ஜெய்பீம்

நீதிமன்ற வழக்குகளை அடிப்படையாக கொண்ட திரைப்படங்களில் சமீபத்தில் மிக அதிகம் சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்பட்டதும், உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட வெற்றிப்படமுமான ஜெய்பீம் வெகுநாட்களுக்கு பிறகு வந்திருக்கும் நல்ல தமிழ்ப்படம்.

திரைப்படங்கள் கேளிக்கைக்கானவைகள் மட்டுமல்ல மக்களுக்கு பல முக்கிய விஷயங்களையும், சகமனிதர்களுக்கு நிகழும் அநீதிகளையும், சொல்லவும் இந்த சக்திவாய்ந்த ஊடகம் பயன்படுமென்பதை ஜெய்பீம் சமீபத்தில் நிரூபித்திருக்கிறது.

நீதிமன்ற வழக்கை அடிப்படையாக கொண்டு ஜோதிகாவை வைத்து  எடுத்த  ’பொன்மகள் வந்தாள்’ படத்திற்கான பிழையீடாக இந்த திரைப்படத்தை சூர்யா சொந்த தயாரிப்பில் எடுத்திருக்கிறார் என்றும் சொல்லலாம்.

நீண்ட வழக்கு விசாரணைகளை, சோர்வடைய வைக்காமல் பார்வையாளர்களையும் விசாரணையுடன் ஒன்றச்செய்யும் விதமாக அமைத்திருக்கிறார்கள். கதாபாத்திர தேர்வு, திரைக்கதை, பின்னணி இசை, ஒளி இயக்கம், படத்தொகுப்பு,  இயக்கம் ,சூர்யாவின் நடிப்பு என அனைத்துமே வெகு சிறப்பு

 நீதிமன்ற வழக்கை அடைப்படையாக கொண்டு வந்திருக்கும் முந்தைய திரைப்படங்களிலிருந்து ஜெய்பீம் வேறுபடுவது எடுத்துக்கொண்ட வழக்கில் வெற்றி பெறுவது மட்டுமல்லாது  இதில் பழங்குடியினப் பெண்ணுக்கு நீதி கிடைப்பதும், அந்த இனத்துக்கு நடந்துகொண்டிருக்கும் அநீதிகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்திருப்பதிலும்தான்.

  1995’ல் ஹேபியஸ் கார்பஸ் ஆட்கொணர்வு மனு சமர்ப்பிபிக்கபட்ட வழக்கொன்றை நீதியரசர் சந்துரு என்பவர் கையிலெடுத்து, அவ்வழக்கில் நீதியை பெரும் போராட்டத்துக்கு பின்னர் வாங்கிக்கொடுத்தார் அந்த உண்மை வழக்கையே ஜெய்பீம் ஆக்கி இருக்கிறார் சந்துருவாக நடித்திருக்கும்  சூர்யா.

அப்பாவியான ராஜாக்கண்ணு என்னும் பழங்குடியின இளைஞனொருவனை திருட்டு வழக்கில்  முறையின்றி கைதுசெய்து, பின்னர்  லாக்கப்பிலிருந்து அவன் தப்பி விட்டதாக சொன்ன காவல்துறைக்கெதிரே வழக்கு தொடர்ந்து, தன் கணவனை கண்டுபிடிக்க போராடிய கர்ப்பிணியான செங்கேணியின் கதை இது

.சிறைச்சாலையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்து கொண்டிருப்பவர்களிடம் நேரிடையாக அவரவர் ஜாதியை கேட்டு அதன்படி அவர்களை  வரிசையில் நிற்க வைக்கும் காட்சியும், விடுதலையாகி வரப்போகும் கைதிகளுக்காக குழந்தைகளுடன் காத்திருக்கும் அவர்களின் எளிய பின்னணியை சேர்ந்த குடும்பத்தினரும், அவர்கள் கண்முன்னே கைதிகளுக்கு நடக்கும் கொடுமையுமாக தொடக்க காட்சியிலேயே  நம் மனதை கலங்கடிக்கிறார்கள்

எண்ணெய் காணாத தலைமுடியும், ஒட்டி உலர்ந்த தேகமுமாக இருக்கும் அவர்களின் மீது காட்டப்படும் அதிகார துஷ்பிரயோகமும் வன்முறையையும்  பார்வையாளர்களால் மறக்க முடியாத வகையில் படமாக்கப்பட்டிருக்கிறது

திரைப்படம் காட்டுவது உண்மையில் நடந்தவற்றில் மிக்குறைவு என்பதையும் நம்மால் உணரமுடிகின்றது.

சூர்யாவுடன் திரைக்கதையும் இணைநாயகனன்று சொல்லுமளவுக்கு கச்சிதமாக, சிறப்பாக  இருக்கிறது. பலகோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிருக்கும் நீதிமன்றமும் படத்துக்கு பலம் சேர்க்கிறது.கலை இயக்குனருக்கு தனித்த பாராட்டுக்கள்.

மணிகண்டனின் திரைவாழ்வில் என்றென்றைக்குமாக அவர் பேர் சொல்லப்போகும் முக்கியமான திரைப்படம் இது. மகேஷிண்டெ பிரதிகாரத்தில் குட்டிப்பெண்ணாக வந்த லிஜோமோளா செங்கேணியாக  இத்தனை சிறப்பாக நடித்திருப்பது என்றூ வியக்காமல் இருக்கமுடியவில்லை.

பிரகாஷ்ராஜ் மகுடத்தில் ஜெய்பீம் மேலுமொரு அருமணி. நிதானமான, கம்பீரமான  மனசாட்சியுடனிருக்கும் காவலதிகரியாக பிரமாதப்படுத்தியிருக்கிறார்

 காவல்துறையின் அதிகார எல்லைகள், விசாரணைக்கொலைகள்,  சாதீய அடக்குமுறைகள் மற்றும் அநீதிகளை குறித்து தமிழில் இத்தனை விரிவாக, இத்தனை சிறப்பாக முன்பு திரைப்படங்கள் வந்ததில்லை.

பாடல்கள் அனைத்துமே திணிக்கப்பட்டவைகளாக இல்லாமல் கதையுடன் காட்சியுடன் இணைந்து படத்துக்கு இன்னும் வலுசேர்க்கின்றன.
 

ஆவணப்படமாக மாறக்கூடிய சாத்தியங்கள் வெகுவாக இருந்தும் கதை சொல்லும் சாமார்த்தியத்தால் சுவாரஸ்யம் குறையாமல் இதை அழகிய திரைப்படமாக்கியதற்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள். தொடக்க காட்சிகளுக்கு பிறகு திரைப்படம் பார்க்கும் உணர்வு காணமல் போய், கதாபாத்திரங்களின் உணர்வுகளும், இழப்பும் வலியும் துயரும் அச்சமும் எல்லாமுமே நமக்கே உண்டானதைப் போல படத்துடன்  ஒன்றிப் போகிறோம்.  பிரச்சாரநெடியும் இல்லாமல் கவனமாக படமாக்கப்பட்டிருப்பதும் கூடுதல் சிறப்பு.

நகைச்சுவையும், பாட்டும்.நடனமும், மசாலாவுமான படங்களில் நடித்து தமிழ்திரையுலகில் வெற்றிகரமான கதாநாயகனாயிருக்கும் சூர்யா இந்த சந்துரு பாத்திரதை ஏற்று சிறப்பாக நடித்திருப்பதும், இந்த படத்தை சொந்த தயாரிப்பில் உருவாக்கியிருப்பதும் பாராட்டுக்குரியது..

 முதல் ஒருமணிநேர திரைக்கதை நம் மனதில் உண்டாக்கும் வலியும் தொந்தரவும் இனி எப்போதும் நீடித்திருக்கும், அத்தனைக்கு  அசலான காட்சிகள் அசலான நடிப்பு. அலறல் நிஜம் அடி நிஜம் துயரம் நிஜம் என்று மனதை கசக்கும் காட்சிகள். அதுவும் ராஜாக்கண்ணுவின் அக்காவுக்கு லாக்கப்பில் நடப்பதை பார்க்க மனோதைரியம் வேண்டும்.

 இரண்டாம் பாதியில் படம் இன்னும் வலுவாக, இன்னும் ஆழமாக செல்கின்றது. வாத பிரதிவாதங்களின் போது சூர்யா பிரமாதப்படுத்தி இருக்கிறார். 2.45 நிமிடம் நீளமென்றாலும் தொய்வின்றி இருக்கை நுனியில் நம்மை கொண்டு வரும் பல காட்சிகளுடன் இருக்கிறது ஜெய் பீம். பழங்குடியினருக்கு கல்வியளிக்கும் ஆசிரியை பாத்திரமும் சிறப்பு

 ஷான் ரோல்டனின் இசை திரைக்கதையுடன் இணைந்தே பயணிக்கிறது. கதாபாத்திரங்களின் உணர்வையும் வலியையும் பார்வையாளர்களுக்கும் கடத்துவதில்  இசையும் முக்கியப்பங்காற்றுகிறது.

எந்த எந்த காரணங்களுக்காக தங்களை காவல்துறை கைது செய்தார்கள் என்பதை சிறுவர்களும், பெண்களும் வயதானவர்களுமாக பழங்குடியினர் விவரிக்கையில் நம்மால் கண்ணீரை கட்டுப்படுத்தவே முடியாது.

  இணையத்தில் ராஜாக்கண்ணுவின் வழக்கும், சந்துரு அவர்களின் விசாரணையும், தீர்ப்பும் பிற விவரங்களும் கிடைக்கிறது படத்தை பார்க்கும் முன்பு அவற்றை குறித்தும் அறிந்துகொள்வது படத்தை மனதுக்கு இன்னும் அணுக்கமாக்கும் சகமனிதர்களின் துயரை மிகச்சரியாக அறிந்துகொள்ளவும்  முடியும்.

செங்கேணியின் மகள் அல்லியாக வரும் சிறுமியின் இயல்பான நடிப்பும் குறிப்பிட்டு பாராட்டப்பட வேண்டியது. அத்தனை துயரங்களுக்கு இடையிலும் அல்லி எழுதப்படிக்க கற்றுக்கொள்ளுவதும் இறுதியில் சூர்யாவுக்கு இணையாக அவளும் நாற்காலியில் கால்மேல் கால் போட்டுக்கொண்டு நாளிதழை வாசிப்பதும் காலம் மாறும் என்னும் நம்பிக்கையை விதைக்கும் காட்சிகள்.

அமேஸான் பிரைமில் இருக்கும் ஜெய்பீம் அவசியம் அனைவரும் பார்க்கவேண்டிய படம். லாக்கப் வன்முறைக்காட்சிகள் பெரியவர்களுக்கே மன நடுக்கத்தை தருமென்பதால் குழந்தைகளுடன் பார்க்க உகந்ததல்ல.