நினைவஞ்சலி, செழியன்.
செழியன் மறைவுக்கு ஜெ எழுதிய அஞ்சலிக் கட்டுரையை வாசித்தேன். வெறும் மங்கலான புகழாரங்களை சம்பிரதாயத்துக்காகச் சொல்லாமல், இழப்பின் துயரத்துக்கு அப்பாற்பட்டு, மறைந்தவர் வாழ்வின் அசல் தன்மையையும், தோழமையையும், ஏற்ற இறக்கங்களையும் பதிவு செய்யும் அவரது அணுகுமுறை உண்மையிலேயே நிறைவளிக்கிறது.
பொதுவெளியில் அறியப்படாத அவரது இயல்புகளை, குறிப்பாக சிரித்துக்கொண்டாடிய தருணங்களை அறிந்துகொள்வதன் மூலம் அவர் ஒரு தனிமனிதனாக எப்படி வாழ்ந்தார் என்பதை நாங்களும் தெரிந்துகொள்ளமுடிகிறது.
வெறும் துக்கத்தைப் பதிவு செய்யாமல், அவரது வாழ்வின் பயணத்தை ஒரு குறும்படம் போல் காட்டிவிடும் அஞ்சலிக் கட்டுரைகள் மறைந்தவரை எங்களுக்கும் வேண்டியவராக ஆக்கிவிடுகிறது.
செழியனுக்கு அஞ்சலி. நிறைவு கொள்ளட்டும்.
ஜெ வின் பதில்:
அன்புள்ள லோகமாதேவி,
வழக்கம்போல, செழியனின் மறைவை ஒட்டி வந்த பதிவுகள் சில என் கண்ணில் பட்டன.
“செழியன், என்ன செழியன் இது? நல்லா இல்லை.”
“ஏத்துக்கிடவே முடியலை!”
“எப்படி எங்களிடம் சொல்லாம போகலாம்?”
“ஏன் இந்த அவசரம், தோழர்?”…
எல்லாவற்றிலும் வேடிக்கையானது, “போய்வாருங்கள், செழியன்.” என்பதுதான். எங்கே போய் எங்கே வருவது? வந்தால் இவர்களுக்குத் தெரியுமா?
இந்த வகையான சம்பிரதாயமான சொற்களை உதிர்ப்பதுதான் அஞ்சலி என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம். மொழிநுண்ணுணர்வு என்பதே கிடையாது. ஒருவருடனான நம் உறவைப் பற்றிய நேர்மையான ஒரு பதிவை உருவாக்குவது, அவரை நிறைகுறைகளுடன் வாழ்ந்த ஒரு மனிதனாகச் சித்தரிப்பது, அவரைப் பற்றிய ஒரு பொது மதிப்பீட்டை முன்வைப்பது நமக்குக் கடினமாக இருக்கிறது.
ஆனால் ‘இதயத்தை தந்துவிட்டுப்போ’ என்றோ ‘தலைவா திரும்பி வா!” என்று கதறினால் இயல்பாகத் தோன்றுகிறது. இறந்த மறுகணமே அவரை அமரர் என்று ஆக்கிவிடுவதால் உருவாகும் உளச்சிக்கல்தான் இது. இங்கு எழுதப்படும் ஏறத்தாழ எல்லா அஞ்சலிகளும் அசட்டுத்தனமானவையாகவே இருக்கின்றன. ஐந்து நாட்களுக்குப் பிறகு படித்தாலே தாளமுடியாத கூச்சத்தை அளிப்பவை.
உண்மையில் தமிழில் எழுதப்படுவனவற்றில் என்னுடைய அஞ்சலிக் குறிப்புகள் மட்டுமே காலத்தைக் கடந்து நிற்கின்றன. அண்மையில் ஒரு புத்தக மதிப்புரைக்காக ராஜமார்த்தாண்டனைப் பற்றிய என் அஞ்சலிக் குறிப்பை மீண்டும் படித்துக்கொண்டிருந்தேன். இப்போதும் படித்தாலும், அண்ணாச்சியைப் பற்றிய முழுமையான ஒரு சித்திரத்தை அளிப்பதாகவும், அவருக்கும் எனக்குமான உறவின் ஆழத்தை வெளிப்படுத்துவதாகவும் அது உள்ளது.
ஆனால் அது வெளியானபோது, “அவர் மது அருந்துவார் என்பதை ஏன் சொல்லிவிட்டீர்கள்?” என்று சிலர் தாண்டிக் குதித்தார்கள். “மது அடிமை என்று சொல்லி அவமானப்படுத்திவிட்டார்” என்றார்கள்.
இந்த அஞ்சலியும் வெளியான உடனேயே, தமிழ்ச் சூழலின் தேங்கிப்போன உள்ளங்கள், “செழியனை அவமானப்படுத்திவிட்டார்” என்று பஜனையை ஆரம்பிப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன். “யாரு செத்தாலும் ஜெயமோகன் அஞ்சலிங்கிற பேரிலே அவமானப்படுத்துறாரு” என்று எங்கோ ஏற்கெனவே பேசத்தொடங்கிவிட்டார்கள் என்றும் தோன்றுகிறது.
தமிழ்ச் சூழலில், இந்தச் சிந்தனைக் களிம்பை பொருட்படுத்தாமல் எவர் பற்றியும் தனிப்பட்ட குறிப்புகளை எழுதுவது கடினம். எதைப் பற்றி எது எழுதினாலும் மொத்தச் சமூகத்தின் விசைக்கு எதிராக நகர்வதன் இடையை உணர முடிகிறது.
இந்த வகை அஞ்சலிக்கட்டுரைகள் செழியனுக்கு வாய்விட்டுச் சிரிக்கத்தக்கவையாகவே தெரிந்திருக்கின்றன. பாலுமகேந்திரா இறந்தபோது வந்த அஞ்சலிக் குறிப்புகளைப் பற்றி செழியனிடம் பேசி சிரித்தது நினைவுக்கு வருகிறது. “அந்தத் தொப்பியையாவது தந்துவிட்டுப் போங்க, சார்!” என்று யாரோ ஒருவர் எழுதியிருந்தார்.
அதையொட்டி, ஒரு சம்பவத்தை செழியனே என்னிடம் சொன்னார். தமிழகத்தில் புகழ்பெற்ற ஒரு நடிகை. திரைப்படங்களில் நடித்தவர்; பின்னர் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். அவருடைய தந்தையும் ஒரு துணை நடிகர்தான். தந்தையுடன் அந்த நடிகை வாழ்ந்து வந்தார். திடீரென்று அந்தத் தந்தை இறந்துவிட்டார். திரைத்துறையிலிருந்து இரங்கல் செலுத்த பலரும் வந்திருந்தார்கள். சடங்குகள் முடிந்து, உடலை எடுத்துக்கொண்டு சுடுகாட்டுக்குப் புறப்படுட்டார்கள்.
அப்போது அந்த நடிகை தலைவிரிக் கோலத்தில் ஓடிவந்து, “நிறுத்துங்கள்… நிறுத்துங்கள்…” என்று உரக்கக் கூவினார்.
அனைவரும் பதறிப்போய் பாடையைத் தரையில் இறக்கிவைத்தார்கள்.அவர் அருகே வந்து, தந்தையின் தலையைப் பிடித்துக்கொண்டு கதறியபடி,“அப்பா… ‘போயிட்டு வரேன்’ன்னு ஒரு வார்த்தை சொல்லிட்டுப் போங்கப்பா…” என்று அழுதாராம்.
அதைச் சொல்லிவிட்டு செழியன் விழுந்து விழுந்து சிரித்தது இன்னும் நினைவில் இருக்கிறது.
செழியன் எங்கிருந்தோ படித்துவிட்டு நையாண்டி செய்யும்படியான அஞ்சலியைத்தான் அவருக்கு எழுதிகொண்டிருக்கிறார்கள். எனக்கு இந்த அசட்டு அஞ்சலிகள் அளிக்கும் ஒவ்வாமை ஒருவகையான அடிநாக் கசப்பாக எஞ்சியிருக்கிறது. படிக்கவே கூடாது என்று எண்ணினாலும் கண்ணில்பட்டு விடுகின்றன.
எப்போதும் சிரித்துக்கொண்டே வாழ்ந்து சென்ற என் நண்பர் பிரியமாகச் சிரிக்கும் ஓர் அஞ்சலியைத்தான் அவருக்கு எழுதவேண்டும் என எண்ணினேன். நம் மொண்ணைச் சூழலின்மீதான கவனம் எப்படியோ ஊடே புகுந்து கொஞ்சம் ‘சீரியஸ்’ ஆகிவிட்டது.
Leave a Reply
You must be logged in to post a comment.