லோகமாதேவியின் பதிவுகள்

Category: திரைப்படம் (Page 5 of 6)

நேர் கொண்ட பார்வை

ஹெச். வினோத்தின்  எழுத்து மற்றும் இயக்கத்தில் போனிகபூரின் தயாரிப்பில் 2016 ல் வந்த (’’பின்க்’’ஹிந்தித் திரைப்படத்தின் மறுஆக்கமான) நேர்கொண்ட பார்வை 8/8/2019 அன்று  உலகெங்கும் வெளியானது அஜித் குமாருடன்  கன்னட நடிகை ஸ்ரத்தா, அபிராமி , ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய பாத்திரமேற்று நடித்துள்ள legal drama வகைப்படம் இது. ஆண்ட்ரியா மட்டுமே மூலப்படமான பின்க்’ கிலும் நடித்தவர். இசை யுவன் ஷங்கர் ராஜா. வித்யா பாலன் அஜித்தின் ஜோடியாக தமிழில் இப்படத்தில் அறிமுகமாகிறார்.பிரபல நடிகை கல்கி கோச்லினும் துவக்க பாடலில்  மட்டும் வருகிறார்

பின்க் சொன்ன அதே கதைதான்  எனினும் இதில்  அஜீத்திற்கு ஏற்ப கொஞ்சம் மாற்றியிருக்கிறார்கள். அமிதாப் நடித்த வயதான ஒரு பாத்திரத்திற்கு ஒத்துக்கொண்டதற்கும் மிக அழகாக இப்பாத்திரத்தை கையாண்டதற்கும் அஜித்தை பாராட்டியே ஆகவேண்டும்.

நிகழ்வுகளில் நடனமாடும் ஸ்ரத்தா,  கால் சென்டரில் வேலைபார்க்கும், மணமுறிவான பேராசிரியருடன் வாழ்வை பகிர்ந்துகொண்டிருக்கும் பேரிளம்பெண்ணான அபிராமி, ஒரு சலூனில்   சிகை அலங்கார நிபுணராக இருக்கும் ஆண்ட்ரியா, இவர்கள் மூவரும் சென்னையில், பூந்தொட்டிகளும் டெராரியமும்  மூலை முடிச்செல்லாம் பசுஞ்செடிகளும் நிறைந்திருக்கும் ஒரு அழகிய வீட்டில் வாடகைக்கு  வசித்து வருகிறார்கள்.

ஸ்ரத்தா நடனமாடும் ஒரு நிகழ்வுக்கு மூவருமாக சென்றுவிட்டு திரும்ப எத்தனிக்கும் ஓரிரவில் அவர்கள்  சில  இளைஞர்களை சந்திக்கின்றனர். அதன்பின்னர் நடக்கும் எதிர்பாரா விஷயங்களால் அப்பெண்களின் வாழ்வே முற்றிலுமாக மாறிவிடுகிறது.,  வழக்கறிஞர் உத்யோகத்திலிருந்து ஓய்வு பெற்ற அஜித்  அரசியல்  மற்றும் குண்டர்கள் தொல்லைகளையும், கடந்த கால வாழ்வின் கசப்புகளினால் அவருக்கு ஏற்பட்டிருக்கும் உடல்நிலையையும் சமாளித்து மூன்று பெண்களுக்கும் உதவி எப்படி அனைத்தையும் சீராக்குகிறார் என்பதே கதை

 துடிக்கும் இசையுடன் நடனம் , கொப்பளித்து ததும்பும் இளைஞர் கூட்டம்,   விரையும் காரினுள் இருக்கும் இளைஞனின் மண்டை உடைந்து கொட்டும் இரத்தம்,, இறுகிய முகத்துடன் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் பயணிக்கும் மூன்று பெண்கள், மிக அருகே என மோத வரும் ஒரு லாரி என துவக்க காட்சிகளே படத்தை  பரபரப்பாக்குகிறது

வழக்கம் போலவே எந்த ஒப்பனையும் இல்லாது முகத்தை கழுவிவிட்டு அப்படியே படப்பிடிப்பிற்கு வந்தாற்போல  உப்பும் மிளகுமான தலைமுடியுடன்  அஜீத்.  அவர் திரையில் தோன்றியதும் அவரது ரசிகர்கள் ததும்பி வெறி கொண்டு கூச்சலிடுகிறார்கள்.. பென்சில் மீசையும், பொய்த்தலைமுடியும் லிப்ஸ்டிக் பூசப்பட்ட உதடுகளும் சேர்ந்து அளிதது வந்திருந்த   வந்த நாயகன் என்னும் பிம்பமெல்லாம் வழக்கொழிந்துபோய், திரைக்கு பின்னும் முன்னுமான   ஆளுமையால் மட்டுமே இப்போது நாயகர்கள் இளைஞர்களை ஈர்க்கமுடியுமென்பதை , ,திரையில் அவரை நோக்கி வீசப்பட்ட  வண்ணக்காகிதங்களும் காது கிழியும் படியான விசிலும் கூச்சலும் உணர்த்தின

என்ன நடந்தது என்பதை பிற்பாடு நீதிமன்றத்தில் தன் நாம் புரிந்துகொள்கிறோமென்றாலும் பெண்கள் மூவரும் எதிர்கொள்ளும் பிரச்சனைகளும், அரசியல் செல்வாக்குடைய ஆதிக்’தான் அடிபட்டது என்று தெரியும் போதும், ஸ்ரத்தா கடத்தபடுகையிலும்  நாமும் பதட்டமாகிறோம்.

 பூங்காவில் அமர்ந்திருக்கும் அஜீத் மாத்திரைகளை போட்டுக்கொள்ளாமல் இருக்கையில் அவருக்குள்ளிருந்து திமிறிக்கொண்டு, கட்டுக்களையும் தளைகளையும் அறுத்துக்கொண்டு வெளிவரத்துடிக்குமொன்றை அவர் கட்டுப்படுத்திக்கொள்வதை மிக நன்றாக காட்டியிருக்கிறார். அந்த பூங்காவில் நடக்கும் சண்டைக்ககாட்சி ( கதைக்கு தேவையற்றது எனினும் ) பிரமாதம். உடைந்த குழாயிலிருந்து பீறிட்டு வரும் நீரின் பிண்ணணியில், யுவனின் பொருத்தமான இசையுடன் ஒவ்வொரு அடியும் இடியாக நம் இதயத்தில் விழுகிறது. தமிழில் வித்யா பாலன், நல்ல புஷ்டியாக கொழுக் முழுக்கென்றூ இருக்கிறார். Close up காட்சிகளில் கண் பட்டுவிடும் என்றூ சொல்லும் அளவிற்கு பேரழகியாக இருக்கிறார்.அகலாதே மனதை விட்டு அகலாத பாடல்.

மகேசின்டெ பிரதிகாரத்தின் வில்லனாகிய சுஜித் இதிலும் வருகிறார் மிக இயல்பான உடல்மொழி அசத்தல் நடிப்பு. தமிழுக்கு ஒரு நல்ல உருப்படியான வில்லன் கிடைத்திருக்கிறார்.

நீதிமன்ற நிகழ்வுகள் மிக நன்றாக காட்சிப்படுத்தபட்டிருக்கின்றன. அரங்கு மொத்தமும் மிக அமைதியாக கவனிக்கிறது வசனங்களை. Are you a virgin ? என்று அஜித் ஸ்ரத்தாவை கேட்கும் கேள்வியைப்போல, தமிழ் சமூகமும், திரையுலகும் கொஞ்சமும் நினைத்திராத பல திடுக்கிடும் கேள்விகள் நம்முன் கேட்கப்படுகின்றன.

nerkonda-paarvai-et00104821-12-06-2019-04-13-49

இப்படம் ஆண்களுக்கு இணையாக பெண்களும் தவறுசெய்யலாம் என்று சொல்லும் படமல்ல. வெகுவாகவும் விரைவாகவும் மாறிவரும் கலாச்சார சூழலில், சில பண்பாட்டுக்கூறுகள் முற்றிலுமாக அழிந்துவிட்டதை நாம் விசால மனதுடன் புரிந்துகொள்ள வேண்டுமென்றும், கற்பை மட்டுமல்ல இதுபோன்ற தவிர்க்கவே முடியத சில அம்சங்களையும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாக வைக்கவேண்டும் என்றும் சொல்லுகிறது

இறுதியாக அஜித் சொல்லும் ’”NO என்றால் அது NO’” தான் என்பது, அவர் குரலாக மட்டுமல்லாது பல்லாயிரம் பாதிக்கப்பட்டவர்களின் குரலாகவும் ஒலிப்பதால் பெரும் ஆறூதலளித்தது .தினமலர், ஆயுத எழுத்து, என் கேள்விக்கென்ன பதில் போன்ற நிகழ்ச்சிகளில் பிரபலமான தொலைக்காட்சி புகழ் ரங்கராஜ் பாண்டே இதில் அரசுத்தரப்பு வக்கீல். மிக மிகப்பொருத்தமான பாத்திரம் அவருக்கு. இருக்கையிலிருந்து எழுந்து அவரை ஓங்கி அறைந்துவிடலாமாவென்று நினைக்க வைக்கும் உடல்மொழியும் வசனவெளிப்பாடும். பிரமாதப்படுத்தி இருக்கிறார்.

டெல்லி கணேஷும் ஸ்ரத்தாவின் அப்பாவாக வருகிறார். புராதன அப்பாவாக இன்றி மகள் குடிப்பது கன்னித்தன்மையை இழந்தது பற்றியெல்லாம் கேட்டபின்னரும் நீதிமன்றத்தில் இருக்கிறார், வருந்துகிறார். ஆனால் எந்த காட்சியிலும் ’’அடிப்பாவி மகளே! மோசம் பண்ணிட்டியே,   என்று  கண்ணீர் விட்டு கதறியோ  வழக்கமான தமிழ்சினிமாவில் போல்  மொத்துமொத்தென்று மொத்தியோ இருந்தால் இப்படம் சொல்ல வந்ததை சொல்ல முடியாமல் போயிருக்கும். இப்போது காலம் மாறியிருக்கிறது என்பதை டெல்லி கணேஷ் பாத்திரமும் நமக்கு உணர்த்துகிறது

பெண்களின் பாலுறவு தொடர்பான   சிக்கல்களுக்கும், வீட்டிற்கு வெளியே அவர்களுக்கு  எப்போதும் கூர் நகங்களுடனும் கோரைப்பற்களுடனும் காத்திருப்பதாக நாம் நம்பும் ஒரு ஆபத்தான உலகிற்கும் அவர்கள் அணிந்துகொள்ளும் ஆடைகளும், அவர்கள் சுயமாக எடுக்கும் துணிச்ச்சலான முடிவுகளும், அவர்களும் மது அருந்துவதும் தான் என்று காரணங்களை நாம் அடுக்காமல் இதற்கு நாம் எத்தனை தூரம் காரணமாயிருக்கிறோம் என்றும் யோசனை செய்ய சொல்லும் படமிது. கூட்டுக்குடும்பம் இல்லை பல வீட்டில் ஒற்றை பெற்றோர் அல்லது ஒற்றை பிள்ளைகள்.  சொந்தம் பந்தம் என்று எதுமில்லா சூழலில் உள்ளத்திலுள்ள பதின்பருவ சிக்கலகளை பகிர்ந்துகொள்ள யாருமற்ற ஒரு சமூகத்தில் அவர்கள் வளரவேண்டி வந்திருப்பதில் நம் பங்கு என்ன என்பதை சிந்திக்க வேண்டும்

 பெண்களும் ஆண்களும் எதையெதையெல்லாம் செய்யலாம் செய்யக்கூடாது என்று பாடம் எடுக்கும் படமுமல்ல இது.கலாச்சார மாறுதல் என்பது ஒரு சுனாமி போல வெகு விசையுடன் இளைஞர்களை உள்ளிழுத்துகொண்டிருக்கையில் நாம் இன்னும் பெண்கள் எதை செய்யலாம் செய்யக்கூடாது என்று பட்டியல் போட்டுக்கொண்டிருக்காமல் அவர்களை, அவர்களின் வயதை, ஹார்மோன்கள் செய்யும் கலவரங்களை, உடல் சார்ந்த தேவைகளை  வீட்டுக்கு  வெளியே அவர்களை ஈர்க்க காத்திருக்கும் ஒரு வேகமான உலகை, நாமும் புரிந்துகொள்ள வேண்டும் என்று நமக்கு சொல்லும் ஒரு படம்

  பெண்களுக்கு தளைகளை பிணைப்பதற்கு முன்பு, குற்றம் சாட்டுவதற்கு முன்பு  அவர்களை  பரிர்ந்துகொள்வதும் , அவர்கள் தரப்பு நியாயங்களையும் அநியாயங்களையும் நாம் அறிந்துகொள்வதன் அவசியத்தை சொல்லும் படமிது

ஸ்ரீதேவி இருக்கும் போது அவருக்கு அளித்த வாக்கின்படி போனி கபூரின் தயாரிப்பில் அஜித் நடித்துக்கொடுத்திருக்கும் இப்படத்தை சென்ற தலைமுறையை சேர்ந்தவர்களும் இத்தலைமுறையினரும் இணைந்து பார்க்கலாம்

கும்பளாங்கி நைட்ஸ்

கும்பளங்கி நைட்ஸ், 2019 பெப்ரவரி 7ல் வெளியான         மலையாளத் திரைப்படம். மது சி. நாராயணன் இயக்கத்தில் சௌபின் ஷகீர், ஷான் நிகாம், ஸ்ரீநாத் பாஸி, பகத் பாசில் நடித்திருக்கின்றார்கள்

 திலீஷ் போத்தன், ஷியாம் புஷ்கரன், பகத் பாசில், நஸ்ரியா நசீம் ஆகியோரின்  வர்க்கிங் க்ளாஸ் ஹீரோ என்னும் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. ஸுஷின் ஷாம் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தில் 4 பாடல்கள் இடம்பெற்றுள்ளன

திரைக்கதை கும்பளாங்கி என்னும் கொச்சியைஅடுத்துள்ள, தேவதை கதைகளில் வருவது போன்ற மிக அழகிய, ஒரு  கடற்காயல்(Back waters) கிராமத்தில் நடக்கிறது. அதிகம் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருமிடமென்பதால் கதையிலும் சுற்றுலாப்பயணிகளும் அவர்களின் தங்குமிடங்களும் வருகின்றது

 முழுதாக கட்டி முடிக்காத, செங்கற்களாலான சுவர்களுடன் இருக்கும், எந்த ஒழுங்குமின்றி பல சாமான்கள் அடைந்த ஒரு வீட்டில் வசிக்கும் நான்கு சகோதரர்கள் அதில் ஒருவர் வாய் பேச இயலாதவர் இவர்களின் வாழ்வும் இடையே  எட்டிப்பார்க்கும் சில காதல்களுமே கதை. துவக்கத்தில் யார் யாருக்கு யார் யார் பெற்றோர் என்பதில் குழப்பமிருக்கிறது எனினும் பிற்பாடு மெல்ல மெல்ல ஒரு மலர் அவிழ்வது போல கதை அவிழ்கையில் நமக்கு ஒவ்வொன்றாக புரிகின்றது..

ஃபகத் ஃபாசில் எப்போதும் போல அசத்தியிருக்கிறார். முதல்காட்சியில் கண்ணை உருட்டி விழித்தபடிக்கு தன் அடர்ந்த மீசையை கண்ணாடியில் பார்த்து மீண்டும் மீண்டும் சரி செய்கையிலேயே என்னவோ ஒரு பிழையென்று நமக்கு சந்தேகம் வருகின்றது அப்பிழை என்னவென்று இறுதிக்காட்சியில்,  கயிறுகளால் கட்டி,கட்டிலுக்கடியில் தள்ளப்பட்டிருக்கும் ஃபகத்தின் மாமியார் வெளியே இழுக்கப்பட்டு வாயைச்சுற்றி கட்டப்பட்டிருக்கும் கட்டுக்களை அவிழ்த்த உடனே சொல்கிறார்

மனைவியும்  கொழுந்தியும் அந்தரங்கமாக பேசிக்கொண்டிருக்கையில் கதவோரம் நின்று என்ன பேசிக்கொண்டிருந்தார்கள் என்று கேட்கையில் ஃபகத்தின் உடல்மொழி அசத்தல், கடைசியில் அந்த பைத்தியக்காரத்தனமான சண்டையிலும் அப்படியே. மனைவி கோபித்துக்கொள்ளும் ஒரே ஒரு சந்தர்ப்பத்தில் மணிக்கணக்காக சுவர் மூலையில் திரும்பி நின்று கொள்வதுமாக ஃபகத் கலக்கியிருக்கிறார்.  உன்னத உடைகளுடன் மிடுக்காக அவர் பைக்கில் புறபட்டு போகும் அந்த அந்தஸ்தான வேலை என்னவென்று தெரியவருகையிலும் வியப்பும் சிரிப்பும்  வருகின்றது.

ஃபகத்தை விட அதிகம் ஸ்கோர் பண்னுவது என்றால்  அது ஸாஜியாக வரும்  செளபின் தான்.  மேல் சட்டையிறி மீன் சோறும் கள்குடியுமாக  கேரளக்காரருக்கே உரித்தான இயல்பான உடல்மொழி, மனநல மருத்துவரின் சட்டை நனையும் அளவிற்கு கட்டிபிடித்து கதறுவது  திடீரென ஏற்பட்ட உணர்வெழுச்சியில் தூக்கிட்டுக்கொள்வது, இறந்த நண்பனின் மனைவியிடம் பரிவாக இருப்பது என்று அவரின் நடிப்பு மிளிர்கிறது. கேரளத்தின் மற்றொரு இணையில்லா நடிகன் செளபின்.  இறந்த நண்பனின் மனைவியையும் அவருக்கு பிறந்த பச்சிளம் சிசுவையும் மருத்துவமனையில் பார்க்கும் செளபினின் முகத்திலும் கண்களிலும் ஓராயிரம் உணர்வுகளை படிக்கலாம். அற்புதக்கலைஞன் இவர். திலீஷ் போத்தனும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

ஸ்யாம் புஷ்கரன் கும்பளாங்கிக்கு சென்றிருக்கையில் அங்கு நடந்த சில நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்டு இக்கதையை எழுதியிருக்கிறார். பல இடங்களில் வசனங்களும் அழகு. ’’அவங்கல்லாம் கிருஸ்துவங்களாச்சே’’ எனும் அக்காவிடம் ’’ஜீசஸ் நமக்கு தெரியாதவரா என்ன’’ என்கிறாள் தங்கை

 ரிசார்ட்டில் பணிபுரியும் பெண்ணின் காதலும் அமெரிக்க அழகி நைலா- போனி காதலும் அருமை. எனினும் பேபி- பாபி காதலே படத்தின் மையப்புள்ளி. ஷைஜு காலித்தின் காமிராவுக்கு திருஷ்டி சுற்றி போடவேண்டும் என்ன அழகு எத்தனைஅழகு! சைஜு ஸ்ரீதரனின் படத்தொகுப்பு படத்திற்கு ஒளிப்பதிவிற்கு இணையான முக்கியத்துவம் கொண்டிருக்கிறது.

ஃபாசிலின் மனைவி சிம்மியாக வரும் கிரேஸும் அசத்துகிறார். பைக் ஹார்ன் திடீரென அடிக்கையில் திடுக்கிடுவது, பயந்துகொண்டே கணவனுடன் உள்ளறைக்கு போவது, தங்கையை கணவன் பேச்சில் இழிவு படுத்துகையில் மேசை மேலிருக்கும் கொசுஅடிக்கும் மட்டையை  ஒரே அடியில் அடித்து உடைத்தபடி கணவனை எச்சரிப்பது, திருமண விருந்தில் சாப்பிட்டுக்கொண்டிருக்கையில் தங்கையின் திருமண பேச்சுவார்த்தை  நடக்கையில் அசெளகரியமக அமர்ந்திருப்பது என்று பிரமாதப்படுத்துகிறார். கண்கள்   அதிகம் பேசுகிறது அவருக்கு.

பேபி,பள்ளிப்பருவத்திலிருந்தே தான் காதலிக்கும் பாபியிடம் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு மீன் பிடிக்க வலை வீசி காண்பிக்க சொல்கையில் பாபி வீசுகிறார் ஒரக்கண்ணால் பேபியை பார்த்தபடிக்கே காதலெனும் மாயவலையையும். அவ்வலையில்  மீட்சியின்றி அகப்பட்டுக்கொண்டவர்களின்  கதையைத்தான் சொல்கிறது கும்ப்ளாங்கி இரவுகள்.

நான்கு பாடல்களில் ’’எழுதாக்கதை போல் இது ஜீவிதம்’’  மிக அருமையான மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல். அக்குரலும் இசையும் உள்ளத்தை உருக்குகிறது. எழுதாக்கதையை கேட்கையில் இசையமைத்து பாடிய ஸுஷின் ஷாமின் கரஙகளை இறுக பற்றிக்கொள்ள  வேண்டும் போலிருக்கிறது.

காட்சிக்கு காட்சி மனதை அள்ளுகிறது அல்லது கண்களை ஈரமாக்குகிறது. இறைப்பணியில் இணைந்து விட்ட தாயை கல்யாணத்தின் பொருட்டு கொஞ்ச நாள் வந்து உடன் இருக்கசொல்கையில், தாய் ஒரு மகனின் கைகளைப்பற்றியபடிக்கு வர இயலாதென்றும் அவர்களுக்காக பிரார்த்தித்து கொள்வதாகவும் சொல்கையில் கண்கள் ஈரமாவதை தவிர்க்கவே முடியாது. மலர்த்திய அகலக்கண்களுடன் பேபி மோளாக வரும் அன்னாவும் சுட்டிப்பெண்தான்.

இத்திரைப்படம் காட்டும் கும்ளாங்கியின்  சில இரவுகள் மறக்க இயலாதவை. சாஜி தற்கொலை செய்ய முயன்று, எதிர்பாராவிதமாக நண்பன் இறக்கும் இரவு, நிலவு பொழிகையில் கடலில் போனியும் நைலும் களித்திருக்கும் இன்னுமொரு இரவு, விருந்துக்கு  ஃபகத்தும் மனைவியும் சிற்றப்பன் வீட்டுக்கு செல்லும் இரவு, காயல் நீரில் படகு ஒழுகிச்செல்லும் இரவு,காதலின் பொருட்டு சண்டை நடக்கும் அந்த இறுதியிரவு,  இப்படி சொல்லிக்கொண்டேயிருக்கலாம்

இந்திய சினிமா வரலாற்றில் மிகப்பெரும் முன்னடி எடுத்து வைத்திருக்கும் இத்திரைப்படம் காதலென்னும் ஒரு  எளிய, இயல்பான, சின்னஞ்சிறு புள்ளியை தொட்டு தொட்டு கடற்காயல் அளவிற்கே விரித்து   அழகாக்கியிருக்கிறது

கும்பளாங்கி கிராமம் அழகோ அழகு. காயலும் அதன் கரையிலிருக்கும் வீடும், நடுவில் இருக்கும் பசுந்திட்டும் அங்கு காதலர்கள் ஒரு சிறு படகில் சென்று சந்திப்பதும் அத்தனை அழகு. ஒரு காட்சியில்  அங்கு  கொண்டு வந்த பிளாஸ்டிக் தண்ணீர்பாட்டிலை  திரும்ப எடுத்துக்கொண்டு வரசொல்கிறார் காதலி. சூழல்பாதுகாப்பில் கேரளம் காண்பிக்கும் கவனம் திரைப்படம் வரை நீண்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது

முதல் பாதியைக்காட்டிலும் இரண்டாம் பாதி

kumbalangi nightsகூடுதலாக ஈர்க்கின்றது. பாபியாக வரும் ஷேன் நிகாமின் கன்னக்குழிகளும் காது வரை நீளும்புன்னகையும் வெகு வசீகரம்.

எந்த கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் அதிகம், யார் கதநாயகன் என்னும் கேள்விகளெல்லாம் இன்றி கதையும் கதைக்களமும் கதாபாத்திரங்களின் உணர்வெழுச்சிகளுமே கதையை நகர்த்திக்கொண்டு போகின்றன. நடிகர்கள்  திரையில் தங்களை பெரிய நடிகர்களாக காட்டிக்கொள்ளாமல் கதாபாத்திரங்களாக மட்டுமே மிளிர்கிறார்கள். எந்த காட்சியும் வலுக்கட்டாயமாக திணிக்கப்படவில்லை. கதையினூடே அனைத்துக்காட்சிகளும் காயலில் படகு போல இயல்பாக  ஒழுகிச்செல்கின்றது

பலதரப்பட்ட உறவுகளை, அவற்றின் சிக்கலான பல அடுக்குகளை, இவற்றினிடையே முகிழ்க்கும் காதலை, உணர்வெழுச்சிகளை மனத்தடுமாற்றங்களை காயலின் பிண்ணனியில் குளிரக்குளிரச் சொல்லும், மிக அழகிய, உலகெங்கிலும் பல வாரங்கள் வெற்றிகரமாக ஓடி வசூலை அள்ளிக்குவித்த இத்திரைப்படத்தை தவறாமல் பார்ப்பதோடு கும்பளாங்கிக்கும் ஒருமுறை போய் வரவேண்டும்

கேசரி

 

2019 ல் வெளி வந்த போர் குறித்தான திரைப்படம் கேசரி. தர்மா ப்ரொடக்‌ஷனில் கரன் ஜோஹரும் சேர்ந்து தயாரித்த படம் இது. அக்‌ஷய் குமார் நாயகனாகவும்  பரினிதி சோப்ரா உள்ளிட்ட பலர் முக்கிய பாத்திரங்களிலும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 1897செப்டம்பர் 12 ஆம் தேதி  ஏறக்குறைய பத்தாயிரம் வரை இருந்த ஆஃப்கான் பழங்குடியினருக்கும் (அப்போதைய பிரிடிஷ் ராணுவத்திலிருந்த) 21 பேர் மட்டுமே கொண்ட சீக்கிய படையினருக்கும் நடந்த மிக உணர்ச்சிகரமான, வீரமான, நம்மில் பலர் அறிந்திருக்காத ஒரு போரைப்பற்றியது

80 கோடி தயாரிப்புச்செலவில் உலகம் முழுக்க ஹோலிப்பண்டிகை அன்று  ஜீ ஸ்டுடியோவால் திரையிடப்பட்டது. படம் வெளியான சில வாரங்களிலேயே அதிக வசூலான பாலிவுட் திரைப்பட வரிசையில் இணைந்தது

உண்மைக்கதையான இது எந்த மாற்றமும் இன்றி எடுக்கப்பட்டிருக்கின்றது. பிரிட்டிஷ் இந்தியாவில் ஆஃப்கான் எல்லையில் இருந்த சரகரி கோட்டையில் 20 சீக்கியர்கள் மட்டுமே கொண்ட ஒரு  படைப்பிரிவு அமைத்திருந்தது. ஹவல்தார் இஷார் சிங் என்னும் சீக்கியர் இந்திய ஆஃப்கான் எல்லையில் இருந்த  குலிஸ்தான் கோட்டையில் புகழ்பெற்ற படைவீரராக இருந்தவர். அவரது பிரபல்யத்தைக்கண்ட, இந்தியர்கள் கோழைகள் என்னும் தீர்மானமான முடிவில் இருந்த  அவரது பிரிட்டிஷ் உயரதிகாரி அவர் மீது பொறாமைகொண்டார். ஒரு நாள் அவரது கோட்டை அருகிலேயே முல்லா என்னும் ஒரு ஆஃப்கன் பழங்குடித்தலைவன், கட்டாயத்திருமணத்தில் விருப்பமில்லாமல் இனத்தை விட்டு தப்பியோடிய ஒரு பெண்ணை அவளது கணவனை விட்டே கொல்லச்சொல்கிறார். இதை பார்த்துக்கொண்டிருந்த இஷார் சிங் அவரது மேலதிகாரியின் கட்டளையையும் மீறி அந்த பெண்ணை அவளது கணவனைக்கொன்று காப்பாற்றுகிறார்.

இந்த ஒரு காரணத்தினாலேயே இஷார் சிங்கை மேலதிகாரியின் கட்டளையை மதிக்காத குற்றத்தின் பொருட்டு குலிஸ்தானுக்கும் லாக்கர்ட் கோட்டைக்குமிடையிலிருக்கும் சரகரி கோட்டைக்கு இடமாற்றம் செய்கிறார்.அங்கு 20 சிப்பாய்கள் மட்டுமே இருந்தாலும் ஒழுங்கின்மையே பிரதானமாக இருக்கிறது. அங்கு பொறுப்பேற்றுக்கொண்டு அனைவரின் அன்புக்கும் உரியவராகி ஒழுங்கான ஒரு படைப்பிரிவை தயார் செய்கிறார் இஷார் சிங்.

விரைவிலேயே இஷார் காப்பாற்றிய அதே பெண்னை சரகிரி கோட்டைக்கு முன்பாகவே வெட்டிக்கொன்று பத்தாயிரம் பழங்குடியினருடன் முல்லா போருக்கு வருகிறான். வரும் பொழுது பிறர் இவர்களின்  உதவிக்கு வரும்  எல்லா வழியையும் அடைத்தும் விடுகிறான்

அப்போது 21 பேர் மட்டுமே இருக்கும் அப்படைபிரிவில் தனது காவி நிற (kesari)  டர்பனை அணிந்துகொண்டு உணர்ச்சிகரமான உரையாற்றும் இஷார் 21 பேரிடத்திலும் சாகும் வரும் வரை போரிடும் உறுதியை உருவாக்குகிறார்.

மிககுறைந்த ஆட்களே அப்படைபிரிவில் இருப்பதால் படம் துவங்கி கொஞ்ச நேரத்திலேயே அனைவரும் நமக்கு மிக நெருக்கமாகி விடுகிறார்கள். குள்ளமான சமையல்காரர், எப்போதும் சிரிக்கவே சிரிக்காத ஒருவர், 6 வாரமே ஆன மகளின்  கைகளின் அச்சு பதிந்திருக்கும் அஞ்சல் அட்டையை எடுத்து எடுத்து பார்த்துக்கொள்ளும் ஒருவர், சகிக்க முடியாத இசையை அடிக்கடி வாசிக்கும் ஒருவர் என்று அனைவரும் நமக்கு விருப்பமானவர்களாகிவிடுகிறார்கள் இந்த போருக்கு முன்பே. செல்லுமிடங்களிலும் போர் நடைபெறும் போதும் கற்பனையில் தன் மனைவியுடன் அடிக்கடி இஷாரும் பேசிக்கொண்டும் கொஞ்சிக்கொண்டும் இருக்கிறார்

21பேரும் பல ஆஃப்கனியர்களை கொன்று தாங்களும் உயிரைவிடுவதும் இறுதிக்காட்சியில் மானசீகமாக தன் மனைவியுடன் பேசியபின்னர் தீயில் பழுக்க காய்ச்சிய வாளுடன் பலரை கொன்றுவிட்டு தன் டர்பனை யாரும் தொடாமல் பார்த்துக்கொண்டு இஷாரும் உயிர்விடும் காட்சிகளில் நம் அனைவரும் கண் கலங்குவோம்.

இஷார் சிங்கிற்கு பிரிட்டிஷ் படைகளின் மிக உயரிய விருதான விக்டோரியா க்ராஸ் என்னும் விருது அளிக்கப்பட்டது. இறந்து போன 21 சிப்பாய்களுக்குமாக பிரிட்டிஷ் பாராளுமன்றம் 2 நிமிட அமைதி காத்ததும் குறிப்பிடத்தக்கது. .ராணுவ வரலாற்றில் எவராலும் மறக்கமுடியாத நிகழ்வு சீக்கிய படையினரின் இந்த சரகிரி போர். இனிமையான பல பாடல்களும் இத்திரைப்படத்தில் இருக்கின்றது.

nationalism patriotism heroism  என எல்லாம் கலந்த பிரமாதமான் நடிப்பை தந்திருக்கிறார் அக்‌ஷய்குமார். படத்தொகுப்பு பிண்ணனி இசை ஒளிப்பதிவு உடையமைப்பு என எல்லாம் பிரமாதம் கேசரியில்

.சீக்கியர்கள் போற்றும் அவர்களது விழுமியங்களையும் வீரத்தினூடே சொல்லும் படமிது. இந்தியா மட்டுமின்றி உலகெங்கிலும் பரவலாக போற்றப்படும் போர் நினைவுப்படமான இதனை நம் இளைஞர்கள் அவசியம் காணவேண்டும்.

Aladdin -அலாவுதீன் , சில திருத்தங்களுடன்

உலகின் பல்வேறு இடங்களில் அனைத்து மொழிகளிலும், பல்வேறு மாற்றங்களுடன் சொல்லப்பட்டு வரும் மத்திய கிழக்கு நாடுகளின் நாட்டுப்புற பெருங்கதையான ‘’ஆயிரத்து ஒரு அரேபிய இரவுகள்’  கதைகளில்  ஒன்றுதான்,  புகழ்பெற்ற  ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’. இந்தக்கதைதான் சமீபத்தில் லைவ் ஆக்‌ஷன் அனிமேஷன் திரைப்படமாக ‘அலாவுதீன்’என்ற பெயரில் உலகம் முழுவதும் மே 24ம் தேதி வெளியானது.

1992ஆம் ஆண்டு வெளியான அலாவுதீன்  Animation படத்திற்குப்பிறகு  டிஸ்னி நிறுவனம் மீண்டும் அற்புத விளக்கைத் தேய்த்திருக்கிற்து. ஆணழகன் வில் ஸ்மித்  கவர்ச்சியும் மர்மமும் அசாராணமும் கலந்த, நீல நிறத்தில் , இடுப்புக்கு கீழே புகைப்படலமாக வரும் பிரம்மாண்டமான பூதமாக மிகச்சரியாக பொருந்தியிருக்கிறார். சிரிக்கும் கண்களும்,  மயக்கும் குரலும், கிண்டலும், கேலியும், காதலுமாக அவரின் பல்லாயிரக்கணக்கான ரசிகைகளை மீண்டும் கவர்ந்திருக்கிறார்.

படம் வரலாற்று வெற்றியைப் பெற்றிருக்கிறது; குழந்தைகளுடன் பெரியவர்களும் கொண்டாடுகிறார்கள். பல்லாயிரம் வருடங்களாக சின்னஞ்சிறு விளக்கினுள் அடைபட்டிருக்கும் பூதம், அற்புத விளக்கை தேய்த்து தன்னை விடுவித்தவர்களை மூன்று வரங்களின் மூலம் மகிழ்விப்பதுடன் , தானும் சுதந்திரமான வெளியில் உலவவும், தோழமைக்கும் காதலுக்கும்  ஏங்குவதுமாக பல்லாண்டு பழமையான ஒரு கதையில், சுவாரஸ்யமான சில திருத்தங்களுடன் திரைப்படமாக்கியிருக்கிறார்கள். நிறையகாட்சிகளில் பாடல்களின் மூலமே கதை சொல்லப்படுவதால்  இதை இசைத்திரைப்படமென்றும் சொல்லலாம்.

பெரும்பாலான சிறார் கதைகளில் வரும் ஏழையொருவன் இளவரசன் ஆவது என்னும் கதையென்பதால் அனைத்து வயதினரின் விருப்பத்துக்கும் உகந்த கதையிது.  தெருவில் சில்லறைத்திருட்டுக்கள் செய்து வாழும் யாருமற்ற இளம் நாயகன், அழகும் இளமையும் நிறைந்த இளவரசியை சந்தித்து காதல் கொள்வது, ஆட்சியை பறிக்க திட்டமிடும் வில்லன், மந்திர விளக்கு, அதிலிருந்து வரும் பூதம்,, பூதத்தின் காதல், பூதத்திற்கும் அலாவுதீனுக்குமான நட்பு  என அனைவரும் அறிந்திருக்கும்  கதையில், எதிர்பாரா அம்சங்களுடன் கதை அழகாக போகின்றது.

வில்லன் ஜாஃபர், அலாவுதீனை விளக்கை கொண்டு வரச்சொல்லுவதும், அலாவுதீன் விளக்கை தேய்த்தபின்னர் அவன் வாழ்வு மாறுவதும், அதன்பின்னரான சாகசங்களுமே கதை. மூலக்கதையைபோல இது அலாவுதீனை மையப்படுத்தாமல் பூதத்தை பிரதானமாக கொண்டிருக்கிறது

படத்தில்  மர்வான் கென்சார்நேவிட் நெகஹ்பான்பில்லி மக்னுஸ்ஸன் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். நீல பூதத்தைக்காட்டிலும் இளவரசன் அலியின் தோழனே அனைவருக்கும் பிரியமானவராக இருக்கிறார். பூதத்தின்காதலி டாலியாவாக  நாஸிம் பெடரட் மிகச்சரியான தேர்வு.

அலாவுதீனாக வரும் மசாட்  ஏழைச்சிறுவனாக கடைகளில் திருடி, தாவித்தாவி தப்பித்து செல்வதும், பூதம் அவனை இளவரசனாக மாற்றியும் அவனால் அந்த வேடத்தில் பொருந்தமுடியாமல்  தவிப்பதுமாக பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

.Pink Power Ranger வேடத்தில் புகழ்பெற்ற நவாமி ஸ்கட் இதில் இளவரசி ஜாஸ்மின். மாறுவேடத்தில் அலாவுதீனை சந்திப்பதும் காதல் கொள்வதும் ஆட்சிபொறுப்பை ஏற்க விரும்புவதும், வில்லனை எதிர்ப்பதும் அழகிய குரலில் பாடுவதுமாக பலரின் விருப்பத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.  அவர் குரலில் முக்கியமான பாடலான speechless அவரை இன்னும் புகழின் உச்சிக்கு கொண்டு போகும்

படத்தில் ,குறும்புக்குரங்கும் பிரம்மாண்ட புலியும், வில்லனின் கிளியும் கணினி உபயம் வில் ஸ்மித்தின் நடிப்பு, அலாவுதீனாக நடிக்கும் மேனா மசூத்தின் மிகப்பொருத்தமான பாத்திரத்தேர்வு, ஜாஸ்மினாக வரும் நவோமி ஸ்கட்டின் தூய அழகு எல்லாம் ஈர்த்தாலும், அனிமேஷன் செட்கள் படத்தையும் டிஸ்னி ஸ்டுடியோவின் தரத்தையும் கொஞ்சம் கீழிறக்குகின்றன

 மூலக்கதையினின்றும் இத்திரைப்படம், சாதாரண மனிதனைப்போல அலாவுதீனின் நண்பனாக பூதம் வருவதிலும், இளவரசியை இளவரசன் அலி காதலிக்க பூதம் உதவி செய்வதிலும், பூதம் டேலியாவுடன் காதல் வயப்படுவதிலும், கொஞ்சம் வேறுபடுகின்றது இடைவேளையின் போது இளவரசன் அலி காதலை சொல்வதற்கு பதில் பலவகையான ஜாம்களை பட்டியலிடுவதும் பூதம் சலித்துக்கொள்வதுமாக அரங்கு சிரிப்பில் நிறைகின்றது.

.$183 மில்லியன் தயாரிப்புச்செலவில், சுமார் 5000 திரையரங்குகளில் உலகெங்கும்  வெளியான இப்படம், முதல் வாரத்திலேயே  $462.3 மில்லியன்களை வாரிக்குவித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது

சதியும் காதலும் மந்திரமும் மாயக்கம்பளமும், சாகசங்களும், பூதமுமாக, அலாவுதீன் திரும்பக்கிடைத்த பால்யம்

aladdin

GULLY BOY

பாலிவுட்டின் பிரபலங்களான ஜாவீத் அக்தர் -ஹனி இராணி இணையின் மகளும் பிரபல நடிகர் ஃபர்ஹான் அக்தரின் சகோதரியுமான ஜோயாஅக்தரின் இயக்கம் மற்றும் தயாரிப்பில் உருவாகி 2019,ல் திரைக்கு வந்து பலத்த வரவேற்பு பெற்றிருக்கும் ஹிந்திமொழி திரைப்படம் ‘’ Gully Boy’’.

இந்திய ராப் பாடகர்களான டிவைன் மர்றும் நேஜியின் (Divine and Naezy) வாழ்வின் மீதான ஈர்ப்பில் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டிருக்கின்றது. ஆசியாவின் இரண்டாவது பெரிய குடிசைக்குடியிருப்பான (சேரி) தாராவியை சேர்ந்த ஒரு இளைஞனின்   ராப் இசைக்கனவையும் பயணைத்தையும் சொல்லும் படமிது.

Gully_Boy_poster

முராத் ஆக ரன்வீர் சிங்கும், சஃபீனாவாக அலியாபட்டும் பிரதான கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்

தாராவியின் நெரிசலான தெருக்களில் ஒன்றில் வசிக்கும், கல்லூரி இறுதியாண்டு படிக்கும், ராப் இசையின் மீதான காதலுடன் இருக்கும் முராத் நாயகன்.அவன் தந்தை மகனை விட இளைய ஒருபெண்ணை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டு வருகிறார்.  முராதுடன் தீவிர காதலில்  மருத்துவம் படிக்கும் சஃபீனா.அடிக்கடி ரகசிய சந்திப்பும் முத்தங்களுமாக காதல் தொடருகிறது. முராதின் ராப் இசையின் மீதான  ஆர்வத்தை  அப்பா கண்டிக்கிறார்.  ஒரு செல்வந்தரின் கார் ஓட்டுநராக இருக்கும் அப்பாவிற்குக்கு காலில் அடிபட்டதையடுத்து தற்காலிக ஓட்டுநராக அங்கு செல்லும் முராத் வாழ்வின் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளையும், மன அமைதிக்கும் மகிழ்வுக்கும் பணம் ஒருபொருட்டாக இல்லாமலிருப்பதையும், மிக அண்மையிலென காணும் அந்நாட்களில் அவ்வனுபவங்களையும், வாழ்வின் முரண்களையும்,  இவையனைதிற்குமிடையில் துளிர்க்கும் நம்பிக்கைகளையும்  பாடல்களாக சந்தங்களுடன் எழுதத்துவங்குகிறான்

MC Sher  என்னும் பெயரில் ராப் இசைப்பாடகனாக புகழ்பெற்றிருக்கும் ஒருவனின் நட்புடன் முராதும் தன் பாடல்களை மெட்டமைத்து யூ ட்யூபில் பதிவேற்றுகிறான்.அது புகழ்பெறுகின்றது. போஸ்டன் இசைக்கல்லூரியில் பயிலும் ஸ்கை  (கல்கி கோச்லின்) ஒரு புதிய பாடலை தாராவியில் MC Sher மற்றும் முராத்தின் ராப் இசை, மற்றும் நடனத்துடன் பதிவுசெய்து  வெளியிட,அதுவும் மிகப்பிரபலமாகின்றது. Gully Boy என்னும் பெயரில் முராத் ராப் இசைப்பாடகனாக புகழ்பெறுகிறான்

தவிர்க்கமுடியாமல் ஒருமுறை இரவில் ஸ்கையுடன் நெருக்கமாக இருந்துவிடும் முராத் இதை சஃபீனாவிடன் மறைக்கிறான்.உண்மை தெரிந்து காதலியுடன்  மனக்கசப்பு,   அதே சமயத்தில் மாற்றாந்தாய் வந்தபின்னால் அம்மாவுக்கு ஏற்படும் அவமானங்களால் வீட்டை விட்டு தாயுடன் முராத் வெளியேறும் நிலை.  இசைக்கனவை மூட்டைக் கட்டி தூர வைத்துவிட்டு வாழ்வின் நிதர்சனங்களை ஏற்கும்  கட்டாயத்தில் தன் மாமாவிடம் வேலைக்கு சேருகிறான் முராத்

படத்தின் இறுதிக்காட்சிகளில் அமெரிக்க ராப் இசைப்பாடகரான  நாஸ் (Nas) மும்பையில் நடத்தும் ஒரு இசைப்போட்டியில் கலந்துகொள்ளும் முராத் இறுதிசுற்றுக்கு வருகிறாரா, வெல்கிறாரா, காதலியுடனான கசப்பு மறைந்ததா என்பதே மீதிக்கதை

இசையை அடிப்படையாக கொண்ட படமென்பதால்  நிறைய பாடல்கள் இருக்கின்றன.  டிவைன், நேஜி, மற்றும் அமெரிக ராப் பாடகர் நாஸ் உடன் ரன்வீர் சிங்கும் பல ராப் இசைக்கலைஞர்களும் இணைந்து பாடி படத்தின் இசையனுபவத்தை மறக்கமுடியாததொன்றாக்கி இருக்கிறார்கள். ’’அப்னா டைம் ஆயகா’’  இப்போது  பெரும்பாலான இளைஞர்களின் விருப்பப்பாடல்.

காதலர் தினத்தன்று உலகிங்கிலும் சுமார் 4000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு  தயாரிப்புச்செலவான 84 கோடிக்கு மேல்  234 கோடியை வசூலித்து, இன்னும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிற இத்திரைப்படம், 8 mile  என்னும் 2002ல் வெளியான ஆங்கிலத் திரைப்படத்தின் அப்பட்டமான காப்பி எனும் சர்ச்சையிலும் சிக்கியுள்ளது

ரன்வீர் மற்றும் அலியாவின் நடிப்பிற்கு இணையாக ஜோயாவின் இயக்கமும்  விஜய் மெளரியாவின் வசனங்களும் படத்தின் மிகப்பெரும் பலங்களென்று சொல்லலாம். தாராவியின் நெரிசலான தெருக்களிலும், அடைசலான தீப்பெட்டிகளை கலைத்துக்கட்டியது போன்ற வீடுகளுக்குள்ளும் நம்மை அநாயாசமாக அழைத்துசெல்கிறார் ஒளிப்பதிவாளர் ஜே ஒஸா, நிதினின் படத்தொகுப்பும் வெகுவாக பாராட்டப்படவேண்டியது

கள்ளத்தனமும் குறும்பும் நிறைந்த அலியா நாயகி. மர்மமான சிரிப்பும் ,படபடவென பொரியும்  பேச்சும் , துள்ளலும் துடிப்பும், ஸ்கையை பாட்டிலில் அடித்து மண்டையை உடைக்கும் ஆங்காரமும், தீவிரக்காதலும் அப்பா அம்மாவிடம் சர்வசதாரணமாக காதலின் பொருட்டு சொல்லும் பொய்களுமாக மிக மிகப்பொருத்தமான, அலியாமட்டுமே இயல்பாக செய்யவும் பொருந்தவும் முடிகின்ற பாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது அவருக்கு. பொங்கித்ததும்பும் இளமையும் நிஷ்களங்கமான  அழகுமாக அலியா வருகையில் திரையே  கூடுதலாக ஒளிர்கின்றது.

ராப் இசைக்கனவு, மாற்றாந்தாயுடனிருக்கும் கண்டிப்பான அப்பா, வறுமை, துயரிலிருக்கும் தாய், நண்பன், கூடுதல் பிடிப்புடனிருக்கும் காதலி, இப்படி கலவையான விஷயங்களால் அலைக்கழிக்கப்படும் சேரிப்பகுதியைச்சேர்ந்த இளைஞனாகவே வாழ்ந்திருக்கும் ரன்வீரை எத்தனை பாராட்டினாலும் தகும்,

வேலைக்காரனின் மகன் வேலைக்காரன்தான் ஆகவேண்டும் என அடிக்கடி முராதின் மாமா சொல்லும் அவ்விதியை கடின உழைப்பும் அதிர்ஷ்டமும் கூடிவந்ததால் மாற்றியமைத்து, விரும்பிய கனவை நனவாக்கும் ஒரு சேரிப்பகுதி இளைஞனின் கதையை மிக சுவாரஸ்யமாக சொல்லியிருக்கும் படம் இது.

தெருவிலிருக்கும், எளிய, சாதாரண பையன் என்னும் பொருள்படும் Gully Boy  என்னும் பெயரில்  இத்திரைபப்டம் கனவுகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு வாழ்வின் பின்புலங்களும் வசிப்பிடமும் பொருளாதாரமும் ஒரு பொருட்டல்ல என்று சொல்கிறது.

 Under play செய்திருக்கறார் என்றுகூட  சொல்லும் அளவிற்கு ரன்வீரும் மிக மென்மையான நடிப்பினை வெளிப்படுத்தியிருக்கிறார். கூச்சமும் தயக்கமுமாக அவர் தன் முதல்பாடலை பாடுவதும், நெருக்கமான காட்சிகளில் அலியாவின் கை சற்றே மேலோங்குகையில் அவற்றை கண்களில் காதலுடன்  ஆமோதித்து எற்றுக்கொள்வதும் நண்பர்களுடன் இயல்பாய் கூடிக்கொள்வதும் தன் சொந்த சேரி மக்களின் வாழ்வை படம்பிடித்து  உலகிற்கு காட்டியதில் பெருமிதம் அடைவதுமாய் நடிப்பில் மிளிர்கிறார்

ராப் இசையையே பிரதானமாக சொல்லும் படமென்றாலும் வழக்கத்தைக்காட்டிலும் கொஞ்சம் நீளமான இப்படம் எந்தவிதத்திலும் சலிப்புபூட்டாமல் அழகாக  நகர்கின்றது.. இசை, காதல்,  பிறிதொரு காதல் ,கூடல், ஊடல், கடின உழைப்பு குடும்பப்பிரச்சினைகள், நட்பு என்று பல உணர்வெழுச்சிகளுடனான கண்ணிகளால் பிணைக்கப்பட்டிருக்கும் ஒருவனின் வாழ்வையும் கனவையும் சொல்லும் இப்படம்  அமேசான் பிரைமிலும் தற்போது வெளியிடபட்டிருக்கிறது.

To-let

செழியன்,  ‘தென்மேற்கு பருவக்காற்று’, ‘தாரை தப்பட்டை’, ‘பரதேசி’, ‘ஜோக்கர்’ உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் ’To let’’  திரைப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகி, திரைக்கதை எழுதி ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். 21 பிப்ரவரி 2019,ல் திரைக்கு வந்த இதுவே இவர் முதன்முதலாக இயக்கியுள்ள படம். பிரேமா செழியன் இப்படத்தை தயாரித்துள்ளார். 25 நாட்களில் படமாக்கி முடிக்கப்பட்ட, பாடல்கள் இல்லாத ஒரு அழகிய தமிழ்திரைப்படம் இது

மிக எளிய திரைக்கதை. திரைப்படத்துறையில் கதாசிரியனாகும் பெரும் கனவுடன் இருக்கும், தற்போது கிடைக்கும் சின்ன சின்ன திரைத்துறை சார்ந்த வேலைகளை செய்துவரும் இளங்கோ என்னும்  இளைஞன்,  வேற்று மதத்தை சேர்ந்த காதல் மனைவியுடனும் இளம் மகனுடனும் சென்னையில் ஒரு வாடகை வீட்டில் வசிக்கிறார். IT துறையில்  பணிபுரிபவர்கள் அதிக வாடகை கொடுக்க முடியும் என்பதால் அவர்களுக்கு வீட்டின் உரிமையாளர் வீட்டை வடகைக்கு கொடுக்க முடிவு செய்து இவர்களை ஒரு குறிப்பிட்ட, வெகு சமீபத்திலிருக்கும் ஒரு தேதிக்குள் காலி செய்ய சொல்வதும் வீடுதேடி இவர்கள் குடும்பமாக அலைவதும், வீடு கிடைப்பது  சார்ந்த துயரங்களுமே கதை

மொத்தம் நான்கே முக்கிய கதாபாத்திரங்கள். செழியனின் உதவியாளரும் கவிஞர் விக்ரமாதித்யனின் மகனுமான  சந்தோஷ் இளங்கோவாகவும் , அவர் மனைவி அமுதாவாக நடனக்கலைஞர் ஷீலாவும்,  குட்டிப்பையன் தருணாக சித்தார்த்தும், வீட்டின் உரிமையாளராக நாடகக்கலைஞர் ஆதிரா பாண்டிலட்சுமியும் நடித்திருக்கின்றனர்.பத்திரிகையாளர் அருள் எழிலன், கவிஞர் ரவி சுப்ரமணியன், முனைவர் மருது மோகன், எழுத்தாளர் எம்.கே.மணி ஆகியோரும்  நடிப்பில் பங்களிப்பு செய்திருக்கிறார்கள். அவர்கள் குடியிருக்கும் மிகச்சாதாரண 3 அறைகள் இருக்கும் வீடுதான் கதைக்களம். மிகச்சிறிய பேசுபொருள் ஆனால் மிக அழகாக திரைமொழியை கையாண்டு இதை ஒரு அற்புதமான திரைப்படமாக செழியன் உருவாக்கியிருக்கிறார்.

 இப்படத்தில் பிண்ணனி இசையும் இல்லை. இயல்பான வாகனப்போக்குவரத்து ஒலிகளும் தொலைக்காட்சி, வானொலிச் சத்தங்களும், மகன் ஏதேதொ மிளற்றியவாறே விளையாடும் ஓசைகளும்  அமைதியுமே படத்தை நடத்திக்கொண்டு போகின்றது. தபஸ் நாயக்கின் ஒலிப்பதிவுக்கு மன்மார்ந்த பாராட்டுக்கள்.

குடியிருக்கும் அவ்வீட்டின் கதவு திறக்கையில் துவங்கி அதே கதவை மூடுகையில் முடிகின்றது திரைக்கதை.  சந்தோஷ் மற்றும் அமுதா தமிழ்திரையுலகிற்கு  நம்பிக்கையூட்டும் புது வரவு. ’’திட்டமாட்டியே’’ என்று தயக்கமாக துவங்கி உரையாடுவதும், அவமானத்தை கணவனிடம் கொட்டித்தீர்ப்பதுவும் வீடு வீடாக கனவுகளுடன் சென்று பார்ப்பதுமாய்  ஷீலா அசத்துகிறார். மூக்கும் முழியும் நீளப்பின்னலுமாய் லட்சணமாய் பாத்திரத்துக்கு பாந்தமாய் பொருந்தி இருக்கிறார்..

சந்தோஷ் அபாரமான இயல்பான நடிப்பு. அமுதாவிடம் கடுமையாக பேசிக்கொண்டிருக்கும் ஆதிரா ‘’உங்ககிட்டெ பேசலீங்க.‘’ என்று  இவரிடம் சொல்கையில் ஆத்திரத்துடன் ’’நானும் உங்ககிட்டெ பேசலீங்க!’’ என்று கத்துவதொன்றையெ சொல்லலாம் அவரின் அருமையான நடிப்பிற்கு உதாரணமாக. பல காட்சிகள் மிக அற்புதமாக படமாக்கப்பட்டிருக்கின்றன. காதல் வாழ்வு, சின்ன சின்ன ரொமான்ஸ், மகனின் படிப்பு எதிர்காலம் என கவலைப்படுவது, அவ்வபோது பூசலிட்டுக்கொள்வது என அவர்களின் வாழ்வை மிக அண்மையிலென நாமும் அவ்வீட்டிலிருந்தே காண்கிறோம், ஒவ்வொரு முறை வீடு கிடைப்பதற்காக அலைபேசி ஒலிக்க காத்திருக்கையில் ’’கடவுளே, வீடு கிடைச்சுடனும்’’ என்று நாமும் பிரார்த்திக்க துவங்கிவிடுவோம். அந்த சுட்டிப்பையன் சுவற்றில் வரையும் படங்களும் அப்படியே மனதில் ஒட்டிக்கொள்கின்றது. அழகிய வீடொன்றை வர்ணங்களில் வரைந்துகொண்டிருக்கும் அச்சிறுவன் பிற்பாடு அப்பா அம்மாவுடன் பள்ளியிலிருந்து நேராக வீடு வீடாக தேடிக்கொண்டிருந்ததில் பழகிப்போய் அழகிய வீடு ஒன்றை வரைந்து அதில் to-let என்றும் எழுதுகிறான். நகர வாழ்வின் போதாமைகளும் பொருளியல் சிக்கல்களும், பெரியவர்களுடையதை மட்டுமல்லாது, வளரும் ஒரு அறியாக்குழந்தையின் கனவுகளையும்   சிதைத்து விடுவதை இயல்பாக  காட்டும் காட்சியது.

அவ்வபோது அவ்வீட்டுக்குள் வந்துகொண்டிருக்கும் ஒரு குருவி ஒருநாள் மின்விசிறியில் அடிபட்டு செத்துப்போவதைப்போல அவர்களின் எளிய வாழ்விலான கனவுகளனைத்தும் சொந்தமாக வீடும் பொருத்தமான வாடகைவீடும் இல்லையென்னும் காரணத்தினால் அடிபட்டுப்போகின்றது.

ஜன்னல் வழியே எதிர்வீட்டின் சிறுமியுடன் விளையாடிக்கொண்டிருப்பது, சின்ன தொட்டிகளில் செடிகளை வளர்ப்பது, விருப்பம் போல சுவற்றில் வரைந்து மகிழ்வது என்று எல்லாவற்றிலிருந்தும் வீடு மாற்றும் நிர்பந்தம் காரணமாக அச்சிறுவன் விலகிக்கொண்டெ வருவது வலிதருகின்றது. ’’அப்பா! இந்த tv  நம்மளுதா, இந்த வண்டி நம்மளுதா என்றெல்லாம் கேட்டு ஆமென்று பதில் சொல்லும் தகப்பனிடம் ’’அப்புறம் ஏம்ப்பா இந்த வீடு மட்டும் நம்பளுதில்லை? ’’ என்று கேட்கையில் அதற்கான பதில் அந்த அப்பாவிடமும் நம்மிடமும் இல்லையென்பதை வருத்தத்துடன் உணருகிறோம்

அந்த வீட்டு எஜமனியம்மாவான ஆதிராவின் கண்டிப்பும் கடுமையுமான நடிப்பு மிகப்பிரமாதம்.  அதட்டலும் அலட்சியமுமாய் அசத்துகிறார். அனைவருமே புதுமுக நடிகர்கள் என்பதை நம்பவே முடியாது, பெரிய அவமதிப்புக்களை சாதாரணமாக அவர்  நிகழ்த்துகையில் கூனிக்குறுகியபடி அமுதாவுடனேயே நாமும் படியிறங்கி வந்து அறைக்கதவை தாளிட்டுக்கொண்டு அழுவோம்.

பணம் தொடர்பான ஒரு சின்ன மனஸ்தாபத்தின் பின்னர் கிரைண்டரில் மாவரைத்துக்கொண்டிருக்கும் அமுதாவிடம் கொஞ்சம் கொஞ்சமாக ஒவ்வொரு பாக்கட்டிலிருந்தும் இளங்கோ நோட்டுக்களை எடுத்துக்கொடுப்பதும், வீட்டை காலி செய்கையில் ஒட்டடை படிந்திருக்கும் மனைவியின் தலையிலிருந்து மென்மையாக அவற்றை  அப்புறப்படுத்துவதுமாய், நெருக்கடியிலும் அடுத்த கனம் என்னவென்று முன்முடிவு செய்ய இயலா வேதனையிலும் கூட அவர்களுக்கிடையேயான  காதல் இழையோடும் காட்சிகள் காட்டப்பட்டிருக்கும் விதம்அழகோ அழகு

எளிய தளத்திலியங்கும் மனிதர்களின் பிரச்சனைகளை கண் முன்னே கொண்டுவந்து காட்டி நல்லதொரு திரைப்படத்தைக் கொடுத்திருக்கும் செழியனுக்கு வாழ்த்துக்கள். பெருநகரமென்னும் இயந்திரத்தில் சின்னசின்னதான அந்தரங்க வாழ்வின் கனவுகள் எந்த மிச்சமுமின்றி நசுக்கப்படுவதை சொல்லும் படமிது. இந்தப் படத்துக்கு  2017 கொல்கத்தா திரைப்பட விழாவில், சிறந்த இந்தியப் படத்துக்கான விருது கிடைத்தது குறிப்பிடத்தக்கது. இது 65வது தேசிய திரைப்படவிழாவில் சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான தேசிய விருதினையும், கோவா வில் நடைபெற்ற 49வது சர்வதேச திரைப்பட விழாவில் சிறப்பு நடுவர் பரிந்துரை விருதினையும் பெற்றது. ஒரே ஆண்டில் உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளது. 26 சர்வதேச விருதுகளையும் வென்றுள்ளது. விருதுக்காக 80 முறை முன்மொழியப்பட்டுள்ளது.

 தென்னிந்திய சினிமாவின் மரபான பாடல், நடனம், நகைச்சுவை, ஆபாச வசனங்கள் என்னும் எவ்விதக்கேளிக்கைகளும் இல்லாத இத்திரைப்படம் பல ஊர்களில் திரையிடப்படவேயில்லை என்பது வருத்ததிற்குரியது. திரைமொழியை ஒரு உன்னதக்கலை என்று  உணர்ந்தவர்கள் அவசியம் தேடிப் பார்க்க வேண்டிய ஒன்று TOLETtolet

பேரன்பின் அபத்தங்களும் அழகும்!

peranbu-new-300x168
தேனப்பன் அவர்களின் தயாரிப்பில் ராம் எழுதி இயக்கி மலையாளத்திலும் தமிழிலும் தயாரிக்கப்பட்ட பேரன்பு திரைப்படத்தில் மம்மூட்டி, அஞ்சலி, சாதனா மற்றும் அஞ்சலி அமீர் ஆகியோர் முக்கிய பாத்திரமேற்றிருக்கிறார்கள். இசை யுவன் ஷங்கர் ராஜா. தேனி ஈஷ்வர் ஒளி இயக்குனர்
ரோட்டர்டாமிலும் ஷாங்காயிலும் நடைபெற்ற பன்னாட்டு திரைவிழாக்களில் முன்திரையிடப்பட்டு பெரும் வரவேற்பையும் பெற்றபின்னர் பிப்ரவரி 1, 2019 அன்று திரையிடப்பட்ட பேரன்பு, நல்ல படம் , மிக மோசம், கலைப்படம், தேவையில்லாத பேசுபொருள் கொண்டது, மிக அழகிய பேசுபொருளைக்கொண்டது, over sentiment movie, பெரும்மன அழுத்தம் தரும் ஒன்று, வாழ்வின் இயங்கியலில் நடைபெற சாத்தியமே அற்ற ஒன்றை புனைந்து சொல்லுவது என பல்வேறு வகையிலான கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது,

மனைவியைப்பிரிந்து , மூளை வளர்ச்சியற்ற பதின்மவயது மகளுடன் வாழும் அமுதவன் என்னும் தந்தை, மகளின் எல்லாத்தேவைகளையுமே பேரன்புடன் நிறைவேற்ற முயற்சிப்பதை சொல்லும் இக்கதையை இயற்கை என்னும் தலைப்பில் பல அத்தியாயங்களாக பிரித்து பிரித்து சொல்லியிருக்கிறார்கள்.

குளிர்பிரதேசமொன்றின் ஏரியில் மகளுடன் பரிசலில் பயணிக்கும் தந்தையுடன் துவங்குகிறது இப்படம்
பச்சை போர்த்திய மலைகளும், செறிந்த பைன் மரக்கூட்டங்களுமான பிண்னனியில் அந்த சிற்றாற்றின் கரையில் அமைந்திருக்கும் மரவீடு மிக அழகு .
இது வழக்கமான திரைப்படம் இல்லை என்பதை பாப்பா மூளை வளர்ச்சியற்றவர்களுக்கே உரிய அசாதாரண முகமும் உடலுமாய் தோன்றுகையிலேயே உணரத்துவங்குகிறோம். அவளை பெண் துணையின்றி மம்மூட்டி கவனிக்கப் படும் சிரமங்களை பெற்றோர்களாகிய பார்வையாளார்கள் பதற்றத்துடனேதான் கவனிக்கமுடியும் அதுவும் ‘பாப்பா’’ பருவமடைந்தபின்னர் மனப்பதற்றம் கூடுகின்றது

பாப்பா பெரும்பாலும் தலையசைப்பிலும் சின்ன சின்ன சப்தங்களிலும், அழுகை மற்றும் அலறல் வழியேவும்தான் பிறரை தொடர்பு கொள்கிறாள். எனவே பலரை தன் அத்தைய இருப்பின் மூலம் சங்கடப்படுத்துகிறாள். பாட்டி வடிவுக்கரசிக்கு வசனங்களே தேவையில்லை உடல்மொழியிலேயே வெறுப்பை அப்பட்டமாக காட்டக்கூடிய நடிகை அவர். பாட்டியான அவரும் தம்பி மனைவியும் அக்கம்பக்கத்தினரும் பாப்பாவின் இருப்பை அத்தனை பகிரங்கமாக தீவிரமாக ஆட்சேபிப்பது நம்பும்படியாக இல்லை. மானுடம் இன்னும் அத்தனை கீழ்மையடைந்திருக்கவில்லை என்று ஆழ்மனம் நம்புகிறதோ என்னவோ! மம்மூட்டி அந்த மிகத்தனிமையிலான வீட்டுக்கு மகளுடன் வருவதை நியாயப்படுத்த அந்தனை தீவிர ஆட்சேபணை இருப்பதாக காட்டியிருக்கலாம்
ஆனால் அத்தனை கஷ்டபட்டு வந்த அவ்வீட்டில் வேலைகளுக்கும் பாப்பாவுக்குமான துணைக்குமாக பெண்களே கிடைப்பதில்லை என்பதுவும், ஒரே நாள் வேலைக்கு வந்த பெண் மம்முட்டி அழகனாக இருப்பதால் புருஷன் சந்தேகப்படுவதால் இனி வரலைன்னு சொல்வதும் சம்பளத்தைக் கூட கைகளில் வாங்காமல் தரையில் வைக்கச்சொல்லி எடுத்துக்கொள்வதும் மிகைக்கற்பனை . நன்றாகவும் இல்லை, நம்பும்படியும் இல்லை

அஞ்சலியின் பாத்திரமும் அப்படியே ஒரு சிறப்புக்குழந்தையை வீட்டில் வைத்துக்கொண்டிருப்பவர் அப்படி ஊர் பேர் தெரியாத பெண்னை உதவிக்கு வைத்துக்கொள்வதே நம்பமுடியாத போது சில நாட்களிலேயே அவரை திருமணமும் செய்துகொள்வதென்பது கொஞ்சமும் நம்பமுடியாதவை. படத்தின் பேசுபொருள் பாப்பாவிற்கான துணையா அன்றி மம்மூட்டிக்கான துணையா என கேள்வி வருகின்றது
பின்னர் அஞ்சலியை வெளியேற்றுவதற்கான காரணமும் வலுவற்றது. அக்காட்சிகள் மிகுந்த நாடகத்தன்மையுடன் இருந்தன. அந்த வீட்டை விலைக்கு கேட்கும் கும்பலும் அவர்களின் அச்சுறுத்தலும் கூட வலிந்து திணிக்கப்பட்டது என்பதை உணரமுடிகின்றது
மம்முட்டி அந்த வீட்டுக்கு வர காரணமாக பிறரின் வெறுப்பை சொன்னதுபோலவே அவர் அந்த மரவீட்டை விட்டுவிட்டு போகவும் வலுவற்ற காரணங்களே சொல்லபடுகின்றது.

மூன்றாந்தர விடுதியில் மகளுடன் அவர் தங்குவதும் அங்கு ஆணும் பெண்ணும் நெருக்கமாய் இருப்பதை பாப்பா பார்த்ததால் அந்த இரவு நேரத்தில் விடுதியை காலிசெய்துவிட்டு மகளுடன் அவர் தெருவில் அமர்ந்திருப்பதுமெல்லாம் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ளவே முடியாத அபத்தங்கள். அதற்கு பதிலாக அவர் கதவடைத்துக்கொண்டு பத்திரமாக மகளுடன் அங்கிருந்து விட்டு காலை வெளியேறியிருக்கலாமே!
பின்னர் வருபவை அவற்றையெல்லாம் விட அபத்தங்கள். மகளின் பாலுறவுத்தேவையை அப்பா உணர்துகொள்வதும், அதை தீர்க்க ஒரு துணைக்காக முயற்சிப்பதெல்லாமே அபத்தங்களின் உச்சம். மகளுக்கு திருமணம் செய்துவைப்பதும், ஒரு ஆண் பாலியல் தொழிலாளியை தேடுவதும் ஒன்றென அவர் பேசுவதும் அப்படியே! வாழ்வின் எல்லா சிக்கலகளூக்கும் தீர்வு காண்பதென்பதே ஒருவகையில் அபத்தம் தான்.

பாப்பாவை விடுதியில் அப்படி அடிப்பதற்கான காரணமும், அதன்பிறகு அவளை மம்முட்டி பார்க்கவிடாமலிருப்பதும், தொலைக்காட்சியில் தெரியும் ஆணை பாப்பா முத்தமிடுவதுமெல்லாமே மிகு கற்பனைகள் .

சில காட்சிகள் மிக நன்றாக இருக்கின்றன. அஞ்சலையின் தாய்மாமா கட்டிலிலும் மம்மூட்டி தரையிலும் படுத்துக்கொண்டிருக்கையில் அவர்களிருவரும் பேசிக்கொள்ளும் காட்சி அழகாக படமாக்கப்பட்டிருக்கின்றது.. மம்முடியின் பின்னே எரியும் தழலின் நிழல் தாய்மாமவின் முகத்தில் தெரிவதும் அவரின் உணர்ச்சிகளை துல்லியமாக கட்டும் முகமும் அப்போது மம்முட்டி மிக இயல்பாக பேசும் வசனங்களும் அருமை.

அஞ்சலி மிக எளிய உடைகளில், குறைந்த ஒப்பனையில் அழகு மிளிர வருகிறார். கண்களும் உதடுகளும் பேசுகின்றன அவருக்கு. நள்ளிரவில் தேனீர் தயாரித்துக்கொடுக்கும் அந்த காட்சியில் தளர்ந்திருக்கும் மம்மூட்டியை அணைத்துக்கொண்டு ஆற்றுப்படுத்தவேண்டும் என்று அரங்கிலிருக்கும் அனைவருமே விரும்பியிருப்போம். அவரும் அதையே செய்கிறார்

பாப்பா பாப்பா என்று பதறுவதும் , தாயன்புடன் ஆடிப்பாடி கதை சொல்லி கவனித்துக்கொள்வதும், சேனிடரி நேப்கின்களைக்கூட மாற்ற உதவுதுமாக மம்முட்டி சிறப்பு குழந்தையொன்றின் அப்பாவாகவே மாறிப்போகிறார். அவரின் வயதை கொஞ்சமும் காட்டாத உடற்கட்டு உண்மையிலேயெ வியப்படைய வைக்கிறது. very much fit and smart for this age. பனிபொழியும் கதைக்களம், மூளை வளர்சியில்லாத பெண், மரவீடு என்று இப்படம் மூன்றாம் பிறையை அதிகம் நினவுக்கு கொண்டு வந்துகொண்டே இருக்கின்றது.

மகள் தங்கியிருக்கும் விடுதிக்கு வெளியே இரவு காரில் காத்திருந்து அங்கிருந்து கொண்டே மகளின் கதறலை, வீறிடலை கேட்டுக்கொண்டு கலங்குமிடத்திலும் மம்மூட்டி அசத்துக்கிறார்.

இறுதியில் வரும் அந்த மாற்றுப்பாலினத்தவரான மீரா பாத்திரமும் மிக நன்று. மிக அருமையான நடிப்பு அவருடையது. ஆனால் அப்பாத்திரம் இக்கதையின் மையப்பேசுபொருளின் தீர்வாக காட்டப்படுவதே கதையின் இறுதி அபத்தம்.

திரைப்படத் தொகுப்பு மிகச்சரியாகவே இருப்பினும் கதையில் நிறைய குழப்பங்கள். மம்முட்டி மகளை கவனித்துக்கொள்ள துணை தேடுகிறார். ஆனால அவர் அஞ்சலியை மணம் புரிந்துகொள்கிறார். அஞ்சலிக்குப்பிறது வீட்டையும் விட்டுவிட்டு நகரத்துக்கு வந்து மகளுடன் சீரழிகிறார் பாலுணர்வுதூண்டல் உட்படஅவளின் எல்லாத்தேவைகளையும் தீர்க்க மெனக்கெடுகிறார். மகளை வெறுக்கும் மனிதர்களிடமிருந்து விலகி நீரில் இருவருமாக மூழ்கி உயிரைவிடவும் எடுக்கவும் துணிகிறார். பின்னர் ஒரு மாற்றுப்பாலினத்தவரை அவர் திருமணம் செய்துகொள்வதுடன் படம் நிறைவடைகின்றது.
மூளை வளர்ச்சியற்ற மகளின் பாலுணர்வுத்தேவைக்கு அப்பாவின் மாற்றுப்பாலினத்தவருடனான மறு திருமணம் எப்படி தீர்வாகும்?
மிக அழகாகத்துவங்கி , சுமாராக கொண்டுசெல்லப்பட்டு மிக மோசமாக முடிந்த படம் இது

சாதனாவின் நடிப்பு பிரமாதம் அப்படி தொடர்ந்து உதடுகளை கோணிக்கொண்டு நாக்கை வளைத்து துருத்தியபடி, கை விரல்களயும் மடக்கிக்கொண்டு பாதங்களையும் வளைத்தபடிக்கே அவர் படம் முழுக்க வரும் அத்தோற்றம் மனதைபிசைகிறது
ஒரு சிறப்பு பெண்குழந்தையை வளர்க்க மனைவி இல்லாத ஆணொருவன் எப்படி கஷ்டபடுகிறான், என்பதை இன்னும் நுட்பமாக அழகாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி சொல்லி இருக்கலாம். ஏன் பாலுணர்வு தேவையை மிக அடிப்படையாக தீர்க்க வேண்டிய ஒன்றென காட்டியிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை

இயற்கையின் பன்முகங்களையும் பாரபட்சமுடன் அது உயிர்களை படைப்பதையும் குறித்து கோனார் நோட்ஸ் போடாத குறையாக அத்தியாயங்களாக பிரித்து விளக்காமல் பார்வையாளர்களே அதை புரிந்துகொள்ளும் படி கொண்டுபோயிருக்கலாம்
படம் முடியும் போது நாம் எத்தனை அருளப்பட்ட வாழ்விலிருக்கிறோம் என்னும் மகிழ்வைவிட கருணையின்றி படைக்கப்பட்டிருக்கும் உயிர்களின் மீதான பச்சாதாபமே மனதில் மேலோங்கி இருக்கும் என்பது இப்படத்தின் வெற்றியெனக்கொள்ளலாம்

லாலிபாப்பால் உதடுகளின் மேல் பாப்பா வருடிக்கொள்வது பனியை நம் மீதும் படரவிடும் துல்லியமான அழகிய ஒளிப்பதிவு. மாற்றுப்பாலினத்தவராகிய அஞ்சலி அமீரின் சிறப்பான நடிப்பு, மலையாளத் திரைஉலகின் நட்சத்திர அந்தஸ்தையெல்லாம் உதறிவிட்டு இயல்பாக நடித்திருக்கும் மம்முட்டி, நட்சத்திரங்களை எண்ணும் காட்சி, சிறப்பான ஒளிப்பதிவு என பாராட்டவும் பல அம்சங்கள் இருக்கின்றன இதில்.

எனினும் மூளை முடக்குவாதத்துடனிருக்கும் மகளை, மனைவியும் சகமனிதர்களின் பரிவும் புரிதலுமின்றியும் அன்புடன் கவனித்து வளர்க்கும் அப்பாவின் கதையாக இல்லாமல் அவளின் பாலுணர்வுதேவைகளுக்குமாக மெனக்கெடும் பேரன்புடனிருக்கும் அதிசய அப்பாவாக கதையைக்கொண்டு போனதுதான் பிழையாகிவிட்டது

 

Green Book

green book

GREEN BOOK

பீட்டர் ஃபாரெல்லியின் இயக்கத்தில் 2018’ல் வெளிவந்த 1960ல் நடைபெறும் கதைக்களத்துடனான Green Book என்னும் இந்த ஆங்கிலத்திரைப்படம் ஆப்பிரிக்க அமெரிக்கரும் ஜாஸ் பியானோ இசைமேதையுமான திரு டான் ஷர்லி  (Don shirley)  மற்றும்  அவரின் கார் ஓட்டுனரும் பாதுகாவலருமாகிய இத்தாலிய அமெரிக்கரும்  பவுன்ஸரான டோனி வேலிலங்கா (Tony vellelonga) ஆகிய இருவரையும் குறித்தான ஒரு உண்மைக்கதையை சொல்கிறது.

இசை, இனவெறி மற்றும் அசாதாரண தோழமை ஆகியவற்றை மிக அழகாக சொல்லிச்செல்லும் படம் இது

திரைக்கதையை இயக்குனர் பீட்டர், பிரையன் பியூரி மற்றும் டோனி வேலிலங்காவின் மகனாகிய ’’நிக் வேலிலங்கா’’ வுடன் இணைந்து எழுதியுள்ளனர். நிக் தனது அப்பா மற்றும் டான் ஷர்லியுடனான நேர்காணல்கள் கடிதங்கள் நாட்குறிப்புகள் என பலவற்றின் உதவியுடன் திரைகதையை செம்மையாக்க பெரிதும் உதவியிருக்கிறார் கதைக்களம் 1960களில் நடைபெறுவதுபோல அழகாக  காட்சிப்படுத்தபட்டிருக்கின்றது எவ்விதப்பிழையுமின்றி

கருப்பினத்தவர்களை மாலை சூரிய அஸ்தமனத்துக்குள் நகரை விட்டு வெளியேறச்சொல்லும்,வெள்ளையரல்லாதோர் உபயோகிக்கக்கூடாத பொதுஇடங்களின் பட்டியலை வைத்திருக்கும், இதற்கென பிரத்யேக சட்டங்களையும் விதிகளையும் வன்முறைகளையும் பின்பற்றும், வெள்ளையர்கள் மட்டும் வசிக்கும் அமெரிக்காவின் Sun down towns  எனப்படும்  தெற்கிலிருக்கும் நகரங்களுக்கு தொடர்ச்சியாக இசைக்கச்சேரிகள் செய்யவிருக்கும் வடக்குப்பகுதியைச் சேர்ந்த   உளவியலிலும் இசையிலும் டாக்டரேட் பட்டம் வாங்கியிருக்கும் கருப்பின இசை மேதையொருவர், தனக்கு அங்கு ஏற்படக்கூடும் என அஞ்சும் தாழ்மைகளுக்கும், உள்ளாகக்கூடுமென்னும் அச்சுறுத்தல்களுக்கும்,  துணைக்கும், பாதுகாப்பிற்கும் காரோட்டுவதற்குமாக  பணத்தேவையிலிருக்கும் ஒரு வெள்ளையரை 8 வாரங்களுக்கு பணியிலமர்த்திக்கொள்ளுவதும் அந்த பயணமும், கலவையாக அங்கு நடைபெறும் சம்பவங்களும் அவர்களுக்கிடையே முகிழ்க்கும் அழகிய தோழமையும் நம்மை  திரைப்படத்துடன் ஒன்றச்செய்யும் விதத்தில் படமாக்கப்பட்டுள்ளது

கருப்பினத்தவர்கள் அந்நகரங்களில் எங்கெங்கு மட்டும் தங்கலாம், உணவு உண்ணலாமென்னும்  விவரங்களடங்கிய GREEN BOOK என்னும் பயணக்குறிப்பேட்டை/கையேட்டை டோனி உடன் கொண்டுசெல்வதால் இப்படத்திற்கு இந்தப்பெயர்.  1936 லிருந்து 67 வரையிலுமே  பயன்பாட்டிலிருந்த இந்த பயணக்குறிப்பேடு  சாலைவழிப்பயணங்களில் கருப்பினத்தவர்கள் அந்நகரங்களை பாதுகாப்பாக கடந்து செல்வதையும், அங்கு தங்குவதையும் ஓரளவிற்கேனும் சாத்தியமாக்கியிருக்கிறது

எப்போதும் உணவுண்ணுதலில் பெரும் ஆர்வம் கொண்டிருக்கும், ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும், வாழ்வை மிக இலகுவாக எடுத்துக்கொள்ளும், பணத்திற்கான தேவை அதிகமாக இருக்கும்,   மனைவியும், இரு மகன்களும் சுற்றங்களுமாக நிரம்பிய வாழ்விலிருக்கும் வெள்ளையரான டோனிக்கும், உலகம் முழுதும் பிரபலமான பெரும் இசைமேதையான, தன்னந்தனிமையில் ஒரே ஒரு உதவியாளருடன், பகட்டான ஒரு வாழ்விலிருக்கும், வரவழைத்துக் கொண்ட மிடுக்கும் நிமிர்வுமாய்,  மிக சொற்பமாகவே பேசும்  கருப்பினத்தவரான ஷர்லியுமாய் தொடர்ந்து  பயணிப்பதும், மிக வேறுபட்ட பின்புலங்களைச் சேர்ந்த இவ்விருவரும் அந்த பயணத்தில் சந்திக்கும் எதிர்பாராமைகளும், அவை  மெல்ல மெல்ல ஷர்லியை மாற்றுவதும் அவர்களுக்கிடையே ஒரு பந்தம் உருவாவதும்  இப்படத்தில்  மிக மிக அழகாக சொல்லப்பட்டிருக்கின்றது

1927ல் ஃப்ளோரிடாவில்  வசதியான கருப்பினக்குடும்பத்தில் பிறந்த கருப்பினத்தவரான ஷர்லி, 1930ல் பிறந்த டோனி வேலிலங்காவை  பணியில் அமர்த்திக்கொண்டதும், எந்தப்பொருத்தமுமில்லாத இந்த இணையர் மேற்கொண்ட நெடிய சாலைப்பயணத்தில்  பரஸ்பரம் மற்றவரின் உலகை அவற்றின் பலவீனங்களுடன்  அறிந்துகொண்டு,  2013 ஆம் வருடம் இருவருமே இறந்து போகும் வரை உற்ற நண்பர்களாயிருந்ததும் இப்படத்திற்கு வலுவையும் ஆர்வத்தையும் சேர்க்கும் உண்மை பின்புலக் காரணங்கள்

அமெரிக்க நடிகரும்  2017 ல் ஆஸ்கர் வென்ற  முதல் இஸ்லாமிய நடிகருமான

(Mahershala Ali). மகிர்ஷாலா அலி, டான் ஷர்லியாகவும்,  அமெரிக்க நடிகர், எழுத்தாளர், கவிஞர், ஓவியர் அகாடமி விருது ,கோல்டன் குலோப் விருது என பல விருதுகளுக்கு சொந்தக்காரர் எனும் பல சிறப்புகளை உடைய   விகோ மோர்டென்சன் (Viggo Mortensen) டோனி லிப் வேலிலங்காவாகவும் பாத்திரமேற்று நடித்திருக்கின்றனர்

கிரிஸ்’ன் உறுத்தாத  இசையும்,  நெடும்பயணத்தை,  உணர்வெழுச்சிகளை உடல்மொழியின் மாற்றங்களை, இசைக்கும் விரல்களை, இழிவுபடுத்தப்படுகையில் புண்படும் நாயகனை, பொங்கும் தோழனை  அந்த சாலைகளை, பனியை, காவல் நிலையத்தை, விடுதிகளை, சிவப்புக்கம்பளம் விரிக்கப்பட்டிருக்கும் மாபெரும் அரங்குகளை  துல்லியமாக காண்பிக்கும் சீயான் போர்ட்டரின் காமிராவும்,  தொய்வின்றி கதையை சொல்லிச்செல்லும் விட்டோவின் அருமையான படத்தொகுப்பும் நம்மையும் அவர்களுடனேயே பயணிக்க வைக்கிறது.

மிக நேர்த்தியான உயர்தர  உடைகளும், துல்லிய, இலக்கண சுத்தமான ஆங்கிலமும், மேட்டுக்குடியினருக்கே உரித்தான மேம்பட்ட நாகரீகமும் நாசூக்கும் கொண்டவராய்,  மேடையில் தனக்கு அளிக்கப்படும் கெளரவங்களுக்கு அடியில் கருப்பினத்தவர் என்னும் எள்ளலும் கேலியும் வெறுப்பும் மண்டிக்கிடப்பதை உணர்ந்தவராக , கச்சேரியின் இடையில் கழிப்பறையை உபயோகிக்க அனுமதி மறுக்கப்படுகையிலும் உணவகங்களுக்குள் நுழைவொப்புதல் இல்லாதபோதும் சமநிலை இழக்காமல் இருப்பதுவுமாய் அலி அந்த பாத்திரமாகவே மாறியிருக்கிறார்.  வெள்ளையர்களுக்கான   இறுதிக்கச்சேரியை ரத்து செய்துவிட்டு கருப்பின மக்களுக்கான் பிரத்யேக விடுதியில் அனைவருக்குமாய் தன் மேட்டுகுடித்தனங்களையெல்லாம் உதறிவிட்டு இயல்பாக இசையை ரசித்து துள்ளலாக மெல்லிய நடன அசைவுகளுடன் எந்த பாசாங்கும் இன்றி பியானோ வாசிப்பதும், தானும் தன் இசையும் உண்மையில் யாருக்கு சொந்தமென்பதை உணர்ந்திருப்பதை உடல்மொழியிலேயெ வெளிப்படுத்துவதுமாக அசத்துகிறார் அலி

டோனி படம் முழுதும் வாழ்வை அதன் சாதக பாதகங்களுடன்  எதிர்கொள்ளும் சாமான்யராகவே நடித்திருக்கிறார்

துவக்கக்காட்சியில் வீட்டில் வேலைக்கென வந்த இரு கருப்பினப்பணியாளர்கள் உபயோகித்த டம்ளர்களை அசூயையுடன் குப்பக்கூடையில் தூக்கிப்போடும் அவரே, பிற்பாடு ஷர்லியை  புண்படுத்தும் அதிகாரிகளை அடிப்பதும் , ஒருபால் உறவின் பொருட்டு கைது செய்யபட்ட ஷர்லியை  காவலர்களிடமிருந்து மீட்பதும் (அந்த அசந்தர்ப்பத்தின் பொருட்டு  மாடிப்படிகளின் மேலிருந்து மன்னிப்பு கேட்கும் ஷர்லியிடம், கீழே நின்றவாறு, வாழ்வின்  சிக்கலான  பல அடுக்குகளை கண்டிருக்கும் தனக்கு இதை புரிந்துகொள்ள முடிகின்றது என்று   அவர்  எளிதாக சொல்லுவதும் அப்போது ஷர்லியின் புன்னகையும், கவிதை).  அவரின் இசைமேதமையால் கவரப்பட்டு அவரை ஆராதிக்க துவங்குவதுமாக விகோவும் வேலிலங்காவாகவே மாறியிருக்கிறார். மனைவிக்கு மொக்கையாக கடிதமெழுதும் டோனிக்கு ஷர்லி கவித்துவமான கடிதங்களை எழுத உதவுவதும் பின்னர் டோனியே அப்படி எழுதமுற்படுவதுமாக அவர்களின் தோழமையை மிக அழகாக சொல்லும் காட்சிகள் பல இருக்கின்றன

பயணம் துவங்குகையில் டோனியின் அசுத்தமென்று நினைக்க வைக்கும் வழமைகளால் ஷர்லிக்கு ஒவ்வாமை எற்படுவதும் பின்னர் திரும்பும் பயணத்தில்  வேலிலங்காவை பின் இருக்கையில் தூங்கச்செய்து இவரே காரோட்டுவதும், காவல்துறை அதிகாரிகள் மீண்டும் குறுக்கிடுகையில் வழக்கத்துக்கு விரோதமாக  ஷர்லி  பேச முற்படுவதும், காவலரும் எதிர்பாராவிதமாக உதவுவதுமாய் காலம் மாறிக்கொண்டிருப்பதையும், இனவெறியிருட்டினூடே நம்பிக்கையின் ஒளிக்கீற்று புலப்படுவதையும்  பார்வையாளார்களும்  காண முடிகின்றது.

பல நுட்பமான செய்திகளை அழகாக போகிற போக்கில் சொல்லிச்செல்லும் இத்திரைப்படத்தை அனைவரும் அவசியம் பார்க்கவேண்டும்

2018 ஆம் வருடத்தின் மிகசிறந்த திரைப்பட விருதையும், சிறந்த துணை நடிகருக்கான விருதை அலியும், உண்மைத்திரைக்கதைக்கான விருதை நிக் வேலிலங்காவும் பெற்று, இன்னும் பல விருதுகளையும் பெற்றிருக்கும் இத்திரைப்படம் வழக்கமான திரைப்படங்களினின்றும் மாறுபட்ட  படம் மட்டுமல்ல வரலாற்றின் கறுப்புப்பக்கங்களை குறித்து அறியாத  நமக்கெல்லாம் சுவாரஸ்யமாக சொல்லப்பட்ட  ஒரு பாடமும் கூட.

 நெடும்பயணமொன்றின் பிறகு அந்த இளநீலவண்ண 1962 மாடல் கெடிலாக் செடான் காரிலிருந்து இறங்கி, பனிபொழியும் கிருஸ்துமஸ் இரவில் நமக்கென வீட்டில் காத்திருப்பவர்களை காண,  தோழமையில் நிரம்பியிருக்கும் இதயத்துடன் செல்லும் உணர்வுடனேதான் திரையரங்கிலிருந்தும் வெளியேறுவோம்.

-____________________________________________________________________________________________

நீதிக்கு புறம்பாக பலரால் பொது இடத்தில் கொல்லப்படுதல், துன்புறுத்தபடுதல், எந்த சொத்துக்களையும் அவர்கள் வங்கும் உரிமையை  சட்டபூர்வமாக மறுத்தல், வெளிப்படையாக அவர்கள் உள்ளே வர அனுமதியில்லை என்று அறிவிக்கும் பலகைகளை உணவகங்கள் கழிப்பறைகள் உள்ளிட்ட  பல பொது இடங்களில் வைத்திருத்தல், நிறவேறுபாடுள்ளவர்களை நெருப்பிட்டு கொளுத்துதல், பலர் முன்னிலையில் தூக்கிடுதல், உயிர்போகும் வரையில் துன்புறுத்துதல் (Lynching)  இந்த  வதைகளை  புகைப்படமெடுத்து வாழ்த்து அட்டைகளாக வைத்துக்கொள்ளுதல் போல பல அநீதிகள் அந்தக்காலகட்டத்தில் நடந்திருக்கின்றன. சமூகவியலாளர்  James W. Loewen  2005’ ல்எழுதிய ’’Sundown Towns: A Hidden Dimension of American Racism , என்னும் புத்தகம் இவற்றையெல்லாம் விரிவாக பேசுகின்றது.

மகேஷிண்டெ பிரதிகாரம்-A Sweet revenge !

 

திரைக்கதை  எழுதியிருக்கும் ஸ்யாம் புஷ்கரன் தன்  பால்யத்தில் கேட்டிருந்த அவரது சொந்த கிராமத்தை சேர்ந்தவரும் தந்தையின் தோழருமான தம்பான் புஷ்கரன் என்பவரது வாழ்வில் நடந்த ஒரு உண்மைச்சம்பவத்தினை அடிப்படையாகக்கொண்ட இத்திரைப்படத்தில்  காதல் மட்டுமே கற்பனை. ஃபகத் ஃபாஸில், அனுஸ்ரீ, செளபின், அலென்சியர், சுஜித் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கியப் பாத்திரமேற்றிருக்கின்றனர். இயக்குனராக திலீப் போத்தனுக்கு முதல் படம். திகிலான பழிவாங்கும் கதைகளுக்கு மத்தியில் இது ஒரு  இனிய  பழிவாங்கும் கதை.

பழைய பாபு ஆண்டனியின் சாயலில் இருக்கும் ஜிம்சனுடனான ஒரு தெருச்சண்டையில் அடிபடும், கேவலப்படும் ஃபகத் மீண்டும் ஜிம்சனை அடித்தபின்னரே  ஒரு குறிப்பிட்ட காரியத்தை  செய்வதாய்  சபதமெடுப்பதே கதை.  ஜிம்சன் துபாய்க்கு வேலைக்கு போனதால் அவன் திரும்பி வரும் வரை காத்திருக்கையில் புகைப்படக்கலையென்பது பாஸ்போர்ட் புகைப்படம் எடுப்பதல்ல என்பதை  அப்பா ஆண்டனியிடமிருந்து ஃபகத் கற்றுக்கொள்கிறார். முதல் காதல் கைநழுவிபோகின்றது, பின்னொரு அழகிய காதல் முகிழ்க்கிறது

நாயகன் ஃபகத்திற்கு இயல்பான நடிப்பு குருதியிலேயே கலந்துள்ளது. முதல்காட்சியிலெயே வெள்ளையில் நீலவாரிட்ட செருப்பை கழுவி, நீரில் மிதந்து வரும் நட்சத்திரப்பழங்களை சேகரித்தபடி குளத்தில் குளிக்கும், ஃபாசிலைப்போல இயல்பாக நடிக்க இனிபிறந்து வரணும் பிறமொழியிலெல்லாம் நடிகர்கள். சிலுவை சுமந்து வருவோரின் கால்களிலும் பின்னர் காட்டப்படும் அச்செருப்புக்களுக்கு  கதையில் மிக முக்கிய இடம் இருக்கின்றது

புதுமுகங்கள் பலர் இருந்தாலும் அத்தனைபாத்திரங்களுக்கும் அனைவரும் கச்சிதமாகப் பொருந்துகின்றனர். அந்த கிராமத்து மக்களும் அப்படியே இயல்பாக அணிந்திருக்கும்  உடையிலேயே பல காட்சிகளில் நடிக்க வைக்கப்பட்டிருக்கின்றனர். ஒரு சிறிய கதாபாத்திரத்தில் இயக்குனர் திலீப் போத்தனும்  புஷ்கரனின் மனைவி உன்னிமாயாவும் கூட நடித்திருக்கின்றனர்.

ஆர்ட் டைரக்டர் அஜயன்  சாலிசேரி  ஒவ்வொரு காட்சியிலும் மிகக்கவனமெடுத்து அடுப்படியில் இருக்கும் பாத்திரங்களிலிருந்து  சுவற்றில் இருக்கும் புகைப்பட சட்டங்கள் வரை இடுக்கியின் கலாச்சாரத்தை திரையில் அப்படியே கொண்டு வந்து காட்டியிருக்கிறார்

நாயகன் உட்பட அனைவரும் பெரும்பாலான காட்சிகளில் கிராமத்தினரிடமிருந்து புது உடைகளை கொடுத்து  பதிலாக வாங்கிய  அவர்களின் உபயோகப்படுத்தபட்ட உடைகளையே அணிந்திருப்பதால் காட்சிகளில் அத்தனை உயிரோட்டம்

செளம்யாவின் திருமணத்தன்று  தனிமையில் கதறி அழுகும் ஃபகத்தின் துயரை கரைப்பது,  அக்கிராமத்தின் பச்சையை நனைத்து  நனைத்து இன்னும் அடர்த்தியாக்குவது, தேவாலயத்தில் குடையுடன் எதிரெதிரே கடக்கும் ஃபகத், செளம்யா இருவரின் மீதும் காதலென பொழிவது, மரவள்ளிக்கிழங்கு காடுகளில் இலைப்பரப்பை கோதியபடி கடந்துசெல்வது என பெரும்பாலான மலையாளப்படங்களைப்போலவே இக்கதையிலும் மழை ஒரு பாத்திரமாகவே  இருக்கிறது.

இடுக்கிமாவட்டத்தின்  இயற்கை எழில்  நிரம்பிய பிரகாசம் எனும் ஒரு மலையடிவார கிராமத்தில் நல்ல மழைக்காலத்தில் 45 நாட்களில் படமாக்கியிருக்கிறார்கள்

இரண்டு சண்டைகள் மட்டுமே. சண்டை இயக்குனர்  குங்ஃபூ சஜித்.  கதை துவங்குவதற்கு காரணமான சண்டையே கதையை முடித்தும் வைக்கின்றது. ஷாஜு ஸ்ரீதரனின் படத்தொகுப்பும் அபாரம்

பீஜ்பால் இசையமைத்து இரண்டு பாடல்களும் பாடியிருக்கிறார். கவிஞர் அஹமத் ஒரேநாளில் எழுதிய கவிதையான  ‘’ இடுக்கி ’’  பாடலில்  கேரளத்தின் ஜீவனை நுட்பமாகவும் துல்லியமாகவும் கண்டுவிடமுடியும்  அத்தனை அற்புதமான பாடல்

காதலியை மகேஷ் சந்திக்க  ஏதுவாக பேபிச்சேட்டன் காண்பிக்கும் மார்வலியென்னும் ’’நம்பர்’’ எக்குத்தப்பாய் மாறிப்போவது போல  திரைக்கதையினூடே மெல்லிய நூலாக மிகையில்லா இயல்பான நகைச்சுவைக்காட்சிகள் பல  இருப்பினும் செளபின் ஷாகிர் வரும் காட்சிகளையெல்லாம். புன்முறுவலுடனேயே பார்க்கமுடியும், குறிப்பாய் அந்த ’’கிரிஸ்பின்’’

’’தெளிவெயிழலகும், மழையுட குளிரும்’’ பாடல் கொள்ளை அழகாக படமாக்கப்பட்டிருக்கிறது

ஒப்பனை அறவே இல்லாத சோனியாமோளாக வரும் லிஜிமோள் ஜோஸின் இயற்கை அழகும் செளபினுடனான  அவரின் காட்சிகளும் ரசிக்க வைக்கிறது. ‘’நீயும் சுந்தரனாடா’ என்று சொல்லப்படுகையில் அலென்சியர்  முகத்தில் காட்டுவது அசலான பெருமிதம். பேருந்து ஸ்டுடியோவை கடக்கையிலெல்லாம் ஃபகத் ஃபாஸிலின் உடல்மொழியும் நாயகியின் நடிப்பும்  பிரமாதம்,  ஜிம்சனின் தங்கையே காதலி ஜிம்சி என்பது  நாயகனின் சபதத்தை ஒன்றும் சிதைப்பதில்லை. முன்காதலியின் திருமணத்தன்று அவளை தெருவிலிருந்தபடி பார்த்து  ஃபாஸில் புன்னகைகும்  காட்சியை திரைப்படக்கல்லூரியில் பாடமாக வைக்கலாம்.

துக்கவீட்டில் காதலிக்கு கும்பிலியப்பம் சாப்பிடக்கொடுப்பது,  கப்பைக்கிழங்களைகொத்துக்கொத்தாகப் பிடுங்கி சீவுவது,  தட்டில் அடிக்கி வைக்கப்பட்டிருக்கும் பொன்மஞ்சள் நிறப் பலாச்சுளைகள் ,  வீட்டு வாசலில் வாழைக்குலை, பச்சைபிடித்த கிராமம், நைட்டியில் பெண்கள், அச்சு அசலாக  கேரளக்கிருத்துவ சாவு வீடும் திருமணமும்,  மென்பஞ்சுக்குலையுடன் பறக்கும் எருக்கம்பூ விதைகளின் பிண்ணனியில் தெரியும் ஜிம்சி, பேருந்தில் நேந்திரன் சிப்ஸ், லாட்டரிச்சீட்டு விற்பனை, தொலைக்காட்சியில் மூழ்கி இருக்கும் பெண்கள்,  மினுங்கும் சருமத்துடன் அடர்கூந்தலும்  மையெழுதிய அகலகண்களுமாய் கேரளத்துச்சுந்தரிகள், மழை, நதி, கட்டஞ்சாயா என்று ஷைஜுவின்  காமிரா கேரளத்தை கண்ணிலும் மனசிலும் கொண்டு வந்து கொட்டி நிறைப்பதில் படம் முடிந்து அரங்கைவிட்டு புறப்படுகையில்,  ஏதோ கேரளகிராமம் ஒன்றிலிருந்து புறப்படுவது போலவே இருந்தது

திரைக்தையின் எளிமை உண்மையில் திகைப்பூட்டும்.  இத்தனை எளிய மிகச்சிறிய ஒரு புள்ளியிலிருந்து தொட்டுத்தொட்டு அழகிய முழுநீளத்திரைச்சித்திரத்தை தீட்டுவதென்பது இம்மொழியிலல்லாது வேறெந்த மொழியிலும்  நிகழாச்சாத்தியமே!

ஆக்‌ஷன் ஹீரோ பிஜுவிற்குபிறகு அமெரிக்காவின் மிக அதிக வசூலைப்பெற்ற மலையாளப் படமும் இதுவே! 5 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்டு பிப்ரவரி 5 2016 ல் வெளியாகி  18 கோடி வசூலுடன் வணிகரீதியாகவும் வெற்றி பெற்று வட அமெரிக்க திரைவிருது, பன்னாட்டு  திரைப்படவிருது வனிதா விருது மாநில மற்றும் தேசிய விருதுகள் உள்ளிட்ட  23  விருதுகளை அள்ளிக்குவித்திருக்கும் இந்த அ,ரிய அழகிய திரைப்படத்தைப் பார்க்கத்தவறினால் அது திரைக்கலையை நேசிப்பவர்களுக்கு  நிச்சயம் பேரிழப்பாகும்.

ஃபகத்தின் அப்பா படத்தில் சொல்லியிருப்பது உண்மை என்பதை உணர்ந்தபடியேதான் அரங்கிலிருந்து வெளியெ வருவோம்

’’ஆம் இ ஜீவிதம் சுந்தரமானு’’

 

பேட்ட

எந்திரன் 2.0 வெளியாகி ஒரு மாத இடைவெளியில் மீண்டும் ஒரு ரஜினி படம். ஜனவரி 10, 2019  தைப்பொங்கல்  அன்று வெளியான ,கார்த்திக் சுப்புராஜ் எழுதி, இயக்கி சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த பேட்ட (Petta) ரஜினிகாந்தின் 165 ஆவது திரைப்படம். இத்திரைப்படத்திற்கு அனிருத்ரவிச்சந்திரன்  இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு திரு,   படத்தொகுப்பாளர் விவேக் அர்சன்.

சீனியர் மாணவர்கள் அட்டகாசமும் வில்லத்தனமும் அதிகமிருக்கும் ஒரு கல்லூரி விடுதிக்கு காப்பாளராக ரஜினி வருகிறார். அங்கிருக்கும் பிரச்சனைகளை துரிதமாக சரிப்படுத்தி மாணவர்களை கட்டுக்குள்  கொண்டு வரும் ரஜினி மாணவர்களில் ஒருவனை  கொல்லச் செய்யப்படும் முயற்சிகளை முறியடிகிறார். அதன்பொருட்டே அங்கு அவர் வந்திருகிறார் என்பதும், அவருக்கும் அந்த மாணவனுக்குமான உறவென்ன என்னும் புதிருமே கதைக்கரு.

கண்ணைக்குளிர்விக்கும் டார்ஜிலிங்கில் துவங்கி மதுரைக்கு வந்து உத்தரப்பிரதேசத்தில் முடிகின்றது கதை. அறிமுகக்காட்சியில் ரஜினி சோளக்கதிர்களை சுடும் நெருப்பின் பொறி பறக்கும் பிண்ணனியில் திரையில் தோன்றுகையில் பல்லாண்டுகளாக திரையரங்கில் எழும்  அதே ஆர்ப்பரிப்பும் ஆட்டமும் பாட்டமும் விசிலுமாக  அரங்கு அமளிப்பட்டது.  ரஜினி வரும் காட்சிகளில்  தேவதூதன் சிலை ஒரு குறியீட்டைபோல காண்பிக்கப்படுகிறது.  முதன்முதலாக திரைத்துரைக்குள் நுழைந்ததைப்போலவே மூடியிருக்கும் கதவுகளை தள்ளித்திறந்தபடியே  பல காட்சிகளில் வருகிறார் ரஜினி.

கபாலியில் வயதான ரஜினி ரசிகர்களை ஏமற்றி கொஞ்சம் விலகிச்சென்றார் இதில்  அப்படியல்ல 80/90ல் பார்த்த அதே  ஸ்டைல் மன்னன். ஒப்பனை மிகப்பொருத்தமாக இருப்பதுடன் ரஜினியின் ஃபிட்னஸ் வியப்பூட்டுகின்றது. நடனக்காட்சிகளில் அதே 80 களின் ரஜினி தெரிகின்றார்.

20 வருடங்களுக்கு முன்னதான மதுரை ப்ளேஷ் பேக்கும் கல்லூரி அடிதடியுமாக  விரைவாக நகரும் கதை, கொஞ்சம்  தள்ளாடி  உத்தர பிரதேசத்தில்  நுழைந்ததும் ஏராளமாய் துப்பக்கி சுடுதல். ரஜினி இரண்டு கைகளிலும் துப்பாக்கி ஏந்தி சகட்டுமேனிக்கு சுட்டுத்தள்ளுகிறார். விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, இயக்குனர் மகேந்திரன், சிம்ரன், த்ரிஷா நவாஸுதீன், சசிகுமார், ஆடுகளம் நரேன் என நட்சத்திரப்பட்டாளமே இருந்தாலும் கதை ரஜினியை நம்பியே நகருகின்றது. மாலிக் ஆக சசிகுமார் வருகையில் பாட்ஷாவை நினைப்பதை தவிர்க்கவே முடியவைல்லை.

சில காட்சிகளில் வரும் சிம்ரன் அழகு, நன்றாக மெலிந்து சிலிம்ரன் ஆகவும் இருக்கிறார். ஆடுகிறார் பாடுகிறார், ரஜினியை காலம்கடந்து காதலிக்கவும் செய்கிறார் எனினும் உயிரோட்டமின்றி சாவி கொடுக்கபட்ட பொம்மையைப்போல நடிக்கிறார். அவரது தோற்றத்திற்கும் மங்களம் என்னும் பெயருக்கும் பொருத்தமுமில்லை. த்ரிஷா சிம்ரனை விட மிகக்குறைந்த காட்சிகளில் வருகிறார். படத்தில் அவரும் இருக்கிறார். அவ்வளவே. கதாநாயகிகள் இருவருக்குமே எந்த முக்கியத்துவமும் இல்லை.

ராட்சச நடிகரென்று பாலிவுட்டில் பெயரெடுத்திருக்கும் நவாஸுதீன் சித்திக் என்னும் அற்புதமான கலைஞனை இங்கு அவ்வளவாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. மதுரைக்காரராக அவரது வடஇந்திய முகம் ஒட்டவில்லை மேலும் தமிழிலான வசன உச்சரிப்பும் அவருக்கு பொருந்தவில்லை. ரஜினி என்னும் ஆலமரத்தின் கீழ் எந்தச்செடியும் செழித்து வளரமுடியாதுதான். இயக்குனர் மகேந்திரனும் இருக்கிறார் தளர்ந்திருக்கிறார்.

பீட்ஸாவிலும் ஜிகிர்தண்டவிலும் இருந்த கார்த்திக் சுப்புராஜை இதில் காணமுடியவில்லை முழுக்க முழுக்க ரஜினி படம் இது. சனந்த் ரெட்டி மேகா ஆகாஷ் காதல் ஜோடி பரவாயில்லை. அவருக்கே உரித்தான கரகர குரலுடன் ராம்ஸும் இருக்கிறார்

பாடல்களை விவேக், கு.கார்த்திக் மற்றும் தனுஷ் எழுதியிருக்கின்றார்கள். மரணமாஸ் துவக்கபாடலை s.p பாலசுப்ரமனியமும் அனிருத்தும் இணைந்து பாடியிருக்கிறார்கள். அனிருத்  பாடல்களிலும் பிண்ணனியிலும் கொட்டிமுழக்கி இருக்கிறார் மாமனுக்காக. இளமை துள்ளுதே பாடலை மருமகன் தனுஷ் எழுதியிருகிறார். உல்லாலா பாடல் சுராங்கனியையும் பம்பரக்கண்ணாலேவையும் நினைவூட்டினாலும் இனிமை.

ஒரு காட்சியில் சிகரட் பிடிப்பது கெடுதலென்றும் அதை அனுபவத்தில் உணர்ந்தே சொல்லுவதாகவும் ரஜினி சொல்கிறார். 165 ஆவது படத்தில், 60 வயதைத்தாண்டி அரசியலுக்கு வந்தபின்னர் ரஜினி சொல்வதை, அவரைப்போலவே ஸ்டைலாக புகைபிடிக்கத்துவங்கிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காதில் போட்டுக்கொள்வார்களா என்று தெரியவில்லை

திரு ஒளிப்பதிவு அபாரம்.  டார்ஜீலிங்கில் Eastern Forest Rangers   கல்லூரி வளாகம் அத்தனை அழகு. சர்ச்சில் மெழுகுவர்த்தி ஒளியுடனான காட்சிகளும் டார்ஜிலிங்கின் மலைப்பாதையும், பனிப்பொழிவும் கண்ணில் நிறைகின்றது  சண்டை இயக்குனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பீட்டர் ஹேன்ஸ் அடித்து நொறுக்கியிருக்கிறார். மார்க்கெட் மர்றும் சர்ச் சண்டைகளை மிக உற்சாகமாக இயக்கியிருக்கிறார்.

புதுசா வந்தா விரட்டுவீங்களாடா இது உங்க கோட்டை இல்லை என் பேட்டை, சம்பவம் காத்திருக்கு, ஸ்வீட் சாப்பிடப்போறோம் என்று மறைமுகமாகவும் நேரடியாகவும் அரசியல் பன்ச்சுகளும் உண்டு

விஜய் சேதுபதி அப்படியே உத்தரபிரதேச வெறியராக வருகிறார். கண்டமேனிக்கு சுட்டுத்தள்ளுகிறார். பொருந்தி நடித்திருக்கிறார் எனினும் கொஞ்சம் ஃபிட்னஸ் குறித்தும் யோசிக்கனும். கிளைமாக்ஸுக்கு பின்னரும் இன்னொரு ட்விஸ்ட் காத்திருக்கு ரசிகர்களுக்கு.

ரஜினி ஸ்டைலாக துப்பாக்கி சுடும் காட்சியொன்றில் ஒரு கேரளா நண்பர் ரஜினியிடம் சொல்லுவார் ‘’சாரே , கொலை மாஸானு’’ என்று அதுதான் படத்திற்கான  ஒற்றை வரி விமர்சனமும்.

 

 

 

 

maxresdefault

« Older posts Newer posts »

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑