வழக்கம்போலவே வாசிப்பதும், எழுதுவதும் அறிந்துகொள்வதுமாக இருக்கிறேன். நித்யவனத்தின் தாவர அறிமுக வகுப்பு மிகச்சிறப்பாக நடந்தது.  சில வேலைகளை ஒதுக்கி வைத்துவிட்டு  பல வருடங்களாக கையில் வைத்துக்கொண்டே இருந்த தாவர அறிவியல் சொல்லகராதியை ஒரு வழியாக நல்லபடியாக முடித்துவிட்டேன்.  நான் என்னைக்குறித்து பெருமையாக ஏதேனும் நினைத்துக் கொள்வேனென்றால் அது இந்த அகராதிப்பணிதான். இனி அதை வெளியிட வேண்டும்.

நான்  கல்லூரியில் படிக்கையில் முதன்முதலாக எனக்கு ஒரு முழுச்சாப்பாட்டை  வயிறு நிறைய அளித்த சுசீலா  என்னும் பேராசிரியருக்கு  இந்த அகராதிப் பணியை சமர்ப்பிக்கிறேன். அன்று இலையில் என்ன என்ன உணவு இருந்தது என்பது கூட எனக்கு இன்றும் நினைவில் இருக்கிறது. அன்னையும் ஆசிரியைமாக இருந்தவர் அவர்,

ஒரு சில மாதங்களாக ஒரே ஒட்டத்தில் இருந்தேன். குடும்பத்தில் சில முக்கியமான முடிவுகளை எடுத்து அதை செயல்படுத்த வேண்டி இருந்தது. அது தொடர்பான சிக்கல்கள் அவற்றை எதிர்கொள்வது, தவிர்க்கவே முடியாத பயணங்கள், முழங்காலில் சிறு முறிவு, ஒன்றரை வருடங்களாக படாத பாடு பட்டு,  இனி ஏமாற்ற ஒன்றுமில்லை   எனத் தெரிந்துகொண்டு இஞ்சினீயர்களே கையை உதறிக்கொண்டு போகும் வரை ஏமாந்து ஒருவழியாக ஒரு  வீட்டைக்கட்டி குடிபோனது  என குறையக்  காலம் ஓடிப்போய்விட்டது. 

சித்தப்பால் கட்டுரை தொடர்பாக மிக வேடிக்கையான விஷயங்கள் நடக்கின்றன. அதில் சொல்லப்பட்டிருப்பதை சிலர் வாசிக்கவே இல்லை, பலர் வாசித்தும் அவர்களுக்கு புரியவில்லை. 

மெய்யியலாவது அழகியலாவது, வெறும் வெறுப்பியலை அறிந்தவர்களுக்கு விளக்கம் சொல்வது செவிடர்கள் காதில், மூச்சைப்பிடித்து, உயிரைகொடுத்து சங்கை ஊதுவதற்குச் சமம்.இடைக்காடர் ஆட்டுக்கு எருக்கை உண்ணக்கொடுத்த தொன்மத்தை கி.ரா குறிப்பிட்டதை நீங்கள் சொல்லியதற்கு இந்தப் பாடுபடுகிறார்கள்.

இதில் வேடிக்கையாக எனக்கு 17 பேர் காணொலிகளையும் ஒருசில தளத்தின் லின்க்கையும் சில தகவல்களையும் அனுப்பி இருந்தார்கள். தொடர்பு கொண்டவர்கள் பெரும்பாலும் எனக்கு தெரியாதவர்கள்.  இரண்டு அறிமுகமற்றவர்கள் என்னை அழைத்தும் பேசினார்கள். 

ஒருவர் “மேடம் எப்பவும் நீங்க அவர் தாவரங்களைப் பத்தி எதாச்சும் சொன்னா பதில் எழுதுவீங்க இதுக்கு நீங்க எழுதாதப்பவே எனக்கு தெரியும் அவர் சொன்னது தப்புன்னு நீங்களும் நினைக்கறீங்கன்னு, அப்படியெல்லாம் இருக்கக்கூடாதுங்க, தப்புன்னா யார் சொன்னாலும் தப்புத்தான்னு சொல்லனும் உண்மையில் படிச்சவங்கன்னா…’’ என்றார்.

நான் பதிலுக்கு ‘’ சார், அவர் தப்பா சொன்ன லின்க் எனக்கு அனுப்பறீங்களா அதை வாசிச்சுட்டு மறுபடியும் தொடர்புக்கு வரேன்’’ என்றேன்.

“அதாங்க அந்த சித்தப்பால் கட்டுரை’’ என்றார்.

“இல்லைங்க  எதோ தப்பா சொல்லி இருக்காருன்னீங்களே அதை அனுப்பறீங்களா?” என்றேன்.

கடுப்பாகி  தொடர்பை துண்டித்தார்.

மற்றொருவர் தன்னை ஒரு பசுமைப்போராளி என்று அறிமுகப்படுத்திக்கொண்டு நான் எழுதுவதை படித்திருப்பதாக என்னை ஏகத்துக்கும் பாராட்டிவிட்டு சித்தப்பாலுக்கு வந்து ’’ஒரு பெரிய மனுஷன், அவர் சொன்னா பலர் அதை பின்பற்றுவாங்கன்னு தெரிஞ்சிருக்கும் போது டேட்டாஸ் கொடுக்கறப்போ கவனமா இருக்கனுமில்ல, ஏன்னா அவர் சொல்லற டேட்டாஸை  அவர் சொல்லறதாலேயே  நாமளும் பண்ணலாம்னு நினைப்பாங்கனு கவனம் வேணுமில்ல?’’ என்றார்.

நான் அவரிடம் ’’சார் datas னு சொல்லக்கூடாது data அப்படிங்கறதே plural, Datum தான் சிங்குலர்’’  என்றேன். சில நொடிகள் தாமதித்து நான்  சொன்னதை புரிந்து கொண்டு (என்று நான் நினைக்கிறேன்) பிறகு தொடர்பை துண்டித்துக் கொண்டார்.

ஜெ அவர் தளத்தில்  என்ன என்ன பதிவுகளை, எப்படி எப்படி, எப்போது பிரசுரிக்க வேண்டும், அதற்கு யார் யார் எப்போது, எப்படி எதிர்வினை ஆற்றவேண்டும் என்று சம்பந்தமே  இல்லாதவர்கள் எப்படி முடிவு செய்கிறார்கள் என்பது ஆச்சர்யமாக இருக்கிறது.

மேலும் அவர் என்ன சொல்கிறீர்கள் என்பதே சுத்தமாகப் புரியாதவர்கள் அதைக் குறித்து இத்தனை சமூக ஊடக  விமர்சனங்களை  வெகு விளக்கமாக வைப்பது மேலும் ஆச்சர்யம்.

உண்மையில் அவரைத்  தொடர்பவர்களும், மதிப்பவர்களும், பின்பற்றுபவர்களும் கூட இப்படி பேச்சிலும் மூச்சிலும் அவரையே நினைத்துக் கொண்டிருக்க மாட்டார்கள். ஜெ வை வெறுப்பவர்கள் தான் இப்படி நொடிக்கு நொடி அவரை நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள் தான் எண்ணிக்கையில் அதிகம் போலிருகிறது. மேலும் சொந்தமாகச் செய்ய வேலை எதாவது இல்லை என்றால் இப்படித்தான் பாயைப் பிறாண்டுவார்கள். எங்கள் பக்கம் இதற்கு ஒரு பழமொழி உண்டு அதைக் குறிப்பிட்டு எழுதும் அளவுக்கு என்னால் இறங்க முடியவில்லை.

சித்தப்பால் கட்டுரையில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்றே தெரியாமல் அதைப்பார்த்து எருக்கம்பாலை பலர் குடிக்கும் அபாயமிருக்கிறது என்று பலர் சமூக ஊடகங்களில் பதிவிடுகிறார்கள். முன்பெல்லாம் பள்ளிக்காலத்தில் கோனார் நோட்ஸ் என்று இருக்கும், பாடத்தில் சொல்லப்பட்டது வரிக்குவரி மீண்டும்  அதில் விளக்கப்பட்டிருக்கும். அப்படி  ஜெ இணைய தளத்தின் அறிவியல் பதிவுகளுக்கு  கவுண்டர் நோட்ஸ்  என்று  போடலாமென்று ஒரு யோசனை இருக்கிறது.

  இப்படி ஜெ வை அக்கு வேறாக ஆணி வேறாக பிரித்து மேய்பவர்கள் இன்ஸ்டாகிராமில்  காலையில் வெறும் வயிற்றில் எருக்கம் இலைகளை கொதிக்க வைத்துக் குடித்தால் கேன்சர் குணமாகும் என்று சொல்லும் ஒரு கொலைகார தாத்தாவை,  மிக ஆபத்தான நித்யகல்யாணி இதழ்களை கொதிக்க வைத்துக்குடித்தால்  சர்க்கரை குணமாகும் என்று சொல்லும் ஒரு பெண்ணையெல்லாம் கண்டுகொள்வதே  இல்லை.  அவர்களுக்கு ஆயிரக்கணக்கில் ஃபாலோயர்ஸ் வேறு  இருக்கிறார்கள். 

இவர்களின் பிரச்சனை எருக்கல்ல,  ஜெ வும் , அவரது பிரபல்யமும், அவர் சொல்வது எதுவுமே அவர்களுக்கு புரியவில்லை என்பதும்தான்.

‘நச்சுத்தாவரம் குறித்த  ஒரு பொய் அறிவியல் தகவலுக்கு எதிர்வினை கொடுக்காமல் இருக்கீங்களே?   நீங்களெல்லாம் ஒரு பாட்டனிஸ்டா?’ என்று கூட ஒரு எண்ணிலிருந்து செய்தி வந்தது.  ‘கண்மூடித்தனமாக ஒருவரை இப்படி ஆசானாக நினைக்கக்கூடாது’ என்று ஒரு அறிவுரையும் கூட. பாவமாக பரிதாபமாக கூடவே கடுப்பாக  இருக்கிறது எனக்கு.

எத்தனை எத்தனை யூகங்கள், எத்தனை  எத்தனை கணக்கீடுகள்?

கல்லூரியில் முதல்வர் பதவிக்கு நான் ஜெ மூலமாக நிர்வாகத்தை தொடர்பு கொண்டு பயங்கரமாக முயற்சிக்கிறேன் என்று   கல்லூரியில் ஒரு வதந்தி ஒரு வருடமாக கோடையில் காட்டுத் தீ போல பரவியது. நல்லவேளையாக  புதிய முதல்வரை தேர்ந்தெடுத்து விட்டார்கள். இனி நான் பயங்கரமாக முயற்சித்தும்  எனக்கு  பதவி கிடைக்கவில்லை என்று சொல்வார்களாக இருக்கும்.

ஒருவரை நானும் என் மகன்களும் குருவாக, எண்ணுவது, மதிப்பது என்பதெல்லாம் அவரிடமிருந்து  கிடைக்கும்  அனுகூலங்களுக்காக என்று நினைப்பது எத்தனை அறிவின்மை?

மிக எளிய மானுடம் இது என்பதை ஒரு இலையின் கச்சிதமான நரம்பமைப்பை பார்ப்பவர்கள்  புரிந்துகொள்ள முடியும். இன்னும் கொஞ்சநாளைக்கு  இதைக்கொண்டு  கும்மி அடிப்பார்கள்.

சித்தப்பால் மிக முக்கியமான பதிவு.   எருக்கு நம் கலாச்சாரத்துடன் ஒன்றிய ஒரு தாவரம் அதை ஜெ பூதனை என்றது மிக அழகானதாக இருந்தது. பல வருடங்கள் முன்பே ஜெ எருக்கு குறித்து எழுதி , நான் அதற்கு நஞ்செனும் அமுது என்று ஒரு பதில் கடிதம் கூட எழுதி அதை  பிரசுரமானது.

வாழைக்கு எருக்குரமிடுவதை ஜெ சொல்லி இருந்தார். இங்கே தென்னை நகரமான பொள்ளாச்சியில் எருக்கஞ்செடிகளை வெட்டி உரமாக தென்னைக்கிடுவது இன்றும் இருக்கும் ஒரு வழக்கம். அதில் ஏராளமாக பொட்டாஷ் மற்றும் கால்சியம்  இருக்கிறது மிக விரைவில் மண் வளத்தை அதிகரித்து  நிலத்தின் நீர் உறிஞ்சும் தன்மையை மேம்படுத்துவது  எருக்குரத்தின் இயல்பு .

 phytotherapy  எனப்படும் தாவரமருத்துவத்தில் எருக்கை பலவிதங்களில், சிகிச்சைக்கு பயன்படுத்துகிறார்கள். உள்ளங்காலில் படும்படி எருக்கிலையை வைத்துகொண்டு  அதன் மேல் சாக்ஸ் அணிந்துகொண்டு நடைப்பயிற்சி மேற்கொண்டு  ரத்தச் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைப்பது அதிலொன்று. நான் சிறுமியாக இருக்கையிலேயே சுடும் செங்கல்  மீது எருக்கிலையை  வைத்து சூடுபண்ணி அதன் மீது  காலை பொறுக்கப்  பொறுக்க வைத்து கால் ஆணிகளுக்கு சிகிச்சை எடுப்பதை பார்த்திருக்கிறேன். எருக்கிலையின் மெழுகுபோன்ற பூச்சை  சுரண்டிச்  சேகரித்து ஆழமாக தைத்த முள் காயங்களுக்கு தடவுவதும் இன்றும் பழக்கத்தில் இருக்கிறது.

ஆசியா ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவின் வறண்ட நிலப்பகுதி எங்கும் இயற்கையாகவே பரவி இருக்கும் எருக்கின் இந்த நஞ்சு– அமுது என்னும் பயன்பாடு ஒரு pharmacological paradox தான்.   இந்த இரண்டு இயல்புகளுக்கும் இடையில் இருப்பது மிக மிக மெல்லிய ஒரு கோடுதான். 

Calotropis gigantea மற்றும் C.procera  என்னும்  நச்சுச்செடியான எருக்கின் இந்த இருவகையின் எல்லா பாகங்களுமே இந்திய பாரம்பரிய மருத்துவத்தில் பல சிகிச்சைகளுக்கு தீர்வாக  பயன்படுத்தப்படுகின்றன.  

இந்த நச்சுச்செடியின் Calotropin, Calotoxin, Uscharin, Calotropain, Triterpenoids & Sapogenins ஆகியவை இதை நல்ல மருந்தாகவும் ஆக்கி இருக்கிறது.

உலகின் மிகப்பெரிய நாடோடி இனக்குழுவினரான மேற்கு ஆப்பிரிக்காவின் ஃபுலானிகள் (Fulani)  எருக்கிலை மற்றும் மிகக்குறைந்த அளவு எருக்கம்பாலைக் கொண்டு பசும்பாலை திரித்து அவர்களின் பாரம்பரிய சீஸ் ஆன Wara- வை உருவாக்குகிறார்கள். பொதுவாக சீஸ் செய்யப் பயன்படும் ரென்னெட் என்னும் கன்றுக் குட்டிகளின் இரைப்பைச் சுவற்றிலிருக்கும் ஒரு நொதியைப்போலவே எருக்கின் calotropain செயல்பட்டு அந்த சீஸை உருவாக்குகிறது.  நைஜீரியாவில் மிக அதிகம் உண்ணப்படும் சீஸ் இதுதான்.

எருக்கின் முதிர்ந்த தண்டுகளின் நாரை எடுத்து மீன்பிடிவலைகளும், வில்லின் நாணையும் செய்யும் இனக்குழுக்கள் உண்டு.

ஆப்பிரிக்காவில் எருக்கு மிக அதிகமாக கால்நடை மருத்துவத்தில் பயன்படுகிறது. மேற்கு ஆப்பிரிக்காவில் எருக்கம்பால் தடவிய அம்புகளைக் கொண்டு வேட்டையாடுவதும், எருக்கம்பாலை மிககுறிந்த அளவில் மீன்மயக்கியாகப் பயன்படுத்துவதும் அங்கு  நடைமுறையில் இருக்கிறது. (இப்படி மேற்கு மலைத்தொடர்ச்சிப் பகுதியில் பல தொல்குடியினர் நறுவிழி மரப்பட்டையை மீன் மயக்கியாக (fish stupefying) பயன்படுத்துகிறார்கள்) 

ஆனால் இந்தத் தகவல்கள் எல்லாம்  சித்தப்பால் கட்டுரையை குறித்து அவதூறுகளை பரப்புபவர்களுக்கு அவசியமே இல்லை. முன்பொருமுறை  கோவையிலிருந்து ’’எதாச்சும் புக் வேணுமா மேம்?’’ என்று போனில் கேட்ட ஒரு  ஆய்வுமாணவியிடம்  சங்கச்சித்திரங்கள் வாங்கி வருமாறு சொன்னேன்.   அவள் கொஞ்ச நேரம் கழித்து  ’’மேம் ஜெயமோகன் எழுதிய சங்குச்சக்கரங்கள் எங்குமே கிடைக்கலை” என்றாள். அந்தக்கதைதான்.

காற்றில் மரமுறியும் காட்சியைப் போல்

நல்லறிவு தூற்றிவிடில் 

அஞ்ஞானம் தூரப்

போகும் மடஅன்னமே  

என்கிறார்  அதே  இடைக்காட்டுச்சித்தர் 

என்றைக்காவது இவர்களுக்கும் நல்லறிவு உண்டாகக்கூடும்.