லோகமாதேவியின் பதிவுகள்

Category: திரைப்படம் (Page 4 of 6)

சூரரைப்போற்று!

நவம்பர்  12 ஆம் தேதி அமேஸான் இணையதளத்தில் நேரடியாக வெளியிடப்பட்ட ’சூரரைப்போற்று’  நடிகர், தயாரிப்பாளர் சூர்யாவின் 2D Entertainment  சொந்த தயாரிப்பில், சுதா கோங்குராவின் இயக்கத்தில் உருவான தமிழ் திரைப்படம், இதில் சூர்யாவுடன் மலையாள நடிகை அபர்ணா பாலகிருஷ்ணன், ஊர்வசி, தெலுங்கு நடிகர் மோகன் பாபு மற்றும் கருணாஸ்  ஆர் எஸ் சிவாஜி, காளி வெங்கெட் ஆகியோர் முக்கிய பாத்திரமேற்று நடித்திருக்கின்றனர். இசை ஜி வி பிரகாஷ். ஒளிப்பதிவாளர் நிகேத் பொம்மிரெட்டி, படத்தொகுப்பாளர் சதிஷ் சூர்யா , வசனங்கள் விஜயகுமார். ஒரே சமயத்தில் தெலுங்கு, கன்னட, மலையாள மொழிகளிலும் சூரரைப்போற்று வெளியாகி இருக்கிறது.

Air Deccan  – ஏர்டெக்கான் நிறுவனத்தின் தலைவர் திரு கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் அவரது simply fly நாவலைத் தழுவி எடுக்கப்பட்டது இந்த திரைப்படம்.

எளிய கிராமத்துப் பின்னணி கொண்ட நெடுமாறன் ராஜாங்கமான சூர்யா ராணுவ விமான பைலட்டாகிறார். மரணப்படுக்கையில் இருக்கும், சொந்த  கிராமத்தை முன்னெடுக்க பல முயற்சிகளை சாத்விகமாக செய்து தோல்வியுற்ற, தன் தந்தையை பார்க்க வர விமான பயணக்கட்டணம் அதிகமென்பதால் அவ்வாய்ப்பை தவறவிட்டு தந்தையை இறுதியாக காணமுடியாமலாகும்  மாறன் தானே சாமான்யர்களும் குறைந்த கட்டணக்களில் பயணிக்கும்   பட்ஜெட் விமான நிறுவனம் துவங்க முடிவு செய்வதும், அதை சாதமாக்க அதே தொழிலில் இருக்கும் பெரும் பணக்காரர்கள் செய்யும் சதிகளும், இம்முயற்சியில் மாறன் சந்திக்கும் தோல்விகளும், சோதனைகளும், நிதி உள்ளிட்ட பல தடைகளும், அனைத்தையும் மாறன்  முறியடித்து நினைத்தபடியே விமான சேவையை துவங்குவதும் தான் முக்கிய கதை. இடையில் காதல், குடும்பம், குழந்தை, நட்பு, தந்தையுடன் கருத்துமோதல்  செண்டிமெண்ட் என பலவற்றை சேர்த்திருக்கிறர்கள்.

மோகன் பாபு தெலுங்கு நெடியுடன் பேசும் வசனங்களும் காட்சிகளும் ஓகே ரகம் தான் இந்த பாத்திரத்துக்கு ஏன் அவரை மெனெக்கெட்டு அழைத்துவந்தார்கள்?. கருணாஸும் காளி வெங்கட்டும் வழக்கம் போல அப்பாவி பாத்திரங்களில் ஒரு மாற்றமுமின்றி  வந்து போகிறார்கள்

விமான நிறுவனம் ஒன்றை சொந்தமாக தயாரிக்கும் ஒருவரின் கனவைக்குறித்த படமென்பதால் அந்த தொழிலைக்குறித்த பிரத்யேக சிக்கல்கள் நெளிவு சுளிவுகள், போட்டிகள் என்று படத்தின் மையக்கரு  அதிகம் தொழிநுட்பம் சார்ந்ததாகவே இருப்பதும் ,சாமான்யர்களுக்கு புரியாத பல காட்சிகளும் வசனங்களுமாக, படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை சென்றடையவில்லை.  

கோபிநாத்தின் சுயசரிதையை அப்படியே திரைப்படமாக்கவில்லை தழுவல் மட்டுமே என்று இயக்குநர் மற்றும் தயாரிப்பாளர்கள் தரப்பிலிருந்து சொல்லப்பட்டிருக்கின்றது. தழுவல் என்றான பின்னர் ஏன் அத்தனை சிக்கலான காட்சிகளை கொடுக்க வேண்டும். தழுவலில் ஏன் பொம்மி ஒரு நகரத்தில் பேக்கரி தொழிலை துவங்கி இருப்பதாக காட்டியிருக்கக்கூடாது? கதையின் ரியல் நாயகன் கோபிநாத் ஒரு பிராமணர் ஆனால் மாறனுக்கு அப்படியான சாதி அடையாளங்கள் ஏதும் காட்டப்படவில்லை. பொருளாதார ரீதியாக பின்தங்கிய மதுரைத்தமிழனாகவே காட்டப்படுகிறார். இத்தனை  வணிகரீதியான மாற்றங்களிருக்கையில் இந்திய விமான சேவையின் வரலாற்றில் மிக முக்கியமான அடையாளம் கொண்டிருக்கும் டெக்கான் ஏர் நிறுவன உரிமையாளரின்  சுயசரிதைக்கு ஏன் போகவேண்டும். வழக்கமான கற்பனைக்கதையாகவே எடுத்திருக்கலாமே ?

மாபெரும் விமான நிறுவனத்தை உருவாக்கும் சூர்யாவின் நெடுமாறன் பாத்திரத்தின் ’உன்னதமாக்கல்’ கொஞ்சம் அதிகமாகவே இருக்கின்றது. இத்தனை பெரிய நிறுவனம் துவங்க இருக்கும் ஒரு  கிராமத்து இளைஞன், லஞ்சம் கொடுக்காமலும், எந்த குறுக்கு வழியிலும் போகாமலும், கோடிகளை ஒருவர் கொடுக்கையிலும் மறுப்பது போலவும் காட்டியிருக்கிறார்கள். விஜய் மல்லையா அளிப்பதாக சொல்லும் பெருந்தொகையை மாறன் மறுப்பதை மட்டும் காட்டும் திரைகதை ஏர் டெக்கான் விஜய்மல்லையாவுடனே பிறகு இணைந்ததை சொல்லவில்லை

இயக்குநர் சுதா  தெலுங்கு தேசமென்பதால் படத்தில் சென்டிமென்ட் காட்சிகள் தூக்கலாகவே இருக்கின்றது. குறிப்பாக ஊர்மக்கள் 100, 200 என்று பணம் அனுப்பி சூர்யாவின் தொழிலுக்கு உதவுவது,  பணம் அனுப்ப ஊரே திரண்டு வருவது, மாற்றி மாற்றி போனில் பாசம் காட்டும் காட்சிகளிளெல்லாம் ஆந்திர நெடி அடிக்கின்றது

அதிலும் ஊர்வசி கண்ணீரும் கம்பலையுமாக  மாறனுக்கு கொடுக்கும் உணர்வுபூர்வமான அழுத்தம் மாறனோடு சேர்த்து நமக்கும் பதட்டத்தை அளிக்கின்றது. ‘’ ஜெயிச்சுருவியில்ல மாறா, ஜெயிச்சுருடா ஊரே உன்னைத்தான் நம்பி இருக்கு’’ என்று அவர் பிழிந்து ஊற்றுகையில் நமக்கே  பயத்தில் நெஞ்சடைக்கின்றது, அத்தனை ஓவராக பாசம் காட்டும் ஊர்மக்கள் சூர்யாவின் சிறு தோல்விக்கே அவரை இகழ்ந்து பேசி தூக்கி வீசுவதும் பின்னர் மறுபடியும் பாட்டிகளும் தாத்தாக்களும் குழந்தை குட்டிகளும் பொண்ணு மாப்பிள்ளையுமாக விமானத்தில் வந்து, காது வளர்த்தி பாம்படம் போட்ட பாட்டிகள் சூர்யாவை நெட்டிமுறித்து வாழ்த்துவதுமாக படம் செண்டிமெண்ட் ட்ராக்கில் எதைப்பற்றியும் கவலைப்படாமல் பறந்து கொண்டே இருக்கிறது. விமான நிலையத்தில் சூர்யா பணம் கேட்டுக்கெஞ்சி அழும் காட்சிகளும் அதிகப்படிதான். மசாலா நெடியை குறைத்திருக்கலாம். தெலுங்கு டப்பிங் படம்பார்க்கும் உணர்வு வந்துகொண்டே இருக்கிறது

பெண்பார்க்க கதாநாயகன் செல்லும் காட்சிகள் ஏராளம் பார்த்திருக்கிறோம் இதில் முதல் காட்சியிலேயே மாப்பிள்ளையை பார்க்க நாயகி செல்வது புதுமை. அபர்ணா நன்றாக நடித்திருக்கிறார் முற்றின முகம் என்பதால் சூர்யாவுக்கு அக்காபோல இருக்கிறார்.   துவக்க காட்சிகளின் அதிரடி இயல்புகள் எல்லாம் கல்யாணத்துக்கு பிறகு காணாமல் போய் , கணவனுக்கு உணவை ஊட்டிவிடும் குழந்தையை பார்த்துக்கொள்ளும்,, தோல்வியில் துவண்டுபோகையில் கணவனுக்கு உத்வேகம் தரும் நஷ்டமேற்பட்டால் கடன் ,தரும் கைக்குழந்தையுடன் தனியே விமானத்தில் பயணிக்க தயாராகும்    உன்னத மனைவியாகிவிடுகிறார்.

கணவன் ஒரு பொது இடத்தில் எதிர்பாரா சிக்கலில் இருக்கையில் பிரசவ வலி வர, தான் பார்த்துக்கொள்வதாக தைரியமாக சொல்லிச் செல்வதும், கடைவீதியில் இருக்கையில்  வரும் ஒரு தொலைபேசி அழைப்பில் டென்ஷனாகும் மாறன் மனைவியை மறந்து பைக்கில் புறப்பட எத்தனிக்கையில் தான் ஆட்டோவில் வந்துவிடுவதாகவும் மாறன் போகலாமென்றும் சொல்லும் காட்சியும் சிறப்பு. இப்படியான நல்ல புரிதல் உள்ள, அழகிய, கேட்கையிலெல்லாம் கடனளிக்கும், கனவுகளுக்கு கைகொடுக்கும், காதலிக்கும்,  சாப்பாடு ஊட்டிவிடும்  மனைவிக்கான ஏக்கத்தை பொம்மி பாத்திரம் இளைஞர்களுக்கு அளித்திருக்கிறது

பல வருடங்களுக்கு பிறகு கருணாஸுடனும் முதல் முறையாக ஊர்வசியுடன் முழுப்படத்திலும் சூர்யா இதில் நடிக்கிறார். ஊர்வசி மிகத் தளர்ந்திருக்கிறார்.

உடலைக்கட்டுக்குள் வைத்து பாத்திரத்திற்கு பொருந்தும் தோற்றத்துடன் இருக்க கடுமையான  உணவுகட்டுப்பாட்டில்  இருந்ததற்கு சூர்யாவிடம் நல்ல பலன் தெரிகின்றது. சீருடையில் பிரமாதமாக  இருக்கிறார். வயதையே யூகிக்க முடியாத உடற்கட்டும் இளமையும்  வலிமையுமாக வருகிறார். பாராட்டுக்கள்

சொந்தக்குரலில் மதுரைத்தமிழில் சரளமாக பேசும் அபர்ணா, சூர்யாவிடம் உணர்வுபூர்வமாக உச்சஸ்தாயியில்  ஆக்ரோஷமாக பேசும் மொட்டைமாடிக் காட்சி வசனங்களில் மட்டும் மலையாள நடிகை என்பதை காட்டிவிடுகிறார். தாய்மொழியின் வலிமையல்லவா அது!

சென்சாரில் U சான்றிதழ் வாங்கி இருந்தும் சூர்யா ஆபாச வசவுகளை ஏராளமாக பேசுகிறார். சிவகுமார் சார் கொஞ்சம் கண்டிக்கக்கூடாதா?

கோபமும், கனவுகளும், வேகமும் வெற்றிக்கான துடிப்பும் நிறைந்த  இளைஞனாக, மாறனாகவே மாறி இருப்பதற்கும், அகரம் அமைப்பின் மூலமாக ’’தனது பெரிய கனவு’’ என்னும் கட்டுரைப்போட்டியில் வெற்றிபெற்ற அரசுப்பள்ளி மாணவர்கள் 70 பேரை இலவசமாக விமானத்தில் பயணம் செய்ய வைத்து, அந்த பயணத்தில், வெய்யோன் சில்லி’யென்னும் அருமையான பாடலை நடுவானில் விமானத்தில் ரிலீஸ் செய்திருப்பதற்கும், புத்திசாலித்தனமாக இணையத்தில் படத்தை வெளியிட்டு சொந்த தயாரிப்பில் நஷ்டம் வராமல் பார்த்துக்கொண்டதற்கும், படத்தை அமேஸானுக்கு விற்ற தொகையில் 5 கோடிகளை கொரோனா பணியாளர்களுக்கும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட திரைப்பட தொழிலாளர்களுக்கும் பகிர்ந்தளித்ததற்குமாக சூர்யாவை போற்றுவோம்.

மார்செல்லா- Marcella- A popular series in Netflix

Nordic noir, அல்லது Scandinavian noir, வகையைச்சேர்ந்த காவல்துறையினரின் பார்வையில்  சொல்லப்படும் குற்றப்புலனாய்வு கதைகளின் நெடுந்தொடர் ’’மார்செல்லா’’

இந்த மூன்று சீசன்களும் 24 பகுதிகளுமான  நெடுந்தொடரை எழுதி இயக்கி தயாரித்துமிருப்பவர் ஸ்வீடன் நாட்டு திரைக்கதாசிரியரும், 2011ல் வெளிவந்து 10 நாடுகளில் ஒளிபரப்பான புகழ்பெற்ற குறறப்பின்னணிக் கதையான‘ The Bridge’’ தொலைக்காட்சித் தொடரை எழுதி இயக்கியவருமான  (Hans Rosenfeldt,)  ஹான்ஸ்  ரோசன்.

விறுவிறுப்புக்கு கொஞ்சமும் பஞ்சமில்லாத பரபரப்பாகவே செல்லும் கதைத்தொடர் இது. கடத்தல், கொலை, குடும்ப வன்முறை, காவல் துறை குற்றப்புலனாய்வு,  தாய்மை, காதல், பிறழுறவு, வன்முறை, போதை மருந்து, கடத்தல், ஊழல், இளமை, பயணம் ஆள் மாறாட்டம் , நம்பிக்கைத்துரோகம் என எல்லா அம்சங்களும் உள்ள ஒரு நெடுந்தொடர் மார்செல்லா. ஒவ்வொரு எபிசோடும் மிக சுவரஸ்யமாகவே கட்டமைக்கப்ட்டிருக்கிறது.

குடும்பத்தை கவனிக்கவென காவல்துறைப்பணியிலிருந்து விலகியிருந்த  காவல் அதிகாரியான மார்செல்லா 11  வருடங்களுக்கு  முன்பு தொடர் கொலைகள்  செய்துகொண்டிருந்த குற்றவாளி மீண்டும் கொலைகளை செய்யத்துவங்கிருக்கலாமென்னும் சந்தேகத்தின் பேரில்  அக்கொலைகளை விசாரிக்கவென மீண்டும் பணியில் இணைகிறார்.

சவாலான பணி, சீர்கெட்டுக்கொண்டிருக்கும் குடும்ப வாழ்வு, மனப்பிறழ்வு, கட்டுபடுத்தமுடியாத கோபம், இப்படி பலவற்றுடன் போராடும்  30களின் இறுதியில் இருக்கும் பெண் காவலதிகாரி மார்செல்லாவாக ’துணிந்து’ நடிப்பதில் பெயர் பெற்ற பிரிடிஷ் திரைப்பட மற்றும் தொலைக்காட்சி நடிகையான அன்னா ஃப்ரெயெல்  (Anna Friel) . அவரைத்தவிர வேறு யாராலும் இத்தொடரின் மார்செல்லா பாத்திரத்தை இத்தனை சிறப்பாக நடித்திருக்க முடியாது என்பதை பார்வையாளர்களை முதல் சீசன் முடியும் போதே உணர வைத்துவிடுவார். காவலதிகாரியாக நடிக்கையிலேயே, குடும்பத்தலைவியாக், கணவனின் அன்புக்கு ஏங்குபவளாக , நல்ல அன்னையாக கணவனின் துரோகத்தை தாங்க முடியாமல் சீறுபவராகவும் நடி்ப்பதென்பது பெரிய சவால். அன்னா இதை வெகு சிறப்பாக செய்திருக்கிறார். பொருத்தமான  உடற்கட்டும் கூட.

மார்செல்லாவின் கணவராக அன்னாவைபோலவே திரைப்படங்களிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துகொண்டிருக்கும் புகழ்பெற்ற நடிகர்  நிக்கோலஸ். (Nicholas Andre Pinnock)

லண்டனை தலைமையகமாக கொண்ட பிரிட்டிஷ் தொலைக்காட்சியான ITV யில் 2016ல் ஒளிபரப்பான மார்செல்லா தற்போது நெட்ஃப்லிக்ஸில் கிடைக்கிறது.

முதல் தொடர்;

பல ஆண்டுகளுக்கு முன்னால் தொடர்கொலைகளை செய்த குற்றவாளி மீண்டும் அதே பாணியில்  மூன்று கொலைகளை செய்திருப்பதாக சந்தேகப்படுவது, அந்த குற்றப்புலனாய்வும் அதன் திடுக்கிடும் திருப்பங்களும், செல்வந்தரும் கணவன் பணியாற்றும் தொழில்குடும்பத்தின் வாரிசுமான் கிரேஸ் கொலையாவதும், அந்தகொலையை மார்செல்லாவே மனம்பிறழ்ந்திருந்த சமயத்தில் செய்திருக்கலாமென்ன்னும் சாத்தியமும் , இறந்துபோன கிரேஸுக்கும் மார்செல்லாவின் கணவனுக்குமான  பிறழ் உறவு , கிரேஸின் கர்ப்பம், குடும்ப வன்முறை குழந்தைகளுடனான் முரண், கணவன் மணவிலக்கு கோருவது,   என கலவையான, உணர்வெழுச்சிகளுடனான் கதைகள் நிறைந்தது இந்த முதல் தொடர்.

 இரண்டாம் தொடர்;

மார்செல்லாவின் மகனின் பள்ளித்தோழன் உட்பட பல குழந்தைகள் காணாமல் போய், பின்னர், தொடர்ந்து கொல்லப்படுவதை புலனாய்வு செய்யும் இந்த தொடரில்  குழந்தைகளுடன் உற்வுகொள்ளும் முன்னால் குற்றவாளி, ஒரு செல்வந்தர் , மிகப்பிரபலமானெ முன்னால் பாடகர் என ஒவ்வொருவராக விசாரிக்கப்படுவது, இடையே வரும்  மாந்த்ரீக குறியீடுகள், விலகிச்சென்றுவிட்ட கணவன் மணவிலக்குக்கு முன்பாகவே  ஒரு நர்சுடன் வாழத்துவங்குவது, மார்செல்லாவின் மனப்பிறழ்வு அதி்கரித்திருப்பது, குழந்தைகள் மார்செல்லாவை புரிந்து கொள்ளாமலிருப்பது என விறு விறுப்பான நிகழ்வுகள் இருக்கின்றன.

 மூன்றாம் தொடர்;

மார்செல்லா, தான் இறந்துவிட்டதாக மற்றவர்களை நம்பவைத்துவிட்டு கெய்ரா எனும் புதிய பெயரில் under cover அதிகரியாக மாபெரும் குற்றசாம்ராஜ்ஜியத்துக்கே சொந்தமான  வீட்டிலேயே வாழத்துவங்குவதும் அந்த வீட்டு வாரிசுடன் நெருங்கிப் பழகுவதும் அவர் எதிர்கொளும் பிரச்சனைளுகம், அவர் கெய்ரா இல்லை மார்செல்லாதான் என கண்டுபிடிக்கப்படும் சாத்தியங்கள் அவ்வப்போது இடைபட்டுக்கொண்டே இருப்பதும்தான் கதை

முதலிரண்டு தொடர்களை ஒப்பிடுகையில் மூன்றாம் தொடர், நாடகபாணியில்  பிரம்மாண்ட வீடு, மர்மமான பல நிகழ்வுகள், என பழைய சிவாஜிகணேசன் திரைப்படங்களை நினைவுபடுத்துகின்றது..

சர்வசாதாரணமான கொலைகள், கெளரவக்கொலைகள் என இதிலும் சுவாரஸ்யத்துக்கு பஞ்சமில்லை.

8 பகுதிகளை கொண்டிருக்கும் மூன்று தொடர்களுமே இறுதிப்பகுதிகலில்  இருக்கை நுனிக்கு நம்மை கொண்டு வந்துவிடும். அத்தனை பரபரப்பு, மர்மம் ,அத்தனை வேகம், அத்தனை எதிர்பாராமை  கொண்டவைகளாக இருக்கும் காட்சிகள்.

சிறந்த இயக்கம்,பொருத்தமான கதாபாத்திர தேர்வு, பிரமாதமான திரைக்கதையாக்கம் மற்றும்  அபாரமான படத்தொகுப்பு

குற்றப்ப்புலனாய்வு கதைப்பிரியர்கள்  அவசியம் பார்க்கவேண்டிய சிக்கலான சுவாரஸ்யமான ஒரு தொடர் மார்செல்லா.  காவல் துறை குற்றப்புலனாய்வு என்று ஒரே பாதையில் திரைக்தையை அமைக்காமல் குடும்பச்சிக்கல்களையும்,  சேர்த்திருப்பதால் இத்தொடர் மற்றவற்றிலிருந்து மாறுபட்டிருக்கிறது. ஆபாசவசைச்சொற்கள், போதை மருந்து பயன்பாடு, வன்முறை , கொலை, இறப்பு இறந்த உடல்கள், மற்றும் நெருக்கமான ஆண்பெண் உறவுக்காட்சிகள் நிறைந்திருப்பதால்   மார்செல்லா  பெரியவர்களுக்கு மட்டுமேயான தொடர்.

புத்தம்புதுகாலை

அக்டோபர் 16,2020 அன்று நேரடியாக அமேசான் பிரைமில் வெளியான தமிழ்ப்படம் ‘புத்தம் புது காலை’’, சுதா கொங்காரா, கெளதம் வாசுதேவ் மேனன், சுஹாசினி மணிரத்னம் , ராஜீவ் மேனன் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் என ஐந்து இயக்குநர்களின், 5 குறும்படங்களின் தொகுப்பு படமாகும் (Anthology/package film).

5 இயக்குநர்கள்

 ஜெயராம், ஜெயராமின் மகன் காளிதாஸ், ஊர்வசி, கல்யாணி பிரியதர்ஷிணி, சுஹாசினி, அனுஹாசன், ஸ்ருதிஹாசன், பாபிசிம்ஹா, குருசரண், ஆண்ட்ரியா, லீலா சாம்சன், காத்தாடி ராமமூர்த்தி உள்ளிட்டவர்கள் இந்த தொகுப்புப்படங்களின் முக்கிய கதாபாத்திரங்களாக வருகின்றனர். ஐந்து படங்களுமே கோவிட் தொற்றின் வீடடங்கு காலத்தில் படம்பிடிக்கப்பட்டவை, அனைத்து படங்களுமே வைரஸ் வீடடங்கு பல குடும்பங்களில் ஏற்படுத்தி இருக்கும் மாற்றங்களையும், அதன்பேரில் முகிழ்க்கும்  காதலை, புதிய துவக்கத்தை, தோழமையை,  நம்பிக்கையை  பேசுகின்றன.

புத்தம் புதுகாலையை துவங்கிவைப்பது’ ஜெயராம் மற்றும் ஊர்வசியின் ’’இளமை இதோ இதோ’’. மிக நல்ல தொடக்கம். இளமை இறங்கு முகத்திலிருக்கும், தத்தமது துணையை இழந்திருக்கும் ஆனாலும் மீதமிருக்கும் வாழ்நாளை தகுந்த, நேசமிக்க துணையுடன் வாழ நினைப்பவர்களாக மிகசிறப்பாக நடித்திருக்கிறார்கள் ஊர்வசி மற்றும் ஜெயராம் இருவருமே.   மனைவியை இழந்த ஜெயராமும் கணவனை இழந்த ஊர்வசியும் ஒருவரை ஒருவர் நேசிக்கிறார்கள். ஜெயராமின் வீட்டில் அவரை சந்திக்க ஊர்வசி வந்திருக்கையில்  வைரஸ் தொற்றினால் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு ஊர்வசி ஜெயராமுடனேயே 21 நாட்கள் தங்கும்படி ஆகின்றது. அவர்கள் பரஸ்பரம்  ஒரு துணை மட்டுமல்ல நல்ல தோழமையும்  புரிதலும் உள்ளவர்களாகவும் இருப்பதை அந்த சில நாட்களில் உணருகின்றனர்.

இருவரின் மனதிலிருக்கும் இளமையான உணர்வுகளுக்கு வடிவம் கொடுத்திருப்பதும் ஜெயராமின் இளம் வடிவமாக அவர் மகன் காளிதாஸே இருப்பதும் மிகப்புதுமை. ஊர்வசியின் இளமை வடிவமாக லிஸியின் மகள் கல்யாணி. மிகபொருத்தமான தேர்வு. காளிதாஸ் கண்களிலும் சிரிப்பிலும் அப்படியே அம்மா பார்வதியைக் கொண்டிருக்கிறார். தமிழ் சினிமாவின் அடுத்த சாக்லெட் ஹீரோ காளிதாஸ் தான் இனி. மணிரத்தினத்திடன் உதவியாளராக இருந்த சுதா இயக்கத்தில் பிரமாதப்படுத்தி இருக்கிறார்.

படத்தொகுப்பும் இசையும்  ’’பேபி’’ பாடலுமாக அருமையான துவக்கமாக அமைந்துவிட்டிருக்கிறது  இளமை இதோ இதோ. வாய்ஸ் ஓவர், மாதவன்

இரண்டாவதாக ’அவரும் நானும்-அவளும் நானும்’ வைரஸ் தொற்றுக்காலத்தில் தனிமையில் இருக்கும் தாத்தாவை கவனிக்கவென்று வந்திருக்கும்  மகள் வயிற்றுப்பேத்தியின் பார்வையிலும், காதல் திருமணம் செய்துகொண்டதால் மகளிடமிருந்து விலகிவிட்ட தந்தையாக, பேத்தியுடன் தங்குவதை எதிர்பார்த்து காத்திருக்கும் தாத்தாவின் பார்வையிலுமாக ஒரு அழகுக்கதைக்களம்.

மகளை பேத்தியில் கண்டு மகிழும் தாத்தாவாக MS பாஸ்கர், அம்மாவையும், அம்மாவின் காதலையும் அங்கீகரிக்காத தாத்தாவின் மீதான மனவிலக்கத்துடனேயே உள்ளே வரும் பேத்தியாக ரிதுவர்மா.

MS Baskar and Ritu

மிகச்சிறப்பாக  இயல்பாக நடித்திருக்கிறார் பாஸ்கர். முதலில் இருந்த தயக்கத்தையும் விலக்கத்தையும் மெல்ல மெல்ல கடந்தும் மறந்தும், தாத்தாவின் கோணத்தை புரிந்து மனமிரங்கும் பேத்தியாக ரிதுவும் மிகபிரமாதமாக பொருந்தி நடித்திருக்கிறார். ரிது களங்கமற்ற இளமையில் பூரிக்கும் அழகுடன் தூய வெள்ளுடைகளில் வருகையில் அவரது வசீகரதோற்றம் நெஞ்சை அள்ளுகின்றது. சமையலறைக்காட்சி ஒன்றில் ஒற்றைக்கல் மூக்குத்தி பளீரிட தெரியும் ரிதுவின் க்ளோஸப் காட்சியிலிருந்து மனதை திருப்பவே முடியாது. நீர்த்துளி வடிவ கண்ணாடியில் ரிதுவின் முகம் தெரியும் ஒரு காட்சியும் கவனத்தை ஈர்க்கிறது.

 நல்ல கதை நல்ல பாத்திரத்தேர்வு அந்த ’கண்ணா’ பாடலும் அழகு. இருவேறு தலைமுறையினரானாலும்  அவர்களுக்கிடையேயான இடைவெளியை ரத்த உறவும் புரிதலும் நிறைத்து விடுகிறதென்பதை அலங்காரங்கள் ஏதுமில்லாமல் நிதானமாய் சொல்லி இருப்பதை பாராட்டியே ஆகவேண்டும் இயக்கம் கெளதம் வாசுதேவ் மேனன். பி சி ஸ்ரீராமின் காமிரா வழியே ரிதுவையும் அந்த மிக அழகிய பசுமை சூழ்ந்த  வீட்டையும் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.

 அடுத்து வரும் காஃபீ எனி ஒன்? (coffee any one?)  இயக்கம் சுஹாசினி,  திரைக்கதை மணிரத்னம் மற்றும் சுஹாசினி. அனுஹாசன், ஸ்ருதி ஹாசன் சுஹாசினி என்று சகோதரிகள் மூவருமே நடித்திருக்கிறார்கள். சுஹாசினியின் அம்மாவாக நடித்திருப்பவர் கோமளம் சாருஹாசன், சுஹாசினியின் அம்மாவேதான்.  ஒரு குடும்பப்படம்.

விமான நிலையத்திலிருந்து வீட்டுக்கு அழைத்து வருவது அன்புக்கு நான் அடிமை ஓட்டுநர் கணேசன். வெகுநாட்களுக்கு பின்னர் அனுஹாசன் திரையில். முதன்முறையாக இயல்பான நடிப்பில் ஸ்ருதிஹாசன். மிக எளிய கதை. கோமாவில் இருக்கும் அம்மாவை பார்க்க வரும் இரு சகோதரிகள், வராத இன்னுமொரு செல்லத்தங்கை. அம்மாவை மருத்துவமனையில் அனுமதிக்காமல் வீட்டில் வைத்து பராமரிக்கும் அப்பாவை கோபித்துக்கொள்ளுகிறார்கள் மகள்கள். ஆனால் அம்மாவின் உடல்நிலையில் மாற்றம் முன்னேற்றம் எல்லாம் தெரிவதுதான் கதை.

சுஹாசினியும் அவரது அம்மாவும்

சுஹாசினியும் அனுவும் நாடகத்தனமாக   வெகு செயற்கையாக நடித்திருக்கின்றனர். காத்தாடி ராமமூர்த்தி மிகசிறப்பான நடிப்பு, பொருத்தமான தேர்வும் கூட. கோமாவில் இருந்த அம்மா மெல்ல மெல்ல குணமடைவதாக காட்டியிருக்கலாம். கண்விழித்து உடனே சமையலறையில் கணவர் கொடுக்கும் காபியை குடிப்பதெல்லாம் அதிசயம்தான். படத்தின் தலைப்பாக மெடிகல் மிராக்கிள் என்று வைத்திருக்கலாம்.

 ஸ்ருதி ஹாசன் அதிக இடைவெளியில் பெற்றோரின் வயதான காலத்தில் பிறந்தவரென்பது ஓகே அத்தோடு நிறுத்தி இருக்கலாம். தேவையில்லாமல் அனுஹாசனின் கர்ப்பம் உறுதியானதை சேர்த்திருப்பது ஓவர்டோஸ்

ஐந்தில் ஒரு கதை என்னும் போது குறைந்த நேரத்தில் சுருக்கமாக சிறப்பாக கதையை சொல்ல முயற்சிக்காமல் குழப்பியடித்திருப்பது  திரைத்துரையில் ஆழக்கால் பதித்த குடும்பத்தினர் என்பதுதான் வருத்தம். அறிமுக இயக்குநர்கள் படமென்றால் இது  குறையாக சொல்லவேண்டி இருந்திருக்காது. இந்தப்படத்திற்கு இந்த பிரபலங்கள் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். இந்த சின்னக்கதைக்கும் மிகபிரபலமான இயக்குநர் கதாசிரியர்  என்பதால் இயல்பாகவே பார்வையாளர்களுக்கு எதிர்பார்ப்பிருக்கும். ஆனால் அதற்கு பொருத்தமான விஷயங்களுடன் இந்த மூன்றாவது பகுதி இல்லையென்பது ஏமாற்றமே!

நான்காவதாக Reunion. ஆண்டிரியா, குருசரண் மற்றும் லீலா சாம்சன் ஆகியோரின்  கதை.  திரைக்கதை, இயக்கம் மற்றும் ஒளி இயக்கம் ராஜீவ் மேனன். பள்ளித்தோழனின் பெயரை வீட்டு மதில் சுவற்றில் பார்த்துவிட்டு தன் இருசக்கர வாகனம் பழுதானதால் வீட்டுக்குள்ளே வரும் ஆண்டிரியா  வைரஸ் தொற்றாலும் வீட்டங்கு உத்தரவாலும் அங்கேயே தங்கவேண்டி வருவதும் மெல்ல மெல்ல தோழனுடன் காதலரும்புவதும் கதை

ஆண்ட்ரியாவும் குருசரணும்

ஐந்து படங்களிலும் கிளாமர் இல்லையென்ற குறை வந்துவிடக்கூடாதென்றே ஆண்ட்ரியாவை சேர்த்திருக்கிறார்கள் போலிருக்கின்றது. கவர்ச்சியாக வசீகர உடைகளில் வருகிறார் ஆண்ட்ரியா. நண்பன் மருத்துவரென்பதும் வைரஸ்தொற்று இருக்கலாமெனும் சந்தேகத்தின் பேரில் அவர் மாடியிலும் ஆண்ட்ரியாவும் லீலா சாம்சனும் கீழ்தளத்திலும் தங்கியிருப்பதும் பல வருடங்களுக்கு பிறகு சந்திப்பவர்களுக்குள் நெருக்கம் வருவதெல்லாம் சரிதான்  ஆண்டிரியாவின் போதைப்பழக்கத்தை தேவையில்லாமல் வலிந்து  உள்ளே திணித்திருக்கிறார்கள்

மன அழுத்தம், பணிச்சுமை, போதைப்பழக்கம் என்றெல்லாம் தேவையில்லாமல் குழப்பாமல் பள்ளித்தோழமை மெல்ல மெல்ல காதலாக மிளிரத்துவங்குவதை மட்டும் அழகாக சொல்லி இருக்கலாம். மிக நன்றாக துவங்கி மோசமாக முடிந்திருக்கும் படம் இது. லீலா சாம்சன் சரண்யா பொன்வண்ணனைப்போலவே அக்மார்க் அம்மா வேடத்துக்கு மிகப்பொருத்தம்.  ஆண்ட்ரியாவும் குருசரணும் சேர்ந்திருக்கும் அந்த நிஜ பள்ளிப்புகைப்படம் எதிர்பாரா இனிய அதிர்ச்சியை இறுதியில் அளிக்கின்றது

இறுதிப்படம் பாபி சிம்ஹா நடித்திருக்கும் ’மிராக்கிள்’. கார்த்திக் சுப்பராஜ் இயக்கம் என்பதை மீண்டும் மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டி இருக்கிறது. புதிய இயக்குநர்கள்  யாரேனும் எடுத்திருந்தாலும் அதன் தரம் இப்படித்தான் இருந்திருக்கும். கார்த்திக் சுப்பராஜ் இயக்கம் என்று சொல்லும்படியான ஒருகாட்சி கூட படத்தில் இல்லை. அற்புதத்தை நம்பும் இரு இளைஞர்களுக்கு அது நடக்காமல் போவதும், அற்புதம் நிகழுமென்னும் நம்பிக்கையின்றி சாகத்துணிந்த ஒருவருக்கு அற்புதம் நடப்பதுமான எதிர்பாராமையின் கதை

.

பாபி சிம்ஹா

பாபி சிம்ஹா என்னும் மிகத்திறமையான, வாய்ப்பு கிடைத்தால் சிறப்பாக தன்னை வெளிப்படுத்தக் காத்திருக்கும் நடிகரைத்தவிர சொல்லிகொள்ளும் படியாக எதுவுமே இல்லை படத்தில்.

ஐந்து படங்களும் ஒரு  பொன்மஞ்சள் நிற மலரின் ஐந்து இதழ்களாக காட்டி ஒவ்வொரு படம் முடியும் போதும் அம்மலரிதழ்களில் ஒவ்வொன்றாக வண்ணத்தில் நிறைப்பது மிக அழகு

ஐந்தில் முதலிரண்டும் சிறப்பு, பிறகு வரும் மூன்றும் பார்க்கலாம் ரகம் அவ்வளவுதான்

ஐந்து கதைக்களங்களும் முற்றிலும் வேறானவை. பிரபல பாடல்களின் முதல்வரிகளையே பொதுத்தலைப்பாகவும் கதைகளின் தலைப்புக்களில் சிலவற்றிலும் பயன்படுத்தி இருப்பதும் கவனிக்கத்தகக்து.

FEFSI யின் ஊரடங்கு காலத்துக்கான விதிகளை முழுமையாக  பின்பற்றி படத்தை எடுத்தமைக்காகவும் படக்குழுவினருக்கு பாராட்டுக்கள்

சித்தி

குடும்பப் படங்களை, குறிப்பாக  பெண்களை மையப்படுத்திய படங்களை அளித்தவரும், 1960 ஆம் ஆண்டுகளின் மிக வெற்றிகரமான  இயக்குனர்களில் ஒருவராக இருந்தவருமான K.S கோபாலகிருஷ்ணன் அவர்களின் இயக்கத்தில் 1966ல் வெளிவந்த ’மாற்றாந்தாய்’ என்னும் பொருள்படும் ’சித்தி’ அதன் கதாபாத்திரத்தேர்வுக்கும் மிகச்சிறந்த திரைக்கதையமைப்புக்குமாக புகழ்பெற்றிருந்தது. 55 வருடங்களுக்குப் பிறகும்  சுவாரஸ்யம் குறையாமல் நம்மால் பார்க்கமுடியும் பல கருப்பு வெள்ளைப்படங்களில் சித்தி மிக முக்கியமானது.

இயக்குநர் KSG

மாற்றாந்தாய் என்றாலே கொடுமை செய்பவள் என்னும் ஆழமான நம்பிக்கை இன்றளவும் இருக்கும் சமூகத்தில், அப்போதே அப்படியில்லை,  மூத்தாள் குழந்தைகளை தன் குழந்தைகளாகவே எண்ணும் நல்ல பெண்களும் சித்திகளாய் இருப்பார்கள் என்று அழுத்தமாக, அழகாக, உணர்வுபூர்வமாக  சொன்ன படம் இது. சித்தியாக வரும் பத்மினியின் குண இயல்புகளை மிக அழகாக இதில் இயக்குநர் காட்சிப்படுத்தியிருப்பார்

வை மு கோதைநாயகியம்மாள்

விடுதலைப் போராட்ட வீராங்கனையும் பிரபல நாவலாசிரியையுமான நாவல் ராணி, கதா மோகினி என்றெல்லாம் புகழ்பெற்றிருந்த வைத்தமாநிதி முடும்பை கோதைநாயகி அம்மாள் எழுதிய தயாநிதி என்னும் நாடகத்தை தழுவியே சித்தி எடுக்கப்பட்டது. ஹிந்தியில் Aurat,  மலையாளத்தில் ‘அச்சன்ட பார்யா’ தெலுங்கில் ‘பின்னி’ , கன்னடத்தில் ’சிக்கம்மா’ என இதே நாடகம் திரைப்படமாக  பல மொழிகளில் அப்போது எடுக்கப்பட்டது.

 திருமணத்திற்குப்பின்  அமெரிக்கா போய்விட்டு, பத்மினி திரும்பி வந்து நடித்த படம்தான் ‘சித்தி’ இந்த படம் ஆறு விருதுகளை அள்ளித் தந்தது. சிறந்த கதையாசிரியர் விருது கோதைநாயகிக்கு வழங்கப்பட்டது. ஆனால், இந்த விருது வாங்கும்போது அவர் உயிருடன் இல்லை. தன் மகன் ஸ்ரீனிவாசன், வாழவேண்டிய வயதில் விஷக்காய்ச்சலால் இறந்துவிட்ட துக்கம் அவரை படுத்த படுக்கையாக்கிவிட்டது. அதன் விளைவாக மகன் இறந்த நான்கு ஆண்டுகளில் (20.02.1960) சாவு இவரையும் அழைத்துக் கொண்டது

சித்தியில் இசை எம் எஸ் விஸ்வநாதன், பாடல்கள் கண்ணதாசன், உதவி பஞ்சுஅருணாசலம். ஒளி இயக்குநர் ஆர் சம்பத், படத்தொகுப்பு, ஆர் தேவராஜன். தயாரிப்பு சித்ரா ப்ரொடக்‌ஷன்ஸ். வசன ஒலிப்பதிவு பிரசன்ன குமார் ஏறக்குறைய 3 மணி நேரங்கள் நீளமுள்ள இந்த திரைப்படம் 1966 ஜனவரி 14 அன்று வெளிவந்தது.

தண்ணீர் சுடுவதென்ன, காலமிது காலமிது கண்ணுறங்கு மகளே, சந்திப்போமா இன்று சந்திப்போமா, உள்ளிட்ட சித்தியின் 7 பாடல்களுமே மிகப்பிரபலமடைந்தவை .’’காலமிது’’ பாடல் எக்காலத்துக்குமானது.

மிக எளிய குடும்பக்கதை. மனைவியை இழந்த பெரியசாமி என்கிற எம் ஆர் ராதாவுக்கு இரண்டாம் மனைவியாக அவர் வயதில் பாதியே இருக்கும் மீனாட்சியாகிய பத்மினி, குடும்பத்தின் வறுமை, தம்பியின் மருத்துவக் கல்லூரிப்படிப்பு இவற்றின் பொருட்டு  ஜெமினியுடனான தன் காதலை துறந்து வாழ்க்கைப்படுகிறார். இறந்த மூத்தமனைவிக்கு  இருபதுகளில் இருக்கும் நாகேஷும், பதின்மவயதில் இருக்கும் விஜய நிர்மலா மற்றும் நண்டும் சிண்டுமாக  குழந்தைகள். பெரியசாமியின் அம்மாவுக்கு இத்திருமணத்தில் விருப்பமில்லையெனினும் தள்ளாத வதில் கைக்குழந்தையுடன் போராடமுடியாமல் புது மருமகளை  வரவேற்கிறார்

ஒளிரும் கண்களும் செதுக்கியதுபோன்ற உடலுமாக பத்மினி மிகப்பிரமாதமாக நடித்திருக்கிறார்.  ஒரு ஊமைத்தங்கை உள்ளிட்ட 7 உடன்பிறந்தவர்களின் பொருட்டு தன் வாழ்வை தியாகம் செய்துவிட்டு கண்ணீரை மாறாத புன்னகையால் மறைத்துக்கொண்டு அன்னையாகாமலே அன்னைமையால் நிறைந்து  மிளிரும் பாத்திரம் அவருக்கு

இப்படியான சவாலான பாத்திரங்களில் மிக அநாயசமாக நடிக்கும் பத்மினி இதிலும் அப்படியே நம் உள்ளங்களில் சித்தியாகவே நிறைந்துவிடுகிறார்.

6 குழந்தைகளின் தந்தையாக இரண்டாம் திருமணம் செய்துகொண்டு மிச்சமிருக்கும் இளமையையும் அனுபவிக்க துடிக்கும், ஆடம்பர வாழ்விலும் நாகரிக மோகத்திலும் மூழ்கி இருக்கும், கோட்டும் சூட்டுமான மிடுக்கான தோற்றத்தில் எம் ஆர் ராதாவும் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். வில்லனாகவும் நாயகனாகவும் அவரே தனிஆவர்த்தனம் செய்கிறார், ப்ரத்யேக கிண்டல் குரலில் ஏற்ற இறக்கங்களுடன் அவர் பேசும் வசனங்கள் எல்லாமே சபாஷ் ரகம்.

இரு மாபெரும் நடிக மேதைகளாதலால் காட்சிக்கு காட்சி திரைப்படம் சுவாரஸ்யம் மிகுந்தபடியே இருக்கின்றது.

தன் பொருட்டு அக்கா வாழ்வை தியாகம் செய்வதை தம்பி முத்துராமன் தடுக்க முயல்கிறார் இருந்தும் பத்மினி திருமணத்திற்கு சம்மதிக்கிறார்

பத்மினியின் முன்காதலன் ஜெமினி என்னவானார்? அவருக்கு அந்த பல லட்ச ரூபாய் சொத்து கிடைத்ததா? எம் ஆர் ராதா பத்மினியின் தியாகத்தை புரிந்துகொண்டாரா? வீட்டை விட்டு துரத்தப்பட்ட முத்துராமன் மருத்துவப்படிப்பை முடித்தாரா?, காதலர்கள் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே மீதமிருக்கும் இரண்டாம் பாதியின் சுவாரஸ்யம்

அமைதியான பாத்திரத்தில் வழக்கம் போல முத்துராமன். தன்னால் பாழாய்ப்போன அக்காவின் வாழ்வுகுறித்தான குற்றவுணர்வும், எதிர்பாரா காதலுமாக தவிக்கும் பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்

சிறிய ஆனால் முக்கியமான பாத்திரம் ஜெமினிக்கு. நாகேஷ் இருக்கிறார் நகைச்சுவை இல்லை. விகே ராம்சாமி  சுந்தராம்பாள் ஆகியோரும் உள்ளனர்

பத்மினிக்கும் குழந்தைகளுக்குமான புரிதலும் அன்பும் மிக சுவாரஸ்யம். கணவனின் ஆசைக்காக மாடித்தனியறையில் அந்தரங்கமாக இருக்கையில் தாயெனவே பத்மினியை நினைக்கும் கைக்குழந்தை வீறிட்டு அழுதபடி அவரைத்தேடி படியேறுகையில், அரைகுறையாக ஆடைகளை அள்ளிப்போர்த்திக் கொண்டு  பத்மினி  அறையிலிருந்து ஓடிவந்து குழந்தையை வாரி எடுத்துக்கொள்ளும் காட்சி, வீட்டில் நிம்மதியில்லையென மனைவியை எம் ஆர் ராதா, விடுதிக்கு அழைத்துவருகையில், பத்மினியை அதற்கு முன்னர் பார்த்திராத  நாகேஷ் அவரிடம் பேசும் காட்சி , மகளுடனான முத்துராமனின் காதலை அறிந்து எம் ஆர் ராதா அவரை அடித்து துரத்தும்போது, மிக அமைதியாக பத்மினி பேச ’’ என்னடி பெரிய கவர்னர் ஜெனெரல் மாதிரி பேசிட்டு போறே’’ என்று துவங்கி  கணவன் மனைவிக்குள் நடக்கும் உரையாடலும், எம் ஆர் ராதாவின் ஆக்ரோஷமும் அவர் சுமத்தும் குற்றச்சாட்டுக்களும், பத்மினியின் எதிர்வினைகளுமாய் இருக்கும் அந்தக்காட்சி இப்படி பல உணர்வு பூர்வமான நம்மை நெகிழவைக்கும் காட்சிகள் படத்தில் நிறைய உண்டு

 பத்மினி ,எம்.ஆர் ராதவுக்கு இணையாக நடித்திருபப்து கைக்குழந்தையான அந்த ராணிப்பாப்பா. பத்மினியைபோலவே ஆடுவதும், அவருடன் எபோதும் ஒட்டிக்கொண்டே இருப்பதும், கன்னத்தை பிடித்து முத்தமிடுவதுமாக அந்தகுழந்தை கண்ணையும் மனசையும் நிறைந்துவிடுகின்றாள். பார்த்துக்கொண்டிருப்பது திரைப்படம் என்பதே அக்குழந்தையினால் மறந்துபோகும் அளவுக்கு நெகிழ்ச்சியான காட்சிகள் அந்தக்குழந்தை வரும் காட்சிகளெல்லாம்.

பேபி ராணி

பொங்கல் பண்டிகை ரிலீசென்பதால் டைட்டிலிலேயே கரும்பும் வாழையும் தேங்காய் பழமும் பொங்கல் பானையும் மங்கல இசையுமாக படம் துவங்குகின்றது.

டைட்டிலில் எவர்சில்வர் பாத்திரங்கள் என்றெல்லாம் போடுவதை சுவாரஸ்யமாக பார்க்கலாம். இப்போது உலகத்திரைப்படங்கள் கைவிரல் நுனியில் ஒரு தட்டலில்  காணக்கிடைக்கும் காலத்தில் இப்படி பாத்திரங்கள் வாங்கியது முதற்கொண்டு பதிவு செய்யப்பட்ட ஒரு பழைய திரைப்படத்தை பார்க்கையில், நம் தமிழ் சினிமா கடந்து வந்த அந்த நீண்ட பாதை பெரும்பிரமிப்பை உண்டாக்குகின்றது. அப்போதும் இப்போதும் திரைத்துறையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் விஷயங்களில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை குறித்த ஒரு சித்திரத்தை சித்தி நமக்களிக்கின்து.

குழந்தை பிறந்திருக்கும் அறையின் வாசலிலேயே ஜோதிடர் காத்திருப்பது, தனது அம்மாவுக்கே 3 பிரசவத்தை மகள் பத்மினி பார்ப்பது, அப்போதைய கூட்டுக்குடும்பத்தில் தண்ணீர் பில்டரின் அளவிலிருக்கும் பெரிய காபி ஃபில்டர், விஸ்தாரமான  சமையலறை, 8 பேர் 2 ரூபாயில் சாப்பிட முடியும் பொருளாதார நிலை, ஒரு பெண் ஹோட்டலுக்கு போவது என்பதே மற்றொரு பொருளில் சொல்லப்படுவது  என்பது போல  இப்போதைய தலைமுறை ஆச்சர்யத்துடன் ரசிக்க ஏராளமான விஷயங்களும் சித்தியில் உள்ளது.

உணர்வுபூர்வமாக அபிநயங்களுடன் நிறுத்தி நிதானமாக தெளிவான உச்சரிப்புடன் பத்மினி பேசும் வசனங்களுக்காகவே பலமுறை சித்தியை பார்க்கலாம். அகலக்கண்களை மலர்த்தி மலர்த்தி அவர் பேசுவதே அத்தனை அழகு. ஆற்றில் குளித்துக்கொண்டே பத்மினியும் ஜெமினியும் பாடும் ஒரு டூயட்டும்  ஆச்சர்யமாக சித்தியில் உண்டு

  //ஏழைகள் வயசுக்கு தகுந்தபடி வாழக்கூட முடியாதே//, //அட்சதையா அத்தனைபேர் மேல போட்டாக்கூட பத்தாத அரிசியையா சமைக்க எடுத்துட்டு போறீங்க?// என்பது போன்ற ருசிகரமான வசனங்கள் திரைக்கதையை மேலும் செறிவாக்குகின்றது.

ஒரு பெண் நடத்தை தவறுவதும் ஒரு ஆண் தான் அளித்த வாக்குறுதியை தவறவிடுவதும் ஒன்றுதான் என்னும் கருத்தை சொல்லும் பொருட்டு  சில இறுதிக்காட்சிகள் வலிந்து சேர்க்கப்பட்டிருந்தாலும் அந்தகாலத்தில் அது அவசியமானதாயிருந்திருக்கும்.

பெரும்பாலான  அந்தக்காலத்து படங்களைப்போலவே சித்தியும் சுபமாகவே முடிகின்றது. காதலர்கள் ஒன்று சேர்வதும், எம் ஆர் ராதா மனம் திருந்துவதும் ஊமைத்தங்கையை லட்சாதிபதியாகிய ஜெமினி மணம் புரிந்து கொள்ளுவதுமாக, பண்டிகை நாளில் திரைப்படத்தை பர்த்துவிட்டு  நிறைவுடன் ரசிகர்கள்  வீடு திரும்பியிருப்பர்கள் என்பதை நாமும் அதே நிறைவுடன் உணருவோம்.

Fracture

பிரபல நடிகரும், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளருமான  ஆண்டனி ஹாப்கின்ஸ் மற்றும்   ’லா லா லேண்ட்’ புகழ் ரையான் கோஸ்லிங் (Anthony Hopkins & Ryan Gosling) ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் ’த்ரில்லர்’ வகை ஆங்கிலத் திரைப்படமான Fracture, 2007ல் வெளியானது.  

மணவாழ்க்கையில் தனக்கு துரோகம் செய்த மனைவியை கொலை செய்த குற்றவாளிக்கும், நீதிமன்றத்தில் அவருக்கெதிராக வழக்காடும் வக்கீலுக்கும் இடையிலான  மனக்கணக்குகளும், பிரத்யேக சவால்களும், போராட்டமுமே கதை. இந்த வகைப்படங்களில் இது மிக விறுவிறுப்பான ஒன்றென சொல்லலாம். ஏப்ரல் 20, 2007ல் அமெரிக்காவில் மட்டும் சுமார் 2,500 திரையரங்குகளில் திரையிடப்பட்ட இப்படம் வசூலை வாரிக்குவித்தது.

இயக்கம் Gregory Hoblit, கதை Daniel Pyne, திரைக்கதை Glenn Gers மற்றும் Daniel Pyne. இசை ஜெஃப் மற்றும் மைக்கேல், ஒளி இயக்கம் Kramer Morgenthau. படத்தொகுப்பு David Rosenbloom, தயாரிப்பு Charles Weinstock (Castle Rock Entertainment).  

பிரபல நடிகை Rosamund Pike மற்றும் David Russell Strathairn  ஆகியோரும் குறிப்பிட்டு சொல்லும்படியான  சிறிய பாத்திரங்களில் இருக்கின்றனர்.

செல்வந்தரும், அதிபுத்திசாலியும், துணிச்சல்காரருமான, சிறுவயதிலிருந்தே மிக நுட்பமானவரகவே அறியப்பட்ட  டெட் (ஆண்டனி) தன் மனைவி ஜோஸபினுக்கும் காவலதிகாரி ராப்’க்கும் இடையேயான  நெருக்கமான உறவை அறிந்து மனைவியை துப்பாக்கியால் சுட்டுவிடுகிறார்.  குற்றம் நடந்த இடத்திலேயே கைதும் செய்யப்படுகிறார். நீதிமன்றத்தில் இவருக்கெதிராக வழக்காடும் வில்லியிடம் (ரையான்) வழக்கை முன்னெடுத்து செல்ல முடியாதபடிக்கு சாமார்த்தியமாக  விளையாடுகிறார்.  குற்றத்தில் தொடர்புடைய துப்பாக்கியையும் காவல் துறையால் கண்டு பிடிக்க முடியவில்லை என்னும் போது இறுதி வெற்றி யாருக்கு, எப்படி என்பதே  கதை.

எல்லாம் சரியாக இருப்பதுபோல் வெளித்தோற்றமிருப்பினும்  hair line fracture எனப்படும்  வெளியில் தெரியவே தெரியாத  மிக மிக லேசான நுட்பமான விரிசல் உள்ளிருக்கும் சாத்தியங்கள் இருப்பதைப்போல, தங்களுக்குள்ளிருக்கும் பலவீனங்களை டெட் மற்றும் வில்லி  இருவரும் பரஸ்பரம் கண்டடையும் முயற்சியில் இறுதிக்காட்சி வரை ஈடுபட்டிருப்பதால் இத்திரைப்படத்திற்கு  fracture என்று பெயர்.

ஆண்டனியும் ரையானும் போட்டி போட்டுக்கொண்டு திரையை நிறைத்துவிடுகிறார்கள். இருவருமே முழுப்படத்தின் பெரும் பலம். இசை ஜாம்பவான்களின் புகைப்படங்கள் இருக்கும், மிக அழகிய மெல்லிய வெளிச்சமுள்ள அந்த வீடு,  சிறப்பான காமிரா கோணங்கள், மிக அழகாக கட்டமைக்கப்பட்ட காட்சிகள், புழுதி கிளப்பிக்கொண்டு டெட் செல்லும் அந்த பிரமாதமான porsche Carrera GT கார், மாறி மாறி குற்றவாளியும் வக்கீலுமாக ஒருவரை ஒருவர் வெல்ல செய்யும் முயற்சிகள்,  நேர்த்தியான, சுவாரஸ்யமான திரைக்கதை, கோமாவில் இருக்கும் ஜோஸபின்,  ஒரு தற்கொலை, மிக எதிர்பாரா இறுதிமுடிச்சு என காட்சிகள்  தொய்வின்றி செல்லுகிறது.

மணவுறவைத் தாண்டிய பந்தத்திலிருந்த, தனக்கு துரோகம் செய்த மனைவியை கொல்வது, மனைவியின் காதலனையும் சிக்கலுக்குள்ளாக்குவது, எதிராக வாதாடுபவரையும் தோற்கடிப்பது, தன்னம்பிக்கையை எந்த நேரத்திலும் இழக்கமால் இருப்பது என டெட்’ ஆக ஆண்டனி பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

எப்படியும் இந்த வழக்கின் உண்மையை கண்டுபிடிக்க முயல்வது, கோமாவிலிருக்கும் ஜோஸபினுக்கு புத்தகம் வாசித்து காண்பிப்பது, நீதிமன்றத்தில் அடுத்தடுத்து தோற்று திகைத்து நிற்பது, உயரதிகாரியுடன் மோதல் இருந்தாலும் அவருடன் நெருக்கமாகவும் இருப்பது, எதையாவது மென்றுகொண்டும், அருந்திக்கொண்டும், வசீகரமாக சிரித்துக்கொண்டும் ரையானும் வில்லியாக உள்ளம் கொள்ளை கொள்ளுகிறார்.

டெட்’டின் அந்த வன்மம் நிரம்பிய, எதிரிலிருப்பவர்களை எரிச்சலூட்டும் தந்திரமான சிரிப்பும், மிகத்தேர்ந்து அவர் பேசும் வசனங்களும் சிறப்பு அவற்றுக்காகவே படத்தை மீண்டுமொருமுறை பார்க்கலாம்

முதல் காட்சியிலேயே நம் கண்ணெதிரே மனைவியை சுட்டுக்கொன்றவன், கையும் களவுமாக பிடிபட்டதும், காவலதிகாரிகள் முன்பு  கொன்றதாக ஒப்புதல் வாக்குமூலமும் கொடுத்து, கைதும் செய்யபட்ட  பின்னரும் open and shut case  என்ற வகையான இக்குற்றத்தில், திரைக்கதையில் பிறகென்ன சுவாரஸ்யம் இருக்கமுடியும் எனும் கேள்விக்கான பதிலே இத்திரைப்படம்.

Your wife? Is she OK?  ’’ I don’t think she is. I shot her.’’

’’I took both the bastards out with one f—-g bullet’’

’’Knowledge is pain’’ போன்ற மிக நுட்பமான வசனங்கள் கவனிக்க வைக்கின்றன. இத்திரைப்படத்தின் சற்றே மாறுபட்ட  கூடுதல் காட்சிகள் இருக்கும் ஒரு பிரதியும் DVD யில் கிடைக்கிறது.

கைக்கடிகாரம் தெளிவாக நேரம் காட்டுகையில் அதற்கு முற்றிலும் மாறான ஒரு நேரத்தை கதாபாத்திரம் குறிப்பிடுவது, தயாரிக்கும் போதே துப்பாக்கி சரியாக வெடிக்குமா என சோதிப்பது வழக்கமென்பதால், குற்றம் நடைபெற்ற இடத்தில் கிடைத்த துப்பாக்கி ஒருமுறை கூட சுடப்பட்டதல்ல என்பது போன்ற வாக்கு மூலம், மருத்துவமனையில் ஜோஸபினை உயிருடன் வைத்திருக்கும் மருத்துவ உபகரணங்களின் இணைப்புக்களை அகற்றுவது  குறித்தான நீதிமன்ற  தடையுத்தரவுடன் வந்திருக்கும் பிரபல வக்கீலை, அதை அதை அவரே குறிப்பிட்டும் கூட  உள்ளே செல்லவிடாமல் காவலதிகரிகளே தடுப்பது,  தொலைபேசியில் பதிவாகி இருக்கும் வாய்ஸ் செய்திகளின் எண்ணிக்கை குழப்பம், வில்லி  புத்தகத்தை தலைகீழாக வைத்துக்கொண்டிருப்பது, ஒரு சில continuity shot களில் இருக்கும்  குழப்பங்கள், ராப் தற்கொலை செய்துகொண்ட மாடிப்படியின் மேல்பகுதியில் ரத்தம் சுவற்றில் சிதறி இருக்கையில் கீழே உருண்டு விழுந்திருக்கும் சடலத்தின் அருகில் துப்பாக்கியும் எப்படியோ சரியாக வந்து சேர்ந்திருப்பது, சாத்தியமே இல்லாத ஒன்றாக துப்பாக்கியை டெட் சிறை அலுவலகத்தில் சமர்த்திருப்பது, போன்ற நுண்மையான தவறுகளை கண்டுகொள்ளாமலிருந்தால், வெள்ளிக்கிழமை மாலைக்கான மிகபொருத்தமான  திரைப்படம் இது.

Changeling!

Changeling

ஐரோப்பிய நாட்டுப்புறக்கதைகளில் தேவதைகளும், யட்சிகளும் தங்களுக்கு பிடித்தமான மனிதக்குழந்தைகளை கடத்திக்கொண்டு போய் அடிமைகளாக்கி சேவை செய்ய வைத்துவிட்டு, அவர்களுக்கு பதிலாக அதே சாயலுள்ள, தீய குணங்களுள்ள வேறு குழந்தைகளை கொண்டு வந்து மாற்றி வைத்துவிடுவார்கள் என்று நம்பிக்கை நிலவுகிறது. அப்படி மாற்றபட்ட குழந்தைகளே ‘changelings’ எனப்படுவார்கள்.

லாஸ் ஏஞ்சலஸில் 1928 ஆம் வருடம், திருமதி கிரிஸ்டைன் கோலின்ஸ் பணியிலிருந்து வீடு திரும்பியபோது, வீட்டில் தனித்திருந்த அவரது 9 வயது மகன் வால்ட்டர் காணாமல் போயிருந்தான்.  காவல்துறையில் புகாரளித்தும் பல இடங்களில் தேடியும் மகன் கிடைக்காத நிலையில், 5 மாதங்களுக்கு பிறகு  வால்ட்டர், இல்லினாய்ஸில் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையிலிருந்து செய்து வருகின்றது. ஆனால்  ரயில் நிலையத்தில் ஆவலுடன் காத்திருந்த அன்னை கோலின்ஸிடம் வால்ட்டர் என்று ஒப்படைக்கப்பட்டதோ  உயரம், சாயல், உடல்மொழி, பாவனை என அனைத்திலும் வேறுபட்டிருந்த மற்றொரு சிறுவன். அது தன் மகனில்லை என்ற கோலின்ஸின் மறுப்புக்கு காவல்துறை செவிசாய்க்காமல், அது வால்ட்டர்தான் 5 மாதங்களில் சாயல் மாறிவிட்டது என்று சாதித்துவிட்டு, ஊடகங்களில் காணாமல்போன சிறுவனை விரைவில் கண்டுபிடித்த  தங்களின் சாகசத்தை விளம்பரப்படுத்திக் கொள்கிறார்கள்.

 அச்சிறுவன் தன் மகனில்லை என்பதை நிரூபிக்க கோலின்ஸ் செய்யும் முயற்சிகள், போராட்டங்கள் அனைத்தும் பயனற்றுப்போகையில், திருச்சபையின்  மதகுரு ஒருவரின் உதவியால்  லாஸ் ஏஞ்சலஸ் காவல் துறையின் செயலின்மையும், ஊழலும் வெளிச்சத்துக்கு  வந்து, கடத்திச்செல்லபட்டு கொடூரமாக கொலைசெய்யபட்ட பலகுழந்தைகளைப்பற்றியும் பின்னர் தெரிய வந்து புலன்விசாரணை நடக்கிறது. அதன்பிறகும் வால்டரைக்குறித்த தகவல்கள் ஏதும் கிடைக்காததால், தன்னிடம் அளிக்கப்பட்ட சிறுவன் தன் மகனல்ல என்பதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க முயன்ற கோலின்ஸை மனநோயாளி என முத்திரை குத்தி காப்பகத்துக்கு அனுப்பி சித்ரவதை செய்கிறார்கள்.கடும் போராட்டத்துக்கு பிறகு காப்பகத்திலிருந்து வெளிவரும் கோலின்ஸ் மீண்டும் முழுவீச்சில் தன் மகனைதேடுவதை தொடர்கிறார்.

 இந்த உண்மைச்சம்பவத்தின் அடிப்படையிலான  குற்றமும் மர்மமும் கலந்த திரைப்படம்தான் 2008ல் வெளியான ’’Changeling’.’ தயாரிப்பும், இயக்கமும், பிண்ணனி இசையும் பிரபல இயக்குநர் கிளிண்ட் ஈஸ்ட்வுட் (Clint Eastwood ). திரைக்கதை மிக்கேல் ஸ்ட்ரேக்ஜின்ச்கி (Michael Straczynski). இக்கதையில் அக்காலகட்டத்தின் குழந்தைக்கடத்தல்,  பெண்களுக்கெதிரான குற்றங்கள், வன்முறைகள், அரசியல் ஊழல், மனநோய் காப்பகங்களில் நடந்த அநீதிகள், ஆகியவையும் முன்வைக்கப்பட்டிருந்தது.

ஏஞ்சலினா ஜோலி, திருமதி கோலின்ஸ் ஆக மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். திரைக்கதை எழுதியிருக்கும் மிக்கேல் எதேச்சையாக இந்த சம்பவத்தை குறித்து கேள்விப்பட்டு அதன்பின்னர் அதன் குற்றப்பின்ணனியை காவலதிகாரிகளால் எரிக்கப்படவிருந்த  பல்லாயிரக்கணக்கான பக்கங்களடங்கிய   குற்றம் தொடர்பான ஆவணங்களையும், கோலின்ஸுடனான நீதிமன்ற  விசாரணைகளையும் வாசித்து,  சம்பவத்துடன் தொடர்பிலிருந்த பல இடங்களுக்கு பிரயாணித்து, பல வருடங்கள் ஆய்வு செய்தே இக்கதையை எழுதியிருக்கிறார். இது அவரின் முதல் வெள்ளித்திரைக்கதை. ஊடகவியல் மற்றும் இதழியலில் அவருக்கிருந்த அனுபவம் திரைக்கதையை செம்மையாக்கியிருக்கிறது Imagine Entertainment மற்றும் Universal Pictures ஆகியவையும் தயாரிப்பு மற்றும் வெளியீட்டில் பங்கு கொண்டனர்

 Period film வகையிலான  இத்திரைப்படத்தில் மகனை இழந்த, நம்பிக்கை இழக்காமல் இறுதிவரை போராடும் அன்னையின் கதாபாத்திரத்திற்கு பல முன்ணனி நடிகைகள் போட்டியிட்டும், கிளிண்ட் ஈஸ்ட்வுட் 1920களில் நடக்கும் கதைக்கான முகமும்,  அன்னைமை மிளிரும் தோற்றமும் இருப்பவராக  ஏஞ்சலினாவையே   தேர்வு செய்தார். ஏஞ்சலினாவுடன்  Jeffrey DonovanJason Butler HarnerJohn MalkovichMichael Kelly, மற்றும் Amy Ryan.ஆகியோரும் முக்கியப்பாத்திரமேற்றிருக்கின்றனர்

2007 அக்டோபரில் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் தெற்கு கலிஃபோர்னியாவில் துவங்கி நடத்தப்பட்ட படப்பிடிப்பு விரைவாக நடந்து 43 நாட்களில்  முடிவடைந்தது. அதன் பின்னர் post production வேலைகளாக கணினியில்  70 வருடங்களுக்கு முன்னரான நகரநிர்மாணம் மற்றும் சாலைப்போக்குவரத்து, உடையலங்காரம் உள்ளிட்ட பழமை ஒவ்வொரு காட்சியிலும்  பிழையின்றியும் சிறப்பாகவும் இருக்கும்படி கவனமாக இணைக்கப்பட்டது  

.அக்டோபர் 2008ல் உலகெங்கிலும் வெளியான இத்திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. இப்படம் காட்டும் குழந்தைகள் மீதான வன்முறைகளுக்கான எதிர்ப்பும் கொஞ்சம் இருந்ததென்றாலும் 55 மில்லியனில் தயாரிக்கபட்ட இத்திரைப்படம் 113 மில்லியன் லாபமீட்டி பெருவெற்றி பெற்றது சந்தேகமில்லாமல். ஆஸ்கார் உள்ளிட்ட ஏராளமான விருதுகளுக்கு பரிந்துரைககப்பட்டு, மிக முக்கியமான பலவிருதுகளையும் பெற்றது ‘’changeling’’.

 ஏஞ்சலாவின் பிரமாதமான நடிப்புக்கு இப்படமும் மற்றுமொரு உதாரணம். படத்தின் துவக்கத்தில் அவரின் அழகியதோற்றத்தில், குறிப்பாக ரத்தச்சிவப்பு சாயமிட்ட அவரின் உதடுகளிலிருந்து கவனத்தை திருப்ப கொஞ்சம் பிரயத்தனப்படவேண்டியிருப்பினும் சில காட்சிகளிலேயே அவர் மகனை இழந்த அன்னையான கோலின்ஸ் ஆக மட்டுமே உணர்வுபூர்வமாக திரையில் தெரியத்தொடங்குவதால் கதையோட்டத்தில் நாமும் கலந்துவிடுகிறோம்.

மகனுடன் அவனுக்கு புரியும் மொழியில் உரையாடியபடியே நாளைத்துவங்குவது, தன் அப்பா ஏன் தன்னுடன் இல்லையென்ற அவன் கேள்விக்கு  வெகுசாமர்த்தியமான பதிலைச்சொல்லுவது, மகன் காணாமல் போனபின்பு பரிதவிப்பது, விடாமுயற்சியுடன் அவனை தேடுவது, அக்காலகட்டத்தில் வழக்கத்திலிருந்தது போல் ஸ்கேட்டிங் ஷூக்கள் அணிந்து லாவகமாக பணிசெய்வது, காவல் துறையினரிடம் தன் கருத்தை திரும்பத் திரும்ப மனம் தளராமல் எடுத்துரைப்பது, மகனல்லவென்று தெரிந்திருந்தும் அந்த மாற்றி அனுப்பப்பட்டிருந்த சிறுவனிடமும் கரிசனத்துடன் இருப்பது என ஏஞ்சலினா  கோலின்ஸாகவே மாறி விட்டிருக்கிறார்

இயற்கையில் மலரிதழ்களின் மிகச்சரியான எண்ணிக்கை, அவற்றிற்கிடையேயான  சீரான இடைவெளி, மிகத்துல்லியமான இடைவெளியில் அமைந்திருக்கும் சூரியகாந்திப்பூக்களின் விதைகள், பைன் கோன்கள் ஆகியவற்றின் அமைப்பை கணிதவியல் தங்கக்கோணம், Golden  Angle அல்லது Golden Ratio என்கிறது. அப்படியான மிகத்துல்லியமான அளவுகளில் தங்கவிதியின்படி அமைந்திருக்கும் முகம் கொண்டவரென்று (golen ratio face) அறியப்பட்ட பிரபலமான ஏஞ்சலினா தன் அழகுக்கு அழகு சேர்க்கும் நடிப்பை இப்படத்தில் அளித்திருக்கிறார்.  இல்லினாய்ஸிலிருந்து ரயிலில் வரும் காணாமல் போன மகனுக்காக  பரிதவிப்புடன் காத்திருப்பதும் மகனல்லவென்று சந்தேகம் வந்தாலும் ஊடகங்களின் முன்னால் எப்படி மறுத்துச்சொல்வதென்ற தயக்கமும், காவலதிகாரியின் வற்புறுத்தலால் வந்த குழப்பமுமாக இருக்கையில், இவர்தான் நாயகி என்னும் கிளிண்ட் ஈஸ்வுடின் கணிப்பு எத்தனை சரியென்பது புலனாகும் பார்வையாளர்களுக்கு.

 இத்திரைப்படத்தின் பொருட்டு ஸ்கேட்டிங் ஷூக்களில் விரைவாக நடப்பதற்கான பயிற்சியையும் ஏஞ்சலினா எடுத்துக்கொண்டிருக்கிறார்.

 திரும்ப கிடைத்திருப்பது தன் மகனல்ல, இன்னும் எங்கேயோ தன்மகன் கண்டுபிடிக்கப்படாமல் இருக்கிறான் என்பதை நிரூபிக்க அவர் செய்யும் முயற்சிகள் எல்லாமே  மனதை பிசைபவை. இப்படி ஒரு ஒற்றைத்தாய் முன்னெப்போதோ அல்லலுற்றிருக்கிறார் என்னும் உண்மையை கண்முன்னே கொண்டு வந்து காட்டிவிடுகிறார் ஏஞ்சலினா.

மாற்றபட்ட சிறுவனின் உயரம் குறைவாக இருப்பது, சிறுவனின் ஆணுறுப்பின் முனைத்தோல் நீக்கப்பட்டிருப்பது, அவன் பற்களின் அமைப்பு மாறியிருப்பது, அவன் பள்ளி ஆசிரியையின் இது வால்டரல்ல என்னும் வாக்குமூலம்  போன்ற மறுக்க முடியாத ஆதாரங்களை மறுநாள் ஊடகங்களின் முன்வைக்கப்போகிறார் என்று தெரிந்ததும் சொந்த மகனை மறுக்கும் மனப்பிறழ்வு உள்ளவரென காட்டி கோலின்ஸை காவல்துறை மனநோயாளிகளின் காப்பகத்துக்கு அனுப்புவதும், அங்கு அவருக்கு நடக்கும் இழிவுகளும், கிடைத்திருப்பது வால்ட்டர்தான் என்று ஒத்துக்கொள்ளும்படி அவருக்கு  கொடுக்கப்படும் நேரடியான மிரட்டல்களும், உயிராபத்துக்களுமாக திரைப்படம் உண்மைச்சம்பவம் நடைபெற்ற காலத்துக்கே நம்மை அழைத்துச்சென்று கலங்க வைத்து விடுகின்றது.

 மதகுருவின் ஒத்துழைப்பால் பல குழந்தைப்படுகொலைகள் வெளிச்சத்துக்கு வந்து குற்றவாளி நார்த்காட்(Northcott) பிடிபடுகிறான்.20 குழந்தைகளை கொன்று புதைத்தாக ஒத்துக்கொண்ட  அவனிடமிருந்து தப்பி வந்த சிறுவனின் வாக்கு மூலமும், அவனுடன் தப்பித்த சிறுவர்களைப்பற்றிய தகவல்களும், சிறைத்தண்டனையில் இருக்கும் நார்த்காட் 2 வருடங்களுக்கு பிறகு தூக்கிலிடப்படுவதற்கு முந்தின நாள், கோலின்ஸை சந்தித்து வால்டரைக்குறித்து பேச விருப்பப்படுவதாக சொல்லுவதும்,  தூக்கிலடப்படும் இறுதி நிமிடம்வரை பரிதவித்தபடி காத்திருக்கும் அன்னையிடம் அவன் என்ன சொன்னானென்பதுவும், வால்டர் மீண்டும் கிடைத்து அன்னையும் மகனும்  இணைந்தார்களா என்பதையும் திரைப்படத்தை பார்த்து தெரிந்துகொள்வதே உசிதம்.

இச்சம்பவத்தில்  சம்பந்தப்பட்ட ஊழல் காவலதிரிகாரிகள் உண்மையில் பணிநீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர் (Captain Jones & Chief Davis ) அரசியல்வாதி ஒருவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடவே இல்லை. கலிஃபோர்னியவின் நீதித்துறை மனநாயாளிகளை விடுதியில்  சேர்ப்பது குறித்த முறையான சட்டங்களை இதன்பிறகே பிறப்பித்தது. குழந்தைகள் கொன்று புதைக்கப்பட்ட வைன்வில்லி (Wineville) நகரம் கொலைகளினாலேயே  பிரசித்தி பெற்றுவிட்டதால் சில வருடங்களுக்கு பிறகு நகரமே மிரா லோமா (Mira Loma ) எப்பெயர் மாற்றபட்டது   

 குற்றவாளி Northcott,  ஆக நடித்திருக்கும்   Jason Butler Harner  ன் நடிப்பை பாராட்ட வேண்டும். மனம் பிசகியவர்களுக்கேயான பித்தேறிய கண்களும் கொஞ்சம் குழறலான உச்சரிப்புமாக பிரமாதப்படுத்தியிருக்கிறார்.

 படப்பிடிப்பு தளங்களில் பழையபாணி கட்டிடங்களும், அப்போதிருந்த புகைப்படக்கருவிகள், நெருப்பை உபயோக்கும் காமிரா ஃப்ளாஷ்கள் புகைவண்டி, 1918லிருந்து 1928 வரை புழக்கத்திலிருந்த கார்களை சேகரித்து வைத்திருந்தோரிடமிருந்து  வாங்கிய 150 கார்கள்  என மிகப்பொருத்தமாக அமைந்திருக்கும் பின்ணனி திரைக்கதையை உறுத்தாமல் கொண்டு போகின்றது. ஒரு சில காட்சிகள் கோலின்ஸ் வாழ்ந்த தெருவிலேயே படமாக்கவும் பட்டிருக்கிறது. பல வரலற்றுஆய்வாளர்களும் படப்பிடிப்பில் முக்கியப்பங்காற்றியுள்ளனர்

   ஆடைவடிவமைப்பளர் Deborah Hopper, பள்ளி , கல்லூரிகளின் மிகப்பழைய ஆண்டு மல்ர்கள்,  LIFE உள்ளிட்ட எராளமான பழைய சஞ்சிகைகள் ஆகியவற்றை ஆய்வு செய்தே உடைகளை வடிவமைத்திருக்கிரார். 1930ல் பிறந்தவரான கிளிண்ட் ஈஸ்ட்வுட் தனது பால்யகால நினைவுகலிருந்தும் சில விஷயங்களை சொல்லி உதவியிருக்கிறார்

 ஒளி இயக்குநர் டாமுக்கு ( Tom Stern)  இது ஆறாவது திரைப்படம். ஒளிப்பயன்பாட்டை வெகுவாக குறைத்து திரையில் ஏஞ்சலீனாவை மட்டும் முக்கியத்துவப்படுத்தும் காட்சியமைப்புக்களை  சிறப்பாக செய்திருக்கிறார். படத்தொகுப்பு மூன்றே நாட்களில் முடிவடைந்திருக்கிறது.

 தேவதைகளின் பிரதேசமென அறியப்பட்ட லாஸ் ஏஞ்சலஸ், மெல்ல மெல்ல   குற்றங்களும், வன்முறையும், ஊழலும் மலிந்த நகரமாக மாறியதையும் இப்படம் பதிவுசெய்கின்றது

குழந்தை கடத்தலை மையமாக கொண்ட எல்லா மொழித்திரைப்படங்களிலும் பழிவாங்குதலே பிரதானமாக இருக்கும். changeling இம்மரபிலிருந்து முற்றிலும் வேறுபட்டு மகன் மீண்டும் கிடைக்கும் வரை போராடிக்கொண்டேயிருந்த  அன்னையின் கதையைசொல்லும் வகையில் மிக முக்கியமானதாகின்றது.. திரைக்கதையை காலையில் கேட்டுவிட்டு அன்று மதியமே இயக்குவதாக ஒப்பந்ததில் கையெழுத்திட்டிருக்கிறார் ஈஸ்ட்வுட்

 இயக்குநரின் மகள் கைல் இசையமைப்பில் உதவியிருக்கிறார். மற்றொரு மகள் மோர்கன், ’’வால்ட்டரை பார்க்கவில்லை’’ என்று கோலின்ஸிடம் சொல்லும் ஒரு சிறுமிகளில் ஒருவராக திரையில் ஒரே காட்சியில் தோன்றுகிறார்.

பலவருடங்களுக்கு முன்பான பழமையை திரையில் காட்டவென இத்திரைப்படத்திற்கென படக்குழுவினர் மேற்கொண்ட கடின உழைப்பைக்குறித்து இணையத்தில் வாசிக்கையில் பிரமிப்பாக இருக்கிறது.இதற்காகவே இப்படத்தை பார்க்கலாம்

பொன்மகள் வந்தாள்

சூர்யாவின் 2 D நிறுவனம் தயரித்துள்ள ’பொன்மகள் வந்தாள்’ திரையரங்குகளில் வெளியிடப்படாமல் நேரடியாக ஒ.டி.டி யில் (OTT, Over the top) வெளியாகியுள்ள தமிழ் சினிமாவின் முதல் பெரிய படம்.

மார்ச் மாத இறுதியிலேயே திரையரங்குகள் வைரஸ்தொற்றினால் மூடப்பட்டதால் ஓ.டி.டி தளங்களின் பார்வையாளர் எண்ணிக்கை 60%  அதிகரித்துள்ள நிலையில் நேரடியாக இதில் வெளியிடுவதாக ஒப்பந்தமிட்டால் கூடுதலாக சில கோடிகள் லாபமென்பதால் தயரிப்பாளர்கள் கவனம் முழுக்க இதை நோக்கியே திரும்பியிருக்கிறது. சூர்யாவின் நிறுவனமும் படத்தை அமேசான் பிரைமுக்கே கொடுத்ததால், மே 29 அன்று ரசிகர்களின் வீடுகளுக்கே பொன்மகள் வந்தாள்

படத்தில் ஜோதிகா, பாக்யராஜ், தியாகராஜன், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன், சுப்பு பஞ்சு, வினோதினி என்று நடிகர்களின் பட்டாளமே இருக்கிறது. ஒளிப்பதிவு    ராம்ஜி, இசை    கோவிந்த் வசந்தா,  ஜே.ஜே. ஃப்ரெட்ரிக்க்கின் இயக்கத்தில் இது முதல் படம். படத்தொகுப்பு ரூபன்.5 மாதஙகளில் முழுப்படப்படிப்பும் முடிந்திருக்கிறது. சூர்யாவின் தங்கை பிருந்தாவும் ஒரு பாடல் பாடியிருக்கிறார்

2004 ஆம் வருடத்தில் ஊட்டியில் பல குழந்தைகளை கடத்தி கொலை செய்ததாக சொல்லப்பட்ட சைக்கோ ஜோதி என்னும் போலீஸாரால் சுட்டுக்கொல்லப்பட்ட கொலைகாரியின்  வழக்கை 15 வருடங்க.ள் கழித்து மீண்டும் தோண்டி எடுக்கும்  பெத்துராஜ் என்கிற பாக்கியராஜ், அவரது மகள் வழக்குரைஞர் வெண்பாவாக  ஜோ. சைக்கோ கொலையாளி எனப்படும் ஜோதி எப்படி கொலை செய்யப்பட்டாள், குழந்தைகளை கடத்தியதும் கொலைசெய்ததும் உண்மையில் யார்? வழக்கின் மறுவிசாரணைக்கான பலத்த எதிர்ப்பு,  மறுக்கப்பட்ட நீதியையும், மறைக்கப்பட்ட உண்மைகளையும்   வெண்பா போராடி வெளிச்சத்துக்கொண்டு வருவது, இந்த வழக்கில் ஏன் இவர்களுக்கு இத்தனை அக்கறை என்பதெல்லாம்தான் கதை

ஜோதி அப்பாவி, அரசியல் மற்றும் பணபலமுள்ளவர்களே உண்மைக்குற்றவாளிகள் என்னும் அதே அரதப்பழசான கதை. முதல் பாதி ஆமைவேகம் என்றால் பின்பாதி நத்தை வேகம். தேவையேயில்லாமல் 5 இயக்குநர்கள் வந்து, யாருக்கும் வலுவான கதாபாத்திரம் இல்லாமல் வீணடிக்கப்பட்டிருக்கிறார்கள். கோர்ட் வாசலில் இருக்கும் டீக்கடைக்காட்சிகள் அனைத்துமே அநாவஸ்யம் அங்கு பேசப்படும் வசனங்களும் அபத்தம். நமக்கு அறிமுகமான ஏராளமான துணைநடிகர்கள் திருமண வீடுபோல கும்பலாக வந்து போய்க்கொண்டிருக்கிறார்கள்.

தியாகராஜனுக்கு கழுத்திலே என்ன பிரச்சனையோ! இறுக்கமாக கழுத்தை வைத்துக்கொண்டு இயந்திர மனிதனைப்போல நடிக்கிறார். எளிய மக்களுக்கு ஆறுதல் சொல்லும் பொருட்டு அவர்களை தொட்டுவிட்டு பின்னர்  கையை சோப் போட்டுக்கழுவும் வில்லனெல்லாம் போன ஜென்மத்துப்பழசு.

 ஜோவையும் பாக்கியராஜையும் தவிர அனைவருமே அநியாயத்துக்கு கெட்டவர்களாக இருக்கிறார்கள். Character assassination  பாக்கியராஜிலிருந்து துவங்குகிறது. மகள் 15 வருடஙகள் கழித்து திரும்ப எடுத்திருக்கும் அவர்களிருவருக்கும்  மிக முக்கியமான ஒரு வழக்கு, ஜோ முழுப்படத்திலுமே சோகமே உருவாக இருக்கிறார் , ஆனால் அப்பாவோ பெண் நீதிபதியை மாமி , மாமி என்பதும், அவரது பிரத்யேக நக்கல் பேச்சுகளுமாக இருக்கிறார். நீதியரசராக வரும் ப்ரதாப்போத்தனையும் திடீரென லஞ்சம் வாங்கவைத்து கெட்டவராக்கிவிட்டிருக்கிறார்கள்.அதைபோலவே  வில்லனுடன் அணுக்கமாக இருக்கும் சாட்சிகளை திசை திருப்பும் கெட்ட வழக்குரைஞராக பார்த்திபன், தேவையேயில்லாமல் திணிக்கபட்ட பாத்திரத்தில் பாண்டியராஜன்

மிகச்சிறிய இடைவெளிகளில் திரும்ப திரும்ப வரும் நீதிமன்றக் காட்சிகளும் உப்புச்சப்பில்லாத குறுக்கு விசாரணைகளும் அலுப்பூட்டுகின்றது. சட்டவல்லுநர்களை எல்லாம் இயக்குநர் கலந்தாலோசித்து எடுகப்பட்ட காட்சிகள் அவை என்றறியும் போது இன்னும் ஆயாசமாக இருக்கின்றது.

 நீதிமன்ற அவமதிப்பை குறித்து துவக்கத்தில் ஜோ பேசுவதும் பின்னர் தொடர்ந்து அதுவே அங்கு நடப்பதும் முரண். பிரதாப் போத்தனும் பார்த்திபனும் நேருக்கு நேராக உரக்கக் கத்தி சண்டை போட்டுக்கொள்கிறார்கள் நீதிமன்றத்தில்!

 நீதிமன்றக்காட்சிகள் எல்லாமே ஒட்டுமொத்த அபத்தம். எந்த வலுவான  விசரணையும் குறுக்கு விசாரணையுமே இல்லாமல் பார்த்திபன் ஜோவை அவருக்கேஉரித்தான் பாணியில் நையாண்டி செய்வதும்,  நீதிபதி குறுக்கிடாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க, இரண்டு வழக்குரைஞர்களும் இஷ்டத்துக்கு விவாதித்துக்கொண்டிருப்பது, பலமான சாட்சியங்கள் ஆணித்தரமான விவாதங்கள், மறுக்கமுடியாத உண்மைகள் என்று நிரூபிக்க வேண்டிய ஒரு வழக்கின் மறுவிசாரணையை கண்ணீரும் கம்பலையுமாக உணர்வுபூர்வமாக நீதிமன்றத்தில்  ஜோ முன்வைப்பது என்று வேடிக்கையாக இருக்கிறது. நீதிமன்றம் நாடகமேடையா என்ன?

ஜோ உள்ளிட்ட எல்லா முக்கிய கதாபாத்திரங்களுமே சொதப்பல்தான். புறப்பட்ட இடத்துக்கே திரும்பத்திரும்பவந்து திரைக்கதை முட்டிக்கொண்டு நிற்கிறது.

பெண்குழந்தைகளின்  பாதுகாப்பை வலியுறுத்தும் கருத்துச்சொல்லும் படமான இதில் வழக்குரைஞராக வரும் ஜோவை இறுதிகாட்சி நீங்கலாக எல்லா காட்சிகளிலும் பார்த்திபன் இழிவுபடுத்திக்கொண்டே இருக்கிறார். ஒரு குள்ளமான  பெண் நீதிபதி நிதிமன்றத்துக்கு வெளியே இருக்கும் கோவில் மணியை எட்டி அடிக்க முடியாத காட்சி எதற்கு திணிக்கப்பட்டிருக்கிறது? அது நகைச்சுவையா? அவரை  பாக்கியராஜ்  மாமி என அழைப்பதும் அப்படியே முற்றிலும் தேவையில்லாத காட்சி. இன்னொரு பெண் வக்கீல் நீதிமன்ற வாசலிலேயே பிரபல வழக்குரைஞரான பார்த்திபனுடன் செல்ஃபி எடுக்க முண்டியடிக்கிறார். அந்த செல்ஃபியைக்காட்டி பெருமையடித்துக்கொள்கிறார். சொல்ல வந்த கருத்துக்கு முரணாக பெண்களை கொச்சைப்படுத்தும், மலினப்படுத்தும் பலகாட்சிகளை சேர்த்திருப்பது சொந்தச்செலவில் சூனியம் வைத்துக்கொள்ளுவதல்லாமல் வேறென்ன?

இரண்டு தலைமுறையாக சினிமாவில் இருக்கும் குடும்பம், பிண்ணனிப்பாடகியான தங்கை உட்பட மொத்தம் 5 பேர் தமிழ்ச்சினிமாவில் காலூன்றி இருக்கும் குடும்பத்தின் சொந்த தயாரிப்பு என்னும் எந்த உண்மையையும் படத்தின் தரத்துடன் ஒப்பிடமுடியாத அளவில்தான் சூர்யா படத்தை தயாரித்திருக்கிறார்.

ஒரு நூற்றாண்டான  இந்தியச்சினிமாவை திரையரங்குக்கு சென்று வெள்ளித்திரையில் பார்ப்பதென்பது வெறும் திரையனுபவமாக மட்டும் இல்லாமல்   பல உளவியல் விடுதலைகளை அளிக்கும் ஒரு கேளிக்கை நிகழ்வாகவும்  இருந்து கொண்டிருக்கிறது. ஒன்றேபோலான அன்றாடங்கள் அளிக்கும் சோர்விலிருந்து விடுபடவும், சமையலறைக்கும் வீட்டுவேலைகளுக்கும் வெளியெ வந்து  சற்று மூச்சுவிட்டுக்கொள்ளவும், அலங்கரித்துக்கொள்ளவும்,  திரளாக அதே கொண்டாட்ட மனநிலையில் இருக்கும் மனிதர்களை காண்பதுவுமாக  திரைப்படம் பார்க்கும் அனுபவம் பலருக்கும் பல விதங்களில் தேவையாக இருந்துவருகின்றது.   அந்த அனுபவங்களுக்கு இணையாக ஓ.டி.டி வெளியீடு எதையும் செய்யமுடியாதென்றாலும் அவற்றிற்கு மாற்றாகவாவது ஏதேனும் செய்ய முயற்சித்திருக்கலாம்.

ஒரு பாடல் கூட முழுதாக கேட்கமுடியாத ரகம். மனதில் நிற்காத வெண்டைக்காயை விளக்கெண்ணையில் வதக்கியதுபோல் வழவழ வசனங்கள், எந்த முக்கியத்துவுமும் இல்லாத ஏராளமான துணைக்கதாபாத்திரங்கள், தெளிவற்ற திரைக்கதை,  ஜோதி சரணடைந்தாள் பின்னர் சரணடையவில்லை, நானே கைதுசெய்தேன், இல்லை கைதுசெய்தது நானில்லை, உண்மையில் கைதுசெய்த அதிகாரி கொலை, வெளிநாட்டு சுற்றுலாப்பயணி எடுத்த வீடியோ, சிசிடிவிகாட்சி, கருப்பாக அம்மா ஜோ வெள்ளையாக துயரே உருவான  மகள் ஜோ என்று குழப்பியடித்து  கதை வாலறுந்த பட்டமாக மனம் போன போக்கில் போய்க்கொண்டிருக்கிறது

 திரைக்கதையில் உள்ள இத்தனை குழப்பங்கள் போதாமல் இறுதியில் வெண்பா ஏஞ்சலாவது என்னும் இன்னொரு திருப்பமும் இருக்கின்றது., எல்லாபக்கத்திலும் கோட்டைவிட்டிருக்கிறார் சூர்யா அத்தனை நாட்கள் ஜோவை  முடிந்தவரை கிண்டலடித்து விட்டு திடீரென காகிதத்தில் சிறகுகள் வரைந்து  பார்த்திபன் ஏஞ்சலை  பாராட்டுவது அம்புலி மாமா கதை  ரகம்

நேரடியாக ஓ.டி.டி வெளியீடு என்னும் முன்னெடுப்பிற்கும், அருமையான ஒளி இயக்கத்துக்கும் மட்டும் பொன்மகளைப் பாராட்டலாம்.

 கேளிக்கைகளுக்கு வழியில்லாத இரண்டு மாத சமூக விலகலின் போது நேரடியாக வீட்டுக்கே வரும் புதுப்படம் என்னும் எதிர்பார்ப்பில் அமேசான் பிரைமில் பொன்மகள் வெளியானதும் பார்த்துவிட ஆயிரக்கணக்கானோர் நள்ளிரவு வரை விழிந்திருந்தனர். இத்தனை எதிர்பார்ப்புகளுக்கும் சூர்யா நியாயம் செய்யாவிட்டாலும் பரவாயில்லை,   ஒரு சொதப்பலான படத்தை தந்து அநியாயமல்லவா செய்துவிட்டிருக்கிறார்?

’’மின்னுவதெல்லாம் பொன்னல்ல!’’

நசீர்

நசீர் பார்த்த கையோடு இதை எழுதுகிறேன். கூடுதல் பணிச்சுமையிலிருந்தேன் இன்னும் ப்ரியாவின் கதையை சாயின் சுட்டிப்பேச்சை எதையுமே பார்க்கவில்லை. எனினும் நசீரை பார்த்துவிடுங்கள் என்று அதிக அழுத்தம்  மாதவனின் பேச்சில் தெரிந்தது. சொல்முகம் நரேனும் இதைபார்க்கவேண்டிய அவசியத்தை சொல்லிக்கொண்டிருந்தார் அதற்கு காரணமின்றி இருக்காது என்று தோன்றியது. படம் முழுக்க பார்த்தேன். பிரமாதம். இன்று உண்மையில் என்னால் மிக அவசரமாக எழுதி முடிக்கவேண்டிய எதையும் துவங்க முடியாத அளவிற்கு சோர்வாக இருந்தேன். நசீரைப் பார்த்த பின்பு அப்படி எழுதாமல் இருக்கவே முடியாது என்றே தோன்றியது.
இந்து இஸ்லாமிய பிரச்சனைகளைக் குறித்து “கருத்து” சொல்லும் ஏராளமான படங்களை சலிக்க சலிக்கப் பார்த்திருக்கிறேன், வருந்தியிருக்கிறேன், பின்னர் அப்படியே மறந்துமிருக்கிறேன். ஏனெனில் நசீர் சொல்லியிருப்பதைப் போல இத்தனை ஆழமாக, இவ்வளவு வலிக்கும் படியாக இதற்கு முந்தின எந்தப் படமும் இதை சொல்லியிருக்கவேயில்லை.
ஒரு சாமான்யனின்  ஒற்றை நாள் எப்படி துவங்கி எப்படி முடிகின்றது என்பதே கதை.  மிக மிக மெதுவாக நசீரின் காலை பள்ளியில் பாங்கு விளிப்பதிலிருந்து துவங்குகிறது. எல்லா கதாபாத்திரங்களுமே மிக மிக இயல்பாக நடித்திருக்கிறார்கள். நடித்திருக்கிறரகள் என்று சொல்லவே தயக்கமாக இருக்கிறது. அத்தனை இயல்பாக வந்துசெல்கிறார்கள் திரைக்கதையில். அந்தச் சந்துகளில் மார்க்கெட்டின் அடைசலான வழிகளில், துணிக்கடையில் ஹாஸ்டலில் எல்லாம் உண்மையில் காமிரா இருந்ததா என்றே சந்தேகம் வந்துவிட்டது. அந்த வரிசையில் நின்று தண்ணீர் பிடிக்கும் காட்சியெல்லாம் அபாரம். நசீர் என்று டைட்டில் போடும்போதே அந்த எழுத்து வடிவத்தின் வித்தியாசம் படத்தின் பேரிலான கவனத்தை ஏற்படுத்தி விடுகிறது. ஒவ்வொன்றாக பார்த்துப்பார்த்து செய்வதென்பார்களே, அப்படியான படைப்பு இது.
எழுத்தாளர் திலீப்குமாரின் ‘ஒரு குமாஸ்தாவின் கதை’ யை மையமாகக்கொண்டே இத்திரைப்படம் எடுக்கபட்டிருக்கிறது. அவருக்கும் வாழ்த்துக்கள்.
ஒளிப்பதிவாளருக்கு ஒரு கைகுலுக்கல். பிரமாதப்படுத்தியிருக்கிறார். பேகத்தின் கம்மலும் கல்லு மூக்குத்தியும் பளிச்சிடும் அந்தக் காட்சியிலிருந்தே காமிராக் கண்களை சிலாகிக்காமல் படத்தை தொடர முடியவில்லை
நசீரின் பாத்திரப் படைப்பும் மிக நன்று. இளமை இறங்குமுகமாக இருக்கையிலும் அவர்களுக்குள் இருக்கும் அந்நியோன்யமும் காதலும் , பேரன்பும் ரசிக்கும்படியாக இருந்தது. இக்பால் இவர்களின் குழந்தையல்ல என்பதும் வியப்பளித்தது.
எந்த சந்தர்ப்பத்திலும் நம்பிக்கை இழக்காத, சிடுசிடுக்காத, மனைவியின் மீது பிரேமையுடனும், அவளின் மூன்று நாள் பிரிவுக்கே முகத்தைத் தூக்கி வைத்துக்கொள்ளும், கடிதங்கள் எழுதும், பழைய காலத்தின் நினைவுகளில் மூழ்கும் பாடல்களை கவிதைகளை நினைவுகூரும், அம்மிஜானின் நோயைக்குறித்து வருந்தும், மிக நேர்மையான தொழில் சிரத்தையுள்ள,  அன்பான சகிப்புத்தன்மை கொண்ட ஒருவராக சித்தரிக்கபட்டுள்ள பாத்திரம். அத்தனை எளிய கதாபாத்திரம் என்பதாலேயே இறுதிக்காட்சியின் அநீதி  அதிகம் வலிக்கின்றது.
பின்னணியில் இசையின்றி அக்கம்பக்கத்தினர் பேசுவதே பிண்ணனியில் ஒலிப்பது  புதுமையாகவும் கவனிக்கும்படியும் இருப்பது படத்தின் காட்சியுடன் நம் அணுக்கத்தை இன்னும் கூட்டிவிடுகின்றது. நசீர் துணிக்கடைப் பெண் பொம்மையின் மூக்கை செல்லமாக நிமிண்டும் காட்சி அழகு. அவரின் தொழில் மீதான விருப்பத்தையும் அவரின் கலாரசனை மிகுந்த மனதினையும் நாம் உணரும் காட்சி அது.
மனைவியுடன் பேருந்து நிலையத்திற்கு நடந்து வருகையில் கடைவீதியில் இருக்கும் பல வண்ண பிள்ளையார் பொம்மைகளை  அவர்கள் கடக்கிறார்கள். அப்போதே மனம் படபடக்க துவங்கிவிட்டது.  கோவைக்காரியான எனக்கு இதில் பல  முன் நினைவுகள் இருந்ததால், என்னவோ சரியாக இல்லையே என்று  பதைபதைத்தது மனது. .
வெட்டி வெட்டிக் காட்டப்படும் காட்சிகள் நன்றாக இருந்தன. சாமன்யர்களின் வாழ்வின் வண்னங்களை சட் சட்டென்று காட்டிச் செல்லும் காட்சிகள் படம் முழுக்கவே நிறைந்திருந்தன. பொதுக் கழிப்பறை, அங்கிருக்கும் ஒற்றை ரோஜாச் செடி, இட்லி விற்கும் பெண்மணி, வர்ணப் பூச்சை இழந்து பல்லிளிக்கும் வீட்டுச் சுவர்கள் என்று  காட்சிகள் அடுத்தடுத்து வந்து அடித்தட்டு மக்களின் வாழ்வியலையே ஒரு சித்திரம் போல நம் முன்னால் வைத்து விடுகின்றது.
மிக இயல்பான உரையாடல்கள், காட்சிகள் வழியே நசீரின் எந்த திருப்பமும் இல்லாத ஒரு மிகச் சாதாரண வாழ்வு நமக்கு முன் அப்படியே திறந்து வைககப்டுகின்றது.
நசீருக்கு அவர் சார்ந்திருக்கும் இஸ்லாம் என்பது அவர் தொடர்ந்து வாழ்வை நடத்த உதவும் ஒரு மார்க்கம் அவ்வளவே. ஆகம விதிகளின் படி உடல் தூய்மை செய்துகொண்டு பள்ளிக்குப் போய் வேண்டிக்கொள்வதோடு அவரது மத உணர்வின் தீவிரமற்றத்  தன்மையைக் காட்டுகிறார்கள்.கடை முதலாளி “துலுக்கனுங்க” என்று பேசுகையிலும் நசீர் எந்த உணர்வுமின்றி பார்த்துக் கொண்டிருக்கிறார்.
அதிர்ந்துகூட பேசாத, தொழிலில் மிக நேர்மையாக இருக்கின்ற மனவளர்சியில்லா உறவுக் குழந்தையை சொந்த மகனைப் போல பார்த்துக்கொள்கிற, இசை கேட்கிற,  கவிதை எழுதுகின்ற மனைவி மீது பேரன்புடன் இருக்கிற முதலாளி சொல்லும் வேலைகளைத் தட்டாமல் செய்கிற என்று நசீரின் பாத்திரம் வெகு எளிமை.
அந்தத் துணிக்கடை, முதலாளியின் கொங்கு பாஷை நன்று. கோவை உணவகங்களின் விவரணையெல்லாம் இயக்குநரின் வாய்ஸ் ஓவெர் போலிருக்கிறது. முழுக்க சரிதான்):
மிக மெதுவே நகரும் படமாதலாலும் அந்த சந்துக்குள் தன் மனைவிக்கான கடிதத்தை மனதிற்குள் சொல்லியபடி வீட்டுக் கடமைகளை, கடன் கிடைக்காமல் போனதை  எல்லாம்  நினைத்தபடி வந்து கொண்டிருக்கும் நசீருக்கு திடீரென வெறியுடன் கோஷமிட்டபடி சந்தில் நுழையும் வெறிகொண்ட இளைஞர் கூட்டத்தால் என்ன நடந்தது, என்னதான் ஆகியிருக்கும் என அக்காட்சி முடிந்து திரை அமைதியாகும் வரையிலும் மனம் பதைபதைத்துகொண்டே இருந்தது.
அந்தச் சாலையில் மெல்லிய வெளிச்சத்தில் கிடப்பது நசீராக இருக்கக்கூடாது என்று  பதட்டத்துடனேயே பார்த்துக்கொண்டிருந்தேன் அது நசீர்தானென்று தெரிந்திருந்தும்.
நசீரைப்போலவே மதங்களின் வேறுபாடு குறித்து எந்தச் சிந்தனையும் இல்லாமல் தான் பிறந்த மதத்தின் விதிகளை முழுமனதாக பின்பற்றிக்கொண்டு தனக்கேயான கடமைகளில் தவறாமல், தன் எல்லைக்குட்பட்ட மகிழ்வின் சாத்தியங்களை அனுபவித்துக்கொண்டு இருத்கும் பல்லாயிரக்கணக்கான சாமான்யர்களும் இப்படி சம்பந்தமே இல்லாமல் வெறியர்களால் தாக்கப்பட்டு மிச்சமின்றி அழிக்கபட்டிருக்கிறார்கள். கடைசிக் காட்சியின் பதட்டமும் யார் யாரை அடிக்கிறார்கள் என்னும் அச்சமும் நிச்சயம் படம் பார்த்த அனைவருக்கும் வந்திருக்கும்.
ஒரு சாமான்யனின் ஒரு நாளின் கதையைச்சொல்வதிலேயே வாழ்வின் அழகியலை அவலத்தை குரூரத்தை சொல்லமுடிவதென்னும் சவாலில் இயக்குநர் வெற்றிபெற்றிருக்கிறார் வெகு நிச்சயமாக.
பாய்ஸ் ஹாஸ்டல் கேட் வாட்ச்மேனும், நசீரும் பீடியை பகிர்ந்து கொள்ளும் காட்சியும் அழகு. எத்தனையோ அல்லல்கள் இருக்கின்றது நம் அனைவருக்கும் , எனினும் எளியவர்களுக்கு இப்படியான் ஒரு தோள் பகிரல், எடையை தற்காலிகமாக இறக்கிவைத்தல் என்பது எப்படியும் நடந்துவிடுகின்றது. பணத்தேவை, மனைவியின் தற்காலிய ’இன்மை’ இக்பால் அம்மிஜானின் உடல்நிலை, அலைச்சல் என்று கஷ்டங்கள் இருப்பினும் நசீரும் அவருமாக அந்த பீடியை பகிர்ந்துகொள்ளுதல் என்பது துயரையும் பகிர்ந்துகொள்வதுதான்.  கழுத்தை அழுத்தும் ஊழின் விரல்களை அகற்றி  கொஞ்சம் மூச்சு விட்டுக்கொள்ளும் தருணங்கள் அல்லவாஅவை? அக்காட்சி எனக்கு மிக நுண்மையானதாக பட்டது.
நசீரை நடக்கையில், ஸ்கூடர் ஓட்டுகையில், பல்தேய்க்கையில், குளிக்கையில் மனைவியை முத்தமிடுகையில், பணியில், புடவைகளை எடுத்துக்காட்டுகையில் என்று  காமிரா தொடர்ந்து வந்துகொண்டிருக்கும் வகையில் கதை சொல்லபட்டிருப்பதால், நாமும் அவரை நெருக்கமாக பின்தொடர்ந்து கொண்டே இருந்து ஒரு கட்டதில் நாமும் நசீராகிவிட்டிருக்கிறோம். அந்த கடைசிக்காட்சி அதனால்தான் மிகவும் அதிர்ச்சியாக அந்த வன்முறை நம்மீதே நடந்ததுபோன்ற உணர்வை தந்து, அந்த  கொஞ்சமும் எதிர்பாராத சந்துக்காட்சிகள்  நம்மையும் முற்றாக அழித்துவிட்டதுபோல செயலற்றுப்போய் பார்க்கவைத்து விடுகினறது.
அத்தனை நேரம் மிக மெல்ல ஓசைகள் அடக்கிவைக்கப்ட்ட காட்சிகளில் மூழ்கி இருக்கும் நமக்கு அந்த கூச்சலும் ஆரவாரமும் வெறியும் ஏற்படுத்தும் ஒவ்வாமையும் அதிர்ச்சியுமே படத்தின் வெற்றி
ஊருக்கு போயிருக்கும் மனைவி கருப்பைப் புற்றுநோயாளியான அம்மீஜான், மூளை வளர்ச்சியற்ற இக்பால் இவர்களில் யாருக்கு முதலில் தகவல் போய்ச்சேரும் என்று பார்வையாளர்களை கவலைப்பட வைத்து விட்டிருக்கும் படம் இது. கோவையின் மிகப் பரிச்சயமான தெருக்களில் காட்சிகள் இருப்பதால் திரைக்கதையுடன் இன்னும் நான் அணுக்கமாகி விட்டிருந்தேன்
அலங்கோலமான அந்தச் சாலையில் யாருமற்று கிடக்கும் நசீரின் உடல், அன்று மதியம் நசீர் சொல்லிகொண்டிருந்த வாழ்வென்பதே தனிமைதான் என்னும் கவிதை வரிகளை நினைவுப்படுத்தியது.
மனைவிக்கான மானசீக கடிதமொன்றை முடிக்குமுன்பே முடிந்துவிடுகின்றது நசீரின் துயர்களும் கனவுகளும் கடமைகளும் எல்லாமும்.”Shame on us” என்று வெட்கித் தலைகுனிய வைக்கும் வெகுசில படங்களில் நசீரும் ஒன்று.
இப்படி 24 மணி நேரம் மட்டுமே காணக்கிடைக்கும் என்னும் அழுத்தமும் நல்லதே.  பிறகு பார்த்துக்கொள்லலாம் என்று ஒத்திப்போடாமல் தரமான படைப்புக்களை அப்போதே பார்க்க ஒரு நல்வாய்ப்பல்லவா இந்த கட்டாயம்.
இயக்குநர் அருண் மற்றும் எழுத்தாளர் திலீப் குமார் இருவருக்கும் படப்பிடிப்புக்குழுவினருக்கும் மனமார்ந்த வாழ்த்துக்களும் பாரட்டுக்களும். இவர்கள் எட்டப்போகும் உயரங்களை இப்போதே யூகிக்க முடிகின்றது.
நீங்கள் சொல்லியிருக்கா விட்டால் நான் இதை நிச்சயம் தவற விட்டிருப்பேன்.
நன்றி தம்பி!

வானம் கொட்டட்டும்!

 

வானம் கொட்டட்டும்

பிப்ரவரி 7 , 2020ல் தேதி உலகெங்கிலும் ரிலீஸானது வானம் கொட்டட்டும்.. இயக்குனர் காற்றுவெளியிடையில் மணிரத்தினத்திடம் உதவியாளராயிருந்த படைவீரன் தனா. திரைக்கதையை தனாவும் மணிரத்தினமும் இணைந்து உருவாக்கியிருக்கின்றனர். மணிரத்னத்தின் மெட்ரஸ் டாக்கீஸுடன் லைக்கா  அல்லிராஜா சுபாஷ்கரனும் இணைந்து தயாரித்துள்ளனர்

வெகு எளிமையான, தமிழ்த்திரையுலகிற்கு மிகப்பரிச்சயமான  வெட்டுப்பழி குத்துப்பழி கதைதான். சட்டென வந்த ஒரு கோபத்தில் அண்ணனை வெட்டியவர்களை, பிள்ளைகளின் முன்னிலையிலேயே வெட்டிச்சாய்த்துவிடுகிறார் சரத். அதுவும். இரட்டைப்பிள்ளைகளின் முன்னால். கொலைக்குற்றத்துக்காக சரத் சிறைக்குச் சென்ற பின்னர் மகனையும் மகளையும் அழைத்துக்கொண்டு சென்னைக்கு வந்து படாதபாடுபட்டு குழந்தைகளை வளர்க்கிறார் ராதிகா. எதிர்த்தரப்பிலோ, இறந்தவரின் இரட்டைப்பிள்ளைகளில், ஒருவன் கோபமாகவும் இன்னொருவன் பழியுணர்வுடனும் வளர்கிறார்கள்.

சிறைக்கு சென்ற சரத் திரும்ப வருகையில் மகன் மகளுக்கும் அவருக்குமிடையேயான இடைவெளி அதிகமாவது, அவரின் இருப்பு குழந்தைகளுக்கு சங்கடமாக இருப்பது,  வாழ்வின் இயங்கியலில் வழக்கமாக  ஏற்படும் மனஸ்தாபங்கள், கோபதாபங்கள், சண்டைகள் என முட்டிமோதி, அந்த மோதலிலேயெ ஒருவரை ஒருவர் புரிந்து, அறிந்து இணங்கி, மீண்டும் அவர்கள் ஒரு குடும்பமாவது, அவரைக்கொல்ல காத்திருக்கும் இரட்டையரில் ஒரு நந்தா, சகோதரன் அவரைக்கொல்லாமல் தடுக்க நினைக்கும் இன்னொரு நந்தா, தங்கையான ஐஸ்வர்யா ராஜேஷின் காதல், அவளை விரும்பும் உறவினரான திரையில் கொஞ்சநேரமே வரும் (அந்த கொஞ்சநேரத்திலும் பைக்கிலேயே வரும்) சந்தனு பாக்கியராஜ், ஐஸ்வர்யாவை விரும்பும் இன்னோரு காதலன், (வேலையில்லா பட்டதாரி இளம்வில்லன்) அப்பாவைப்போலவே கோபக்கார விக்ரம் பிரபு, அவரின் வாழைத்தார் மண்டி வியாபாரம்  அதன் பிரச்சனைகள், இறுதி சண்டைக்காட்சி பின்னர் சுபம்.

இது விக்ரம்பிரபுவுக்கு நல்ல பாத்திரம் கொடுத்தால் அருமையாக நடிப்பார் என்று சொல்லும் படமும் கூட

ஆக்ரோஷமாக அடிதடியில் இறங்குகையிலும், அப்பாவுடன் முறைத்துக்கொள்ளும்போதும்,  பல காட்சிகளில் உடல்மொழியிலும் கூட அக்னிநட்சத்திரம் கார்த்திக்கை நினைவூட்டுகிறார். ஆனால் படம் முழுவதுமே முகத்தில் கோபம் நிறைந்து சீரியஸாக விறைப்பாகவே இருக்கிறார். காதலியுடன் நெருக்கமாக இருக்கும் அந்த ஒற்றைக்காட்சியிலும் கூட அப்படித்தான். கொஞ்சம் சிரிங்க பாஸ்  இனிவரும் படங்களில்.

மடோனா செபாஸ்டியன் மட்டுமே எந்த வேலையும் இன்றி சம்பந்தமில்லாமல் அப்பா பிசினஸ், இன்கம் டேக்ஸ்,  கடன்,  குடி என்று குழப்பியடித்து எப்படியோ விக்ரம்பிரபு காதலித்ததும்  (அதாவது அப்பா இறந்த அன்று இரவு விக்ரம் பிரபு மடோனாவை மெல்ல அணைத்துக்கொள்வதை காதலென்று நாம் எடுத்துக்கொண்டால்)  அவர் பாத்திரத்துக்கு முற்றும் போடப்படுகின்றது. காதலி இல்லாமலும் விக்ரம் பிரபுவின் பாத்திரம் நன்றாக பேசப்பட்டிருக்கும்

ஐஸ்வர்யா ராஜேஷ் வசீகரம். இயல்பாக பொருந்தி நடிக்கிறார். சமீபத்திய படங்களை பார்க்கையில் இவர்  தமிழ்சினிமாக்களில் நிரந்தர தங்கச்சியாகிவிடும் அபாயம் தெரிகின்றது. பாலாஜி சக்திவேல் பிரமாதம். நல்ல குணசித்திர நடிகரராக அசத்தியிருக்கிறார்.

ராதிகா, சரத்குமார்  மிகப்பிரமாதமான ஜோடி. அவர்கள் சந்திக்கும் உணர்வுமயமான காட்சிகளிலெல்லாம் பிண்ணனியில் வரும் ’’ கண்ணு, தங்கம் ராசாத்தி” பாடல்  மனதைஉருக்குகின்றது. அது ஒன்றுதான் படத்தில் உருப்படியான பாடலும் கூட

சித்ஸ்ரீராம் அறிமுக இசைஇயக்குனர், ஆனால் பாடல்களில் மட்டுமல்ல பிண்ணனி இசையிலும் ஏமாற்றமளிக்கிறார்.

எளிய பழைய கதை ஆனால் தனாவின் இயக்கத்தில் பல காட்சிகள் குறிப்பிட்டுசொல்லும்படியாக இருக்கின்றது. திரையரங்கில் தன்னை கண்டிக்கும் சரத்தை  ஐஸ்வர்யா ”அப்பா”வென முதன்முதலில் அழைப்பது, அப்பாவின் சட்டையில் மகன் பணம் வைப்பது, மழைநாளில் குடையுடன் அப்பாவைத்தேடி அம்மா கிளம்புகையில் தடுத்துவிட்டு மகன் போவது வாழைத்தாரின் கைப்பகுதியை சீவி அதில் கணக்கை பேனாவால் எழுதுவது, பெரியப்பா வாங்கி வந்த முறுக்கு பாக்கட்டை அப்போதே ஐஸ்வர்யா பல்லில்கடித்து திறப்பது,  கொலைக்குப்பிறகு ரத்தக்கறைச் சட்டையுடன் இருக்கும் சரத் ராதிகாவிடம் கோவிலில் பேசிக்கொண்டிருக்கையில் பிண்ணனியில் தெரியும் நேர்த்திக்கடன் மரத்தொட்டில், கம்பிக்கு வெளியில் மனைவியை பார்க்கும் சரத்தின் உணர்வுபூர்வமான் நடிப்பு, வானம் கொட்டிக்கொண்டிருக்கும் ஒரு மாலையில் வாழைக்காய் பாரமேற்றிய லாரியின் மேல் அமர்ந்து சரத் வரும் காட்சி, ஒரே பாடலில் அண்ணாமலையைபோல் பணக்காரராகாமல் கஷ்டப்பட்டு  படிப்படியாக விக்ரம் பிரபு  வாழைமண்டி வியாபாரத்தில் முன்னுக்கு வருவது என்று  தனா பல  எளிய, இயல்பான அழகிய இடங்களில் நம்மை கவனிக்க வைக்கிறார்.

விக்ரம் பிரபு வெகுநாட்களுக்கு பிறகு மிக நன்றாக பாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கும் படம் இது.

அபியும் நானும்புகழ் பிரீதா ஜயராமன் ஒளி இயக்குனர் ஒளிப்பதிவு  மணிரத்தினம் படத்திற்கேயானது. மலையடிவார கிராமத்தில் துவங்கிய கதைக்களம்  சென்னையிலும்  தொடர்கின்றது உயிரோட்டத்துடன்

ராதிகா சென்னையில் தங்கியிருக்கும், குடியிருப்பு வளாகம், சந்துகள், எதிரில் ஓடிவந்து மோதும் குழந்தைகள், குதூகலித்துக்கொண்டு கன்றுக்குட்டிபோல் துள்ளித்திரியும், விளையாட்டாய் சிகரட் கூட பிடித்துப் பார்த்திருக்கும் ஐஸ்வர்யா, மர்மமான குடும்பப்பிண்ணனி கொண்ட கதாநாயகி, முறுக்கிகொண்டே விரைப்பாகத் திரியும் நாயகன் என மணிரத்தினம்  தயாரிக்கும் படத்தின்  எல்லா அம்சங்களும்  இதிலும் இருக்கின்றது காதலர்களின் நெருக்கமான காட்சிகள் நீங்கலாக.

சரத் கம்பீரம் குறையாமல் அப்படியே இருக்கிறார். ராதிகாவும் அழகு, அவருக்கு வயதானாலும் அவரின் கொஞ்சும் குரல் என்றென்றும் இளமையுடன் அப்படியே இருக்கிறது. இவர்கள் இருவரையும் இன்னும் கொஞ்சம் மையப்படுத்தி திரைக்கதையை கொண்டுபோயிருந்தால் திரைப்படம் இன்னும் நல்ல வரவேற்பை பெற்றிருக்கும், கதாபாத்திரங்களின் எண்ணிக்கையையும் கொஞ்சம் குறைத்திருக்கலாம், தெலுங்கு பண்ணையார் அவரது குடும்பத்தினர், அவரது மகனான இன்னொரு காதலன் என்று, ஒரே கூட்டமாக இருக்கின்றது திரையில்.

சரத்தின் அண்ணன் உழுதவயலில் வெட்டுப்பட்டு விழும் காட்சியுடன் துவங்கும் படத்தின் விறு விறுப்பு போகப்போக குறைந்து மிக மெதுவே நகருவதும் குறைதான்.

மடோனா ஏன் கதைக்குள் வந்தார்? எப்படி, ஏன் அவர் கதாபாத்திரம் முடிகின்றது, ஏன் எதற்கு அவரை விக்ரம் பிரபு காதலிக்கவேண்டும்  என்ற கேள்விகளெல்லாம் அப்படி அப்படியே கிடக்கின்றது படம் முடிந்த பின்னரும்

ஒரு நந்தாவே பழிவாங்க போதுமென்றிருக்கையில் எதுக்கு இன்னொரு நந்தா?

்இப்படி ஒருசில குறைபாடுகள் இருப்பினும், பகையும் பழிவாங்கலுமான அதே பழைய கதைதான் என்றாலும் சொல்லப்பட்டிருக்கும் விதத்திலும் கதாபாத்திரத்தேர்விலும், அவர்களின் மிகபொருத்தமான நடிப்பிலும், நேர்த்தியான திரைமொழியிலும், தனாவின் இயக்கத்திலும் வானம்  திருப்தியாகவே கொட்டியிருக்கின்றது. வெகுநாட்களுக்கு பின்னர் வந்திருக்கும் ஒரு குடும்பக்கதை. குடும்பத்துடன் சென்று பார்க்கலாமென்னும் படமும் கூட

வாழ்த்துக்கள் தனா!

பிகில்

AGS எண்டர்டயின்மெண்ட் கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் அட்லீ விஜய் கூட்டணியில் (மூன்றாவதாக), இந்த மாதம், அக்டோபர் 2019,  தீபாவளி ரிலீஸ் திரைப்படமாக உலகெங்கிலும் வெளியானது ‘’பிகில்’’. இசை ரஹ்மான், இசைக் கூட்டணியும் மூன்றாவது முறை, நாயகி நயன்தாரா.

இந்நாள் ரவுடியும் முன்னாள் கால்பந்தாட்ட வீரருமான மைக்கேல் ராயப்பன், அவரின் காதலி ஏஞ்சல், நண்பரும் பெண்களின் கால்பந்தட்ட பயிற்சியளருமான கதிர், மைக்கேலின் எதிரி டேனியல் என்று கதை துவங்கி, கதிருக்கு டேனியலினால்  முதுகெலும்பு முறிந்ததால் 7 வருடத்திற்கு முந்தைய மைக்கேலின் ஃப்ளேஷ் பேக்’கிற்கு நகர்கின்றது

ரவுடி ராயப்பனின் மகன் மைக்கேலும் நண்பன் கதிரும் கால்பந்தாட்ட வீரர்கள். மகன் தன்னைபோலல்லாமல் நல்ல விளையாட்டு வீரராக வர விரும்பும் அப்பா ராயப்பன் ரவுடி அலெக்ஸினால் மகன் கண்முன்னாலேயே கொல்லப்படுகிறார். பழிக்கு பழி வாங்க கால்பந்தட்ட கனவை மறந்து ரவுடியாகி, பின்னர் மீண்டும் கால்பந்தாட்டத் துறைக்கே பயிற்சியாளராகிறார் பிகில் என்றழைக்கப்படும் மைக்கேல்

நட்புக்காக மைக்கேல் பயிற்சியாளராவது, ஷர்மா அவரை பழி வாங்குவது, குற்றப்பிண்ணனி உள்ள விஜயை ஆட்சேபித்து, வெறுத்து பயிற்சிக்கு உடன்பட  மறுக்கும் விளையாட்டு வீராங்கனைகள், கொலை முயற்சி அடிதடி, கடத்தல், கொக்கைன், அமில வீச்சு , கால்பந்தாட்ட  விளையாட்டில் மைக்கேலின் அணி வெற்றி பெறாமல் இருக்க நடக்கும் உள்ளடி வேலைகள் என்று ஏராளம் பிரச்சனைகளுடனும் எளிதாக  யூகிக்க முடியும் அரதப்பழசான திருப்பங்களுடனும் படம் நகர்கின்றது.

துவக்க காட்சியிலேயே விஜய் ’’தீபாவளி வாழ்த்துக்கள் நண்பா’’ என்று சொல்ல அரங்கம் ரசிகர்களின் கூச்சலில் அதிர்கின்றது.

ஏறத்தாழ 3 மணிநேர நீளமுள்ள இத்திரைப்படத்தில் எந்த கணக்குமின்றி திரைக்கதை துண்டு துண்டாக இணைக்கப்பட்டிருக்கிறது. ஏராளமான முந்தைய தமிழ் மற்றும் பிறமொழிப் படங்களிலிருந்து காட்சிகளை அப்பட்டமாக நினைவூட்டும், நிறைய லாஜிக் ஓட்டைகளும் இருக்கும் திரைக்கதை. பாதிக்குமேல் பாட்ஷாவின் ரீமேக் என்றே சொல்லிவிடலாம் அதில் முன்பு ரவுடியாக இருந்து ஆட்டோ ஒட்டுவார் இதில் பின்னர் ரவுடி, ஆட்டாவுக்கு பதில் கால்பந்தாட்டம் அவ்வளவுதான்.

ஏஞ்சலாக .நயன் தாராவுக்கு அழகாய் திரையில் தோன்றுவதைத்தவிர வேறு வேலையே இல்லை. ’’நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ, போ, போ’’ என்று பாடாத குறையாக விஜயுடன் கூடவே வந்து கொண்டிருக்கிறார்

ஜாக்கி ஷெராஃப் ஷர்மாவாக சோபிக்கவேயில்லை.  தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத அம்சங்களில் ஒன்றாகிவிட்டிருக்கும் யோகிபாபுவும் இருக்கிறார்.

90 களில் இந்தியாவின் புகழ்பெற கால்பந்தாட்ட வீரராக இருந்த  அர்ஜுனா விருது பெற்ற  கேரளாவைச் சேர்ந்த திரு  I M விஜயனை (Inivalappil Mani Vijayan), பிகிலில் வில்லனாக நடிக்க வைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மிக ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்து உலகப்புகழ்பெற்ற விளையாட்டு வீரராக இருக்கும் ஒருவரை இப்படியா எதிர்மறையாக திரையில் சித்தரிப்பது? அதுவும் அவர் ஈடுபட்டிருந்த அதே விளையாட்டுத்துறையை சார்ந்த திரைக்கதையில்?

30 மணி நேரத்தில் சொல்ல வேண்டிய விஷயங்களை 3 மணிநேரத்தில் கொள்ளாதவன் வாயில் கொழுக்கட்டையை திணிப்பதென்பார்களே அப்படித் திணிக்கிறார் அட்லீ. வேலுநாயக்கரை, பாட்ஷாவை, அமீர்கானை ஏன் சிவகார்த்திகேயனைக்கூட நினைவுக்கு கொண்டு வரும் காட்சிகள் ஏராளம்..  பல  காட்சிகளில் வசனங்களும்  பெண்கள் அணியின் பயிற்சியாளருக்கானதாக இல்லாமல் விஜய் என்னும் அரசியல் உத்தேசம் உள்ள நடிகருக்கானவையாகவே இருப்பதும் ஆதங்கமாக இருக்கிறது.. விஜயை தமிழகத்தின் தன்னிகரில்லா தனிப்பெரும்தலைவனாக காட்ட நினைத்திருக்கிறார் அட்லீ.

விஜய் ரசிகர்களை திருப்திப்படுத்த  அறிமுகப்பாடல், சண்டை, கால்பந்து  விளையாட்டு என அடுக்கிக்கொண்டே போகும் காட்சிகளால் முன்பாதி இழுவை , அறுவை மற்றும் ஓவர் டோஸ். பின்பாதியில் கால்பந்தட்ட போட்டிகளின் விறுவிறுப்பு மட்டுமே கதையை தாங்கிப்பிடித்து கரைசேர்க்கின்றது.

கடந்த ஜூன் மாதம் படத்தின் தலைப்பு அறிவிக்கப்பட்டு மெதுமெதுவே இரட்டை வேடமென்பதையும் நள்ளிரவில் விஜயின் பிகிலுக்கான தோற்றமென்னவென்பதையும் அறித்தபோது எழுந்த ஆர்வத்தில் நூற்றில் ஒரு பங்கைக்கூட  திரைப்படம் முழுதாய் பார்க்கும் போது ஏற்படுத்தவில்லை

படத்தின் ட்ரெய்லர் கொடுத்த எதிர்பார்ப்பு முற்றிலும் அணைந்தேவிட்டது படம் பார்க்கையில். முதல்பாதியிலியே. லாஜிக் மீறலின் எல்லைகளை தாண்டிய ஹீரோயிசம் செய்கிறார் விஜய். காவல் நிலையத்தில் குண்டு வைப்பது முதலமைச்சர் வரும் வழியில் தகராறு என . இவற்றை எல்லாம் ரசிகர்கள் கொண்டாடி கூச்சலிடுவதை பார்க்கையில் திகிலாயிருக்கிறது..

இத்திரைப்படம் காட்சி ஊடகம் என்பதையே படக்குழுவினர் மறந்தது  போல பல விஷயங்கள் காட்டப்படுவதற்குப்பதில்  சொல்லப்படுவது  எரிச்சலைத்தருகின்றது. பாடல்களில் ’சிங்கப்பெண்ணே’   பரவாயில்லை. ரஹ்மானும் அட்லியும் சிறப்புத்தோற்றத்தில் வருகிறார்கள்

விஜய், இந்தப்படத்திற்கும் இத்தனை வசூலை அள்ளிக்கொடுத்திருக்கும், திரையில் விஜயின் தோற்றத்திற்கே வெறிக்கூச்சலிடும் ரசிகர்களுக்கு இன்னும் கவனமாக கதையை தேர்வு செய்திருக்கலாம். பண்டிகைக்காலங்களில் புதிய திரைப்படங்களை பார்ப்பதென்பது முக்கால் நூற்றாண்டாக தமிழகத்தில் ஒரு மரபாகிவிட்டிருக்கையில் தீபாவளீ ரிலீஸ் படமான இதில் 63 படங்களில் நடித்திருக்கும் விஜய் இன்னும் அதிக கவனம் செலுத்தியிருக்க வேண்டும்

நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்திருக்கும் விவேக், ரோஹினி, தேவதர்ஷிணி, போன்ற தேர்ந்த முக்கிய நடிக, நடிகையர்களும் கூட இதில் சில காட்சிகளில் மட்டும் வந்து  வீணடிக்கபட்டிருக்கிறார்கள். படத்தின்  ஒரே ஆறுதல் விஜய் மட்டுமே! முன்னை விட இள்மையாக முன்னை விட துடிப்புடன் இருக்கிறார்.

அப்பா கெட்டப்பில் உப்பும் மிளகுமான தலைமுடியில் வந்தாலும் இளமையையும் மிடுக்கையும் ஸ்டைலையும் மறைக்க முடியவில்லை ஒப்பனையாலும். ஆச்சர்யம் ! நடனம்  மற்றும் சண்டைக்காட்சிகளிலும் அதே வேகமும் ஸ்டைலும்

G.K விஷ்னுவின் ஒளிப்பதிவுக்கு பாராட்டுக்களை சொல்லியே ஆகவேண்டும் . அனல் அரசுவும் சண்டைக்காட்சிகளை திருப்தியாகவே  அமைத்திருக்கிறார். படத்தொகுப்பு திணறியிருக்கிறது .

முதன்முதலாக எகிப்தில் திரையிடப்படும் தமிழ்த்திரைப்படமாகிறது பிகில். இரண்டே நாட்களில் ஒரு கோடியே 85 லட்சங்களை தாண்டி  சாதனை வசூல் படைத்து ஒட்டுமொத்த இந்திய திரைத்துறையினரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது

விஜய்  படம் எப்படி இருப்பினும் திரையில் அவரை பார்த்தாலே போதும் என  படத்தை கொண்டாடி வசுலை அள்ளிகுவிக்கும் ரசிகப்பட்டாளங்களுக்காகவாவது இன்னும் கவனமாக  நன்றாக பிகிலை ஊதியிருக்கலாம்

 

« Older posts Newer posts »

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑