லோகமாதேவியின் பதிவுகள்

Author: logamadevi (Page 19 of 24)

பேரன்பின் அபத்தங்களும் அழகும்!

peranbu-new-300x168
தேனப்பன் அவர்களின் தயாரிப்பில் ராம் எழுதி இயக்கி மலையாளத்திலும் தமிழிலும் தயாரிக்கப்பட்ட பேரன்பு திரைப்படத்தில் மம்மூட்டி, அஞ்சலி, சாதனா மற்றும் அஞ்சலி அமீர் ஆகியோர் முக்கிய பாத்திரமேற்றிருக்கிறார்கள். இசை யுவன் ஷங்கர் ராஜா. தேனி ஈஷ்வர் ஒளி இயக்குனர்
ரோட்டர்டாமிலும் ஷாங்காயிலும் நடைபெற்ற பன்னாட்டு திரைவிழாக்களில் முன்திரையிடப்பட்டு பெரும் வரவேற்பையும் பெற்றபின்னர் பிப்ரவரி 1, 2019 அன்று திரையிடப்பட்ட பேரன்பு, நல்ல படம் , மிக மோசம், கலைப்படம், தேவையில்லாத பேசுபொருள் கொண்டது, மிக அழகிய பேசுபொருளைக்கொண்டது, over sentiment movie, பெரும்மன அழுத்தம் தரும் ஒன்று, வாழ்வின் இயங்கியலில் நடைபெற சாத்தியமே அற்ற ஒன்றை புனைந்து சொல்லுவது என பல்வேறு வகையிலான கலவையான விமர்சனங்களை பெற்றிருக்கிறது,

மனைவியைப்பிரிந்து , மூளை வளர்ச்சியற்ற பதின்மவயது மகளுடன் வாழும் அமுதவன் என்னும் தந்தை, மகளின் எல்லாத்தேவைகளையுமே பேரன்புடன் நிறைவேற்ற முயற்சிப்பதை சொல்லும் இக்கதையை இயற்கை என்னும் தலைப்பில் பல அத்தியாயங்களாக பிரித்து பிரித்து சொல்லியிருக்கிறார்கள்.

குளிர்பிரதேசமொன்றின் ஏரியில் மகளுடன் பரிசலில் பயணிக்கும் தந்தையுடன் துவங்குகிறது இப்படம்
பச்சை போர்த்திய மலைகளும், செறிந்த பைன் மரக்கூட்டங்களுமான பிண்னனியில் அந்த சிற்றாற்றின் கரையில் அமைந்திருக்கும் மரவீடு மிக அழகு .
இது வழக்கமான திரைப்படம் இல்லை என்பதை பாப்பா மூளை வளர்ச்சியற்றவர்களுக்கே உரிய அசாதாரண முகமும் உடலுமாய் தோன்றுகையிலேயே உணரத்துவங்குகிறோம். அவளை பெண் துணையின்றி மம்மூட்டி கவனிக்கப் படும் சிரமங்களை பெற்றோர்களாகிய பார்வையாளார்கள் பதற்றத்துடனேதான் கவனிக்கமுடியும் அதுவும் ‘பாப்பா’’ பருவமடைந்தபின்னர் மனப்பதற்றம் கூடுகின்றது

பாப்பா பெரும்பாலும் தலையசைப்பிலும் சின்ன சின்ன சப்தங்களிலும், அழுகை மற்றும் அலறல் வழியேவும்தான் பிறரை தொடர்பு கொள்கிறாள். எனவே பலரை தன் அத்தைய இருப்பின் மூலம் சங்கடப்படுத்துகிறாள். பாட்டி வடிவுக்கரசிக்கு வசனங்களே தேவையில்லை உடல்மொழியிலேயே வெறுப்பை அப்பட்டமாக காட்டக்கூடிய நடிகை அவர். பாட்டியான அவரும் தம்பி மனைவியும் அக்கம்பக்கத்தினரும் பாப்பாவின் இருப்பை அத்தனை பகிரங்கமாக தீவிரமாக ஆட்சேபிப்பது நம்பும்படியாக இல்லை. மானுடம் இன்னும் அத்தனை கீழ்மையடைந்திருக்கவில்லை என்று ஆழ்மனம் நம்புகிறதோ என்னவோ! மம்மூட்டி அந்த மிகத்தனிமையிலான வீட்டுக்கு மகளுடன் வருவதை நியாயப்படுத்த அந்தனை தீவிர ஆட்சேபணை இருப்பதாக காட்டியிருக்கலாம்
ஆனால் அத்தனை கஷ்டபட்டு வந்த அவ்வீட்டில் வேலைகளுக்கும் பாப்பாவுக்குமான துணைக்குமாக பெண்களே கிடைப்பதில்லை என்பதுவும், ஒரே நாள் வேலைக்கு வந்த பெண் மம்முட்டி அழகனாக இருப்பதால் புருஷன் சந்தேகப்படுவதால் இனி வரலைன்னு சொல்வதும் சம்பளத்தைக் கூட கைகளில் வாங்காமல் தரையில் வைக்கச்சொல்லி எடுத்துக்கொள்வதும் மிகைக்கற்பனை . நன்றாகவும் இல்லை, நம்பும்படியும் இல்லை

அஞ்சலியின் பாத்திரமும் அப்படியே ஒரு சிறப்புக்குழந்தையை வீட்டில் வைத்துக்கொண்டிருப்பவர் அப்படி ஊர் பேர் தெரியாத பெண்னை உதவிக்கு வைத்துக்கொள்வதே நம்பமுடியாத போது சில நாட்களிலேயே அவரை திருமணமும் செய்துகொள்வதென்பது கொஞ்சமும் நம்பமுடியாதவை. படத்தின் பேசுபொருள் பாப்பாவிற்கான துணையா அன்றி மம்மூட்டிக்கான துணையா என கேள்வி வருகின்றது
பின்னர் அஞ்சலியை வெளியேற்றுவதற்கான காரணமும் வலுவற்றது. அக்காட்சிகள் மிகுந்த நாடகத்தன்மையுடன் இருந்தன. அந்த வீட்டை விலைக்கு கேட்கும் கும்பலும் அவர்களின் அச்சுறுத்தலும் கூட வலிந்து திணிக்கப்பட்டது என்பதை உணரமுடிகின்றது
மம்முட்டி அந்த வீட்டுக்கு வர காரணமாக பிறரின் வெறுப்பை சொன்னதுபோலவே அவர் அந்த மரவீட்டை விட்டுவிட்டு போகவும் வலுவற்ற காரணங்களே சொல்லபடுகின்றது.

மூன்றாந்தர விடுதியில் மகளுடன் அவர் தங்குவதும் அங்கு ஆணும் பெண்ணும் நெருக்கமாய் இருப்பதை பாப்பா பார்த்ததால் அந்த இரவு நேரத்தில் விடுதியை காலிசெய்துவிட்டு மகளுடன் அவர் தெருவில் அமர்ந்திருப்பதுமெல்லாம் கொஞ்சமும் ஏற்றுக்கொள்ளவே முடியாத அபத்தங்கள். அதற்கு பதிலாக அவர் கதவடைத்துக்கொண்டு பத்திரமாக மகளுடன் அங்கிருந்து விட்டு காலை வெளியேறியிருக்கலாமே!
பின்னர் வருபவை அவற்றையெல்லாம் விட அபத்தங்கள். மகளின் பாலுறவுத்தேவையை அப்பா உணர்துகொள்வதும், அதை தீர்க்க ஒரு துணைக்காக முயற்சிப்பதெல்லாமே அபத்தங்களின் உச்சம். மகளுக்கு திருமணம் செய்துவைப்பதும், ஒரு ஆண் பாலியல் தொழிலாளியை தேடுவதும் ஒன்றென அவர் பேசுவதும் அப்படியே! வாழ்வின் எல்லா சிக்கலகளூக்கும் தீர்வு காண்பதென்பதே ஒருவகையில் அபத்தம் தான்.

பாப்பாவை விடுதியில் அப்படி அடிப்பதற்கான காரணமும், அதன்பிறகு அவளை மம்முட்டி பார்க்கவிடாமலிருப்பதும், தொலைக்காட்சியில் தெரியும் ஆணை பாப்பா முத்தமிடுவதுமெல்லாமே மிகு கற்பனைகள் .

சில காட்சிகள் மிக நன்றாக இருக்கின்றன. அஞ்சலையின் தாய்மாமா கட்டிலிலும் மம்மூட்டி தரையிலும் படுத்துக்கொண்டிருக்கையில் அவர்களிருவரும் பேசிக்கொள்ளும் காட்சி அழகாக படமாக்கப்பட்டிருக்கின்றது.. மம்முடியின் பின்னே எரியும் தழலின் நிழல் தாய்மாமவின் முகத்தில் தெரிவதும் அவரின் உணர்ச்சிகளை துல்லியமாக கட்டும் முகமும் அப்போது மம்முட்டி மிக இயல்பாக பேசும் வசனங்களும் அருமை.

அஞ்சலி மிக எளிய உடைகளில், குறைந்த ஒப்பனையில் அழகு மிளிர வருகிறார். கண்களும் உதடுகளும் பேசுகின்றன அவருக்கு. நள்ளிரவில் தேனீர் தயாரித்துக்கொடுக்கும் அந்த காட்சியில் தளர்ந்திருக்கும் மம்மூட்டியை அணைத்துக்கொண்டு ஆற்றுப்படுத்தவேண்டும் என்று அரங்கிலிருக்கும் அனைவருமே விரும்பியிருப்போம். அவரும் அதையே செய்கிறார்

பாப்பா பாப்பா என்று பதறுவதும் , தாயன்புடன் ஆடிப்பாடி கதை சொல்லி கவனித்துக்கொள்வதும், சேனிடரி நேப்கின்களைக்கூட மாற்ற உதவுதுமாக மம்முட்டி சிறப்பு குழந்தையொன்றின் அப்பாவாகவே மாறிப்போகிறார். அவரின் வயதை கொஞ்சமும் காட்டாத உடற்கட்டு உண்மையிலேயெ வியப்படைய வைக்கிறது. very much fit and smart for this age. பனிபொழியும் கதைக்களம், மூளை வளர்சியில்லாத பெண், மரவீடு என்று இப்படம் மூன்றாம் பிறையை அதிகம் நினவுக்கு கொண்டு வந்துகொண்டே இருக்கின்றது.

மகள் தங்கியிருக்கும் விடுதிக்கு வெளியே இரவு காரில் காத்திருந்து அங்கிருந்து கொண்டே மகளின் கதறலை, வீறிடலை கேட்டுக்கொண்டு கலங்குமிடத்திலும் மம்மூட்டி அசத்துக்கிறார்.

இறுதியில் வரும் அந்த மாற்றுப்பாலினத்தவரான மீரா பாத்திரமும் மிக நன்று. மிக அருமையான நடிப்பு அவருடையது. ஆனால் அப்பாத்திரம் இக்கதையின் மையப்பேசுபொருளின் தீர்வாக காட்டப்படுவதே கதையின் இறுதி அபத்தம்.

திரைப்படத் தொகுப்பு மிகச்சரியாகவே இருப்பினும் கதையில் நிறைய குழப்பங்கள். மம்முட்டி மகளை கவனித்துக்கொள்ள துணை தேடுகிறார். ஆனால அவர் அஞ்சலியை மணம் புரிந்துகொள்கிறார். அஞ்சலிக்குப்பிறது வீட்டையும் விட்டுவிட்டு நகரத்துக்கு வந்து மகளுடன் சீரழிகிறார் பாலுணர்வுதூண்டல் உட்படஅவளின் எல்லாத்தேவைகளையும் தீர்க்க மெனக்கெடுகிறார். மகளை வெறுக்கும் மனிதர்களிடமிருந்து விலகி நீரில் இருவருமாக மூழ்கி உயிரைவிடவும் எடுக்கவும் துணிகிறார். பின்னர் ஒரு மாற்றுப்பாலினத்தவரை அவர் திருமணம் செய்துகொள்வதுடன் படம் நிறைவடைகின்றது.
மூளை வளர்ச்சியற்ற மகளின் பாலுணர்வுத்தேவைக்கு அப்பாவின் மாற்றுப்பாலினத்தவருடனான மறு திருமணம் எப்படி தீர்வாகும்?
மிக அழகாகத்துவங்கி , சுமாராக கொண்டுசெல்லப்பட்டு மிக மோசமாக முடிந்த படம் இது

சாதனாவின் நடிப்பு பிரமாதம் அப்படி தொடர்ந்து உதடுகளை கோணிக்கொண்டு நாக்கை வளைத்து துருத்தியபடி, கை விரல்களயும் மடக்கிக்கொண்டு பாதங்களையும் வளைத்தபடிக்கே அவர் படம் முழுக்க வரும் அத்தோற்றம் மனதைபிசைகிறது
ஒரு சிறப்பு பெண்குழந்தையை வளர்க்க மனைவி இல்லாத ஆணொருவன் எப்படி கஷ்டபடுகிறான், என்பதை இன்னும் நுட்பமாக அழகாக அனைவரும் ஏற்றுக்கொள்ளும்படி சொல்லி இருக்கலாம். ஏன் பாலுணர்வு தேவையை மிக அடிப்படையாக தீர்க்க வேண்டிய ஒன்றென காட்டியிருக்கிறார்கள் என்றே தெரியவில்லை

இயற்கையின் பன்முகங்களையும் பாரபட்சமுடன் அது உயிர்களை படைப்பதையும் குறித்து கோனார் நோட்ஸ் போடாத குறையாக அத்தியாயங்களாக பிரித்து விளக்காமல் பார்வையாளர்களே அதை புரிந்துகொள்ளும் படி கொண்டுபோயிருக்கலாம்
படம் முடியும் போது நாம் எத்தனை அருளப்பட்ட வாழ்விலிருக்கிறோம் என்னும் மகிழ்வைவிட கருணையின்றி படைக்கப்பட்டிருக்கும் உயிர்களின் மீதான பச்சாதாபமே மனதில் மேலோங்கி இருக்கும் என்பது இப்படத்தின் வெற்றியெனக்கொள்ளலாம்

லாலிபாப்பால் உதடுகளின் மேல் பாப்பா வருடிக்கொள்வது பனியை நம் மீதும் படரவிடும் துல்லியமான அழகிய ஒளிப்பதிவு. மாற்றுப்பாலினத்தவராகிய அஞ்சலி அமீரின் சிறப்பான நடிப்பு, மலையாளத் திரைஉலகின் நட்சத்திர அந்தஸ்தையெல்லாம் உதறிவிட்டு இயல்பாக நடித்திருக்கும் மம்முட்டி, நட்சத்திரங்களை எண்ணும் காட்சி, சிறப்பான ஒளிப்பதிவு என பாராட்டவும் பல அம்சங்கள் இருக்கின்றன இதில்.

எனினும் மூளை முடக்குவாதத்துடனிருக்கும் மகளை, மனைவியும் சகமனிதர்களின் பரிவும் புரிதலுமின்றியும் அன்புடன் கவனித்து வளர்க்கும் அப்பாவின் கதையாக இல்லாமல் அவளின் பாலுணர்வுதேவைகளுக்குமாக மெனக்கெடும் பேரன்புடனிருக்கும் அதிசய அப்பாவாக கதையைக்கொண்டு போனதுதான் பிழையாகிவிட்டது

 

Green Book

green book

GREEN BOOK

பீட்டர் ஃபாரெல்லியின் இயக்கத்தில் 2018’ல் வெளிவந்த 1960ல் நடைபெறும் கதைக்களத்துடனான Green Book என்னும் இந்த ஆங்கிலத்திரைப்படம் ஆப்பிரிக்க அமெரிக்கரும் ஜாஸ் பியானோ இசைமேதையுமான திரு டான் ஷர்லி  (Don shirley)  மற்றும்  அவரின் கார் ஓட்டுனரும் பாதுகாவலருமாகிய இத்தாலிய அமெரிக்கரும்  பவுன்ஸரான டோனி வேலிலங்கா (Tony vellelonga) ஆகிய இருவரையும் குறித்தான ஒரு உண்மைக்கதையை சொல்கிறது.

இசை, இனவெறி மற்றும் அசாதாரண தோழமை ஆகியவற்றை மிக அழகாக சொல்லிச்செல்லும் படம் இது

திரைக்கதையை இயக்குனர் பீட்டர், பிரையன் பியூரி மற்றும் டோனி வேலிலங்காவின் மகனாகிய ’’நிக் வேலிலங்கா’’ வுடன் இணைந்து எழுதியுள்ளனர். நிக் தனது அப்பா மற்றும் டான் ஷர்லியுடனான நேர்காணல்கள் கடிதங்கள் நாட்குறிப்புகள் என பலவற்றின் உதவியுடன் திரைகதையை செம்மையாக்க பெரிதும் உதவியிருக்கிறார் கதைக்களம் 1960களில் நடைபெறுவதுபோல அழகாக  காட்சிப்படுத்தபட்டிருக்கின்றது எவ்விதப்பிழையுமின்றி

கருப்பினத்தவர்களை மாலை சூரிய அஸ்தமனத்துக்குள் நகரை விட்டு வெளியேறச்சொல்லும்,வெள்ளையரல்லாதோர் உபயோகிக்கக்கூடாத பொதுஇடங்களின் பட்டியலை வைத்திருக்கும், இதற்கென பிரத்யேக சட்டங்களையும் விதிகளையும் வன்முறைகளையும் பின்பற்றும், வெள்ளையர்கள் மட்டும் வசிக்கும் அமெரிக்காவின் Sun down towns  எனப்படும்  தெற்கிலிருக்கும் நகரங்களுக்கு தொடர்ச்சியாக இசைக்கச்சேரிகள் செய்யவிருக்கும் வடக்குப்பகுதியைச் சேர்ந்த   உளவியலிலும் இசையிலும் டாக்டரேட் பட்டம் வாங்கியிருக்கும் கருப்பின இசை மேதையொருவர், தனக்கு அங்கு ஏற்படக்கூடும் என அஞ்சும் தாழ்மைகளுக்கும், உள்ளாகக்கூடுமென்னும் அச்சுறுத்தல்களுக்கும்,  துணைக்கும், பாதுகாப்பிற்கும் காரோட்டுவதற்குமாக  பணத்தேவையிலிருக்கும் ஒரு வெள்ளையரை 8 வாரங்களுக்கு பணியிலமர்த்திக்கொள்ளுவதும் அந்த பயணமும், கலவையாக அங்கு நடைபெறும் சம்பவங்களும் அவர்களுக்கிடையே முகிழ்க்கும் அழகிய தோழமையும் நம்மை  திரைப்படத்துடன் ஒன்றச்செய்யும் விதத்தில் படமாக்கப்பட்டுள்ளது

கருப்பினத்தவர்கள் அந்நகரங்களில் எங்கெங்கு மட்டும் தங்கலாம், உணவு உண்ணலாமென்னும்  விவரங்களடங்கிய GREEN BOOK என்னும் பயணக்குறிப்பேட்டை/கையேட்டை டோனி உடன் கொண்டுசெல்வதால் இப்படத்திற்கு இந்தப்பெயர்.  1936 லிருந்து 67 வரையிலுமே  பயன்பாட்டிலிருந்த இந்த பயணக்குறிப்பேடு  சாலைவழிப்பயணங்களில் கருப்பினத்தவர்கள் அந்நகரங்களை பாதுகாப்பாக கடந்து செல்வதையும், அங்கு தங்குவதையும் ஓரளவிற்கேனும் சாத்தியமாக்கியிருக்கிறது

எப்போதும் உணவுண்ணுதலில் பெரும் ஆர்வம் கொண்டிருக்கும், ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும், வாழ்வை மிக இலகுவாக எடுத்துக்கொள்ளும், பணத்திற்கான தேவை அதிகமாக இருக்கும்,   மனைவியும், இரு மகன்களும் சுற்றங்களுமாக நிரம்பிய வாழ்விலிருக்கும் வெள்ளையரான டோனிக்கும், உலகம் முழுதும் பிரபலமான பெரும் இசைமேதையான, தன்னந்தனிமையில் ஒரே ஒரு உதவியாளருடன், பகட்டான ஒரு வாழ்விலிருக்கும், வரவழைத்துக் கொண்ட மிடுக்கும் நிமிர்வுமாய்,  மிக சொற்பமாகவே பேசும்  கருப்பினத்தவரான ஷர்லியுமாய் தொடர்ந்து  பயணிப்பதும், மிக வேறுபட்ட பின்புலங்களைச் சேர்ந்த இவ்விருவரும் அந்த பயணத்தில் சந்திக்கும் எதிர்பாராமைகளும், அவை  மெல்ல மெல்ல ஷர்லியை மாற்றுவதும் அவர்களுக்கிடையே ஒரு பந்தம் உருவாவதும்  இப்படத்தில்  மிக மிக அழகாக சொல்லப்பட்டிருக்கின்றது

1927ல் ஃப்ளோரிடாவில்  வசதியான கருப்பினக்குடும்பத்தில் பிறந்த கருப்பினத்தவரான ஷர்லி, 1930ல் பிறந்த டோனி வேலிலங்காவை  பணியில் அமர்த்திக்கொண்டதும், எந்தப்பொருத்தமுமில்லாத இந்த இணையர் மேற்கொண்ட நெடிய சாலைப்பயணத்தில்  பரஸ்பரம் மற்றவரின் உலகை அவற்றின் பலவீனங்களுடன்  அறிந்துகொண்டு,  2013 ஆம் வருடம் இருவருமே இறந்து போகும் வரை உற்ற நண்பர்களாயிருந்ததும் இப்படத்திற்கு வலுவையும் ஆர்வத்தையும் சேர்க்கும் உண்மை பின்புலக் காரணங்கள்

அமெரிக்க நடிகரும்  2017 ல் ஆஸ்கர் வென்ற  முதல் இஸ்லாமிய நடிகருமான

(Mahershala Ali). மகிர்ஷாலா அலி, டான் ஷர்லியாகவும்,  அமெரிக்க நடிகர், எழுத்தாளர், கவிஞர், ஓவியர் அகாடமி விருது ,கோல்டன் குலோப் விருது என பல விருதுகளுக்கு சொந்தக்காரர் எனும் பல சிறப்புகளை உடைய   விகோ மோர்டென்சன் (Viggo Mortensen) டோனி லிப் வேலிலங்காவாகவும் பாத்திரமேற்று நடித்திருக்கின்றனர்

கிரிஸ்’ன் உறுத்தாத  இசையும்,  நெடும்பயணத்தை,  உணர்வெழுச்சிகளை உடல்மொழியின் மாற்றங்களை, இசைக்கும் விரல்களை, இழிவுபடுத்தப்படுகையில் புண்படும் நாயகனை, பொங்கும் தோழனை  அந்த சாலைகளை, பனியை, காவல் நிலையத்தை, விடுதிகளை, சிவப்புக்கம்பளம் விரிக்கப்பட்டிருக்கும் மாபெரும் அரங்குகளை  துல்லியமாக காண்பிக்கும் சீயான் போர்ட்டரின் காமிராவும்,  தொய்வின்றி கதையை சொல்லிச்செல்லும் விட்டோவின் அருமையான படத்தொகுப்பும் நம்மையும் அவர்களுடனேயே பயணிக்க வைக்கிறது.

மிக நேர்த்தியான உயர்தர  உடைகளும், துல்லிய, இலக்கண சுத்தமான ஆங்கிலமும், மேட்டுக்குடியினருக்கே உரித்தான மேம்பட்ட நாகரீகமும் நாசூக்கும் கொண்டவராய்,  மேடையில் தனக்கு அளிக்கப்படும் கெளரவங்களுக்கு அடியில் கருப்பினத்தவர் என்னும் எள்ளலும் கேலியும் வெறுப்பும் மண்டிக்கிடப்பதை உணர்ந்தவராக , கச்சேரியின் இடையில் கழிப்பறையை உபயோகிக்க அனுமதி மறுக்கப்படுகையிலும் உணவகங்களுக்குள் நுழைவொப்புதல் இல்லாதபோதும் சமநிலை இழக்காமல் இருப்பதுவுமாய் அலி அந்த பாத்திரமாகவே மாறியிருக்கிறார்.  வெள்ளையர்களுக்கான   இறுதிக்கச்சேரியை ரத்து செய்துவிட்டு கருப்பின மக்களுக்கான் பிரத்யேக விடுதியில் அனைவருக்குமாய் தன் மேட்டுகுடித்தனங்களையெல்லாம் உதறிவிட்டு இயல்பாக இசையை ரசித்து துள்ளலாக மெல்லிய நடன அசைவுகளுடன் எந்த பாசாங்கும் இன்றி பியானோ வாசிப்பதும், தானும் தன் இசையும் உண்மையில் யாருக்கு சொந்தமென்பதை உணர்ந்திருப்பதை உடல்மொழியிலேயெ வெளிப்படுத்துவதுமாக அசத்துகிறார் அலி

டோனி படம் முழுதும் வாழ்வை அதன் சாதக பாதகங்களுடன்  எதிர்கொள்ளும் சாமான்யராகவே நடித்திருக்கிறார்

துவக்கக்காட்சியில் வீட்டில் வேலைக்கென வந்த இரு கருப்பினப்பணியாளர்கள் உபயோகித்த டம்ளர்களை அசூயையுடன் குப்பக்கூடையில் தூக்கிப்போடும் அவரே, பிற்பாடு ஷர்லியை  புண்படுத்தும் அதிகாரிகளை அடிப்பதும் , ஒருபால் உறவின் பொருட்டு கைது செய்யபட்ட ஷர்லியை  காவலர்களிடமிருந்து மீட்பதும் (அந்த அசந்தர்ப்பத்தின் பொருட்டு  மாடிப்படிகளின் மேலிருந்து மன்னிப்பு கேட்கும் ஷர்லியிடம், கீழே நின்றவாறு, வாழ்வின்  சிக்கலான  பல அடுக்குகளை கண்டிருக்கும் தனக்கு இதை புரிந்துகொள்ள முடிகின்றது என்று   அவர்  எளிதாக சொல்லுவதும் அப்போது ஷர்லியின் புன்னகையும், கவிதை).  அவரின் இசைமேதமையால் கவரப்பட்டு அவரை ஆராதிக்க துவங்குவதுமாக விகோவும் வேலிலங்காவாகவே மாறியிருக்கிறார். மனைவிக்கு மொக்கையாக கடிதமெழுதும் டோனிக்கு ஷர்லி கவித்துவமான கடிதங்களை எழுத உதவுவதும் பின்னர் டோனியே அப்படி எழுதமுற்படுவதுமாக அவர்களின் தோழமையை மிக அழகாக சொல்லும் காட்சிகள் பல இருக்கின்றன

பயணம் துவங்குகையில் டோனியின் அசுத்தமென்று நினைக்க வைக்கும் வழமைகளால் ஷர்லிக்கு ஒவ்வாமை எற்படுவதும் பின்னர் திரும்பும் பயணத்தில்  வேலிலங்காவை பின் இருக்கையில் தூங்கச்செய்து இவரே காரோட்டுவதும், காவல்துறை அதிகாரிகள் மீண்டும் குறுக்கிடுகையில் வழக்கத்துக்கு விரோதமாக  ஷர்லி  பேச முற்படுவதும், காவலரும் எதிர்பாராவிதமாக உதவுவதுமாய் காலம் மாறிக்கொண்டிருப்பதையும், இனவெறியிருட்டினூடே நம்பிக்கையின் ஒளிக்கீற்று புலப்படுவதையும்  பார்வையாளார்களும்  காண முடிகின்றது.

பல நுட்பமான செய்திகளை அழகாக போகிற போக்கில் சொல்லிச்செல்லும் இத்திரைப்படத்தை அனைவரும் அவசியம் பார்க்கவேண்டும்

2018 ஆம் வருடத்தின் மிகசிறந்த திரைப்பட விருதையும், சிறந்த துணை நடிகருக்கான விருதை அலியும், உண்மைத்திரைக்கதைக்கான விருதை நிக் வேலிலங்காவும் பெற்று, இன்னும் பல விருதுகளையும் பெற்றிருக்கும் இத்திரைப்படம் வழக்கமான திரைப்படங்களினின்றும் மாறுபட்ட  படம் மட்டுமல்ல வரலாற்றின் கறுப்புப்பக்கங்களை குறித்து அறியாத  நமக்கெல்லாம் சுவாரஸ்யமாக சொல்லப்பட்ட  ஒரு பாடமும் கூட.

 நெடும்பயணமொன்றின் பிறகு அந்த இளநீலவண்ண 1962 மாடல் கெடிலாக் செடான் காரிலிருந்து இறங்கி, பனிபொழியும் கிருஸ்துமஸ் இரவில் நமக்கென வீட்டில் காத்திருப்பவர்களை காண,  தோழமையில் நிரம்பியிருக்கும் இதயத்துடன் செல்லும் உணர்வுடனேதான் திரையரங்கிலிருந்தும் வெளியேறுவோம்.

-____________________________________________________________________________________________

நீதிக்கு புறம்பாக பலரால் பொது இடத்தில் கொல்லப்படுதல், துன்புறுத்தபடுதல், எந்த சொத்துக்களையும் அவர்கள் வங்கும் உரிமையை  சட்டபூர்வமாக மறுத்தல், வெளிப்படையாக அவர்கள் உள்ளே வர அனுமதியில்லை என்று அறிவிக்கும் பலகைகளை உணவகங்கள் கழிப்பறைகள் உள்ளிட்ட  பல பொது இடங்களில் வைத்திருத்தல், நிறவேறுபாடுள்ளவர்களை நெருப்பிட்டு கொளுத்துதல், பலர் முன்னிலையில் தூக்கிடுதல், உயிர்போகும் வரையில் துன்புறுத்துதல் (Lynching)  இந்த  வதைகளை  புகைப்படமெடுத்து வாழ்த்து அட்டைகளாக வைத்துக்கொள்ளுதல் போல பல அநீதிகள் அந்தக்காலகட்டத்தில் நடந்திருக்கின்றன. சமூகவியலாளர்  James W. Loewen  2005’ ல்எழுதிய ’’Sundown Towns: A Hidden Dimension of American Racism , என்னும் புத்தகம் இவற்றையெல்லாம் விரிவாக பேசுகின்றது.

மகேஷிண்டெ பிரதிகாரம்-A Sweet revenge !

 

திரைக்கதை  எழுதியிருக்கும் ஸ்யாம் புஷ்கரன் தன்  பால்யத்தில் கேட்டிருந்த அவரது சொந்த கிராமத்தை சேர்ந்தவரும் தந்தையின் தோழருமான தம்பான் புஷ்கரன் என்பவரது வாழ்வில் நடந்த ஒரு உண்மைச்சம்பவத்தினை அடிப்படையாகக்கொண்ட இத்திரைப்படத்தில்  காதல் மட்டுமே கற்பனை. ஃபகத் ஃபாஸில், அனுஸ்ரீ, செளபின், அலென்சியர், சுஜித் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கியப் பாத்திரமேற்றிருக்கின்றனர். இயக்குனராக திலீப் போத்தனுக்கு முதல் படம். திகிலான பழிவாங்கும் கதைகளுக்கு மத்தியில் இது ஒரு  இனிய  பழிவாங்கும் கதை.

பழைய பாபு ஆண்டனியின் சாயலில் இருக்கும் ஜிம்சனுடனான ஒரு தெருச்சண்டையில் அடிபடும், கேவலப்படும் ஃபகத் மீண்டும் ஜிம்சனை அடித்தபின்னரே  ஒரு குறிப்பிட்ட காரியத்தை  செய்வதாய்  சபதமெடுப்பதே கதை.  ஜிம்சன் துபாய்க்கு வேலைக்கு போனதால் அவன் திரும்பி வரும் வரை காத்திருக்கையில் புகைப்படக்கலையென்பது பாஸ்போர்ட் புகைப்படம் எடுப்பதல்ல என்பதை  அப்பா ஆண்டனியிடமிருந்து ஃபகத் கற்றுக்கொள்கிறார். முதல் காதல் கைநழுவிபோகின்றது, பின்னொரு அழகிய காதல் முகிழ்க்கிறது

நாயகன் ஃபகத்திற்கு இயல்பான நடிப்பு குருதியிலேயே கலந்துள்ளது. முதல்காட்சியிலெயே வெள்ளையில் நீலவாரிட்ட செருப்பை கழுவி, நீரில் மிதந்து வரும் நட்சத்திரப்பழங்களை சேகரித்தபடி குளத்தில் குளிக்கும், ஃபாசிலைப்போல இயல்பாக நடிக்க இனிபிறந்து வரணும் பிறமொழியிலெல்லாம் நடிகர்கள். சிலுவை சுமந்து வருவோரின் கால்களிலும் பின்னர் காட்டப்படும் அச்செருப்புக்களுக்கு  கதையில் மிக முக்கிய இடம் இருக்கின்றது

புதுமுகங்கள் பலர் இருந்தாலும் அத்தனைபாத்திரங்களுக்கும் அனைவரும் கச்சிதமாகப் பொருந்துகின்றனர். அந்த கிராமத்து மக்களும் அப்படியே இயல்பாக அணிந்திருக்கும்  உடையிலேயே பல காட்சிகளில் நடிக்க வைக்கப்பட்டிருக்கின்றனர். ஒரு சிறிய கதாபாத்திரத்தில் இயக்குனர் திலீப் போத்தனும்  புஷ்கரனின் மனைவி உன்னிமாயாவும் கூட நடித்திருக்கின்றனர்.

ஆர்ட் டைரக்டர் அஜயன்  சாலிசேரி  ஒவ்வொரு காட்சியிலும் மிகக்கவனமெடுத்து அடுப்படியில் இருக்கும் பாத்திரங்களிலிருந்து  சுவற்றில் இருக்கும் புகைப்பட சட்டங்கள் வரை இடுக்கியின் கலாச்சாரத்தை திரையில் அப்படியே கொண்டு வந்து காட்டியிருக்கிறார்

நாயகன் உட்பட அனைவரும் பெரும்பாலான காட்சிகளில் கிராமத்தினரிடமிருந்து புது உடைகளை கொடுத்து  பதிலாக வாங்கிய  அவர்களின் உபயோகப்படுத்தபட்ட உடைகளையே அணிந்திருப்பதால் காட்சிகளில் அத்தனை உயிரோட்டம்

செளம்யாவின் திருமணத்தன்று  தனிமையில் கதறி அழுகும் ஃபகத்தின் துயரை கரைப்பது,  அக்கிராமத்தின் பச்சையை நனைத்து  நனைத்து இன்னும் அடர்த்தியாக்குவது, தேவாலயத்தில் குடையுடன் எதிரெதிரே கடக்கும் ஃபகத், செளம்யா இருவரின் மீதும் காதலென பொழிவது, மரவள்ளிக்கிழங்கு காடுகளில் இலைப்பரப்பை கோதியபடி கடந்துசெல்வது என பெரும்பாலான மலையாளப்படங்களைப்போலவே இக்கதையிலும் மழை ஒரு பாத்திரமாகவே  இருக்கிறது.

இடுக்கிமாவட்டத்தின்  இயற்கை எழில்  நிரம்பிய பிரகாசம் எனும் ஒரு மலையடிவார கிராமத்தில் நல்ல மழைக்காலத்தில் 45 நாட்களில் படமாக்கியிருக்கிறார்கள்

இரண்டு சண்டைகள் மட்டுமே. சண்டை இயக்குனர்  குங்ஃபூ சஜித்.  கதை துவங்குவதற்கு காரணமான சண்டையே கதையை முடித்தும் வைக்கின்றது. ஷாஜு ஸ்ரீதரனின் படத்தொகுப்பும் அபாரம்

பீஜ்பால் இசையமைத்து இரண்டு பாடல்களும் பாடியிருக்கிறார். கவிஞர் அஹமத் ஒரேநாளில் எழுதிய கவிதையான  ‘’ இடுக்கி ’’  பாடலில்  கேரளத்தின் ஜீவனை நுட்பமாகவும் துல்லியமாகவும் கண்டுவிடமுடியும்  அத்தனை அற்புதமான பாடல்

காதலியை மகேஷ் சந்திக்க  ஏதுவாக பேபிச்சேட்டன் காண்பிக்கும் மார்வலியென்னும் ’’நம்பர்’’ எக்குத்தப்பாய் மாறிப்போவது போல  திரைக்கதையினூடே மெல்லிய நூலாக மிகையில்லா இயல்பான நகைச்சுவைக்காட்சிகள் பல  இருப்பினும் செளபின் ஷாகிர் வரும் காட்சிகளையெல்லாம். புன்முறுவலுடனேயே பார்க்கமுடியும், குறிப்பாய் அந்த ’’கிரிஸ்பின்’’

’’தெளிவெயிழலகும், மழையுட குளிரும்’’ பாடல் கொள்ளை அழகாக படமாக்கப்பட்டிருக்கிறது

ஒப்பனை அறவே இல்லாத சோனியாமோளாக வரும் லிஜிமோள் ஜோஸின் இயற்கை அழகும் செளபினுடனான  அவரின் காட்சிகளும் ரசிக்க வைக்கிறது. ‘’நீயும் சுந்தரனாடா’ என்று சொல்லப்படுகையில் அலென்சியர்  முகத்தில் காட்டுவது அசலான பெருமிதம். பேருந்து ஸ்டுடியோவை கடக்கையிலெல்லாம் ஃபகத் ஃபாஸிலின் உடல்மொழியும் நாயகியின் நடிப்பும்  பிரமாதம்,  ஜிம்சனின் தங்கையே காதலி ஜிம்சி என்பது  நாயகனின் சபதத்தை ஒன்றும் சிதைப்பதில்லை. முன்காதலியின் திருமணத்தன்று அவளை தெருவிலிருந்தபடி பார்த்து  ஃபாஸில் புன்னகைகும்  காட்சியை திரைப்படக்கல்லூரியில் பாடமாக வைக்கலாம்.

துக்கவீட்டில் காதலிக்கு கும்பிலியப்பம் சாப்பிடக்கொடுப்பது,  கப்பைக்கிழங்களைகொத்துக்கொத்தாகப் பிடுங்கி சீவுவது,  தட்டில் அடிக்கி வைக்கப்பட்டிருக்கும் பொன்மஞ்சள் நிறப் பலாச்சுளைகள் ,  வீட்டு வாசலில் வாழைக்குலை, பச்சைபிடித்த கிராமம், நைட்டியில் பெண்கள், அச்சு அசலாக  கேரளக்கிருத்துவ சாவு வீடும் திருமணமும்,  மென்பஞ்சுக்குலையுடன் பறக்கும் எருக்கம்பூ விதைகளின் பிண்ணனியில் தெரியும் ஜிம்சி, பேருந்தில் நேந்திரன் சிப்ஸ், லாட்டரிச்சீட்டு விற்பனை, தொலைக்காட்சியில் மூழ்கி இருக்கும் பெண்கள்,  மினுங்கும் சருமத்துடன் அடர்கூந்தலும்  மையெழுதிய அகலகண்களுமாய் கேரளத்துச்சுந்தரிகள், மழை, நதி, கட்டஞ்சாயா என்று ஷைஜுவின்  காமிரா கேரளத்தை கண்ணிலும் மனசிலும் கொண்டு வந்து கொட்டி நிறைப்பதில் படம் முடிந்து அரங்கைவிட்டு புறப்படுகையில்,  ஏதோ கேரளகிராமம் ஒன்றிலிருந்து புறப்படுவது போலவே இருந்தது

திரைக்தையின் எளிமை உண்மையில் திகைப்பூட்டும்.  இத்தனை எளிய மிகச்சிறிய ஒரு புள்ளியிலிருந்து தொட்டுத்தொட்டு அழகிய முழுநீளத்திரைச்சித்திரத்தை தீட்டுவதென்பது இம்மொழியிலல்லாது வேறெந்த மொழியிலும்  நிகழாச்சாத்தியமே!

ஆக்‌ஷன் ஹீரோ பிஜுவிற்குபிறகு அமெரிக்காவின் மிக அதிக வசூலைப்பெற்ற மலையாளப் படமும் இதுவே! 5 கோடி பொருட்செலவில் எடுக்கப்பட்டு பிப்ரவரி 5 2016 ல் வெளியாகி  18 கோடி வசூலுடன் வணிகரீதியாகவும் வெற்றி பெற்று வட அமெரிக்க திரைவிருது, பன்னாட்டு  திரைப்படவிருது வனிதா விருது மாநில மற்றும் தேசிய விருதுகள் உள்ளிட்ட  23  விருதுகளை அள்ளிக்குவித்திருக்கும் இந்த அ,ரிய அழகிய திரைப்படத்தைப் பார்க்கத்தவறினால் அது திரைக்கலையை நேசிப்பவர்களுக்கு  நிச்சயம் பேரிழப்பாகும்.

ஃபகத்தின் அப்பா படத்தில் சொல்லியிருப்பது உண்மை என்பதை உணர்ந்தபடியேதான் அரங்கிலிருந்து வெளியெ வருவோம்

’’ஆம் இ ஜீவிதம் சுந்தரமானு’’

 

பேட்ட

எந்திரன் 2.0 வெளியாகி ஒரு மாத இடைவெளியில் மீண்டும் ஒரு ரஜினி படம். ஜனவரி 10, 2019  தைப்பொங்கல்  அன்று வெளியான ,கார்த்திக் சுப்புராஜ் எழுதி, இயக்கி சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த பேட்ட (Petta) ரஜினிகாந்தின் 165 ஆவது திரைப்படம். இத்திரைப்படத்திற்கு அனிருத்ரவிச்சந்திரன்  இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவு திரு,   படத்தொகுப்பாளர் விவேக் அர்சன்.

சீனியர் மாணவர்கள் அட்டகாசமும் வில்லத்தனமும் அதிகமிருக்கும் ஒரு கல்லூரி விடுதிக்கு காப்பாளராக ரஜினி வருகிறார். அங்கிருக்கும் பிரச்சனைகளை துரிதமாக சரிப்படுத்தி மாணவர்களை கட்டுக்குள்  கொண்டு வரும் ரஜினி மாணவர்களில் ஒருவனை  கொல்லச் செய்யப்படும் முயற்சிகளை முறியடிகிறார். அதன்பொருட்டே அங்கு அவர் வந்திருகிறார் என்பதும், அவருக்கும் அந்த மாணவனுக்குமான உறவென்ன என்னும் புதிருமே கதைக்கரு.

கண்ணைக்குளிர்விக்கும் டார்ஜிலிங்கில் துவங்கி மதுரைக்கு வந்து உத்தரப்பிரதேசத்தில் முடிகின்றது கதை. அறிமுகக்காட்சியில் ரஜினி சோளக்கதிர்களை சுடும் நெருப்பின் பொறி பறக்கும் பிண்ணனியில் திரையில் தோன்றுகையில் பல்லாண்டுகளாக திரையரங்கில் எழும்  அதே ஆர்ப்பரிப்பும் ஆட்டமும் பாட்டமும் விசிலுமாக  அரங்கு அமளிப்பட்டது.  ரஜினி வரும் காட்சிகளில்  தேவதூதன் சிலை ஒரு குறியீட்டைபோல காண்பிக்கப்படுகிறது.  முதன்முதலாக திரைத்துரைக்குள் நுழைந்ததைப்போலவே மூடியிருக்கும் கதவுகளை தள்ளித்திறந்தபடியே  பல காட்சிகளில் வருகிறார் ரஜினி.

கபாலியில் வயதான ரஜினி ரசிகர்களை ஏமற்றி கொஞ்சம் விலகிச்சென்றார் இதில்  அப்படியல்ல 80/90ல் பார்த்த அதே  ஸ்டைல் மன்னன். ஒப்பனை மிகப்பொருத்தமாக இருப்பதுடன் ரஜினியின் ஃபிட்னஸ் வியப்பூட்டுகின்றது. நடனக்காட்சிகளில் அதே 80 களின் ரஜினி தெரிகின்றார்.

20 வருடங்களுக்கு முன்னதான மதுரை ப்ளேஷ் பேக்கும் கல்லூரி அடிதடியுமாக  விரைவாக நகரும் கதை, கொஞ்சம்  தள்ளாடி  உத்தர பிரதேசத்தில்  நுழைந்ததும் ஏராளமாய் துப்பக்கி சுடுதல். ரஜினி இரண்டு கைகளிலும் துப்பாக்கி ஏந்தி சகட்டுமேனிக்கு சுட்டுத்தள்ளுகிறார். விஜய் சேதுபதி, பாபிசிம்ஹா, இயக்குனர் மகேந்திரன், சிம்ரன், த்ரிஷா நவாஸுதீன், சசிகுமார், ஆடுகளம் நரேன் என நட்சத்திரப்பட்டாளமே இருந்தாலும் கதை ரஜினியை நம்பியே நகருகின்றது. மாலிக் ஆக சசிகுமார் வருகையில் பாட்ஷாவை நினைப்பதை தவிர்க்கவே முடியவைல்லை.

சில காட்சிகளில் வரும் சிம்ரன் அழகு, நன்றாக மெலிந்து சிலிம்ரன் ஆகவும் இருக்கிறார். ஆடுகிறார் பாடுகிறார், ரஜினியை காலம்கடந்து காதலிக்கவும் செய்கிறார் எனினும் உயிரோட்டமின்றி சாவி கொடுக்கபட்ட பொம்மையைப்போல நடிக்கிறார். அவரது தோற்றத்திற்கும் மங்களம் என்னும் பெயருக்கும் பொருத்தமுமில்லை. த்ரிஷா சிம்ரனை விட மிகக்குறைந்த காட்சிகளில் வருகிறார். படத்தில் அவரும் இருக்கிறார். அவ்வளவே. கதாநாயகிகள் இருவருக்குமே எந்த முக்கியத்துவமும் இல்லை.

ராட்சச நடிகரென்று பாலிவுட்டில் பெயரெடுத்திருக்கும் நவாஸுதீன் சித்திக் என்னும் அற்புதமான கலைஞனை இங்கு அவ்வளவாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. மதுரைக்காரராக அவரது வடஇந்திய முகம் ஒட்டவில்லை மேலும் தமிழிலான வசன உச்சரிப்பும் அவருக்கு பொருந்தவில்லை. ரஜினி என்னும் ஆலமரத்தின் கீழ் எந்தச்செடியும் செழித்து வளரமுடியாதுதான். இயக்குனர் மகேந்திரனும் இருக்கிறார் தளர்ந்திருக்கிறார்.

பீட்ஸாவிலும் ஜிகிர்தண்டவிலும் இருந்த கார்த்திக் சுப்புராஜை இதில் காணமுடியவில்லை முழுக்க முழுக்க ரஜினி படம் இது. சனந்த் ரெட்டி மேகா ஆகாஷ் காதல் ஜோடி பரவாயில்லை. அவருக்கே உரித்தான கரகர குரலுடன் ராம்ஸும் இருக்கிறார்

பாடல்களை விவேக், கு.கார்த்திக் மற்றும் தனுஷ் எழுதியிருக்கின்றார்கள். மரணமாஸ் துவக்கபாடலை s.p பாலசுப்ரமனியமும் அனிருத்தும் இணைந்து பாடியிருக்கிறார்கள். அனிருத்  பாடல்களிலும் பிண்ணனியிலும் கொட்டிமுழக்கி இருக்கிறார் மாமனுக்காக. இளமை துள்ளுதே பாடலை மருமகன் தனுஷ் எழுதியிருகிறார். உல்லாலா பாடல் சுராங்கனியையும் பம்பரக்கண்ணாலேவையும் நினைவூட்டினாலும் இனிமை.

ஒரு காட்சியில் சிகரட் பிடிப்பது கெடுதலென்றும் அதை அனுபவத்தில் உணர்ந்தே சொல்லுவதாகவும் ரஜினி சொல்கிறார். 165 ஆவது படத்தில், 60 வயதைத்தாண்டி அரசியலுக்கு வந்தபின்னர் ரஜினி சொல்வதை, அவரைப்போலவே ஸ்டைலாக புகைபிடிக்கத்துவங்கிய ஆயிரக்கணக்கான இளைஞர்கள் காதில் போட்டுக்கொள்வார்களா என்று தெரியவில்லை

திரு ஒளிப்பதிவு அபாரம்.  டார்ஜீலிங்கில் Eastern Forest Rangers   கல்லூரி வளாகம் அத்தனை அழகு. சர்ச்சில் மெழுகுவர்த்தி ஒளியுடனான காட்சிகளும் டார்ஜிலிங்கின் மலைப்பாதையும், பனிப்பொழிவும் கண்ணில் நிறைகின்றது  சண்டை இயக்குனர் மற்றும் ஒருங்கிணைப்பாளர் பீட்டர் ஹேன்ஸ் அடித்து நொறுக்கியிருக்கிறார். மார்க்கெட் மர்றும் சர்ச் சண்டைகளை மிக உற்சாகமாக இயக்கியிருக்கிறார்.

புதுசா வந்தா விரட்டுவீங்களாடா இது உங்க கோட்டை இல்லை என் பேட்டை, சம்பவம் காத்திருக்கு, ஸ்வீட் சாப்பிடப்போறோம் என்று மறைமுகமாகவும் நேரடியாகவும் அரசியல் பன்ச்சுகளும் உண்டு

விஜய் சேதுபதி அப்படியே உத்தரபிரதேச வெறியராக வருகிறார். கண்டமேனிக்கு சுட்டுத்தள்ளுகிறார். பொருந்தி நடித்திருக்கிறார் எனினும் கொஞ்சம் ஃபிட்னஸ் குறித்தும் யோசிக்கனும். கிளைமாக்ஸுக்கு பின்னரும் இன்னொரு ட்விஸ்ட் காத்திருக்கு ரசிகர்களுக்கு.

ரஜினி ஸ்டைலாக துப்பாக்கி சுடும் காட்சியொன்றில் ஒரு கேரளா நண்பர் ரஜினியிடம் சொல்லுவார் ‘’சாரே , கொலை மாஸானு’’ என்று அதுதான் படத்திற்கான  ஒற்றை வரி விமர்சனமும்.

 

 

 

 

maxresdefault

நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன்

சாம்ராஜை 2018 டிசம்பர் விஷ்ணுபுரம் விழாவில்  சந்தித்தேன், மேடையில்  இருந்தபோதும், அரங்கிற்கு வெளியே சந்தித்து கவிதைகளைக்குறித்து உரையாடியபோதும் ,எப்போதும் எங்கு இருந்தாலும்  வார்த்தைக்கு வார்த்தை அவரிடமிருந்து வெளிப்பட்ட இயல்பான பகடியில் உடனிருந்தவர்களுக்கும் அரங்கிலும் சிரிப்பு ததும்பிக்கொண்டிருந்தது. மேடையில் அற்புதங்கள் பற்றிச்சொல்கையில் ’ஏசுநாதரைவிட’ என்றதெல்லாம் அத்தனை ரசிக்கும் படியிருந்தது. வாழ்வை இத்தனை இலகுவாக எதிர்கொள்ளும் ஒருவரை நான் சந்தித்து வெகுவருஷமாயிற்று (அல்லது  சந்த்தித்திருக்கவேயில்லை). வாய்கொள்ளாச்சிரிப்புடனேயே அவரை இப்போதும் என்னால் நினைவுகூற முடிகின்றது

 வாழ்வுக்கணங்களை போகிறபோக்கில் சொல்லிச்செல்லும் சாம்ராஜின் கவிதைகளுக்கு நான் ரசிகை

விழாவில் நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன் வாங்கிவந்தேன், இன்று 9/1/19 மாலை கல்லூரியிலிருந்து வந்ததும் வழக்கமான வீட்டுவேலைகளுக்கு பின்னர் அதைஒரேமூச்சில்  வாசித்து முடித்ததும்  இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்

விழாவில் பேசும்போதே மலையாளத்திரைப்படங்களுக்கும் அவருக்குமான அணுக்கத்தைப்பற்றி சொல்லியிருந்தாரென்பதால் எனக்கும் அப்படியே என்பதால்  வாசிப்பில் ஆழ்ந்திருந்தேன். மலையாள பாஷைக்கும் திரைப்படங்களுக்கும் நானும் அவரளவிற்கே ரசிகையாதலால் இப்புத்தகத்தில் சாம்ராஜ் சொல்லியிருப்பவற்றை வாசிப்பது நானே என்னுடன் நிலைக்கண்ணாடியில் பேசிக்கொண்டிருப்பது போலிருந்தது.

இந்த புத்தகம் என் மகிழ்வை பலமடங்காக்கி இருக்கிறது.

எனக்கும் மலையாளபாஷைக்குமான உறவை சொல்லிக்கொள்ள யாருமில்லை இங்கு. ஜெ வின் தளத்தில் ஒருமுறை எழுதினேன் கொஞ்சமாக

எனவேஇந்தபுத்தகம் எனக்கு  மிகப்பிரியமான ஒன்றாய் நானே எழுதினதுபோல மயக்கத்தை தருமொன்றாக இருந்தது

மலையாளிகள் அதிகம் புழங்கும் பொள்ளாச்சியைச் சேர்ந்தவள் என்பதால்  சின்னவயதிலெயே மலையாளம் அங்கும் இங்குமாக காதில் விழுந்துகொண்டே இருந்தது

என் சகோதரர்கள் திருச்சூரில் வியாபாரம் செய்தார்கள் வெகுகாலம் முன்பு அப்பாவீட்டிலும் மலையாளிகள் வாடகைக்கு குடியிருந்தனர்

ஆனாலும் அப்பாவுக்கு மலையாளிகள் மீது வெறுப்பு இருந்தது ( அப்பாவிற்கு இப்பிரபஞ்சத்தில் அனைவரின் மீதும் வெறுப்பு இருந்தது , இருக்கிறது) கொலையாளியை நம்பினாலும் மலையாளியை நம்பக்கூடாது போன்ற பழமொழியை அடிக்கடி சொல்லுவார்

அப்பா எதை மறுக்கிறாரோ அதில் எனக்கு கடும் விருப்பம் உண்டாகும் அப்படியே மலையாள விஷயத்திலும்

அங்கும் இங்குமாக சில மலையாளிகளிடம் சிநேகிதம் வைத்துக்கொண்டேன்  யாத்ரா சித்திரம் வரவேழ்பு என்று மலையாளப்படங்களாக பார்த்தது பள்ளிப்பருவத்தில்

மஞ்சில் விரிஞ்ச பூக்களில் ஷங்கரும் நரிமாமாவும அறிமுகமானர்கள். அந்தபடத்திலிருந்து ஜீப் எனக்கு இந்த நாள் வரை பிரியமான வாகனம். சொல்லிக்கொண்டேயிருக்கிறேன் ஒரு ஜீப் வாங்கனும்னு இன்னும்

ஷங்கரை பிற்பாடு மிக அந்தரங்கமான ஒரு காரணத்தினால் பிடித்திருந்தது. முகில் மாலைகள் வெகுகாலத்துக்கு விழியோரம் நனஞ்சொழுகிக்கொண் டேயிருந்தது

பூர்ணிமா அங்கிருந்து தமிழ்படக்கதாநாயகியானதும் பெயருக்குப்பின்னால் பாக்கியராஜை சேர்த்துக்கொண்டதுமெல்லாம் அறப்பிழை

பல்கலையில் படிக்கையில் துரதிர்ஷ்டவசமாய் யாரும் மலையாளிகள் உடனில்லை. ஆய்வை முடித்து நான் படித்த பாலக்காட்டுச்சாலையிலிருக்கும் அதே கல்லூரியில் பணிபுரியத்துவங்கியதும் மீண்டும் மலையாளப்பிராந்து தலைக்கேறியது

மலையாள மாணவர்களிடம் பாஷையைக்கற்றுக்கொள்ளத்துவங்கினேன். கல்லூரி காலை 8 மணிக்கு துவங்கி மதியம் 1 மணிக்கு முடியும்

வீட்டின் புழக்கடையில் தான் கல்லூரி மதியம் கல்லூரி முடிந்து  1. 20க்கு நடந்து வீட்டுக்கு வந்ததும் தொலைகாட்சியில் 1.15க்கு போடும் மலையாளப்படம் பார்ப்பேன். தினம் தவறாமல் இது நடந்தது  சோஃபாவில் சம்மணம் கட்டிக்கொண்டு அமர்ந்து மடியில் சாப்பாட்டுத்தட்டை வைத்துக்கொண்டு  எச்சில்கை உலர்ந்து காய்ந்துபோகும் வரை முழுப்படமும் பார்ப்பேன் இப்படி ஒரு ஒன்றரை வருடங்களில் நன்றாகவே மலையாளப்படங்கள் பரிச்சயமானது

இந்த மலையாள வட்டு என் வீட்டினரை அச்சமூட்டியது.  வாழ்வின் எல்லாக்கணங்களுமே கல்யாணத்தை நோக்கியே நகர்த்தபட்ட அக்காலகட்டத்தில், கொங்குப்பகுதியைச்சேர்ந்த, பெண்கள் அதிகம் படிக்க சாத்தியமில்லாத ஒரு குடும்பத்தில் அதிகம் படித்ததும், மலையாளம் பேசுவதும் அதில் பித்துப்பிடித்ததும் என் திருமணம் நடக்காமல் போவதற்கான காரணமாகுமென்றெல்லாம் அப்பா மிகைக்கற்பனை செய்துகொண்டிருந்தார். அப்படியெல்லாம் இல்லாமல் துரதிர்ஷ்டவசமாக கல்யாணம் நடந்து அபுதாபி சென்றேன்

அங்கு  மருந்துக்குக்கூட தமிழர்கள் யாருமில்லை  அத்தனை திசையிலும் மலையாளிகள் ஆனால் சோதனையாக எல்லாரும் மாப்ளாஸ் என்று சொல்லப்படும் இஸ்லாமிய மலையாளிகள்

எனக்கு அந்த மலையாளம் மனசிலாக நெடுங்காலமாயிற்று

கொஞ்சம் வேகமும் அதிகம்  அவர்கள் பேசுகையில். எங்களுடன் வீட்டைபகிர்ந்துகொண்டிருந்த ஒரு குடும்பத்துக்குழந்தைகள் என்னை ’மூத்தம்மே’ என்றே விளித்தன, //எந்தா சேச்சி கண்னடை இட்டிருக்குனு காழ்ச்சி கொறைவுண்டோ/? பாங்கு விளிக்குன்ன சப்தம்கேட்டோ ஏச்சி இப்படி விரைவாகவே பேசினார்கள்

முதலில் கலக்கமாக இருந்தது பொள்ளாச்சியில் கேட்டிருந்த  அ மதுர பாஷை கொஞ்சம் கரடுமுரடானது போல

பின்னர் அதுவும் பழகியது

தினம் ஏசியானட் ஆசிரியரைக்கொண்டு மலையாளம் படித்தேன் அந்த 6 வருடங்களில்

இப்போது சரளமாக மலையாளம் பேசுவதற்கு அப்போது  பார்த்த மலையாளத்திரைப்படங்களே காரணம்

சுரேஷ் கோபியிடமிருந்துதான் பல சீத்த வார்த்தைகள் கற்றது. பா, புல்லே விலிருந்து தெண்டி தெம்மாடி  வரைக்கும் அவர்தான் ஆசிரியர்

சுகோ  படங்களை (சரண் அப்பா விசனப்படும்/ கோபப்படும் அளவிற்கு) ரசித்துப்பார்ப்பேன்.அபுதாபி வாழ்வில் நான் இன்றும் திரும்பிப்பார்த்து புன்னகைக்கமுடியும் விஷயமென்று ஒன்றிருந்தால் அது மலையாளப்படங்களை தொலைக்காட்சியிலும் அல்கத்தாரா என்னும் ஒரு விடியோ கேசட் கடைக்கரன் எனக்கென்ன எடுத்து வைத்திருக்கும் புதிய மலையாளப்படங்களை தன்னந்தனியே அமர்ந்தும் மகன்களை மடியிலிருத்திக்கொண்டும் பார்த்திருந்த நாட்கள் மட்டும்தான். மணவாழ்வு காலடியிலிட்டு மிச்சமின்றி தேய்த்து நசுக்கிய பலவற்றில் நல்லவேளையாக மலையாளம் இல்லை. அது  யாருமறியாத  ஒரு ரகசியம் போல உள்ளே ஒளிந்திருந்தது எந்தக்காயமும் படாமல்.

சாம்ராஜ் எழுதியிருக்கும் எல்லாப்படங்களையும் நான சிலமுறையாவது பார்த்திருக்கிறேன் பலேறி மாணிக்யம் தவிர்த்து.

லாலேட்டனைப்பத்தி சொல்லும்போது சாம்ராஜ்  ’’வெயிலைப்போல என்றைக்கும் உள்ள மோகன்லால்’’ என்றது அழகு. ஆம் பெரிதாக தோற்ற மாறுபடுகள் இருக்காது லாலேட்டனிடம், இருப்பினும் திரையில் எப்போதும் நாம லாலேட்டனைத் தவிர்த்து அவர் ஏற்றுக்கொண்டிருக்கும் பாத்திரத்தை பார்த்துவிடுகிறோம்

கமல் ரஜினியிடம் அப்படியில்லை  என்ன பாத்திரம்னாலும்  ஏற்று நடிக்கும் ரஜினையும் கமலையும் உணர்ந்தவாறே இருப்பேன்

இயல்பாக பகடி கலந்துசொல்லிக்கொண்டே வரும் சாம்ராஜ்  எதிர்பாராமல்  எடை கூடிய ஒரு சொல்லாட்சியை பிரயோகித்து  திகைத்துபோகச்செய்கிறார்

// உண்மை என்று நாம் நம்புவது எத்தனை சதமானம் உண்மை // மாதிரி

இன்னும் செம்மீன் தமிழுக்கு கொண்டு வரனூம்னு சொல்பவர்கள் இருப்பதை சாம்ரஜுடன் நானும் சேர்ந்து வியக்கிறேன்

’’இத்தர மாத்ரமே மலையாள சினிமாவில்’’  சாம்ராஜ் சொன்னது எப்பொவும் நானும் நினைப்பதுதான். இயல்பா உலகில் இருக்கும் சகமனுஷங்களை ஏன் தமிழ் சினிமாவில் அதிகம் காட்டலைன்னுட்டு

எல்லாருமே அதிமானுடர்களாகத்தான் காட்டப்படறாங்க அதிமானுடர்களா தேவதுதர்களா கடவுளாதான் தான் அங்க நிஜ வாழ்விலும் இருக்காங்க

கேரளாவில அப்படியில்லவேயில்லை

நடிகர்கள் மட்டுமல்ல அரசியல்வாதிகளும் சாதாரணர்களா இருக்காங்கங்கறதை எனக்கு முதலில் நம்பவே மிடியலை

1 மாதம் நான் ஒரு பயிற்சியின் பொருட்டு திருவனந்தபுரத்தில் தங்கியிருக்கும் போது தமிழகத்தின் ஆர்ப்பாட்டமெல்லாம் கேரள அரசியலில் இல்லையென்றே தோன்றியது எனக்கு. பல்கலையில் ஒரு இளம்பேராசிரியையுடன் வெகுநேரம் பேசிக்கொண்டு இருந்தேன், பின்னரே அறிந்தேன் அப்பெண் முன்முதல்வரொருவரின் மகளென்று. இங்கே வார்டு கவுன்சிலர் அலப்பறையே தாங்க முடியாததென்னும் சூழலில் எனக்கு இது பெருவியப்பளித்தது

அதைப்போலவே தமிழ்சினிமாத்துறையிலிருக்கும் இளைஞர்கள் அனுபவிக்கும் கஷ்டப்பாடுகளையும் மலையாளத்துறையுடன் ஒப்பிட்டும் சாம்ராஜ் சொல்லியிருப்பதும் சத்தியம்தான்

நார்த் 24 காதம் எனக்கு மிகப்பிடித்த ஒருபடம். ஃபகத்தை நான் டையமண்ட் நெக்ல்ஸ் படப்பிடிப்பு   இங்கே வீட்டு வாசலில் சிலநாட்கள் நடந்தபோது பார்த்தேன் முதலில்.  ம்தல் பார்வையில் அப்படி ஒன்னும் சிலாக்கியமாக தோண்றவில்லை. மேலும் அவருடன் கூட இருந்த  நடியின் இடுப்புக்கு கீழிறங்கிய கேசத்தில் நிலையழிந்திருந்தேன். அவரைத் தேடி மம்முட்டியும் மறுநாள் வந்தபோதான் யாரு என்னன்னு  விசாரிச்சேன். ஃபாசிலின் மகனென்று அப்போதான் தெரியும்

இப்போ ஃபகத்தைபோல அத்தனை அழகா இயல்பா நடிக்கற உடல்மொழியிலேயே பாத்திரத்தின் உணர்வுகளைக் நமக்கு காண்பிக்கற ஒருத்தரும் இல்லை. மகேஷிண்டபிரதிகாரம் படத்தின் துவக்கக்காட்சியில் நீல வாரிட்ட ஹவாய்செருப்பை கரையோரம் கழற்றி வைத்துவிட்டு, மேல்சட்டையின்றி ஆற்றில் முங்கிக்குளித்து, நீரில் அடித்துவரப்பட்ட இரண்டு நட்சத்திரப்பழங்களை சேகரித்துக்கொண்டு ஃபகத் கரையேறும் அக்காட்சியில் அப்படியே நடிக்க தமிழிலும் பிறமொழிகளிலும் இனி ஒருத்தர் பிறந்துதான் வரணும்

 மலையாளத்திலும் சேர்த்து. டொவினோ தாமஸ் கொஞ்சம் கிட்டக்க வராருன்னு நினைக்கிறேன் மாயாநதியிலெல்லாம் பிரமாதமா இருந்தது அவர் நடிப்பு.

24 காதத்தில் பிரமாதமா பண்ணியிருப்பாரு ஃபகத். கொஞ்சம் கொஞ்சமா அவரின் ஆளுமை மாறிட்டு வரத பார்க்கறவங்க நுட்பமா உணரமுடியும். ஸ்வாதியும்  நல்லா பண்ணியிருக்கும் அதில். ’ செம்பான் ஜோஸ் வீட்டில் குட்டிப்பாப்பா பிறந்திருக்கற காட்சியெல்லாம்  ரொம்ப நல்லாயிருக்கும்

த்ரிஷ்யம் பிடிச்ச அளவுக்கு பாபநாசம் எனக்கும் பிடிக்கலை ஆசான் ஜெ வசனங்கறதுனாலதான் பார்த்தேன். லாலேட்டனுக்கும் மீனாவுக்கும் நல்ல சேர்ச்சை கமலை விடவுமே.சாம்ராஜ் சொல்லியிருப்பது போல //ஒரு மொழியின் நுட்பத்தை, கலாச்சாரத்தை மற்றொருமொழிக்கு கடத்துவது சாத்தியமிலை// ரொம்ப சரி. த்ருஷ்யத்தின் எதோவொன்று பாபநாசத்தில் மிஸ்ஸிங் என்பதை விட த்ருஷ்யம் பார்த்த த்ருப்தி பாபாநாசம் பார்த்ததில் குறைந்து அல்லது மாசுபட்டுப்போனது போலிருந்தது. பாபநாசம் கமலுக்கு ஏத்தபடி தன்னை மாத்திக்கிட்டது  த்ருஷ்யம். அதான் சோபிக்கலை

அப்புறம் மஞ்சு வாரியர். சாம்ராஜைப்போலவே எனக்கும் அவங்களைப் பிடிக்கும்.ஆறாம் தம்புரானில் உன்னிமாயாவின் பரிசுத்த அழகை அப்படியே மனசில் வச்சுருக்கேன். சின்னமுகத்தில் மாறி மாறி உணர்சிகளை  அற்புதமாகக்காட்டும் திறமை உள்ளவர் மஞ்சு

 அவங்க ரகசிய திடீர் கல்யாணத்தைக்குறிச்சு இந்தியா டுடே தமிழ்பதிப்பில் என்ன அவசரம் இந்தபெண்ணுக்கு? என்று எழுதினாங்க அப்படியேதான் ஆச்சு இல்லையா?. காவ்யாவை அவங்க  அபரிமிதமான கேசத்தின் பொருட்டு மாத்திரம்தான் அதுவரைக்கும் யட்சின்னு சொல்லிட்டுஇருந்தேன். செரிக்கும் யட்சியானு அவளு

இதோ அயூபிண்ட புஸ்தகம் குறித்து சாம்ராஜ் எழுதியதை வாசிக்கும் போது அதே திரைப்படம்  தொலைக்காட்சியில் ஒடிட்டு இருக்கு

’’ஞான்’’ படத்தப்பத்தி சொல்லறப்போ,  பட்டாம்பினு ஒரு ஸ்தலத்தை சொல்லியிருக்கிறார் சாம்ராஜ். நம் ரேவதியுடன் லாலேட்டன் இரட்டை வேஷத்தில் அபிநயிச்ச ஒரு சித்திரத்தில் ’’ஜனிச்சது பட்டம்பியிலா’’ என்பார். அது நினைவுக்கு வந்த்து

தமிழ் சினிமாவில் நகைச்சுவை என்னும் பேரில், முண்டு கட்டிக்கொண்டிருக்கும் சேச்சிகளை character assassinate பண்ணுவதை நிறுத்தனும் நாமும்

உதயனானு தாரம் நான் மிக ரசிச்ச ஒரு படம்

மீனாவும் லாலேட்டனும் விரும்பி ஆனா திருமணம் செஞ்சுக்காம போயிட்டு பின்னர் மீனா விதவையானபின்னால் ஒருக்கில் அவங்க ஒரு தாமரைக்குளத்தின் படிக்கட்டில் உட்கார்ந்து பேசும் படம் ஒண்ணும் என் மனசில் உள்ளே ரொம்ப ஆழத்தில் இருக்குஅழகா

ஆயாள் கதைஎழுதுகையானு, மாயாநதி சார்லி மகேஷிண்டெ பிரதிகாரம் இப்படி பெரிய நீள பட்டியல் இருக்குஎன்கிட்டே

மலையாளப்படம் பார்க்கையில் தனியே பார்த்தாலும் உடன் மிகபிரியமான ஒருத்தரின் கைகளைக்கோர்த்துக்கொண்டு பார்க்கறதுபோல  இருக்கும். அப்படித்தான் இந்த புஸ்தகம் வாசிக்கும் போதும் இருந்தது. சாம்ராஜின் இந்த புத்தகம் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோஷத்தை கொடுத்தது வாசிக்கையில்

 எப்போதும் மலர்ந்து, இதயத்திலிருந்து சிரித்தபடி இருக்கும் சாம்ராஜ், பகடியை  வெகு சரளமாக வெளிப்படுத்தும் சாம்ராஜ், கவிஞர் சாம்ராஜ், மலையாளப்படங்களை என்னைப்போலவே விரும்பிப்பார்க்கும் சாம்ராஜ் இப்படி அவரின் வேறுபட்ட பரிமாணங்களை இப்போது நான் அறிந்திருந்தாலும், அன்று விஷ்ணுபுரம் நிகழ்வில்  குணமாக்க முடியாத தசைத்தளர்வினால் நலிவுற்றிருக்கும் வல்லபியின் நாற்காலியின் சக்கரத்துக்கு அருகில் முழந்தாளிட்டு அவளுக்கு இணையாக அமர்ந்து வாஞ்சையுடன் அவளிடம் பேசிக்கொண்டிருந்த சாம்ராஜ் என்னும் அவ்விளைஞரையே நான அதிகம் நேசிக்கிறேன்

யாவற்றிற்கும் வந்தனம் சாம்ராஜ்

ஒரு இந்தியப்பயணம்- ஜெ

இந்த ஒருமாத செமெஸ்டர் விடுமுறையில் எந்த பிரயணமும் இல்லாமல் புத்ததகங்களாகப் படித்துக்கொண்டே இருக்கிறேன். விஷ்ணுபுரம் மீள் வாசிப்பு 4 நாட்களில் முடித்தேன். காலை 9 மணிக்குள்  எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு புத்தகமும் கையுமாக தென்னை மரத்தடியில் அமர்ந்து நாள் முழுதும் வாசிக்கும் அருமையை, சுகத்தை எந்த இடையூறுமின்றி இப்போதுதான் அனுபவிக்கிறேன்

இந்தியா என்னும் கனவிற்குள் ஒருதவம் போல  ஜெ பிரயணம் செய்த ’’இந்தியப்பயணத்தை’’ நேற்று ஒரே மூச்சில் வாசித்தேன். வழக்கமாக  அவரின் பயண அனுபவங்கள்  எனக்கு ஏற்படுத்தும் பொறாமை உணர்ச்சி இம்முறை இல்லாமல், என்னவோ நானே நீண்ட பயணமொன்றை போய் வந்ததுபோல மகிழ்ச்சியாக இருந்தது.    பழகிப்போன செளகரியங்களிலிருந்து வெளியே வந்தால் எனக்கும் சாத்தியமான் ஒரு பயணம்தான்  இது என்றும் தோன்றியது. இதுவரை போகலைன்னாலும் இனி போகலாமென்னும் நம்பிக்கையும் வந்திருக்கின்றது

’’இந்தியா இன்னும் தீர்ந்துபோகவில்லை, எஞ்சி இருக்கின்றது’’, எனறு அவர் சொல்லியிருப்பதை எனக்கும் நான் சொல்லிக்கொள்கிறேன்

எப்படி அவருக்கு இப்பயணம் மறக்கமுடியாத ஒன்றோ அப்படியே இந்த பயண அனுபவத்தின் வாசிப்பு, எனக்கும் மறக்கமுடியாத ஒன்று. அன்றன்றைக்கான  நிகழ்வுகளை இரவு உறங்கப்போகும் முன்னர் சுடச்சுட எழுதியிருக்கிறாரென்பதால் உடன் நானும் பயணிக்கும் உணர்வுடனே வாசித்தேன்.  .

இருள் பிரியா நேரத்தில்  கவித்துவமாக துவங்கிய இந்த பிரயாணம் அத்தனை அழகாக   சென்றிருந்த அனைவரின் பார்வையிலும் இந்தியா என்னும் கனவினை எனக்கும் விரித்து விரித்து காட்டிக்கொண்டே செல்கிறது

சென்ற இடங்களையும் ஊர்களையும் மட்டும் சொல்லிச்செல்லாமல் அந்த நிலக்காட்சிகளை, அரசியலால் அங்கு நிகழ்ந்திருக்கும் மாற்றங்களை, உடைகளும் உணவும் மாறிக்கொண்டே வருவதை, விவசாயத்தை, தேனீர் கூட  அரைப்பங்கு கால்பங்காகி, அவுன்ஸ் கணக்கில் குறைந்ததை, தங்குமிட செளகரியங்கள் அசெளகரியங்களை, அறை வாடகைகள் உணவுக்கான செலவு, அங்கங்கு இருக்கும் சாதி அமைப்புக்களை,  நதிகளை, கால்நடைகளை, அவற்றின் வகைகளை அவ்வப்போது வரலாற்றை,  பாதுகாப்பும் பராமரிப்பும் இன்றி பல இந்தியப்புராதன சின்னங்களை நாம் இழந்துகொண்டிருப்பதன் பொருட்டான அவரின் ஆதங்கத்தை, எல்லாம்   தொடர்ச்சியாக சுவாரஸ்யமாகவும் மனவருத்தத்துடனும், சொல்லிக்கொண்டேயிருப்பதால் ஒரு அழகிய நெடுங்கதையொன்றினை வாசிப்பதுபோல தொடர்ந்து வாசிக்க முடிந்தது.

திரைப்படத்தில் காட்சிகள் மாறிக்கொண்டே இருப்பது போல நிலப்பரப்பும் மக்களும், தட்பவெப்பமும் சம்பவங்களுமாய் மாறிக்கொண்டே வருகின்றது ஜெ வின் விவரிப்பில்

சிற்பக்கலை, கோவில் கட்டுமானம் போன்ற மிக நுட்பமான விஷயங்களுடன், சாப்பிடுகையில் ‘ஆ’ கேட்ட குட்டிப்பெண்னை, ஆங்கிலம் தெரிந்த ஒரே ஒருத்தரை, 9 ஆம் வகுப்பில் படித்துக்கொண்டே கோவிலில் பூஜை செய்யும் சிறுவனை, கடந்து  சென்ற பேரழகிகளை, எரியும் சவங்களை, இப்படி ஏராளம் தகவல்களுடன்  பயணத்தை சொல்லுகிறார்

தீயாக கொட்டிய  வெயிலில்  வாடியும், பொழிந்த நிலவின் புலத்தில் நனைந்தும், நதிநீரில் திளைத்தும், தூசியிலும், பசியிலும்  களைத்தும், பல்லாயிரம் முகங்களைக்கண்டபடி எத்தனை எத்தனை அனுபவங்கள் கிடைத்திருக்கின்றன  அவர்களுக்கு   இந்த ஒரே பயணத்தில்?

அழுகல் பழங்களையே திரும்ப திரும்ப  தலையில் கட்டியவர்களை, அறைவாடகையை உயர்த்தி ஏமாற்றியவர்களை,   உணவிற்கான தொகையை கூடுதலாக வாங்கியவர்களை என்று இவர்களைப்பற்றி சொல்லும் போதும் புகாராகவோ குற்றசாட்டாகவோ இல்லாமல் ,  வாழ்வின் இயங்கியலில்  அவர்களுக்கு ஏமாற்றுதல் ஒரு அங்கமாகிப் போயிருப்பதை ஆதங்கத்துடன்தான்  ஜெ சொல்லுகிறார்.

ஆணும் பெண்ணுமாய் பேசிக்கொண்டே  கூட்டம் கூட்டமாய் வெட்டவெளியில் மலம் கழிப்பது, மின்சாரமே இல்லாமல் இருளிலேயே இயல்பாக வாழ்க்கையை நடத்துவது, சேறு மிதிபடும் தரையுள்ள வீடுகள்  இவையெல்லாம்  இன்றைக்குமிருக்கும்  இதே இந்தியாவில்,  நானும், கதவைபூட்டிவிட்டு, இரவுடையை அணிந்துகொண்டு , குளியலறை இணைந்த படுக்கையறையில் கொசுவலைக்குள் பாதுகாப்பாக உறங்குவதும் , அனைத்து வசதிகளுடனான வாழ்வை வாழ்வதும் குற்ற உணர்வைத்தருகின்றது

ஜெ சென்றிருந்த இத்தனை ஊர்களில் நாக்பூருக்கும் காசிக்கும் மட்டுமே நான் சென்றிருக்கிறேன்

ஆராய்சி மாணவியாக இருந்த போது, நாக்பூருக்கு ஒரு கருத்தரங்கின் பொருட்டு, ஃப்ரிட்ஜில் வைத்தது போல குளிர்ந்த ரயில் பெட்டியில் நடுங்கிக்கொண்டே சென்று, ஸ்ரீகுந்த் எனப்படும் அங்கு மட்டுமே கிடைக்கும் எனச்சொல்லப்பட்ட ஒரு இனிப்பையும்,  ஆரஞ்சுகளையும் சுவைத்திருக்கிறேன். அங்கு விளையும் ஒரு குட்டி ஆரஞ்சுப்பழத்தின் சாகுபடி நுட்பங்களை அங்கேயெ சிலகாலம் தங்கியிருந்து தெரிந்துகொண்டு வந்த என் உறவினர் ஒருவர் அதை இங்கு அவர்   தோட்டத்தில்  வெற்றிகரமாக விளைவித்தார்

7ஆம் வகுப்பிலோ 8ஆம் வகுப்பிலோ படித்துக்கொண்டிருக்கும் போது  தலைமை ஆசிரியராக இருந்த அம்மா பள்ளிக்குழந்தைகளை சுற்றுலா அழைத்து செல்கையில் குடும்பத்தினர் இலவசமாக உடன்  பயணிக்கலாமென்னும் வசதியினால் நானும் அக்காவும் அவர்களுடன் காசிக்கு சென்றிருந்தோம். ஜெ விவரித்திருந்த எதுவுமே எனக்கு பார்த்ததாக நினைவிலில்லை எல்லா இடங்களையும் போலவே அங்கும்  சந்தடியும் நெரிசலுமாயிருந்தது. மறக்க முடியாத ஒன்றென்றால் எங்கோ, ஒரு அகல அகலமான படிக்கட்டில் வரிசையாக  உட்கார்ந்திருந்த பிச்சைக்காரர்களுக்கு , ஒரு பச்சைப்புடவையை வித்தியாசமாக கட்டிக்கொண்டிருந்த, நெற்றியில் பெரியவட்டமாக குங்குமம் வைத்திருந்த, வெள்ளை வெளேரென்ற ஒரு அம்மாள் தங்கம் போல பளபளத்த ஒரு தூக்குச்சட்டியில் பிசைந்த தயிர்சாப்பாட்டையும் அவருக்கு பின்னால் ஒரு மாமா  எவர்சில்வர் பாத்திரத்தில் ஜிலேபியுமாக  கொடுத்துக்கொண்டே வந்தார்கள். என்னால நம்பமுடியாதபடிக்கு அதில் பெரும்பாலான பிச்சைக்காரர்கள், எட்டி பாத்திரத்தில்  என்ன இருக்கிறதென்று பார்த்துவிட்டு  வேண்டாமென்று  மறுத்துவிட்டார்கள்’

அப்போது  நாங்கள் மிக வறுமையிலிருந்தோம். வயிறு நிறைய சாப்பிட்ட நினைவே இல்லாத காலமது .  அந்த தயிர்சோற்றையும் இனிப்பையும் அவர்கள் மறுத்தது எனக்கு பெரும் துக்கமாகவும் ஆச்சர்யமாகவும் இருந்தது. இப்போதும் அது ஏனென்று எனக்கு புரியவில்லை. அதற்கு முந்தைய கணம் வரைபுதிய இடம் அளித்த அச்சத்தினால், கூட்டத்தில் தொலைந்துவிடுவேன்னும் பயத்தில் யாராவது ஒருத்தரின் கைகளை கெட்டியாக பிடித்துக்கொண்டே வந்த நான், அதற்கப்புறம் தொலைந்து போகவேண்டுமென்று விரும்பினேன். என்னை கண்டுபிடிக்க முடியாமல் எல்லோரும் திரும்பிப்போன பின்னால், அங்கே பிச்சைக்காரியாக இருந்து சோற்றை வேண்டாமெனச்சொல்லாமல் அள்ளி அள்ளி உண்பதை கற்பனை செய்துகொண்டேயிருந்தேன. ஆனால் பத்திரமாக அதே பழைய வாழ்க்கைக்கு என்னை திரும்பக்கூட்டிக்கொண்டு வந்துவிட்டார்கள்

காசி என்றால் இது மட்டுமே இன்னும் நினைவிலிருக்கிறது.

நிச்சயம் இந்த  எல்லா ஊர்களுக்கும் இதே வரிசைப்படி மகன்களுடன் கூடிய விரைவில் செல்லப்போகிறேன்.அருமையான இப்பயண அனுபவங்களுக்கான நன்றிகள் ஜெ விற்கு

 

இன்று இப்பதிவு ஜெ அவர்களின் தளத்தில் வெளியானதில் கூடுதல் மகிழ்ச்சி

https://www.jeyamohan.in/115216#.XA0UKmgzY2w

 

2015  லிருந்து ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பிலிருந்த  “2.0’’ நவம்பர் 29, 2018 அன்று உலகெங்கிலும் தமிழ் , ஹிந்தி மற்றும்  தெலுங்கு என் மூன்று மொழிகளில் வெளியானது.  மிக அதிக தயாரிப்புச்செலவில் இது வரை வெளியாகியிருக்கும் , (ஆங்கிலமல்லாத) திரைப்படங்களின் வரிசையில் , ஒன்பதாவது இடத்திலிருக்கிறது , சுமார் 545 கோடி இந்திய ருபாய் மதிப்பில் தயாராகியுள்ள 2.0.

படப்பிடிப்பு முடிவடைந்து அதன் தொழிநுட்ப வேளைகளுக்காகவே பெரும் செலவும் அதிக காலமும் ஆகியிருக்கிறது. உலகெங்கிலும் இருந்து  30,000 தொழிநுட்பக்கலைஞர்கள் இதன் பிண்ணனியில் உழைத்திருக்கிறார்கள்.

 ஜென்டில்மேனில் துவங்கிய சங்கரின் வழக்கமான சமூக அக்கறையுடனான  படங்களின் வரிசையில்தான் வருகின்றது 2.0. சங்கரின் திரைப்படங்கள் எல்லாமே பிரமாண்டத்திற்கு பெயர்போனவை அதிலும் இது முப்பரிமாணமென்பதால் பிரம்மாண்டம் இன்னும் பலமடங்கு பெருகி பிரமிப்பளிக்கிறது. மனிதர்களைக்காட்டிலும் 10 மடங்கு அதிகமாக இருக்கும் பறவைகளும், பறவைகளைவிட 10000 மடங்கு அதிகமாயிருக்கும் புழுபூச்சிகளுமாக நிறைந்திருக்கும் இவ்வுலகை ’’அலைபேசுதல்’’ என்னும் தொழில்நுட்பத்தை அளவிற்கு அதிகமாக  உபயோகிப்பதால் நாம் அழித்துக்கொண்டிருப்பதைப் பற்றிப்பேசும் படம்

காற்றில் மிதந்து வரும் மென்சிறகொன்றினுடன் துவங்குகின்றது படம், வழக்கமான நாயக அறிமுகக்காட்சிகளின் ஆர்ப்பாட்டமெல்லாம் இல்லாமல்  மிகச்சாதாரணமாக  முதல் காட்சியில் ஆய்வகத்துக்குள் வருகை தருகிறார் ரஜினி.  அதே தோரணை அதே ஸ்டைல் ,அதே சுறுசுறுப்பு. அதே அட்டகாச சிரிப்பு.

முதல் பாகத்தின் நாயகி ஐஸ்வர்யாபச்சன் இதில்  ஒன்றிரண்டு  அலைபேசிவழி கொஞ்சல் வசனங்களுடன் ‘’ Cameo role ‘’ மட்டும் செய்திருக்கிறார். ரோபோ நாயகியாக , சிட்டியின் காதலியாக எமிஜாக்சன், அவர் உடலே உருவிவிட்டது போல இருப்பதால் ரோபோ பெண் பாத்திரத்திற்கு கனகச்சிதமாக பொருந்துகிறார். வசீகரனும், புது சிட்டியும் , பழைய சிட்டியும், குட்டி ரோபோ 3.0 வுமாக  படம்  சிறுவர்களை வழக்கமான ரஜினி படங்களைப்போலவே  வசீகரிக்கின்றது.

எதிர்நாயகன் என்று சொல்லவே முடியாதபடிக்கு  இணைநாயகனாக வருகிறார், பக்‌ஷிராஜாவான அக்‌ஷய்குமார்.  தீமையின் குறியீடாக அல்லாமல், நாயகனைக்காட்டிலும் சமூக அக்கறை அதிகம் கொண்டவராக. பறவைகளுக்காக, அவற்றின் பாதுகாப்புக்காக போராடும் பறவை  ஆர்வலராக, அவற்றுக்காகவே உயிரையும் விடுபவராக, பறவையியலாளர் திரு.சலீம் அலி அவர்களைப்போலவே உருவ ஒற்றுமையுடன், சூழல் போராளியாக வரும் அக்‌ஷய்குமாரின் பாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கின்றது

திரைமொழி எந்த தொய்வுமில்லாமல் செல்பது படத்தின் பெரிய பிளஸ். ஜெயமோகனின், ஆழமும்  அவருக்கே உரித்தான நுட்பமான பகடியும் கொண்ட வசனங்களும் படத்திற்கு கூடுதல் பலம்.

மிகச்சிறியதோர் கதையை  பிரம்மாண்டமும் தொழில்நுட்ப சாகசங்களுமமாக விரித்து நமக்கு அளிக்கிறார் சங்கர்.  ஒளிரும் திரையில் சிறகடிக்கும் சிட்டுக்குருவிகளுடன் கோடிக்கணக்கான அலைபேசிகள்  சுழலாக வந்து ஆட்களை சுருட்டி  விழுங்குவதும்,   அவை கன்டைனர் லாரியின் உள்ளிருந்து வெடித்து பீரிட்டு வருவதும்,  வயிற்றுச்சதை பிதுங்கி, கொப்பளித்து,  கிழிந்து உள்ளிருந்து குருதிதோய்ந்த அலைபேசி வெளியே வருவதும், அலைபேசிகளெல்லாமே சேர்ந்து ஒரு ராட்சத பறவையாகி வருவதுமாக மிரட்டுகிறது படம்.

நெடுஞ்சாலையே  ஒளிரும் அலைபேசிகளாலாவது, காடுகளின் மரங்கள் எல்லாமே அலைபேசியாகவே மாறி மிரட்டுவவதெல்லாம் தொழில்நுட்பத்தின் உச்சபட்ச சாத்தியங்கள்.  பிரம்மாண்டத்தினால் மட்டுமல்லாது தொழிநுட்ப காட்சிகளின் தரத்திலும் கதையின் பேசுபொருளினாலும் 2.0விற்கு தமிழ்படம் என்னும் பிம்பத்திலிருந்தும், ஏன் இந்தியத்தன்மை என்பதிலிருந்துமே ஒரு விலக்கம் இருப்பது போலிருக்கிறது. ஆனால் வழக்கமான  இந்திய சினிமாவின் எந்த ஃபார்முலாவும் இதில் இல்லை என்பதே  இதன் வெற்றியும் கூட.

அலைக்கற்றை நீளம், அதிர்வலைகள் என கணினி தொடர்பான  பல வசனங்களும் காட்சிகளுமே படத்தின் பேசுபொருள் என்றாலும் முடிந்த வரை எளிமைப்படுத்தி எல்லா தரப்பினருக்கும் புரியும் படியாகவே எடுத்திருப்பது பாராட்டத்தக்கது.

இசை ஏ ஆர் ரகுமான். மூன்றே பாடல்கள். ’புள்ளினங்காளில்’ நா. முத்துக்குமாரின்   கவிதை மிளிர்கிறது. ’ராஜாளி’யில் இசை துடித்து துள்ளிச்செல்கிறது. ’’எந்திரலோகத்துச்சுந்தரியே’’ இளைஞர்களின் பிரியத்துக்குரிய பாடலாய் வெகுகாலத்திற்கு இருக்கும்..

3D   தொழில்நுட்பத்திலேயே படம்பிடிக்கப்பட்ட  முதல் இந்தியத்திரைப்படமான இதில் ஒளி இயக்குனர் நீரவ் ஷாவின்  உழைப்பு பாராட்டத்தக்கது. படம் வெளியான முதல் வாரத்திலேயே மிக அதிக வசூலான முதல் இந்தியசினிமா என்னும் புகழுக்கும் உரித்தானதாகிவிட்டது 2.0. ரசுல் பூக்குட்டியின்  புதிய 4D   ஒலிக்காட்சிகளும் படத்தின் வெற்றிக்கான இன்னோரு முக்கியக்காரணம். சண்டைகாட்சிகளில் நாயகனுக்கு எதிரில் இருப்பது தொழில்நுட்பஎதிரி என்பதால்  ஸ்டண்ட் கோரியொகிராபர்  Kenny Bates மெனக்கெட்டிருப்பது படத்தைப் பார்க்கையில் தெரிகின்றது. விஷுவல் எஃபெக்ட்ஸின் அதிகபட்ச சாத்தியங்கள் அனைத்துமே சண்டைக்காட்சிகளில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது

சிட்டி ரோபோ வரும் காட்சிகளில் ,  சிறுவர்களின் ஆராவாரமும் , மகிழ்ச்சிக்கூச்சலும், ரஜினி ரசிகர்களின் கைதட்டல்களும் விசிலுமாக அரங்கு நிறைந்து ததும்பி வழிந்தது. ரஜினி என்னும் ரோபோ பிம்பத்தை வைத்துக்கொண்டெ அவரின் காலத்திற்கு பின்னாலும் வெற்றிகரமாக ரஜினி படங்கள் தயாரிக்கலாம்  என்னும் சாத்தியத்தை 2.0 உறுதிப்படுத்துகின்றது.

 சிட்டி ரோபோவின் காதலியான நிலா ரோபோவுடனான, ரொமான்ஸ் காட்சிகளில்  20 வருடங்களுக்கு முன்னரான ரஜினியைப்பார்க்க முடிகின்றது. எனினும், நிலா ரோபோவின் மேல்சட்டையை முதுகுப்பக்கமாக திறக்க சிட்டி முயற்சிப்பதெல்லாம் தவிர்த்திருக்கலாம். வணிகத்திரைப்படங்களில் பெண்கள்  ரோபோவாக வந்தாலுமே துகிலுரிக்கவேண்டிய அவலம் இந்திய சினிமாவின் சாபக்கேடுதான்.  சிட்டி என்னும் ஆண் ரோபோ உலகை காப்பாற்றுவார் நிலா என்னும் பெண் ரோபோ எடுபிடிவேலைகளுக்கு! பெண்கள் ரோபோவேவானாலும் பலகீன பாலினம்தானென்கிறதா 2.0 ?

  தளர்ந்த நடையுடன் முதியவராக  வரும் அக்‌ஷய்குமார் மரணத்திற்கு பின்னர்  எப்படி சிட்டி என்னும் ரோபோவால் மட்டுமே எதிர்கொள்ளப்படும் அளவிற்கான  தீவிரத்துடன் இருக்கும் ஒரு அதீத சக்தியானார் என்னும்  விளக்கமுமில்லை

சிந்திக்க அறிந்துகொண்ட சிட்டிக்கு ஏற்படும் காதல், அதனாலான  அகப்போராட்டம் போன்ற முதல் பகுதியில் சிட்டிக்கு இருந்த உணர்வெழுச்சிகளெல்லாம் இதில் இல்லை என்பதும் குறைதான். கலாபவன் ஷாஜன் சிட்டுக்குருவி லேகியத்தைப்பற்றி  பேசும்  வசனங்களும், அப்போதான அவரின் உடல்மொழியும்  ஆபாச ரகம் . தவிர்த்திருக்கலாம்

வெறும் அறிவியல் புனைவென்றோ, பேண்டஸி படமென்றோ மட்டும் படத்தை பொதுவில் கொண்டு வந்துவிடமுடியாது. நாயகனான ரஜினியை மட்டுமே முழுக்க  நம்பியது என்றும் சொல்ல முடியாதபடிக்கு ரஜினியின் எந்த மரபான ஃபார்முலாவுமே இதில் இல்லை.  ஆனாலும், 2.0 வெறும் திரையனுபவமாக இருக்காமல் ஒரு கொண்டாட்டமாக இருக்குமென்பது உத்திரவாதம்.  ஜெயமோகன் அவர்களே சொன்னதுபோல 2.0 ஒரு தொழில்நுட்பக் களியாட்டம்தான் சந்தேகமில்லாமல்!

நவம்பர் நாடகவிழா

 பொள்ளாச்சி தமிழிசைச்சங்கம்,  48ஆவது ஆண்டுக்கான நிகழ்வுகளாக, தமிழ்நாடு அரசு கலை பண்பட்டுத்துறையுடன் இணைந்து   2018 நவம்பர் 19,20,21. மற்றும் 22 ஆகிய நான்கு நாட்களிலும்  மேடை நாடகங்களை அரங்கேற்றியது.

கணினிப்பயன்பாடும், தொலைக்காட்சியும், இணையமும், வணிகத்திரைப்படங்களும் மக்களின் வாழ்வில் இணைபிரியா அங்கமாகி விட்ட இக்காலத்தில் அழிந்து வரும் பாரம்பரியக் கலைகளில் ஒன்றான மேடை நாடகங்களை பொதுமக்களுக்கு கொண்டுவந்து சேர்த்து, அக்கலைகளுக்கும் கலைஞர்களுக்கும் புத்துயிர் அளித்தது தமிழிசைச்சங்கத்தின் ஆகச்சிறந்த ஒரு சேவையாகும்

பள்ளிப்பருவத்தில் சோ, கிரேஸீ மோகன் எஸ்.வி சேகர் ஆகியோரின் நாடகங்களை பார்த்திருக்கிறேன். அதன் பின்னர் பல வருட இடைவெளிக்குப்பிறகு இன்று பள்ளியிலும் கல்லூரியிலும் படிக்கும் மகன்களுடன் இப்போதுதான் நாடகம் பார்க்கிறேன்.

துவக்க நாளான 19 ஆம் தேதி அன்று மாலை  ‘’சாணக்ய சபதம்’’ என்னும் புராண நாடகம் அரங்கேறியது. நாடகச்செம்மல் அமரர் R.S  மனோகரின் சகோதரரின் மகனான திரு சிவபிரசாத் அவர்கள் இயக்கி சாணக்யனாக நடித்துமிருந்தார். மதுரை திருமாறன் அவர்களின் எழுத்தில் வசனங்களும், R.S   மனோகர் அவர்களின் சிறப்பம்சமான பிரம்மாண்ட அரங்க அமைப்புக்களுமாக நாடகம் மிகச்சிறப்பாக இருந்தது, சிறு பிழைகூட இல்லாமல் அத்தனை நடிகர்களும் நடித்ததும், துல்லியக்காட்சி அமைப்பும் அபாரமான உடைவடிவமைப்புமாய் கிரேக்க அலெக்ஸாண்டரும், செல்லுகஸ் நிகேடரும் ரோஷனாவும் சந்திரகுப்தனும் பிற வரலாற்றுக் கதாபாத்திரங்களும் கண்முன்னே  வந்து, அக்கதை நடைபெற்ற அக்காலத்திலேயே நாம் இருப்பதுபோல ஒரு பிரமையை உண்டாக்கியது.

இரண்டாம் நாளின் இசை நாடகம் ‘ சத்தியவான் சாவித்ரி’’  தமிழ் நாடக உலகின் முன்னோடியான தவத்திரு சங்கரதாஸ் ஸ்வாமிகள் இயற்றியது. மதுரையைச் சேர்ந்த தமிழ்நாடு நாடக நடிகர் சங்கத்தினர் நடத்தினார்கள்.  ஒரு இசை நாடகத்தின் எல்லா அம்சங்களுடனும் அருமையான அன்னிகழ்வு இருந்தது,

மூன்றாம் நாளான 21 ஆம் தேதியன்று திருவண்ணாமலை மாவட்டம் ஸ்ரீ மாரியம்மன் தெருக்கூத்து நாடகக்குழுவினரின் ’’வாலி வதம் மற்றும் சுக்ரீவன் பட்டாபிஷேகம்’’ அரங்கேறியது மிகப்பிரமாதமான அந்நிகழ்வில் அனைத்து நடிகர்களின் திறமையும் அர்ப்பணிப்பும் வெளிப்பட்டது. இரவு  முழுவதும் நீளும் நாடகத்தை அன்றைய தேவைக்கேற்ப 2 மணிநேரமாக சுருக்கி அமைத்திருந்தனர்

 பொருத்தமான ஒப்பனை,  அழகிய வண்ண உடைகள், உரக்க வசனங்களை பேசுவது, அந்த பாத்திரமாகவே மாறி விடுவது என பார்வையளர்களை வேறொரு உலகிற்கு அழைத்துச்சென்றனர் நடிகர்கள். பள்ளியில் தமிழ்ப்பாடத்தில் வாலி வதமும் அதன்பின்னர் தாரை அழுதுபுலம்பும் படலமுமாக படித்து தாரை என்னும் ஒரு துயர பிம்பம் மனதில் இருந்தது. இத்தெருக்கூத்தில் தாரை அறிமுகப்படலத்தில்  நடனமிட்டுக்கொண்டெ வருவதும், பளபளக்கும் அவரது  உடையுமாக இன்னொரு மாறுபட்ட சித்திரம் மனதில் உருவாகி ஆழப்பதிந்தது

மேடையின் பக்கவாட்டில் காட்சி மாறும் இடைவெளிகளில் அனுமன் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்ததும், இராவணன் தொடர் வசனங்களால் காய்ந்துபோன  தொண்டைக்காக அடிக்கடி தேனீர் அருந்துவதும், லக்‌ஷ்மணராக நடித்த இளைஞர், வாட்ஸ் அப்பில் முழ்கி இருந்ததும் கவனிக்க முடிந்தது. ராவணன் பல முகங்களுடன் அந்தர் பல்டி அடிப்பதும்,  பேச்சு வழக்கில் வாலி ’அதொன்னும் problem இல்லை’ எனச்சொல்வதும், மேடையிலேயே மறைந்திருந்து வாலியை ஸ்ரீராமர் அம்பெய்து கொல்வதுமாக பல   சுவாரஸ்யமான காட்சிகளும் காணக்கிடைத்தது

நான்காம் நாளான 22அன்று  ‘’ நிதர்சனம் ‘’ என்னும் சமூக நாடகம் மாலி அவர்களின் இயகக்த்தில் கே. எஸ் . என் . சுந்தர் அவர்களின் கதை வசனத்தில் நிகழ்ந்தது. வழக்கமான அறிவுரை சொல்லும் உத்தியை மேற்கொள்ளாமல் இக்காலத்துக்கு ஏற்றபடி பல அழகிய வசனங்களும்,  எதிர்பாரா முடிவுமாக இருந்தது நாடகம். சாதிய வித்தியாசங்கள், கலப்புத்திருமணம், இட ஒதுக்கீடு, ஆச்சாரம், மத நம்பிக்கைகள் என பல மிக  முக்கியமான ஆனால் கவனத்துடன் அணுக வேண்டிய சமூக பிரச்சனைகளை சாதுர்யமாக கையாண்டு நாடகத்தை அழகாக நடத்தினார்கள். ஈஸ்வரன் IAS   அவர்களின் தந்தையாக நடித்தவரின் நடிப்பும் வசன உச்சரிப்பும் பிரமாதம். இவரெல்லாம் வெள்ளித்திரையில்  இருக்கவேண்டியவர். அவரின்  உடல்மொழியும் அபாரம். லக்ஷ்மியாக நடித்த செளம்யா ராம் நாராயண் ஒவ்வொரு காட்சிக்கும் அழகிய பல வண்ணப்புடவைகளையும் பொருத்தமான அணிகலன்களையும் மாற்றிக்கொண்டு வந்து அரங்கிலிருந்த பெண்களின் பெருமூச்சுக்களுக்கு காரணமானார்

காதலை பேசுபொருளாககொண்ட அனைத்து  நாடகங்களும், அது கல்யாணத்தில் முடியும்  சுபம் எனும் முடிவுக்கே வரும் வழக்கத்திற்கு மாறாக இந்நாடகம் வாழ்வின் நிதர்சனம் என்னவென்பதை அழகாக உணர்த்தியது பாராட்டத்தக்கது

 பார்வையாளர்கள்  திரளாக வந்திருந்ததும், நிகழ்வு முடியும் வரை அரங்கிலிருந்து ரசித்ததும் , பல கைதட்டல்களுக்கு இடையில் நாடகங்கள் நிகழ்ந்ததும் இதுபோன்ற ஆதாரக்கலைகள் முற்றிலும் அழியாது,  புத்துயிர் பெற்று மீள எழுந்து வரும் என்னும் நம்பிக்கையை தோற்றுவித்தது.

இசை நாடகம் மற்றும் தெருக்கூத்துக்கலைஞர்களின் உடைகள்  நைந்திருந்ததும், ராவணனுக்கு 8 தலைகளே இருந்ததும் அதுவும் cardboard அட்டையில்  செய்தவையென்பதும், அக்கலையும் கலைஞர்களின் வாழ்வும் நலிந்திருப்பதைக்காட்டும் குறியீடாகவே தோன்றியது. தெருக்கூத்து நடத்தியவர்கள் முப்பாட்டன் கால்த்திலிருந்து பல  தலைமுறைகளாக இக்கலையை தொடர்வதும், நாடகத்தின அங்கத்தினர் அனைவரும் ஒரே குடும்ப உறுப்பினர்களே என்பதும் வியப்பிலும் வியப்பு. பொருளாதார மேம்பாட்டை பெரிதாக நினைக்காமல் உண்மையான கலையார்வத்துடனிருக்கும் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்

பிண்ணனித்திரைச்சீலையை மாற்றியே அரங்கை சிறைச்சாலையாகவும் கோவிலாகவும் அந்தப்புரமாகவும் வீட்டுக்கூடமாக்வும் அழகாக மாற்றுவதும், நாடகத்துக்கு தேவையான் மிகை ஒப்பனையையும்  மிக நடிப்பையும் தேவை அறிந்து அளவுடன் கொடுப்பதுமாக வெற்றிகரமாக நடந்தன அத்தனை நாடகங்களும்

நிகழ்வு முடிந்து அவர்கள் பாராட்டப்படுகையில் போர்த்தபட்ட  அந்த எளிய பொன்னாடை அவர்களின் முகத்தில் தோற்றுவித்த உணர்வெழுச்சிகளை என்றென்றைக்கும் மறக்க முடியாது. நாடகத்தில் ’ரீடேக்’ என்பதே இல்லயென்பதால் கடும் பயிற்சியின் பின்னரே அவர்கள் அதை வெற்றிகரமாக செய்யமுடியும். எனவே இந்த நாடகங்களில் நடித்த அனைவருமே உண்மைக்கலைஞர்கள் . கேரளத்தைப்போல நாடகக்கலையை  தமிழ்நாடு ஊக்குவிப்பதில்லை என்னும் குற்றச்சாட்டைப்பொய்யாக்க இனி இதுபோன்ற முயற்சிகள் தமிழகமெங்கும் நடைபெறவேண்டும்

பார்வையாளர்களில் கல்லூரியில் படிக்கும் என் மகனும் பள்ளிக்குழந்தைகளுமாக கலந்து கொண்டிருந்தது  இன்னும் நம்பிக்கை அளிப்பதாக இருந்தது. இனி தொடர்ந்து இதுபோன்ற நிகழ்வுகளைக்காண முதல் நாளே தமிழைசைச்சங்கத்தில் உறுப்பினராக சந்தா கட்டினேன். இப்பதிவினை படிக்கும் அனைவரையும் தொடர்ந்து நாடகங்கள் பார்க்கவேண்டும் என்றும் பரிந்துரைக்கிறேன். இந்த விடுமுறையை  தொடர் வாசிப்பிலும் நாடகங்கள் பார்ப்பதிலுமாக செலவழிக்கும் படி நான் அருளப்பட்டிருப்பதில் மகிழ்கிறேன்

ஈட்டி

 

 

நண்பர் குமார் அம்பாயிரத்தின் ஈட்டி என்னிடம் வந்து சேர்ந்து சற்றேறக்குறைய ஒரு மாதமே ஆகிவிட்டது எனினும் கல்லூரி வேலை நாட்கள் முடிந்து விடுமுறை துவங்கிய பின்னர் வாசிக்கலாமென்றே இத்தனை காலம் எடுத்துக்கொண்டேன்.  ஆனால் கூர் நுனிகளைக்காண்கையிலும்,  வெண்முரசுபோர்க்களககாட்சிகளில் அவற்றைக்குறித்து வாசிக்கையிலும்  எப்போதும் என் வீட்டைக்கடக்கும் ஏராளமான பறவைக்கூட்டம் ஈட்டிமுனை வடிவில் பறக்கையிலும் அந்த புத்தகம் பிரிக்கப்படவும் வாசிக்கப்படவும் காத்திருபப்தை நினைத்துக்கொள்வேன்

புத்தகத்தின் முகப்புப்படம் எப்படியோ எனக்கு வாட்ஸப்பில் விளையாட்டிற்கான காகிதத்தொப்பிகளை வைத்துக்கொண்டு இருக்கும் எளிய குழந்தைகள் சூழ அம்பாயிரம் இருக்கும்  படத்தை  நினைவூட்டியது . தொகுப்பை வாசித்து முடித்ததும்தான் இத்தொகுப்பில் உள்ள  அனைத்துக்கதைகளுமே மாய யதார்த்தக்கதைகள் என்பதை முன்னரே அப்படம் சொல்லியிருக்கிறது என்றறிந்தேன்

.இதுபோலக்கதைகளை அவ்வப்போது யுவன், கோணங்கி இவர்கள் எழுத்தில் வாசித்திருந்தாலும்  ஒரு தொகுப்பாக  எட்டுக்கதைகளை இப்போதுதான் சேர்ந்தாற்போல வாசிக்கிறேன்,

காணாமற்போகையில் அவரைத்தேடுபவர்களுக்காக இத்தொகுப்பை சமர்ப்பித்திருப்பது  புன்னைகையை வரவழைத்தது  அவரை கொஞ்சம் அறிந்திருப்பவள் என்னும் வகையில்

ஈட்டியை வாசித்துமுடித்த பிரமிப்பிலிருக்கிறேன் இன்னும். நிலவடிவமைப்பாளராக வாசு சாரால் அறிமுகம் செய்யபட்டு பின் நேரில் பார்க்கையில் அலையலையாகப்படிந்த சிகையும், ஒற்றைக்காதுக்கடுக்கனும் கனவில் தோய்ந்த கண்களுமாக இசைக்கலைஞரைபோலிருந்த, கைவிடபப்ட்ட பாழ்நிலங்களில், வறண்ட பூமிகளில் மறைந்திருக்கும் உயிரைத்தேடிக்கண்டுபிடித்து அதை வளமானதாக மட்டுமன்றி அழகானதாகவும் வஞ்சமின்றி விளையும் மண்ணாகவும் மாற்றும், அழைக்காத பாதைகளையெல்லாம் தேடித்தேடிச் சென்று வாழ்வைத்தொடரும், , அவ்வப்போது அழகியகவிதைகள் சொள்லும், வெட்டப்பட்ட இரண்டு ஆரஞ்சு மரங்களுக்காக துக்கிக்கும் ஒருவரான குமாரிடமிருந்து இப்படி ஒரு ஆழ்ந்த படைப்பினை நான் எதிர்ப்பார்க்கவேயில்லை  என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும்

பல ரகசிய உலகங்களுக்கு கைப்பிடித்துகூட்டிச்செல்கிறார். கதைகளின் தலைப்புக்களும் கதாபாத்திரங்களின் பெயர்களும் மர்மமாகவும் கேள்விப்படாததாகவும் வசீகரிப்பதாகவும் உள்ளன, ’’ன்யாக், டிங்கோ(சைக்கிளீல் வரும் ’’டிங்கா எனப்பெயரிடப்பட்ட அந்த கரிய அழகியை நினைத்துக்கொண்டேன் இதை வாசிக்கையில்), அக்,  தேடூ, என்று

தொகுப்பு முழுவதும் என்னுடனேயே, காகங்களும், காக்கட்டான் பூக்களூம், சுற்றிக்கட்டப்பட்ட துணியுடன் குழியிலிருந்து மேலெலும்பிய பிரேதமும், நாய்களும், கன்றை இழந்த பசுவும், பனையும், எருமையும் பன்றியும், ஆச்சா  மரமும், குறிசொல்பவனும், தேள்களும் நட்சந்திரங்களும், குதிரையும், குர்தையும், கழுதையும், ’’ன்யாக்’’ ஆவிகளும், புறாக்களும் அலைந்துகொண்டிருந்தன.

கதைசொல்லியான குமார் புனைவு மற்றும் மர்மத்தன்மை கொண்ட இக்கதைகளை  இவ்வுலகிற்கு வெளியேயிருந்துதான் எழுதியிருப்பார் நிச்சயம்

சில இடங்களில் அவரின் மொழிநடையும் விவரிப்பும் வியப்பளித்தது மேலும் அவை என்றென்றைக்கும் மறக்கவியலாதவையாகவும்  ஆகிவிட்டன மனதில்

பாழடைந்த இரவுகளின் கருநீலம் நொறுங்கிக்கிடக்கும், வயிறு கிழிந்து இறந்துபோன் புறாக்களின் கண்கள்,  மயானத்தின் சூரை முட்களில் மாட்டிக்கொண்டு வா வா என அழைத்துக்கொண்டிருக்கும்  கிழிந்த சவத்தின்மேல் போர்த்தப்பட்ட துணிகள்,கண்ணாடியின் குறுக்கே வழியும் நீரொழுக்கைபோல கண்ட ‘ன்யாக்’, அது  இதயத்திற்கருகே வந்து கிசுகிசுப்பது, ஒரு போர்வையைப்போல கதப்பாக அது அளிக்கும் ஸ்னேகிதம், அன்பின் பெயரால் கட்டாயப்படுத்தலும், கட்டாயப்படுத்தலே அன்பாகவும் நொறுக்கப்படும் ஒரு பெண், பற்கள் தடுத்ததால் உதிராமல் வாய்க்குள்ளேயே  நிறைந்து விட்ட மரணப்பூ,, எதிர் எதிர் திசையில் கிளம்பி ஒன்றையொன்று தழுவிக்கொள்ளும் நெருப்புவரிகள் எச்சுவையும் இல்லாத ன்யாக்கின் தேனீரைக்குடித்ததும்  நொறுங்கும் இரவுகளின் ஆழத்தால் பின்னப்பட்ட உணர்வுகளின் உறைநிலை , காலையில் அழைதத ஒலி மாலையில் எதிரொலித்துக் கேட்பது, மேகங்களில் தங்கியும் விடுபட்டும் தொடரும்  நிலா, வாழ்வின் சகலத்த்தையும் இழந்த பின்னும் உயிர் தரித்திருப்பதற்கான உந்துதல், நம் சக்திகளுக்கு அப்பாற்பட்ட நியதிகளால் கிழித்தெறியப்படும், வாழ்தலுக்கான கதகதப்பின் வெண்ணிறப்போர்வை, காகங்களின் இறகு மடிப்புகளுக்குள்  மின்னும் கருத்த ஆழங்கள், காகத்தை ’கருஞ்சாந்து’ என்பது, பிச்சைப்பாத்திரத்தில் பூக்கும் ரத்த நிற மலர்கள், சுனைகளைக்கடந்து வரும் காற்றின் குளிர்மை, சாராயக்கடையில் நீந்தமுடியாமல் சிதறிக்கிடக்கும் மீனின் எலும்புகள் இப்படி ஏராளம் சொல்லிக்கொண்டேயிருக்கலாம். ஏன் குமார் தொடர்ந்து எழுதுவதில்லை என்னும் கேள்வி எனக்குள் 2 பக்கங்களுக்கு ஒருமுறை  எழுந்துகொண் டேயிருந்தது.

இக்கதைகளிலிருக்கும் மாயத்தன்மைகளை, மர்மங்களை , புனைவுகளை வெளியில் நம்பமுடியாதென்று சொல்லிக்கொண்டே என் உள்மனம் ரகசியமாய் அவற்றில் ஆழ்ந்து அவ்வுலகிலேயே ஊறும் நிழல்களையும், உதிரும் மலர்களையும் பார்த்தபடி , பால்பிடித்த கதிர்களை நெருப்பில் வாட்டி தின்றுகொண்டு, கரையில் கையைப்பிசைந்தபடி  காத்திருக்கின்றது வெளியேறும் விருப்பையும் விருப்பமின்மையையும் ஒருசேர சுமந்துகொண்டு

பல கவிதைக்கணங்களுமிருக்கின்றது தொகுப்பில்.//சூரிய ஒளியில் வண்ணமாகத்தெறிக்கும்  நீர்த்தெறிப்பில் டிங்கோ துள்ளிக்கொண்டிருப்பது,,  முன்கால் முடங்கிய வீனஸுடன் நிலவின் புலத்தில் திரும்பிவருவது,, நரிகளுக்கெட்டாத திராட்சைகளைப்போல நட்சத்திரங்கள் முளைவிடுவது, இலைகள் மேல்காற்றிலும், இரவுகள் கீழ்க்காற்றிலும் உதிர்வது, கூர்மையான வளைந்த சொற்களால் சதையைக்கீறுவது//  இப்படி. எல்லாம் அழகு

க அத்தனைகதைகளிலும் எனக்கு ஈட்டி அந்தரங்கமாகப்பிடித்திருக்கிறது.

பாலுறவுச்சித்தரிப்புக்களும் பாலுறுப்புக்களின் வர்ணனைகளும் சில கதைகளில் அதிகமிருப்பதை தவறென்றோ சரியென்றோ சொல்லத்தோணறவில்லை , இதுபோன்ற அப்பட்ட விவரிப்புக்கள் அதிகம் இருக்கும் கதைகளை முதல்முறையாகப்படிக்கிறேன் என்பதைத்தவிர

குறைகள் என்றால் அதிகம் தட்டச்சுப்பிழைகள் இருக்கின்றன. மறுபதிப்பு செய்யபடுமேயானால் அவற்றை கட்டாயம் தவிர்க்கவேண்டும். (’அவன்’ பல இடங்களில் ’அவளாகி’ வருவதும் மாயக்கதைச்சூழலில் சரிதான் என்பதுபோல ஒரு மயக்கத்தைத் தந்தது. )

குமார் இன்னும் நிறைய எழுத வேண்டும்

பரியேறும் பெருமாள்

பரியேறும் பெருமாள் பார்த்து முடித்த அடுத்த கணத்திலிருந்து இதை எழுதுகிறேன். காலச்சுவடில் விமர்சனம் வாசித்தேன் எனினும் உண்மையில் திரைமொழியைவிட  வேறெதுவும் இத்தனை வீரியமாக இக்கதையைச்சொல்லிவிடமுடியாது என்பதை பார்த்தபின்பே உணர்ந்தேன். இது  ஒரு திரைப்படம், பொழுதுபோக்குவதற்கானது என்னும் எண்ணத்தில்தான் ஒரு தன்ணீர்பாட்டிலும் கொஞ்சம் நொறுக்குத்தீனியுமாய்  நொச்சிமரத்தடி மேசையில் என் மடிகணினியுடன் பார்க்கத் துவங்கினேன்

இது பொழுதைபோக்கும் படமல்ல  விளிம்பு நிலை மக்களின் வாழ்வை, அதன் அவலங்களை  ஆதிக்கச்சாதியினரின் வெறியை, இவற்றை அறியாமல் முகிழ்க்கும் ஒரு பதின்பருவக்காதலை இப்படிப்பலதை நம் இதயத்தைக்கீறிக்கீறி , அழுத்தமாகச்சொல்லும் படம் என்பதை  படம்  துவங்கிய சில காட்சிகளிலேயே அறிந்தேன்.

அவசானக்காட்சிகளில், ‘’ கொல்லுடா அவனை’’ என ஈரக்கண்களுடன் உரக்க சத்தமிட்டுக்கொண்டிருந்தது நான்தான் என்பதை இப்போதும் எந்த கூச்சமும் இன்றி நினைவு கூறுகிறேன்.  புகழாரங்களுக்கும், பரபரப்புக்களுக்கும் மத்தியில் வலம்வரும் சர்க்காரும், 96ம் , திரையிடப்படுகையில் அவற்றுடன் வெளியாகியிருக்கும் இதுபோன்ற படங்களுக்கு என்னுடையதைபோல  மனமார்ந்த ஒரு சில எதிர்வினைகளாவது வேண்டுமல்லவா!

எப்படியோ துவக்ககாட்சியிலேயே அந்த கருப்பியின் அறியாக்கண்களை கண்டதும் அதன் முடிவை மனம் யூகித்துவிட்டது. காலடியில் எச்சில் சோற்றுக்கு வாலாட்டிக்கொண்டிருக்க வேண்டிய நாய்கள் உருவிவிட்ட உடலுடன் துள்ளும் இளமையும் திமிறும் உடலுமாய்  நேர்க்கொண்ட பார்வையுடன் வேட்டைக்கு சென்றால், ரயிலுக்கடியில் கூழாக வேண்டும் என்பதை ஆதிக்கச்சாதியினரின் பார்வையில்  நமக்கு சொல்லிவிடுகிறது படம்

பாத்திரத்தேர்வு மிக அருமை. செல்வத்தின் செழுமை கன்னத்தில் பளபளக்க அறியாப்பெண்ணாய் அவள், கொதிக்கும் குருதியுடன்  இளமைக்கெ உரிய ஆர்வமும், தாழ்த்தபப்ட்ட சாதியினருக்கான தயக்கமும் , இயல்பானநேர்மையும் , நடக்கும் காரியங்களின் குழப்பம் கண்களிலுமாக, கதிர், அந்த வாடகைக்கொலையாளியைப்போல சித்தரிக்கப்பட்டிருக்கும் நபர் உண்மையிலேயே திகிலைக்கிளப்பினார் எனக்கு. துளிதயக்கமும் இல்லமல் உறுதியான காலடிகளுடன் அவர் இரையை நெருங்குவது, உயிருடன் இருக்கும் பெண்ணையும் சாகடித்து தூக்கில் மாட்டுவது, பேருந்தில், மிக இயல்பாக ஒரு கைநகர்த்தலில் அந்த இளைஞனை கொல்வது,  நீரில் மூழ்கியபபடியே இன்னொரு அறியாச்சிறுவனைக் கொல்வது, கெளரவக்கொலையை குலச்சாமிக்கு வேண்டுதலைப்போல பெருமையுடன் செய்வது, எந்த உணர்ச்சியுமின்றி தவலையில் வாய் வைத்து விலங்குபோல நீரருந்துவது, அவரின் உடல்மொழியும் பட்டைபெல்ட்டும் கட்டுமஸ்தான உடலும் என்னைக்கலக்கியது

ஹாலிவுட் படங்களில் கூட இப்பாத்திரத்துக்கு இத்தனை சரியான தேர்வு இருந்ததில்லை. இறுதிக்காட்சிகலில் ரயில் தண்டவாளத்திற்கு அருகில் சண்டையிட உருண்டுவரும் காட்சிகளிலெல்லாம் அபாரமாக  நடித்திருந்தார்

கல்லூரிக்காட்சிகளும் இயல்பாக இருக்கின்றது, ஆங்கிலவழிப்போதனையில் சிரமப்படும் முதலாமாண்டுமாணவர்கள், அந்த பேராசிரியை ’’ஆத்திச்சூடி’’ படி போ’’ என்று கத்தியபொழுது, கடந்த மாதம் எங்கள் மத்தியில் நாஞ்சில் சார் சொன்னதை நினைத்துக்கொண்டேன்.  நிலவின் பிறை போலிருக்கும் வெள்ளை ஆத்திமரத்தின் ( அகத்தி ) மலரைச்சூடியவனே! என்னும் பொருளறியாது ஒரு ‘’ச்’’ இடையில் சேர்த்து தப்பாகவே இன்னும் அது கற்றுக்கொடுக்கப்படுகின்றது என்றும் ’ச்’ சேர்க்காமல் ஆத்தி சூடி’ யென்றே அது சொல்லப்படவேண்டுமென்றும் சொல்லிக்கொடுத்தார்

ஆங்கிலத்துக்கு தமிழ் பரஸ்ரம் உதவிக்கொண்டு பரீட்சையில் பாஸாவது, சின்ன பெரிய C ,  இதெல்லாம் வெகு இயல்பு மற்றும் உண்மை

அந்த PTM   காட்சியில் அப்பா’’நடிகர்’’ அபாரமாக நடித்திருந்தார்

சேற்று மண் இறுகிகெட்டிப்பட்டதைபோல அதிகம் பச்சையில்லாத ஒரு கதைக்களம் பல சமயங்களில்   காமிரா பெரும்பாலும் சென்னிறப்பரப்பும்  இடையிடையே பச்சை சதுரங்களாக வயல்களுமாய் உயரத்திலிருந்து அந்த கிராமத்தை கவிதையாக காண்பிக்கிறது

அந்தப்பெண்னின் குறுகுறுப்பை  அகலக்கண்களின் வெளிப்பாடுகளை, காதலில் குழையும் உடலை, அறியா மழலைப்பேச்சை நாம் உடனிருப்பதுபோல் அத்தனை துல்லியமாக காமிரா காண்பிக்கின்றது

அதைப்போலவே அவ்விளிம்பு நிலை மனிதர்களின் வாழிடத்தை அத்தனை தத்ரூபமாகக்காண்பித்திருக்கிறார்கள்  அடிக்கடி கொண்டாட்டமாய் நடனம், குளித்து நாளான அழுக்கு உடைகள் பெரும்பாலும் மேல்சட்டையில்லா ஆண்கள்,  காவல் நிலையக்காட்சிகள்,

அந்த தூக்கில் மாட்டப்பட்டு இறக்கும் பெண்னின் வீட்டில் அவள் அம்மாவாக நடித்தவர் மிகப்பிரமாதம்.   தொழில் முறை நடிகைகள் கூட தோற்றுப்போகும் நடிப்பு

’’அவங்களுக்கு வயலும் வரப்பும், நமக்கு வாயும் வயிறும் ’’ ‘’ஒண்ணாப்படிச்சா ஒண்ணாயிருவீங்களாடா’’ எனும் வசனங்கள் மொத்தக்கதையின் சாராம்சம்

கல்யாணவீட்டில் கதிரை அடிக்கும் காட்சிக்குப்பின்னரான,  பிண்ணனியில் பாடல் ஒலிக்கும் காட்சியில் சாதியசாயம் நீலமாக நாய்க்கும் சின்னஞ்சிறு அம்மணக்குழந்தைக்கும் கூட பூசியிருப்பதும் காலம்காலமாக அவர்களை தளைக்கும் கயிறுகளால்  அவ்விளைஞன் கட்டப்பட்டிருப்பதும் அவன் அதிலிருந்து விடுபட திமிறுவதும்  நூற்றாண்டுகளாக அவர்களுக்குள் அடக்கப்பட்ட அந்த இழிவு நஞ்சென, நாகமென வழுக்கிக்கொண்டு அவன் காலடியில் செல்வதுமாய் அருமையாக கட்டமைக்கபட்டிருந்தது

அந்த ஸ்டோர் ரூமில் வாழைத்தாரிலிருந்து கைக்கு கிடைத்த எல்லவற்றிலும் கதிரை நிஜமாகவே அடிக்கிறார்கள். பதை பதைத்தபடி பார்த்துக்கொண்டிருந்தேன் அக்காட்சியை

பரியனின்/கதிரின் அப்பவைப்பற்றிய கேள்விக்கெல்லாம் எப்போதும் ஏன் மழுப்பலாக தடுமாறிக்கொண்டு பதிலளிக்கிறான் என்னும் கேள்விக்கும் மிக நெகிழ்சியான பதிலிருக்கின்றது கதையில்

அவருமென்ன அத்தனை அட்டகாசமாக நடித்திருக்கிறார்?

அந்த மனிதரின் நசுங்கியது போன்ற முகமும், ஒடுங்கிய தேகமும் வறுமையில் சுக்காக  காய்ந்திருக்கும் உடலும் கைவிடப்பட்டவர் போன்ற தோற்றமும் ஒட்டுமொத்தமாக பல யுகங்களாக காலடியின் கீழிட்டு மண்ணோடு மண்ணாக மிச்சமின்றி நசுக்கியும் இழிவுபடுத்தியும் வைத்திருக்கும் கீழ்த்தட்டு மக்களின் பிரதிநிதியாகவே  அவரைக்காட்டுகிறது என்றே எனக்குத்தோன்றியது

கண்கள் கசிய நான் திரைப்படம் பார்த்து பல ஆண்டுகளாயிற்று என்பதை அந்த அப்பா பாத்திரம் வரும்போதெல்லாம் உணர்ந்தேன்

அந்த ஜோவின் அப்பா பாத்திரமும் நல்ல தேர்வு, மகள் மேலுள்ள பாசமும், சாதீயபற்றும், அறத்தின் மீதான மிச்சமிருக்கும்  கொஞ்சமே கொஞ்சம் நம்பிக்கையுமாக அவரும்  பிரமாதப்படுத்தியிருக்கிறார்

ஜோ அவளின் கையில் பேனாவால்  jo என்று எழுதிவிட்டு, அதன் கீழே மெல்ல  p எழுதுகையில் தயங்கி மெல்ல அவ்வட்டத்தினை பூர்த்தி செய்வது  ஒரு சிறு கவிதையின் அழகு

கல்லூரி துவக்கத்தில் பரியனின் மீது ஆச்சர்யமும் அவன் அறியாமையின் மீது பச்சாதாபமும் பின் மெல்ல நட்பும் பிரியமும் முகிழ்ப்பதை அழகாக உடல்மொழியில் காட்டியிருக்கிறார் நாயகி

பின்வரிசையிலிருந்து முன்வரிசைக்கு பரியன் வரும் காட்சிகள் எல்லாம் அருமை. கழிவறைக்குள் அவன் தள்ளிவிடப்பட்டபோது எனக்கே ஆயாசமாக இருந்தது மேலெழுந்து வருவது என்பது இனி எப்போதும் சாத்தியமில்லை எனும் அவநம்பிக்கையில் நொந்துபோனேன்

அவ்வப்போது கொச்சையான  குரலில் நாடன்பாடல்கள் பிண்ணனியில்  ஒலிப்பது கதைக்கு சொல்லவொன்னா துயரையும் வலுவையும் சேர்க்கின்றது. அந்த பரியனின் அப்பா நடிகர் பெண்வேடமிட்டு ஆடும் காட்சியிலும் காதலை பிரிவை ஏக்கத்தை சொல்லும் உச்ச்ஸ்தாயியிலான அப்பாடலும்  மனதைப்பிழிகின்றது

அந்த நடனத்தை நாமும் பரியனின் கண்களின் வழியே துயருடன் தான் பார்க்கிறோம்

காரின் கண்ணாடியை கல்லெறிந்து உடைத்துவிட்டு அந்த துவாரம் வழியெ  காறி உமிழ்ந்தபின்னர் பரியன்  கேட்பதெல்லாமே ஆதிக்கச்சாதியினரை, நாக்கைப்பிடுங்கிக்கொண்டு சாகச்சொல்லும் கேள்விகள்.

ஜோவின் அப்பா இறுதியில் ‘’ பார்க்கலாம் தம்பி நல்லாப்படிங்க, இனிமே என்ன நடக்கும்னு  யாருக்குத்தெரியும் மாறலாம் இந்நிலைமை’’ என்பதுபோல சொல்லும் ஒரு வசனத்தில் அடக்கபட்ட வர்க்கத்தினருக்கான ஒரு நம்பிக்கை இழை தெரியுதென்று நான் நினைப்பதற்குள், பரியன் ’’இல்லை நாங்க நாயா இருக்கனும்னு நினைக்கும் நீங்க நீங்களா இருக்கும் வரைக்கும் எதுவுமே மாறாது’’ என்று அந்நினைப்பில் மண்ணள்ளிப்போடுகிறார்

 கருப்பியைப்பாடையில் தூக்கிச்செல்லும் காட்சியிலும் பிண்ணனிப்பாடல் இதையே சொல்கிறது ‘’ நாயல்லடி நீ  நானல்லவா நீ’’ என்று

மாரிசெல்வராஜின் ’’ஆண்பால் பெண்பால் அன்பால் ‘’ வாசித்தபோது அவரை நேரில் பார்த்து வாழ்த்துச்சொல்லனும் பாரட்டுகக்ளைத் தெரிவிக்கனும்னு நினைத்திருந்தேன், இப்படத்தின் இறுதியிலும் வெள்ளை வேட்டிசட்டையில் ஆதிக்கச்சாதியினரான ஜோவின் அப்பாவும், மேலெழுந்துவரும், நேர்மையான அடக்கப்பட்ட ஆத்திரத்தையும், எதோ ஒரு நம்பிக்கையில் புதைத்துக்கொண்டு நிமிர்ந்துநடக்கும் அச்சமுதாயத்தின் பிரதிநிதியாக பரியனும் இவர்களுக்கிடையில் அறியாபபென்ணாய் பச்சைப்புடவையும் மல்லிகையுமாக துள்ளிக்கொண்டு சதிகளும் வஞ்சமும் சாதியும் தொட்டிருக்காத பிரியத்தின் தூய்மையுடன் அப்பெண்ணுமாய் முடியும்போது  மாரியைச்சந்தித்து அழுத்தமாக கைகுலுக்கனும் என்று விரும்பினேன்

சமீபத்தில் இப்படி ஒரு முழுநாளை ஒரு திரைப்படத்தை பார்க்கவும் அதைக்குறித்துச் சிந்திக்கவும் எழுதவுமாய் செலவழித்ததே இல்லை

மனம் நிறைந்தும் கனத்தும் இருக்கின்றது

« Older posts Newer posts »

© 2026 அதழ்

Theme by Anders NorenUp ↑