உலகின் பல்வேறு இடங்களில் அனைத்து மொழிகளிலும், பல்வேறு மாற்றங்களுடன் சொல்லப்பட்டு வரும் மத்திய கிழக்கு நாடுகளின் நாட்டுப்புற பெருங்கதையான ‘’ஆயிரத்து ஒரு அரேபிய இரவுகள்’ கதைகளில் ஒன்றுதான், புகழ்பெற்ற ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’. இந்தக்கதைதான் சமீபத்தில் லைவ் ஆக்ஷன் அனிமேஷன் திரைப்படமாக ‘அலாவுதீன்’என்ற பெயரில் உலகம் முழுவதும் மே 24ம் தேதி வெளியானது.
1992ஆம் ஆண்டு வெளியான அலாவுதீன் Animation படத்திற்குப்பிறகு டிஸ்னி நிறுவனம் மீண்டும் அற்புத விளக்கைத் தேய்த்திருக்கிற்து. ஆணழகன் வில் ஸ்மித் கவர்ச்சியும் மர்மமும் அசாராணமும் கலந்த, நீல நிறத்தில் , இடுப்புக்கு கீழே புகைப்படலமாக வரும் பிரம்மாண்டமான பூதமாக மிகச்சரியாக பொருந்தியிருக்கிறார். சிரிக்கும் கண்களும், மயக்கும் குரலும், கிண்டலும், கேலியும், காதலுமாக அவரின் பல்லாயிரக்கணக்கான ரசிகைகளை மீண்டும் கவர்ந்திருக்கிறார்.
படம் வரலாற்று வெற்றியைப் பெற்றிருக்கிறது; குழந்தைகளுடன் பெரியவர்களும் கொண்டாடுகிறார்கள். பல்லாயிரம் வருடங்களாக சின்னஞ்சிறு விளக்கினுள் அடைபட்டிருக்கும் பூதம், அற்புத விளக்கை தேய்த்து தன்னை விடுவித்தவர்களை மூன்று வரங்களின் மூலம் மகிழ்விப்பதுடன் , தானும் சுதந்திரமான வெளியில் உலவவும், தோழமைக்கும் காதலுக்கும் ஏங்குவதுமாக பல்லாண்டு பழமையான ஒரு கதையில், சுவாரஸ்யமான சில திருத்தங்களுடன் திரைப்படமாக்கியிருக்கிறார்கள். நிறையகாட்சிகளில் பாடல்களின் மூலமே கதை சொல்லப்படுவதால் இதை இசைத்திரைப்படமென்றும் சொல்லலாம்.
பெரும்பாலான சிறார் கதைகளில் வரும் ஏழையொருவன் இளவரசன் ஆவது என்னும் கதையென்பதால் அனைத்து வயதினரின் விருப்பத்துக்கும் உகந்த கதையிது. தெருவில் சில்லறைத்திருட்டுக்கள் செய்து வாழும் யாருமற்ற இளம் நாயகன், அழகும் இளமையும் நிறைந்த இளவரசியை சந்தித்து காதல் கொள்வது, ஆட்சியை பறிக்க திட்டமிடும் வில்லன், மந்திர விளக்கு, அதிலிருந்து வரும் பூதம்,, பூதத்தின் காதல், பூதத்திற்கும் அலாவுதீனுக்குமான நட்பு என அனைவரும் அறிந்திருக்கும் கதையில், எதிர்பாரா அம்சங்களுடன் கதை அழகாக போகின்றது.
வில்லன் ஜாஃபர், அலாவுதீனை விளக்கை கொண்டு வரச்சொல்லுவதும், அலாவுதீன் விளக்கை தேய்த்தபின்னர் அவன் வாழ்வு மாறுவதும், அதன்பின்னரான சாகசங்களுமே கதை. மூலக்கதையைபோல இது அலாவுதீனை மையப்படுத்தாமல் பூதத்தை பிரதானமாக கொண்டிருக்கிறது
படத்தில் மர்வான் கென்சார், நேவிட் நெகஹ்பான், பில்லி மக்னுஸ்ஸன் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். நீல பூதத்தைக்காட்டிலும் இளவரசன் அலியின் தோழனே அனைவருக்கும் பிரியமானவராக இருக்கிறார். பூதத்தின்காதலி டாலியாவாக நாஸிம் பெடரட் மிகச்சரியான தேர்வு.
அலாவுதீனாக வரும் மசாட் ஏழைச்சிறுவனாக கடைகளில் திருடி, தாவித்தாவி தப்பித்து செல்வதும், பூதம் அவனை இளவரசனாக மாற்றியும் அவனால் அந்த வேடத்தில் பொருந்தமுடியாமல் தவிப்பதுமாக பிரமாதப்படுத்தியிருக்கிறார்.
.Pink Power Ranger வேடத்தில் புகழ்பெற்ற நவாமி ஸ்கட் இதில் இளவரசி ஜாஸ்மின். மாறுவேடத்தில் அலாவுதீனை சந்திப்பதும் காதல் கொள்வதும் ஆட்சிபொறுப்பை ஏற்க விரும்புவதும், வில்லனை எதிர்ப்பதும் அழகிய குரலில் பாடுவதுமாக பலரின் விருப்பத்துக்கு உள்ளாகி இருக்கிறார். அவர் குரலில் முக்கியமான பாடலான speechless அவரை இன்னும் புகழின் உச்சிக்கு கொண்டு போகும்
படத்தில் ,குறும்புக்குரங்கும் பிரம்மாண்ட புலியும், வில்லனின் கிளியும் கணினி உபயம் வில் ஸ்மித்தின் நடிப்பு, அலாவுதீனாக நடிக்கும் மேனா மசூத்தின் மிகப்பொருத்தமான பாத்திரத்தேர்வு, ஜாஸ்மினாக வரும் நவோமி ஸ்கட்டின் தூய அழகு எல்லாம் ஈர்த்தாலும், அனிமேஷன் செட்கள் படத்தையும் டிஸ்னி ஸ்டுடியோவின் தரத்தையும் கொஞ்சம் கீழிறக்குகின்றன
மூலக்கதையினின்றும் இத்திரைப்படம், சாதாரண மனிதனைப்போல அலாவுதீனின் நண்பனாக பூதம் வருவதிலும், இளவரசியை இளவரசன் அலி காதலிக்க பூதம் உதவி செய்வதிலும், பூதம் டேலியாவுடன் காதல் வயப்படுவதிலும், கொஞ்சம் வேறுபடுகின்றது இடைவேளையின் போது இளவரசன் அலி காதலை சொல்வதற்கு பதில் பலவகையான ஜாம்களை பட்டியலிடுவதும் பூதம் சலித்துக்கொள்வதுமாக அரங்கு சிரிப்பில் நிறைகின்றது.
.$183 மில்லியன் தயாரிப்புச்செலவில், சுமார் 5000 திரையரங்குகளில் உலகெங்கும் வெளியான இப்படம், முதல் வாரத்திலேயே $462.3 மில்லியன்களை வாரிக்குவித்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது
சதியும் காதலும் மந்திரமும் மாயக்கம்பளமும், சாகசங்களும், பூதமுமாக, அலாவுதீன் திரும்பக்கிடைத்த பால்யம்