டெக்சஸ் மாநில மலர்
Lupinus texensis, என்னும் தாவர அறிவியல் பெயருடைய Texas bluebonnet அல்லது Texas lupine என்பது டெக்சஸ் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வளரக்கூடிய அழகிய அடர்நீல மலர்களை தரும் தாவரமாகும். இம்மலர்களே டெக்சஸின் மாநில மலராகவும் இருக்கின்றன Lupines எனப்படும் பேரினத்தின், Lupinus subcarnosus, L. havardii, L. concinnus, L. perennis, மற்றும் L. plattensis ஆகிய 5 சிற்றினங்களுமே நீல பொன்னெட் என்றே அழைக்கப்படுகின்றன.
கொத்துக்கொத்தாக தோன்றும் மஞ்சரிகளில் வரிசையாக அமைந்திருக்கும் மலர்களின் இதழ் அமைப்பு பெண்களும் குழந்தைகளும் அணியும் தாடைக்கு கீழ் நாடாவால் இணைக்கப்பட்டிருக்கும் bonnet என்னும் தொப்பியை போலிருப்பதால் இதற்கு blue bonnet என பெயரிடப்பட்டிருக்கின்றது. Buffalo Clover, Wolf Flower என்னும் பெயர்களும் இதற்குண்டு இவை பட்டாணி ,அவரைச்செடிகளின் குடும்பமான Fabaceae (Pea Family) யை சேர்ந்தவை
5-7 பிரிவுகளாக விரல்கள்போல் விரிந்திருக்கும், கூரான நுனிகளையுடைய பசுமைக்கூட்டிலைகளுடனும் , பீன்ஸ் பொன்ற காய்களினுள்ளே 6 அலல்து 7 மிகச்சிறிய மணிகளாக கடினமான மேலுறையுடன் இருக்கும் விதைகளையும் கொண்டிருக்கும் இந்த ஓராண்டுத்தாவரம், அதிகபட்சமாக 3 மீட்டர் உயரம் வரை வளரும்
20லிருந்து 50 செ மீ உயரமுள்ள தண்டிலிருந்து சுமார் 50 அடர் நீல மலர்களையுடைய மிதமான வாசனையுடன் மஞ்சரி உண்டாகும். மஞ்சரியின் நுனியில் மட்டும் தூவெண் நிறத்தில் மொட்டுக்கள் காணப்படும். முதிர்ந்தபின் மலர்கள் ஆரஞ்சு நிறத்திலிருக்கும். பூக்கும்பருவம் மார்ச்சிலிருந்து ஏப்ரல் வரை, அரிதாக மே மாதத்திலும் இவற்றைக்காணலாம். புல்வெளிகளிலும் நெடுஞ்சாலை வழியின் சரிவுகளிலும், பயிரிடப்படாத திறந்த வெளிகளிலும் இவை செறிந்து காணப்படும். மிகக்குறைவான நீரும் அதிக சூரிய வெளிச்சமும் நீர் தேங்காத மண்ணும் இவை செழித்து வளர தேவைப்படும்
1901 மார்ச் 7 அன்று டெக்சஸீன் மாநிலமலராக Lupinus subcarnosus என்னும் மற்றொரு சிற்றினமே முதலில்அறிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் பெரும்பாலான டெக்சஸ் மக்களின் விருப்பத்தின்பேரில் L.texensis மாநில மலராக மாற்றப்பட்டது. இம்மலருக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்திற்கும், இவை கொண்டாடப்படுவதற்கும் பிண்ணனியில் ஒரு முக்கியப்பெண்மணி இருந்திருக்கிறார்கள்
’’எங்கு மலர்கள் மலர்கிறதோ அங்கெல்லாம் நம்பிக்கையும் மலரும்’’ என்று அடிக்கடி சொல்லும் கல்வியாளரும் இயற்கை ஆர்வலரும் அமெரிக்காவின் 36 ஆவது அதிபரரான லிண்டன் பி ஜான்சனின் (Lyndon B Johnson) மனைவியுமான”Lady Bird” Johnson என்பவரின் முயற்சியால்தான் இன்று டெக்சஸின் நெடுஞ்சாலைகள் பலவண்ன வனமலர்களால் அழகுறக்காணப்படுகின்றது. 1965ல் அவரால் முன்னெடுக்கப்பட்டு கையெழுத்திடப்பட்ட HBA – highway beautification Act என்னும் நெடுஞ்சாலைகளை அழகுபடுத்தும் சட்டத்தின் பின்னரே இந்த செடி மிக அதிகமாக சாலியோர சரிவுகளில் பயிரிடப்பட்டது.
அதன்பின்னரே பொட்டல் வெளிகளெல்லாம் பூத்துக்குலுங்கும் ரம்மியமான இடங்களாகின சலிப்பும் சோர்வும் தரும் நெடுஞ்சாலைப்பயணங்கள் பார்வைக்கு இனிய மலர்களின் காட்சிகளுடன் மிக இனிதான விரும்பத்தக்க பயணங்களாகியது. இதன் பொருட்டு இவருக்கு அமெரிக்காவின் மிக உயரிய விருதுகளான presidential Medal of Freedom மற்றும் Congressional Gold Medal, ஆகியவை அளிக்கப்பட்டன. 1982:ல் ஆஸ்டினில் இவரால் உருவாக்கப்பட்ட தேசிய வனமலர்கள் ஆராய்ச்சி நிலையம் பின்னர் 2006ல் டெக்சஸ் பல்கலையுட்ன இணைக்கப்பட்டது..
இவரது வழிகாட்டலின் பேரில் 1932ல் ஜெக் கப்பல்ஸ் (Jac Gubbels) என்னும் புகழ்பெற்ற நிலவடிவமைப்பாளரை டெக்சஸின் நெடுஞ்சாலைத்துறை பணியிலமர்த்தி நெடுஞ்சாலைகளின் ஓரங்களிலும் சரிவுகளிலும் வனச்செடிகளை வளர்க்கத்துவங்கினார்கள், இன்றும் வருடத்திற்கு 30 ஆயிரம் பவுண்டுகள் வனமலர்ச்செடிகளின் விதைகளை இத்துறை வாங்குகின்றது
1912ல் பிறந்து பெரும்பாலான நிலப்பரப்புக்களை கொள்ளை அழகாகவும் வண்ண மயமாகவும் மாற்றிய இவர் தனது வாழ்நாளின் பிற்பாதியிலிருந்து மரணம் வரை உடல்நலக்குறைவால் கண் பார்வையின்றி இருந்தது வாழ்வின் முரண்களிலொன்று, 1912ல் பிறந்து 2007ல் தனது 94 வயதில் இவர் மரணமடைந்தார்
டெக்சஸ் மக்கள் அனைவருமே இம்மலர்கள் பூக்கும் பருவத்தில் குடும்பத்துடனும் வளர்ப்பு பிராணிகளுடனும் சென்று மலர்களின் இடையிலும் அவற்றின் பிண்ணனியிலும் புகைப்படம் எடுத்துக்கொண்டு மகிழ்வர். டெக்சஸ் நகரவாசிகளின் வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்ட இம்மலரைக்குறித்தும் அச்செடிகள் வளர்ந்து மலர தயாராகிவிட்டதாவெனவும் கிருஸ்துமஸ் முடிந்த உடனேயே மக்கள் பேசிக்கொள்ள துவங்குவார்கள்
1933 லேயே இம்மலர்களுக்கான பிரத்யேக பாடலொன்றும் டெக்சஸின் சட்டமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது. பாடலை இணையத்தில் காணலாம். டெக்சஸின் Chappell Hill என்னுமிடத்தில் இம்மலர்களுக்கான வருடந்திர விழா நடைபெற்று வருகின்றது
காற்று மண் மற்றும் நீரிலிருந்து நச்சுப்பொருட்களை இவை கிரகித்துக்கொள்ளும். எனவே விதைகளிலும் தாவரபாகங்களிலும் மிதமான நச்சுத்தன்மை காணப்படும். வீட்டிலும் தொட்டிகளில் அலங்கரச்செடியாக இவற்றை வளர்க்கலாம். மே மாதத்தில் இவற்றின் காய்கள் பழுத்து மஞ்சள் நிறமான பின்பு உள்ளிருக்கும் விதைகளை சேகரித்து ஓரிரவு முழுதும் நீரில் ஊற வைத்தோ , அல்லது ஃப்ரீஸரில் ஓரிரவு உறைய வைத்து பின்னர் கொதிநீரில் நனைத்தோ கடின விதைஉறையை உடைத்து பின்னர் விதைக்கலாம்
இவை பூக்கும் காலத்தில் எங்கெங்கு மலர்கள் அதிகமாக காணப்படும் என்னும் விவரங்களை மக்கள் அறிந்துகொள்ள ஏதுவாக GPS சேவைகளும், புகைப்ப்டமெடுக்க வழிகாட்டுதல்களும், மக்கள் கூட்டமாக நெடுஞ்சாலையில் ஆங்காங்கே வண்டிகளை நிறுத்தி இவற்றை கண்டுமகிழ்வதால் அப்போது பின்பற்றவேண்டிய போக்குவரத்து ஒழுங்குமுறைகளும் பரவலாக தெரியப்படுத்தப்படுகின்றன. இப்பருவத்தில் சுற்றுலாப்பயணிகளை வரவேற்று அழைத்துச்செல்ல பல சுற்றுலா குழுமங்களும் இயங்குகின்றன. கடந்த பத்து வருடங்களில் ,இப்போது 2019ல் தான் இவை மிக அதிகமாக பூத்திருப்பதாக சொல்லப்படுகின்றது .இவற்றின் புகைப்படங்களுக்கென்றே பல இணையதளங்களும் இருக்கின்றன
அயர்லாந்தின் ஷம்ராக் மற்றும் ஜப்பானின் செர்ரி மலர்களுக்கும் ஃபிரான்ஸின் லில்லிகளுக்கும் இங்கிலாந்தின் ரோஜாக்களுக்கும் ஹாலந்தின் ட்யூலிப் மலர்களுக்கும் இணையானதாக சொல்லப்படும் இம்மலரைக்குறித்த கவிதைகளும் கதைகளும் கூட ஏராளம் இருக்கின்றன. இவை பூக்கும் காலத்தில் இவற்றின் சித்திரங்கள் தீட்டப்பட்ட உடைகளும் திரைச்சீலைகளும் அதிகம் விற்பனைக்கு வரும் டெக்சஸுக்கு இம்மலருக்காகவேனும் ஒருமுறை வரவேண்டும் என இந்தியாவிலிருக்கும் அனைவரையும் நினைக்கவைக்கும்படியான பிரமிக்க வைக்கும் அழகினைக்கொண்ட சுவாரசியமான மலர் இந்த blue bonnet.
Leave a Reply