப்பதால்  உப்பு உற்பத்திக்குத் தேவையான தண்ணீர் ஆழ்துளைக் கிணறுகள் அமைக்கப்பட்டு எடுக்கப்படுகிறது

உலகின் முக்கிய உப்பு உற்பத்தி நாடுகளான சீனா மற்றும் அமெரிக்காவுடன், இந்தியாவும் மூன்றாவது இடத்தைப் பகிர்ந்து கொள்வதோடு தற்போது உப்பின் முக்கிய ஏற்றுமதியாளராகவும் உள்ளது. இந்தியாவில் ஆண்டுதோறும் 20 மில்லியன் டன் உப்பு உற்பத்தியில் 70% கடல் மூலம் நடைபெறுகிறது.  இதில் 59 லட்சம் டன்கள் உணவு பயன்பாட்டுக்காகவும், 107 லட்சம் டன்கள் தொழிற்துறை பயன்பாட்டுக்கும் உதவுகின்றன.

இந்தியாவில் நான்கு விதமான முறைகளில் உப்பு தயாரிக்கப்படுகிறது. கடல் நீர், ஏரி நீர், நிலம், பாறைகளில் இருந்து உப்பு பெறப்படுகிறது. குஜராத்தின் பல இடங்களிலும் , தமிழகம்,  கேரளத்தின் கோவளம்,   ஆந்திரா,மகாராஷ்டிரா,ஒரிசா மற்றும், மேற்கு வங்கத்திலும் கடலில் இருந்து உப்பு தயாரிக்கப்படுகிறது. ஏரியில் இருந்து உப்பு தயாரிக்கும் முறையானது ராஜஸ்தானிலும், நிலப்பகுதியில் தோண்டியெடுக்கும் உப்பானது கட்ச் பகுதியிலும், பாறை உப்பு இமாச்சல் பிரதேசத்திலும் உற்பத்தி செய்யப்படுகிறது.

உப்பின்  பிற வகைகள்

பாம்பூ உப்பு (bamboo salt) – கடல்  உப்பை மூங்கில் உருளைகளுக்குள் அடைத்து ,மண்ணிலிட்டு,வறுத்துத் தயாரிக்கிற ஒரு வகையான உப்பு இது. மூங்கில் எரிய ஆரம்பிக்கும் போது,உப்பு உருகும்.அப்போது மண்ணில் இருந்த தாதுக்களைக் கிரகித்துக் கொள்ளும்.அசாமில் இந்த வகையான உப்பு பிரபலம்!

கோஷர் உப்பு ( kosher salt )-பூமிக்கடியில்  சேர்கிற உப்புப்படிவத்திலிருந்து  பெரிய பெரிய கட்டிகளாக பெறப்படும்.கடல் உப்பை விட இதில் தாதுக்கள் குறைவு.சாட் மசாலாவில் இது பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.

மேசை உப்பு (table salt) -கடல் நீரிலிருந்து எடுக்கப்பட்ட பிறகு சுத்திகரிக்கப்பட்டு தேவையற்ற தாதுப்பொருட்களை நீக்கி, சில ரசாயனக்கள் சேர்க்கப்பட்டு மிகவும் சிறிய துகள்களாக்கப்படுகின்றது. விரைவில் கரையும்  மற்றும் மற்ற உணவுகளுடன் உடனே  கலக்கும் என்பதால்,சமையலுக்கு உகந்தது.

கோஷர் உப்பு (Koshar salt)-கடல் நீரிலிருந்து எடுக்கப்படுகிற சற்றே கரகரப்பான பெரிய துகள்கள் பிரமிட் வடிவிலிலுள்ள , அயோடின் அறவே இல்லாத இந்த உப்பு மிக மெதுவாகத்தான் கரையும்.

இன்பியூஸ்டு உப்பு – (Infused salt) கல் உப்புடன் வெனிலா,சாக்லெட்,காபி,மிளகாய்,சில வகை மூலிகைகளை உபயோகித்து பெறப்படுகிற, சுவையும், மணமும் அதிகமுள்ள்ள இந்த உப்பு .ஐஸ்கிரீம்,இனிப்பு, மற்றும் சூடான பானங்களில் சேர்க்கக் கூடியது.

குளோரின், காஸ்டிக் சோடா மற்றும் சோடா சாம்பல் ஆகியவற்றின் தயாரிப்பில் உப்பு முக்கியப் பயன்பாட்டுப் பொருள். மீன்களை கெடாமல் பாதுகாத்தல், காய்கறிகளைப் பதப்படுத்தல், இறைச்சிப் பதப்படுத்தல் மற்றும் காகிதத் தயாரிப்பு போன்ற தொழில்துறைப் பயன்பாடுகளிலும் உப்பின் முக்கியத்துவம் அதிகம்.

சுவையூட்டியாகவும் பதனப்படுத்தும் பொருளாகவும் பயன்படுத்தப்படுகின்ற உப்பு மனிதனின் உடம்பில் உள்ள திரவ நிலையினை சமப்படுத்துகிறது. எந்த வகை உப்பாயினும் அளவோடு பயன்படுத்துவதே நல்லது.