பொதுவாக நஞ்சு, நச்சுத்தனமை என்றாலே நமக்கு பாம்புகள் மற்றும் தேள் போன்றவற்றின் நினைவுதான் வரும்.ஆனால் இவை மட்டுமல்லாது உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான தாவரங்கள், தங்களை உண்ண வரும் மேய்ச்சல் விலங்குகளிடம் இருந்து தப்பிக்க, தற்காப்பிற்காக உடலில் சில கொடிய வகை விஷங்களை கொண்டுள்ளன. நச்சுத் தாவரங்களின் பாகங்களை உண்டால் மட்டுமல்ல சிலவற்றை தொட்டாலே நஞ்சினால் நாம் பாதிக்கப்படுவோம். அப்படியான உலகின் மிக முக்கியமான நச்சு தாவரங்கள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம். இவற்றில் பல தாவரங்கள் நம்மை சுற்றிலும் சாதாரணமாக காணப்படுபவை.எனவே இவற்றின் ஆபத்துகளை குறித்து அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்
1. அரளி-Nerium oleander
கிழக்காசியாவை தாயகமாக கொண்ட பல நிற மலர்களுக்காக அறியப்படும் அலங்காரச் செடியும் பூஜைக்குரிய மலர்களுக்காக வளர்க்கப்படும் செடியுமான அரளியின் அனைத்து பாகங்களுமே, வேரிலிருந்து மலர்த்தேன் வரை நச்சுத்தன்மை கொண்டது
இவற்றிலிருக்கும் நெரியோசைட் மற்றும் ஓல்டென்ட்ரின் (nerioside & oldendrin ) போன்ற நச்சுத்தன்மை கொண்ட வேதிப்பொருட்களே இதன் அபாய தன்மைக்கு காரணம். தாவரத்தை எரிக்கும் புகை கூட நச்சுத்தன்மை கொண்டது
தாவர பாகங்களின் புகையை நுகர்ந்தால் வயிற்றுப்போக்கு, வாந்தி மற்றும் இதய துடிப்புகளில் மாறுபாடு ஆகியவற்றை உண்டாக்கும்..அரளிச்செடியின் இலைகளை அல்லது மலர்களை உண்டால் இதய துடிப்பும் ரத்த அழுத்தமும் குறைந்து, கண் பார்வை மங்குதல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு உண்டாகி சிகிச்சை அளிக்காத போது உயிரிழப்பும் ஏற்படும்
2. மரண ஆப்பிள்-Hippomane mancinella
கரீபியன் தீவுகளை பிறப்பிடமாகக்கொண்ட நெல்லிக்காய் குடும்பமான யுஃபோர்பியேசியை சேர்ந்த manchineel tree என்றழைக்கபடும் மரம்தான் உலகின் நச்சுமரங்களில் மிக அதிகளவு நஞ்சை கொண்டது.பால் வடியும் இம்மரத்தின் தண்டு, பட்டை, இலை, மலர், கனி என அனைத்து பாகங்களிலும் இருக்கும், எண்ணற்ற நச்சுப்பொருட்கள் இம்மரத்தின் பாலில் கலந்திருக்கும்.
கண்களில் இம்மரத்தின் பால் பட்டால் பார்வையிழப்பு உண்டாகும். மரத்தடியில் மழைக்காலங்களில் நிற்கும் கார்களின் வண்ணம் உரிந்து வந்துவிடும். அறியாமல் இம்மரத்தின் கனிகளை உண்பவர்களுக்கு குடல் புண்ணும், இரத்தப்போக்கும், கைகால் வீக்கமும் உண்டாகின்றது.
3. நீர் ஹெம்லாக்-Conium maculatum
மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த தாவரங்களில் ஒன்றான ஹெம்லாக் என்ற பெயர் கிரேக்க தத்துவத்தில் பரிச்சயமுள்ள அனைவருக்கும் சாக்ரடீஸின் நினைவை ஏற்படுத்தும். இந்த ஹெம்லாக் நஞ்சை அளித்தே சாக்ரட்டீஸ் கொல்லப்பட்டார். ஹெம்லாக்கில் உள்ள (cicutoxin and cicunol), சிகுடாக்சின் மற்றும் சிகுனால் ஆகிய நச்சுகள் வலிப்பு மற்றும் நடுக்கத்தை ஏற்படுத்தி நரம்பு மண்டலத்தை சேதப்படுதுகின்றன
4. ஏஞ்சல் ட்ரம்பெட்-Brugmansia suaveolens
நம்மில் பலரும் இந்த அலங்கார செடிகளை பல இடங்களில் பார்த்திருப்போம். தென் அமெரிக்காவின் வெப்பமண்டல பகுதிகளை பூர்வீகமாகக் கொண்ட ஏஞ்சல் ட்ரம்பெட்கள் கவிழ்ந்து தொங்கும் நீண்ட பெரிய குழல் வடிவ அழகிய வெண்மலர்களை கொண்டிருப்ப்வை. தாவர் பாகங்கள் அனைத்தும் மிகவும் நச்சுத்தன்மை கொண்டவை. புதர்ச்செடிகளான இவற்றின் மலர்கள் பலவித வண்ணங்களில் இருக்கும்
இவற்றின் அனைத்து பகுதிகளிலும் ட்ரோப்பேன் அல்கலாய்டுகள் ஸ்கோபோலமைன் மற்றும் அட்ரோபைன் போன்ற நச்சுகள் ( tropane alkaloids scopolamine & atropine) உள்ளன. இவற்றை உட்கொள்ளல் வயிற்றுப்போக்கு, பக்கவாதம் மற்றும் மரணத்தை ஏற்படுத்தும்
5. வெள்ளை பாம்பு வேர் செடி / நட்சத்திர பூச்செடி
நமில் பலரும் மலை வாசஸ்தலங்களுக்கு செல்லுகையில் வழியெங்கும் புதராக செறிந்து வளர்ந்திருக்கும் இந்த களைச்செடியை பார்த்திருப்போம்.பலரின் உயிரிழப்புக்கு இச்செடியின் நஞ்சுகள் காரணமாக இருந்திருக்கிறது. இந்த செடியின் விஷம் தான் ஆபிரகாம் லிங்கன் தாயார் நான்சி ஹாங்க்ஸ் லிங்கனின் மரணத்திற்கு காரணமாக இருந்ததது.இதன் நச்சுத்தனமைக்கு ட்ரெமெட்டோம் (Tremetome) என்ற வேதிப்பொருளே காரணம் . தாவர பாகங்களை உண்டால் கடும் வாந்தி மற்றும் சித்தப்பிரமை போன்றவை உண்டாகும் இதன் வேர்களை பாம்பு கடிக்கு சிகிச்சையாக பயன்படுத்தப்படுவதால், இந்த பெயர் இதற்கு ஏற்பட்டது.
6. பெல்லடோனா-Atropa bella-donna
தக்காளி மற்றும் உருளைக்கிழங்கு குடும்பத்தைச் சேர்ந்த இத் தாவரத்தின் அனைத்து பகுதிகளும் குறிப்பாக வேர் மற்றும் பழங்கள் நச்சுத்தன்மை கொண்டவை. தாவரத்தில் உள்ள முக்கிய நச்சுப் பொருட்கள் அட்ரோபைன், ஸ்கோபோலமைன் மற்றும் ஹியோஸ்சியமின். (atropine, scopolamine and hyoscyamine.)
இவை நரம்பு மண்டலத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன. நச்சுவிளைவுகள் வெளிப்பட பல நாட்கள் ஆகும்.அதிகரிக்கும் இதயத்துடிப்புகள், மங்கலான பார்வை மற்றும் சித்தப்பிரமை ஆகியவை இதன் பொதுவான அறிகுறிகளாகும். சிகிச்சை அளிக்காவிட்டால் மரணம் உண்டாகும்
7. அகோனைட்-Aconitum napellus
சாத்தானின் ஹெல்மெட் என்னும் அச்சுறுத்தும் பெயரில் அறியப்படும் இந்த அகோனைட் ‘விஷங்களின் ராணி’ என்று அழைக்கப்படுகிறது. இந்த தாவரத்தை தொடுதல் கூட கடும் தீங்கு விளைவிக்கும் தாவரத்தின் நச்சுத்தன்மைக்கு அகோனைடைன் என்னும் நஞ்சே காரணமாகும்.(aconitine). நச்சு விளைவுகள் உடனடியாக உள்ளன, வயிற்றுப்போக்கு முதல் சுவாச பிரச்சினைகள் வரை இதன் ஆபத்துகள் இருக்கும் சிகிச்சை இல்லாதபோது, இது மரணத்தை விளைவிக்கும்.
8. தற்கொலை மரம் –Cerbera odollam
கேரளாவில் மட்டும் ஆண்டுக்கு சுமார் ஐம்பது உயிரிழப்புகளை ஏற்படுத்தும் இந்த மரம் தற்கொலை மரமென்றே அழைக்கப்படுகின்றது. அதிகம் தற்கொலைக்கும் கொலைக்கும் இந்த மரத்தின் பாகங்கள் பயன்படுவதால் இந்த பெயர் வந்தது. அரளியின் குடும்பத்தை சேர்ந்த இதன் விதைகளில் செர்பெரின் (cerberin ) என்ற வலுவான நஞ்சு உள்ளது, இது இதயத்தின் தாளத்தை சீர்குலைக்கிறது. இதன் பரவலான பயன்பாட்டிற்கு காரணம் , அதன் சுவையை காரமான உணவைப் பயன்படுத்தி மறைக்க முடியும் என்பதுதான். உண்டவர்கள் பிழைப்பது அரிது.
9.குன்றிமணி-Abrus precatorius
குன்றி, குன்றி மணி, அலங்கார பட்டாணி என பல பெயர்களால் அறியப்படும் இந்த தாவரத்தின் விதைகளே குன்றிமணிகள். குன்றிமணியில் இருக்கும் ஆப்ரின் (Abrin) என்னும் நஞ்சு மிக கொடியது. இந்த நஞ்சுக்கு இன்னும் முறிமருந்து கண்டறியப்படவில்லை. இவற்றை கடித்து விழுங்கினால் உயிர்பிழைப்பது கடினம். தவறாக முழுதாக விழுங்கினால் எந்த ஆபத்தும் இல்லை. சரியான சிகிச்சை சரியாக நேரத்தில் கொடுக்கப்பட்டால் மட்டுமே இந்த நஞ்சிலிருந்து பிழைக்க முடியும்.
10. ஆமணக்கு-Ricinus communis
உணவு மற்றும் மருந்துகளில் பரவலாகப் பயன்படுத்தப்படும் ஆமணக்கு தாவரங்களின் உலகத்திலிருந்து மிகவும் சக்திவாய்ந்த விஷங்களில் ஒன்றையும் உற்பத்தி செய்கிறது. ஆமணக்கு விதைகளில் காணப்படும் ரிசின் (Ricin) பாம்பு விஷம் மற்றும் சயனைடை விட ஆபத்தானது, இந்த நஞ்சினை உண்பது வாந்தி மற்றும் வலிப்புக்ளை உண்டாக்கி இறுதியில் சிறுநீரக செயலிழப்பு மற்றும் மரணத்திற்கு வழிவகுக்கிறது.
Leave a Reply